Skip to content
Post Views: 3,349
“விடிய விடிய கதையைக் கேட்டு, விடிந்த பிறகு, சீதைக்கு ராமன் சித்தப்பன் என்றானாம் ஒருத்தன்!” என்று ஒரு கிராமத்து கிண்டல் பழமொழியைக் கேட்டுருப்பீர்கள்!
அதாவது விடிய விடிய இராமாயண கதாகாலட்சேபம் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, விடிந்த பிறகு அதில் சீதைக்கு ராமன் என்ன உறவு என்று கேட்டதற்கு சித்தப்பா என்றானாம் ஒரு முட்டாள்!
அது போல தான் ரித்துவின் மனமும்!
விடிய விடிய, இந்த குட்டிமா நமக்கு வேண்டாம்.
Advertisement
பாவம் அவள் குடும்பம்! என் குடும்ப அரசியலை எல்லாம் ஒரு நாள் கூட தாக்குப் பிடிக்க முடியாது.
முக்கியமாக அவன் அத்தைகள், நன்றாக, தெளிவாக இருப்பவர்களையே கதி கலங்க வைப்பவர்கள்!
மானு அம்மாவை எல்லாம் பாடாய் படுத்தி எடுத்து விடுவார்கள்!
Advertisement
இதில் அவர்களை பெண்களில் ஒருவரைக் கல்யாணம் செய்யாமல் விட்டு விட்ட கோபம் வேறு வந்து விட்டால், காலில் சலங்கை கட்டி விட்ட மாதிரி தான்!
Advertisement
அவன் சிறு வயதில் பார்த்த ஒரு சினிமா நினைவு வந்தது.
இவளைக் கட்டிகிட்டா, நாம சந்தோசமா இருப்போம்னு நினைக்கறது உண்மையான காதல் இல்லை. ஒரு பொண்ணைக் கல்யாணம் செய்தால், அவள் நம் வீட்டில் சந்தோசமாக இருக்கணும் என்று நினைப்பது தான் உண்மையான காதல் என்கிற ரீதியில் காதலுக்கு டெபனிசன் கொடுப்பார்கள்!
அதெல்லாம் ரித்துவின் நினைவுக்கு வந்து, நிச்சயம் குட்டிமா நம்மைக் கல்யாணம் செய்தால், இங்கு வந்து கஷ்டம் தான் படுவாள்!
Advertisement
அதனால, நாம கொஞ்சம் அடக்கி வாசிப்போம் என்று விடிய விடிய அவன் மனதை தயார் செய்து விட்டே தூங்கினான். மறுநாள் ஞாயிறு விடுமுறை.
அன்று இரவும் அதே போலவே சிந்தனை அவனுக்குள்!
ஆனால், விடிந்தவுடன் அவன் தயாராகி வேன் ஸ்கூல் சவாரிக்கு கிளம்பினான்.
அவனுக்கு நன்றாக கூர் செய்யப்பட்ட “ஆப்பு” தயாராக இருப்பது தெரியாமல்!
ஆமாம். அவன் சங்கல்ப்பத்தை மீண்டும் தவிடுபொடியாக்க, அழகான பட்டுப்பாவாடை தாவணி அணிந்து, புல் மேக்கப் போட்டுக் கொண்டு, வழக்கமான இரட்டை ஜடைப் பின்னலிடாது, தளரப் பின்னிய ஒற்றை ஜடையும் அதில் நிறைய மல்லிகைப் பூவும் வைத்துக் கொண்டு அந்த வானத்து தேவதையைப் போல இருந்தாள் அவனின் குட்டிமா!
அவள் படிக்கும் பள்ளியில் அடிக்கடி ஏதாவது ஒரு நிகழ்ச்சி, கிட்டத்தட்ட மாதம் தோறுமே நடக்கும் என்றார்கள்.
