Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீங்காத உறவே!...

நீங்காத உறவே!… அத்தியாயம் 10

நீங்காத உறவே!…
அத்தியாயம் 10
நிறைக்கு கோபம் என்பதை விட கண்ணெல்லாம் கலங்கிவிட்டது. அதுவும் தன் தாய் சொன்னதும் மறு வார்த்தை எதுவும் பேசாமல் வெளியே சென்ற கணவனை பார்த்ததும் நெஞ்சு கொதித்தது. சூழல் அவளுக்கும் புரிகிறது தான். திலக இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ண தேவையில்லை.
அந்த வீட்டின் மூத்த மகள் அவள் தான், இருக்கும் ஒரு அறையை தங்கைக்கு நிச்சயம் விட்டுக் கொடுத்திருப்பாள். எப்படி என்றாலும் வளரின் கணவன் வெளியாள். அவனை கவனிக்க வேண்டியது தான். அதை அவளே முன்வந்து செய்ய வேண்டும். அதை விட்டு இது என்ன உதாசினம்?…


Advertisement

எந்த இடத்திலும் என்னை முதலில் பார்க்க வேண்டாம். சின்ன வயது முதலே தங்கைக்கு விட்டுக் கொடுத்துப் போனவள். ஆனால், என் கணவனை பார்த்திருக்க வேண்டும் அல்லவா?…
யாரிடமும் ஒரு வார்த்தை பேசவில்லை. வளர்க்கு, அக்காவின் முகத்தை பார்க்க கூட நேரமில்லை. கணவன் வந்த பரபரப்பில் அவனை கவனிக்கும் வேலையில் இறங்கி விட்டாள். திலகாவும் பெரிய மகளை கவனிக்கவில்லை.
அவருக்கு வராத மருமகன் தங்கள் வசதியை தாண்டி இறங்கி வந்திருக்கிறான் என்பதே பெரிதாக தெரிந்தது. நாளைக்கு ஒரு கஷ்டம் என்றால் சொந்தம் வந்து நிற்குமா? வெளி வீட்டு மருமகன் வந்து நிற்பாரா என்ற கணக்கே திலகா யோசிக்கவில்லை. ஏனெனில் அவரைப் பொறுத்தவரை குடும்பத்தை பார்க்க வேண்டியது நிறையின் கடமை. அது அப்படியே அவள் கணவனை சாரும் தானே. ஆக, எல்லோரும் சேர்ந்து தான் வீட்டின் மாப்பிள்ளையான அருணை கவனிக்க வேண்டும் என்பது அவர் எண்ணம்.

Advertisement

வளரும், அவள் கணவனும் அறைக்குச் சென்ற பின், வெளியே வந்து கணவனை தேடினாள் நிறை. பிரபாகரன் சற்று தள்ளி போன் பேசிக் கொண்டிருந்தான். கணவன் அருகில் சென்றவள்,

Advertisement

“எனக்கு வீட்டுக்கு போகணும்” என்றாள்.
முதலில் புரியாமல் பார்த்தவன், புரிந்ததும் அதிர்ந்து போனான்.
 “நிறை, என்ன சொல்ற?” அவனுக்கு மனைவியின் கோபமும், அதில் இருக்கும் நியாயமும் புரிகிறது தான். ஆனால், அதற்கான நேரம் இதுவல்லவே!…

Advertisement

“என்ன சொல்றாங்க. எனக்கு உடனே வீட்டுக்கு போகணும்” பிடிவாதமாக நின்றாள் நிறை.
 “இப்ப எப்படி போக முடியும்? நேரத்தை பாரு ராத்திரி பத்து தாண்டியாச்சு. எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம்” என்று மனைவியை சமாதானம் செய்ய முயல,
 “எனக்கு யார்கிட்டயும் எதுவும் பேச வேணாம். எனக்கு இங்க தூக்கம் வராது. நான் என் வீட்டுக்கு போகணும்” பயங்கர ஆடம் அவள் முகத்தில்.
