Skip to content
Post Views: 2,048
நாம் கேட்ட காலங்கள் 5
எல்.எல்.பி இரண்டாம் ஆண்டில் இருந்தான் ராஜமகேந்திரன். அவர்கள் பிரிவில் செயலாளர்கான தேர்தல் முடிந்து சில நாட்கள் கடந்தன. அவன் படிப்பது மிகப்பெரிய பல்கலைக்கழகம். தமிழகத்தில் மிகவும் பிரபலமான, பிரபலமானவர்கள் படிக்கின்ற, அங்கு படித்தவர்கள் பிரபலமாகி என்று ஒரு முக்கியமான கல்வி நிறுவனம்.
Advertisement
ஒவ்வொரு பிரிவுக்கும் தனியே தனியே நூலகம் இருந்தபோதிலும், பல்கலைகழகத்திற்கென்றே பெரிய நூலகம் ஒன்று உண்டு. அங்கே பொதுவான அத்தனை நூல்களும் கிடைக்கும். மற்றபடி பாடப்புத்தகங்கள், பாடம் சம்மந்தமானவை எல்லாம் அவரவரின் பிரிவில் கிட்டும்.
மகேந்திரன் அப்போது நூலகத்தில் இருந்தான். அவன் காதில் குமார் சானுவின் இசைத்தொகுப்பு இசைத்தது. ஏக் லட்கி கோ தேகோ தோ என்று அவர் பாடிக்கொண்டிருக்க, மெல்ல முணுமுணுத்தவாறே அவன் புத்தகம் ஒன்றைத் தேடிக்கொண்டிருந்தான். ஜான் ஸ்டுயர்ட் மில் எழுதிய ‘ON LIBERTY’ என்ற புத்தகம் கண்ணில் பட அதனை எடுத்துக்கொண்டு படிக்கலாம் என்று நகர, முன்னே மெல்லிய கொலுசு சத்தம்.
Advertisement
Advertisement
அந்த அமைதியான நூலகத்தில் அந்த சத்தம் இரைச்சல் என்றே மகேந்திரனுக்குத் தோன்றியது. அவன் நின்ற இடத்திற்கு அப்படியே இணையான வலப்பக்கத்திலிருந்து சத்தம் கேட்கவும் யாரென்று எரிச்சலோடு எட்டிப்பார்த்தான்.
இடக்கையில் புத்தகமிருக்க, தலையில் ஹெட்போன்ஸ். லேசாய்த் தலைசாய்த்துப் பார்த்தால் பிரசன்ன வர்தினி ஏதோ புத்தகம் தேடினாள்.
Advertisement
“ஹேய்! திலக் தங்கச்சி தானே நீ?” என்ற ராஜமகேந்திரனின் குரலில் நிமிர்ந்தாள் பெண்.
அந்த குரலில் எரிச்சல் எட்டிப்பார்த்தாலும், எப்படி பேசினாலும் சில குரல்களில் ஒரு ஈர்ப்பிருக்குமே. அப்படியான குரல் ராஜாவினுடையது. குரலின் ஈர்ப்பு விசையில் நிமிர்ந்தவள் எழுந்தாள்.
லேசாய்ப் புன்னகைத்த பிரசன்னா, “சொல்லுங்க சீனியர்” என்றாள்.
“நாளையிலிருந்து, நோ இப்பவே உன்னோட கொலுசை கழட்டி பேக்ல போடு.” என்றவன் பார்வை அவள் கண்களில் நிலைத்தது. நினைப்பதை அப்படியே காட்டும் விழிகள்.
அதிர்ச்சியும், கொஞ்சம் கண்டனமும் கலந்து பார்த்த பிரசன்னவர்தினி,
“அதை சொல்ல நீங்க யாரு?” என்றாள்.
“ப்ச், இங்க பாரும்மா. உன்னோட கொலுசு அமைதியான லைப்ரரில டிஸ்டர்ப் பண்ணுது. காலேஜ்ல கூட போட்டுக்கோ. இன்னிக்கு நான் சொல்றேன். நாளைக்கு இன்னொருத்தங்க சொல்லுவாங்க. உன் அண்ணனை வச்சு நான் சொன்னா கேட்கக் கூடாதுனு இருப்பியா?” என்றிட,
“அப்படியெல்லாம் இல்லை” என்றாலும் கல்லூரி முதலாம் ஆண்டில் இருந்த பிரசன்னாவிற்கு என்னவோ போல் ஆகிவிட்டது. நம்மை குறித்த விமர்சனத்தை வெளியாட்கள் சொல்லுகையில் வருகின்ற ஒரு அசௌகரியம்.
