Skip to content
Post Views: 7,314
அத்தியாயம் 6
இன்று கலைச்செல்வியை முறைப்படி பேசி முடிக்க மாப்பிள்ளை வீட்டார் உறவுகளோடு வந்திருக்கிறார்கள், பெற்றோரையும் அக்காவையும் பொறுத்தவரை இது நல்லவிசயம், ஆனால் பொன்மணியால் இயல்பாக இருக்கவே முடியவில்லை.
திருனேஷ்வரனின் பெற்றோரிடம் உண்மையை உரைத்தபின்னே அவர்களின் அதிர்ச்சி, வாக்குவாதம், பின்னே சமாதானம் செய்தது என உண்மையை சொல்லியும், பணம் கொடுக்க விழைந்ததை மறைத்தும் பொன்மணியிடம் விளக்கியிருந்தான் சத்யப்ரகாஷ்.
Advertisement
தவறிழைத்த தன்னையும், பொய் சொன்ன உன்னையும் மட்டும் திட்டவில்லை, இருவரின் குடும்பத்தினரையும் சேர்த்தே திட்டினார்கள், சாபம் விட்டார்கள் என்றிருந்தான் சத்யப்ரகாஷ்.
இதெல்லாம் பொன்மணி எதிர்பார்த்ததுதான். ஆனால் இவளுக்கு தேவையானது அவர்கள் திருனேஷ்வரனை நினைத்து வருந்தினார்களா? மகன் குற்றவாளியல்ல என்று நிம்மதிகொண்டார்களா என்பதுதான்.
திருனேஷ்வரன் குறித்து வருந்தினார்கள் என்று சொன்னான் சத்யப்ரகாஷ். ஆனால் அது பொன்மணி கேட்டபின்தான் சொன்னான் ஆகையால் தங்கள் மேல் இருக்கும் ஆத்திரத்தில் இன்னும் மகனை யோசிக்கவில்லை என்று வருந்திக்கொண்டிருந்தாள் பொன்மணி.
Advertisement
“பொன்மணி” என மகளை அழைத்தபடி அறைக்குள் வந்த அஞ்சுகம், “அக்கா கூட இருக்கிறதை விட்டுட்டு இங்க என்ன தனியா நின்னுட்டிருக்க? வா” என்று மகளை வெளியே அழைத்து வந்தார்.
Advertisement
முன்பு கலைச்செல்வியை பார்க்க வரும்போது பொன்மணி வீட்டில் இல்லை ஆதலால் தற்போதுதான் முதல்முறையாக பொன்மணியை பார்க்கிறார்கள் மாப்பிள்ளை குடும்பம்.
பொன்மணி அக்காவை விட நிறம் சற்று குறைவுதான், ஆனால் பொன்மணியின் அகன்ற பெரிய கண்களும், முக லட்சணமும், செதுக்கி வைத்தார் போன்ற உடல்வாகும் அனைவரையும் கவர்ந்திழுத்தது.
அக்காள் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தபோதும் நினைவுகள் திருனேஷ்வரனிடம் இருக்க, வந்திருந்தவர்கள் பழையதை நினைத்து வருந்துகிறாள் போல என அவர்களாக நினைத்துக்கொண்டு, “ம்… நடக்கக்கூடாதது நடந்துடுச்சுதான், அதுக்காக அதையே இன்னமும் நினைச்சிட்டிருக்கக்கூடாது கண்ணு, உனக்கு வாழ்க்கை கொடுக்கவும் எங்கையாவது ஒரு புண்ணியவான் கிடைப்பான்” என்றார் பெரிய மனதுபோல.
Advertisement
இதுதான் நல்ல குடும்பமா? என்பதாய் பொன்மணி தந்தையைப் பார்க்க, “என் சின்னப்பொண்ணைப் பத்தி பேச வேண்டாம்ங்க, பெரிய பொண்ணுக்கு என்ன பேசனுமோ அதைப் பார்ப்போம்” என்றார் அசோகன்.
