Skip to content
Post Views: 382
மாயாவும் விக்னேஷும் நகைக்கடைக்குள் நுழைந்தார்கள்.
கோத்திருந்த கரங்கள் விடுபடவில்லை. தோள்கள் இரண்டும் அடிக்கடி உரசி கொண்டன. விக்னேஷுக்கு சொர்க்கத்தில் பறப்பது போல் இருந்தது. மாயாவுக்கும் சொர்க்கமே தன் காலடியில் இருப்பது போல் இருந்தது.
Advertisement
அவளுக்கு திமிர் அதிகம். தெனாவட்டு அதிகம். தன்னைத் தவிர தன் குடும்பத்தை தவிர எதையும் யோசித்தது கிடையாது. ஆனால் இவனை யோசிக்க ஆரம்பித்தால் தன்னையே மறந்து விடுகிறாள்.
ஜென்ம பந்தம் உணர்ந்தாள். அவனின் கண்ணில் தூசி பட்டால் தன் கண்ணில் வலி உணர்ந்தாள்.
Advertisement
Advertisement
காதலைக் கண்டால் காத தூரம் தள்ளி போய் நிற்பாள். ஆனால் இன்று காதல் அவளை கட்டி போடவில்லை. கட்டி அணைக்கவில்லை. தூரத்தில் நின்று மயிலிறகைக் கொண்டு வெறும் காற்றை வீசி சென்றது. அதற்கே அடிமையாகி விட்டாள். இவனுக்கு அடிபணிந்து விட்டாள்.
காதல் இதையும் தாண்டி வேறு ஏதாவது செய்தால் நம்மால் உயிர் பிழைக்க முடியுமா என்பது கூட அவளுக்கு சந்தேகமாகதான் இருந்தது. ஏனெனில் இந்த மெல்லிய காதலே அவளை அந்த அளவுக்கு ஆட்டிப்படைத்தது.
Advertisement
கடைக்குள் வந்த இருவரையும் கடைக்கார பணிப்பெண் ஒருவர் வணக்கம் வைத்து வரவேற்றார்.
“என்ன வேணும் சார்?” என்று கேட்டார்.
“ரிங் பார்க்கணும்..”
“அந்த பக்கம்.” என்று வழிகாட்டினார்.
இருவரும் மோதிரங்கள் இருந்த பகுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த ஒரு பணியாள் மோதிரங்களை எடுத்து முன்னால் வைத்தார். அந்த மோதிரங்களில் என்னென்ன சிறப்பு வேலைபாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன என்பது விவரித்தார்.
மாயா ஒரு அளவு மோதிரத்தை கண்டுபிடித்து கணவனின் கையில் கொடுத்தாள்.
“எனக்கு எது நல்லா இருக்கும்ன்னு நீயே சூஸ் பண்ணு. நான் அந்த பக்கம் நெக்லஸை சும்மா வேடிக்கை பார்த்துட்டு வரேன்..” என்று எழுந்து போனாள்.
விக்னேஷ் ஒவ்வொரு மோதிரத்தையும் எடுத்து பார்த்தான். எல்லாமே மாயாவுக்கு அழகாய் இருக்கும் என்று தோன்றியது. அங்கு இருப்பதிலேயே பெஸ்டான மோதிரத்தை அவன் சில நொடிகளில் கண்டுபிடித்து எடுத்து விட்டான்.
அதே வேளையில் மாயா நெக்லஸ் இருந்த பகுதிக்கு வந்தாள். அங்கே ஒரு நெக்லஸை எடுத்து தன் கழுத்தில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்த ரேவதியின் அருகில் சென்று நின்றாள்.
“என் மாமியார் ரொம்பவும் தாராள மனசு கொண்டவங்க போல. காபி கப்ல அரைபாட்டில் விஷத்தை கலந்ததுக்கு நாலு பவுன் நகை எடுக்கும் அளவுக்கான பணத்தை கொடுத்து இருக்காங்க..” என்று ஆச்சரியமாக கேட்டாள்.
ரேவதி அதிர்ச்சியோடு திரும்பி பார்த்தாள். கனவு காணுகிறோமா என்ற பயத்துடன் பார்த்தாள்.
“ரொம்ப பயப்படாத. நான் இதை போலீஸ்ல சொல்ல மாட்டேன்..” என்றவளிடம் “நான் எதுவும் பண்ணல. நீங்க என்ன சொல்றிங்கன்னு கூட எனக்கு தெரியாது..” என்றாள் ரேவதி.
மாயா ஜோக் கேட்டது போல் சிரித்தாள். “என்னம்மா குட்டி ரவுடி.. என்கிட்டயே பச்சையா பொய் சொல்ற. நீ பணத்துக்காக பஜாரியா மாற முடிவு எடுத்தவ. ஆனா நான் பிறந்ததில் இருந்தே பஜாரி..”
