Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அவள் என் பொன்னெழில்

அவள் என் பொன்னெழில் 6.2

வில்வராஜின் உடலினுள் மருந்துகள் சென்றுகொண்டிருக்க, சத்தமில்லாமல் கேவலில்லாமல் கண்ணீர் மட்டும் துடைக்க துடைக்க வெளியேறிக்கொண்டேயிருந்தது.

“ஏங்க… டாக்டர் ஸ்ட்ரெயின் பண்ணக்கூடாதுனு சொல்லியிருக்காங்க, இப்படி அழுதா நான் என்னதான் பண்ணட்டும்?” என்றார் வேதனையாக.

உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமணைக்கு வந்து இரண்டு நாள்கள் ஆகிறது. நேற்றே மகள் மகனுக்கு அழைத்து தனது உடல்நலம் குறித்து பேசியும் இருக்கிறாள்.

ஆனால் திருனேஷ்வரன் தன்னை காண வரவில்லை என்ற நிலையை தாளமுடியவில்லை. மனைவியின் வருத்தம் போக்குவதற்காக கண்ணீர் விடுவதை நிறுத்த முயன்று கொண்டிருந்தார் வில்வராஜ்.



Advertisement

அனுபவித்த சிறை வாழ்க்கையை விட மகனை நாமே குற்றவாளி என்று நம்பியதுதானே அவனை பெரிதாய் வதைத்திருக்கும் என்பதையே மீண்டும் மீண்டும் வேதனையோடு நினைத்திருந்தார்.

தந்தையை காண மருத்துவமணை அறைவரை வந்த திருனேஷ்வரனுக்கு உள்ளே செல்ல த்ராணியில்லாமல் போக அறைவாயிலிலேயே நின்றான்.

“இனி நம்ம மகன் நமக்கு கிடைக்கமாட்டான் செல்லம்மா” என்றார் வேதனையாக.

Advertisement

“ஏங்க… என்ன சொல்றிங்க? ஏன் இப்படி பேசுறிங்க? அப்படிலாம் ஏதும் நடக்காது” என தேற்றினார் கணவனை.

Advertisement

தந்தையைத் தேற்றும் அன்னையின் குரலில் இருந்த வேதனை, அவர்கள் மீதுள்ள கோபத்தை குறைக்க முயற்சி எடுக்க வைத்தது.

பொன்மணி பேசியதை தங்கை திருனேஷ்வரனிடத்தில் சொல்லியிருக்க, தான் குற்றமற்றவன் என்ற உண்மை புரிந்த பின்னே இவர்கள் அடையும் வேதனையை ஏற்கவும் முடியாமல் சகிக்கவும் முடியாமல் இறுகிய முகத்தோடு உள்ளே வந்தான்.

முழுதாய் நான்கு வருடம் பத்து மாதங்கள் கழித்து மகனைப் பார்க்கிறார்கள் பெற்றவர்கள். “திருனேசு” என்று என்றபடி தடுமாறி எழுந்து மகனை அணைத்துக்கொண்டார் செல்லம்மாள்.

Advertisement

அன்னையின் அணைப்பை மறுக்கவில்லை என்றபோதும் ஏற்கவும் செய்யாமல் பேண்ட் பாக்கட்டினுள் கைவிட்டிருக்கும் மகனை வேதனையோடு பார்த்திருந்த வில்வராஜின் கண்களில் கொட்டியது கண்ணீர்.

தந்தை இப்படி அழுதெல்லாம் திருனேஷ்வரன் பார்த்ததில்லை ஆகையால், “ம்ப்ச் ப்பா, டாக்டர் ஸ்ட்ரெயின் பண்ண வேணாம்னு சொல்லியிருக்காங்கள்ல?” என்றான் அதட்டலாக.

மகனின் அக்கறையில் இன்னும் தன்னிறக்கமாகிப் போனது தந்தைக்கு. அழுகையை அடக்க முயன்றபோதும் முடியவில்லை அவரால்.

