Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

30.2 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

அத்தியாயம் 30.2

.

அடுத்து வந்த மூன்று தினங்களும் இரு வீட்டோடும், மட்டைப் பந்தோடும் ரகுவிற்கு நன்றாகவே நேரம்  கழிந்தது.



Advertisement

“டேய், ஜேக் ரீச்சர் போலாமா?” எனப் பந்து விளையாட்டில் களைத்து மரத்தடியில் விழுந்து கிடந்தவர்களில் ஒருவன் ஆரம்பித்து வைத்தான்.

“டாம் குரூஸ் படத்துக்கு நாம மட்டும் போனோம்ன்னு என் கூட பிறந்ததுக்கு தெரிஞ்சா என்னை அப்பாட்ட கோத்துவிட்டு, உண்டு இல்லன்னு பண்ணிடுவா” என்றான் ஒருவன்.

“என் தம்பியும் தான்” என்றான் மற்றவன்.

Advertisement

“எல்லாம் வளந்த பசங்க தான… வீட்டுல விட்டா வரட்டும் டா. பாப்கான் வாங்கி கொடுத்தா அமைதியா பாக்க போதுங்க” என சாதக பாதங்களைப் பேசி… ஒருவழியாக வீட்டில் பேசி… அனுமதி கிடைத்த பிள்ளைகள் அனைவரையும் தங்களோடு கூட்டி போவதாக முடிவானது.

Advertisement

படம் ஜோராகச் சென்றது. “சப் டைட்டில் இல்லாம எனக்குப் புரியவே இல்ல லகு” என ரகுவின் காதை கடித்தாள் பெண். அவனும் அவ்வப்போது அவளுக்குப் புரியாதவற்றை விளக்கினான். அவன் அவள் காதுக்குள் கிசுகிசுக்க… அவள் அவன் காதுக்குள் கிசுகிசுக்கவென அடுத்த இரண்டு மணி நேரம் ரகுவை சோதிக்கவே செய்தது. அந்த இருட்டான குளுகுளு அறையில், அவள் சூடான மூச்சுக் காற்றோடு உதடும் ரகுவின் காதுமடலை உரசினால் காதல் பூத்திருக்கும் ஆண்மகன் என்ன செய்வான்? மற்ற ஆண்கள் எப்படியோ… ‘படுத்துறாளே’ எனப் பல்லைக் கடித்தாலும், ‘அஞ்சு வருஷம் ரகு’ என அவன் முடிவை நினைவுபடுத்திக் கொண்டு அமர்ந்திருந்தான் ரகு.

படம் முடியவும் வீட்டிற்கு இருவருமாகத் தாத்தாவின் ஸ்கூட்டியில் கிளம்பினர். அவள் வண்டியை ஓட்ட, பின்னால் அமர்ந்திருந்தவன் இருமுறை வண்டி பள்ளத்தில் ஏறி இறங்கும் வரை அமைதியாக வேடிக்கை பார்த்து வந்தான்.

“கீழ விழப்போறோம். கவனமா ஓட்டு பேபி” எனக் குனிந்து அவள் காதுக்குள் கூற, அவன் பேசியது அவளுக்குக் கேட்கவில்லை. “என்ன?” என அவன் மார்போடு சாய்ந்து கேட்டவளுக்குச் சாலையில் கவனம் இருந்தாலும், அவள் அடித்த பிரேக்கில் அவன் கரம் அவள் இடையை வருடி, முகவாய் அவள் தோளில் உரச, தன் தவம் கலைந்துவிடுமோ என ரகுவின் மனம் அச்சம் கொண்டது.

Advertisement

“நீ வண்டிய நிறுத்து” என ஓரம் நிறுத்த வைத்தவன், அவளுக்குப் பழரசம் வாங்கி கொடுத்து, “வேற ஏதாவது வேணுமா?” எனக் கேட்டு, “நீ பின்னாடி உக்காந்து பொறுமையா குடி, நான் வண்டிய ஓட்டறேன்” என அலுங்காது குலுங்காது, வண்டியைப் பக்குவமாக ஓட்டி, அவளோடு வீடு வந்து சேர்ந்தான்.