பேசியது மதியரசனின் தாய்மாமன் மனைவி ஆதலால் மதியரசனின் அன்னைக்கு கோபம் வர, “உங்க சின்னப்பொண்ணைப் பத்தி எங்கண்ணி தப்பா என்னங்க சொன்னாங்க? நல்ல மாப்பிள்ளை அமையனும்னுதானே சொன்னாங்க? அதுக்கு இப்படி கத்தரிச்சாப்பில பேசுறது சரிங்களா?” என்றார்.
“நடக்கக்கூடாதது நடந்திடுச்சுனு எங்களுக்கு தெரியாதுங்களா? பழசை பேசக்கூடாதுனு முன்னாடியே சொல்லியிருந்தோம்தான? அவங்க எதுக்கு பேசுறாங்க?” என்றார் அசோகன்.
ஐந்து வருடம் கழித்து மகள் தற்போது நான்கு நாள்களாகத்தான் தனது வீட்டில் இருக்கிறாள். இவர்கள் பேசுவது தொடர்ந்தால் பெரியமகள் திருமணத்தில் கூட பொன்மணி கலந்துகொள்ள மாட்டாளோ என்ற கவலை அசோகனுக்கு.
மாப்பிள்ளை வீட்டின் உறவுகள் பேசுவது பிடிக்கவில்லை என்றபோதும், கணவன் பேசிக்கொண்டிருக்க தானும் பேச வேண்டாம் என்று அமைதிகாத்திருந்தார் அஞ்சுகம்.
பொன்மணி முகத்திலிருந்த வெறுப்பு மதியரசனின் அன்னைக்கு அவமதிப்பதாக தோன்ற, “மூக்கும் முழியுமா இருந்தா போதாது, பெரிய படிப்பு படிச்சி சம்பாதிச்சிட்டா போதாது.
பெரியவங்க முன்னாடி எப்படி நடந்துக்கனும்னு தெரியனும். இவ்வளவு அகம்பாவம் குடும்பத்துக்கு ஆகாது” என்று தனது உறவினரிடத்தில் பேசுவதுபோல் பேசினாலும் அனைவருக்கும் கேட்கும்படி சத்தமாகவே சொன்னார் நொடிப்போடு.
“யாருக்குங்க அகம்பாவம்? யாரை சொல்றிங்க?” என முறைப்போடே கேட்டார் அசோகன்.
“எங்களுக்குள்ள பேசிக்கிறோம்ங்க”
“ஓ… உங்க குடும்பத்துல உள்ளவங்களைப் பத்தி பேசுறிங்களா?” என்றார் தானும் அமர்த்தலாக.
இந்த குடும்பத்தில் தனது பெண் வாழவேண்டாம் என்று அசோகன் முடிவு செய்துவிட்டார். அஞ்சுகத்திற்கும் அப்படித்தான் தோன்றியது. ஆனால் பெரிய மகளின் கலவர முகம் அஞ்சுகத்தை சற்று நிதானிக்கச் செய்ததால் அமைதியாக இருந்தார்.
அசோகன் பேசியதில் மதியரசனின் அத்தைக்கு கோபம் வர, “அவன் உங்க பொண்ணை கற்பழிக்க முயற்சி செய்தான்னா? இல்ல உங்க பொண்ணு அவனை மடக்க பார்த்தாளானு இப்போதான் சந்தேகமா இருக்கு” என்றதும் பதறினார் மதியரசனின் அன்னை.
பின்னே, கலைச்செல்வி நல்ல நிறம், அழகு மட்டுமல்ல. வங்கியில் வேலை செய்கிறாள் அல்லவா? அசோகனுக்கு பெரிய சொத்துகள் இல்லையென்றபோதும் இருக்கும் வீடு பிற்காலத்தில் இரு பெண்களுக்குத்தானே… அதோடு வருமானத்திற்கு மகள்களை எதிர்பார்க்கும் நிலையில் இல்லை அசோகன்.
