Skip to content
Post Views: 2,681
வேளை 17(1)
லாலாவின் கேள்வியில் அவனை முறைத்தாள் உதயா. கண்கள் லேசாக கலங்கி, குரலில் அந்த கலக்கம் தெரிய லாலா பயந்தான்.
“சத்தியமா நான் எங்கம்மா கிட்ட எதுவும் சொல்லல உதயா. முதல்ல அம்மா என்ன சொன்னாங்க சொல்லு” என்று படபடத்தான்.
Advertisement
உதயா சித்ராவின் புலம்பலை, குறைகள் கொட்டிய படலத்தை சொல்ல லாலாவுக்கு அதுவரை வாழ்க்கையில் கடினமாக தெரிந்த போட்டித் தேர்வுகளே பரவாயில்லை என்றானது.
Advertisement
போட்டித் தேர்வுகளோடு போட்டியிடும் அளவு இருந்தது மாமியார் மருமகள் சண்டை. அந்த தேர்வுகளில் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் லட்சக்கணக்கான பேர் கலந்துகொள்வார்கள்.
Advertisement
ஆனாலும் தன் மேல் உள்ள நம்பிக்கையில் இன்றுவரை விடாது துரத்தும் விக்ரமாதித்யனாக, கலங்காத கஜினி முகமதாக எழுதிக்கொண்டிருக்கிறான்.
Advertisement
அப்படிப்பட்டவனுக்கு அம்மாவையும் உதயாவையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது யு.பி.எஸ்.சி’யையும் டி.என்.பி.எஸ்.சி’யையும் ஒன்றாக படிப்பது போல குழப்பமாக, தெளிவில்லாததாக இருந்தது.
இப்போதுதான் நடக்கத் தெரிந்த குழந்தை போல தட்டுத்தடுமாறினான். எல்லா தேர்வுக்கும் ஒரு முந்தைய ஆண்டின் வினாத்தாள் இருக்குமே, அதை பயிற்சி செய்தால் தேர்வைப் பற்றி ஒரு அனுமானம் கிட்டும்.
தன் தாத்தா, அப்பா எல்லாம் எப்படி சமாளித்தார்கள் என்று யோசித்தாலும் ஒன்றும் புரிபடவில்லை.
‘ஹவ் டூ ரன் யுவர் ஃபேமிலி லைஃப்’ னு காலேஜ்ல ஒரு கம்பள்சரி பேப்பர் வைக்கணும்’ என்று மனத்துக்குள் மனு கொடுத்தான் லாலா.
அவன் தனக்குள் ஒரு மினி ஆராய்ச்சியே நடத்திக்கொண்டிருக்க, கிட்டத்தட்ட இரண்டு மூன்று நிமிடங்களாக அவனிடமிருந்து பதில் இல்லை என்றதும் உதயா கடுப்பானாள்.
அவன் கையில் கிள்ள,
“அம்மா” என்று கத்த,
“கத்தாதீங்க” என்று மீண்டும் கோபத்தில் கிள்ளினாள்.
“என்னடி இது அநியாயம் பண்ற? கிள்ளுனா வலிக்காதா?” என்றவன் தன் கையைத் தேய்த்துக் கொள்ள,
“நீங்க கத்துவீங்க, உங்கம்மா என் புள்ளையை அடிக்கிறா, எங்காச்சும் இப்படி நடக்குமா? வேலைக்குப் போற திமிரு, அப்படி இப்படினு பேசுவாங்க” என்று சித்ரா சொல்வதை அப்படியே சொல்ல,
“அடி கள்ளி! மிமிக்ரி வரும்னு சொன்னதே இல்ல” என்று உதயாவின் கன்னத்தை லாலா செல்லமாக கிள்ள, அவ்வளவு நேரமிருந்த இறுக்கம் மெல்ல இளகிய உணர்வு.
“இது மிமிக்ரியா?” என்று கடுப்போடு கேட்டாலும் உதயா லாலாவிடம் தன் உணர்வுகளை கொட்டியதில் கொஞ்சம் இளகியிருந்தாள்.
இதற்காகத்தான் அவளுக்கு லாலாவைப் பிடித்தது. அவனது இயல்பான குறும்புப் பேச்சு. அடுத்தவர் என்ன நினைப்பார்கள் என்று யோசித்து எல்லாம் அவனுக்குப் பேசத் தெரியாது.
அவனது உலகம் மிகவும் சிறியது, அவன் குடும்பம், செண்டர், பரீட்சைகள், வினாத்தாள்கள், தேர்வு முடிவுகள், இதில் கொஞ்சமாய் காதலும் உதயாவும் கலந்துள்ளனர்.
