33.2 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:2,483
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் அத்தியாயம் 33.2
.
நேரம் கரைந்தது. ஆனால் நடுக்கம் மட்டும் குறைவேனா என உடலோடு உள்ளத்தையும் ஆட்டிப் படைத்தது. தனியே இருந்தவளின் மனம் ஒரு நிலையில் இல்லை. ரகு மீது குற்றம் இருந்தாலும், தான் விரும்பி இசைந்து கொடுக்காது போயிருந்தால்… அவ்வளவு தூரம் சென்றிருக்காதே. அது எப்படி ஆண்மகன் தொட்டதும் கரைந்து போனாள்? நினைக்க நினைக்க அவமானமாக இருந்தது. எவ்வளவு நேரம் தான் தன்னையே நொந்துக் கொள்வது? காதலித்தால் தானே இந்தப் பிரச்சினைகள்? காதலும் வேண்டாம் ரகுவும் வேண்டாம் என முடிவெடுத்தாள். படுக்க முயன்று தோற்றவள், மனதைப் படிப்பின் பக்கம் திசை திருப்ப முயன்றாள்.
நடுக்கூடத்தின் ஓரத்தில் இருந்த மேசையில் புத்தகங்கள் கடை பரப்பி இருக்க, நானும் படிக்கிறேன் என எதையோ உருட்டிக்கொண்டிருந்தாள். இவன் திறந்திருந்த வீட்டிற்குள் நுழையவும் பார்வை உயர்த்தி அவனைப் பார்த்தாள்.
Advertisement
“தனியா இருக்கும் போது கிரில் கதவையாது பூட்டிட்டு உக்காரணும்.” என்றான் ரகு.
“ம்ம்ம்” என்றாள் எந்த உணர்வும் இல்லாது.
“இன்னும் கோபமா பேபி?”
Advertisement
“இஇல்ல” என்றாள் அவன் முகம் பாராது.
Advertisement
அவளைப் பார்த்துக்கொண்டே அவள் படித்துக்கொண்டிருந்த புத்தம் ஒன்றை கையில் எடுத்து மேசையில் சாய்ந்து நின்று கொண்டான்.
“கேல்குலஸ் படிக்கிறியா?”
“ம்ம்”
Advertisement
“உனக்கும் கணக்குக்கும் ஏழாம் பொருத்தம். எப்படி மேனேஜ் பண்ற?”
“ட்ட்டியூஷன் போறேன்”
“ம்ம்ம்” என்றவன் அமைதியா நின்று கொண்டான். சில மணி நேரம் முன்பு நடந்ததை யோசித்து அவன் அமைதியாகிவிட அவளும் அதையே செய்து கொண்டிருந்தாள். சிந்தனையிலிருந்து விடுபட்ட பின்னும் அமைதி தொடர்ந்தது. அந்த அமைதி இருவருக்குமே சகிக்கவில்லை. இருவருக்கும் தொண்டைக் குழியில் ஏதோ மாட்டிக்கொண்ட அவஸ்தை. காதல் உரைத்து இரு தினங்கள் இருக்குமா? அதற்குள்ளாகச் சண்டை! ப்ச்! எப்படிச் சரி செய்வது? அவனே சமாதான கொடியை ஆட்ட ஆரம்பித்தான்.
“உனக்கு என் மேல இன்னும் கோபம் போகல. சாரி பேபி. நீ சொன்னது உண்மை தான். உண்மை சுடவே தான் ரொம்ப பேசிட்டேன். அன்னைக்கு உன்ன அப்படி பார்த்த பிறகு எனக்குள்ள என்னென்னவோ ஆகி போச்சு. அப்போ, யார அப்படி பார்த்தாலும் இப்பிடி தான் செய்வியான்னு கேக்காத. இல்லவே இல்ல. இது… இது நான் உன் மேல வச்ச நேசத்தால எனக்குள்ள எழுந்த உணர்வு. நீ எனக்கு தானேன்னு என்னை அறியாம நானே எடுத்துகிட்ட உரிமை.
இந்த வயசில… இந்த நிலையில நிஜமாவே இது தப்பு தான். என்னை நம்பி இங்க விட்ட ஐயாக்கும் அம்மாக்கும் நான் செய்த நம்பிக்கை துரோகம் தான். அவங்க பார்த்திருந்தா… அந்த அவமானத்தை… ச்ச… நானே நமக்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்திருப்பேன்! அந்த மாதிரி ஒண்ணும் ஆகலங்கிறதுக்காக தப்பு… சரி ஆகாதுன்னு புரியுது பேபி.