“அப்போ ஓகே” என்று தோளைக் குலுக்கிவிட்டு அவன் செல்ல,
“சீனியர்” என்று கொஞ்சம் பிரசன்னாவின் குரல் உயர, அதன் ஸ்ருதி அப்படியே மகேந்திரனின் பார்வையில் மட்டுப்பட்டது.
“லைப்ரரி ரூல்ஸ் என்னனு உனக்குத் தெரியாதா?” என்றவன் குரல் உயரவில்லை என்றாலும், கோபம் உயர்ந்ததை பிரசன்னாவால் உணர முடிந்தது.
“சாரி!” என்றவளிடம் “என்ன?” என்று மகேந்திரன் கேட்க, பிரசன்னாவிற்கு அவன் கோபம் பார்த்த பின் ஒன்றும் கேட்கத் தோன்றவில்லை. அமைதியாக “ஒன்றுமில்லை” என்பது போல தலையசைத்தாள். மகேந்திரன் லேசாய் முறைத்துவிட்டுச் சென்றான்.
அவன் சென்றதும் அங்கேயே அப்படியும் இப்படியும் நடந்து பார்த்த பிரசன்னாவிற்குத் தன் கொலுசின் சத்தம் பிறர் கவனத்தை ஈர்க்கிறது என்று புரிந்து கழற்றி பையில் பத்திரப்படுத்தினாள்.
அந்த வார வெள்ளிக்கிழமை ராஜமகேந்திரன் நூலகம் செல்ல, பிரசன்னாவும் அவன் பார்வையில் பிரசன்னமானாள்.
திலக், ஸ்ரீதரன், மகேந்திரன் மூவரும் பி.ஏ, எம்.ஏ முடித்து எல்.எல்.பி சேர்ந்திருந்தனர். பிரசன்னாவோ பி.ஏ. எல்.எ.பி., சேர்ந்திருந்தாள். அப்படித்தான் பிரசன்ன வர்தினி திலக்கின் தங்கை என்று தெரியும்.
இன்றும் மகேந்திரன் கையில் புத்தகத்தை வைத்துக்கொண்டு அதில் மூழ்கிப்போயிருந்தான். யாரும் தொந்தரவு செய்ய முடியாத ஒரு இருக்கை. அந்த நீளமான படிக்கும் அறையில் கடைசி கேபினில் உட்கார்ந்திருந்தவனுக்கு உறுத்தல்.
யாரோ உற்றுப்பார்ப்பது போல் இருக்க சட்டென்று நிமிர்ந்தவன் பார்வையில் பிரசன்னவர்தினி. அகப்பட்ட ஆட்டுக்குட்டியாக அவள் பார்த்தாள்.
ஒற்றை விரல் நீட்டி ‘வா’ என்பதாக அவன் சைகை செய்ய, மெல்ல அவனை நோக்கி நடந்தாள். உட்காரச் சொல்லி அவன் பக்கத்து இருக்கையைக் கண்களால் காட்டினான்.
“என்ன வேணும்?” என்று மெல்லிய குரலில் கேட்க,
“இல்ல சீனியர், அது” என்று அவள் இழுக்க
“கம் டூ தி பாயிண்ட்” என்றான் கறாராக.
பிரசன்னா பேசத் திணற, “எதுக்கு என்னைப் பார்க்கிற? என்ன வேணும்?” என்று மீண்டும் கேட்க, அவன் தவறாக நினைக்கிறானோ என்று தடுமாறிப்போனவள் தன்னை நிதானப்படுத்திக்கொண்டாள்.
“அய்யோ!” என்றவள் மெல்ல குரலைத் தாழ்த்தி,
“நான் உங்களைப் பார்க்கல, உங்க கையில என்ன புக் இருக்குனு பார்த்தேன்” என்றதும் அவன் நம்பாமல் பார்த்தான்.
“இல்லை. நீங்க டாப்பர், ஸோ என்ன புக்ஸ் படிக்கிறீங்கனு பார்த்து அப்படியே என் அறிவை வளர்த்துக்கலாம்னு நினைச்சேன்”
“உன் சிலபஸைப் படிச்சாதானே நீ டாப்பர் ஆகலாம்” என்று புன்னகையை அடக்கிக் கொண்டு கொஞ்சம் கெத்தாகவே பிரசன்னாவிற்குப் பதில் சொன்னான் மகேந்திரன்.