இரவின் தனிமையில் ரகுவிற்கு தூக்கம் தொலைந்தது. சலனமில்லாத மனதில் சிறு சலனம். பெண்ணின் மேனி மீது நாட்டமா? இல்லை இவள் மீது விருப்பமா? மனம் குழம்பித் தவித்தது. ஒரு முறை ஆசை தீர தழுவினால், குழப்பம் குறையுமோ? ‘இன்னும் ரெண்டு நாள் இருக்க போற! அதுக்குள்ள இது தேவை தானா? ஒழுங்கு மரியாதையா இருந்துட்டு கிளம்பு’ என மூளை ரகுவை அதட்டி உறங்க வைத்தது.

மறுநாள் காலை மணி பத்தாகியும் அவன் பேபி வீட்டின் பக்கம் வரவில்லை என்றதும், “உங்க பேத்தி எங்க அம்மம்மா?” என வீட்டை அளந்தவனுக்கு ஒரு கட்டத்தில் பொறுமை போக, “அவள பாத்துட்டு வரேன்” என பின்வீட்டை நோக்கி நடந்தான்.

கதவு பூட்டி இருந்தது. தாழ்ப்பாள் இல்லாத பூட்டு என்பதால், உள்ளே இருக்கிறாளா இல்லையா எனத் தெரியவில்லை. “பேபி” எனக் கதவைத் தட்டி நின்றிருந்தான். நேரம் சென்றது. உள்ளே அரவமில்லை. மீண்டும் மீண்டும் அழைத்தான். ம்கூம்… அவள் வருவதாக இல்லை. ‘காலையில பத்து மணிக்குத் தூங்கவும் மாட்டா. வீட்டுல இல்லையோ? எங்க போனா?’ என யோசித்துக்கொண்டே வீட்டைச் சுற்றிக் கொண்டு வீட்டின் பின் புறம் நோக்கிச் சென்றவன் கண்ணில் இலேசாகத் திறந்திருந்த ஜன்னல் படவும் யோசிக்காது, “பேபி இருக்கியா?” எனக் கேட்டுக்கொண்டே ஜன்னல் கதவை முழுவதுமாக திறந்தான்.

திறந்தவன் பார்வையில் உடைமாற்றிக் கொண்டிருந்த அவள் விழுந்தாள். இவன் சத்தம் கேட்டு பெண்ணும் பார்த்திருந்தாள் அவனை. நிமிடங்கள் சில சென்றன அவன் மூளைக்கு அவளின் நிலை உரைக்க. சட்டென சாளரத்தை விட்டு நகர்ந்து விட்டான். ஆனாலும் பார்த்தது… பார்த்தது தானே. ஏற்கனவே ஊசலாடிக் கொண்டிருக்கும் இளமைக்கு இந்தச் சோதனை தேவை தானா என்றிருந்தது ரகுவிற்கு.     

சாளரத்தை மூடிவிட்டு மீண்டும் வீட்டின் வாசலுக்கு முன் வந்து நின்று கொண்டவன் அடிவயிற்றில் சில்லென்றும், உடல் முழுவதும் உஷ்ணமாகவும் படபடப்பாகவும் இருந்தது. சற்று நேரம் பிடித்தது பெண்ணவள் வந்து கதவைத் திறக்க. வெளியே சுவரில் சாய்ந்து நின்றிருந்தவனைப் பார்த்து அவள் முறைக்க, “நீ ஜன்னல பூட்டி இருக்கணும். தப்பு என்னுது இல்ல” என்றான் எங்கோ பார்த்து தலை கோதிக்கொண்டே.

“உஉஉள்ள்ள வ்வ்வா” என்றவளுக்கு அதிகமாகவே திக்கியது. இப்பொழுதும் திக்குகிறாள் தான். ஆனால் வாக்கியத்தின் ஆரம்பத்தில் மட்டுமே திக்கும். ஆனால் இந்த நிமிடம்? இரண்டு வார்த்தையை உதிர்ப்பதற்குள் அவள் படும் பாடு?