குழந்தைகள் தினம், அன்னையர் தினம் போல பொதுவானவை தவிர, தாத்தா பாட்டிகள் தினம், ஆயாக்கள் தினம் என்று ஏதாவது கொண்டாடி, அதை பள்ளியின் வெப் சைட் போட்டோ காலரியில், சோசியல் மீடியா பக்கங்களில் போட்டு, ப்ரமோட் பண்ணிக் கொண்டிருப்பார்கள்!
அது போல இன்றும் ஏதோ நிகழ்ச்சி போல என்றே நினைத்துக் கொண்டான்.
அவள் பக்கம் மீண்டும் முழுவதுமாக திரும்பி விட்ட, அவன் மனதை மீட்டெடுக்க தான் வழி தெரியவில்லை அவனுக்கு!
யுனிபார்ம் அணியாது இப்படி பட்டுப் பாவாடையில் வந்து அவனை சோதித்தவள், அதோடு விடாமல், கன்னங்கள் குழிய சிரித்து வேறு வைத்துவிட்டு, வேனின் கதவை திறந்து உள்ளே அமர்ந்தாள்.
கையில் வழக்கமான ஸ்கூல் பேக், லஞ்ச் பேகைத் தவிர இன்னொரு கவர்.
உட்கார்ந்தவுடன் அதைப் பிரித்து, அதில் இருந்த கேக்கை பின்னால் இருந்த மற்ற மாணவர்களுக்கு கொடுத்தாள்.
அவள் இப்படி அடிக்கடி ஏதாவது ஸ்நாக்ஸ் கொண்டு வந்து கொடுப்பாள் என்பதால், ரித்து பெரியதாக கண்டு கொள்ளவில்லை.
பின் அவனிடமும் ஒரு கேக்கை நீட்ட, அவள் மீது கொஞ்சம் கோபத்தில் இருந்தான் அவன்!
பின்னே! அவன் விடிய விடிய தயார் ஆக்கி வைத்திருந்த அவனது மனதை, இப்படி ஒரு சொடக்குப் போடும் நேரத்தில் கலைத்து விட்டவள் மீது கோபம் வர தானே செய்யும்! அய்யோ பாவம்!
அதனால் அவள் கேக்கை நீட்டிய போது. “ச்..ச்..” என்று உச்சுக் கொட்டி “வேண்டாம்” என்று சொல்லி விட்டான்!
அவள் முகம் கொஞ்சம் சுருங்கி விட்டது!
பின்னால் இருந்த ஒரு பெண், “அடேய். பக்கிங்களா, மானு கிட்ட கேக் வாங்கி சாப்பிடறீங்களே ஒருத்தராவது அவளை விஷ் பண்ணீங்களாடா?” என்று திட்ட,
பின்னால் இருந்த அனைவரும் கோரசாக ஹேப்பி பர்த்டே பாடினார்கள்!
இப்போது, ரித்துவிற்கு அதிர்ச்சியாகி விட்டது!
அய்யோ இன்னிக்கு குட்டிமாவிற்கு பிறந்த நாளா?
அது தெரியாமல் நான் வேறு முகத்தில் கோபம் காட்டி, கேக்கை வேண்டாம் என்று சொல்லிட்டேனே! அவன் மேலேயே அவனுக்கு இப்போது பயங்கர கோபம் வந்து விட்டது!
“உனக்கு இன்னிக்கு பர்த்டேவா?” என்று அவளிடம் திரும்பி கேட்டான்.
“சாரி.. டிரைவிங்கில் இருந்ததால, கேக் வேணாம்னு சொல்லிட்டேன்! மெனி மோர் ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆப் த டே!” என்றான் இப்போது சிரித்தபடி!
அவன் மெனி மோர் என்று ஆரம்பிக்கையிலேயே அவள் கை குலுக்குவான் என்று நினைத்து, கையை நீட்டி விட, அவனும் அவள் கையைப் பற்றி வாழ்த்து சொன்னான்!