சின்னவளும் தனியார் வேலை என்றாலும் லட்சத்தில் சம்பாதிக்கிறாள், மற்றவர் வருமானத்தை எதிர் பார்க்கும் நிலையில் யாரும் இல்லை.
எனவே மருமகள் சம்பாதனை மொத்தமும் தனது குடும்பத்திற்குத்தான் என்பதோடு, சின்னவளின் நிலையை சொல்லியே இவளை அடக்கி வைக்கலாம் என்ற எண்ணமும் இருக்க, “ச்ச… ச்ச… அப்படிலாம் இருக்காது அண்ணி” என்று பிரச்சனையை முடிக்கப் பார்த்தார்.
அசோகன், “உங்க குடும்பத்துக்கு பொண்ணு கொடுக்க எனக்கு விருப்பமில்லைங்க” என்று வந்தவர்களிடம் சொல்லி, “கலைம்மா, இரண்டுபேரும் உள்ள போங்க” என்றார் மகள்களிடம்.
மதியரசனின் அன்னை “ஏங்க இப்படி பட்டுனு சொன்னா எப்படி? உங்க பொண்ணு பார்வை மரியாதையா இல்லாததுனாலதான நான் ஒன்னு சொல்ல, நீங்க ஒன்னு சொல்லனு பேச்சு வளர்ந்துச்சு, சின்ன விசயத்துக்காக பெரிய விசயத்தை ஒதுக்கலாமா?” என்றார் பொறுமையாக.
“என் சின்னப்பொண்ணு விசயம் உங்களுக்கு தேவையில்லாததுங்க, என் சின்னப்பொண்ணைப் பத்தி பேசக்கூடாதுனு முதல் முறை உங்களைப் பார்த்து பேசினப்பவே சொல்லியிருந்தேன், நீங்களும் சம்மதிச்சிங்க. நீங்க சம்மதிக்கவும்தான் இந்த கல்யாணத்துக்கு நாங்க சம்மதிச்சோம்.
எல்லாத்தையும் மறந்து என் பொண்ணை பேச உங்களுக்கு என்ன உரிமையிருக்கு? உங்க வீட்டுல என் பெரிய பொண்ணை கட்டிக்கொடுத்துட்டு காலம்வரைக்கும் என் சின்னப்பொண்ணைப் பத்தி பேசாதிங்கனு சண்டைப்போட எனக்கு விருப்பமில்லைங்க. அகம்பாவம் இல்லாத குடும்பமா பார்த்து உங்க பையனுக்கு பொண்ணெடுத்துக்கோங்க” என்றார் முடிவாக.
மதியரசன் எழுந்து வெளியேறிட, அச்சோ… ஆறு மாசமா பொண்ணு பார்த்ததுல இந்த புள்ளையைத்தான பிடிச்சிருக்குனு சொன்னான், இனி எந்த பொண்ணை காட்டினாலும் சம்மதிக்கமாட்டானே என்ற பதட்டத்தோடு பின்னோடே சென்ற அன்னை “இருடா பேசி முடிச்சிடலாம்” என்றார் கெஞ்சலாக.
“கலைச்செல்வியை பிடிச்சிருக்குனு சொன்னேன், அதை ஒழுங்காக பேசி முடிக்க முடியல உங்களால, இனி என் கல்யாணம் என் விருப்பம். நான் கிளம்பறேன்” என்று பைக்கில் பறந்திருந்தான்.
பிறகு அனைவரும் கிளம்ப, கலைச்செல்வியின் முகம் வாடியிருந்தது.
தன்னைப் பேசியதற்கு வருந்தாமல் பிடித்த வரன் அமையவில்லையே என்ற வருத்தமே அக்காவிற்கு அதிகம் என்றுணர்ந்த பொன்மணிக்கு மனம் கசந்தது.
ஆனாலும் அவளின் வருத்தத்தை போக்க எண்ணி, “அவங்கம்மா அத்தனை பேசுறாங்க, இவர் அமைதியா உக்கார்ந்திட்டிருக்கார். யார் பக்கம் தப்பிருக்கோ அதை தைரியமா எடுத்து சொல்றவன்தான் உன்னையும் புரிஞ்சி நடந்துப்பான். இந்தாளு உனக்கு வேணாம்க்கா” என்றாள் பொறுமையாக.
