Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதல் ரட்சகா

காதல் ரட்சகா 15

மாயா சொன்னது ஒருவருக்கும் பிடிக்கவில்லை.

“அந்த வீட்டுக்கு நீ போனதே தப்புங்கறோம். இதுல நாங்களும் வரணுமா? அவங்க நம்மளை கொன்னுட்டா என்ன பண்றது?” என்று கேட்டாள் ரதி. அவளுக்கு தன் மாமியாரை பார்த்து ரொம்ப பயம்.



Advertisement

மாயாவை பொறுத்தவரை மாமியார் தன்னை கொல்ல பார்த்த வரை கூட சரிதான். ஆனால் விக்னேஷை கொல்ல பார்த்தது மாபெரும் தவறு என்று நினைத்தாள்.

“நம்மையும் கூட கொல்லட்டுமே!” என்றாள் மாயா.

Advertisement

Advertisement

“அவங்க நம்மை பயமுறுத்த பாக்குறாங்க. நம்மை அடிபணிய வச்சி அவங்க பசங்ககிட்ட இருந்து பிரிச்சிடலாம்ன்னு பாக்குறாங்க. நாம அவங்களுக்கு எதிரா போராட்டம் பண்ணணும். கத்தி இல்ல. ரத்தம் இல்லை. இது ஒரு மௌன போராட்டம். விருப்பம் இருந்தா நீங்களும் வந்து கலந்துக்கங்க. இல்லன்னா கடைசிவரை அவங்களுக்கு பயந்து இப்படியே இருங்க..” என்றாள் மாயா.

அமலாவுக்கு தன் சின்ன மகளின் மீது கோபம் வந்தது. “நீ பாட்டுக்கு எதையாவது உசுப்பி விட்டுட்டு கடைசியில் என்னை அனாதையா நிக்க வச்சிடாதே. சொத்து இல்லன்னாலும் பரவால்ல. எனக்கு என் பிள்ளைங்க முக்கியம்..” என்றாள்.

Advertisement

“இதுதாம்மா நம்மளோட பலவீனம். எதுவுமே இழக்க இல்லன்னு நினைச்சி போராடினா மட்டும்தான் நம்மால் ஜெயிக்க முடியும்..” என்றாள் மாயா.

தருண் விழிகளை சுழட்டினான்.

“ஏதோ ஒரு போர்க்களத்தில் நின்னு கொடுக்க வேண்டிய ஸ்பீச்சை நீ இங்கே வந்து கொடுத்துட்டு இருக்க..” என்றான்.

“ஏன் மாமா உங்களுக்கு புரியல. இதுவும் ஒரு போர்க்களம்தான். சொந்த வீட்ல இவங்க ஆயுதம் எடுக்கும்போது நாம பொறுத்துக்கிட்டு இருக்கணுமா? ஏன்? அவங்களை விட நமக்கு வயசு குறைவா இருப்பதால? இல்ல அம்மா எனும் புனிதமான ஸ்தானத்துல அவங்க இருப்பதாலா?” என்று கேட்டாள்.

அவளின் கேள்வி விக்னேஷை யோசிக்க வைத்தது‌.

அம்மாவின் இடத்தில் வேறு யார் இருந்திருந்தாலும் இவன் இந்நேரம் அவர்களை கொன்று இருப்பான். மாயா கேட்பது நியாயம்தான்.

“தேங்க்ஸ் மாயா. என்னோட கண்களை நீ திறந்து வச்சிருக்க.” என்ற விக்னேஷ் தன் அண்ணனை திரும்பிப் பார்த்தான்.

“இன்னைக்கு இவளை கொல்ல ஆள் செட் பண்ண மாதிரி நாளைக்கு அண்ணியை கொல்லவும் அம்மா ஆசைப்படுவாங்க. நீ அப்பவும் அமைதியா பார்த்துட்டு இருப்பியா? அம்மாவை நாம சரி பண்ணணும். அன்பால சரி பண்ண முடியலன்னா அதட்டியாவது சரி பண்ணணும்..” என்றான்.

‘மாயா இங்கே வந்ததே தவறு. இங்கே அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த மற்றொரு ஜோடியையும் குழப்பி விட்டு விட்டாள்..” என்று அம்மாவுக்கு கோபம்.

“நான் யோசிச்சிட்டு சொல்றேன்..” என்றான் வருண்.

மாயாவும் விக்னேஷ் அங்கிருந்து புறப்பட்டார்கள்.

போகும் வழியில் ஒரு ரெஸ்டாரண்டின் முன்னால் காரை நிறுத்தினான் விக்னேஷ்.

இவள் திரும்பிப் பார்த்துவிட்டு “இங்கே எதுக்கு?” என்று கேட்டாள்.