அவளுக்கு அது சாதாரணமாக இருக்க, இவனுக்குள் தான் ஒரு சின்ன நிலநடுக்கம் ஏற்பட்டு மீண்டது!
“சரி. கேக்கைக் கொடு” என்று கையை நீட்டினான்.
அவள் பாக்ஸில் கேக் எடுக்க போக, அது காலியாகி இருந்தது.
அதைத் தான் அந்த குண்டன் சரத் இவர்கள் பேசிக் கொண்டிருந்த கேப்பில் எடுத்து தின்று விட்டானே!
“அய்யோ. தீர்ந்துடுச்சு” என்று அவள் தவிப்பாய் சொல்ல,
“பரவாயில்லை, ஈவனிங் எப்படியும் வீட்டில் கேக் வெட்டுவீங்க இல்ல, அதை நாளைக்கு எடுத்துட்டு வா”
“இல்லை எங்க வீட்டில் கேக் எல்லாம் வெட்டறது இல்ல! எந்த பங்க்சனும் இல்ல!” அவள் கொஞ்சம் சோகமாக சொன்னாள்.
“ஆமா அவங்க வீட்டில் அதெல்லாம் கிடையாது. யாரையும் கூப்பிட மாட்டாங்க! ஏன்னா.. அவங்க அம்மா கொஞ்சம் லூ.. “என்று மீண்டும் அந்த சரத் அதே கிண்டல் பண்ணப் போக, ரித்து திரும்பிப் பார்த்து அவனை ஒரு முறை முறைக்கவும் அடங்கி விட்டான்.
ரித்து அப்படி அவனை கோபமாக முறைத்துப் பார்த்தது மானுவிற்கு மிகவும் ஆறுதலாக இருந்தது!
பிடித்து இருந்தது. கொஞ்சம் முன்னால் அவன் கேக் எடுத்துக் கொள்ளாத வருத்தமும் மறைந்து முகத்தில் கொஞ்சம் சந்தோசம் வந்தது!
அதையும் கவனிக்க தான் செய்தான் ரித்து!
அவன் மனதிலும் கொஞ்சம் நிம்மதி!
பள்ளியில் இறக்கி விட்டு, பின் அவன் கல்லூரிக்கு தயாராகி சென்றான்.
அவனால் வகுப்பில் உட்காரவே முடியவில்லை!
மீண்டும் மீண்டும் அவளிடம் கடுப்பாக கேக் வேண்டாம் என்று சொல்லி, பிறந்த நாள் அதுவுமாக அவளை வருத்தம் அடைய செய்து விட்ட குற்றவுணர்வு அவனைத் தாக்கிக் கொண்டிருக்க பாதியில் வீடு திரும்பியே விட்டான்.
பின் மாலை, மீண்டும் ஸ்கூல் வேனில் எல்லோரையும் இறக்கி விட்ட பின், அவள் வீட்டுக்கு செல்லுமுன் மானுவிடம், ஒரு பெரிய மெகா சைஸ் டைரி மில்க் சில்க் சாக்லேட்டை நீட்டினான்!
“ஹேப்பி பர்த்டே!” என்று மீண்டும் சொல்லி!
அவள் கண்கள் ஆச்சர்யத்தால் விரிந்து, “தாங்க்ஸ்” என்றவள்,
“அய்யோ இது முழுசும் எனக்கா?” என்றாள்.
“ம்ம்.” என்றான் அவன் சிரித்தபடி.
“ஆனால் இவ்வளவையும் என்னால சாப்பிட முடியாதே! வீட்டுக்கும் எடுத்துட்டுப் போக முடியாது!” அவள் கவலைப் பட,
“நீ உனக்கு வேணும்கிறத சாப்பிட்டு விட்டு மீதியை எனக்கு கொடு” என்றான் ரித்து.
“ஓ. அப்ப ஓகே” என்றவள், “நான் பிட்டு தான் சாப்பிடறேன். ஓகே?” என்றாள்.