புகைப்படத்தில் பார்த்த உடனே மதியரசனைப் பிடித்துவிட்டது கலைச்செல்விக்கு. புகைப்படத்தில் பார்த்ததை விட நேரில் பார்த்த சில நொடிகளிலேயே இவன்தான் தனது கணவன் என்றே மனதில் பதித்துவிட்டாள்.
இருபது நாள்களுக்கு மேலாக இவனின் முகத்தை நினைத்திருந்தவளுக்கு தற்போது அவன் தனக்கில்லை என்பதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.
மதியரசனின் தோற்றம் கலைச்செல்வியை முழுதாய் கவர்ந்திருக்க, தங்கை சொல்லும் நிதர்சனமான உண்மையை மனம் ஏற்க மறுத்தது.
“நான் டிரஸ் சேன்ஜ் பண்ணனும்” என்று அறைக்குள் சென்றிருந்தாள்.
பெரிய மகளின் முகவாட்டத்திலேயே அவளின் விருப்பமறிந்திருந்தார் தந்தை. அப்படி என்ன விருப்பம் வரும்? இன்று அனைவர் முன்னிலையிலும் இப்படி பேசியவர்கள் திருமணத்திற்கு பின்னே என்னென்ன பேசுவார்கள் என்ற கோபம் வரவில்லையே மகளுக்கு என்ற ஆற்றாமையோடு அமர்ந்திருந்தார் அசோகன்.
“நல்ல வரன்னு பார்த்தோம், இப்படி பேசுவாங்கனு யார் கண்டா? எனக்கும் வருத்தமாத்தான் இருக்கு. விடுங்க… கல்யாணத்துக்கு முன்னாடியே இவங்களைப் பத்தி தெரிய வந்ததேனு சந்தோசப்பட்டுக்கலாம்” என தன்னையும் தேற்றிக்கொண்டு கணவனையும் தேற்றினார் அஞ்சுகம்.
சின்ன மகளின் மனமறிந்து “என்ன வருத்தமா இருக்கு? இவன் இல்லைனா மாப்பிள்ளையே இல்லையா?” கடிந்தார் மனைவியை.
அசோகனுக்கு அழைப்பு வர, அழைப்பை ஏற்றவர் முகம் அதிர்ச்சியோடு பல பாவனையை காண்பிக்கவே, “ஏங்க… யார் போன்ல?” என வினவினார் அஞ்சுகம்.
ஏதும் சொல்லாமல் எதிர்புறமிருந்து சொன்னவைகளை கேட்டு முடித்து இணைப்பை துண்டித்து சின்ன மகளைப் பார்த்தார் கலவரமாக.
திருனேஷ்வரன் வீட்டிற்கு அருகில் வசிக்கும் தந்தையின் நண்பனிடமிருந்து அழைப்பு வந்தபோதே பார்த்திருந்தாள் பொன்மணி.
சத்யப்ரகாஷ் பேசியது வெளியே கசிந்திருக்கும் என்று சரியாக கணித்து, “என்னாச்சுப்பா?” என்றாள் பதட்டமில்லாமல்.
“அந்த க்ரிமினல் இத்தனை வருசத்துக்கப்புறம் திருனேஷ்வரன் வீட்டுக்கு போய் உண்மையை பேசியிருக்கான்ம்மா”
“அதுக்கேன்ப்பா நீங்க பதறுறிங்க?”
அஞ்சுகம் “என்ன பொன்மணி இப்படி கேட்குற? அவன் உண்மையை சொன்னா நாம பொய் சொன்னது வெளில வந்திடுமே, அதை மட்டும் சொன்னானா? இல்ல பணம் கொடுத்தது, கற்பழிச்சதுனு எல்லாமும் சொன்னானானு தெரியலையே…
இப்போ வரைக்கும் முயற்சி செய்தானுதானே எல்லாருக்கும் தெரியும். அதுக்கே இன்னைக்கு வரைக்கும் ஒருமாதிரி பேசுறாங்க, அந்த சத்யப்ரகாஷ் உன்னை கெடுத்தது தெரிய வந்தா மானமே போய்டுமே” என்றார் கலக்கமாக.