தான்தான் மகனை அணைத்திருக்கிறோம். மகன் தன் அணைப்பை ஏற்கவில்லை என்று தற்போதுதான் செல்லம்மாவிற்கு புரிய, கணவன் சொன்ன வார்த்தைகள் உண்மையாகிவிடுமோ என்ற பயத்தோடு மகனிடமிருந்து விலகி அவனின் முகம் பார்த்தார்.

சிறைக்கு செல்லும்போது உப்பிய கன்னங்களோடு, சிறு தொப்பையும் என இருந்த திருனேஷ்வரன், தற்போது தொப்பையில்லாமல், இளைத்தும் இல்லாமல் அவனின் உயரத்திற்கு ஏற்றார் போல் கச்சிதமாக இருந்தான்.

ஆனால் அன்னையின் பார்வையில் மிகவும் இளைத்ததுபோல் தெரிந்தது. ஆனால் வாய் விட்டு கேட்க முடியவில்லை. மகன் வேலை நிமித்தமாகவோ, அயல்நாடோ, இல்லை சுற்றுலாவோ செல்லவில்லையே, சிறைக்கல்லவா சென்று வந்திருக்கிறான். பின்னே இப்படி இல்லாமல் வேறெப்படி இருப்பான்? என தேற்றிக்கொண்டார்.

மகனின் உடல்நிலையை விட, மனநிலை யோசித்தபடி திருனேஷ்வரன் முகத்தை பார்த்து கண்ணீர் விட்டார் செல்லம்மாள்.

அன்னையின் வேதனையும், சற்று முன்னே தந்தை சொன்ன வார்த்தையையும் நினைத்து, “உங்க மகன் எப்போவும் உங்களுக்காக இருப்பான்ப்பா” என்றான்.

“நாங்கதான் உன்கூட இல்லாம போய்ட்டோம்” என வருந்த,

“பழசை பேச வேணாம்ப்பா, இந்த வருத்தம் வேதனைலாம் தேவையில்லாதது.” என்றவனின் வார்த்தை நிச்சயமாக ஆறுதலை தரவில்லை பெற்றோருக்கு.

திருனேஷ்வரன் முகத்திலும் இத்தனை வருடங்கள் கழித்த பெற்றவர்களை பார்க்கும் பூரிப்பில்லை. தற்போது கூறும் ஆறுதல் வார்த்தைகளிலும் துளியும் அன்பில்லை. மாறாக கடமையுணர்வு இருக்கவே, மேலும்தான் வேதனை கூடியது வில்வராஜிற்கு.

ஆனால் செல்லம்மாவிற்கோ, திருனேஷ்வரனின் வரவு வில்வராஜ் அளவிற்கு யோசிக்க வைக்கவில்லை. தங்கள் மீது கோபம் இருந்தபோதும் தந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றதும் மகன் வந்துவிட்டான்.

கணவன் நினைத்தது போல திருனேஷ்வரன் தங்களை வெறுக்கவில்லை. கோபம் மட்டுமே இருந்திருக்கிறது. இனி அவனை எங்கேயும் விடக்கூடாது என்ற எண்ணம் தோன்ற, முகமும் நிம்மதியை காட்டியது.

உள்ளே வந்த செவிலிப்பெண், “இந்த மருந்தை வாங்கிட்டு வந்துடுங்க” என்று சீட்டை கொடுக்க, மருந்து சீட்டை வாங்கினான் திருனேஷ்வரன்.

“அதை இங்க கொடு திருனேசு, நான் வாங்கிட்டு வரேன், நீ அப்பாவோட இரு”

“இல்லைம்மா நானே போய் வாங்கிட்டு வரேன்” என்று கிளம்பினான்.

தங்கையிடமிருந்து அழைப்பு வர, “ம் சொல்லுடா” என்றான் கனிவாக.

“எங்கண்ணா இருக்க?”

“ஹாஸ்பிட்டல்ல டா”

“அம்மாவை பார்த்துட்டியாண்ணா?” என்றாள் உற்சாகமாக.

“ம் பார்த்துட்டேன், மெடிசன் வாங்க போய்ட்டிருக்கேன், போதுமா டீட்டெய்ல்ஸ்” என்றான் இலகுவாக.

