Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

"என் வாழ்வில் அர்த்தமாய் நீ

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 9

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!.. அத்தியாயம் 9

   எல்லோருக்கும் பெரிய தர்ம சங்கடமாகி விட்டது. பிரவீனா படுத்து இருந்த நிலை ஒரு மாதிரி எல்லோரையும் தாக்கியது. ஆனால், பிரவீ எதையும் வெளிபடுத்த வில்லை. உறக்கம் வரும் நிலையில் இல்லையென்றாலும், கண் திறக்காமல் படுத்து கொண்டாள்.

ஶ்ரீதர் சொந்த மாமா மகன். தங்கச்சி புருசன் என்ற வேறுபாடு எல்லாம் கல்யாணத்துக்கு பின் வந்தது. சிறுவயது முதல் ஒன்றாக வளர்ந்த உறவு, வேறுபாடு எங்கும் கிடையாது. அப்போதெல்லாம் கோவில், விசேஷம் எங்கு வந்தாலும் ஒன்றாக ஒரு பெரிய ஹாலில் தான் உண்ண, உறங்க எல்லாம்… அதனால் தான் பிரவீ வேற யோசிக்க வில்லை. ஆனால், யோசித்து இருக்கணும்.. சொந்தமாக இருந்தாலும் தனித்தனி குடும்பம் என்றான பின் அவர்களை தள்ளி நிறுத்த பழகி இருக்கணும்.. இனி, கட்டாயம் பழகி கொள்ளவும் வேண்டும்.

மறுநாள் பிரவீனா ஊருக்கு கிளம்பி விட்டாள். வந்த வேலை முடிந்தது. இனி என்ன?..



Advertisement

“என்னடி ரெண்டு நாள் சேர்ந்து இருக்கலாம்ன்னு எல்லாரும் சொல்றாங்க.. நீ என்ன கிளம்புற..” அதிர்ச்சியில் மகேஷ் கேட்க.

“எனக்கு வேலை இருக்கும்மா. நான் கிளம்பனும். விசேஷம் தான் முடிஞ்சதே, நீங்க இருந்து வாங்க..”

 “நீ இல்லாம எப்படி, நாங்க மட்டும் இருக்கிறதாம். அப்பா ஒத்துக்க மாட்டாரு..”

Advertisement

“ரொம்ப நாள் கழிச்சு ஊருக்கு வந்து இருக்கீங்க.. ரெண்டு நாள் ரிலாக்ஸா இருந்துட்டு வாங்க..” என்று மகள் சொன்னதும்,

Advertisement

“தம்பியும் சேர்த்தா கூட்டிட்டு போற.. அவன் துணியை மடிச்சு வைக்கிற..”

“ஆமாமா, அவனை நான் பாத்துப்பேன். ஒன்னும் பிரச்சனை கிடையாது. நீங்க இருந்து வாங்க..” என்றதும்,

மகேஸ்வரிக்கு பெரிய சங்கடம்.. கோவில், மேக மலை அருவி, கும்பகரை என்று சுற்றிப் பார்க்க ஒரு பெரிய லிஸ்ட்டோடு மற்றவர்கள் இருக்க, மகள் மட்டும் கிளம்புவது ஒரு மாதிரி உறுத்தத் தொடங்கியது. நேற்று நடந்ததில் மகள் தன்னிடம் கோபித்துக் கொண்டாலோ என்ற ஒரு எண்ணம். மெல்ல மகள் முகம் பார்க்க அவள் எப்பவும் போலத்தான் இருந்தாள். திரும்பவும் பேசி பார்த்தார். மகள் உறுதியாக இருக்கவும்,

Advertisement

“தம்பி எங்க கூட இருக்கட்டும். நானும், அப்பாவும் இங்க தான் இருக்கோம். நாங்க பாத்துக்க மாட்டோமா?..”

“வேண்டாம்மா, அவனுக்கு வேற வேற கிளாஸ் இருக்கு.. நான் பார்த்துப்பேன். ஒன்னும் பிரச்சனை இல்ல, ரொம்ப யோசிக்காதீங்க..” என்று தட்டிக் கழித்தாள் பிரவீனா.

