Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

பூத்தூவுதே வானம்!

பூத்தூவுதே வானம் – 07

அன்று கேஷவமூர்த்தியின் வீடு வெகு பரபரப்பாகக் காணப்பட்டது. சற்று நேரத்துக்கு முன்பு தான் நாடு திரும்புவதாகக் கூறி நிகிலனிடமிருந்து அழைப்பு வந்திருந்தது.

“இன்னைக்கு பார்த்து இந்த பார்வதி வேற லீவ் போட்டுக்கிட்டாளே! எதை செஞ்சேன், எதை விட்டேன்னு கொஞ்சம் கூட புரிய மாட்டேங்குது.. ஏன்ம்மா சாரு, இன்னைக்கு என்ன சமையல் பண்ணலாம்?” என காலில் சுடுநீர் கொட்டியது போல் சமையலறைக்கும், கூடத்துக்குமாக ஓடிக் கொண்டிருந்தாள் திலோ.

அவளைப் பிடித்து ஒரு இருக்கையில் அமர்த்தி நீர் பருகச் செய்த சாரு, “ஆன்ட்டி முதல்ல ரிலாக்ஸ் ஆகுங்க, ஓகே? எதுக்கு இவ்ளோ டென்ஷன்..” என அமைதிப்படுத்த முயன்றாள்.



Advertisement

அதற்கென்று கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழித்து மகனைக் காணப் போகும் ஒரு தாயின் தவிப்பு அவளுக்கு புரியவில்லை என்றெல்லாம் இல்லை.

“அச்சோ என்னடி நீ.. இப்படி ஆற அமர உட்கார்ந்திருக்கவா எனக்கு நேரமிருக்கு?” என திலோத்தமை மீண்டும் எழ முயல,

“ஐயோடா ஊரு உலகத்துல இல்லாத புள்ள. வருஷக் கணக்கா ஃபாரின்ல நெட்டித் தள்ளிட்டு வர்றதுனா கூட இந்த டென்ஷனுக்கு ஒரு அர்த்தம் இருக்குனு சொல்லலாம். ஆனா இல்லயே! பிசினஸ் விஷயமா வெளிநாட்டுக்கு போயிருந்து திரும்பி வர்றதுக்கு இவ்ளோ அமர்க்களப்படத் தேவயில்லப்பா!” என பொய்யாக சலித்தபடி கேலி கூத்தாடும் கண்களால் அத்தையை நோக்கினாள், சாருலதா.

Advertisement

“அடி போடி.. என்னவோ இவளுக்கு மட்டும் அவனைப் பார்க்க ஆசையில்லாத மாதிரியில்ல சலிச்சுக்கறா!” என திலோ பெரிதாக நொடித்துக் கொண்டாள்.

Advertisement

கண்களில் சொட்டிய கேலி சட்டென்று வடிந்து போக, இதழில் விரிந்திருந்த புன்னகையின் பரப்பளவை மட்டும் செயற்கையாக விஷாலமாக்கிக் கொண்டாள் சாரு.

உண்மையில் – திலோவின் இந்த சந்தோஷத்துக்கு ‘அவனது வரவு’ ஒரு காரணம் என்றால், மற்றொன்று திருமணம். ஆமாம், நிகிலன் – சாருலதாவின் திருமணம்!

‘வேலைய முடிச்சிட்டு இங்க வந்ததும் கலியாணம் பண்ணிக்கிறேன், அதுக்கு மேலயும் உங்க எல்லாரையும் காத்திருக்க வைக்க மாட்டேன்..’ என்று உறுதி தொனிக்கக் கூறிவிட்டுச் சென்றானே..

Advertisement

இருவரின் திருமணத்தைக் கண்ணாரக் கண்டுவிட வேண்டும் என்ற கனவும், ஆசையும் கூடிய விரைவில் நிறைவேறி விடும் என்ற சந்தோஷமும் இணைந்து கொண்டதில் தான் வழமைக்கு மாற்றமாக பதற்றப்பட்டுக் கொண்டிருக்கிறாள்.