“ஓகேண்ணா ஓகேண்ணா” என்று நிம்மதியாக சொல்லி, “அண்ணா” என்றாள் தயக்கமாக.

“என்ன வெண்பா?” என்றான் விசாரணைபோல.

“ஒன்னுமில்லைண்ணா, நீ மெடிசன் வாங்கிட்டு அங்க பாருங்க, நான் அப்புறம் கால் பண்றேன்”

“ப்ச், எதோ சொல்ல வந்ததானே? அதை சொல்லு”

“அப்பாம்மா மேல கோபம் குறைஞ்சிடுச்சாண்ணா?” என்றாள் தயக்கமாக.

“ஓ… பெரிய மனுஷி கேட்குறிங்க, சொல்லித்தான ஆகனும்? ம் குறைஞ்சிடுச்சுங்க டாக்டர் மேடம்”

வயதிற்கு மீறி கேட்டுவிட்டோமோ என “அண்ணா” என்று வெண்பா பதற, சிரித்தவன், “உனக்கு க்ளாஸ் இல்லையா?” என்றான்.

“இருக்குண்ணா, நீ சேலம் போய்ட்டியானு கேட்குறதுக்காக வெளில வந்தேன், இதோ க்ளாஸ்க்கு போறேன், ஈவ்னிங் கால் பண்றேன், வீடியோ கால் பண்றேண்ணா, எனக்கு உங்களைப் பார்க்கனும்”

“ஓகே கால் பண்ணு”

“ஓகே பாய்ண்ணா” என்று இணைப்பை துண்டித்தாள் வெண்பா.

மருந்து வாங்கிச் சென்றதும், “சாப்பிட்டியா திருனேஷ்? வீட்டுக்கு போய் குளிச்சிட்டு சாப்பிட்டு வரியா?” என்றார் செல்லம்மாள்.

“பசியில்லம்மா, இரண்டு நாளா இங்கேயே இருந்திருப்பிங்கதான? நீங்க வேணும்னா வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்க, நான் அப்பா கூட இருக்கேன்” என்றான்.

“நான் தனியா அங்க போய் என்ன பண்ணட்டும்? நானும் இங்கேயே இருக்கேன்” என்றார் மகனோடு இருக்கும் ஆசையில்.

சரியென்பதாய் திருனேஷ்வரன் தலையசைக்க, கடந்த ஐந்து வருட வாழ்க்கையைப் பற்றி மகனிடம் பேச நிறைய இருந்த போதும், பேச தைரியமின்றி அமைதியானார் வில்வராஜ்.

ஆனால் செல்லம்மாவிற்கோ, எல்லாம் அந்த பெண்ணால். அவள் சொன்ன பொய்யால் வந்த வினை என்ற கோபம் வர, “இந்த விசயத்துல ஒரு பொட்டச்சி கொஞ்சம் கூட பதைக்காம பொய் சொல்லுவானு நான் நினைக்கல திருனேசு” என்றார்.

“அம்மா பழசை விடுங்க” என்றான் கட்டளையாக.

“இல்லடா” எனும்போதே, “பழசை பேசினா நான் கிளம்பிடுவேன்” என்றான்.

“சரி அந்த பொண்ணைப் பத்தி பேசல” என்றவர் சத்யப்ரகாஷ் வந்து பேசியது, பணம் கொடுக்க முயன்றது என்று அனைத்தையும் சொல்லி, “இத்தனை வருசத்துக்கு அப்புறம் அவன் எதுக்கு உண்மையை சொல்லனும்? அதுவும் அந்த பையன் செய்த தப்பை ஒத்துக்கிற ஆளே கிடையாது. அவங்கப்பனை மாதிரியே சரியான அடாவடி. கல்யாணம் ஆனதுக்கு அப்புறம்தான் கொஞ்சம் அடங்கியிருக்கான், எனக்கென்னமோ இது சரியாப் படல” என்றார்.

