Skip to content
Post Views: 3,278
மார்கழி – 21
அன்று எழுந்ததிலிருந்து பரபரவென்று இருந்தான் அறிவழகன். இரவு வேலை நேரம் கடந்தும் வேலை இருந்ததால் உறங்கவே நடுஇரவாகி இருந்தது. இந்த வாரம் முழுதும் இப்படி சென்றதால் அசதியில் அடித்த அலாரத்தையும் பொருட்படுத்தாமல் உறங்கிவிட்டான். சுற்றத்தின் சத்தத்தில் எழுந்து பார்த்தால் நேரமாகி இருந்தது. உணவுக்காக இயல் வேறு காத்திருப்பாள் என்று பறக்காத குறையாக அவள் விடுதி முன் சென்று நிற்க அங்கில்லை அவள். நேரத்தை பார்த்தவன் பேருந்து நிறுத்தம் விரைய, அங்கு முறைப்புடன் நின்றுகொண்டிருந்தாள்.
“எவ்வளவு நேரம் வெய்ட் பண்றது? நாந்தான் பாத்துக்குறேனு சொல்றேன்ல கேக்காம இப்படி பிடிவாதமா கொண்டு வரேன்னுட்டு லேட் பண்ணா ஸ்கூல் போக வேண்டாமா நானு? நைட்டும் இப்படித்தான் ஆச்சு. அவ்ளோ பசிக்குது நிதானமா வர்றீங்க நீங்க.” எடுத்ததும் பாய்ந்துவிட்டாள் இயலணி.
“சாரி சாரி… கோச்சிக்காத இயல்.” என்று உணவுப் பையை நீட்ட, வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டாள்.
Advertisement
“ம்ச்… பஸ் இன்னும் வரலைல ஏன் இவ்ளோ கோவமாம்.”
“இதோ வந்துடுச்சு.” என்று கூட்டமாக வந்து நின்ற பேருந்தை காட்டியவள், “உங்களாலதான் எப்போவும் போற பஸ் மிஸ் பண்ணிட்டேன். இதுலதான் போகணும் இப்போ.” எரிச்சலுடன் மொழிந்தவள் அவனிடம் சொல்லிக்கொள்ளாது பேருந்தில் ஏறிவிட, அவளையே பார்த்து நின்றவனுள் சலிப்பு.
எப்போதுதான் எல்லாம் மாறி வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பும் என்றிருந்தது. ஓடி ஓடி கலைத்துப்போன உடல் போல் மனதளவிலும் சோர்வு. அவன் உதவிகளை ஏற்கிறாள், குறுஞ்செய்திகளை படிக்கிறாள் என்பதை தாண்டி எந்த முன்னேற்றமும் இல்லை அவர்களுக்குள். எவ்வளவு நேரம் வேண்டுமோ எடுத்துக்கொள் என்று பெருந்தன்மையாக கூறியவனால் பத்து நாள் கூட பொறுக்க முடியவில்லை. பேருந்து நகரும் வரை நின்று பார்த்தவன் சலிப்புடன் வண்டியைக் கிளப்பிக்கொண்டு சென்றான். இன்னும் காலை உணவு உண்ணவில்லை, தலைவலிப்பது போல் இருந்தது. நகரத்தின் நெரிசலில் அலுவலகம் சென்று சேர்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. அருகில் இருக்கும் கடையில் சிற்றுண்டி முடித்துவிட்டு வேலை ஆரம்பிக்கலாம் என்றால் அலுவல் மீட்டிங் ஒன்று அந்நேரத்தில் துவங்கி அவனை இழுத்துக்கொண்டது. ஒருவழியாக முற்பகலில் தான் மூச்சுவிட முடிந்தது. அவசரமாக ஒரு கப் காபியை எடுத்துக்கொண்டு அமர்ந்தவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. ஏதோவொரு கலக்கம், உறுத்தல், சோர்வு. அந்நாளை கடக்க உந்துதல் தேவைப்பட்டது. ஆனால் அந்த உந்துதலுக்கு எங்கே போக? இயலிடம் அதிகத்திற்கும் பேச முடியாது. வீட்டினரை கேட்கவே வேண்டாம். என்னடா இது என்று நினைக்கையில் மீண்டும் அலுவலக அழைப்பு. தள்ளிப்போட முடியாமல் எழுந்து சென்றவனை இழுத்துக்கொண்டது வேலை. அதை முடித்து நிமிர்ந்து பார்த்தால் மணி ஒன்பதை நெருங்கிக்கொண்டிருந்தது. ஐயோ என்றானது. ஏழரையிலிருந்து எட்டு மணிக்குள் இயலுக்கு உணவு வாங்கி கொடுத்துவிட்டு மீதி வேலையைத் தொடர்வான். இப்போது நேரம் கடந்துவிட,
Advertisement
‘காலையிலேயே எரிஞ்சி விழுந்தா. இப்போ உன் சகவாசமே வேணாணுன்னுருவா.’ என்று புலம்பிக்கொண்டே தான் கிளம்பினான்.