“இந்த நேரம் பஸ் கூட இருக்காது நிறை” புரிய வைக்க முயன்றான்.
“அதனால என்னங்க, நடந்து போற தூரம் தானே நம்ம ஊரு” என்றதும், அதிர்ந்து போனவன்,
“என்ன பேசுற நிறை. இந்த நேரத்தில் நடந்து போக போறியா?” அவன் குரலில் அதிர்ச்சி குறையவில்லை.
“ஆமா”
“ அப்படி என்ன பிடிவாதம் உனக்கு?”
 “எனக்கு வீட்டுக்கு போகணும்” ஒரே வார்த்தை தான்.
“சரி, காலையில போகலாம்”
“முடியாது. என்னால ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க முடியாது. நீங்க வாரீங்களா என்ன?”
“எனக்கு உன்னை புரியுது நிறை. ஆனா, இது அதற்கான நேரம் கிடையாது”
 “எனக்கும் புரியுதுங்க. ஆனா, சத்தியமா வைராக்கியத்துக்கு கண்ண மூடி படுத்தாலும் பொட்டு தூக்கம் கூட எனக்கு வராது. ஒரு சொட்டு தண்ணி இறங்காது” லேசாக கண்கள் கலங்கியது.
அவளின் முகம் பார்த்ததும் மனம் ஒரு மாதிரியாகியது பிரபாகரனுக்கு… மனைவியின் தோளை தொட்டு,
“என்னம்மா?” என்றதும்,
“வயசுக்கு மீறிய பக்குவம் கூட ஆபத்தானது தான் போல… ஆரம்பத்துல காட்டுற அக்கறையும், பொறுப்பும், பின்னாடி கடமையா மாறி போகுது. அந்தக் கடமை மீள முடியாத ஒரு இடத்தில என்னை சிறை வைக்குது. பல நேரத்துல உணர்வுகளை அடக்கி போக வைக்கிறது. ஏன்னா, ஆரம்பத்திலிருந்து நாம பொறுப்பா இருக்கிறது”
“நிறை” அவளை சமாதானம் செய்யும் விதமாக அழுத்தம் கொடுத்தான்.
“நாம யாருக்காக நம்மளோட சுயத்தை இழந்து நிறைய இடத்துல விட்டுக்கொடுத்து போறமோ, அவங்களே நமக்கு ஒரு இடத்தில காட்டிறாங்க. கொஞ்சம் சுயநலமாக வாழ்ந்திருக்கலாம்ன்னு”
“நிறை, ஒரு சின்ன விஷயம் எதுக்கு இவ்வளவு ஃபீல் பண்ற”
“உண்மையா இது சின்ன விஷயம் தான். அது நம்ம எடுத்துக்கறது பொறுத்து… உங்ககிட்ட உண்மையா ஒரு விஷயத்தை சொல்லவா… எங்க வீட்டில என்னை படிக்க வைக்காம வேலைக்கு அனுப்பி, என் தங்கச்சியை படிக்க வைக்கும் போது.. எனக்கு எடுத்த நகையை என் தங்கச்சிக்கு கொடுக்கும்போது.. என்னை விட அதிகமா அவளுக்கு சீர் செஞ்சு கல்யாணம் பண்ணி கொடுக்கும் போது இப்படி பொதுவா ரெண்டு பொண்ணுங்க இருக்கும் வீட்டில் கோவப்படுற எந்த விஷயத்துக்கும் எனக்கு கோபம் வரல. நியாயமா அதுக்கெல்லாம் தான் நான் கோபப்பட்டு சண்டை போட்டு இருக்கணும்” ஒரு கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்தாள்.
