Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அவள் என் பொன்னெழில்

அவள் என் பொன்னெழில் 8.2

திருனேஷ்வரனுக்கு அழைப்பு வர, ஏற்றதும் “டேய் மச்சி, ரிலீஸ் ஆகிட்டியாடா? போன் செய்து பார்க்கலாம்னு பார்த்தா உடனே அட்டன் பண்ணிட்ட? எப்போடா வந்த? ஏன் எனக்கு கால் பண்ணல?” என ஆர்பரித்தான் திருனேஷ்வரனின் பால்ய கால நண்பன்.

“இரண்டு நாள் ஆகுதுடா, நான் வந்தது உனக்கெப்படி தெரியும்?”

“அதெல்லாம் நேர்லதான் சொல்லனும்”

“எங்க இருக்க?”



Advertisement

“வீட்டுக்குள்ளயே இருக்கிறது ஒரு மாதிரி இருந்தது, அதனால வெளில சும்மா நடந்து வந்துட்டிருக்கேன்”

“சரி நீ எங்க இருக்கியோ அங்கேயே இரு, பத்து நிமிஷத்துல நான் வந்து பிக்கப்பண்ணிக்கிறேன்” என்றவன் சொன்னபடி பத்து நிமிடத்தில் வந்தான்.

கட்டியணைத்துக்கொண்டவன், “ரொம்ப இளைச்சிட்டடா” என்றான் வருத்தமாக.

Advertisement

“ம்ப்ச்… இப்போதான்டா ஃபிட்டா இருக்கேன்” என்றான் இலகுவாக.

Advertisement

“அந்த பொன்மணி விஷயத்துல எப்படிடா நீ மாட்டின?”

“அதை விடுடா, வேற பேசுவோம்”

“அதுதான்டா விசயமே, அந்த பொன்மணி லேசுபட்ட ஆளில்லடா, சரியான தில்லாலங்கடி”

Advertisement

திருனேஷ்வரன் முறைக்கவே, “நானும் சின்னபொண்ணு, யாருக்கோ பயந்து அப்படி சொல்லிட்டானுதான் நினைச்சேன், ஆனா போன வாரம் அவ பைனான்ஸ் கம்பெனிக்கு வந்திருந்தா, ஆனா அப்போ என்ன பேசினாங்கனு தெரியாது, ரூம்க்குள்ள பேசிட்டிருந்தாங்க” என்று அன்று நடந்ததை சொன்னவன், “நேத்து ஈவ்னிங் எங்க பாஸையே மிரட்டிட்டு இருந்தாடா” என்றான்.

“என்னனு மிரட்டினா?”

“அதெல்லாம் எனக்கு தெரியாது, ஆனா நீ சொன்னதை செஞ்சுட்டேன், இதுக்கு மேல நீ எதிர்பார்க்குறது நடக்காது. என் பொண்டாட்டிக்கு இந்த விசயம் தெரிய வந்தா, எதைப்பத்தியும் யோசிக்காம உன்னை முடிச்சிடுவேன், எனக்கு பதிலா சரண்டர் ஆக பலபேர் கை வசம் இருக்காங்கனு என் பாஸ் அவளை மிரட்டனு இரண்டு பேரும் மாத்தி மாத்தி மிரட்டிட்டிருந்தாங்க.

இந்த பொன்மணி எங்க பாஸை வச்சிட்டிருந்திருப்பா போல, இப்போ பணம் பறிக்க ப்ளாக்மெயில் பண்றானு நினைக்கிறேன். அவ தெரிஞ்சேதான்டா உன்னை மாட்டி விட்டுருக்கா, சும்மா விடக்கூடாது அவளை” என வெகுண்டான்.

“டேய் அவ அப்படிபட்ட பொண்ணில்லைடா, அவளால எனக்கு உண்டான கெட்ட பேரை சரி பண்ண முயற்சி பண்றா”

“அவளால உன் வாழ்க்கையே போச்சு, அவளுக்கு பரிஞ்சு பேசிட்டிருக்க” என்றான் கோபமாக.

“அவளை எங்க பார்த்த?”