அன்று பார்த்து மகளும், பேரக் குழந்தைகளும் வீட்டுக்கு வருவதாகக் கூறி வீட்டு வேலைக்காரி பார்வதி விடுப்பெடுத்திருக்க, அதை ஒன்றுக்கு நூறு தடவைகள் சொல்லிக் காட்டி நைந்தபடி பம்பரமாகச் சுழன்ற திலோவுக்கு கூடமாட ஒத்தாசையாக இருந்த சாரு,

“ஆன்ட்டி, ஐ ஹேவ் டு கோ.. நீங்க மேனேஜ் பண்ணிக்குவீங்கல்ல?” என்று கேட்டு,

“முக்கால்வாசி வேலைய நீயே பார்த்துட்ட! வீட்டயெல்லாம் தூசு தட்டி பெருக்கி போட பக்கத்து தெரு பாரிஜாதத்தை வர சொல்லிருக்கேன். பெருசா வேற எந்த வேலையும் இல்ல கண்ணு. நீ போய் உன் வேலைய பாரு!” என திலோ கூறியதைக் கேட்டு திருப்திபட்டுக் கொண்டு தான் அங்கிருந்து நகர்ந்தாள்.

துள்ளலும் நடையுமாக மாடிப்படியேறி அறையை அடைந்தவள் சாளரமருகே வந்து நின்றாள்.

தோட்டத்து மல்லிகை அறையை ஒட்டிய சுவற்றோடு ஒட்டி வளர்ந்து கமகமத்தது. வானளாவ வளர்ந்து, பல ஜோடிகளுக்கு வள்ளலாய் வாழ்வளித்துக் கொண்டிருந்த மாமரத்தில் குழையாகத் தொங்கிய பழங்களின் நறுமணம் நாசியை நிறைத்தது.

அண்ணாந்து பார்த்தால் பரந்து விரிந்த நீல வானம்; காலுக்குக் கீழே பச்சைப் பசேலென மிக அழகாகப் பராமரிக்கப்பட்ட புற்றரை!

இயற்கை என்பது ஒரு போதை. அந்த போதைக்கு அடிமையானவர்களில் இவளும் ஒருத்தி. ஏனோ விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டே இருக்கப் பிடித்தது, சாருலதாவுக்கு.

ஆனால் அதற்குத் தான் நேரம் இடம் கொட மறுத்ததே! கடமை அவளை வா வாவென பற்களைக் காட்டி அழைத்துக் கொண்டிருக்கையில் இங்கே மற்றவற்றுக்கு என்ன வேலை?

எனவே ரசனைப் பெட்டகத்தைக் கட்டி ஒரு ஓரமாக வைத்தவள் அன்றைய நாளுக்கான உடையை இஸ்திரி போட்டு விட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

சற்று நேரத்துக்கெல்லாம் படு நேர்த்தியாக ஆயத்தமாகி அவள் படியிறங்கி வரும் போது, தேநீரை உறிஞ்சியபடி கேஷவமூர்த்தி கூடத்தில் அமர்ந்திருந்தார்.

இப்போது தான் கடைத் தெருவுக்குச் சென்று நிகிலனுக்கு பிடித்தவற்றை மூட்டை கட்டி எடுத்து வந்திருப்பார் என ஊகிக்க முடிந்தது சாருவால்.

ஒற்றை வாரிசு என்பதால் அவனிருக்கும் நாட்களில் அவனது விருப்பு வெறுப்புகளுக்குத் தான் வீட்டில் முதலிடம். தோட்டத்தில் ஒரு கல் நகர்த்தினாலும் அதை எங்கே தூக்கிப் போடுவதென்று கேட்குமளவுக்கு அவனுக்கு செல்வாக்கிருக்கிறது!

ஒருவேளை இந்த அன்பு தான் பெரும்பாலும் அவனை ‘இப்படிப்பட்டவனாக’ திரிபடைய வைத்திருக்குமோ எனப் பல தடவைகள் சாருலதா எண்ணியதுமுண்டு!

ஆனால் அதை வெளிப்படையாகக் கேட்டு உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யவோ.. சோறூட்டி வளர்த்தவர்களுக்கு வேதனையைக் கொடுக்கவோ ஒரு போதும் முயன்றதில்லை.

நீண்ட பெருமூச்சுடன், “குட் மார்னிங் மாமா!” என காலை வாழ்த்தை மொழிந்தபடி வந்து சோபாவில் அமர, அவள் குரல் கேட்டு மலர்ந்த முறுவலும், உற்சாக முகபாவனையுமாக நிமிர்ந்தவரின் பார்வை சடுதியில் மாறியது.

“என்ன கண்ணு.. எங்க கெளம்பிட்ட?”

ஏற்கனவே ஓரளவு எதிர்பார்த்திருந்தபடியால், “என்ன மாமா, புதுசா பார்க்கற மாதிரி கேட்கறீங்க.. ஜெயசிம்மன் சார் வீட்டுக்கு கெளம்புறேன்!” என்றாள், பெரிதாக அலட்டிக் கொள்ளாமல்.