ரேவதிக்கு ஏசியிலும் வேர்க்க ஆரம்பித்தது. கழுத்தில் வைத்திருந்த நகையை மேஜையின் மீது வைத்து விட்டாள்.
“என் மாமியாருக்கு நீ அடிமையா இருப்பது மேட்டர் கிடையாது. ஆனா மறுபடியும் இதே தப்பை நீ செஞ்சா அப்புறம் என்னை கொலைக்காரியா பார்க்க வேண்டி வரும். அதனால இன்னொரு முறை என் மாமியார் ஏதாவது சொன்னா அதை முதல்ல என்கிட்ட வந்து சொல்ற, சரியா?” என்று கேட்டுவிட்டு அங்கிருந்து சென்றாள்.
‘இவளுக்கு எப்படி இத்தனையும் தெரியும்? ஒருவேளை அந்த பொன்னம்மா கிழவி நாம் செய்வதை பார்த்து விட்டாளோ? அவள்தான் அதை பற்றி இவளிடம் சொன்னாளோ?’ என்று யோசித்தாள்.
மாயா திரும்பி வந்தபோது சிகப்பு கல் பதித்த மோதிரம் ஒன்றை அவள் முன்னால் நீட்டினான் விக்னேஷ்.
பேரழகை விடவும் பேரழகு. தன் விரலில் போட்டு பார்த்தவள் “நீ எனக்கு எப்படி பொருத்தமோ அதே அளவுக்கு இந்த மோதிரமும் எனக்கு பொருத்தமா இருக்கு..” என்றாள்.
அவளின் பாராட்டில் சந்தோஷப்பட்டான். மோதிரத்திற்கான பணத்தை தந்து விட்டு இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.
அவர்கள் வீட்டிற்கு வந்த போது கனகவதியின் தோழிகள் நான்கு பேர் அங்கே இருந்தார்கள்.
விக்னேஷை கண்டதும் “வா விக்கி. இப்படி உட்காரு..” என்று அழைத்தார்கள்.
இவர்கள் ஏதோ சகடையை உருவாக்கத்தான் வந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு இவனும் பக்கத்தில் சென்று அமர்ந்தான்.
மாயா ரூமுக்கு கிளம்பி விட்டாள். அவளுக்கு யாரை பார்த்தும் கவலை இல்லை. கண்டதை நினைத்து குழம்பவும் விருப்பம் இல்லை.
அம்மா இடையில் அமர்ந்திருந்தாள். அம்மாவின் தோழிகள் நான்கு பேரும் கழுத்து உடையும் அளவுக்கு அளவில்லா நகைகளை அணிந்து இருந்தார்கள். அவர்களின் செல்வ செழிப்பு என்னவென்று அவர்களின் முகத்தைப் பார்த்து கண்டுபிடிக்க முடிந்தது
பொன்னம்மா விக்னேஷுக்கு காபி கொண்டு வந்தாள்.
“வேணாம் அக்கா. ஐஸ் வாட்டர் மட்டும் போதும்..” என்றான்.
அவள் கிச்சனுக்கு போய்விட்டாள்.
இங்கே அம்மாவின் தோழிகள் நான்கு பேரும் கால் மீது கால் போட்டபடி இவனை எடை போட்டார்கள்.
இவர்கள் எதற்காக இப்படி பார்க்கிறார்கள் என்று இவனுக்கு தெரியும். இனி அடுத்த அரை மணி நேரத்திற்கு அட்வைஸ் மழை பொழியும் என்பதையும் இவனால் யூகிக்க முடிந்தது.
“உங்க அம்மா உன்னை சிசேரியன் மூலம் பெத்து எடுத்தா. சிசேரியன் எவ்வளவு கஷ்டம் தெரியுமா?” என்று கேட்டாள் ஒருத்தி. சிரமப்பட்டும் வராத கண்ணீரை தன் புடவை முந்தானையால் துடைத்தாள்.
“நீ வயித்துல இருந்தபோது உங்க அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டா தெரியுமா?” என்று கேட்டாள் இன்னொருத்தி.
“உலகத்திலேயே அப்பா அம்மா மட்டும்தான் பிள்ளைங்களோட நல்லதை விரும்புவாங்க. பிள்ளைங்க நல்லா வாழணும்ன்னு அதுக்காக எவ்வளவு வேணா ரிஸ்க் எடுப்பாங்க..” என்றாள் மூன்றாவது ஒருத்தி.