பிரவீனாவுக்கு ஒரு மாதிரி அழுத்தமாக இருந்தது. சகஜ மனப்பான்மையில் அங்கு உலாவ முடியாது. நிறைய இடத்தில் தனக்கு கணவன் இல்லையே என்ற வலியை உணர வேண்டும். அதையும் சரிகட்டி இவர்களோடு கலந்து கொள்ளவும் முடியாது. அதற்கு காரணம் அவள் வயது?…

 ஒரு கோவிலுக்கு சென்றாலும் குங்குமத்தை தொட முடியாது, பூவை வாங்க முடியாது. அதே நேரத்தில் இவள் வயது ஒத்த தங்கை, தம்பி மனைவி பூ, பொட்டோடு இருக்கும்பொழுது, இவளை சங்கடமாக பார்ப்பார்கள். சரி ஒதுங்கி நிற்கலாம் என்று நின்றாலும் பெரியவர்களோடு நிற்க வேண்டும். மகேஸ்வரி அதற்கும் மேல்.. மகளே பூ பொட்டு வைக்காமல் இருக்க.. இவரும் அதைத் தொட மாட்டார். அது ஒரு மாதிரி பிரவீனாவுக்கு அழுத்தமாக இருக்கும். எல்லோரும் தம்பதிகளாக இருக்க.. இவள் மட்டும் ஒற்றை பிள்ளையோடு அம்மா, அப்பா பின்னாடி இருக்க வேண்டும். வயதான காலத்தில் அவர்களும் வாழ்ந்து கெட்ட மகளைப் பார்த்து மருகிக் கொண்டே நிற்பார்கள்.

பிரவீனாவுக்கும் வலி இல்லாமல் இருக்காது. தம்பிக்காவது இப்போது தான் திருமணம் ஆகி இருக்க.. தங்கையை மூன்று வருடங்களுக்கு முன்பிருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறாள். இப்படி எங்காவது செல்லும் பொழுது ஶ்ரீதர் அரை மணிக்கு ஒரு முறை ஜூஸ், டீ, காபி என்று ஏதாவது வாங்கி கொடுத்து கொண்டே இருப்பான். ஒரு நேரம் பிள்ளை அழும் போது இவன் தூக்கி வைத்து கொண்டு நடப்பான். சோர்ந்து போகும் போது கையை பிடித்து கொள்வது, தோளில் சாய்த்து உறங்க வைப்பது, பசியரிந்து உணவு வாங்கி கொடுப்பது என்று அன்னோன்யமாக இருப்பார்கள்.

அங்கேயும் பிரவீனா ஒற்றைப் பிள்ளையோடு தனியாகத்தான் சமாளிக்க வேண்டும். தன் வயது ஒத்தவர்களோடு கலந்து கொள்ளவும் முடியாது. பெரியவர்களோடு சேர்ந்து கொள்ளவும் முடியாது. தன் தம்பியும், தங்கையும் தம்பதிகளாக இருக்க.. அவர்களுக்குள் கணவன், மனைவி குறித்து பேசி சிரிக்க, கிண்டல் பண்ண என்று நிறைய விஷயங்களை இவள் பார்த்திருக்கிறாள். இவள் அந்த இடத்தில் வந்து அமரவும், சில பல சங்கடங்கள் நேரும்.. பொதுவாக பேச வேண்டும். கணவன், மனைவி குறித்த கேலி, கிண்டலை ஒதுக்கி வைத்து பொதுவாக பேசுவார்கள். இயல்பாக இருக்காது.. வழியில் ஒரு பூக்கடையை பார்த்தாலும் அக்கா இருக்கிறாளே என்று வாங்க யோசிப்பார்கள். இவள் தன் துணை தனக்கில்லாமல் போனதே என்று ஏக்கமாக பார்த்தாலும், பொறாமையாக பார்ப்பது போல் ஒரு தோற்றத்தை கொடுக்கும்..