அதுவரை மிதப்பாக நின்றிருந்தவன் அவளின் திக்கலில் இளகிப் போனான். அவள் சங்கடம் அவனையும் சங்கடப் படுத்தியது. “பேபி… ஒரு செக்கெண்ட் தான் டி… ஒண்ணும் பாக்கல பேபி…” எனவும், அவள் முறைத்தாலும் கண்களில் நீர் கோர்த்தது.

“பேபி…” எனப் பெண்ணின் கரம் பிடிக்க… அவனைத் தள்ளியவள் அவன் தோள்களில் அடிக்க, சற்று நேரம் பொறுத்தவன், “போதும் டி… கை வலிக்க போகுது” என இழுத்து அணைத்துக் கொண்டான்.

உடல் நடுங்கிக் கொண்டே இருக்க, “ஒண்ணும் பாக்கல டி. ஒரே ஒரு செக்கெண்ட்ல என்ன பார்த்திருப்பேன் சொல்லு? அழாத பிளீஸ்” என முதுகை வருட, முகத்தை அவனுள் புதைத்துக்கொண்டே “ந்ந்நிஜ்ஜம்மா?” எனத் திக்கித் திணறிக் கேட்டு முடித்தாள்.

தன்னிலிருந்து பெண்ணை பிரித்து… முகம் பார்த்து, “இப்போ என்ன… எதிர்பார்க்காம நடந்து போச்சு. பெருசாக்காத.” என்றான் மெல்ல ஈர முடியை வருடி.

“சளி பிடிக்க போகுது. முடிய காயப்போட்டுட்டு கிளம்பி உன் பாட்டி வீட்டுக்கு வா” என்றான் அதற்கு மேலும் அவளைச் சங்கடத்தில் நிறுத்த பிடிக்காது.

பதில் பேசாது நின்றிருந்தவளிடம், “ஜன்னல பூட்டு. இல்ல பாத் ரூம்ல வச்சே டிரெஸ் மாத்து” என அவளைப் பார்க்காதே கூறிவிட்டுக் கிளம்பிச் சென்றான். அன்று முழுவதுமே அவள் கண்களில் அவன் படவில்லை. அவளுக்குச் சங்கடம் கொடுக்க வேண்டாம் என அவன் நினைக்க, அதுவே அவர்கள் இருவருக்கும் மிகுந்த சங்கடத்தைக் கொடுத்தது.

அன்று இரவு அவன் ஐயாவும் அம்மாவும் அலுவலகத்தில் இருந்த வந்தபிறகும் ரகு அவர்களைக் காணச் செல்லவில்லை. நிலவின் தனிமையைப் போக்க எண்ணியவனாக மாடிக்குச் சென்றான். கண்களைத் திறந்தாலும் கண்களை மூடினாலும் காலையில் கண்ட காட்சியே அவனை தின்றது. நினைக்காதே என்ற விஷயத்தையே குரங்கு மனம் அசைபோட்டது.

இது என்னடா சோதனை என் எண்ணியவன் தூங்க முற்பட்டான். கயிற்றுக் கட்டிலில் விழுந்தான். கட்டில்கள் பல மாறியிருந்தாலும், அந்த மாடிக்கும், வீசும் காற்றிற்கும் அந்தக் கட்டிலுக்கும் சொல்லப் பதினைந்து வருடக் கதைகள் இருந்தன. “பேபி” என உதட்டோடு உள்ளமும் உச்சரித்தது மகிழ்ந்தது. அவர்களது அழகான உறவை மனம் அசைபோட்டது. ‘பெண் உடல் மீது ஆசையா?’ மோகம் இல்லாது இல்லை… ஆனால் அதை விட அவள் மீது அதீத அன்பு உள்ளது. காலம் முழுவதும் அவளை நேசித்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கும் ஆசைக்கு என்ன அர்த்தம்? நட்பா?

 தனக்குள்ளாகப் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தவன் பார்வை பக்கத்து வீட்டு மாடியின் பக்கம் சென்றது. அவன் ஐயா நின்றிருந்தார். மாடி விளக்கின் உயபத்தால் அவர் சுருங்கிய நெற்றியும், சோகம் படிந்த முகமும் அவனை எதையும் யோசிக்க விடவில்லை. மூச்சு வாங்க அவன் ஐயாவின் அருகில் நின்றிருந்தான் அடுத்த இரண்டாவது நிமிடம்.

