Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கந்தபவனம்

கந்தபவனம் 5

அத்தியாயம் 5

சென்னையில் ஒரு வீட்டு மணை வாங்கி அதில் பிரமாண்டமாக ஒரு அபார்ட்மெண்ட் கட்டினார் அருண். தம்பி குடும்பங்களையும் உடன் இணைத்து கொண்டார். 



Advertisement

ஆளுக்கொரு தளத்தில் அண்ணன் தம்பி மூவரும் தங்குமாறு ஏற்பாடு செய்தனர்.

மூன்று வீடுகளும் வசதியாக கட்டப்பட்டிருந்தது. வீட்டை சுற்றி பெரிய தோட்டம்.

வீட்டிற்கு பின் பகுதியில் வேலை செய்பவர்கள் தாங்குவதற்காக அவுட் ஹவுஸ்கள்.

Advertisement

Advertisement

அவுட் ஹவுஸ் பக்கத்தில் ஒரு அடுப்படியும் கட்டி இருந்தார்கள். பொது நிகழ்வுகள், விசேஷங்களின் போது அங்கே சமைத்து கொள்வதற்கு ஏதுவாக வடிவமைத்திருந்தார்கள். 

கூட்டுக்குடும்பம்  போல சேர்ந்து இருக்கும் வாய்ப்பும் தனிக்குடும்பம் போல சுதந்திரமாக இருக்கும் வாய்ப்பும் ஒன்றாக அமைத்துக்கொண்டார்கள்.

Advertisement

அருணின் தொழில் மிகவும் வெற்றிகரமாக சென்றது. செந்திலும் ராஜாவும் அவர்கள் வேலையில் நன்கு முன்னேறினார்கள். பதவி உயர்வு பெற்று நல்ல பதவியில் பணியாற்றினார்கள். பெரியப்பா சித்தப்பா மக்களாக வளராமல் அனைவரும் அண்ணன் தங்கைகளாகவே வளர்ந்தனர். புது வீட்டில் நான்கு அண்ணன்களின் செல்ல தங்கையாக வலம் வந்தாள் விசாகா.

முருகம்மை ஆச்சியும் ஆறுமாதங்கள் தன் சொந்த ஊரிலும் ஆறு மாதங்கள் சென்னையில் தன் பிள்ளைகளுடனும் தன் நாட்களை இனிதே கழித்தார்.

சாலாவின் பெற்றோர்களும் வள்ளி, தெய்வாவின் பெற்றோர்களும் அடிக்கடி வந்து பார்த்து சென்றார்கள்.

விசாகா  பிறந்து இரண்டாம் ஆண்டு  யாரும் எதிர்பார்க்காத விதமாக மீண்டும் கருத்தரித்தார் சாலா. விசாகாவின் ராசி என்று அனைவரும் மேலும் அவளை கொண்டாடினார்கள்.

முருகம்மை ஆச்சியின் குடும்பத்தில் மேலும் மகிழ்ச்சியை சேர்க்க சாலா அருணின் தவப்புதல்வன் பாலமுருகன் பிறந்தான்.

————-

“இன்னும் எவ்வளவு நேரம் அம்மா? சீக்கிரம்..” என்று சிணுங்கினாள் விசாகா தன் தாயிடம்.

“ஆயிடுச்சு விசா… அவ்வளவு தான்.. ரெண்டே நிமிஷம்”, என்று கூறி அழகாக ஜடையில் குஞ்சம் வைத்து கட்டினார் சாலா.

எட்டு வயது விசாகா.. கொலு கொலு கன்னங்கள், துரு துரு கண்கள், அடர் பச்சை நிற பாவாடையும் அரக்கு நிற சட்டையும் அணிந்து ஒரு சிறிய மர ஸ்டூலில் அமர்ந்திருந்தாள். அவளது நீண்ட தலை முடியை அழகாக பின்னலிட்டு, குஞ்சம் வைத்து பின்னிவிட்டார் சாலா.

“சாலாச்சி…  சாலாச்சி …” என்று மூச்சிரைக்க ஓடிவந்தார் வள்ளி.

“ஏன் இப்படி ஓடி வர வள்ளி”

“நான் இன்னிக்கு விசாக்கு புதுசா ஒரு ஹேர் ஸ்டைல் போடலாம்னு வந்தேன். நீங்க அதுக்குள்ள போட்டுட்டீங்களா?” என்றாள் வருத்தமாக.

“அதனால என்ன வள்ளி, ஆசையா பார்த்துட்டு வந்திருக்க… நான் சும்மா தானே பின்னல் போட்டிருக்கேன், நீ திருப்பி போட்டுவிடு” என்றார் சாலா.