“ஆனா, அதெல்லாம் அவங்களோட சேர்த்து எனக்கும் கடமையா தான் நினைச்சேன். இன்னைக்கும் என் தங்கச்சி கழுத்துல போட்டு இருக்க நகை எல்லாம் என்னோடது.. என்னோட சொந்த உழைப்பு. எனக்கு பெருமை தான் ஒரு ஆம்பளை பையன் இருந்து செய்ய வேண்டிய காரியத்தை நான் முன்ன நின்னு என் தங்கச்சியை கட்டிக் கொடுத்திருக்கேன்”
“ஆனாலும் சின்ன சின்ன விஷயத்துல நான் ஏன் உடைஞ்சு போறேன். இங்க யாருக்கு முன்னுரிமைன்றது போட்டி கிடையாது. எனக்குன்னு, என்னை பெத்தவங்க மனசுல இடம் இல்லையா? எனக்கான மரியாதையும் தாண்டி, எனக்கான அன்பே கிடைக்கல”
“நிறை” அவளை நெருங்கி நின்றான் கணவன்.
“ஆமா, என்னால முடிஞ்ச அளவுக்கு அவங்களுக்கு தோள் கொடுத்தேன். அவங்களையும் சேர்த்து நான் பார்த்துக்கிட்டதால, என்னைய பார்த்துக்க வேண்டியது அவங்க கடமை இல்லன்னு நினைச்சுட்டாங்க போல… அவங்களுக்கான கடமை எல்லாம் என் தங்கச்சியை பார்த்துக்கிறது மட்டும்தான். ஏன்னா நான் தான் ரொம்ப பொறுப்பு. என்னைய யாரும் பார்த்துக்க வேணாம். எனக்கு நானே போதும் போல…”
“என்னைய கட்டின பாவத்துக்கு நீங்களும் எல்லா இடத்திலும் சங்கடப்பட்டு நிக்கிறீங்க. என்னால உங்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை”
“நிறை என்ன பேச்சு இது?” அதட்டினான் கணவன்.
“ரொம்பவும் கையாலாகாத ஊமையா போன மாதிரி ஒரு உணர்வு. இவங்க கிட்ட பேசி புரிய வைக்க முடியாது. எனக்கு கொஞ்சம் தள்ளி போகணும் ப்ளீஸ்” என்றதும், கணவன் மறுக்க வில்லை.
 அத்தை மகள் என்று ஓரளவுக்கு அவள் குடும்ப சூழல் புரியும் என்றாலும் கணவன், மனைவி ஆன பின்பும் ஒருவருக்கொருவர் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டதில்லை. முதல்முறையாக தன்னிடம் மனம் திறக்கிறாள். அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். அவள் பெற்றவர்களைப் போல தானும் அவளை சரி கட்ட பார்க்க கூடாது.
திலகா பரபரப்பாக கிச்சனில் எதையோ கிண்டி கொண்டிருந்தார்.
“அம்மா”
“என்ன நிறை?”
“நாங்க வீட்டுக்கு போறோம்”
 “என்னது இந்த நேரத்துலயா? என்னடி சொல்ற?” பதறினார் தாய்.
அதெல்லாம் நிறைக்கு நிறைவை தர வில்லை. என்ன இருந்தாலும் பெற்ற பாசம் இருக்கும். இங்கு பிரச்சனை அது அல்ல.
நிறை ஒன்றும் அந்த வயதிற்குரிய ஆசைகளை துறந்து பொறுப்புகளை முன்னெடுத்தவள் அல்ல. வேற வழி இல்லாமல் கட்டாயத்தின் பேரில் பொறுப்புக்களை சுமந்தவள். அப்படி இருக்க அந்த வயதிற்குரிய ஆசையும், ஏக்கமும் இருக்கத்தான் செய்யும். அதுவும் நிறை, வளர் போல புதிதாக திருமணமான பெண் தான். தன் தங்கைக்கு கிடைக்கும் கவனிப்பும், ஆதரவும் அன்பும் தனக்கு ஏன் கிடைக்கவில்லை என்ற ஏக்கமும், ஏமாற்றமும், லேசாக தங்கை மீது வந்த பொறாமையும் அவளை அழுத்தியது.