குளிர் காற்றும் மொட்டை மாடி நிலவும் கொடுக்காத எதையோ அவர் அருகே இருந்த இளையவனின் தோள் அணைப்பு கொடுத்திருக்கும் போலும், ரகுவை திரும்பி பார்த்தவர் மெல்ல புன்னகைத்தார்.

“என்னங்க ஐயா?” என்றது ரகுவின் அழுத்தமான கரகரத்த குரல்.

“என்ன வாய்ஸ் டா உன்னுது?” என்றவருக்கு ரகுவின் ஆழமான ஆண்மை ததும்பும் குரல் அவ்வளவு பிடிக்கும். இவருக்கு மட்டுமா… கேட்பவர்கள் அனைவருக்கும் தான்.

“போங்க ஐயா” எனச் சிரித்தவன், “என்ன ஆச்சு?” என்றான்.

“ஏன்.. எனக்கு என்ன?” என்றார் அவரும் புன்னகைத்தவாறே.

“ஐயா” என்றான்.

இருவருக்குமான உறவுக்கு என்ன பெயர் வைப்பது? அப்பா-மகனா? கண்டிப்பாக அந்த வட்டத்திற்குள் இருவரும் பொருந்த மாட்டார்கள். தோளை தாண்டி… அவர் தலையும் தாண்டி வளர்ந்து நிற்பதால், தோழர்கள் எனலாமா? தெரியவில்லை. ஆனால்… இருவருக்குள்ளும் ஆழ வேர்விட்ட அன்பு இருக்கிறது. அதற்கு என்ன பெயர் வேண்டுமோ வைத்துக் கொள்ளலாம்.

“மனசு சரி இல்ல ரகு” என்றார் நீளமான மூச்சுக் காற்றை வெளிவிட்டவாறே.

“என்னாச்சுங்க ஐயா?”

“என் கூட வேல பார்க்கிறவன் பையன் தற்கொலை பண்ணிகிட்டான் டா. மனுஷன் முகத்தைப் பாக்க முடியல. உன் வயசு தான் அவனுக்கும்… மனசே சரி இல்ல.”

அவரை சுற்றிப் போட்டிருந்த அவன் கரத்தின் அழுத்தத்தை அதிகரித்தான்.

“காதலாம்! மகன் செத்தபிறகு தான் அவன் காதலிச்சான்னே அவருக்கு தெரியுது பாவம்.”

“ஏன்… அந்த பொண்ணு வேண்டாம்ன்னு சொல்லிட்டாளாமா?”

“ரெண்டு பேரும் ஒரு வருஷமா காதலிச்சாங்களாம். பொண்ணு வீட்டுக்கு தெரியவும், சொந்தத்தில இருக்க பையனோட அவசர அவசரமா கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க போல. கல்யாணம் ஆன அன்னைக்கே அந்த பொண்ணு விஷம் குடிச்சு செத்துப் போகவும், இவனும் விஷயம் கேள்விப்பட்டு உயிர போக்கிட்டான்.”

“ஓஹ்” என்றவனுக்குள்ளும் ஏதோ செய்தது.

“என்ன கண்றாவி காதல் டா இது? சந்திரிகாவும் நானும் விரும்பினதும் உடனே கல்யாணத்த பண்ணி வச்சாங்களா என்ன? அவ வீட்டுலயும் நிறைய பிரச்சன பண்ணினாங்க. ‘அவர பத்தி விசாரியுங்க. அவர் மேல ஏதாவது குறை இருந்தா சொல்லுங்க… அதவிட்டுட்டு எமோஷனல் பிளாக் மெயில் பண்ணாதீங்க. அதுக்காக எல்லாம் வேற கல்யாணம் பண்ண மாட்டேன். உங்க விருப்பம் இல்லாம நாங்க கல்யாணம் பண்ண மாட்டோம். அதே நேரம் வேற எவனையும் கல்யாணம் பண்ண மாட்டேன்’ன்னு பிடிவாதம் பிடிச்சா. அவங்களும் ரெண்டு வருஷம் பொறுத்தாங்க. நாங்க ரெண்டு பேரும் பார்த்து பேசிக்கவும் இல்ல… விட்டுக் கொடுக்கவும் இல்லன்னதும் ‘உங்க விருப்பம்’ன்னு ரெண்டு வீட்டுலயும் பேசி கல்யாணம் பண்ணி வச்சாங்க.