முதலில் ஒவ்வொரு சதுரமாக பிட்டு பிட்டு சாப்பிட்டவள், பின் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு சாப்பிட்டவள், கடித்து திங்க ஆரம்பித்து விட்டாள், தன்னை மறந்து!
அதை ரித்து கவனித்துக் கொண்டு தான் வண்டியோட்டிக் கொண்டிருந்தான்!
அவள் வீடு வந்தவுடன், மீதி சாக்லேட்டை வேனில் வைத்து விட்டு பை சொல்லி இறங்கி விட்டாள்.
காதலி பாதி தின்று தந்த ஐந்து ரூபாய் பஞ்சு மிட்டாயே லட்ச ரூபாய் என்று சொல்லப்பட்டிருக்கும் போது, சில நூறுகள் விலையுள்ள அந்த சாக்லேட் அவனைப் பொறுத்தவரை கோடி ரூபாய்!
கொண்டு போய் ரூமில் பிரிட்ஜில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டான், அவன் குட்டிமா எனும் தேவதை தந்த பிரசாதத்தை!
அடுத்து சில நாட்கள் சென்று, இதே போல அனைவருக்கும் ஒரு டப்பாவில் ஏதோ இனிப்பு கொண்டு வந்து கொடுத்தாள் வேன் பிள்ளைகளுக்கு!
இவனுக்கும் தனியே ஒரு சிறிய டப்பாவில் எடுத்து வந்து நீட்டினாள்.
“என்ன?” என்றான்.
“இன்னிக்கு எனக்கு ஸ்டார் பர்த்டே. அதான் அம்மா காலையிலேயே சீக்கிரம் எழுந்து எனக்குப் பிடிச்ச இந்த பாலக் கொழுக்கட்டை செஞ்சாங்க. சாப்பிடுங்க. சூப்பரா இருக்கும். ஹோட்டலில் எல்லாம் கிடைக்காது!” என்றாள் டப்பாவை அவனிடம் நீட்டி!
ஏற்கனவே அவள் பர்த்டே அன்று கோபப் பட்டதே அவனுக்கு இன்னும் கஷ்டமாக இருக்க, இன்று ஒன்றும் சொல்லாமல் வாங்கிக் கொண்டான்.
கூடவே அவனுக்குள் ஆச்சர்யமும் கூட!
போன வாரம் வெள்ளிக்கிழமை ஒரு அரசு விடுமுறை வந்திருக்க, மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரி லீவு விட்டிருந்ததாலும், அவன் அம்மா ஊருக்கு வருவதாக சொல்லியிருந்தாலும் அவன் வீட்டுக்கு சென்றிருந்தான்!
ஆனால், அவன் அம்மாவால் வர முடியவில்லை.
“சாரிடா தங்கம். அடுத்த வாரம் நான் அங்க வர முயற்சி பண்றேன். ப்ளீஸ்டா செல்லம், மம்மி உனக்காக தானே இப்படி ஓடிட்டு இருக்கேன்!”
“சரி விடும்மி” என்றவன், மதிய சாப்பாட்டுக்கு கீழே வந்த போதே கவனித்தான்.
அவன் வீட்டோடு இருக்கும் சமையல்கார ரமணி அம்மாள், பால் கொழுக்கட்டைக்கு மாவை உருட்டி வைத்துக் கொண்டிருந்ததை!
ரமணி அம்மாள், ரொம்ப சூப்பராக பால் கொழுக்கட்டை செய்வார்.
அதனால், அவன் பாட்டி , அடிக்கடி அவரை அதை செய்ய சொல்லுவார்.
வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும். அவனுக்கும் ரொம்ப பிடிக்கும்.
அவன் சிறு பிள்ளையாக இருந்த போது அவன் அம்மா அவனுக்கு தனியாக கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக எடுத்து வைப்பாள்.