எப்பவும் போல விட்டுக் கொடுத்து பொறுப்புகளை தன் தோளில் ஏற்று பெரிய மனுஷியாக நடந்து கொள்ள தெரியவில்லை. அன்புக்கும், கவனிப்புக்கும், சலுகைக்கும் ஏங்கும் சராசரி பெண்ணாகி போனாள்.
நிறை தாமதிக்காமல் செருப்பை மாட்டிக் கொண்டு நடையை கட்ட, பின் தொடர்ந்தான் பிரபாகரன். இது எவ்வளவு தர்ம சங்கடத்தை கொடுக்கும் என்று தெரிந்தாலும் அவனுக்கு வேற வழி இல்லை. நிச்சயம் மனைவிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். இந்த வெளிநடப்பு ஏதோ ஒரு வகையில் அவளுக்கு ஆறுதலாக இருக்கும் என்றால் அந்த சங்கடத்தை ஏற்க தயார்.
 “பிரபா என்னடா இது? அவ தான் கிறுக்குத்தனமா என்னமோ பேசுறானா.. பொண்டாட்டி முந்திய பிடிச்சுகிட்டு நீயும் பின்னாடியே போற?” திலகா ஏதோ சொல்லியபடி பின்னே வர,
நிறை அழுத்தமாக நின்று தாயைப் பார்த்தவள், “நீங்க கொஞ்சம் முன்ன போங்க” என்று கணவனிடம் சொல்லிவிட்டு,
 “நீங்க கூட என்னை பெத்தவங்க. கூட, குறைய பேசறதுக்கு உரிமை இருக்கு. உங்களை பாக்குற கடமையும் எனக்கு இருக்குன்னு வச்சுக்கோங்க” என்றவள்,
“ஆனா, எனக்கு தாலி கட்டின அந்த மனுசனை ஒரு நாளும் மரியாதை குறைவா நடத்தாதீங்க. நீங்க என்ன சொன்னாலும் தட்டாம கேட்கிறதால அவர் ஏமாளி கிடையாது. அவ்வளவு தங்கமான மனுசன். மாமியார் வீட்டில் எவ்வளவு செஞ்சாலும் குற்றம் குறை சொல்ற ஆம்பளைகளுக்கு மத்தியில, வெறுங்கையை வீசிட்டு வந்த என்னை, இன்ன வரைக்கும் ஒரு வார்த்தை சொன்னது கிடையாது”
“எவ்வளவு ஈசியா டேய் பிரபான்னு சொல்றீங்க”
“என்னடி பேசுற நிறை. அவன் என்ன வேற யாரோவா, என் சொந்த அண்ணன் மகன்”
“இப்போ உனக்கு மூத்த மருமகன். அதுக்கப்புறம் உனக்கு இரண்டாவது மருமகனும் ஒருத்தர் இருக்கான். அவரை மட்டும் வாங்க மாப்பிள்ளை, போங்க மாப்பிள்ளைன்னு சொல்றீங்க. என் புருசன டேய்ன்னு சொல்றீங்க. ரொம்ப சிம்பிளா வா, போனா அசால்டா பேசுறீங்க. நீங்க கூப்பிட்ட குரலுக்கு அவர் வேலை செய்யணும்னு நினைக்கிறீங்க”
“அடி பைத்தியக்காரி அவன் நான் தூக்கி வளர்த்த பிள்ளைடி. அது நான் பொறந்த வீடு” கையை தூக்கினார் பிரபா.