தப்பு செய்துட்டேன் பேபி. ஆனா வேணும்ன்னு செய்யல பேபி. ப்ச்… சாரி… ரொம்ப சாரி பேபி…இனி அப்படி எல்லாம் நடக்கவே நடக்காது பேபி. நான் உன்னோட அதே ரகு தான். உன்ன காயப்படுத்திற எதையும் நான் நினைக்கவும் மாட்டேன்… சொல்லவும் மாட்டேன்… செய்யவும் மாட்டேன். சாரி பேபி.”
அவன் தவிப்பான வார்த்தைகள் அவளுக்குள் அழுத்தமாக இறங்கிக் கொண்டிருந்தது. அவன் தவிப்பை… உடல் நடுக்கத்தை அவளால் முற்றிலுமாக உணர முடிந்தது. கை விரல்கள் பிடித்திருந்த பேனாவை நெறித்துக் கொண்டிருந்தன.
“பேச மாட்டியா டி?”
“ப்ப்பேச ஒண்ணும் இல்ல ரகு” என்றவள் கணக்கு போடுவதாகக் காட்டிக் கொண்டிருந்தாள்.
உடைந்தே போனான் ரகு. தாளவே முடியவில்லை அவனால். “நாளைக்கு காலையிலேயே கிளம்பறேன் பேபி. இப்படி ஒரு மன நிலயோட போனா… என்னால அடுத்த ஒரு வருஷம்…ப்ச்…. என்னால முடியாது பேபி.” என்றான் தவிப்பாய்.
நோட்டு புத்தகத்தை அவள் கண்கள் வெறிக்க, கை விரல்கள் தளர்ந்து, பிடித்திருந்த பேனா புத்தகத்தின் மேல் விழுந்தது. செல்கிறானோ? ஒரு வருடம் பார்க்க முடியாதோ? போகட்டும்… அவன் எனக்கு யார் என எனக்குத் தெரிய வேண்டாமா? போகட்டும் அவன். நினைத்தவள் மீண்டும் எழுத ஆரம்பித்தாள்.
“பேபி?”
“ப்ப..பத்திரமா போயிட்டு வா ரகு” என்றவளுக்குத் தொண்டை கரகரக்கத்தான் செய்தது.
“மன்னிக்கவே மாட்டியா டி?”
“வ்வ்விடு ரகு அத”
ஓய்ந்து போனான் ரகு. இன்னும் என்ன சொல்லி தன்னை அவளிடம் உணர்த்த எனத் தெரியவில்லை. அருகில் இருந்தால் தினம் தினம் காலில் விழுந்து மன்னிப்பை யாசிக்கலாம். ஆனால் ஒரு வருடப் பிரிவு நிரந்தரம் ஆகிவிட்டால்? நினைக்கையில் உயிர்வரை வலித்தது. இல்லை… தன்னவள் தன்னை விடமாட்டாள் என்று ஆறுதல் படுத்திக்கொண்டான்.
“அப்போ வா… மலைக்கோட்டை போகலாம். உச்சி பிள்ளையார பார்க்கலாம். சன் செட்ட பாக்கலாம். உனக்கு பிடிச்ச முழு நிலா வரும். அதையும்… வெளிச்சதுல திருச்சியையும் பாக்கலாம். வா” என்றான்.
“ர்ர்ர்ரகு” திணறலாய் பெண் வாய் திறந்தாள்.
“சொல்லு பேபி…” என்றான் தவிப்பாய்.
“க்க்கிளம்பு ரகு” என்றாள், அதே தவிப்போடு.
கவிழ்ந்திருந்த குடை இமையைப் பார்த்தான். அவ்வளவு தானா என எண்ணவும் உள்ளுக்குள் துடித்தது. “எங்க இருந்துன்னு சரியா சொல்லு பேபி? வீட்டுல இருந்தா… இல்ல உன் வாழ்க்கையில இருந்தா பேபி?” கேட்டவன் தொண்டை அடைத்து வலித்தது.