“அது இல்லை, உங்க ஸ்பீச் கேட்டிருக்கேன். மூட் கோர்ட்’ல (moot court – சட்டம் பயிலும் மாணவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள நடக்கும் கற்பனை நீதிமன்றம்) நீங்க பேசுறதைக் கேட்டிருக்கேன். உங்க பாயிண்ட்ஸ்லாம் நல்லா இருக்கும். உங்களை மாதிரி ஆகணும்னா நீங்க படிக்கிறதைப் படிக்கணும்னு நினைச்சேன்” என்றதும் ஒளித்து வைத்த அவன் புன்னகை ஒளிரத்தொடங்கியது.
“செகரெட்டரி தங்கச்சி எங்கிட்ட இன்ஸ்பையர் ஆகியிருக்கீங்க. அப்படித்தானே? உங்கண்ணனை போய்க் கேட்க வேண்டிதானே? அவனும் புத்திசாலிதானே?” என்ற மகேந்திரனின் பேச்சில்,
“பெரியண்ணா உங்களை மாதிரி பேச மாட்டாங்களே. மோரோவர் அவங்களுக்கு லாயர் ஆகணும்னு ஆசையில்லை, அவருக்குப் பாலிடிக்ஸ்ல இன்ட்ரஸ்ட்.” என்றதும் ராஜமகேந்திரனின் மனமோ,
‘ஓஹ், அவனுக்கும் பாலிடிக்ஸ்ல ஆர்வமா? இப்பவே நமக்கு ஒரு அரசியல் எதிரி இருக்கானே’ என்று கணக்கிட்டது.
“பரவாயில்லை. இப்பவே என்ன செய்யணும்னு உனக்குத் தெளிவிருக்கே. உனக்கு லா ப்ராக்டிஸ் பண்ணனும் அப்படித்தானே?” என்று கேட்டவன் அவளுக்குத் தேவையான தகவல்களைச் சொன்னான்.
“மூட் கோர்ட்ஸ் பாரு, பழைய கேஸ் லா எல்லாம் எடுத்துப் படி. கேஸ் ஸ்டடிஸ் நிறைய ஆன்லைன்ல இருக்கும், ப்ராக்டிஸ் பண்ணு. அண்ட் நான் படிக்கிற இந்த புக் Team of Rivals: The Political Genius of Abraham Lincoln by Doris Kearns Goodwin.” என்றவன் வலக்கரம் அவனின் மீசையின் முடியைப் பிடித்து உதட்டில் படுமாறு இழுத்துவிட்டது. பிரசன்னாவின் பார்வையை அது இழுக்க, அடுத்து அவன் சொன்னதில் கவனம் கலைந்தது.
“இது உனக்குத் தேவைப்படாது” என்றிட,
“ஏன்?”
“நீ லா ப்ராக்டிஸ் பண்ண போற, உனக்கு எதுக்கு?” என்றான்.
“நான் லா ப்ராக்டிஸ் பண்றேன் சொன்னேன். பாலிடிக்ஸ்ல இன்ட்ரஸ்ட் இல்லை சொன்னேனா?” என்று பிரசன்னவர்தினி கேட்க,
“என்ன உங்க வீட்ல இருந்து எத்தனை பேர் எனக்குப் போட்டியா கிளம்பியிருக்கீங்க?” என்றான் நிஜமான சிரிப்போடு.
பதினெட்டு நிரம்பிய அந்த சின்ன பெண்ணின் பேச்சும் ஆர்வமும் அவனுக்குப் பிடித்தன. ஆனால் ரசனை என்றெல்லாம் இல்லை. தான் என்ற எண்ணம் இருப்பவர்களுக்கு அடுத்தவரை ரசிக்க மனம் இருக்காது. ராஜமகேந்திரன் அப்படியானவன். இத்தனைக்கும் அவனும் கல்லூரி மாணவனே, இள நிலை, முது நிலை எல்லாம் பயின்று சட்டம் பயில வந்த அவனுக்கு அவளை விட ஆறு வயது அதிகம். அந்த பக்குவம் அவனுக்கிருந்தது.
“அப்போ செகரெட்டரி, செகரெட்டரி தங்கச்சி எல்லார்கிட்டவும் உஷாரா இருக்கணும்” என்றதும்
“அதென்ன திலக் தங்கச்சி, செகரெட்டரி தங்கச்சினு அதையே சொல்றீங்க? எனக்குனு பெயர் இருக்கு. உங்களைப் பெயர் சொல்லாத ரீசன் நீங்க சீனியர். எனக்குன்னு பெயர் இருக்கப்ப என்னை திலக் அண்ணா தங்கச்சியாவே லேபல் பண்ணாதீங்க” என்றாள் அழுத்தமான குரலில்.
