Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கந்தபவனம்

கந்தபவனம் 6

அத்தியாயம் 6

அடுத்த நாள் ஞாயிற்று கிழமை, அவர்கள் வீட்டின் பின்புறம் இருந்த இடத்தை கிரிக்கெட் விளையாட ஏதுவாக தயார் செய்திருந்தார்கள். சாலாவின் யோசனை இது. விடுமுறை தினங்களில் பிள்ளைகளும் அப்பாக்களும் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம்.



Advertisement

காலை உணவு முடிந்து, கிரிக்கெட் விளையாட புறப்பட்டனர் ஐவர் அணி. இவர்களுடன் அப்பாக்கள் மூவரும் உடன் கிளம்பினார்கள். விசாகா அமைதியாக அமர்ந்து படம் வரைந்து கொண்டிருந்தாள்.

“நீ போகலயா முருகு?” என்று அவளிடம் கேட்டார் முருகம்மை ஆச்சி.

Advertisement

Advertisement

“இல்ல அப்பத்தா.. நான் போனா யாரும் ஒழுங்கா விளையாட முடியாது” என்றாள் பட்டென்று.

“ஏன் முருகு.. என்ன விஷயம்? உனக்கு சரியா விளையாட தெரியாதா? நண்டு பய பாலு கூட போறானே?”

Advertisement

“போங்க அப்பத்தா.. எங்க ஸ்கூல் ஜூனியர் கிரிக்கெட் டீமுக்கு நான் தான் கேப்டன். ஆனா இங்க விளையாட முடியாது”

“ஏன் முருகு? நீங்க விளையாட தானே உங்க அம்மா ஏற்பாடு பண்ணிருக்கா? என்ன விஷயம்?” பேத்தியிடம் பதில் வாங்கியே ஆக வேண்டும் என்று  முருகம்மை ஆச்சியும் விடாமல் கேள்வி கேட்டார்.

“சொன்னா புரியாது உங்களுக்கு. வாங்க நான் காட்டுறேன்” என்று அப்பத்தாவை அழைத்து கொண்டு விளையாடும் இடத்திற்கு சென்றாள்.

வெற்றியும் கதிரும் பேட்டிங் செய்ய நின்றுகொண்டிருந்தார்கள். அருண் பந்து போட தயாராக இருந்தார். ஏனையவர்கள் பீல்டிங் செய்ய நின்று கொண்டிருந்தார்கள்.

விசாகாவை பார்த்ததும்,“அடடே வா விசா.. ரொம்ப நாளா நீ வரவே இல்லை விளையாட… இன்னிக்கு வாடா…நாம கலக்குவோம் ” என்று உற்சாகமாக வரவேற்றார் செந்தில்.

“டேய் கதிரு, விசாக்கு பேட் கொடுடா” என்று அவன் கையில் இருந்து பேட்டை புடுங்கி விசாவிடம் கொடுத்தார்.

“சரி, அப்ப நான் பௌல் பண்றேன்” என்று கதிர் அருணிடம் இருந்து பந்தை வாங்கி பந்தை விசாகா நோக்கி வீசினான். பந்து சற்று வேகமாக விழுந்தது.

அவ்வளவு தான்,“டே அறிவு இருக்காடா, சின்ன பிள்ளைக்கு இப்படியா பந்து போடுவாங்க”, என்று பந்தை அவர் வாங்கி மெதுவாக உருட்டி விட்டார். விசா கடுப்பாக இழுத்து அடிக்கவும், பந்து பக்கத்து வீட்டிற்கு சென்றது.

“சிக்ஸ்..சிக்ஸ்…” என்று மூன்று அப்பாக்களும் கத்தினார்கள்.

“கருமம், பௌலிங் பண்ணிட்டு  பேட்டிங் அடிக்கறவங்க சிக்ஸ்னு கத்துறாங்க.. “ என்று கடுப்படித்தான் வீரா.

அடுத்த பந்தையும் மெதுவாக உருட்டி விட்டார் ராஜா. விசா பந்தை அடிக்காமல், அப்பத்தாவை பார்த்தாள், ‘இப்ப புரியுதா?’ என்று.

“நீங்க விளையாடுங்க … நான் வீட்டுக்கு போறேன்” என்று பேட்டை கதிரிடம் கொடுத்துவிட்டு, அப்பத்தாவுடன் வீட்டிற்குள் வந்தாள் விசாகா.