“சாரு..” – மூர்த்தியின் குரல் தொய்ந்தது.

“புரியுது மாமா! பட் இன்னைக்கு என்னால வர முடியாதுனு ஏர்லியா இன்ஃபார்ம் பண்ணலயே.. இப்போ திடீர்னு கால் பண்ணி டுடே ஐம் ஆஃப்னு சொன்னா டாக்டர் ஏத்துக்குவாரா..” என்றவள்,

‘ஆல்ரெடி நான் அவர் பார்வைல ஒரு அவசர குடுக்கை. இப்போ போய் இன்னைக்கு என்னால வர முடியாதுனு சொல்லிட்டா பொறுப்பு இல்லாதவனு வேற நினைச்சிக்க போறாரு!’ என மனதோடு அங்கலாய்த்துக் கொண்டாள்.

கூடவே, ‘போனதுலேர்ந்து நிகில் கிட்டேர்ந்து ஒரு கால் இல்ல, நானே மெசேஜ் பண்ணுனாலும் ரிப்ளை இல்ல. ஒன்ற மாசத்துக்கு முன்னாடி பண்ணுன மெசேஜே வாட்ஸப்புல இன்னும் காத்து வாங்குது. எப்படியும் டயர்ட்ல சிடுசிடுனு தான் இருக்க போறான், இதுல நான் வீட்டோட இருந்து வேற அவனை வெல்கம் பண்ணனுமா?’ என்ற சலிப்பும் உள்ளிருந்து எட்டிப் பார்த்தது.

“ஆமாங்க, அவ போகட்டும். அவளால முடிஞ்சா ஹாஃப் டேல வீட்டுக்கு வருவா. அதுக்குள்ள நம்ம நிகிலும் வந்துடுவானில்ல?” என திலோத்தமை சாருவுக்காக பரிந்து கொண்டு வர,

“நீ புரிஞ்சு தான் பேசறியா திலோ?” என்ற மூர்த்தியின் குரலில் ஒரு எகிறல்!

“இல்லங்க, நான் சொல்லுற..”

“என்ன சொல்ல போற? சாரு அவளோட சர்வீஸ் ப்ளேஸை மாத்திக்கிட்ட விஷயத்தையே அவன்கிட்ட இன்னும் சொல்லல. இன்னைக்கு அவன் வர்ற நேரத்துல கூட சாரு வீட்டுல இருக்கலேன்னா எப்டி?”

சாரு பார்வை தழைத்து அமைதியாக நின்றிருந்தாள்.

இளசுகளின் வாழ்வில் சுமூகம் எட்டிப் பார்க்க வேண்டும் என்பதற்காக இவர் எவ்வளவு மெனக்கெடுகிறார் என்று நினைக்கும் போது உள்ளுக்குள் ஏதோ அடைக்கும் உணர்வு!

எழுத்துக்கள் கூட்டி வார்த்தைகளைக் கோர்க்க முன்பு, எழுத்துக்களை சரி வர தெரிந்து கொள்ள வேண்டும். அதுபோல், எல்லாவற்றுக்கும் முதலில் இருவருக்கும் ஒத்துப் போக வேண்டுமல்லவா..

ஆரம்பம் தொட்டே அவனுக்கும் சரி, இவளுக்கும் சரி ஒருவரை ஒருவர் ஆகாது. இதில் திருமணம், நிச்சயதார்த்தம் என்ற ஆசை வேறு பெரியவர்கள் மனதில் ஏற்பட்டு விட, மறுக்க இயலாதவாறு நன்றியுணர்வு சாருவுக்கு தடைக்கல்லாய் நின்றது.

‘எனக்கும், உங்களுக்கும் என்னைக்குமே ஒத்து வராது நிகில். நீங்க ஏன் உங்க அம்மாப்பாவோட பேச கூடாது?’ என ஆரம்பத்திலே அவனிடம் பூடகமாக பேசியபோது கூட,

‘இவ்ளோ நாள் சோறு போட்டு வளர்த்தின நன்றிக்காக நீ ஏன் என்னை சகிச்சுக்க கூடாது? நான் எதையும் அவங்க கிட்ட பேசுறதா இல்ல. உனக்கு தேவைனா நீயே போய் உனக்கு புடிக்கலனு சொல்லிக்கோ!’ என கேலி செய்து அந்த ‘நன்றி’யைத் தானே அவனும் நினைவு படுத்தினான்?

