Skip to content
Post Views: 3,370
அத்தியாயம் 9
“ஆஹா… என்ன வாசனை .. என்ன வாசனை.. காலையில இந்த டீ கொதிக்கும் போது கூடவே மணக்கும் ஏலக்காய் வாசனை இருக்கே!
Advertisement
அட அட அட.. அது மூக்குல ஏறுனாத்தான் எனக்கு தூக்கமே போகும் டா பாரி..”
“இப்படி தான் நேத்து இஞ்சி தட்டி போட்ட வாசனை வந்து உன் தூக்கத்தை கலைச்சதுன்னு சொன்ன.. வாசனை மட்டும் நல்லா பிடிடா.. படிக்கச் சொல்ற பாடத்தை படிக்காதே..” என்றான் பாரி கடுப்பாக.
Advertisement
Advertisement
“இந்த கொஸ்டின் நான் முடிச்சிட்டேன்.. அடுத்து என்ன சொல்லு.. ரொம்ப தான் என்னை படுத்துற நீ”
“அப்ப சரி, இந்தா.. இந்த சம் போடு அடுத்து. இதை முடிச்சிட்டு அப்புறம் தான் டீ”
Advertisement
இவர்கள் இருவரும் நான்கு மணிக்கே எழுந்து படித்து கொண்டிருக்கிறார்கள். பன்னிரெண்டாம் ஆண்டு பொது தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.
வில்வா அந்த சம்மை முடிக்கவும் கருணாம்பிகை கையில் தேனீருடன் நுழையவும் சரியாக இருந்தது.
“நீ எதுக்கு எடுத்துட்டு வர கருணாம்பிகை. கூப்பிட்டா நானே வந்து வாங்கிட்டு வந்திருப்பேன் இல்ல” என்றான் பாரி, அவள் கையில் இருந்த தேநீரை வாங்கி கொண்டே.
“இருக்கட்டும் பாரி வேந்தன். உங்க எக்ஸாம் முடிஞ்சதும் தானே டென்த் எக்ஸாம். அப்ப நீங்க ரெண்டு பேரும் எனக்கு போட்டு தாங்க, அவ்வளவு தானே.. இப்ப குடிச்சிட்டு படிங்க” என்று கூறிவிட்டு அவளும் ஒரு கப் தேநீருடன் புத்தகத்தை எடுத்து கொண்டு அமர்ந்துவிட்டாள்.
“ஏன்டி,, நீ போய் ஹால்ல படிக்க வேண்டியது தானே.. என் இங்க உக்கார?”
“மூனு பேரும் படிக்க தானே போறோம், அதுக்கு எதுக்கு அண்ணா ரெண்டு எடத்துல லைட்.. உங்க அப்பா கரெண்ட் பில் கட்டுனா, வீடு பூரா லைட் போட்டு வைக்கனும்னு சட்டமா?”
வில்வா அவளுக்கு பதில் கூறாமல் ரசித்து தேநீரை குடித்தான்.
பாரி இவர்கள் வீட்டில் தான் இரண்டு நாட்களாக இருக்கிறான்.
தீடீர் என்று தமயந்தியின் அப்பாவின் நண்பர் அவரை அழைத்திருந்தார்.
“உங்க அப்பா ரொம்ப உடம்புக்கு முடியாம இருக்காரு. உங்க அண்ணன் பையன் தான் பார்த்துகிறான், பாவம் சின்ன பையன்.. ரொம்ப கஷ்டப்படறான்.. நீ ஒரு எட்டு வந்துட்டு போம்மா” என்று.
தமயந்திக்கு தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை.
“அண்ணன் பையன் பார்த்துக்கிறானா? ஏன்? எங்க அண்ணன் தம்பி எல்லாம் இல்லையா?”
“உனக்கு விஷயமே தெரியாதா?”
“தெரியாதே அங்கிள்… ரொம்ப வருஷமா தொடர்பே இல்லை…
உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே?”