Advertisement
உணவு வாங்கிக்கொண்டு அவள் விடுதிக்கு செல்கையில் பத்தாகிவிட்டது. அவள் அலைபேசிக்கு அழைத்து கீழே நிற்பதாய் சொல்ல,
“உங்களை நம்பி இருந்தா கழுத்தறுத்துருவீங்கன்னு தெரிஞ்சும் உங்ககிட்ட தலையாட்டுனதுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். நீங்க சாவுகாசமா வாங்கிட்டு வருவீங்க நான் வாசலை பார்த்துட்டு காத்திருக்கணும்ல. முடியலைன்னா விட்டுட்டு போக வேண்டியதுதான. எதுக்கு வாக்கு கொடுக்கணும்.” இருந்த பசியில் பொரிந்துவிட்டாள் இயலணி.
எப்போதும் தழைந்து செல்பவனும் இன்று இருந்த அழுத்தத்தில் வெடித்துவிட்டான்.
Advertisement
“சும்மா விட்டுட்டு போ விட்டுட்டு போங்குற. உனக்கு வேணும்னா விட்டுட்டு ஒதுங்கிக்குறது ஈஸியா இருக்கலாம். என்னால முடியாது. இருக்குற வேலைக்கு நடுவுல ரெண்டு தடவை இங்கேயும் அங்கேயுமா அலைஞ்சிட்டு உனக்காக யோசிச்சி எல்லாம் பண்ணா ஈசியா போக சொல்ற. நான் அதுக்காக கல்யாணம் பண்ணல. மனுஷன் நாள் முழுக்க சோறில்லாம இருந்தாலும் நீ பசியில இருப்பியேனு ஓடி வந்தேன்ல எனக்கு இது தேவைதான். இங்க வெளில கேட் கிட்ட வச்சிட்டு போறேன். முடிஞ்சா சாப்பிடு இல்லை என்னமும் பண்ணு.” கோபத்தில் அழைப்பை துண்டித்தவன் உணவை கதவின் இடுக்கில் மாட்டிவிட, அவன் கோபத்தில் பேச்சற்று அதிர்ந்திருந்த இயலணி அழைப்பு துண்டிக்கப்பட்டதும் வாசலுக்கு ஓடி வந்தாள். அவள் வருவதற்குள் பைக்கை வேகமாக கிளப்பிக்கொண்டு சென்றிருந்தான் அறிவழகன்.
‘எதுக்காம் இப்போ கத்துறாங்க?’ சுணங்கியது அவள் மனம்.
யாருமற்ற சாலையை எட்டிப்பார்த்துவிட்டு விடுதியின் கதவை பார்க்க அதில் தொங்கிக்கொண்டிருந்தது உணவுப்பை.