இத்தனைக்கும் அவனுக்கு சாருவை கிஞ்சித்தும் பிடிக்காது. வேண்டுமானால் நீயே பேசிக் கொள் என்ற அலட்சியமும், உனக்கு நான் ஹெல்ப் பண்ணனுமா என்கின்ற திமிரும் அவனை வாய் மூடச் செய்திருக்கிறது. ஏனோ அதிலொரு சந்தோஷம் அவனுக்கு!

இதன் மூலம் திருமண பந்தம் என்ற நேர்கோட்டில் நிற்க நேரிட்டால் அவள் மாத்திரமல்ல, அவனுக்கும் தான் அநியாயம். பிடிக்காத மனைவியை ஷோகேஸ் பொம்மை போல் வெறுமனே எத்தனை காலம் தான் வைத்திருக்க முடியுமாம்?

யோசிக்க மறுக்கிறானே, முட்டாள்!!!

உள்மனம் அவனை வைதது.

“சாரு..” என திலோ அவளின் தோள் தட்டினாள்.

“ஆங்!” என அதிர்ந்து தெளிந்தவள் இருவரையும் மாறி மாறிப் பார்க்க,

“மாமா உன்னைப் போக சொல்லிட்டாரு, நீ எங்க தொலைஞ்சு போய்ட்ட.. நான் எவ்ளோ நேரமா கூப்பிட்டுக்கிட்டு இருக்கேன்..” என்றாள், அதட்டும் குரலில்.

“ஏதோ யோசனையா இருந்துட்டேன் ஆன்ட்டி, நான் முடிஞ்ச வரை சீக்கிரமா வர பார்க்கறேன் மாமா. நான் வரேன்..” – முதல் வரி அத்தையிடமும், மீதி வரி கேஷவனிடமும்.

அதற்கு மேல் அவ்விடத்தில் நின்றிருக்காமல் பையைத் தோளில் மாட்டிக் கொண்டு வெளியேறி விட,

“நாளைக்கு நீ அங்க வரலனு சொல்லிட்டு வந்திடும்மா!” என பின்னோடு குரல் கொடுத்தார் கேஷவன். எப்படியும் அவளுக்குக் கேட்டிருக்கும் என்ற திருப்தியைப் பறைசாற்றுவதாக நீண்ட பெருமூச்சொன்று வெளிப்பட்டது அவரிடமிருந்து.

“சில பல நேரங்கள்ல சாருவை நாம புரிஞ்சிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படறோம் கேஷவ்! ஒர்க், அதுல வர செலரி அவளுக்கு எவ்ளோ முக்கியமானதுனு உங்களுக்கே தெரியும்.

ஏற்கனவே நாங்க அவளுக்காக நிறைய செஞ்சுட்டதா உள்ளுக்குள்ள மறுகிட்டு இருக்கா. சிரிச்சி கதைச்சி பேசுனாலும், எங்களுக்கு அவ ஒரு தேவையில்லாத சுமை அப்படிங்குற நினைப்பிருக்கு அவளுக்கு.

அதுக்காக தானே சர்வீஸ்னு சொல்லிக்கிட்டு இப்படி அலைஞ்சி திரியிறா! எங்களை சார்ந்து இருக்காம, தன்னோட தேவைகளை தானே நிவர்த்தி செஞ்சுக்க நினைக்கிற அந்த எண்ணத்தை நாம என்னைக்கும் குறை சொல்ல முடியாது கேஷவ். தாயில்லாத ஒரு பிள்ளயோட மனப் போராட்டம் அது. அதுல குறை காணாம எங்களால முடிஞ்ச அளவு மறைமுகமா ஆதரவு கொடுக்குறது தானே சரி?

நீங்களே யோசிச்சி பாருங்க. நினைச்ச நேரம் அங்க கிளம்பி போறதுக்கும், இல்லனா லீவு போட்டு வீட்டோட இருந்துக்குறதுக்கும் யாரு தான் சம்மதிப்பாங்க?

அதான், அவ போய் வரட்டும்னு நான் சொன்னேன். வந்ததுமே ரெஸ்ட் எடுக்க போறேன்னுட்டு நிகில் ரூம்க்குள்ள போய்ட்டான்னா, சாரும்மா வீட்டுல சும்மா தான் இருக்க போறா. அதை விட அவ போற இடத்துக்கு போய் வரட்டுமே! அவளோட சேவை அவங்களுக்கு தேவைப்படுது..”