“என்னை நம்பமாட்டியா? இரண்டு பேரும் பேசிட்டிருந்ததை கேட்ட பின்னதான் நீ ஊருக்கு வந்ததே எனக்கு தெரிய வந்தது”

“எங்க பார்த்தனு கேட்டேன்”

“என் ஆஃபீஸ்க்கும் ஆப்போஸிட்ல இருக்க பேக்கரி முன்னாடி நின்னு பேசிட்டிருந்தாங்க”

“எனக்கு அந்த சத்யப்ரகாஷ் யாருனு தெரியனும்டா”

“அவர்தான்டா என் பாஸ், அவரை எதுக்கு பார்க்கனும்?”

“அவன்தான்டா பொண்மணியை” கற்பழித்தவன் என்ற வார்த்தையை முழுங்கியவனின் முகம் இறுகியது.

“உண்மையா அவர் அப்படியில்லைடா, பிஸ்னஸ்ல கராரா இருப்பார், மத்தபடி பொண்ணுங்ககிட்ட ஜெனியுனா நடந்துப்பார், இந்த பொன்மணிதான் எதோ தில்லாலங்கடி வேலை பண்ணிருக்கா” என்றான் மீண்டும்.

“ஓ…” என்று ஆமோதிப்பவன் போல் சொல்லி, ஒரு டீ கடையில் நின்றபடி சற்று நேரம் பேசிய பின்னே சத்யப்ரகாஷைப் பற்றியும் விசாரித்துக்கொண்டான் திருனேஷ்வரன்.

சிறையில் பட்ட துன்பத்தினை போக்க எண்ணியும், அச்சூழலிலிருந்து வெளிவரும் மனநிலைக்கான வழிகளைப் பற்றியும் நிறைய பேசினான் நண்பன்.

நண்பன் பேசிய அனைத்தையும் ஏற்பதுபோல தலையசைத்துக் கொண்டிருந்தவனின் எண்ணமெல்லாம் பொன்மணியைச் சுற்றித்தான் இருந்தது.

இவளுள் இருப்பது குற்றவுணர்வு மட்டுமல்ல, பழிவாங்கும் உணர்வும்தான். அன்று மருத்துவமணையில் பழைய விசயங்களை நினைக்கக்கூடாதென்று அத்தனை சொல்லியும் இவள் கேட்கவில்லை.

அப்பொழுதே மிரட்டி பொய் சொல்ல வைத்தவன், தற்போது என்ன செய்ய காத்திருக்கிறானோ? என கோபமாய் நினைத்தவனுக்கு மருத்துவமணையில் பார்த்த பரிதாபமான முகம் நினைவிற்கு வர, “பெரிய இவன்னு நினைப்பு” என்றான் கடுப்பாக.

“யாரைடா சொல்ற?”

“ம்ப்ச் ஒன்னுமில்ல, கிளம்பலாம், வீட்ல எப்போ வருவேனு பார்த்துட்டு இருப்பாங்க” என்று எழுந்தான்.

“ஆமாம்டா, அம்மாக்கு பேச நிறைய இருக்கும். வா வீட்டுல விட்டுடறேன்”

“இல்லைடா, எனக்கு நடக்கனும்” என்று நண்பனை அனுப்பிவிட்டு தனியே நடந்து வந்துகொண்டிருந்தான்.

சத்யப்ரகாஷ் வீட்டிற்கு வந்து மன்னிப்பு கேட்டதைப் பற்றி அன்னை சொல்லும்போதே, அவன் மீது கட்டுக்கடங்காத கோபம்தான். தற்போது நண்பம் மூலம் சத்யப்ரகாஷ் யாரென்று அறிந்துகொண்டவனுக்கு முகமெல்லாம் சிவந்தது கோபத்தில்.

பொன்மணி இதனை சுலபமாக விடமாட்டாள் என்று தற்போதுதான் புரிந்தது திருனேஷ்வரனுக்கு. தனது அவமானம் துடைக்க வேண்டி சத்யப்ரகாஷின் பலம் தெரியாமல் அவனிடம் மோதிக்கொண்டிருக்கிறாள்.

அவள்தான் எதோ சொல்லி பயமுறுத்தி தனது பெற்றோரிடம் உண்மையை சொல்ல வைத்திருக்கிறாள். அவன் அத்தனை நல்லவனாக இருந்தால் இச்செயலையே செய்திருக்கமாட்டான்.