‘பசி வந்துடுச்சு. லேட்டாகிடுச்சேன்னு கொஞ்சம் திட்டிட்டேன், அது பொறுக்காதாமாம். போனா போகட்டும்.’ என்று முறுக்கலுடன் பையை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.
‘இன்னைக்கு புல்லா மெசேஜும் பண்ணல. சாப்பாடு வாங்கிட்டு வந்ததும் லேட்டு, இதுல கத்த வேற செய்வாங்களாம்.’ பொறுமிக்கொண்டே உண்டவள் அவனின் கோபத்தை மட்டுமே பிடித்துக்கொண்டு நின்றாளே ஒழிய அதன் பின்னிருக்கும் அவன் வேலை பளுவை உணரவே இல்லை. அதை உணர்ந்தவனோ இன்னும் சலித்துக்கொண்டான்.
‘கோவமா பேசிட்டேன்தான். நானும் மனுஷன் தான. எனக்கும் கோபம், எரிச்சல் வரும்தான. தப்பு என் மேல அதனால காலம் முழுக்க அவகிட்ட தழைஞ்சி போக ரெடி. அதுக்காக என்னோட உணர்வுகளை வெளிப்படுத்தவே கூடாதா என்ன? அப்படி கோபத்தை காட்டுனா கண்டுக்க மாட்டாளாமாம்? என்னனு கூட கேக்க தோணலைல அவளுக்கு. போகட்டும். யாரும் என் மேல அக்கறை படவேண்டாம். இப்படியே தனியாவே இருந்துக்குறேன்.’ என்று முறுக்கிக்கொண்டான் அவனும்.
மறுநாளிலிருந்து குறுஞ்செய்தி முதற்கொண்டு உணவு வரை எதற்கும் முயலவில்லை அறிவழகன். பத்து நாள் மருந்து மாத்திரை முடியும் முன்னரே வயிறு உபாதை சரியாகிவிட்டது விடுதியிலேயே உண்டு கொள்கிறேன் என்றவளை இவன்தான் பேசி சரிகட்டி வைத்திருந்தான். இப்போது இடைபுகுந்த புகைச்சலில் அவள் உடல்நிலை பற்றிய கவலையும் இன்றி அவன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தான்.
ஒருநாள், இருநாள் என்று கோபத்தை பிடித்துக்கொண்டிருந்தவர்கள் மூன்றாம் நாளே துணையை தேட ஆரம்பித்துவிட்டார்கள்.
‘வேலைல ஆயிரம் டென்சன் இருக்கும். ஒர்க் பிரஷர் இருக்கும். அதையெல்லாம் மனசுல போட்டுக்கிட்டு அவகிட்ட கத்துவியா நீயி. தப்புடா அறிவு.’ என்று அவனும்
‘உடம்பு முடியலைங்கவும் அப்படி பாத்துக்கிட்டாங்க. ஒருநாள் ஏதோ லேட்டானா கத்துவியா நீயி. அவங்களுக்கு என்ன வேலையோ. தப்பு இயலு.’ என்று அவளும் தங்களின் செயல்களை புரட்டிப்பார்த்து தவறை ஒப்புக்கொண்டனர்.
ஆனால் தயக்கத்தை உடைத்து யார் முதலில் பேச என்று தேங்கி நின்றனர். மூன்று நாட்களாக பார்க்காமல் செய்திகள் பரிமாறிக்கொள்ளாமல் எதையோ இழந்தது போலிருந்தது.
‘உன் மேலதான் தப்புனு புரிஞ்சிடுச்சுல போய் பேசுனா என்ன குறைஞ்சிடப் போகுது? போயேன்.’ என்று நான்காம் நாள் அறிவழகன் மனம் உந்த, ‘இல்லை வேண்டாம். டைம் வேணும்னு கேட்டவளை அக்கறை காட்டுறேங்குற பேருல ரொம்பவே தொல்லை பண்ணி அதிகாரம் பண்றேன். அவ யோசிக்கட்டும்.’ என்று தடுத்தது அறிவு.