“தப்பு தான். பெரிய தப்பு தான். என் பேச்சு… செயல் எல்லாமே தப்பு தான்… மன்னிக்க மாட்டியா? உன் மேல நான் வச்சிருக்க அளவுகடந்த அன்பாலையும் உரிமையாலையும் உன்ன நெருங்கிட்டேன் பேபி. நடந்ததை மாத்த முடியாது. ஆனா… இனிமேல் உன் விருப்பம் இல்லாம உன்ன தொடல பேபி… என்னைத் தள்ளி நிறுத்தாத பேபி. உன்ன ரொம்ப விரும்பறேன் டி…” என்றவன் கண்கள் கலங்க… மனம் துடிக்க… நடுங்கும் கைகளை மேசையில் ஊன்றி சாய்ந்து நின்று கொண்டிருந்தவன் கண்கள் மூடிக்கொண்டன.
அவன் துடிப்பு… அவனின் வலி நிறைந்த வார்த்தைகள் அவளுக்குள் மிக ஆழமாக ஊடுருவியது. ‘உன் விருப்பம் இல்லாம உன்ன தொடல பேபி’ என்பவனிடம் எப்படிக் கூறுவாள்… ‘நீ தொட்டால் நான் உருகிவிடும் மெழுகு பாவை’ என. நிமிடங்கள் கரைந்த பின்னும் இருவரிடமும் எந்த அசைவும் இல்லை. அவன் தான் மௌனம் களைந்தான்.
“சன் செட்ட ஒண்ணா பாக்க… உனக்காக மலை மேல இன்னைக்கு காத்திருப்பேன் பேபி. நீ வந்தா காலம் பூரா என்னோட நீ இருக்க விரும்பறதா எடுத்துப்பேன். நீ வராம போனா…” வராது போனால்… ஐயோ… யோசிக்கவே முடியவில்லை ரகுவால்.
“அவ்வளவு பெரிய தண்டனை எனக்குத் தந்திடாத… வந்திடு பேபி. பௌர்ணமி நிலா நமக்காக காத்திட்டு இருக்கும்.” என்றான் குரல் தழுதழுக்க.
அன்று மாலை, மலை உச்சியில் நின்று தன்னை பூமிக்குள் புதைத்துக் கொண்டிருந்த சூரியனோடு ரகுவும் புதைந்து போனான். சூரியன் சென்றது… நிலா வந்தது… இருளுக்குள் மூழ்கும் முன் திருச்சி செயற்கை ஒளியால் மிளிர்ந்தது. ஆனால் ரகுவிற்கு மட்டும் எந்தத் திசையிலும் வெளிச்சம் தெரியவே இல்லை.
அன்று இரவு ஒன்பது மணியளவில் தளர்ந்த நடையோடு ரகு வீட்டுக்குள் செல்வதைத் தன் வீட்டு மாடியிலிருந்து பார்த்து நின்றாள் நங்கை. அவன் ஓய்ந்த நடையும்… தளர்ந்த தோற்றமும் பெண்ணை உருகச் செய்தது. உள்ளுக்குள் உருகுவதைத் தவிர வேறு என்ன செய்திட முடியும் அவளால்?
இரவு தூக்கம் இருவர் விழிகளையும் தழுவ மறுத்தது. தூங்காத விழிகள் மூடுவதற்காகச் சூரியன் காத்திருக்காது பிரகாசமாக வானில் எழுந்து அமர்ந்தது.
சோஃபாவில் நன்கு சாய்ந்து அமர்ந்து, கால்களை நீட்டி… தலைக்கு கைகொடுத்து அனைவரையும் பார்த்து அமர்ந்திருந்தான் ரகு. பாட்டி பட்சணங்களைத் தாத்தாவிடம் கொடுக்க, தாத்தா அதை ரகுவின் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தார். ஐயாவும் அம்மாவும் வீட்டினுள் நுழைந்ததும் தாத்தா பாட்டியின் வேலையைத் தங்கள் கரங்களுக்கு மாற்றிக் கொண்டனர். பார்வை இங்கிருந்தாலும் யோசனை இங்கில்லை. அனைவரும் இங்கிருக்க, அவள் மட்டும் வரவில்லை. நேற்றே மனம் உடைந்து போயிருந்தாலும்… இன்றும்… இன்னும் இன்னும் வலித்தது.