அது ஏன்?.. அத்தகைய நிறைய நிறைய சங்கடங்கள் இரு பக்கமும் ஏன்?.. என் விதி நான் நிற்கிறேன் ஒத்தையில்.. ஈசன் எழுதிய எழுத்து மாற்ற முடியாது. நீங்கள் நன்றாக இருங்கள். என் தம்பி, தங்கை மேல் எனக்கு பொறாமை கிடையாது. ஆனால், என் கணவன் என்னுடன் இல்லையே என்று நிறைய ஏக்கமும், வலியும் இருக்கும்.. அது எந்த இடத்திலும் தவிர்க்க முடியாதே… எனக்கும் என் புருசன்  கூட இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைப்பு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

கணவன் இல்லை என்ற வலி ஒரு பெண்ணுக்கு எவ்வாறு இல்லாமல் இருக்கும். என்னைப் பார்த்து நீங்கள் அனுதாபப்படவும், பரிதாபப்படவும், பாவப்படவும் வேண்டாம். என்னை பார்த்து சங்கடப்பட்டு நிற்கவும் வேண்டாம். இனி காலத்துக்கும் என் கோலம் இதுதான் எனும்போது எதையும் மாற்ற முடியாது.

என் வாழ்க்கை என் மகனோடு, என் வட்டம் இதுதான்.. உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள். என்னை சேர்த்துக் கொண்டு நீங்களும் சங்கடப்பட்டு, நானும் சங்கடப்பட வேண்டாம். உறவுகளாக அவரவர் எல்லையில் நிற்போம்.. நேற்றே தெளிவாக முடிவு செய்துவிட்டாள் பிரவீனா.

அதனாலே, மகனை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டாள். என்னோடு இனி என் மகனும் நிதர்சனத்தை ஒருவாறு புரிந்து கொள்ள வேண்டும். என்னோடு போராடவும் கற்றுக்கொள்ள வேண்டும். யார் தடுத்தும் கேட்கவில்லை பிரவீனா. மகனோடு சென்னைக்கு கிளம்பி விட்டாள்.

ஒரு வார விடுமுறைக்கு சென்றவள் இரண்டு நாட்களில் வந்து நிற்கவும் ஆச்சர்யமாக பார்த்தான் மித்ரன்.

“என்ன பிரவீனா மேடம்? ஊருக்கு போகணும், சொந்தக்காரங்களை பார்க்கணும்னு ஆவலாக கிளம்புனீங்க.. ரெண்டே நாள்ல வந்து நிக்கிறீங்க..” என்று மித்ரன் பேச்சை வளர்க்க, லேசாக சிரித்தபடி நகர்ந்து விட்டாள்.

மித்ரன் எல்லாவற்றையும் பொதுவாக கேட்டு விடுவான். இது தான் பேச வேண்டும் என்றெல்லாம் அவனுக்கு கிடையாது. ஆனால், பிரவீனா அப்படி கிடையாது. சில விஷயங்களுக்கு அவளிடம் இருந்து பதில் வரும்.. பல விஷயங்களுக்கு சிரிப்பிலே கடந்து விடுவாள்.

“என்னவோ” என்று நினைத்தவன், உரிமையாக கேட்கும் அளவுக்கு நட்பு இல்லாததால் அமைதி காத்தான். அன்று பிரவீனாவும் அமைதியாக இருக்க இவனால் மேற்கொண்டு எதுவும் அவளோடு பேச முடியவில்லை. அவளாக இளகினால் தான் ஒரு நட்பு வட்டம், இல்லையென்றால் அவள் கூட்டுக்குள் தான் அவள் நிற்பாள்.

பிரவீனாவுக்கு மகனோடு இரவில் தனியாக உறங்க மட்டும்தான் பயம். முன்பு கணவன். அதற்கப்புறம் அம்மா, அப்பா கை பிடித்து நின்றவள். தனியாக எல்லாம் இப்பொழுது தான் இருந்து பழகுகிறாள். இரவில் தூக்கம் தான் அண்டவே அண்டாது. தனியாக இருக்கிறோம் என்ற பயத்தோடு கடந்த கால நினைவுகளும் அலைக்கழிக்க ஏதோ ஒன்றை யோசித்தபடியே இரவு இரண்டு மணி வரைக்கும் முழித்துக் கிடப்பாள்.

அன்று காலை கண் இமை வீங்கிப் போய் அலுவலகம் வர,

“என்ன பிரவீ சரியா தூங்கலையா நீ?..” என்று கேட்டாள் சாய் ஶ்ரீ.