“உங்க அண்ணனும் அண்ணியும் போன வருஷம் ஒரு கார் ஆக்சிடன்ட்ல மாட்டிக்கிட்டாங்க. அதுல உங்க அண்ணிக்கு இடுப்புக்கு கீழே முழுசா பாதிச்சிடுச்சு. வைத்தியதிற்கு லட்சகணக்கா செலவு செய்தும் பெருசா ஒன்னும் முன்னேற்றம் இல்லை. இங்க அவங்களை வச்சு பார்த்துக்கவும் முடியல. அவங்க அம்மா வீட்ல இருந்து வந்து உங்க அண்ணியை மட்டும் கூப்பிட்டுக்கிட்டாங்க. வைத்தியத்திற்கு நீங்க தான் காசு கொடுக்கனும்னு சொல்லிட்டாங்க. அதனால உங்க அண்ணன் துபாய்க்கு வேலைக்கு போயிருக்காரு. அவர் சம்பாத்யம் முழுசா உங்க அண்ணிக்கே கொடுத்திடுறாரு.. பிள்ளைகளை உங்க அப்பா தான் பார்த்துக்கிட்டாரு. இப்ப ஆறு மாசமா அவருக்கு முடியலை, பக்க வாதம். அந்த சின்ன பையன் தான் அவரை பார்த்துகிறான்”
கேள்வி பட்ட செய்திகளை உள்வாங்கி கொள்ளவே நேரம் பிடித்தது தமயந்திக்கு.
“என்ன அங்கிள் இப்படி சொல்றீங்க.. இவ்வளவு கஷ்டத்துலயும் அப்பா எனக்கு சொல்லலையே. இப்பவும் அவர் சொல்லி இருக்க மாட்டாரே” என்றார் விரக்தியாக.
“உண்மை தான் தமயந்தி, ஆனா அந்த பையன் படற கஷ்டத்தை பார்க்க முடியல..”
“எங்க அண்ணாகிட்ட சொன்னீங்களா? நான் வந்தா என்ன சொல்லுவாங்களோ?”
“உங்க அண்ணனை பத்தி பேசாத.. எனக்கு கோவம் தான் வருது.. நேத்து போன் பண்ணி சொன்னா, என்னால ஒரு பேஷண்ட்கே சம்பாதிக்க முடியல.. ஏதாச்சும்னா என் பையன வச்சு காரியம் பண்ணிடுங்க.. எனக்கு சொல்ல வேண்டாம்னு போனை கட் பண்ணிட்டான். பசங்க கிட்ட கூட அவன் பேசுறதே இல்லம்மா..”
“என்ன அங்கிள் சொல்றீங்க? தம்பி…”
“உங்க அண்ணன் பரவாயில்லைன்னு சொல்ல வைச்சிட்டான் ம்மா அவன். அவனும் வெளிநாட்டுல தான் இருக்கான்.. எங்க அண்ணன் பொண்டாட்டி வைத்தியத்துக்கு பாதி சொத்துக்கு மேல வித்திட்டார். மிச்சம் இருக்கிறது வீடு மட்டும் தான்.. அது எனக்கு வேணும்.. நீங்க விக்க ஏற்பாடு பண்ணுங்க… அப்பாவுக்கு ஏதும்னா நான் வருவேன் இல்ல.. அப்ப வீட்டை வித்துடலாம்னு சொல்லி வைச்சிட்டான்..” என்றார் அவர் ஆதங்கமாக.
“எனக்கு என்ன சொல்லன்னே தெரியலை அங்கிள்”
“அதான் எப்படியோ உன் நம்பரை தேடி கண்டுபிடிச்சேன்.. நீ கிளம்பி வர முடியுமா பாரும்மா.. உங்க வீட்ல பேசிட்டு எனக்கு கூப்பிடும்மா..”
தர்மராஜ், “வா நாம் போய் பார்த்துட்டு வந்துடலாம்” என்று உடனே கூறினார்.
“ஏங்க பாரரிக்கு பப்ளிக் எக்ஸாம்.. எப்படி விட்டுட்டு போறது” என்று கலங்கினார் தமயந்தி.
பாரி தான், “எதுக்கு மா கவலை படறீங்க.. நான் வில்வா வீட்ல இருந்துக்கிறேன்.. நீங்களும் அப்பாவும் போயிட்டு வாங்க” என்றான்.
விஷயம் அறிந்ததும் சுமதியும் சங்கரும் விரைந்து வந்தனர்.