ராஜமகேந்திரன் கூர்மையாகப் பார்த்தபடி எழ,
“என் பெயர் பிரசன்னவர்தினி” என்றாள்.
“சரி” என்றவன் “உன் டவுட்ஸ் க்ளியர் ஆகிடுச்சுன்னா என்னை டிஸ்டர்ப் பண்ணாம போறியா?” என்றதும் பிரசன்னாவிற்குக் கொஞ்சம் கோபம், ஆற்றாமை எல்லாம் கலந்த நிலை.
சாதாரணமாக பேச என்ன இவன் இப்படி செய்கிறான்? ஆணும் பெண்ணும் பேசுவதெல்லாம் அவர்கள் கல்லூரியில் மிக மிக இயல்பான ஒன்று.
ஆனால் அந்த வயதில் பிரசன்னாவிற்கு அவனை எதிர்த்துப் பேச பெரிதாக வரவில்லை. கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டான், அதற்கு மேல் அவனும் என்ன பேசுவான் என்று யோசித்து அவன் படித்த புத்தகத்தின் இன்னொரு பிரதியைத் தேடப் போனாள். அதற்குள் அவளது சின்ன தாத்தாவின் மகள் மானசா தங்கைக்கு எங்கிருக்கிறாய் என்று குறுஞ்செய்தி அனுப்ப, புத்தகமும் கிடைக்காத காரணத்தால் அதனை ஆன்லைனில் ஆர்டர் போட்டுவிட்டு நூலகம் விட்டு வெளியே வந்தாள் பிரசன்னா.
வெளியே வந்தவளை மகேந்திரனின் குரல் நிறுத்தியது.
“கொலுசைக் கழட்டிட்ட, குட்” என்றான்.
அந்த குரல் வசீகரித்தாலும் அதனை வார்த்தையால் சொல்லவில்லை. அவர்கள் எல்.எல்.பி பிரிவு மாணவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
“ராஜமகேந்திரனுக்கு ஹெட்வெயிட் அதிகம்” என்று. அதனால் அதை சொல்லி இன்னும் தலைவனின் தலைக்கனத்தை ஏற்ற அவள் விரும்பவில்லை.
“அடுத்தவங்களை சும்மா எல்லாம் நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்”
ரோஷமாக பிரசன்னா பேச,
“உள்ள சொன்னதுல டென்ஷன் ஆகிட்டியா? குட். உண்மை அதுதானே? படிச்சிட்டு இருந்த என்னை டிஸ்டர்ப் பண்ணின தானே?” என்று கேட்க, பிரசன்னாவின் முகம் ‘ஏண்டா இவன் கிட்ட பேசினோம்’ என்ற பாவனையைக் காட்டியது.
அதே நேரம், “வர்தினி!” என்ற குரலில் திரும்பினால் திலக் நின்றான். தங்கையிடம் மகேந்திரன் ஏதோ பேசுவதும், அவள் முழிப்பதும் கண்ணில் பட பதறித்தான் வேக நடையோடு அவர்களை நெருங்கினான்.
“எதாவது பிரச்சனையா டா?” என்று திலக் கேட்க, ராஜமகேந்திரனோ கண்டுகொள்ளாமல் அவ்விடம் விட்டு நகர்ந்தான். திலக் போகும் அவனை யோசனையாகப் பார்த்தபடி,
“உன்னை எதாவது சொன்னானா?” என்று கேட்க, பிரசன்னா பதறி
“இல்லைண்ணா. நான் மூட் கோர்ட்ல அவங்க பேசினதுல டவுட் கேட்டேன்” என்றாள்.
அந்த உரையாடல் ராஜமகேந்திரன் காதில் விழுந்தாலும், அக்மார்க் அரசியல்வாதியாக அதை எல்லாம் கண்டும் காணாமல் அவன் நடைப்போட்டான்.
பிரசன்னவர்தினிக்குத்தான் என்னவோ போல் ஆனது. அண்ணன் பேசியதைக் கேட்டிருப்பான், தான் பேசப்போய் அண்ணன் அவனைத் தவறாக நினைக்கிறானே? என்று மகேந்திரனை மனத்தில் நினைக்கத் தொடங்கினாள்.
error: Content is protected !!