“இல்லப்பா, தனியா இருக்கிற மாதிரியே இருந்துச்சா, தூக்கமே வரல. இதுல ஒரு எலி வேற ஓடிட்டே கிடந்திருக்கு. நான் வேற என்னவோ நினைச்சு பயந்துட்டே தூக்கம் போச்சு போ…”

“நீ எல்லாம் ஒரு பிள்ளைக்கு அம்மா.. தனியா தூங்க பயந்துகிட்டு…” சாடினாள் சாய்.

“வேற என்ன பண்ண சாய். அப்படியே இருந்து பழகிட்டேன். இனி கொஞ்சம் கொஞ்சமா மாத்தணும்னு நினைக்கிறேன். அதுக்கு நிறைய முயற்சி செய்கிறேன். ஆனாலும், நிறைய பயப்படுறேன். ரொம்ப போல்டா இருக்கணும், நமக்கு நம்ம பையன் தான். அவன் நம்மள நம்பித்தான் இருக்கான். அவனை நல்லபடியா கொண்டு வரணும்.ஏதேதோ யோசனை.. ஆனாலும், பிராக்டிக்கலா நிறைய கஷ்டப்படுறேன்…” சோகமாக முடித்தாள் பிரவீனா.

“முன்னாடி இருந்தே உங்க வீட்ல ஒன்னை போல்டாவே வளர்க்கல.. நீயும் எல்லாத்துக்கும் நிறைய யோசிச்சு பயந்து என்னவோ போ.. உங்க அம்மாவை கூட எதிர்த்து பேச மாட்டேன்ற.. உனக்கு புடிச்சது பிடிக்காதது கூட சொல்ல மாட்டேன்ற.. அப்படிலாம் இருக்காத பிரவீ உன்ன நம்பித்தான் ஆதிரன் இருக்கான், அவனும் உன்னை பார்த்து தான் வளருவான். கொஞ்சம் போல்டா பேசு..”

“ஆரம்பத்தில் இருந்தே நான் அப்படித்தான் சாய். என் தங்கச்சி எப்பவுமே எங்க அம்மாவ எதிர்த்து பேசுவா.. அதனாலே, பல விஷயத்துல அவ தப்பிச்சுப்பா.. நான் சின்ன வயசுல இருந்தே அவங்க பேச்சுக்கு தலையாட்டி பழகிட்டேன். பிடிக்கலைண்டாலும் பட்டுன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி நமக்கு சொல்ல வரமாட்டேங்குது. இனி நிறைய கத்துக்கணும் போல.. நான் என்ன பண்ண சாய். இப்படி எல்லாம் என் வாழ்க்கை மாறும்ன்னு நான் கனவுல கூட நினைச்சு பாக்கலையே..”

“எல்லாம் யோசிச்சு தான் இருக்கணும் பிரவீ.. நம்ம வீட்ல எல்லாம் படிச்சு வேலைக்கு போற பையனை பார்த்து தான் கல்யாணம் பண்ணி வைப்பாங்க. ஆனாலும், நம்மளையும் படிக்க வைக்கிறாங்க இல்ல.. பின்னாடி எப்பவாவது அது உதவும்ன்னு தானே..”

“கல்யாணம் பண்ற யாராவது புருசன் பாதியிலேயே விட்டுட்டு போவான். நம்மளும் எல்லாத்தையும் கத்துக்கணும்ன்னா நினைப்பாங்க. காலத்துக்கும் கூட வருவாருன்னு தான் நானும் நினைச்சேன்..” குரல் கமர தொடங்கியது.

“காலையில என்ன மாமா செய்யட்டும்னு, அவர முகத்தைத்தான் பார்த்து நிப்பேன். கீரை பொரியல் செய் பிரவீ.. அப்படி சொன்னாலும் அந்த கீரை கூட அவர் தான் வாங்கி வருவாரு.. ஹாஸ்பிடல் போறது, பேங்க், விசேஷ வீடு, டிரஸ் எடுக்க, கோவிலுக்கு போக, சொந்தக்காரங்க வீட்டுக்கு போறதுக்கு கூட புருசன், மாமியாரு, அம்மா, அப்பா இப்படியே பழகிட்டேன். இதுதான் என் குடும்பம் இப்படியே தான் என் வாழ்க்கை போகும்னு நினைச்சேன். படிச்ச படிப்பை கூட நான் பெருசா யோசிச்சது இல்லை..” கண் கலங்கியது..