“என்ன தமி நீ.. நான் இல்லையா.. நான் பாரியை பார்த்துக்க மாட்டேனா. நாம எல்லாரும் இருந்தாலும் அவங்க இரண்டுபேரும் ஒரு வீட்ல தானே படிக்கிறாங்க. நீ போய் உங்க அப்பாவை பார்த்துட்டு வா..” என்று சமாதானம் கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.
——————
“காலையில சீக்கிரம் எழுந்தது தூக்கமா வருது பாரி.. இன்னும் இரண்டு நாள் ஸ்டடி லீவ் இருக்கு தானே.. நான் ஒரு அரை மணி நேரம் தூங்கவா” என்று பாவமாக கேட்டான் வில்வா.
“டேய் வில்வா இப்ப தானே டீ குடிச்சா தூக்கம் போயிடும்னு சொன்ன? திரும்ப என்ன தூக்கம் வருது. போய் முகத்தை கழுவிட்டு வா.. இந்த சாப்டர் முடிச்சிடலாம்.. “
“க்கும்… சின்ன பப்பா உங்க பிரண்ட்.. மடியில வச்சு கொஞ்சுங்க.. டேய் அண்ணா.. ஒழுங்கா படி.. இல்லன்னா நான் போய் அப்பாவை கூட்டிட்டு வரவா? இன்னுமா உனக்கு சீரியஸ்னஸ் வரல?” என்று பொரிந்தாள் கருணாம்பிகை.
“இதுக்கு தான் உன்னை ஹால்ல படிக்கச் சொன்னேன்.. சும்மா நொய் நொய்ன்னு.. போடி” என்று எகிறினான் அண்ணன்.
“என் கூட சண்டை போட மட்டும் உனக்கு தூக்கம் வரலையா? “
“ஆமா.. உன்னை பார்த்தாலே தூக்கம் வராது”
“அதுக்கு தான் இங்க இருக்கேன்.. இப்ப தூக்கம் போயிடுச்சு இல்ல…பேசாம படி போ.. “
பாரி இருவரையும் பார்த்து சிரித்துக்கொண்டான்.
அன்று மதிய உணவிற்கு பிறகு மூவரும் டிவி பார்த்துக்கொண்டிருந்தனர்.
“ஏம்பா நீங்க மூனு பேரும் சாப்டாச்சு இல்லை.. உள்ள போய் படிங்க” என்றார் பாட்டி.
“காலையில இருந்து படிச்சிட்டு தானே இருக்கோம் பாட்டி.. கொஞ்ச நேரம் கழிச்சு போறோம்” என்றான் வில்வா.
“அதுக்கு இல்ல ராஜா.. ஹால்ல வெய்யில் அதிகமா இருக்கு.. நீங்க ரூம்ல போய் ஏ.சி போட்டுட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க..”
இவர்களை அனுப்புவதிலே குறியாக இருந்தார் பாட்டி.
“நீங்களும் அம்மாவும் முதலில் சாப்பிடுங்க பாட்டி. நேரம் ஆகுது இல்ல.. நாங்க இன்னும் பத்து நிமிஷத்துல போறோம்” என்றாள் கருணாம்பிகை.
பாட்டி இவர்களை கிளப்ப முடியாமல் முனுமுனுத்துக்கொண்டே அடுப்படிக்குள் சென்றார்.
“ஏன்டா பாட்டி நம்ம உள்ள போக சொல்லிட்டே இருக்காங்க.. நீயும் கருணாவும் வராம அடம் பிடிக்கிறீங்க”
“டேய் பாரி.. பாட்டி எதோ திருட்டு தனம் பண்றாங்க போல.. அவங்க செல்ல பேத்திக்கு பயந்துகிட்டு தான் நம்மளை உள்ள அனுப்ப பார்க்கிறாங்க.. கொஞ்சம் இரு.. வேடிக்கை பார்ப்போம்”
“பாட்டியே அவளுக்கு பயப்படுவாங்களா என்ன, இது வரை நான் கவனிச்சது இல்லையே “
சத்தம் போடாமல் மாமியாரும் மருமகளும் குசுகுசுவென அடுப்படிக்குள் பேசினார்கள்.