வீட்டிற்குள் மகளிர் அணி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

“ஏன்டா தங்கம் நீ விளையாடலையா?” என்றார் தெய்வா.

“இல்ல சித்தி”, என்று முடித்துக்கொண்டாள் விசாகா.

பிள்ளை முகம் வாடியிருப்பதை பார்த்து, “போர் அடிக்குதா? நாம கேரம் விளையாடலாமா?” என்று கேட்டார் வள்ளி.

விசாகாவிற்கும் விளையாட ஆசையாக இருக்கவுமே, சரி என்றாள்.

இவளும் தெய்வாவும் ஒரு அணி, சாலாவும் வள்ளியும் ஒரு அணி. நன்றாக தான் தொடங்கியது ஆட்டம். முருகம்மை ஆச்சி பக்கத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

சற்று நேரத்திலே மற்ற மூவரும் விசாகாவிற்கு விட்டுக்கொடுப்பதை போலவே ஆடினார்கள். வேண்டும் என்றே அவள் அடிக்க எதுவாக காய்களை நகர்த்திவிட்டனர். அவள் பாக்கெட் செய்ததும், சூப்பர் டா என்று பாராட்டினார்கள்.

இன்று ஏற்கனவே எரிச்சலில் இருந்த விசாகா, ஒரு கட்டத்தில், கேரம்  போர்டை  கோபமாக தலை கீழாக திருப்பி வீசினாள். அனைவரும் அதிர்ந்துவிட்டனர்.

“நான் என்ன லூசா? ஏன் இப்படி செய்றீங்க எல்லோரும்? நானே விளையாடி தோத்தா கூட சந்தோசமா இருப்பேன். இப்படி நீங்க விட்டு கொடுத்து நான் ஜெயிக்க வேணாம்”என்று கத்தினாள் விசாகா.

“என்ன விசா இது? “ என்று சாலா அடிக்க கை ஓங்கினார்.

“ஆச்சி.. ஆச்சி.. என்ன பண்றீங்க?” என்று வள்ளியும் தெய்வாவும் தடுத்துவிட்டார்கள்.

விசா முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு தன் அறைக்குள் சென்றுவிட்டாள்.

முருகம்மை ஆச்சி அமைதியாக அமர்ந்திருந்தார்.

மருமகள்கள் அவரை கேள்வியாக பார்க்கவும், “என்ன செய்றீங்க நீங்க எல்லாரும் சேர்ந்து? அந்த பிள்ளையை பாசம் காட்றேன்னு படுத்தறீங்க?” என்றார் ஆதங்கமாக.

“என்ன, அத்தை இப்படி சொல்றீங்க. அவளுக்கு எடுத்து சொல்லாம?” என்று கேட்டார் விசாலாட்சி.

“உனக்கு நிஜமா புரியலையா ஆத்தா?”

“என்ன அத்தை சொல்றீங்க? நாங்க எல்லோரும் அவ மேல உயரையே  வச்சிருக்கோம். அவ கேட்டா இல்லன்னு சொல்லாம வளர்க்கிறோம்” என்றார் தெய்வா.

“அவ இதுவரைக்கும் என்ன கேட்டிருக்கா?”

மூவரும் முழித்தனர். ஆம் இது வேண்டும் என்று இதுவரை விசாகா எதுவும் கேட்டதே இல்லை.

“அவளுக்கு கேக்க நீங்க சந்தர்ப்பமே கொடுக்கலை.. என்ன வேண்டும்னு யோசிக்க கூட விடலை யாரும்” 

“எவ்வளவு கொண்டாடுறோம். நீங்க குறை சொல்றீங்க? யாருக்கு கிடைக்கும் இந்த அதிர்ஷ்டம். இன்னிக்கு எதோ கோவம் பிள்ளைக்கு. அதுக்கு போய் நாங்க தப்பு செய்துட்ட மாதிரி சொல்றீங்க?” என்று நொடித்துக்கொண்டார் வள்ளி.

இவர்களிடம் பேசி பயனில்லை என்று அமைதி ஆகிவிட்டார் முருகம்மை.