சாகக் காட்டின தைரியத்தை, ஏன் இந்த பிள்ளைங்க வாழ காட்டல? ஆசை ஆசையா இருபது வருஷம் வளர்த்த மகன உயிரில்லாம பாக்கும் போது அந்த பெத்தவங்க நிலை எப்படி இருக்கும்ன்னு ஏன் இந்த அறிவு கெட்டவன் நினைக்கவே இல்ல? என்னவோ ரகு… மனசுக்கு எப்படியோ இருக்கு.

உனக்கு ஏதாவது கஷ்டம்ன்னா என்கிட்ட வரணும் சரியா? நீயா மடத்தனமா இந்த மாதிரி எல்லாம் யோசிக்கக் கூடாது சரியா? ஏதாவது பொண்ண விரும்பி… அதுனால பிரச்சனைனாலும் என்ட்ட வரணும். உனக்குன்னு எப்பவும் நான் இருப்பேன் சரியா?” என்றவரை பார்த்துப் புன்னகைத்தவன், “உங்கட்ட வரமா வேற எங்க போவேன் ஐயா? எனக்கு எல்லாமே நீங்கத் தானே” என்றான்.                                                                           

என்ன உறவு இவர்களது? அப்பா-மகனா? நண்பர்களா? மாமனார்-மருமகனா? அன்பை அடித்தளமாகக் கொண்டிருந்தால் எந்த உறவானால் என்ன?

“என்னவோ ரகு. நீ பக்கத்தில இருந்தா யானை பலம் எனக்கு. உன்ட்ட பேசினாலே மனசு லேசாகிடுது” எனப் புன்னகைத்தார்.

“அஅப்பா” என அழைத்துக் கொண்டே படி ஏறி வந்தவள் அப்பாவோடு நின்றிருந்தவனைப் பார்த்து “இஇங்க தான் இருக்கியா லகு?” என்றாள்.

தன்னை எந்தச் சலனமும் இல்லாது பார்த்துச் சிரிப்பவளைப் பார்த்தவன் மனம் ஏதோ செய்தது. இழுத்துப்பிடித்துப் புன்னகைத்தான்.

“என்ன மா?” என்ற அப்பாவிடம், “அஅம்மா கூப்பிட்டாங்க” என்றாள்.

படி இறங்கிச் செல்லும் வரை தகப்பனைப் பார்த்து நின்றிருந்தவள், “த்தூக்கம் வரலியா?” என ரகுவின் முகம் பார்த்தாள்.

“தூங்கணும்” என்றவன் பார்வை எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு ஒளிரும் நட்சத்திரங்களின் மேல் பதிந்திருந்தது.

ரகுவின் விரல்களோடு தன் விரல்களைக் கோர்த்தவள் அவன் புஜத்தில் சாய்ந்து கொண்டாள்.

“எஎன்னோட ரெண்டு வயசுல இருந்தே என் கூட இருக்க நீ. ஒண்ணா தூங்கி, ஒண்ணா எழுந்து, ஒண்ணா குளிச்சு, ஒரே தட்டுல சாப்பிட்டு வளர்ந்திருக்கோம். என்னைப் பத்தி யோசிக்க உனக்கு இன்னைக்குக் காலையில என்னை அறையும் குறையுமா பார்த்தது மட்டும் தான் இருக்கா?” என்றாள் குரல் கமற.

“பேபி?” என்றவன் மனம் அதிர்ந்து அடங்கியது.

“இஇல்லன்னு ப்பொய் சொல்லாத ரகு. என்னைப் பார்த்தாலே உனக்கு அது தான் நினைவு வருது. அதனால தான என்னை அவாய்ட் பண்ற? என்ன பார்க்கிற? ஆமா தான? இது கூடவா எனக்குப் புரியாது?”