“அங்க நீங்க மட்டும் பிறந்திருந்த கேள்வியே இல்லை. என் தலையை கொண்டு போய் கொடுத்து இருக்கேன். உங்க அண்ணன் வீட்டையும் தாண்டி, உன் மகளை கொடுத்து சம்பந்தம் பண்ண வீடு. அங்க இருக்கிறது எனக்கு மாமனும், அத்தையும் இல்லை. மாமனாரும், மாமியாரும் தான் எனக்கு இருக்காங்க” எப்படி நிறை பேசினாலும் திலகா தன் பேச்சிலே நிக்க,
“நான் என்ன சொன்னாலும் உனக்கு புரியாதும்மா. ஆனா, ஒரே ஒரு விசயம் மட்டும் ஞாபகம் வச்சுக்கோ. இன்னைக்கு நீ  வசதியான, படிச்ச, பணக்கார ஆளுன்னு பாக்குற. ஆனா, இன்னும் காலம் கெடக்கு உங்களுக்கு… நாளைக்கு ஒரு கஷ்டம்னா சொந்தம்ன்னு முன்னணி நிக்க போறது என் புருசன் மட்டும் தான்”
“என் ஒரு மாத சம்பளத்தை தூக்கி கொடுத்தேன்னா, அது என் புருசன் என்னை ஒன்னும் சொல்ல மாட்டார்ன்ற நம்பிக்கைதான். இதே மாதிரி உன் சின்னமக செய்வாளா?.. எல்லாரையும் அரவணைச்சு போற உறவு கிடைக்கிறது கஷ்டம். என் புருசன் அப்படிப்பட்ட ஆளுதான். அவரையே வெறுக்க வச்சிடாதீங்க. பின்னாடி என்னை பெத்தவங்கன்னு செய்றதுக்கு கூட எனக்கு மனசு இல்லாம போயிடும்” என்று ரொம்ப நீளமாக பேசியவள், நிற்காமல் நடந்து விட்டாள்.
 மணி பத்தரைக்கு மேல் இருக்கும். தன் ஊருக்கு செல்லும் பாதையை பார்த்ததும் பிரபாவுக்கு ஒரு நொடி நெஞ்சு பக் என்று இருந்தது. திரும்பி மனைவியை பார்க்க, அவள் கண்களில் துளி பயம் இல்லை. பெண்ணுக்கு என்னவோ ஒரு வைராக்கியம். தலைக்கு மேல் கூரை சொந்தமாக புருசன் வீடு இருக்க நேராக நடந்து விட்டாள். பிரபாகரனுக்கு மனைவியை நினைத்து அவ்வளவு ஆச்சரியம். இரண்டு பக்கமும் கும்மிரட்டு.. ஒரு ஆண்மகன் அவன் தனியாக வர நிச்சயம் தயக்கம் காட்டுவான். நிறைக்கு எந்த பயமும் இல்லை. கணவன் துணை இருக்க தைரியமாக இருட்டில் நடந்து விட்டாள்.
 பாதி ராத்திரிக்கு மேல் வந்து கதவை திறக்கும் தம்பதிகளை, சத்தம் கேட்டு முழித்துப் பார்த்தார் கல்யாணி.
“பிரபா”
“கொஞ்சமாவது அறிவு இருக்காடா? பொண்டாட்டிய தேடி போறது பெருசு இல்லை. ஒன்னு நேரத்தோட வீட்டுக்கு வரணும், இல்லன்னா உன் மாமியார் வீட்டிலே இருக்கணும். அதை விட்டுட்டு நேரம் கெட்ட நேரத்துல பொம்பளை புள்ளைய கூப்பிட்டு ஒத்தையில வரவன்” என்று அதட்டல் போட,
நிறை என்னவோ சொல்ல போக, அதை தடுத்தவன்…
“அத்த வீடா இருந்தாலும் எனக்கு அங்கெல்லாம் சரிப்பட்டு வராதும்மா. அதுதான் நிறையை கூட்டிட்டு வந்துட்டேன்” என்றான்.
“நாங்க வீட்ல இவ்வளவு பேர் இருக்கோம்ல. அவதான் ரெண்டு நாள் அவங்க அம்மா வீட்ல இருக்கட்டுமே. வால் புடிச்ச மாதிரி பின்னாடியே போய் கூட்டிட்டு வாரன்” என்றவாறு உள்ளே சென்று விட்டார்.
நிறை தயங்கினாலும் அத்தையிடம் உண்மையை சொல்லி இருப்பாள். இப்போதுதான் அங்கு ஒரு போராட்டம் முடிந்தது. அடுத்து இங்கு பேசுவதை கேட்கும் அளவுக்கு தெம்பு இல்லை. பிரபாவே சமாளித்து விட்டான்.