“மதிய உணவிற்கு என்ன செய்யலாம். இன்னிக்கு சமையல் செய்ற அம்மா வீட்ல ஏதோ விசேஷமா அத்தை, என்னனு சொன்னீங்கனா நானே செஞ்சிடுவேன்” என்று பேச்சை திசை திருப்பினார் சாலா.

“இன்னிக்கு நான் சமைக்கிறேன்.. நீங்க மூணு பேரும் போய் வேற வேலை இருந்தா பாருங்க”

“நாங்க காய் நறுக்கி தந்துட்டு போறோம் அத்தை”

“இல்ல நானே பார்த்துகிறேன்”

சரி என்று மூவரும் சென்றுவிட்டனர்.கொஞ்சம் சுத்தம் செய்யலாம் என்று பேசிக்கொண்டு அவர் அவர் வீட்டிற்கு சென்று விட்டார்கள்.

சற்று நேரத்தில் விளையாட்டு  முடித்துவிட்டு ஆண்களும் வந்துவிட்டார்கள்.

முருகம்மை, வெற்றியை அழைத்து ரகசியம் பேசினார். குறுகுறுன்னு பார்த்த மகன்களை கண்டுகொள்ளவில்லை.

பயத்தம் பருப்பை மிதமான சூட்டில் வறுத்து அதை ஒரு பெரிய பாத்திரத்தில்  வேக விட்டார். பின், வெல்லத்தை பொடித்து தண்ணீரில் கரைத்து வடிகட்டி  எடுத்து வைத்தார். தேங்காய் உடைத்து பாதியை பால் எடுத்து வைத்தார். மீதி தேங்காயை சில்லு எடுத்து சிறிது சிறிதாக நறுக்கி வைத்தார். ஏலக்காய் தோல் நீக்கி பொடித்துவைத்தார்.

முந்திரி திராட்சை  எடுத்து சிறிது நெய் விட்டு வறுத்து தனியே  வைத்தார். வீடே மணத்தது முருகம்மை ஆச்சியின் கைவண்ணத்தில். பருப்பு குழைய தொடங்கவும், லேசாக மசித்து விட்டு, வெல்லப்பாகை சேர்த்து கலக்கி , பக்குவமாய் கிளறினார். முந்திரி, திராட்சை, ஏலக்காய், தேங்காய் சேர்த்து இறக்கினார். சற்று ஆறவும், தேங்காய் பால் கலந்து மூடிவைத்தார்.

பிறகு அவரும் சென்று அனைவருடனும் அமர்ந்துகொண்டார்.

“என்னமா பாயசமா? வாசனையே தூக்குது. உங்க கைமணம் யாருக்கும் வராது” என்றார் ராஜா.

“அம்மா, பாயசம் வாசனையே பசியை கிளப்புது” என்றார் அருண்.

சற்று நேரத்தில், மருமகள்களும் வந்துவிட்டார்கள். சாப்பிடுவோமா? என்று எழுந்தார் செந்தில். “வாங்கடா பசங்களா.. எங்க விசாவை  காணும் பிள்ளையையும் கூப்பிடுங்க” என்றார்.

“பசங்களும் முருகுவும்  நானும் இன்னிக்கு பீசா சாப்பிட போறோம்” என்றார் முருகம்மை ஆச்சி.

“பீசாவா” என்று வாயை பிளந்தனர் மகன்களும் மருமகள்களும்.

“ஆமாப்பா, அப்பத்தா அதை தான் வந்ததும் சொன்னாங்க, இப்ப வந்திடும். நீங்க எல்லாம் சாப்பிடுங்க” என்றான் வெற்றி.

ஆறு பேரும் உணவு மேசையில் அமர்ந்தார்கள். அழகாக ஆறு கிண்ணங்களில் பாயசத்தை ஊற்றி கொண்டு வந்து கொடுத்தார் முருகம்மை.

“முதல்லேயே  பாயாசம் தரீங்க? கடைசியா சாப்பிடுவோமே” என்றாள் தெய்வா.

“எப்ப சாப்பிட்டா  என்ன? வாசனை ஆள தூக்குது, கொடுங்க அம்மா” என்று வாங்கி சுவைக்க தொடங்கினார் செந்தில். 

பிள்ளைகள் சென்று விசாவை அழைத்து வந்துவிட்டார்கள். அங்கே இருந்து இவர்களை தான் நோட்டம் விட்டனர் பிள்ளைகள்.