ரயில் தாண்டவாளமாய் நீண்ட திலோவின் பேச்சிலிருந்த உண்மைத் தன்மை கேஷவனை அமைதிப்படுத்தியது. கூடவே சாருவுக்காக அவர் மனம் இளகவும் செய்தது.

“இதை எல்லாம் புரிஞ்சிக்கிட்டதால தானே, என் புள்ளய கலியாணம் பண்ணிக் கொடுத்து அவளோட வீண் சிந்தனைகளுக்கு ஒரு முடிவு கட்ட நினைக்கிறேன். அவளை எங்க கூடவே வைச்சுக்க இதை விட்டா வேற வழி தெரியலயே திலோ..”

திலோவின் தலை ஆமோதிப்பாக அசைந்தது.

இங்கே சத்து பானக் கோப்பையோடு விஷாகன் முன் அமர்ந்திருந்தாள், சாருலதா.

திட்ட அதட்டாமல், இன்முகம் மாறாமல், முகம் சுழிக்காமல் தனக்கான அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்யும் சாருவின் மீது அலாதிப் பிரியம் சிறியவனுக்கு.

மற்றவர்களுக்கு எப்படியோ.. ‘இன்னைக்கு நான் ஊட்டறேனே..’ என சேவைக்கு மேலதிகமாக அவள் எதையாவது செய்ய முனைந்தால் முரண்டு பிடிக்காமல் உணவருந்துவான்.

‘விஷுக்குட்டி இப்போ என்கூட வருவாராம், நான் அவருக்கு இந்த தோட்டத்தை ஜாலியா சுத்திக் காட்டுவேனாம்’ என்று கூறிவிட்டால் அவனைத் தூக்கி வீல்ஷேரில் வைப்பதற்கு வாகாக தேகத்தை இலகுவாக்கிக் கொள்வான்.

இருவரிடையே பெரிதாக எந்த பேச்சு வார்த்தையும் இல்லாது போயினும், உணர்வால் பிணைந்திருந்த அந்த உறவில் புரிந்துணர்வு கொட்டிக் கிடந்தது.

அவள் வர சற்றுத் தாமதமானால் வீட்டு வேலையாட்களிடமோ, கெந்தி நடந்து அவனைக் காண வரும் தாயிடமோ, அருகோடு அமர்ந்திருக்கும் ஜெயசிம்மனிடமோ எங்கே என்று கேட்டுக் கொண்டே இருப்பான்.

இன்றும் உணவு வேண்டாம் என அடம் பிடித்தவனின் மூக்கைக் கிள்ளி ஆட்டி சிரிக்க வைத்தவள், அவனைக் கவனித்துக் கொள்ளவென நியமிக்கப்பட்டிருந்த பெண்ணிடமிருந்து உணவுத் தட்டை வாங்கிக் கொண்டதோடு சரி!

மறுக்காமல் உணவை மொத்தமாக காலி செய்துவிட்டு மழலைத் தனம் மாறாது அழகாக முறுவலித்தான்.

“அதானே பார்த்தேன், நம்ம விஷுக்குட்டி ஒரு குட் பாய்! அவரு போய் ஃபூட் வேணாம்னு அடம் புடிப்பராமா.. வர வர சுகன்யாவுக்கு குசும்பு ஜாஸ்தியாகிடிச்சு..” என சிரிப்பும், நகைப்புமாகக் கூறிவிட்டு அறையை சுத்தம் செய்து கொண்டவளுக்கு கண் அசைத்தாள்.

அவளது கேலியைப் புரிந்து கொண்டவளாக மெல்ல நகைத்தவள், “வாஷ் பண்ணவும் முடியாதுனு சொல்லிட்டாரே!” என்க,

“இல்லயே, விஷாகனா அப்படி சொன்னாரு? இருக்காதே.. நீங்க அப்படி சொன்னிங்களா குட்டி பையா?” என யோசனை வயப்பட்ட தோரணையில் சிறியவனை நோக்கினாள்.

உடனடி மறுப்பு அவனிடம்.

பெண்கள் இருவரும் சிரித்துக் கொள்ள, விஷாகன் வெட்கம் கொண்டு தலை தாழ்த்திக் கொண்டான்.

பிறகென்ன.. அவனைக் குளியலறை அழைத்துச் செல்ல உதவிவிட்டு சாருலதா கூடத்துக்கு வந்தாள்.

கட்டுப் பிரிக்கப்பட்ட காலைத் தூக்கி கண்ணாடி மேஜை மீது வைத்தபடி மடிக்கணனியில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தார், ஜெயசிம்மன்.