இவளின் செயலால் கோபமடைந்து நான் இல்லாத நேரத்தில் அவனால் தாய்தந்தைக்கு இன்னல் நேர்ந்தால் என்ன செய்வது என்ற கோபம் வந்தது.

அதோடு இவள் தனக்கு என்ன நியாயம் செய்தாலும் தனது பெற்றோர் இவளை சாடுவது அதிகமாகுமே தவிர, கடுகளவும் குறையப்போவதில்லை. எதை சாதிக்க தேவையில்லாமல் பிதற்றிக்கொண்டிருக்கிறாள் என மனதோடு பொன்மணியை திட்டியபடி நடந்துகொண்டிருந்தான்.

*** *** *** ***

கணவன் மொபைலில் பொன்மணியின் எண் பதியப்பட்டிருக்க, அவன் கற்பழிக்க முயற்சி செய்த பெண் இவள்தானே? அவளின் எண் உன்னிடம் எதற்கு? நீ ஏன் அவன் வீட்டிற்கு சென்றாய்? என்று கேட்க, சத்யப்ரகாஷின் பதில் சமாளிப்பாக இருப்பது அப்பட்டமாக தெரிய, நேற்றிரவே பெரும் வாக்கு வாதம் இருவருக்கும்.

மனைவிக்கு சந்தேகம் வந்துவிட்டது. அவன் வீட்டிற்கு நான் சென்றதை பொன்மணிதான் சொல்லியிருப்பாள். இதற்கு மேல் இவளை விட்டு வைக்க கூடாது என்ற ஆத்திரம் வந்தது சத்யப்ரகாஷிற்கு.

ஆனால் இவளை ஏதாவது செய்தாலும் குழந்தை விசயம் வெளிச்சத்திற்கு வரும் என்று பொன்மணி சொன்னது நினைவு வர, என்ன செய்வதென்று புரியாமல் நேற்றிரவிலிருந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறான் சத்யப்ரகாஷ்.

பொன்மணியிடமிருந்து அழைப்பு வரவே அழைப்பை துண்டித்தான்.

மீண்டும் அழைப்பு வந்தது. அழைப்பு மனைவியிடமிருந்து என்பதால் அழைப்பை ஏற்றான்.

ஆனால் பேசியது பொன்மணி. “நீ… நீ எப்படி?” என்றவன், ப்ச் என தன்னைத்தானே நிந்தித்து? “யார் நீ?” என்றான்.

“குரல் வச்சே பொன்மணினு தெரியுற அளவுக்கு இந்த பொண்ணு உனக்கு பரிட்சயமா?” என்றாள் சத்யப்ரகாஷின் மனைவி.

“இல்லம்மா” என்று சத்யப்ரகாஷ் சமாளிக்க,

பொன்மணி “இனி மறைச்சு ப்ரையோஜனம் இல்லை சத்யா” என்றாள் பாவமாக.

எதோ இருவருக்கும் நல்ல புரிதல் இருப்பதுபோல் பொன்மணியின் பேச்சிருக்க, “ஏய்…” என இவன் மிரட்ட, “நான் என்ன பண்றது சத்யா? அன்னைக்கு நீ பொய் சொல்ல சொல்லி மிரட்டின… உன் மிரட்டலுக்கு பயந்து பொய் சொன்னேன்.

இன்னைக்கு உங்க பொண்டாட்டி உண்மையை சொல்ல சொல்லி மிரட்டினாங்க. இவங்க மிரட்டலுக்கு பயந்து உண்மையை சொல்லிட்டேன்.

மிரட்டினா பயப்படுவேனு உங்களுக்கு என்னைப் பத்தி அப்போவே தெரியும்தானே? உங்க பொண்டாட்டிக்கு தெரியாம நீங்கதான மேனேஜ் பண்ணியிருக்கனும்?” என்றாள் பாவம் போல.

இருவரும் எங்கிருக்கிறார்கள்? கற்பழித்ததையும், குழந்தை இருப்பதையும் சொல்லிவிட்டாளா? என்று வியர்த்துப் போனது சத்யப்ரகாஷிற்கு.

“பொன்மணி வீட்டுக்கு வாங்க” என்று கணவனுக்கு கட்டளையிட்டு இணைப்பை துண்டித்தாள் சத்யப்ரகாஷின் மனைவி.