“அமிர்தமா இருக்கு மா… “என்றார் அருண்.

“இன்னும் கொஞ்சம்  போட்டுக்க அப்பச்சி” என்று அவர் கிண்ணத்தை மீண்டும் நிரப்பினார்.

இப்படியே அனைவர் கிண்ணங்களையும் தீர தீர நிரப்பினார்.

ஒரு அளவிற்கு மேலே சாப்பிட முடியாமல் அனைவரும் நிறுத்தினார்கள்.

“அத்தை திகட்டுது “ போதும் என்றார் சாலா.

“ஏன் ஆத்தா.. நல்லா  இல்லையா ?” 

“ரொம்ப நல்லா இருக்கு அத்தை.. ஆனால் இனிப்பை எவ்வளவு சாப்பிடறது?”

“அதானே” என்று ஒத்து ஊதினார்கள் வள்ளியும் தெய்வாவும்.

“இனிப்பு பத்தலையா? வாசனை நல்லா இல்லையா?”

“இனிப்பு ரொம்ப சரியா இருக்கு மா.. ஏலக்காய் தூக்கலா, பல்லு பல்லா  தேங்காய் சில்லு போட்டு, அமிர்தமா இருக்கு மா.. அதான் ஆளுக்கு மூணு கிண்ணம் சாப்பிட்டோம்.. திகட்டுது மா போதும்”என்றான் ராஜா.

“இனி சாப்பிட முடியுமா தெரியல. வயிறு முட்ட பாயசம் இருக்கு” என்றான் செந்தில். 

“இப்படி தான்டா முருகுவ பண்றீங்க எல்லாருமே” என்றார்.

அனைவரும் அம்மாவின் கூற்றில் ஒரு நிமிடம் என்ன என்று அமைதியாகி விட்டார்கள், பின் ட்ராப் சைலென்ஸ்.

விசாகா அப்பத்தாவை பார்த்தாள், கண்கள் கலங்கிவிட்டது. அப்பத்தா என்று ஓடி வந்து கட்டிபிடித்துக்கொண்டாள். அண்ணன்களுக்கும் கண்கள் கலங்கி விட்டது. அப்பா அம்மாவின் அலப்பறைகளில் தங்கை கலங்குவதை பார்த்துக்கொண்டு தானே இருக்கின்றார்கள். 

“இனிப்பா இருந்தாலும் ஒரு அளவிற்கு தான் சாப்பிடமுடியும். தெகட்டுதா  இல்லயா? ஆசையா ஒத்த பொம்பள பிள்ளைன்னு ஆளாளுக்கு அது மேல பாசத்தை பொழிஞ்சு தெகட்டவிடாதீங்க.. அமிர்தமாவே இருந்தாலும் அளவு தான், விளங்குதா இல்லையா?” என்றார் .

“அவளை சுயமா யோசிக்க விடுங்க. வேணுங்கறதை கேக்க விடுங்க.. அண்ண தம்பிக கூட சண்டை போட்டு வாங்கிக்கிறது சுகமில்லையா? இயல்பா இருங்க.. நான் சொல்றத யோசிங்க”

அனைவரும் பேசாமல் அமைதியாக முருகம்மை ஆச்சி சொல்றதை உள் வாங்கினார்கள்.

வெற்றி, “அப்பத்தா பீசா வந்துடுச்சு” என்றான். 

“வாங்க, நாம போய் சாப்பிடுவோம்” என்று விசாவை அழைத்துக்கொண்டு பேரன்களுடன் தோட்டத்திற்கு சென்று விட்டார். அங்கே ஏற்கனவே மாமரத்தின் நிழலில் பாய் விரித்து அப்பத்தா சொன்னதை போல தன் தம்பிகளுடன் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தான் வெற்றி.

போகும் போது,”பசிச்சா இன்னிக்கு பூரா உங்களுக்கு பாயசம் தான்,வேணுங்கறதை குடிங்க” என்று கூறிவிட்டு சென்றார் முருகம்மை ஆச்சி.

“அப்பத்தா பாயாசத்துல ஒரு பாடமா?” என்றான் வீரா.

அப்பத்தாவும் பேரப்பிள்ளைகளும் கலகலவென பேசிக்கொண்டே பீசாவை சுவைத்து உண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!