ஒரு கட்டதிற்கு மேல் அவனால் அமர முடியாது போகவும், “நான் பேபிட்ட சொல்லிட்டு வரேன்” எனக் கிளம்பினான் ரகு.
கதவு திறந்திருந்தது. இன்றும் அதே மேசையில் புத்தங்களை விரித்துப் போட்டு அமர்ந்திருந்தாள் பெண். சிறு கிளிப்பில் அடங்கி இருந்த தலை முடி பாதி ஈரமாகவும் பாதி காய்ந்தும் இருந்தது.
அவள் பார்வை புத்தகத்தில் இருந்தாலும்… கவனம் கண்டிப்பாக அதில் இல்லை. என்ன நினைக்கிறாள் என அவளுக்கேனும் தெரிகிறதா எனத் தெரியா நிலை.
நாற்காலியின் முன்னிருந்த மேசையில் முன்தினம் போலவே சாய்ந்து நின்றுகொண்டான். அவளின் பார்வை மாறவும் இல்லை அவனைப் பார்க்கவும் இல்லை. நெஞ்சடைக்க அமர்ந்திருந்தாள் பெண்.
காற்றில் பறந்து முகத்தை வருடிக்கொண்டிருந்த முடியை மெல்லக் காதுக்குப் பின் நகர்த்தி விட்டான். பெண் விழியை உயர்த்தவில்லை.
“பேபி” என்றான்… அதில் அத்தனை மென்மை. அந்தக் குரல்… அதிலிருந்த அந்த மென்மை, பெண்ணை தடுமாறச் செய்தது. தன் கண்களை இறுக்கிக் கொண்டாள். உள்ளுக்குள் சில்லு சில்லாய் ஏதோ நொறுங்கியது. செல்கிறான். இனி எப்போது பார்ப்பது? தெரியாது. என்ன பேச? தெரியவில்லை. அவன் பிரிவு ஏன் வலிக்கிறது? பழைய பாசத்தாலா இல்லை புதிதாக முளைத்த நேசத்தாலா?
“என்னை உனக்கு புரியுது தான பேபி?” தவிப்பாய் அவன் வினவ, உள்ளுக்குள் அவளுக்குத் தடதடத்தது. ஆம் என்பதாய் தலையசைத்தாள்.
தொண்டையைக் கனைத்தவன், “நல்லா படிக்கணும் என்ன?” என்றவன் முகம் பார்த்தே நிற்க, அவள் அசையவே இல்லை. இதயம் வேகமெடுத்தது.
“எஎஎனக்காகன்னு… இஇஇனிமேல் ந்ந்நீ வரவேண்டாம் ரரகு” என்றாள் குரல் கமற. கண்களை இன்னும் அதிகமாக இறுக்கிக் கொண்டு.
ரகுவின் மூச்சுக்குழாய் அடைத்து இதயம் வரை வலித்தது. அவன் பேபிக்கு அவனைத் தள்ளி நிறுத்த முடியும் என்று அவனால் நினைக்கக்கூட முடியவில்லை.
“நீ கோபமா இருக்க பேபி” என்றவன் கரகரத்த தொண்டையைக் கனைத்து, “கோபம்னாலும், அப்படி எல்லாம் பேசாத… சரியா?” என்றான்.
“”
“கண்ண திற. என்னை பாரு பேபி. முதல்ல எழுந்திரி” எனக் கைப்பிடித்து எழுப்பினான். அவன் நின்ற இடத்திலேயே நின்றிருக்க, மூச்சுக் காற்று முகத்தில் மோதும் தூரத்திலிருந்தவன் அவளின் மூச்சை அடைத்தான்.
“நிஜமாவே நான் வேண்டாமா பேபி?” எனக் கேட்டவனுக்கு எவ்வளவு வலித்ததோ அதே அளவிற்குப் பதில் கூறாது நின்றிருந்தவளுக்கும் வலித்தது.
“பேபி” எனப் பெண்ணின் வலது கையை தன் இரு உள்ளங்கைக்குள்ளும் புதைத்துக் கொண்டான். ஏதேதோ பேசவேண்டும். ஆனால் பேச வேண்டிய அவசியம் இல்லை என்பது போல் தோன்றியது. இருவரும் அமைதி காத்தனர். நிமிடங்கள் நகர்ந்தன. அவனும் அவள் கரத்தை விடவில்லை. அவளும் இழுத்துக் கொள்ளவில்லை.