உதயாவுக்கு லாலா என்ற எதார்த்த மனிதனை அத்தனை பிடிக்கும், அரிதாரமற்ற கவர வேண்டும் என்ற எண்ணமில்லாத ஒருவனை இக்காலத்தில் காண்பது அரிதல்லவா? அதே நேரம் அவன் தன் பிரச்சனைகளைப் பெரிதுப்படுத்துவதும் அதிலே உழலுவது உதயாவுக்குப் பிடிக்காது.
இருந்தாலும் மனிதர்கள் அப்படித்தானே??
உதயா முகத்தில் கொஞ்சமாக புன்னகை எட்டிப்பார்க்கவும் லாலா மென்மையான குரலில்,
“நிஜமா எங்கம்மாகிட்ட உன்னைப் பத்தி எதுவுமே நான் சொல்லல” என்றவன்
“நான் சாமான் வெளக்குறது, வேலை செய்றது எல்லாம் வேற யார்கிட்ட நீ சொன்ன?” என்று துப்பறிவாளனாக கேள்வி கேட்க, உதயா உடனே,
“நானும் சரோவும் ஈவினிங் பேசிட்டு இருந்தோம்” என்றாள்.
“யுரேகா! ஸோ சிம்பிள்! அதை எங்கம்மா கேட்டிருப்பாங்க”
உதயா ஒரு மாதிரியாக பார்க்க,
“ஹேய் ஒட்டு கேட்டிருக்க மாட்டாங்க, என் தங்கச்சி சவுண்ட் சரோஜினி பேசினா கேட்காத காதே பிச்சிக்கும். எங்கம்மாவுக்குக் கேட்டது ஆச்சரியமில்லை” என்றான் பெருமையாக.
“லாலா!”
“நானே! அது நானே! என்ன வேணும் உனக்கு?” என்று அவன் ராகமிழுக்க,
“ஒன்னும் வேண்டாம். சரோவும் அவங்கத்தையும் எப்படி கேசுவலா பேசிக்கிட்டாங்க தெரியுமா? உங்கம்மா கிட்ட என்னால எப்பவும் அப்படி பேச முடியாது போல, ஒவ்வொரு வார்த்தையும் யோசிச்சு யோசிச்சு என்ன நினைப்பாங்கனு பேசுறதே பெரிய ஸ்ட்ரெஸா இருக்கு”
“அப்போ பேசாத. நான் கோ ஆப்ரேஷன், பாய்கட்” என்று அவன் சுதந்திர விலாசத்துக்காரனாக சொல்ல,
“வேற வினையே வேண்டாம். படிச்ச திமிரு, வேலைக்குப் போற கொழுப்பு. அதான் பேசக்கூட மாட்டேங்கிறானு சொல்வாங்க” என்று உதயா சொல்ல, லாலாவுக்கு நிச்சயம் என்ன சொல்வது, செய்வது என்று தெரியவில்லை.
நாட்டுப் பிரச்சனை பெரிதா வீட்டுப் பிரச்சனை பெரிதா என்று அப்போது அவனிடம் யாராவது கேட்டிருந்தால் கண்ணை மூடிக்கொண்டு வீட்டுப்பிரச்சனை என்றிருப்பான்.
இந்த களேபரத்திலும் கடுகளவு ஒரு ஆறுதல். ‘நல்ல வேளை மாசத்துல இரண்டு நாள் வரோம். இங்கயே இருந்திருந்தா நான் காலி நான் காலி. லாலாவுக்கு லாலி லாலிதான்’ என்று மனத்தில் அவனே சொல்லிக்கொண்டான்.
“எங்கம்மாவுக்கு வயசாகுதுல உதயா, மெனொபாஸ்லாம் இருக்கும்ல. ரெண்டு நாள்தானே கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. நான் பேசினா இன்னும் கோவப்படுவாங்க” என்றான்.
உதயாவும் லாலாவுக்காக பொறுத்துப் போக நினைத்தாலும் அந்த பொறுமையெல்லாம் சித்ராவை எதிர்கொள்ளும் வரையே. அநாவசியமாக யாரிடமும் வம்புக்குச் செல்லாத பெண். புறம் பேச மாட்டாள். அளவான நட்பு. அப்படியிருப்பவளுக்கு சித்ராவை கணிக்கவே முடியவில்லை.
மோசமான மாமியார் என்றும் சொல்ல முடியாது, பாசமான மாமியார் என்றும் சொல்ல முடியாது.
