Skip to content
Post Views: 1,774
சாலையில் தேங்கியிருந்த தண்ணீரைக் கிழித்தபடி மெதுவாகச் சென்றது அந்த பல்சர் பைக். சங்கரின் தோளை இறுகப் பற்றியபடி பின்னால் அமர்ந்திருந்த வசுமதியின் மனம் வானத்துப் பறவையாய் சிறகடித்துப் பறக்கத் தொடங்கியது. அந்தக் கணத்தில் அங்கே சுழித்தோடிய காதல் நதி, அவர்கள் இருவரையும் தன் போக்கில் இழுத்துச் சென்றது. அந்த நதியில் அப்படியே கரைந்து போக தன்னை ஒப்புக் கொடுத்துவிட்டாள் வசுமதி.
வீட்டில் இவளை எப்படி அறிமுகப் படுத்துவது என்ற யோசனையோடு மெதுவாகச் சென்றான் சங்கர். முந்தைய நாளின் புயல் மழையால் ரோட்டில் வாகன போக்குவரத்து இல்லாமல், குறைவான ஆள் நடமாட்டம் மட்டுமே இருந்தது. மூலக்கடை தாண்டி மாதவரம் வந்து பஸ் ஸ்டாண்டை அடுத்த இரண்டாவது வலது புற திருப்பத்தில் திரும்பி ஒரு தனி வீட்டின் முன்னால் நின்றது வண்டி.
வீட்டின் முன்னால் வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டதுமே உச்சஸ்தாயியில் சத்தமிட ஆரம்பித்தாள் சரசு.
“ஏண்டா புயல் மழைன்னு ராத்திரி தங்குனா.. விடிஞ்சு எழுந்ததும் நேரத்தோட வீட்டுக்கு வர மாட்டியா? வீட்டில் தேடுவாங்களேன்னு எண்ணம் வேண்டாமா?” என்றபடி வந்தாள். சங்கரின் பின்னால் இருந்து இறங்கிய அந்தப் பெண்ணைப் பார்த்ததும் அப்படியே அமைதியாகி, முகத்தில் கேள்விக்குறியோடு மகனைப் பார்த்தாள். மனைவியின் சத்தம் அப்படியே சுவிட்ச் போட்டது போல நின்றதைக் கண்டு ஆச்சரியப்பட்ட மாணிக்கம் மெதுவாக வெளியே எட்டிப் பார்த்தார். சட்டென்று தன் கோபத்தை மறைத்த சரசு, சற்று சிரிக்க முயன்றாள்.
“யாருப்பா இது?”
“ஏம்மா, உள்ள வந்து உட்கார்ந்துட்டு சொல்லக் கூடாதா? வெளியே வச்சித்தான் சொல்லனுமா என்ன?” என்று சங்கர் கேட்டதும் சட்டென்று விலகி நின்று வழி விட்டாள். “வாங்க உட்காருங்க.” என்று மெதுவாக சொன்னாள்.
“என்னடா ஏதும் பிரச்சனையா?” என்றபடி மகனையும் உடன் வந்த பெண்ணையும் மாறி மாறிப் பார்த்தார் மாணிக்கம்.
“வந்து, இது.. இவங்க வந்து..”
சங்கர் தயங்கி தயங்கி பேச ஆரம்பிக்க, “நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம் அங்கிள்!” என்று பட்டென்று சொன்னாள் வசுமதி.
“எனக்கு ஒரு சின்ன பிரச்சனை. என்னாலதான் நேத்து இவர் வீட்டுக்கு வரல.” இதைக் கேட்டதும் வாயில் கை வைத்தாள் சரசு. உள்ளுக்குள் கலவரம் பற்றிக் கொண்டது.
“என்னடா பிரச்சினை? ஏதோ இருக்கிற இடம் தெரியாம கவுரவமா வாழ்ந்திட்டு இருக்கோம். ஏதாவது புதுசா இழுத்து வச்சிடாதடா. யாருகிட்டயும் போயி நம்மால சண்டை போட்டு மல்லுக்கு நிக்க முடியாது.” புலம்ப ஆரம்பித்தவளை பார்வையால் அடக்கினார் மாணிக்கம்.
“கொஞ்ச நேரம் புலம்பாம அதுகளை உட்கார விடேன்.”
“இரு.. இரும்மா…” வசுமதியின் காலைப் பார்த்த மாணிக்கம், “என்ன இது? கால்ல ரத்தம் வர்ற மாதிரி இருக்கு.. என்னடா ஆச்சு?”
சங்கரைப் பார்த்துக் கேட்டார்.