அவள் கேட்ட அனைத்தையும் விடுத்து, “அப்போ என்னை உனக்கு முழுசா புரியுதா? என் தடுமாற்றம் ஏன்னு தெரியுதா?” என அவளைப் பார்க்க, அவளும் அவன் கண் பார்த்தாள்.

“என் மனசு உனக்கு புரியுதா?” அவன் அவஸ்தையோடே அவளைப் பார்க்க, அவஸ்தை இடம் மாறியது.

“என்னை புரியுது தான… அப்போ நீயே சொல்லேன். ஏன் என் கண்ணத் திறந்தாலும், மூடினாலும் என் முன்ன நீ வர? உன்ன நினைக்கும் போதெல்லாம் ஏன் என் மனசுல குப்புன்னு சந்தோஷம் பிறக்குது? ஒரு வார லீவுக்கு எல்லாம் ஏன் டி அடிச்சு பிடிச்சுட்டு அந்த வயசான மனுஷன தனியா விட்டுட்டு உன்னப் பாக்க ஓடி வரேன்? என்னைச் சுத்தி இவ்வளவு காத்து இருக்க… ஏன் டி உன்னோட மூச்சு காத்து என்னைத் தீண்டும் போது மட்டும் என்னென்னமோ ஆசை வருது? என்னை புரியுது தான… அப்போ நீயே சொல்லு பேபி, ஏன் இப்படி ஆகிட்டேன் நான்?”

அவன் கேட்க, படபடவென அடிக்கும் இதயத்தைக் கட்டுப்படுத்த தெரியாது, பிடித்திருந்த அவன் கரத்தை அழுந்த பிடித்துக்கொண்டாள்.

“நீ தலையில இருந்து கால் வரைக்கும் போர்த்திட்டு நின்னாலும் நீ மட்டும் ஏன் என் கண்ணுக்குப் பேரழகியா தெரியறன்னு உனக்கு தெரிஞ்சா சொல்லேன் பேபி. உன்னோட குட்டி உலகத்துக்குள்ள என்னை இணைச்சுக்க ஆசை வருது பேபி. ஏன்னு உனக்காது தெரியுமா?

காலையில உன்னைப் பார்த்து நான் டென்ஷன் ஆனது உண்மை தான்.  கேவலமா அதையே பல முறை நினைச்சதும் உண்மை தான். ஆனா நான் மோசமானவன் இல்லையே. அப்பறம் ஏன் அப்பிடி? நீ நின்ன கோலத்தை விட, கம்மி துணியில பல பொண்ணுங்கள பார்த்திருந்தாலும் ஏன் நீ மட்டும் என்னை டிஸ்டர்ப் பண்றன்னு உனக்கு தெரிஞ்சா சொல்லு பேபி.

நீ ஆசையா எதையாவது பார்த்தா கூட அத உனக்கு வாங்கி கொடுத்துடணும்ன்னு ஏன் எனக்கு தோணுது? வாழ்நாள் பூரா உனக்கு எல்லாமா எப்பவுமே நான் இருக்கணும்ன்னு எனக்கு ஏன் பேபி தோணுது? தெரிஞ்சா சொல்லேன் பேபி.”

‘சொல்லேன் பேபி’ எனக் கேட்டுக் கேட்டே அவன் மனதை அவளிடம் முழுதாகத் திறந்திருக்க, அவன் கேள்விகளுக்கு என்ன பதில் கூறுவாள்? உனக்கு மட்டும் அல்ல எனக்கும் அப்படித் தான் என்றா? இல்லை… ‘நீ தேடும் தாயின் அன்பையும் சேர்த்தே உனக்குக் கொடுக்க என் மனம் ஆசை கொள்கிறதே… அது ஏன் என்பதையும் நீயே கூறிவிடேன்’ என்றா?

இருவரின் கேள்விகளுக்கு, பதில் விளக்கங்கள் தேவை இருக்கவில்லை. “ல்லகு” என்றவள் அவன் புஜத்தைக் கட்டிக் கொண்டு அதில் தலை சாய்த்துக் கொள்ள, “பேபி” என்றவன் அவள் உச்சந்தலையில் ஆழ இதழ் பதித்தான்.

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!