நடுவில் இருந்த கனகவதியோ “இவன்கிட்ட ஏன் இதையெல்லாம் சொல்றிங்க? இவனுக்கு தாய் மனசு புரிய போகுதா? இல்ல என் கஷ்டம் தெரிய போகுதா? இன்னைக்கு ஒருத்தி வந்ததும் என்னை முழுசா மறந்துட்டான். பிள்ளைங்க மனம் என்னைக்கும் கல்லுதான்..” என்று மூக்கை உறிஞ்சினாள்.
பெர்பார்மன்ஸ் போதவில்லை, இன்னும் நன்றாக எதையாவது சொல்லுங்கள் என்பது போல் பார்த்தான் விக்னேஷ்.
“அந்த பொண்ணு வேண்டாம்ன்னு உன் அம்மா முடிவு எடுத்துட்டா. அதுக்கப்புறமும் அவளை நீ கல்யாணம் பண்ணி இருக்க. உன்னை மாதிரி ஒரு நன்றி கெட்ட பிள்ளை எங்கேயும் இருக்க மாட்டான்..” என்றாள் நான்காவதாக அமர்ந்திருந்தவள்.
பொன்னம்மா ஐஸ் வாட்டரை கொண்டு வந்து கொடுத்தாள். இவன் தண்ணீரை முழுமையாக பருகினான். இப்போதுதான் கொஞ்சம் தெம்பு கெடுத்தது போல் இருந்தது.
சூடாக இருந்த மூளை நார்மலுக்கு வந்ததும் அங்கிருந்த பெண்மணிகளை பார்த்தவன் “இவ்வளவு பேசுறிங்களே! நான் கேட்கிற கேள்விக்கு உங்களால பதில் சொல்ல முடியுமா?” என்று கேட்டான்.
“என்னடா கேக்க போற?” என்று சீறினாள் கனகவதி.
“நீங்க என்னை பெத்தது போலதானே மாயாவோட அம்மா அப்பாவும் அவளை கஷ்டப்பட்டு பெத்துருப்பாங்க? அவளோட நல்லதை மட்டும் எதிர்பார்த்தது அவளை வளர்த்திருப்பாங்க?” என்று கேட்டான்.
அம்மாவின் தோழிகள் நான்கு பேரும் அவனின் கேள்வியில் முகம் சுளித்தார்கள்.
“இந்த காலத்து பசங்க எப்பவும் ஏட்டிக்கு போட்டியா மட்டும்தான் பேசுவாங்க. அவங்களால எப்பவுமே நல்லதை கண்ணால பார்க்கவே முடியாது!” என்றாள் ஒருத்தி.
“நீங்க என்ன பேசினாலும் அது சரியான விஷயம். நான் என்ன பேசினாலும் அது திமிரான விஷயமா?” என்று கேட்டான் இவன்.
“இப்ப என்னடா சொல்ல வர?” என்று வயதில் மூத்தவள் ஒருத்தி கேட்டாள்.
“நீங்க கஷ்டப்பட்டுதான் பெத்திங்க. அதுக்காக என்னை முழுசா சொந்தம் கொண்டாட நினைப்பது எப்படி சரியாகும்? எனக்கும் சொந்தமா மூளை இருக்கு. என் மூளை சொல்வதை கேட்டுதானே நானும் நடக்க முடியும்? நான் சொல்வதைக் கேட்டு உங்களால் நடக்க முடியுமா? முடியாதுதானே? அப்புறம் ஏன் நான் மட்டும் உங்களோட பேச்சை கேக்கணும்? நான் ஒன்னும் விவரம் தெரியாத குழந்தை கிடையாது. என்னால சுயமா சிந்திக்க முடியும்ன்னா ஏன் காதல் வாழ்க்கையில மட்டும் நான் சரியான முடிவை எடுக்க கூடாது?” என்று கேட்டான்.
கனகவதிக்கு கோபத்தால் முகம் சிவந்துவிட்டது. “அறிவு கெட்டவனே! நான் சொல்ல வருவது உனக்கு புரியலையா? அவ எப்பவுமே உனக்கு ஒரு நல்ல மனைவியா நடந்துக்க மாட்டா. அவளோட அப்பாவோட மரணத்துக்கு நான் காரணமாகி இருக்கேன்..” என்று சீறினாள்.
இவன் தனது இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான். எதிரில் இருந்தவர்களைப் போலவே இவனும் கால் மீது கால் போட்டு கொண்டான்.