“அது ஒண்ணும் இல்ல.. நேத்து நம்ம ஷெட்டு இரும்புப் படியில காலை இடிச்சுக்கிட்டா.” அவன் முதல் முதலாக தன்னையறியாமல் ஒருமையில் பேசியதைக் கவனித்தாள் வசுமதி.
“இரும்புப் படியில் இடிச்சுகிட்டா.. அப்படியே வர்றதா? போ. உடனே கிளினிக் கூட்டிட்டு போ. எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்.”
சங்கரை உட்கார விடாமல் விரட்டினார். அவர் பதறிய விதம் வசுமதிக்கு வியப்பாக இருந்தது. அவளிடம் இருந்து பேக்கை வாங்கிக் கொண்டாள் சரசு. சங்கர் வசுமதியைப் பார்த்தபடி கீழ இறங்கி வண்டியை ஸ்டார்ட் பண்ண, அமைதியாகச் சென்று, அவனுக்கு பின்னால் ஏறிக் கொண்டாள். கிளம்பினார்கள்.
“மெதுவா போடா.. பத்திரம்!” என்ற சரசுவின் குரல் பின்னால் கேட்டது.
அங்கிருந்து இரண்டு தெருக்கள் தள்ளி, ஒரு முட்டுச் சந்தில் இருந்தது அந்த கிளினிக். மழைக்காலமாக இருந்ததால் அன்று கிளினிக்கில் வழக்கத்தை விட கூட்டம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது. நோயாளிகள் காத்திருக்கும் ஹாலில் வரிசையாக போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் சேர்களில் ஒன்றில் அவளை அமர வைத்து, தானும் அருகில் உட்கார்ந்து கொண்டான் சங்கர். இருபது நிமிடங்களாக ஒரே இடத்தில் இருவரும் காத்திருந்தனர். இடையில் இருவரும் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. சங்கர் தீவிரமான யோசனையில் இருந்தான்.
“உங்க வீட்ல ஏத்துக்க மாட்டாங்களா? வசுமதி பரிதாபமாக கேட்டாள்.” அமைதியாக அவளைப் பார்த்தான்.
“நீ ஒண்ணும் கவலைப்படாத, பாத்துக்கலாம்.” சங்கரின் இந்த ஆறுதலான வார்த்தை வசுமதிக்கு ரொம்பவே இதமாக இருந்தது.
“நான் ரொம்பவும் பயந்துட்டேன்!”
“ஏன்.. எதுக்கு?”
“இல்ல.. நம்ம கல்யாணம் முடிஞ்ச பிறகும்கூட என்னை வாங்க போங்கன்னுதான் கூப்பிடுவீங்களோன்னு நெனைச்சேன். நல்லவேள.. மாறிட்டீங்க.”
என்று புன்னகையுடன் மெதுவாக அவன் கையை பற்றிக் கொண்டாள். தலையைக் கவிழ்த்துக்கொண்டு சங்கரும் சிரித்தான்.
அடுத்த சில நிமிடங்களில் அவளது முறை வந்தது. டாக்டரைப் பார்த்தார்கள். டாக்டர் கொஞ்சம் வயதானவராகத் தெரிந்தார். நெற்றியில் தெரிந்த கோடுகள் அவரது அனுபவத்தைப் பறைசாற்றின. கண்ணாடியை சரிசெய்துகொண்டே வசுமதியின் கால் காயத்தைக் கவனமாகப் பார்த்தார்.
“மழை நேரம் கவனமா இருக்க வேண்டாமா?” என்று இருவருக்கும் பொதுவாக சொல்லிக்கொண்டார். செப்டிக் ஊசி போடச் சொல்லி, மாத்திரையும் எழுதிக் கொடுத்தார். ஒரு இளம் வயது நர்ஸ் வந்து ஊசி போட்டுவிட்டாள். காயத்தை சுத்தம் செய்து, அதில் மருந்து வைத்து சின்னதாக ஒரு கட்டுப் போட்டு விட்டாள்.
“ஈரம் படாமப் பார்த்துக்கோங்க.” என்ற நர்ஸிடம் நன்றி சொல்லி, ஃபீசைக் கட்டிவிட்டு வெளியே வந்தார்கள். நடக்கும்போது வசுமதியின் முகத்தில் வேதனை தெரிந்தது. சங்கரின் தோளைப் பற்றிக்கொண்டு மெதுவாக நடந்தாள்.
****
“உங்க மகளை ஒரு முறை நேர்ல பார்த்துப் பேசினா எல்லாம் சரியாயிடும். எனக்கு நம்பிக்கை இருக்கு மாமா. அவ இதுக்கு நிச்சயம் சம்மதிப்பா.”