பொன்மணிப் பற்றி தங்கை சொன்னதை யோசித்துப் பார்த்தால் இவள்தான் ஏதும் அவனை மிரட்டி சொல்ல வைத்திருப்பாளோ என்றும் தோன்றியது. அவ்வளோ தைரியம் அப்பெண்ணுக்கு இருக்குமா என்றும் தோன்றியது.

ஆனாலும் எத்தனை தைரியம் இருந்தால் தனது வீட்டிற்கே வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு, பணம் தருகிறேன் என்றிருப்பான்? நேரில் சிக்கட்டும், இல்லை சிக்க வைப்போம் என நினைத்துக்கொண்டான் பல்லை கடித்தவாறு.

“உனக்கு அந்த புள்ள மேல கோபமே வரலையா திருனேசு” என்று செல்லம்மாள் ஆற்றாமையோடு கேட்க, “ம்ச்ப் ம்மா… பழசை பேச வேணாம் விடுங்க” என்றான் மீண்டும்.

“இல்லடா” என மீண்டும் பேச வர, “நான் வெளில இருக்கேன்” என்று வெளியேறினான் திருனேஷ்வரன்.

ரூபலஷ்மியிடமிருந்து அழைப்பு வரவே ஏற்றவன், “நான் சேலம் வந்துருக்கேன் மேடம்” என்றான்.

“யாரைக் கேட்டு சேலம் கிளம்பின?” என கோபத்தோடு கேட்டவர், “சொல்லிட்டு போகமாட்டியா? உன்னை நம்பி டிரைவருக்கு லீவ் கொடுத்துட்டேன்” என கடுகடுத்தார் திருனேஷ்வரனை காண முடியாத கோபத்தில்.

ரூபலஷ்மியிடம் ஐந்து நிமிடம்போல் பேசிக்கொண்டிருந்தவன் கண்களில் தனது தந்தை இருக்கும் அறையை யாரோ ஒரு பெண் எட்டிப்பார்ப்பதும், பின்னே விலகி விடுவதும் தெரிய, ரூபலஷ்மியின் இணைப்பை துண்டித்து, அப்பெண்ணை ஊன்றிப்பார்த்தவாறு தந்தையின் அறைநோக்கி நடக்க ஆரம்பித்தான்.

பெண் அருகே வந்தவன், “எக்ஸ் கியூஸ் மீ…” என்றான்.

வெகு அருகில் ஆண் குரல் கேட்கவும், விழுக்கென பொன்மணி திரும்பிப்பார்த்தாள்.

அன்று நான் பொய்யுரைத்ததால் திருனேஷ்வரன் சிறைக்கு சென்றான், பேரன் சிறைக்கு சென்றதை தாள முடியாமல் தாத்தா பாட்டி ஒருவர் பின் ஒருவராக இறந்தனர்.

தற்போது திருனேஷ்வரனின் அவப்பெயர் போக்க நினைத்து தான் செய்த காரியம் அவனின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போயிற்றா? அதுவும் ஆபத்தான நிலையா? திருனேஷ்வரன் விசயத்தில் தொடர்ந்து கெடுதல் செய்கிறேனா? ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால்? என்று சிந்தனைகள் பொன்மணியை ஆட்டிப் படைத்துக்கொண்டிருந்தது.

அவளின் முகமே அவளுள் உள்ள தவிப்பை உணர்த்த, “உங்களுக்கு வேண்டியவங்களுக்கு ஏதும் ஆகியிருக்காது, இங்க என் அப்பா இருக்கார், உங்களுக்கு யார் வேணுமோ ரிஸப்சன்ல கேட்டுட்டு போய் பாருங்க” என்றான் ஆறுதல் வார்த்தையாக.

இரட்டைஜடைப் போட்டு, துருதுரு கண்களோடு கபடமில்லா பள்ளி செல்லும் சிறுமியின் முகம்தான் திருனேஷ்வரனின் மனதிலுள்ள பொன்மணியின் முகம்.

தற்போது பெரியவளாகியிருப்பாள் என்றறிவான்தான். ஆனால் எப்படியிருப்பாள் என்றெல்லாம் ஒருநாளும் யோசித்ததில்லை.