பிறகு அம்மா, பிசினஸ் விசயமாக வெளியே அலைய தொடங்கிய பிறகு, அவன் பாட்டி உயிரோடு இருந்த வரை, அவனுக்கு ரூமுக்கு கொடுத்து அனுப்பி விடுவார்.
இப்போது அதுவும் இல்லை.
எல்லோரும் சாப்பிடும் நேரம் அவன் போனால், அவனுக்கும் கிடைக்கும். இல்லையென்றால், அவனுக்கு ரூமுக்கு கொடுத்து அனுப்புவதோ, இல்லை எடுத்து வைத்துக் கொடுப்பதோ யாரும் செய்ய மாட்டார்கள்!
நேற்றும் அதே தான் நடந்தது.
மாலை அனைவரும் அதை சாப்பிடும் போது அவன் வெளியில் சென்று இருந்தான்.
பிறகு அவன் இரவு பால்கனியில் உலாத்திய போது கீழே அவுட் ஹவுசில் ரமணியம்மாளின் பேரப்பிள்ளைகள் இருவரும் வாசலில் அமர்ந்து பால்கொழுக்கட்டை சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டவன், பேசாமல் அவர் வீட்டில் நாம் பிறந்து இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டான்.
ஆனால், இன்றோ அவன் ஆசைப்பட்ட அந்த பண்டம், இதோ அவன் குட்டிமா கொண்டு வந்து கொடுத்து இருக்கிறாள்!
வீட்டு நினைவிலிருந்து மீண்டவன் முன், இன்னமும் அந்த டப்பாவை நீட்டிக் கொண்டிருந்தாள், கன்னம் குழி விழ சிரித்தபடி!
அவனுக்கோ, அப்படியே அந்த முகத்தை இரு கைகளிலும் ஏந்தி அந்த குழி விழும் கன்னங்களில் முத்தமிட தோன்றியது!
கஷ்டப்பட்டு அதை அடக்கிக் கொண்டவன், “கொடு!” என்று சொல்லி வாங்கிக் கொண்டான்.
அது போல, அவனுக்கு தொண்டையில் கொஞ்சம் இன்பெக்ஷன் ஆகி பேச சிரமப்பட்ட போது, மானு அவள் அம்மாவிடம் சொல்லி, சுக்கு வெந்நீர் வைத்து கொண்டு வந்து கொடுத்தாள்.
அவனால் மறுக்க முடியவில்லை!
மற்றொரு நாள் சூப்! அவனுக்கு சளிப் பிடித்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது!
அவனுக்கு அம்மாவைத் தேடியது அவன் மனம் இப்போது அடிக்கடி.
முக்கியமாக இப்படி உடம்பு கொஞ்சம் சரியில்லாமல் போகும் போது.
ஆனால், ரித்து இப்போது பெரிய பிள்ளை ஆகி விட்டான், அவனே பார்த்துக் கொள்வான் என்ற நினைப்பில் அவன் அம்மாவோ, முன்பு போல அவன் பார்க்க வேண்டும் சொன்னவுடன் இருக்கும் வேலையை எல்லாம் போட்டு விட்டு வருவதில்லை!
மேலும் தொழிலில் இப்போது உச்சகட்ட முன்னேற்றம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்த அவரால், ஊர்ப் பக்கமே வர முடியவில்லை!
அதை விட யாரையும் அவ்வளவு சீக்கிரம் நம்பாத ஆள் என்பதால், தானே எல்லாவற்றிற்கும் போய் செய்துக் கொண்டிருந்தார்!
இங்கு, குட்டிமாவோ அவனை வேற்று ஆளாக நினைக்காமல் ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தாள் அவனுக்கு!
ஒரு நாள் அரை நேர பள்ளி முடிந்து, அவன் அவளை இறக்கி விட்ட போது, அவள் அப்பாவும் அப்போது வீட்டில் இருந்தார்!