 “பேருக்கு ஒரு டிகிரின்னு தான் எங்க வீட்டுல படிக்க வச்சாங்க.. இன்னைக்கு அதுதான் என்னையும், என் பிள்ளையையும் காப்பாத்து. மாமாவ காப்பாத்த முடியாதுன்னு டாக்டர் சொன்னாலும் ஏதோ ஒரு நம்பிக்கை. ரொம்ப கடவுள் பக்தியா இருப்பேன். அந்த நம்பிக்கை கடைசி வரைக்கும் எனக்கு இருந்துச்சு.. மாமா நினைவு தப்பி பொண்டாட்டி, பிள்ளையை மறந்த பொழுது கூட கடவுளை நான் நம்பினேன். எப்படி இருந்தாலும் என்னை கைவிடமாட்டார்ன்னு நினைச்சேன்..”

 அவள் முகம் பார்த்தே சாய் ஸ்ரீ பேச்சை தடுத்தாள்.

“விடு பிரவீ இனி பேசி என்ன ஆகப்போகுது..”

“எனக்கு கோவம் எல்லாம் அந்த கடவுள் மேல தான். சாயங்காலம் அஞ்சு மணிக்கு மேல ஒரு மணி நேரம் உங்க மாமாவ கவனிக்க டாக்டர் வருவாங்க.. அந்த ஒரு மணி நேரம் பார்த்துக்க சொல்லி சிவன் கோயில் பிரதோஷத்துக்கு ஓடி வருவேன். ஊர் பெயர் தெரியாத இடத்துல கூட கோவில் கோவிலா போய் அலைஞ்சிருக்கேன். எட்டு மாசத்திலே ஆதிரனுக்கு பால் குடி நிப்பாட்டிட்டேன். ஹாஸ்பிடல்ல இவன கூட வச்சுக்க முடியாது, மாமாவ பாத்துக்கணும்னு தான். மாமா இல்லன்னு ஆகவும் ஒரு மாசம் நான் எந்திரிக்கவே இல்ல.. அவர் இல்லென்றது உணரவே எனக்கு ஒரு வருஷம் ஆயிடுச்சு…”

“எல்லாரும் சொன்னாங்க. பெருசா என்னத்த வாழ்ந்துட்ட ஒரு பிள்ளையை தவிர.. அந்த கல்யாணத்துல உனக்கு என்ன கிடைச்சுச்சு, தூக்கி போடு. நாங்க சொல்ற மாப்பிள்ளை பாரு.. என்னன்னவோ சொன்னாங்க சாய். எனக்கு தான் கல்யாணம் பண்ணி, ஒரு பிள்ளையும் பெத்துட்டு வேற ஒருத்தரை மனசு நாடவேயில்லை. ஆதிரனா வாய் திறந்து அது வேணும், இது வேணும்னு கேட்கிற வரைக்கும் என் நிலையே சரியில்லை. அப்புறம்தான் நமக்கு ஒரு பிள்ளை இருக்கு, அவனுக்கு நாம மட்டும் தான். என்னை வச்சு தான் அவன் வாழ்க்கை. நான் அமைத்து கொடுக்கிறது தான் அவனுடைய எதிர்காலம், அப்படின்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் வேலை தேடி ஓட ஆரம்பிச்சேன்..”

 சாய் ஸ்ரீ, பிரவீனா தோள்களை தட்டிக் கொடுத்தாள். வேலையில் மும்பரமாக இருப்பது போல் காட்டிக்கொண்டாலும் மித்ரனும் அவள் வார்த்தைகளை கேட்டுக் கொண்டுதான் இருந்தான். எப்பொழுதும் வேலை வேலை என்று விரட்டிக் கொண்டிருப்பவன். இன்று அமைதியாக அவர்கள் வார்த்தையை அவதனிப்பதை அவர்கள் இருவரும் உணரவில்லை. முன்பே நிறைய முறை பிரவீனா புலம்புவாள். அப்பொழுதெல்லாம் அவள் வார்த்தைகளை கவனிக்க கூட மாட்டான். வேலையை பார் என்று விரட்டுவதில்லை குறியாக இருப்பான்.