அகன்ற பெரிய கண்களின் அழகை மறைக்கும் அளவிற்கு அதில் அப்பியிருந்த சோகம், எதையோ பறிகொடுத்துவிடக் கூடாதென்ற தவிப்பு என பொன்மணியைப் பார்த்தவனுக்கு, இவள்தான் பொன்மணி என்றெல்லாம் சுத்தமாய் அடையாளம் தெரியவில்லை.

ஆனால் தன்னால் பாதிக்கப்பட்டவனை செய்தித்தாளில் பார்த்ததோடு, அதனை இன்றுவரை பத்திரப்படுத்தி வைத்திருப்பதோடு, அவசர வேலை என்றால் தவிர தினமும் அந்த முகத்தை எதை செய்து உங்கள் பாவத்தை சரி செய்யப் போகிறேன் என்று வருந்துவாள் அல்லவா?

திருனேஷ்வரனுக்கு பதினேழு வயதிலேயே மீசை வந்திருந்ததால், இருபத்திமூன்று வயதிலேயே கட்டை மீசையோடும், டிரிம் செய்த தாடியோடும்தான் இருந்தான். அம்முகம்தான் செய்தித்தாளில் வந்திருந்தது.

ஆகையால் அப்பொழுதிருந்த புகைப்படத்திற்கும் தற்போது கண் முன் நின்றிருக்கும் திருனேஷ்வரன் முகத்திற்கும் பெரிதாய் வேறுபாடில்லை.

இவளறிந்த வேறுபாடு அப்பொழுதைவிட தற்போது இளைத்திருக்கிறான் அவ்வளவே. பார்த்த நொடியிலேயே இவன் திருனேஷ்வரன் என அறிந்துகொண்டாள் பொன்மணி.

இந்த நிலையிலும் திருனேஷ்வரன் பெற்றோரை காண வரவில்லை என்றுதான் பொன்மணி கேள்விப்பட்டாள் ஆகையால், இன்ப அதிர்வோடு “நீங்க…. தி… திரு… னேஷ்வரன், அப்பாவை பார்க்க வந்துட்டிங்களா?” என்றாள் பெரும்மகிழ்வோடு.

தன் பெயர் இவளுக்கு தெரிந்திருக்கிறது, ஆக… தன் தந்தையைத் தேடித்தான் வந்திருக்கிறாள். நான்தான் தவறாக நினைத்துவிட்டேன்.

இமைக்காத பார்வையில் இத்தனை அன்பு தழுவல்களை காட்ட முடியுமா என பிரம்மித்துப் பார்த்திருந்தான் சில நொடிகள்.

ஒருவேளை தனது அத்தை மகளாக இருப்பாளோ? இல்லையே… விஜயா அத்தையின் மகள் இத்தனை நிறம்கொண்டவள் இல்லையே, இத்தனை நீண்ட கூந்தல் இல்லையே…

ஐந்து வருடத்தில் கூந்தல் வளர்ந்திருந்தாலும் நிறமும் கூடவா மாறியிருக்கும்? அதுவும் மாநிறத்தவள் வெண்ணை நிறத்திற்கு மாறியிருப்பாளா? ம்ஹும்… இல்லை… நிச்சயம் இவள் தனது அத்தை மகள் இல்லை.

அன்னைக்கோ அப்பாவிற்கோ தனது கவனத்தில் இல்லாத சொந்தமாக இருப்பாள். பெரிய இடைவெளிக்குப் பிறகு பார்ப்பதால் தனக்கு அடையாளம் தெரியவில்லை என நினைத்து “நீங்க யார்ம்மா?” என்றான்.

கடந்த ஐந்து வருடங்களாக யாரின் நலத்தை அறிய ஆவல் கொண்டாளோ அவன் கண்முன்னே நிற்கவே, தன்னை திருனேஷ்வரனிடம் அறிமுகப்படுத்திக் கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை.

பாவமன்னிப்பு கேட்க வந்த பக்தைக்கு இறை தரிசனம் கிடைத்த ஆசுவாசத்தோடு “நான் பொன்மணி” என்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!