அரவம் கேட்டு தலை தூக்கியவர், “வாம்மா, விஷாகன் சாப்பிட்டானா?” என்ற வினாவோடு அவளை வரவேற்றார்.

நடந்ததை சுருக்கமாகக் கூறியவள், “விஷாகன் கிட்ட நிறைய மாற்றம் தெரியுது சார். கூடிய சீக்கிரத்துல துணையா எதையாவது பிடிச்சிக்கிட்டு நடக்கத் தொடங்கிடுவாருனு தான் நினைக்கிறேன்..” என்றாள், நம்பிக்கையில் மின்னிய கண்களுடன்.

“பட் அதுக்கு வாய்ப்பே இல்லனு ரிப்போர்ட் சொல்லுதேம்மா!”

“மெடிக்கல் ரிப்போர்ட்னா அப்படித் தான் இருக்கும் சார். அவங்க உள்ளதை சொல்லுவாங்க. இருந்தாலும் முயற்சி நம்ம கைல தானே இருக்கு? மனசு ஒரு விஷயத்தை ஆழமா நம்புதுனா அதுக்கான அடுத்த ஸ்டெப்பை எடுத்து வைக்க வேண்டியது தானே?

விஷாகன் கிட்ட நாம, உன்னால இனி நடக்கவே முடியாதுனு சொல்லலயே! ட்ரை பண்ணட்டும். காயம் ஓரளவு ஆறிடுச்சுனு டாக்டர் சொன்னாரு. இன்னும் கொஞ்ச நாள் போனதும் அடுத்து என்னனு பார்த்துக்கலாம். நம்புங்க சார். நம்பிக்கை தான் வாழ்க்கை!”

ஜெயசிம்மனின் முகம் நம்பிக்கை ஒளியில் தாரகையாய் பளபளத்தது. கண்கள் சட்டெனக் கலங்கின.

“ரொம்ப நன்றிம்மா! இந்த மாதிரி ஆறுதலா ரெண்டு வார்த்தை கேட்கவே மனசு இதமா இருக்கு.”

‘குணமானவர் தான்’ என சாருலதா நினைத்துக் கொண்டாள். மகனுக்கும், மனைவிக்கும் நேர்ந்த விபத்து தான் அவரை மூர்க்கமாக மாற்றியிருக்கக் கூடுமெனப் புரிந்தது. யாருக்குத் தான் ஒரே நாளில் தன்னை சார்ந்திருந்த இருவரும் ஓரிடமே கதியென்று ஆகிப் போனால் மனம் தாங்கும் என அவர் தரப்பு நியாயத்தையும் சிந்தித்துப் பார்த்தாள்.

எப்படியாவது இந்த மூன்று மாதங்களுக்குள் விஷாகன் ஓரளவாவது பழைய நிலைக்குத் திரும்பிவிட வேண்டுமென மனதார வேண்டிக் கொண்டாள். இல்லாவிட்டால் கேஷவமூர்த்தியை அவர் வெறுமனே விட்டு விட மாட்டாரென்ற கவலையில் முகம் சோர்ந்தது.

மூன்று மாதங்களா?

ஆமாம், அது ஜெயசிம்மன் கேஷவமூர்த்திக்கு கொடுத்த காலக்கெடு!

மூன்று திங்கள்கள் வரை விஷாகனின் உடல் நிலை முன்னேற்றங்களை அவதானித்து, கவலை கொள்ளும்படி ஏதுமில்லை என உறுதிப் படுத்தப்பட்டால் வழக்குப் பதிவு செய்வதைப் பற்றி யோசிக்கிறேன் என்று கூறி இருக்கிறாராம்.

இதைக் கூட இரு தினங்களுக்கு முன்பு வாசுதேவ பிரதாப் சொல்லித் தான் அறிந்தாள், சாருலதா.

இதுபற்றி கேஷவன் தன்னிடம் வாய் திறக்கவில்லையே என்ற மனக்குறை வேறு அவளை வருத்திக் கொண்டு தான் இருக்கிறது. ஆயினும் பகிர்ந்து கொள்ள அவருக்குப் பிடிக்காவிட்டால் வற்புறுத்தி அறிந்து கொள்வதில் எந்தப் பயனுமில்லையே என அமைதி காக்கிறாள்.

‘வருகிறேன்’ என்று கூறிவிட்டு அவ்விடம் விட்டு மெல்ல நகர்ந்து கொண்டாள். தலையை நிறைத்த யோசனையில் மண்டை சூடேறத் தொடங்கியது.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!