என்று பேசிக்கொண்டே துரைப்பாண்டியும் அதைப் பார்த்தான். டிவியில் அந்தச் செய்தியை திரும்பத் திரும்பக் காட்டிக் கொண்டிருந்தார்கள். ஒரு இளைஞனோடு பைக்கில் பின்னால் அமர்ந்தபடி மறுபடி மறுபடி போய்க் கொண்டிருந்தாள் வசுமதி. அதை மலரும் பார்த்தாள். சரவணனும் பார்த்தார்.
“அது.. அது நம்ம வசு மாதிரி இல்ல?”
யாரும் எதுவும் பேசாமல் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். “இதுக்குத்தான் அவ அப்படி பேசியிருக்கா போல..” மலர் பொருமினாள்.
“என்ன பேசினா அத்தை?”
“எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம். நான் படிக்கணும்னு சொன்னா. வீட்டுக்கு வரட்டும் வச்சிக்கிறேன்.”
“அத்தை, இதை எல்லாம் பெருசு படுத்தாதீங்க, வயசுக் கோளாறுதான். அந்த பையனப் பிடிச்சு நாலு சாத்து சாத்துனா எல்லாம் சரியாயிடும். நீங்க எதுவும் கவலைப்படாதீங்க. இப்ப என்ன, அவ படிக்கணும்னா தாராளமாப் படிக்கட்டும். படிக்கிறது நல்லதுதானே? கல்யாணத்துக்கு அப்புறம் நானே படிக்க வைக்கிறேன்.” தியாகி போல பெருந்தன்மையுடன் துரைப்பாண்டி பேசியது சரவணனுக்கு சங்கடமாக இருந்தது. வசுமதிக்கு போன் போட்டார். சுவிட்ச் ஆப் என்றே வந்தது.
“வண்டி நம்பர் இருந்தா டிரேஸ் பண்ணி தூக்கிடலாம். நாம போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் மாமா. எங்க வீட்டு பொண்ணை ஒருத்தன் கடத்திட்டான்னு.”
பல்லைக் கடித்தபடியே பேசினான் துரைப்பாண்டி. பிச்சை வாத்தியார் முறைத்தார்.
“கூறுகெட்ட தனமா பேசாதலே. பொம்பளப்புள்ள விஷயம் பொசுக்குன்னு போலீசுக்குப் போனா, நாளைக்கு யாருக்குக் கேவலம்? கம்முனு இரு. அந்தப்புள்ள வீட்டுக்கு வந்ததுக்கப்புறம் ரெண்டு நாள் ஆறவிட்டு பேசலாம்.”
தொண்டையை செருமியபடி பேச ஆரம்பித்தார் சரவணன். “ஆமா துரைப்பாண்டி, எனக்கு என் மக மேல நம்பிக்கை இருக்கு. அவ எப்படிப் போனாளோ அதே மாதிரி திரும்பி வருவா. நீ வீணா டென்ஷன் ஆவாத. நான் பார்த்துக்கிறேன்.”
“நீங்க என்னத்த பாத்துக்கிடுவீங்க? சும்மா இருங்க. அவ வரட்டும்.. இவங்க இருக்கும்போதே இதை என்னென்ன பேசி சரி பண்ணிடனும்.”
சரவணன் மனைவியை அமைதியாகப் பார்த்தார். “இவ்வளவு நாளா எல்லாத்தையும் இவங்கள வச்சுத்தான் சரி பண்ணோமா?” மலர் வாயைப் பொத்தியபடி அமைதியானாள்.
“ஆமா மாப்ள, அதான் சரி. பக்குவமா பேசுற முறையில பேசி சரி பண்ணிக்கோங்க. எடுத்தோம் கவுத்தோம்னு செய்ய இது என்ன காய்கறி யாவாரமா?” என்ற பிச்சை வாத்தியார், “நீ அவசரப்படாதல.. இன்னும் ஒரு ரெண்டு மாசம் போவட்டும். சரியாயிடும். இன்னைக்கு ஒரு நாள் தங்கிட்டு நாளை காலைல நாம ஊரை பார்த்துக் கிளம்பலாம்.” என்று மகனைப் பார்த்துச் சொன்னார். துரைப்பாண்டி தலையாட்டினான். இருந்தாலும் அவனுக்கு அந்த முகம் தெரியாத இளைஞன் மீதான கோபம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஏதாவது செய்து இதை ஆரம்பத்திலேயே முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று நினைத்தான். அதற்கான திட்டங்களை யோசிக்கவும் ஆரம்பித்தான்.
******
error: Content is protected !!