‘விட்டுட கல்யாணம் பண்ணலைன்னு வாய் கிழிய சொல்லிட்டு கோபம் வந்ததும் நாலு நாளா கண்டுக்காம விட்டாச்சு. எல்லாம் வேஷம்.’ அவளும் அதிருப்தியில் கண்டுகொள்ளாமல் நாட்களை கடத்தினாள்.
ஆனால் அவளையும் அறியாமல் விடுதியை கடக்கும் பைக் ஒவ்வொன்றையும் ஆராய்ச்சியாய் கவனித்து அவனைத் தேடியது இயலின் விழிகள். பேருந்தில் ஜன்னல் இருக்கையை அடித்துபிடித்து அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தாள் அவன் தென்பட்டுவிட மாட்டானா என்ற ஆவலில்.
கடந்து செல்லும் பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் அவள் அமர்ந்திருக்க மாட்டாளா? பார்க்கவாவது செய்துவிட மாட்டோமா என்று தவித்தது அவன் விழிகள். அவள் செல்லும் பேருந்தும் அதன் நேரமும் தெரிந்தாலும் ஏனோ அவளை பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை. ஒன்று வாகன நெரிசலில் சிக்கிக்கொள்வான் இல்லை அந்த பேருந்து கொஞ்சம் முன்னே பின்னே என்று நேரம் தவறி சென்றது. விதியின் சதியோ என்று நொந்துகொண்டே முழுதாக பதினைந்து நாட்களை ஓட்டிவிட்டார்கள்.
அன்று வார விடுமுறை. வேலை நாட்களில் வேலையில் மூழ்கி விடுவதனால் பெரிதாக அவளை தேடாத மனது விடுமுறை என்கவும் அவள் நினைவை விரட்ட தவித்தது. என்ன செஞ்சிட்டு இருப்பா? என் மேல கோவமா இருப்பாளா? டைம் வேணும்னு கேட்டாளே முடிவு எடுத்திருப்பாளா? உடம்பு சரியாகி இருக்குமா? ஒழுங்கா சாப்புடுறாளா? வீட்டின் கூடத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவன் நெற்றியை பிடித்துக்கொண்டான். ம்கூம் இது வேலைக்கு ஆகாது தலையை உலுக்கிக்கொண்டவன்,
‘போன் பண்ணி பேசிடுவோம். அவகிட்ட தயங்கி, ஒதுங்கி, வீம்பு பார்த்து என்ன ஆகப்போகுது?’ என்று முடிவெடுத்தவனாய் அலைபேசியை எடுத்து அவள் எண்ணை அழுத்தப்போக முன் உள்ளிருந்து ஒரு குரல், ‘பதினஞ்சி நாள் கழிச்சி போன்ல பேசுறதுக்கு நேர்லையே பாத்து பேசிடலாம். அவ்வளவு தூரமாவா இருக்கா. இங்க தான…” என்றிட, பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.
ஆர்வமாக விடுதியின் வாயிலில் நின்று அவளுக்கு அழைக்க, அழைப்பு சென்றதே ஒழிய எடுக்கப்படவில்லை.
‘இந்த சனிக்கிழமை ஸ்கூல் இருக்குமோ? அங்க போயிருப்பாளோ?’ யோசனையுடன் மீண்டும் அழைக்க இம்முறை எடுத்துவிட்டாள் இயலணி.
இவன் பேசும் முன் விடுதி கதவை திறந்துகொண்டு வந்த கண்காளிப்பாளர், “யார் நீங்க? அடிக்கடி இங்க வரீங்க. நிக்குறீங்க. இது லேடீஸ் ஹாஸ்டல்னு தெரியாதா? கிளம்புங்க இங்கிருந்து.” விசாரணைத் தொனியில் கேள்வி கேட்டு சந்தேகத்தில் விரட்டவும் அலைபேசி வழியே இதனை கேட்டிருந்தவள் பரபரப்புடன் வெளியே வந்தாள்.