“எங்களோட விஷயத்தை விடுங்க மம்மி. அண்ணி என்ன பாவம் பண்ணாங்க? அவங்க உங்களோட மருமகள்ன்னு தெரிஞ்சும்தானே அவங்க அப்பாவோட மரணத்துக்கு நீங்க காரணமானிங்க. எல்லாம் தெரிஞ்சே தப்பு பண்ணுவிங்க. நாங்க ஏதாவது கேட்டா வயசுல சின்னவங்க எல்லாரும் நாங்க சொல்வதைத்தான் கேட்கணும்ன்னு சொல்விங்க. உங்க வயித்துல பிறந்த ஒரே காரணத்துக்காக நீங்க என்ன சொன்னாலும் கேட்டுக்கணும்ன்னு அர்த்தமே இல்லாம சொல்லுவிங்க. ஆனா இது எப்படி நியாயம்? எந்த குருவியும் கிளியும் தன் பிள்ளைகள்கிட்ட நான் சொல்வதைதான் நீங்க செய்யணும்ன்னு சொல்வது கிடையாது. ஆனா மனுஷங்க மட்டும் ஏன் இப்படி இருக்கிங்க?” என்று கேட்டான்.
“மிருகங்களோடு என்னை ஒப்பிடுற! உன்னை பெத்ததே எங்க தப்புன்னு சொல்ல வரியா?” என்று கனகவதி கசப்பாக கேட்டாள்.
இவன் விடவில்லை. அம்மாவின் மனம் உடைகிறதா என்று பார்க்கவில்லை. அம்மாவுக்கு அவளின் தோழிகள் முன்னால் மானம் போகுமோ என்றும் யோசிக்கவில்லை.
“ஏன் பெத்துக்கிட்டிங்கன்னுதான் கேட்கிறேன்? நீங்க உங்களோட வாழ்க்கையில சந்தோஷம் கிடைக்கணும்ன்னு என்னை பெத்துக்கிட்டிங்க. உங்களோட சொத்துக்களை அனுபவிக்க ஒரு ஆள். உங்க பேச்சைக் கேட்டு நடக்க ஒரு அடிமை. உங்களை மலடு இல்லன்னு சொல்ல வைக்க ஒரு உயிர். நீங்க கொஞ்சிக்க சுயபுத்தி இல்லாத ஒரு குழந்தை. இதைதான் நீங்க ஆசைப்படுறிங்க. நாங்க வளர்ந்துட்டா அதை உங்களால ஜீரணிக்க முடியல. உடம்பால எவ்வளவு பெருசா வேணா வளரலாம். ஆனா சுய சிந்தனையில் வளர கூடாதுன்னு நினைக்கிறிங்க. எதுல சாதிச்சாலும் அதை ஏத்துக்கிற உங்களால காதலில் சாதிச்சா அது ஏத்துக்க மனசு வரமாட்டேங்குது. ஏன் இப்படி?” என்று கேட்டான்.
“இவனை மாதிரி ஒரு சுயநலக்காரனை நான் எங்கேயும் பார்த்தது கிடையாது..” என்றாள் அம்மாவின் தோழி ஒருத்தி.
“அதேதான் நானும் சொல்றேன். இவங்களை மாதிரி ஒரு சுயநலமான அம்மாவை நானும் என் வாழ்நாள்ல வேற எங்கேயும் பார்த்தது கிடையாது. இவங்க தன்னை நம்பி வந்த மருமகளுக்கு துரோகம் பண்ணுவாங்களாம். ஆனா நான் எனக்கு பிடிச்ச பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டா தப்பாம். இப்ப கூட செஞ்ச தப்பை உணரல. என் மாமியார்கிட்ட ஒரு மன்னிப்பு கேட்கல. ஆனா நான் இவங்க சொல்வதையெல்லாம் கேட்டு பொம்மை போல நடக்கணும்ன்னு ஆசைப்படுறாங்க..” என்றான்.
அந்தப் பெண்மணிகள் நான்கு பேராலும் இவன் சொல்வதை கொஞ்சம் கூட ஏற்க முடியவில்லை.
அவர்கள் நிஜமாலுமே தாங்கள் சொல்வதை எல்லாம் கேட்டு நடக்கும் ஒரு ரோபோட்டைதான் எதிர்பார்த்தார்கள். அந்த ரோபோட் கூட சுயமாய் சிந்திக்க கூடாது என்று எதிர்பார்த்தார்கள்.
“உங்களுக்கு பெருமையை சேர்க்கும் ஒரு செயலை நான் செஞ்சா அப்ப என் மேல பாசத்தை கொட்டுவிங்க. அதுவே உங்களோட அனுமதி இல்லாம எனக்கு தேவையான ஒரு விஷயத்தை செஞ்சிக்கிட்டா என்னை சுயநலவாதின்னு சொல்விங்க..” என்றவனுக்கு அம்மாவின் மீதிருந்த கொஞ்ச நஞ்ச பாசமும் காணாமல் போய் கொண்டிருந்தது.
தொடரும்
error: Content is protected !!