“ரொம்ப தேங்க்ஸ் ஆச்சி”, என்று இப்பொழுது வள்ளி, விசாகாவின் ஜடையை பிரித்து மீண்டும் சீவத் தொடங்கினார்.

அங்கே நீளிருக்கையில் வெற்றி, வீரா, கதிர், சுப்பு, பாலு ஐவரும் தங்கள் அப்பத்தாவுடன் அமர்ந்திருந்தார்கள். எல்லோரும் முருகன் திருக்கல்யாணத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்தார்கள்.

“என்னடா இது?” என்று முருகம்மை வீராவிடம் கேட்டார்.

“இது டெய்லி ஓட்ற  சீரியல் தான் அப்பத்தா” என்றான் அவன்.

விசாகா உம்மென்று அமர்ந்திருந்தாள். வள்ளி, பத்து நிமிடத்தில் அழகாக சுருள்  சுருளாக தலையை புது மாதிரி அலங்கரித்தார். 

“சாலா ஆச்சி… சாலா ஆச்சி…” என்று இப்பொழுது தெய்வா ஓடி வந்தார்.

“அடுத்து என்னடா?” என்று பேரன்களிடம் கேட்டார் முருகம்மை.

“நீங்களே பாருங்க” என்று கடுப்படித்தான் வெற்றி.

“என்ன தெய்வா?” என்று அடுப்படியில் இருந்து வந்தார் சாலா, கையில் குட்டி குட்டி கிண்ணங்களில் கவுன் அரிசி வைத்து கொண்டுவந்திருந்தார். “இந்தாங்க டா” என்று மகன்களிடம் ஆளுக்கொன்றாக கொடுத்தார். முருகம்மை ஆச்சிக்கும் ஒன்று கொடுத்தார். 

“ஆச்சி, இங்க பாருங்க.. நைட் உட்கார்ந்து இந்த எம்ப்ரோய்டரி வேலை செய்தேன். பாருங்க சின்ன சின்ன மணி வைத்து இந்த லெஹங்கா துப்பட்டா ரெடி பண்ணிருக்கேன்” என்று கொண்டுவந்திருந்த லெஹங்காவை காட்டினார். வெளிர் நீல நிறத்தில், அடர் நீல நிற வேலைபாடுகள் செய்திருந்தார். அத்தனை அழகாக இருந்தது.

ஆண்கள் கூட்டணி ரசித்து கவுன் அரிசியை உள்ளே தள்ளிக்கொண்டிருந்தார்கள். 

“ரொம்ப நல்லா  இருக்கு தெய்வா..”என்றார் சாலா.

வள்ளி, “சூப்பர் தெய்வா.. இந்த ஹேர் ஸ்டைலுக்கு ரொம்ப நல்லா  இருக்கும் இந்த டிரஸ். விசா இந்த ட்ரெஸ்ஸை போட்டுக்கடா “ என்று தெய்வாவிடம் தொடங்கி விசாகாவிடம் முடித்தார் வள்ளி.

விசா பதிலளிக்கும் முன்பே சாலா அவளை அழைத்து சென்றுவிட்டார், டிரஸ் மாற்றுவதற்கு.

அதன் பிறகே வள்ளியும் தெய்வாவும் முருகம்மை ஆச்சி பக்கம் திரும்பினார்கள்.

“அத்தை கிளம்பிட்டீங்களா?”

“ஏன் .. பார்த்தா எப்படி தெரியுது?.. இவ்வளவு நேரம் கண்ணு என்ன பிடரியிலா இருந்தது?”

பேரன்களுக்கு ஒரே குஷி.. 

“நல்லா கேளுங்க அப்பத்தா.. குத்து கல்லாட்டம் நாம ஆறு பேரு இங்க  இருக்கோம்.. கண்ணு இப்ப தான் தெரியது போல?” என்று ஏத்திவிட்டான் கதிர்.

தெய்வாவும் வள்ளியும் சத்தமில்லாமல் அடுப்படிக்குள் நுழைந்து  கொண்டார்கள்.

“பாவம் டா, முருகு.. இந்த கூத்து அடிக்கிறாளுங்க?“ என்றார் முருகம்மை.

“இது கூட பரவால அப்பத்தா, காலை சீரியல். ராத்திரி அப்பாங்களாம் வந்ததும்  ஒரு சீரியல் ஓட்டுவாங்க பாருங்க..” என்று வீரா கூறவும், ஐவரும் ஒன்றாக பெருமூச்சு விட்டனர். பேரன்களின் செய்கையில் மனம் விட்டு சிரித்தார் முருகம்மை.