“இதோ இவங்க என் வொய்ப். இவங்களை பாக்க வந்தேன்.” என்று இயலணி வரவும் அவளைக் காட்டி இலகுவாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான் அறிவழகன்.
கண்காளிப்பாளர் இயலணியை ஆராய்ச்சியாய் பார்க்க, “ஊர்லேந்து வந்திருக்காங்க மேம். இப்போ கிளம்பிடுவாங்க.” என்று அவரை சமாளித்து அறிவழகனிடம் திரும்பினாள்.
“பஸ் ஸ்டாப்ல வெய்ட் பண்ணுங்க. வந்துர்றேன்.” என்றதும் தலையசைப்புடன் அவன் நகர்ந்துவிட, சில நொடிகளில் உடை மாற்றி வந்தாள்.
வண்டியில் சாய்ந்து நின்றவன் அவள் வருவது தெரிந்ததும் நேராக நிமிர்ந்தான்,
“சாரி…”
“சாரி…”
இருவரும் ஒரே நேரத்தில் மற்றவர் முகம் பார்த்து கேட்டிருக்க, இன்பமாய் அதிர்ந்தவர்கள் புன்னகைத்து ஒருவரை ஒருவர் பார்த்து நின்றனர்.
“வெளில போய் பேசலாமா?” அறிவழகன் இருக்கும் இடம் உணர்ந்து கேட்க, உடனே சம்மதித்தாள் இயலணி.
“எங்க போலாம்?”
“இந்த வெயில்ல மால் இல்லைனா ஏதாவது கஃபே மாதிரி போகலாம். சாப்பிட்டியா நீ?” அவள் உணவு அருந்திவிட்டால் என்பதை கேட்டு தெரிந்துகொண்டு மால் செல்லலாம் என்று முடிவெடுத்து வண்டியை கிளப்பிய பின்தான் அந்த சந்தேகம் வந்தது.
“ஆட்டோல போலாமா?” தன்னுடன் வண்டியில் வர சங்கடப்படுவாள் என்று எண்ணிக்கொண்டு அவன் கேட்க, அவளோ யோசித்து தலையசைத்தாள்.
உடனே பதில் சொல்லாமல் சிறிது நேரம் அவள் எடுத்துக்கொண்டதையும் மெதுவாக அசைந்த அவள் தலையும் அவனுக்கு எதையோ உணர்த்தி தைரியம் கொடுக்க, “இல்லை வண்டில போலாம்.” என்றான் உடனே மாற்றி.
“உங்க விருப்பம்.” என்று இலகுவாக சொல்லி அவனை இன்பமாக அதிரவைத்தாள் இயலணி.
‘இன்னைக்கு ஏதோ நல்ல மூட்ல இருக்கா.’ என்று உல்லாசமாய் எண்ணிக்கொண்டே ஹெல்மெட் போட்டு அவன் பைக்கை ஸ்டார்ட் செய்ய, பின்னால் ஏறிக்கொண்டாள்.
பேச்சுக்கள் எதுவுமின்றி சில நிமிட பயணத்திற்கு பின் ஒரு மாலில் பைக்கை நிறுத்திவிட்டு இருவரும் உள்ளே நுழைந்தனர். மக்கள் கூட்டம் அதிகமிருந்தாலும் விசாலமான அந்த இடத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்தனர்.
“அன்னைக்கு அப்படி பேசி இருக்க கூடாது இயல். ஆபீஸ்ல நிறைய வேலை. மிட்நைட் வரைக்கும் பெண்ட் எடுக்குறாங்க. அன்னைக்கும் நிறைய வேலை, அதனால தான் லேட் ஆகிடுச்சு. மீட்டிங் பாதில விட்டுட்டு வர முடியல. காலேஜ்ல இவ்ளோ அன்டைம் வரைக்கும் எல்லாம் ஒர்க் பண்ணதே இல்லையா அதான் டையர்ட் ஆகிடுறேன். இன்னும் பழகணும் போல… ப்ச் என்ன இருந்தாலும் அப்படி கத்தி இருக்க கூடாது. சாரி.” அன்றைய தினத்தின் நிகழ்வுகளை மேலோட்டமாக சொல்லி அவன் மன்னிப்பு வேண்ட,
“நானும் பொறுமையா என்ன ஏதுன்னு கேட்டிருக்கணும். என் விருப்பத்துக்கு எல்லாம் செய்றீங்கங்குறத்துக்காக அலட்சியமா கத்தி இருக்க கூடாது. சாரி.” என்று அவளும் பதில் மன்னிப்பு வேண்டினாள்.