அவருக்கு வேலைப் பார்த்துக் கொண்டே படிக்கும் அவன் மீது மிகுந்த மரியாதை இருந்தது!
எனவே வீட்டுக்குள் அழைத்தார்.
“வாங்க தம்பி! சாப்பிட்டுட்டு போகலாம்” என்று!
“இல்ல சார். நான் சாப்பிட லேட் ஆகும். பரவாயில்லை” என்றவனை,
“அப்ப மோராவது குடிச்சுட்டு போங்க!” என்று உள்ளே அழைத்து சென்றார்.
அவன் வீட்டுக்குள் வந்ததால் மானுவிற்கு மிகுந்த சந்தோசம்!
பொதுவாக, அவள் வீட்டுக்கு யார் வருவதையும் விரும்ப மாட்டாள்! ஆனால் இன்று ரித்து வந்தது அவளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது!
ஓடி சென்று அவள் அம்மாவிடம் மசாலா மோர் கலக்கும் படி சொன்னாள்.
கொஞ்ச நேரத்தில் மசாலா மோர் வந்தது!
பாமாவே கொண்டு வந்தார்.
“வாங்க தம்பி” என்றபடி!
அப்போது மானுவின் அப்பாவிற்கு போன் வர, “குடிங்க தம்பி!” என்று சொல்லி விட்டு அவர் வெளிப்பக்கமாக சென்று விட்டார்!
“மோர் குடிங்க தம்பி. நல்லா இருக்கும்! உங்களுக்காக கறிவேப்பிலை கொத்தமல்லி கொஞ்சமா அரைச்சுப் போட்டு, பெருங்காயம் எல்லாம் போட்டுக் கொண்டு வந்துருக்கேன்!
கறிவேப்பிலையை அப்படியே போட்டா கீழே துப்பிடுவாங்கன்னு நான் அரைச்சு தான் போட்டுடுவேன். கொஞ்சம் பச்சை மிளகாய் கூட போடுவேன் முன்னாடியெல்லாம்.
இப்போ அப்படி போட்டா, மானு அப்பா பச்ச மிளகாய் போடாதடி, சூடுன்னு சொல்லுவார்.
பஸ் ஓட்டுற அவருக்கு சூடு ஆகாது. அப்புறம் பாத்ரூம் போகும் போது கடுக்கும் என்பார்.
அதனால நான் போடுறது இல்லை! நீங்களும் வேன் ஓட்டுறீங்க தானே, அதான் உங்களுக்கும் பச்சை மிளகாய் எல்லாம் போடல! நல்லா இருக்கா?” பாமா வெள்ளந்தியாய் கேட்டார்.
“அம்மா…” மானு சங்கடத்தில் பல்லைக் கடிக்க,
ரித்துவிற்கு பாமாவின் அன்பு தான் கண்ணுக்குத் தெரிந்தது!
இப்படி கேர் எடுத்து அவனுக்கு செய்யவெல்லாம் அவனுக்கு யார் இருக்கிறார்கள் இப்போது?
அவன் அம்மா இருந்தாலும் இப்போது அவன் கூட இல்லையே!
அவனுக்கு கண்களே கலங்கி விடும் போல இருந்தது!
அதற்குள் போன் பேசி முடித்து விட்டு வந்த மணி, கொஞ்சம் கண்கள் கலங்க உட்கார்ந்திருந்த ரித்துவைப் பார்த்து, “காரமா இருக்கா? பாமா மிளகாய் போட்டுட்டியா?” என்றார்.
“இல்லைங்க” என்று சொன்ன பாமா, எங்கே மீண்டும் “விளக்கம்” கொடுத்து அவரையும் நெளிய வைத்து விடுவாரோ என்று நினைத்த ரித்து,
“இல்ல சார். ரொம்ப நல்லா இருக்கு! தேங்க்ஸ் ஆண்ட்டி” என்றான்.