நிறைக்கு தன் இடம் வர வேண்டும் என்ற வேகத்தில் அவசரமாக வந்து விட்டாள். தன் வீட்டில் காலடி எடுத்து வைத்த பின்பு தான் உடலில் அவ்வளவு சோர்வு. என்னவோ தனியான உணர்வு. பிரபாவிடம் கூட எதுவும் பேசாமல் சுருண்டு படுத்து விட்டாள். அவனும் அவளை தொந்தரவு செய்யவில்லை. அவனும் ஒரு மூலையில் முடங்கிக் கொண்டான்.
ஒரு கால் மணி நேரம் கழிந்திருக்கும் உறக்கமில்லையே தவிர, கண்களை இறுக்க மூடி கிடந்தாள். அப்போதுதான் நிறைக்கு ஒரு உந்துதல். கணவனுக்கு சாப்பாடு எடுத்து வைக்கும் போது தான் வளரின் கணவன் வந்து சடவாகி போனது. ஐயோ! இன்னும் அவன் உண்ணவில்லையே. மணியைப் பார்க்க நேரம் நடு இரவை தொட்டது. அவன் பசி தாங்க மாட்டான். இந்த வீட்டில் கணவனுக்கு என்று அவள் உருப்படியாக செய்யும் ஒரு விஷயம் மூன்று வேளையும் அவன் உணவு பாட்டை காண்பது தான். அவசரமாக வாரி சுருட்டி எழுந்தவள், வேகமாக அடுப்படி ஓடினாள்.
என்ன இருக்கு என்று பார்த்து ஏதோ அடுப்பில் கிண்ட, பின்னோடு எழுந்து வந்து விட்டான் பிரபாகரன். அவனுக்கு ஒரு குணம் சாப்பாடு என்று தாயிடம் கூட கேட்க மாட்டான். நிறை வரைக்கும் அவன் முகம் பார்த்து தான் உணவை எடுத்து வைப்பது. கல்யாணிக்குப் பின் அவன் முகம் பார்த்து உணவு பரிமாறும் பழக்கம் நிறைக்கு தான் அத்துபிடி.
 அரிசி பருப்பு சாதம் தான் அவசர சமையல். எடுத்து வந்து கணவனிடம் கொடுக்க, பிரபாகரன் மனம் நெகிழ்ந்து இருந்தது. தற்போது அவனுக்கு, மனைவியின் மன அழுத்தம் தெரியும். அந்த நிலையிலும் தன் உணவை கவனிப்பது, அவள் புறம் மனதை சாய்த்தது.
 “நீயும் சாப்பிடு நிறை”
 “வேணாம். எனக்கு சாப்பாடு இறங்கும்னு தோணல”
“எப்படியா இருந்தாலும் நம்ம வாழ்க்கை, நம்ம பாக்க தான் வேணும் நிறை. சும்மா கவலைப்பட்டா ஒன்னும் ஆகாது. முதல்ல உனக்கு நியாயம்னு படுற விஷயத்தை நேர்மையா பேசிட்டு மனசுல இருக்குற அழுத்தத்தை குறைத்துக்கொள். இப்போ சாப்பிடு” என்று அவனும் சாப்பிடாமல் காத்திருக்க,
கணவனுக்காக உணவை எடுத்துக் கொண்டாள். பிரபாகரன் வரும்போது விழித்துக் கொண்ட விரணன் தம்பதிகள். நடப்பதை கவனித்துக் கொண்டுதான் இருந்தார்கள்.
தாம்பத்தியம் என்பது கணவன் மனைவி என்ற இருவரை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. அதில் சுற்றி இருக்கும் உறவுகள் எப்படி இருந்தாலும், தன்னோடு சேர்ந்து பயணிக்கும் உறவு சரியாக அமைந்தால் போதும். இந்த மனித வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து விடலாம்.