“புதுசா கல்யாணமாகி இருக்கு. எனக்கும் உன்னை கூட்டிகிட்டு நிறைய இடத்தை சுத்தி பார்க்கணும்னு ஆசையா இருக்கு. உன்னோடு டைம் ஸ்பென்ட் பண்ணணும்ன்னு ஏக்கமா இருக்கு..” என்றான்.

இவளுக்கு இயல்பாய் வெட்கம் படர்ந்தது.

“நீ வெட்கப்படும்போது ரொம்ப அழகா இருக்க. நான் இந்த அளவுக்கு எதிர்பார்க்கல..” என்று வெளிப்படையாக சொன்னான் விக்னேஷ்.

“நானே என்னை இந்த அளவுக்கு எதிர்பார்க்கல. நீதான் எல்லாத்தையுமே மாத்திக்கிட்டு இருக்க. என்னை டீன் ஏஜ் கேர்ள் போல ஃபீல் பண்ண வைக்கிற. சங்க இலக்கியத்துல தலைவனுக்காக ஏங்கும் தலைவியை போல என்னை ஏங்க வைக்கிற. நான் ஏதோ நினைச்சேன். உன் பக்கத்துல எல்லாம் தலைகீழா மாறிட்டு இருக்கு. சோல்மேட் பத்தி எல்லாம் நான் நம்பியதே இல்ல. ஆனா உன்னை பார்க்கும் போது நம்ப தோணுது..” என்றாள்.

இவன் அவளை நெருங்கி அவளின் இதழில் தன் இதழை உரசினான்.

“சரிங்க தலைவி. இப்ப போய் ஏதாவது சாப்பிடலாமா?” என்று கேட்டான்.

அவளும் அவனோடு சேர்ந்து வந்தாள்.

ரெஸ்டாரண்டில் தனி மேஜையில் அமர்ந்தார்கள்.

உணவை விக்னேஷ் ஆர்டர் செய்தான். மாயா அவனின் முகத்தை பார்வையால் ஆராய்ந்து கொண்டு இருந்தாள்.

“நீ என்னை ரொம்ப உத்துப் பார்க்கிற..” என்று அவன் சொல்ல, “உன்னை பாக்காம இருக்க முடியலையே! என் அக்காவுக்கு கல்யாணமான நாள்ல இருந்தே எனக்கு உன்னை தெரியும். ஆனா உன்னோடு பழக ஆரம்பிச்ச பிறகு ரொம்ப புதுசா பாக்குற மாதிரி இருக்கு. ஏதோ ஒரு தேவலோகத்தில் இருந்து தப்பிச்சி வந்த தேவகுமாரனை போல இருக்க. பச்சையா சொல்றேன் விக்கி உன்னை போல ஒரு ஹேண்ட்ஸமான மனுஷனை நான் இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லை. எந்த அளவுக்கு நான் பைத்தியம் ஆகிட்டேனா என் கண்ணை இன்னும் கொஞ்சம் கழுவிட்டு பார்த்தா உன்னோட உருவம் ஒளியின் ரூபமாக தெரியுமான்னு யோசிக்கிற அளவுக்கு பைத்தியம் ஆகிட்டேன்..” என்றாள்.

தனது கன்னத்தை வருடியவன் ‘இவ சொல்ற அளவுக்கா இருக்கோம்?’ என்று யோசித்தான்.

ஆனால் அவன் தன்னை உள்ளுக்குள் புகழ்ந்தான். அவளிடம் பாராட்டு வாங்கும் அளவுக்கு உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்காக தன் தினசரி வாழ்க்கை முறைக்கு நன்றி சொன்னான்.

அவர்களின் பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்தது ஒரு குடும்பம்.

அந்த குடும்பத்தில் சிறுவன் ஒருவனும் இருந்தான். சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் தன் தந்தையிடம் “அப்பா இன்னைக்கு எங்க டீச்சர் ஒரு கதை சொன்னாங்க. அந்த காலத்துல வாழ்ந்த ஒரு மன்னன் தன்னோட மகன் தப்பு பண்ணிட்டான்னு அந்த மகன் மேலயே தேர் சக்கரத்தை ஏத்தி கொன்னுட்டாராம்..” என்றான்.

“ஆமா கண்ணா. அது நாங்களும் கேட்டு வளர்ந்த கதைதான். நீதியும் நியாயமும் தாய் புள்ளைன்னு பார்க்காது. யார் மேல தப்பு இருக்குன்னு மட்டும்தான் பார்க்கும்..” என்றார் அந்த அப்பா.