தெய்வா தைத்த லெஹங்காவில், வள்ளி செய்துவிட்ட  தலை அலங்காரத்தில் தேவதையாக தோன்றினாள் விசாகா. ஆனால் அவளது முகத்தில் எரிச்சல் தான் அதிகம் இருந்தது.

 

அன்று கோவிலுக்கு சென்று, திருக்கல்யாணம் முடித்து அங்கேயே  மதிய உணவையும் முடித்துக்கொண்டு வீடு திரும்பினார்கள்.

முருகம்மை ஆச்சி இருப்பதால், எல்லா பிள்ளைகளும் இன்று அருண் வீட்டிலே இருந்தார்கள். அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

“ரவைக்கு இங்கனே எல்லாரும் சாப்பிடாலாம் சாலா” என்றார் முருகம்மை.

 

“நானும் நினைத்தேன் அத்தை. இடியாப்பம் வைச்சு கோசுமல்லி வைப்போம்” 

“சரித்தா”

“டேய், உங்கம்மாக்க கிட்ட  சொல்லிட்டு வாங்க” என்றார் பேரன்களிடம். உடனே  கதிர் “நானே ரெண்டு பேர்ட்டயும் சொல்லிட்டு வரேன் அப்பத்தா “ என்று சென்றான்.

ஏழு மணி போல  முதலில் செந்தில் வந்தார். 

“விசா.. விசா ..” என்று தான் உள்ளே நுழைந்தார். 

“இந்தா டா..” என்று ஒரு அழகான பொம்மையை  கொண்டு வந்துகொடுத்தார்.

“நேத்து உன் பிரண்ட் , அந்த நேத்ரா கொண்டு வந்து பீத்திக்கிட்டாளே.. அதே மாதிரி சித்தப்பா வாங்கிட்டு வந்துட்டேன் பாரு”, என்று கொடுத்தார் தன்  மகளிடம் ஆசையாக.

நேத்ரா விசாகாவின் உயிர் தோழி. அவளது பொம்மை டோலி என்றால்  அவளுக்கு உயிர். எங்கே சென்றாலும் டோலியையும் எடுத்து செல்வாள் நேத்ரா. அப்படி தான் விசாகா வீட்டிற்கும் கொண்டு வந்திருந்தாள். விசாகவிற்கு அந்த பொம்மை மேல் ஆசை எல்லாம் இல்லை. அவள் அதை நேத்ராவின் பொம்மையாக தான் நினைத்தாள். நம் வீட்டிற்கு வந்திருக்கிறாள், என்று இவளும் அந்த பொம்மையிடம் பிரியமாக இருந்தாள் அவ்வளவே.

ஆசையாக கொடுக்கும் சித்தப்பாவிடம் என்ன சொல்லுவது. “தேங்க்ஸ் சித்தப்பா” என்று வாங்கிகொண்டாள்.

அடுத்து அரைமணி நேரத்தில் ராஜா வந்தார்  “விசா விசா…” என்றே.

ஐவர் கூட்டணி, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது அப்பத்தாவுடன்.

அதே போல ஒரு பொம்மை இவர்  கையிலும். 

“விசா இந்தா டா.. நீயும் உன் பிரண்ட் வீட்டுக்கு போகும் போது கெத்தா எடுத்துட்டு போடா.. பிடிச்சிருக்கா” என்று கூறினார். 

“தேங்க்ஸ் சித்தப்பா” என்று வாங்கிகொண்டாள் விசாகா. 

எட்டு மணிக்கு அருண் வந்தார். அவர் கையிலும் அதே போன்ற ஒரு பொம்மை. 

ஐவரும் தலையில் அடித்துக்கொண்டார்கள். முருகம்மை கொலைவெறியுடன்  தன்  மகன்களை முறைத்துவிட்டு சென்றார் உள்ளே.

அம்மா எதுக்கு முறைக்குறாங்க என்று புரியாமல் பார்த்தனர் மகன்கள் மூவரும்.

மூன்று பொம்மைகயையும் கொண்டு போய் ஒரு அறையில் வைத்தாள் விசாகா. அது பொம்மைகளுக்காகவே ஒரு அறையாக மாறி இருந்தது. பேத்தி முகத்தில் மகிழ்ச்சிக்கு பதிலாக சலிப்பே தெரிந்தது. அதை குறித்துக்கொண்டார் முருகம்மை.