“என்ன அத்தை நீங்க.. பழைய குழம்பை இப்ப சாப்பிட்டா அவ பிரச்சனை பண்ணுவாளே”
“சத்தம் போடாம அதை எடுத்து சுட வை, அவ வர மாட்டா”
“பேசாம நைட்டுக்கு வச்சுப்போமே, அவ மூக்கு உங்க மூக்கு மாதிரியே.. மோப்பம் பிடிச்சிடுவா..”
“சந்தடி சாக்குல என்னை என்ன சொல்ல வர இப்ப..”
“———–”
அதற்குள் தாத்தாவும் ஹாலில் வந்து ஆஜர் ஆகிவிட்டர்.
“உங்க மாமனாருக்கும் மூக்கு வேர்த்துடுச்சு.. அவரும் வந்துட்டார் பார்த்தியா.. நிம்மதியா சாப்பிட முடியுதா பாரு”
“அதுக்கு தான் சொல்றேன்.. தேவை இல்லாமல் எதுக்கு இப்ப மாட்டிக்கணும். நைட் சாப்பிட்டுப்போமே”
“இல்ல சுமதி… புளி சேர்க்காதது.. இன்னும் இருந்தா கெட்டு போய்டும்”
மாமியார் விடமாட்டார் என்று புரிந்து சுமதி சத்தம் செய்யாமல் குழம்பை பிரிஜ்ஜில் இருந்து எடுத்து சூடு செய்து பின் உணவு மேஜையில் கொண்டு வந்து வைத்தார்.
இருவரும் தட்டில் சாதம் வைத்து குழம்பை எடுத்தனர்.
“என்ன பாட்டி இது? நாங்க கத்திரிக்காய் சாம்பார் தானே சாப்பிட்டோம்.. இப்ப புடலங்காய் பொரிச்ச குழம்பு வாசனை வருது… “ என்று ஆஜர் ஆனாள் கருணாம்பிகை.
“அது வந்து.. பக்கத்து வீட்டு கோகிலா கொடுத்தா.. இப்ப தான் கொடுத்தா..”
“பக்கத்து வீட்டு கோகிலா ஆன்ட்டி எதுக்கு நம்ப வீட்ல வச்ச குழம்பை நம்ம வீட்டு பாத்திரத்துல வச்சு கொண்டு வந்து கொடுத்தாங்க…”
பாட்டி திரு திரு என முழித்தார்.
“இல்ல கருணா.. குழம்பு நல்லா இருந்துச்சு.. அதை வீணாக்க வேண்டாம்னு தான் பிரிட்ஜில வச்சு..” என்று இழுத்தார் பாட்டி.
“எத்தனை தடவை பாட்டி சொல்றது.. பிரிட்ஜ்ல வச்சு சூடு பண்ணி சாப்பிடறது உடம்புக்கு நல்லது இல்லைன்னு..”
“எந்த பொருளையும் வீண் செய்றது தப்பில்ல கருணா” என்றார் சுமதி மெதுவாக மகள் இதை சொன்னால் அமைதி ஆகிடுவாள் என்றெண்ணி.
“ஆஹா… என்ன நடிப்பு.. நேத்து மதியம் வச்சது மீதம் இருந்தா இராத்திரி அதையே கொடுக்க வேண்டியது தானே.. நேத்து எதுக்கு அப்ப வேற சாம்பார் வச்சீங்க… நேத்தே சாப்பிட்டிருந்தா ஏன் வீண் ஆக போகுது?எந்த பொருளையும் வீண் செய்றது தப்பு தான்… வேணும்ன்னே வீணாக விட்டுட்டு அதை சாப்பிடறது எப்படி சரி?”
“இல்ல கருணா.. தோசைக்கு சாம்பார் வச்சா தான் உங்க அப்பாவுக்கு பிடிக்கும்”
“இந்த வீட்ல யாரு சின்னவங்க யாரு பெரியவங்கன்னு தெரியல.. கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா அம்மா உங்களுக்கு.
இப்ப நீங்க இரண்டு பேரும் மட்டும் சாப்பிடறதுக்கு, நேத்தே எல்லாருக்கும் பகிர்ந்து வச்சிருந்தீங்கன்னா, கொஞ்சம் சாம்பாரோடும் சேர்த்து சாப்பிட்டிருக்கலாமே.. பழசை நீங்க மட்டும் சாப்பிட உங்க வயிறு என்ன குப்பை தொட்டியா?”