“இங்க நான் வந்த முதல் நாள் இன்னும் எனக்கு நினைவுல இருக்கு. என்னால ஆயிசுக்கும் மறக்க முடியாத நாள் அது. எனக்குள்ள ஒடுங்கி…அம்மா அப்பான்னு ஒரு பாதுகாப்பு இல்லாம… பாசம் இல்லாம… ஒரு பிடிப்பு இல்லாம… எனக்குன்னு யாருமே இல்லாத இருட்டுக்குள்ள தனியா மட்டி தவிச்சிட்டு இருந்த நாள். அந்த வயசுல அது எவ்வளவு கொடுமை தெரியுமா? அவ்வளவு பயந்தேன். தனியா நின்னுட்டு இருந்த அந்தச் சின்ன உருவத்த இப்போ நினைச்சா கூட பயம் வரும்.
அம்மா வேணும்ன்னு என் மனசு கதறின போதும் யார் முன்னாடியும் அழக் கூடாதுன்னு வைராக்கியமா இருந்த நாள் அது. அன்னைக்கு நைட்… உன் அழு குரல் எனக்கு கேட்டுது. உன்னால அழ முடிஞ்சுது, ஏன்னா உன் அழுகைய கேக்க ஆள் இருந்துது. நீ அழுகைய நிறுத்த… நீ தூங்க… அம்மா தாலாட்டு பாடினாங்க. அந்தக் குட்டி பாப்பாக்கு அம்மா இருக்கு… எனக்கும் அம்மா வேணும்ன்னு அடக்க முடியாம தலகாணிக்குள்ள முகம் புதைச்சு கண்ணீர் விட்டு அன்னைக்கு அவ்வளவு அழுதேன்.
அடுத்த நாள் அந்தப் பகல் பொழுதுல…. இருட்டுல இருந்த என்கிட்டத் தேவதையா தளிர் நடப் போட்டு அம்மா கைபிடிச்சுகிட்டு நீ வந்த. அப்போ நீ… ரெண்டு வயசு குட்டி பேபி. உன் பேபி பிளாங்கெட் இல்லாம நீ இருக்கவே மாட்டியாம். அந்தக் குட்டி பிளாங்கெட்ட எனக்கு கொடுத்த… உன் பிச்சு கையால என் கண்ணீர் துடைச்ச…நீ சாப்பிட்டு இருந்த பூரிய எனக்குச் சாப்பிடக் கொடுத்த.” கூறிக் கொண்டே பெண்ணவளின் உள்ளங்கையைத் தன் கன்னத்தோடு ஒற்றிக்கொண்டான்.
“இந்த கை தான் பேபி… இந்த கை… இது தான் என்னை, அந்த ஆழமான இருட்டுல இருந்து தூக்கி எடுத்துது. அன்னைக்கு இந்த கை என்னை பிடிக்காம போயிருந்தா இன்னைக்கு நான் இல்லவே இல்ல பேபி.” என்றான் குரல் கமற.
அவன் பேசிக்கொண்டே இருக்க, தொலைவில் “கண்ணு… நேரம் ஆச்சு வா” எனப் பாட்டியின் சத்தம் கேட்டது.
“இந்த கை… இந்த கை தான் பேபி என்னோட அம்மா! இத நீ எப்போ உருவிக்கிட்டாலும் நான் திரும்பவும் அனாதையாகிடுவேன் பேபி.” என்றவன், உள்ளங்கையை அப்படியே உதட்டுக்கு மாற்றினான்.
ஆழமாக மூச்சை உள்ளிழுத்தவன், உள்ளங்கையில் ஆழமாகவும் அழுத்தமாகவும் முத்தம் ஒன்றைப் பதித்தான். முத்தம் பதித்த வேகத்தில் சட்டென அவளை விட்டு, வெளியே சென்றும் விட்டான். நின்றிருந்தவள் அவன் விட்டுச் சென்ற அந்த ஈர உள்ளங்கையைக் கண்ணீர் மல்கப் பார்த்தே நின்றிருந்தாள்.
கன்னம் நனைய நின்றிருந்தவளின் இதழ்களைத் தவறி உடம்பில் இருந்த அனைத்து அணுக்களும் லகு எனக் கதறியது.