அதை காதில் கேட்ட விக்னேஷுக்கு அவர்கள் தனக்காகவே உரையாடியது போல் இருந்தது.

அவர்கள் சொல்வதும் சரிதானே! தவறு என்றால் எல்லோருக்கும் ஒரே நியாயம்தானே! தாய் என்ன பிள்ளை என்ன?

உணவு வந்த பிறகும் மாயா இவனைதான் பார்வையால் உண்டாள்.

இவனுக்கு வெட்கமாகவே இருந்தது. அவள் மனதுக்குள் நம்மை துகிலுரித்துக் கொண்டிருக்கிறாள், கற்பனையில் களவாடிக் கொண்டிருக்கிறாள் என்பதை இவனால் யூகிக்க முடிந்தது.

அவர்கள் இருவரும் சாப்பிட்டுவிட்டு எழுந்த போது மாயாவின் செல்போன் ஒலித்தது.

போனை எடுத்து காதில் வைத்தாள். “நான் கைலாஷ் பேசுறேன்..” என்று அந்த பக்கம் குரலை கேட்டதும் இவளுக்கு தானாக கடுப்பேறி விட்டது.

“உன்கிட்ட தனியா பேசணும். அதுவும் ரொம்ப முக்கியமா விசயம். நான் சொல்ற இடத்துக்கு வரியா?” என்று கேட்டார் அவர்.

‘என்கிட்ட என்னடா பேச போகிறாய் ஹேராண்டி.?’ என்று கேட்க விரும்பினாள்.

‘ஆனால் என்னதான் பேசுவான்? அதையும் பார்த்துவிடலாமே!’ என்று நினைத்து “சரி..” என்றாள்.

“நாளைக்கு ஈவினிங் அஞ்சு மணிக்கு மலபார் ரெஸ்டாரண்டுக்கு வந்துடு..” என்றார் கைலாஷ்.

“ஓகே..” என்று சொல்லி ஃபோனை வைத்தாள்

அருகில் இருந்த விக்னேஷ் “யாரு?” என்று கேட்டான்.

அவனிடம் உண்மையை சொல்ல விரும்பாமல் “ஒரு பழைய ஃப்ரெண்ட். அவளோட புத்தகம் ஒன்னு எங்கிட்ட இருந்தது‌‌. அதைக் கேட்டா..” என்று பொய் சொல்லி மழுப்பினாள்‌.

இவன் அவளின் முகத்தை குறுகுறுவென்று பார்த்தான்.

“ஏன் இப்படி பாக்குற?” மாயா தன் முகத்தை தேய்த்தாள். ‘பொய் சொல்கிறோம் என்பதை கண்டுபிடித்து விட்டானோ?’ என்று அவளுக்கு சிறு கவலையாக இருந்தது

“இன்னைக்கு ஏதாவது நடந்ததா?” என்று கேட்டான்‌

“இல்லையே! ஏன்?”

“அன்னைக்கு உன்னை ஒருத்தன் கொலை பண்ண வந்தபோது நீ அதை முன்னாடியே கண்டுபிடிச்சி சொன்ன இல்லையா? அப்ப உன்னோட காதுகள் ரெண்டும் சிவந்து போய் இருந்தது. ரொம்ப ரொம்ப சிவந்து ரத்த கலர்ல இருந்தது. இன்னைக்கும் உன்னோட காதுகள் அப்படித்தான் இருக்கு. அன்னைக்கு நடந்த மாதிரி இன்னைக்கும் ஏதாவது நடந்ததா? நீ எதையாவது பார்த்தியா?” என்று கேட்டான்.

இதையெல்லாம் கவனித்திருக்கிறானா என்ற ஆச்சரியப்பட்டவள் “நடந்தது. ஆனா அதை சொல்ல எனக்கு கொஞ்சம் தயக்கமா இருக்கு. நான் இன்னொரு முறை சொல்றேன்..” என்றாள்.

இவன் முகம் மாறியது “என் அம்மாவா? மறுபடியும் உன்னை கொலை பண்ண பார்த்துட்டாங்களா? எப்படி கொல்ல பார்த்தாங்க? நீ எப்படி தப்பிச்ச?” பதட்டமாக கேட்டான்.

“நான் அப்புறமா சொல்லுறேன் விக்கி. அதுதான் தப்பிச்சிட்டேனே..” என்றாள் சிறு தயக்கத்தோடு

இவன் அதற்கு மேல் அவளை சீண்டவில்லை. ஆனால் “உன் உயிர் விசயத்துல நான் சாதாரணமா இருக்க மாட்டேன். புரிஞ்சிக்க..” என்றான்.