ஏதோ பிரவீனாவுக்கு கணவன் இல்லை என்பதை தாண்டியும் நிறைய பிரச்சனைகள் இருக்குதோ என்று மனம் துடித்தது மித்ரனுக்கு…

“எனக்கும் நிறைய இடத்துல ரோசம் வந்திருக்கு.. ரோசப்பட்டு கௌரவமா வாழ்வதற்கு கூட புருசன் நம்ம கூட இருக்கணும் சாய். எங்க கிராமத்துல ஒரு பழமொழி சொல்லுவாங்க.. புருசன் இல்லாதவ பிச்சை எடுத்து கூட பிள்ளை வளப்பாலாம். நான் பிச்சை எல்லாம் எடுக்கல நிறைய இடத்துல அனுசரிச்சு, விட்டுக் கொடுத்து போறேன். எனக்கு கஷ்டமா இருக்குன்னு தெரிஞ்சாலும் அதை கண்டுக்காம போக பழகிட்டேன். ஏன்னா, நான் இன்னும் கொஞ்சம் முன்னேறனும் சாய். ஆதிரன்  நல்ல நிலைமைக்கு வந்தாத்தான் நான் தலை நிமிர்ந்து நிக்க முடியும்..” என்று பிரவீ சொல்லும் போதே, தன் தலை நிமிர்ந்து பிரவீனாவை பார்த்தான் மித்ரான்.

தனது டீஎல் தன்னை பார்ப்பது உணர்ந்ததும்,

“ஏய்! சார் பாக்குறாரு.. வா வேலையை பார்ப்போம்..” என்று திரும்பி கொண்டார்கள். பிரவீனா கண்களை துடைப்பது பின் இருந்து பார்த்த அவனுக்கு நன்றாக தெரிந்தது.

அவன் பார்வை அவளைத் தொடர்ந்தது.. இவள் தான் எத்தனை ஆச்சரியமானவள். முப்பது வயது கூட முழுதாக முடியவில்லை. இவள் வயதில்தான் பலர் திருமண வாழ்க்கையை தொடங்குகிறார்கள். இவளானால் தனக்கென்று தனிப்பட்ட வாழ்க்கையை முழுக்க போட்டுவிட்டு மகனோடு ஒரு வாழ்க்கையை தொடங்கி விட்டாள். நிறைய தைரியம் வேண்டும். கணவன் இல்லா பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தெரிந்தும் தனியாக நிற்பதையே விரும்புகிறாளா?…

மகன் மட்டுமா வாழ்க்கை. இவளுக்கென்று தனிப்பட்டு ஒரு வாழ்க்கையே கிடையாதா? முப்பது வயது முடியாமலே தனியாக நின்று, இவள் காலம் என்று போக.. அதற்குள் எத்தனை சிரமங்கள், சங்கடங்கள், வலிகள், வேதனைகளை கடக்க நேரும்.. இள வயது விதவையாக காலம் முழுக்க வாழ முடியுமா?.. என்றேனும் தனக்கென்று ஒரு துணை இல்லை என்ற ஏக்கம் வராமல போகும்?.. பிரவீனாவை புரியாமல் பார்த்தான் மித்ரன். தாம்பத்திய வாழ்க்கை, துணையின் அருமையை அறியாதவர்கள் வேறு.. அதை நன்றாக அறிந்தும் வாழ வேண்டிய வயதில் வாழ்க்கை பறிபோனால்.. அந்த வலியோடும், ஏக்கத்தோடும் தான் ஒரு பெண்ணிற்கு காலம் செல்லுமா என்ன?.. வாழ்க்கை பாரமாக கணக்கும் என்று இந்த பெண்ணிற்கு புரியவில்லையா?.. புரிந்தும் அந்த பாரத்தை தூக்கி சுமக்க தயாராகி விட்டாளாம்?… பிரவீனாவை நிறைய யோசித்துக் கொண்டிருந்தான் மித்ரன்.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!