நியாயமாக பேசி சண்டையிட்டால் கூட பரவாயில்லை என்று வாதங்களை வைப்பாள். ஆனால் நியாயமற்ற, விதாண்டவாதங்களை வைப்பவரிடம் என்ன சொல்லுவாள்?
அம்மாவிடம் இதனை பகிர்ந்து அவரைக் கஷ்டப்படுத்த முடியாது. அவள் தேர்ந்தெடுத்த வாழ்க்கை. உதயாவுக்கு அப்போதைக்கு சித்ராவை சமாளிக்க முடிந்தது, இருந்தும் இப்படியே வாழ்நாள் முழுக்க வம்பு சண்டையும் வாய்ப்பேச்சுமாக இருந்திடுமோ என்ற அச்சம் அவளை உறங்க விடவில்லை.
“எனக்கும் புரியுது லாலா, நானும் ட்ரை பண்றேன். ரீசனே இல்லாம சண்டை போடுறாங்க, அவங்களுக்கு நீ வேலை செஞ்சு கொடுக்கலனு சொல்றாங்க, அதுக்குக் காரணம் அவங்கதானே? உன்னைத் திட்டலாம், என்னை ஏன் திட்டணும்?”
“நீயும் நானும் ஒன்னு இல்லையா?” என்று லாலா காதல் வசனம் பேச
“உனக்கு உங்கம்மாவே பரவாயில்லடா” என்று கடுப்பாக அவள் படுத்துவிட,
“ஹேய் உதயா! விடுடி” என்று சொல்லி அவளை அணைத்துக்கொண்டான்.
உதயாவுக்கும் அதையே பேசி எரிச்சலாக சரோவோடு சந்தோஷமாக ஊரைச் சுற்றியதைப் பற்றி பேசினாள்.
“உங்க ஊர்ல தமிழ்லதான் பேசுறாங்க லாலா. ஆனா எனக்குப் புரியல தெரியுமா?” உதயா வியப்பாக சொல்ல, லாலா என்னவென்று கேட்டான்.
“சும்மா இருக்கியான்னு அவங்க கேட்டாங்க” என்று வனஜா பேசியதை சொல்ல,
“நார்மலா சும்மா இருக்கியான்னா என்ன வர்க் இல்லையா அப்படித்தானே? அவங்க என்னடான்னா நான் ப்ரக்னண்டா இல்லையானு கேட்டாங்க. சரோ சொல்லித்தான் எனக்குப் புரிஞ்சது” என்றாள் உதயா.
ப்ரக்னெண்ட் என்ற வார்த்தையில் லாலாவுக்குப் ப்ரேக் அடித்தது.
அதனை காட்டிக்கொள்ளாமல் இருக்க சிறிது நேரத்தில் இருவரும் உறங்கினார்கள்.
சக்திவேலிடம் அவன் மனைவி சரோஜினி வனஜாவை வறுத்தெடுத்தாள்.
“என்ன கொழுப்பு இருக்கணும் அந்த வனஜாத்தைக்கு? சும்மா இருக்கியான்னு அண்ணியைக் கேட்குது. நல்ல வேளை அத்தை நல்லா கொடுத்து அனுப்பியிருக்காங்க” என்று பொங்கி கொண்டு இருந்தாள்.
“மாமியாரும் மருமகளும் சேர்ந்து வனஜா சித்தியை வறுத்தெடுத்துட்டீங்களே? அப்புறம் ஏன் டி அதையே பேசற?” சக்தி சிரிப்போடு கேட்டான்.
சரோஜினி அப்படித்தான் கொஞ்சம் நேரம் வாய் விட்டு புலம்பினால்தான் அவளது ஆதங்கம் தீரும்.
“ஆனாலும் ஒன்னுடி, எப்படி மாமியாரும் மருமகளும் ஒன்னா ஒரே வீட்ல இருக்க போறீங்கனு நானும் எங்கப்பாவும் நிறைய பயந்தோம், பார்த்தா ஊருதான் உங்க ரெண்டு பேருக்கும் பயப்படணும்” என்று சிரித்தவன் பின் மென்மையான குரலில்,
“சரோ! எங்கம்மாவுக்கும் உனக்கும் எப்படி செட் ஆகும்னு நான் நிறைய நாள் பயந்துருக்கேன் தெரியுமா? இன்னிக்கு நானும் லாலாவும் கூட அதான் பேசிட்டு இருந்தோம்” என்றான் சக்திவேல்.
சரோஜினி ‘அப்படியா?’ என்று பார்க்க, சக்தி அவர்களின் உரையாடலைப் பகிர்ந்தான்.
error: Content is protected !!