சுமதி மாமியாரை காப்பாற்றுங்க என்று பார்த்தார்.
“இனி இப்படி செய்யல.. இப்ப நீ போய் உன் வேலையை பாரு..” என்றார் பாட்டி கடுமையான குரலில்.
“இல்ல பாட்டி.. அப்படி எல்லாம் போக முடியாது.”
“இப்ப என்ன செய்றது… இதை கீழே கொட்டிடலாமா? உணவை வேஸ்ட் பண்றது பாவம்..”
“உங்க பேச்சுல என்ன ஏமாத்திட்டீங்க பார்த்தீங்களா? நேத்து நம்ம வீட்ல காரக்குழம்பு தானே.. இது முந்தா நேத்து வச்சது தானே?”
சுமதிக்கு உணவை வாயில் வைக்காமலே புரை ஏறியது.
பாரி தான் வந்து அவர் தலையை தட்டி குடிக்க தண்ணீர் கொடுத்தான்.
“விடு கருணாம்பிகை.. பாவம் ஆன்ட்டி..”
“இதை குப்பைல கொட்டறதும் வயித்துல கொட்றதும் ஒன்னு தான். அப்பவே அதிகமா இருந்தா வேலை செய்ற ரமணி அம்மாகிட்டாவது கொடுத்து அனுப்பி இருக்கனும். இல்ல அன்னிக்கே அடுத்த வேலை நம்ம எல்லாருக்கும் கொடுத்து முடிச்சிருக்கணும்.
அம்மாக்கு அடிக்கடி சோர்வு ஏற்படுது, பாட்டிக்கும் வெயிட் போடுது.. அதுக்கு இது தான் காரணம். தினமும் நம்ம ஸ்கூல் போனப்புறம் பழசை சரி செஞ்சு சாப்பிடறது. இன்னிக்கு இதுக்கு ஒரு முடிவு தெரிஞ்சே ஆகணும்.”
“சரி சுமதி.. அதை கொட்டிடு.. இனி கருணா சொல்ற மாதிரி செஞ்சுப்போம்.” என்றார் பாட்டி கொஞ்சம் இறங்கி வந்து.
சுமதியும் தலையை ஆட்டினார்.
இது பாட்டியின் வேலை தான். வீட்டு ஆண்களுக்கோ பிள்ளைகளுக்கோ மிச்சம் ஆனதை கொடுக்க மாட்டார். அவரும் சுமதியும் மட்டுமே உண்ணுமாறு பார்த்து கொள்வார்.
“இல்ல அதை அம்மா கொட்ட கூடாது..”
அனைவரும் இப்பொழுது கருணாவை கேள்வியாக பார்க்கவும்,
“உங்க கையாலே அதை கீழே போடுங்க பாட்டி” என்றாள்.
பாட்டியை பொறுத்த வரையில் உணவை கீழே கொட்டுவது பெரிய பாவ காரியம். அவர் உஷ்ணமாக சுமதியை பார்த்தார்.
சுமதி நான் என்ன செய்தேன் என்று முழித்தார்.
“என்னடி முளைச்சு மூனு இலை விடல.. நீ என்னை நாட்டாமை பண்றீயா?
“தாத்தா… நீங்க என்ன சொல்றீங்க?” என்று தாத்தாவை உள்ளிழுத்தால் இப்பொழுது.
“கருணாம்பிகை சொல்றது தான் சரி.. உன் கையாலே போடு.. அப்ப தான் திரும்ப இது மாதிரி நடக்காது.. நானும் பல தடவை சொல்லிட்டேன்…” என்று முடித்துவிட்டார் தாத்தா.
வேறு வழியில்லாமல் பாட்டி அதை கீழே போட்டுவிட்டு முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு உணவை உண்டார்.
“டேய் வில்வா… நிஜமாவே கருணாம்பிகை வேற லெவல் தான் டா..”
“இதை தான் டா நானும் நீயும் பல வருஷமா சொல்லிட்டு இருக்கோம்.”
“ஹா ஹா ஹா அதுவும் சரி தான்… சரி வா நாம போய் படிப்போம்.”
——————–
error: Content is protected !!