நிறைக்கும் மனதில் ஏகப்பட்ட ஏற்றத்தாழ்வு, குறைகள். தாய் வீட்டில் ஆரம்பித்து, பொருளாதார வசதியில் தொடங்கி, மாமியார் வீடு வரை எல்லா பக்கமும் இவளுக்கு முட்டிக்கொண்டு தான் நிற்கிறது. ஆனாலும் அவளுக்கான அமைதியான வாழ்வும், பசித்த வயிறுக்கு உண்ணும் நிறைவான உணவும், நிம்மதியான உறக்கமும் அவள் வாழ்க்கைத் துணையை கொண்டு அமைந்தது. அந்த வகையில் திருநிறைச்செல்வி அதிர்ஷ்டசாலி தான். பிரபாகரனை கொண்டு அவளுக்கு சிறு தொந்தரவும் இல்லை. சுற்றி இருக்கும் ஆயிரத்து எட்டு சிக்கல்ளிலும் வாழ்க்கை சிக்காமல் ஓடுகிறது என்றால் அவளுக்கு அமைந்த கணவன் அப்படி… அதை அவள் அறிவாள். ஆனால், இன்னும் முழுமையாக உணரவில்லை, உணரும் பொழுது அவர்கள் தாம்பத்திய வாழ்க்கையும் முழுமை பெறும்.
நிறைக்கு கொஞ்சம் வாழ்க்கை அமைதியாக நகர்ந்தது. சுற்றி இருக்கும் எதைப் பற்றிய சிந்தனையும் இன்றி நான், என் கணவன் என்ற கட்டமைப்புக்குள் வர ஆரம்பித்தாள். பிரபாகரன் தினமும் கொண்டு போகும் பை ஒரு மாதிரி அறுந்து விழப்போகும் நிலையில் இருந்தது. அதை மாற்றம் சொல்ல வேண்டும் என்று நிறையும் நினைத்திருந்தாள். அன்று திவ்யாவோடு கடைக்கு செல்லும் பொழுது நிறைய கடைகளில் ஆஃபர் போட்டு இருக்க, பார்த்தால் என்ன என்று ஒரு எண்ணம். தன் பட்ஜெட்டுக்கு ஒத்து வருமா என்று தான் பார்த்தாள்.
திருப்திகரமாக ஒன்று அமைய, காசை பார்க்காமல் வாங்கி விட்டாள். கணவன் வந்ததும் கொடுக்காமல் அன்று இரவு படுக்கைக்கு செல்லும் முன் அவன் கையில் கொடுக்க… உண்மையில் பிரபாகரனுக்கு இது பெரிய சர்ப்ரைஸ் தான்.
 “ஹே! நிறை என்ன இது? நான் நெனச்சேன். நீ வாங்கிட்டு வந்துட்ட”
“பின்ன உங்களுக்கு ஒன்னு தேவைன்னு நீங்க நினைப்பதற்கு முன்னாடியே, நான் வாங்கி கொடுத்துடுவேன்” என்றாள் பெருமையாக.
“அப்படியா!.. அப்ப நான் நினைக்கிறது எல்லாம் நான் கேட்காமலே கிடைக்கும்ன்னு சொல்லு” என்றான் உதட்டில் சிரிப்பை அடக்கி.
“என்ன டபுள் மீனிங்கா? அவ்வளவு சீன் எல்லாம் உங்களுக்கு கிடையாது” என்று அதட்டல் போல சொல்ல, பின் வாங்கி விட்டான் பிரபாகரன்.