மானுவிற்கும் அவன் அப்படி முந்திக் கொண்டு அப்பாவின் சங்கடத்தைப் போக்கியதற்கு சந்தோசம்!
கிளம்பும் போது கையில் ஒரு டப்பாவுடன் வந்தார் பாமா.
“தம்பி, இந்தாங்க. அசோகா அல்வா. வீட்டில் கொஞ்சம் அதிகமா பாசிப் பருப்பு வாங்கிட்டோம். பழசாய் போய் வண்டு வந்திடும்னு அசோகா பண்ணிட்டேன். நீங்களும் சாப்பிடுங்க!” என்று சொல்லி கையில் கொடுத்தார்.
அவனுக்கு பேசாமல், குட்டிமாவைக் கல்யாணம் செய்துக் கொண்டு வீட்டோடு மாப்பிள்ளை ஆகி விடலாம் போல, அவர்களோடு அந்த சிறிய பறவைக் கூடு போன்ற குடும்பத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு விட ஆசை வந்தது!
ஆனால் அவன் அம்மா?
அவனுக்காகவே வாழ்ந்துக் கொண்டிருக்கும் அவர்? அவரை எப்படி பிரிவான்?
ஆனால் அம்மாவோ அந்த குடும்பத்தை விட்டு வர மாட்டார்!
மானுவை அந்த வீட்டுக்குக் கூட்டிப் போவதை விட, அவளை தானே ஒரு பாழுங்கிணத்தில் தள்ளி விட்டு விடலாம்!
இப்படி முன்னும் பின்னும் அவன் யோசித்துக் கொண்டே இருக்க, நாட்கள் வேகமாக சென்றன.
மானுவிற்கு எக்ஸாம் முடிந்து ரிசல்ட் வந்து அவள் அவன் படிக்கும் அதே கல்லூரியில் பிஎஸ்சி சேர்ந்தாள்.
அவன் அம்மா ஊருக்கு வந்தவர், ஒரு வழியாக ரித்துவின் பிடிவாதத்திற்கு இறங்கி வந்து, அவரே பல பாதுகாப்பு விசயங்களை அலசி ஆராய்ந்து அவனுக்கு ஒரு பைக் வாங்கியே கொடுத்து விட்டார், பல கண்டிசன்களோடு!
பைக்கிலேயே ஊருக்கு எல்லாம் வந்து விடக் கூடாது. லோக்கலில் மட்டும் தான் ஓட்ட வேண்டும் என்று இது மாதிரி பல கண்டிசன்கள்!
முக்கியமாக அந்த வேன் ஓட்டும் வேலையை விட்டு விட வேண்டும் என்பது முக்கிய கண்டிசன்!
எல்லாவற்றிற்கும் தலையை ஆட்டி விட்டு, சந்தோசமாக பைக் வாங்கிக் கொண்டான் ரித்து.
அதற்கு தானே அவன் வேலைக்கு போவதாக ஸ்டன்ட் அடித்ததே!
அதில் அவனுக்கு இரட்டை பலன்கள்!
ஒன்று குட்டிமா, இன்னொன்று பைக்!
அவன் சந்தோசமாக கல்லூரி சென்றான்.
இப்போது அவன் பிஜி பைனல் இயர்!
கல்லூரியில் அவன் கண்டது, குட்டிமா மற்றும் சில புதிய மாணவிகளை சில சீனியர் மாணவர்களும் மாணவிகளும் ராகிங் செய்து கொண்டிருப்பதை!
குட்டிமா, இதே காலேஜில் சேர்ந்து விட்டாளா?
அவனுக்குள் மகிழ்ச்சியும், அவளை மற்ற மாணவர்கள் ராகிங் செய்து கொண்டிருப்பது கோபத்தையும் கொடுத்தது!
வேகமாக அவர்கள் இருக்கும் இடம் போனான்!
error: Content is protected !!