சிவப்ரகாசமும் பார்வதியும் மருமகன்களுக்கு பிரசாதம் கொடுக்க இரவு வந்தார்கள். 

“வேலன் மகள் எங்கே ?” என்று கேட்டுக்கொண்டு தான் உள்ளே நுழைந்தார் சிவரப்ரகாசம். அதை கேட்டதும் விசாகாவின் முகம் வாடிவிட்டது. கோவிலிலும் கவனித்தார் முருகம்மை. 

“வேலன் மகள்…  வேலன் மகள்..” என்றே சிவப்பிரகாசம் அழைத்தார். அதை விசாகா விரும்பவில்லை.

அளவுக்கு அதிகமான அன்பு தன் பேத்திக்கு மூச்சுமுட்டுகிறது என்று புரிந்தது அந்த அப்பத்தாவிற்கு.

“நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க தம்பி” என்றார் நேரடியாக சிவப்ரகாசத்திடம்.

அவர் குரலின் இறுக்கம் அனைவருக்கும் சற்று பீதியை கொடுத்தது. முருகம்மை ஆச்சி என்றால் அப்படித் தான், பிள்ளைகள் வளரும் முன்பே இறைவனிடி சேர்ந்துவிட்டார் சொக்கநாதன். தனி ஒரு பெண்மணியாக மூன்று மகன்களையும் வளர்த்து ஆளாக்கினார் முருகம்மை ஆச்சி. கம்பீரமாகவே  இருப்பார் எப்பொழுதும். வெட்டு ஒன்று துண்டு ரெண்டாகவே இருக்கும் அவரது பேச்சு.

“சொல்லுங்க ஆச்சி” என்றார் சிவப்பிரகாசம்.

 

“உங்களுக்கு எத்தனை பிள்ளைங்க?”

அவருக்கு ஒன்றும் புரியவில்லை. சம்பந்தம் செய்து இருபது வருடம் கழித்து இது என்ன கேள்வி  என்று.

“மூணு… “ என்றார்.

“அவங்களை எப்படி கூப்பிடுவீங்க..” 

“சாலா, விஸ்வம், அமுதா”

“சிவபிரகாசம் மகளே…  சிவப்பிரகாசம் மகனே…அப்படி கூப்பிட வேண்டியது தானே?”

அவருக்கு இவர் எங்கே வருகிறார் என்று பிடிபட்டது.

“அது, முருகனுக்கு மகளா இருக்கறது சிறப்பு இல்லையா.. சாமி புள்ளை.. அதான் வேலன் மகளேன்னு கூப்பிடறேன்” என்றார், நான் செய்வது சரியே என்று.

“சிறப்பு தான். அதுக்குன்னு சொல்லிட்டே இருக்கனுமோ.. இல்லனா  மறந்திருவீங்களோ ?”

“அது எப்படி மறக்கும் ஆச்சி”

“மறக்காது இல்லையா?அந்த பிள்ளை விசனப்படுது  இல்லையா? மத்த பிள்ளைக முன்னக்க அப்படி கூப்பிடறது அதுக்கு சங்கடமா இருக்கு தம்பி… முருகுன்னு கூப்பிடுங்க.. இல்லையா விசாகான்னு கூப்பிடுங்க.. மறுக்கா  வேலன் மகளேன்னு கூப்பிடாதீங்க.. கூப்பிடாட்டியும் அது தான் உண்மை” என்றார் முடிவாக.

அவர் முகம் வாடவும், “ஏன் மா.. ஆசையா கூப்பிட்றதுக்கு எதுக்கு சத்தம் போடறீங்க”என்றார் அருண்.

“உன்ன சொக்கன் மகனே சொக்கன் மகனேன்னு” இனி கூப்பிடுறேன். 

“ங்கே…”  என்று விழித்தார் இப்பொழுது.

“அண்ணமுண்டி சொல்றது சரிதான். பிள்ளைக்கு பிடிக்கலைன்னா இனி அப்படி கூப்பிடாதீங்க” என்றார் பார்வதி.

விசாகாவிற்கு அப்பத்தாவை அவ்வளவு பிடித்தது இந்த நிமிடத்தில். வந்து அப்பத்தாவை கட்டி அணைத்துக்கொண்டாள்.

சிவப்ரகாசமும் பார்வதியும் சென்றவுடன், அவர் அவர் வீட்டிற்கு சென்றார்கள் அனைவரும். முருகம்மை விசாகவிற்கும் பாலுவிற்கும் கதை சொல்லி தன்னுடனே அன்றிரவு படுக்க வைத்துக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!