“இல்லை நிறை சிங்கிள் மீனிங் தான். எனக்கு இது தேவைன்னு எனக்காக யோசிச்சு வாங்கி இருக்க இல்லை. நான் எதிர்பார்க்கவே இல்லை. தேங்க்ஸ்” என்றான் உண்மையாக,
“அது வந்து, இது நீங்க கொடுத்த பணத்தில் வாங்கினது தான். பெருசா நான் ஒன்னும் என் சம்பாத்தியத்தை வாங்கி உங்களுக்கு செலவு பண்ணலையே” என்றாள் சங்கடப்பட்டு கொண்டே,
“அது என்னோட பணம்ன்னா என்கிட்ட தான் இருக்கும். அது உனக்கும் உரியது என்றதுனாலதான் உன் கைல கொடுத்தேன். அதோட கையில் பணம் இருந்தாலும் எனக்காக யோசித்து வாங்கணும்ல்ல. அது பெரிய விசயம். அப்படி எனக்காக நீ யோசிக்கிறல்ல. அதுக்கு தான் தேங்க்ஸ்”
பிரபாகன் நெகிழ்ந்து போய் சொல்ல, அவனுக்கு இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று ஆசை நிறைத்து வந்தது. அடுத்த மாத தன் வருமானத்தில் கணவனுக்கு நிச்சயம் ஏதாவது ஒன்றை வாங்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டாள்.
 நிறை தன் பிறந்த வீட்டை விட்டு சற்று தள்ளி நின்றாள். எதுவென்றாலும் ஓடிப் போய் நிற்பதால்தான் என்னோடு சேர்த்து என் கணவனும் இளக்கரம் போல… அதனால் அவள் தள்ளியே நின்று கொண்டாள். கொஞ்ச நாட்கள் அமைதியாக தான் சென்றது. ஆனால், அப்படியே சென்று விடுமா என்ன?
அடுத்த மாதமே திலகா போன் செய்துவிட்டார். என்னவாக இருக்கும் என்ற யோசனையோடு போனை எடுக்க,
“நிறை, வீட்டுக்கு வாரியா ஒரு பெரிய பிரச்சனை?”
“என்ன பிரச்சனை. என் கையில எல்லாம் இப்ப காசே இல்லை”
 “இது காசு பிரச்சனை இல்லடி வேற சம்பந்தம் பண்ண வீட்ல சண்டை. உன் தங்கச்சி கோச்சிக்கிட்டு நம்ம வீட்ல வந்து இருக்கா” என்று தாய் சொன்னதும்,
“ஏதாவது குடும்ப சண்டையா இருக்கும். எனக்கு வேலை இருக்கு” என்று தாயிடம் கடுப்பாக பேசினாலும், மனம் தாங்கவில்லை அவளுக்கு…
 நம்ம மனசு என்ன மனசு. கடவுள் எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு மனசை கொடுக்கணும்… எதையும் கண்டுக்காம இருக்க முடியல என்று புலம்பியபடி தாய் வீடு நோக்கி நகர்ந்தாள்.
 அங்கு தாய் ஒரு பக்கமும், தங்கை ஒரு பக்கமும் அழுது கொண்டிருக்க சத்தம் இல்லாமல் அமர்ந்திருந்தார் தந்தை.
“என்னம்மா?”
“எல்லாம் கூறு கெட்ட உங்க அப்பன் தான்”
“என்ன பண்ணாரு” என்றாள் பதட்டமாக,
 “என்ன பண்ணனும். இந்த மனசன் குடிச்சு கெட்டதும் இல்லாம, வீட்டுக்கு வந்த மருமகனுக்கும் ஊத்திக் கொடுத்து இருக்காரு. அதுவும் மருமகன்கிட்ட காசு வாங்கி இவர் குடிச்சது மட்டும் இல்லாம மருமகனுக்கும் கொடுத்து அவங்க வீட்ல பெரிய ரகளையாகி வளர வீட்டுக்கு அனுப்பி விட்டுட்டாங்க” என்று அழுக,
தந்தையை எரிச்சலாக பார்த்தாள் நிறை.
“மருமகன் கிட்ட கை நீட்டி காசு வாங்கி குடிக்கிற அளவுக்கு தரம் கெட்டு போயாச்சா? இதுல சம்பந்தம் பண்ணிய வீட்ல ரகளை. மருமகனுக்கும் ஊத்தி கொடுத்து மக வாழ்க்கையும் கெடுக்க முயற்சி பண்ணியாச்சு?” என்ன மனுஷன் இவர் என்று கோபம் வந்தது நிறைக்கு….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!