காதோரம் கொஞ்சிக் கொண்டிருந்த அவளின் கேசத்தை ஒதுக்கி விட்டவன் “நீ என்னை நம்பி என் கையை பிடிச்சிருக்க. அதை நான் எப்பவும் மறக்க மாட்டேன். நான் உன்னை முழு மனசா லவ் பண்றேன். உனக்காக இந்த உலகத்தையே எதிர்க்க தயாரா இருக்கேன். அதை நீயும் ஞாபகத்துல வச்சிக்க..” என்று சொன்னான்.

அவனின் விழிகளில் இருந்த உண்மைக்கு இவள் உயிரையும் பரிசாக கொடுப்பாள்.

“போகலாம்..” என்று காரில் ஏறினான்.

காரில் ஏறியவள் சாலையில் எதிரே நடந்து வந்த பணிப்பெண் ரேவதியை பார்த்தாள்.

ஜிகினாக்கள் மின்னும் சுடிதாரும், கருப்பு நிற ஹேண்ட் பேக்குமாக இருந்தாள். சாலையோரம் இருந்த ஒரு நகைக்கடைக்குள் நுழைந்தாள்.

ஒருவேளை இன்று இவள் அந்த காபியை தட்டி விட்டு இருக்காவிட்டால் விக்னேஷ் இறந்திருப்பான். அந்த காபியை தயாரித்தது இந்த ரேவதிதான். பச்சை நிற ஒளியில் அத்தனையையும் பார்த்திருந்தாள். இந்த ரேவதி நீலி கண்ணீர் வடித்தபடி போலீசில் சரணடைந்தது கூட அந்த பச்சை நிற வெளிச்சத்தில் தெரிந்திருந்தது.

பணம் கொடுத்தால் என்ன வேணாலும் செய்வாளா?

நான் சென்று பேசிய போது முகத்தை திருப்பி கொண்டாள். இன்று பணம் கிடைக்கவும் காபியில் விஷம் கலக்குகிறாள்.

விக்னேஷ் காரை ஸ்டார்ட் செய்தான்.

“எனக்கு ஒரு மோதிரம் வாங்கி தருவியா?” என்று அவனிடம் கேட்டாள் மாயா.

திரும்பிப் பார்த்தான். அவளின் பார்வை இவனை கொத்தியது.

“கண்டிப்பா வாங்கி தருவேன்..” என்றான். உயிரையே கொடுப்பான். மோதிரம் வாங்கி தர மாட்டானா?

“அப்படின்னா எனக்கு அந்த நகை கடையில ஒரு மோதிரம் வாங்கி கொடு..” என்று சாலையின் அந்தப் புறம் இருந்த கடையை கைகாட்டினாள்.

திரும்பிப் பார்த்தவன் உடனே காரை அந்த கடையை நோக்கி செலுத்தினான்.

நம்மிடமும் ஒன்று கேட்டு விட்டாளே என்று அவனுக்கு ஒரே பரபரப்பு.

என்ன செய்யலாம்? ஒரு மோதிரம் கூடாது. ஒரு டஜன் மோதிரத்தை வாங்கி கிப்ட் செய்யலாமா? இல்லையென்றால் இருப்பதிலேயே விலை உயர்ந்த மோதிரத்தை வாங்கி கொடுக்கலாமா? அப்படியும் இல்லாவிட்டால் அவள் தினம் ஒரு மோதிரமாக போட்டுக்கொள்ள அளவில்லாத மோதிரங்களை வாங்கி தரலாமா என்று யோசித்தான்.

மாயாவின் யோசனை கடையிலிருந்த பணிப் பெண்ணின் மீது இருந்தது. ஆனால் எதேச்சையாக கணவனை பார்த்தவள் இவனின் யோசனையை ஓரளவு கணித்து விட்டாள்.

“வெறுங்கையா இருக்கேன்னு ஒரு மோதிரம் கேட்டேன். நீ வேற எதையும் பிளான் பண்ணிடாத! நாமளே உங்க அப்பா அம்மாவோட பிச்சையில வாழ்ந்துட்டு இருக்கோம். அவங்க உன் பங்கு சொத்தை பிரிச்சி தரும் வரையிலாவது நீ பெரிய பெரிய கனவு கோட்டைகளை கட்டாம இரு..” என்றாள்.

அவள் சொன்னதில் இவனுக்கு சிறு வருத்தமாகிவிட்டது. அவள் சொல்வதும் நியாயம்தான்.

இவ்வளவு ஆண்டுகள் தந்தைக்கு துணையாக வேலை செய்திருக்கிறோம். ஆனால் தந்தை நமக்கு என்ன வேண்டும் என்று ஒரு முறையாவது கேட்டாரா? சீக்கிரமே இந்த விஷயத்திற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று முடிவெடுத்தான்.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!