இதழ் மடித்து தலையசைத்தவன், “சாரி ட்ரீட் இன்னைக்கு. என்ன வேணும் உனக்கு?”
“சாரி ட்ரீட்டா?” யோசனையில் அவள் புருவம் சுருக்க,
“இதுவரைக்கும் அதிகமா ரெண்டு பேரும் சாரி தான் கேட்டிருக்கோம். இன்னைக்கு ஒரு ட்ரீட் வச்சி இதை இன்னையோட முடிச்சிடலாம்.” என்று அவன் காரணம் தயார் செய்து சொல்ல,
முன்விழுந்த முடியை காதின் பின் ஒதுக்கி லேசாக துளிர்த்த புன்னகையுடன், “என்னலாம் பேசுறீங்க நீங்க. வாய் தான்.” என்று முன்னே இருந்த கடைகளை பார்த்துக்கொண்டே நடந்தாள் இயலணி.
“வாய்ல தான் என் புழைப்பே ஓடுது.” என்றபடியே அவளுடன் சேர்ந்து நடந்தான் அறிவழகனும்.
“சும்மா சொல்லணுமேன்னு சொல்லக்கூடாது. பதினைஞ்சி நாள் என்கிட்ட பேசாம இருந்துச்சு தான அந்த வாய்?” லேசாக கோவம் மேலிட கேட்டவளின் முகமும் மாறிவிட,
“என்னோட வந்துறேன் இயல். உன்னோட நிறைய அழுதுட்டேன். இனி நிறைய நிறைய பேசணும், சிரிக்கணும்னு தோணுது. இதுக்கு முன்னாடி இருந்த நாலு மாசத்துல உன்னை நினைச்சதை விட இந்த பதினைஞ்சி நாள்ல அதிகம் தேடிட்டேன் உன்னை.” ஆழ்மனதின் எண்ணங்களை கோர்வையாக்கி இறைஞ்சலும் ஆவலுமாய் அவன் கேட்க,
“அந்த ஒரு நைட்ட நம்ம வாழ்கையிலேந்து அழிக்க முடிஞ்சிடாதா?” கலங்கும் குரலில் அவனை ஏற்க தடையாய் நிற்கும் விஷயத்தை அவள் போட்டு உடைத்ததில் அவன் முகமும் கசங்கிப் போனது.
“எல்லாத்துலயும் சரியா இருக்குற நீங்க அன்னைக்கும் சரியா இருந்திருக்கலாம். இவ்ளோ கஷ்டமா இருந்திருக்காது.” மூக்கை உறிஞ்சி கலங்கத் துடிக்கும் விழிகளை சிமிட்டி கண்ணீரை கீழிறங்க விடாமல் தடுக்க முயன்றாள் இயலணி.
வாழ்க்கையில் இதனை கடக்கவே முடியாதா என்று வேதனை நிரம்பிய விழிகளுடன் அவன் நின்றுவிட, முன்னே நடந்து சென்றவள் திரும்பிப் பார்த்து, “அதை மறக்க வைக்க முடியும்னா மட்டும் என்னை உங்ககூட கூட்டிட்டு போங்க.” என்று அவன் கேள்விக்கு அவள் பதில் கொடுத்துவிட, ஆனந்தம் கொள்வதற்கு பதில் பாரமேறிப்போனது அவன் மனது.
error: Content is protected !!