“இப்போ மட்டும் என்ன போகாம இருக்கு? விடுங்கம்மா, நடக்குறது நடக்கட்டும், தன் மகன் குற்றவாளி இல்லைன்ற நிம்மதி அஞ்சு வருசத்துக்கு அப்புறமாவது அவரை பெத்தவங்களுக்கு கிடைக்கட்டும்” என்றாள் இலகுவாக.
இத்தனை பெரிய விசயத்தை அசால்ட்டாக நினைக்கும் மகளை ஆழ்ந்து பார்த்திருந்து, “என்னடா பண்ணி வச்சிருக்க?” என்றார் அசோகன்.
“ம்… அவனைப் பார்த்து பேசினேன்ப்பா, திருனேஷ்வரன் வீட்டுல உண்மையை ஒத்துக்கனும்னு மிரட்டினேன், எத்தனை செய்தாலும் திருனேஷ்வரனோட அஞ்சு வருச நரக வாழ்க்கையை யாராலும் திருப்பிக்கொடுக்க முடியாது. ஆனா இப்போ மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு” என்றாள்.
“நீ மிரட்டி அவன் பயந்தானா? அப்படி என்ன சொல்லி மிரட்டின?” எனப்பதறினார் அன்னை.
“எனக்கு ஒரு குழந்தை இருக்கிறதா சொல்லி மிரட்டினேன்ம்மா” என்றதும்,
“யானையோட எறும்பு மல்லுகட்ட முடியுமா? என்கிட்ட கூட சொல்லாம இவ்வளோ பெரிய விசயத்தை செய்வியா? பதிலுக்கு அவன் ஆரம்பிச்சா நம்மளால தாங்க முடியுமா? அப்போவே அத்தனை மிரட்டியவன், இப்போ ஆள்பலம் பணபலம்னு எல்லாமும் கூடியிருக்க நேரத்துல சும்மா விடுவானா நம்மளை?” என்று மகளை திட்டித் தீர்த்து, இனி என்னென்ன பிரச்சனைகள் வருமோ என்று அசோகன் அஞ்சுகம் தம்பதி பெரும் கலக்கத்திற்குள்ளானார்கள்.
சற்று நேர அமைதிக்கு பின்னே பொன்மணிக்கு அழைப்பு வர, அழைப்பு சத்யப்ரகாஷிடமிருந்து என்றதும் தனதறைக்கு சென்று கதவடைத்துக்கொண்டு அழைப்பை ஏற்றாள்.
“இப்படிலாம் செய்தா பிரச்சனைதான் அதிகமாகும்னு நான் சொன்னதை கேட்டியா? அந்த திருனேஷ்வரனோட அப்பாக்கு ப்ரஸர் அதிகமாகி க்ரிட்டிக்கல் பொஸிஸன்ல இருக்காராம். எல்லாம் உன்னால.
இந்த ஆட்டத்தை இத்தோட முடிச்சிக்கலாம் பொன்மணி, நம்ம இரண்டு பேருக்குமே அதான் நல்லது. அந்த குழந்தைக்கு ஆயுசுக்கும் தேவையான பணத்தை தேவைக்கு அதிகமா மொத்தமா செட்டில் பண்ணிடறேன். என்ன சொல்ற?” என்றான்.
“நான் அப்புறம் பேசுறேன்” என்று இணைப்பை துண்டித்தாள்.
திருனேஷ்வரனின் தந்தை நிலை பெரும் வேதனையைத் தர, வில்வராஜை காணத் துடித்த மனதை அடக்க பெரும்பாடு பட்டுக்கொண்டிருந்த பொன்மணிக்கு நிற்காமல் வழிந்தது கண்ணீர்.
error: Content is protected !!