அச்சோ அங்கையே போய்ட்டாளா? என்று பதறியபடி விரைந்தான் பொன்மணி வீட்டிற்கு.

அங்கே தெருவாசிகளின் சிறு கூட்டத்தோடு திருனேஷ்வரனின் பெற்றோரும் இருக்க, மரணபயம் வந்தது சத்யப்ரகாஷிற்கு.

“உங்க வீட்டுக்கு வந்து இவர் என்ன பேசினார்?” என கணவனை காண்பித்து திருனேஷ்வரன் பெற்றோரிடம் விசாரித்தாள் சத்யப்ரகாஷின் மனைவி.

தனது மகன் ஒழுக்கமானவன் என்று நிரூபிக்கும் வாய்ப்பை நழுவ விடாமல், அன்று வீட்டிற்கு வந்து சத்யப்ரகாஷ் அவனின் குற்றத்தை ஒப்புக்கொண்டு பேசியதை ஒப்புவித்தார் திருனேஷ்வரனின் அன்னை.

மனைவியிடம் “இல்லம்மா, இவங்க பொய் சொல்றாங்க” என சத்யப்ரகாஷ் திணற, அவனின் மனைவி பொன்மணியின் பெற்றோரை பார்த்தாள்.

இன்று அனைவர் முன்னிலையிலும் உண்மையை சொல்லாவிட்டால் இனி உங்கள் மகளை உயிரோடு பார்க்க முடியாது என்று பொன்மணி தனது பெற்றோரை மிரட்டி வைத்திருக்க,

கற்பழித்ததை ஒத்துக்கொண்டால் நானும் உயிரோடு இருக்கமாட்டேன் என்று அஞ்சுகம் சொல்ல, சரி அதை சொல்ல வேணாம், ஆனால் அன்று தவறிழைத்தது சத்யப்ரகாஷ்தான் என்று ஒப்புகொள்ள வேண்டும் என்றிருந்தாள்.

அவர்களும் சத்யப்ரகாஷ்தான் குற்றவாளி என்றதோடு, திருனேஷ்வரன் பெற்றோரிடம் மன்னிப்பு வேண்டினர்.

பொன்மணியின் பெற்றோரை ‘பத்து லட்சம் பணத்துக்காக இப்படி பொய் சொல்லிட்டிங்களே’ என சாடினர் சிலர்.

‘பொய்யும் சொல்லிட்டு இத்தனை வருசமா அமுக்கமா இருந்திருக்காங்க என சாடினர் சிலர்.

சத்யப்ரகாஷின் மனைவியோ ‘இனி உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பறேன்’ என்று அவமானத்தோடு கிளம்பினாள்.

மகள் மீது உயிரையே வைத்திருக்கும் மாமனார் இனி தன்னை என்ன செய்யப்போகிறாரோ என்ற பயத்தோடு, சுற்றியிருப்பவர்கள் பேசுவதை கேட்க சகிக்க முடியாமல் கிளம்ப ஆயத்தமானான் சத்யப்ரகாஷ்.

சத்யப்ரகாஷின் துன்ப நிலையை ஆழ்ந்து அனுபவித்தாள் பொன்மணி.

தன்னையும், குடும்பத்தாரையும் மற்றவர்கள் இழித்து பேசுவதெல்லாம் பொன்மணிக்கு பாதிப்பை ஏற்படுத்தவேயில்லை. மாறாக திருனேஷ்வரனின் பெற்றோரையும், திருனேஷ்வரனையும் பாவம், செய்யாத தவறிற்கு ஐந்து வருடம் தண்டனை அனுபவித்திருக்கிறான் என்ற பரிதாப பேச்சுகளே பொன்மணிக்கு நிம்மதியை கொடுத்தது.

தற்போதும் கூட திருனேஷ்வரனின் கொடுமையான ஐந்து வருடங்களை திருப்பிக்கொடுக்க முடியாது என்ற வேதனை இருக்கிறதுதான். ஆயினும் அவர் குற்றவாளி இல்லை என்று நிரூபித்தது இனம் புரியாத இதத்தை கொடுத்தது.

“திட்டுறோமே… கொஞ்சமாவது உரைக்குதா பாரு? யாருக்கோன்ற மாதிரி நின்னுட்டிருக்கா?” என்று திருனேஷ்வரனின் அன்னை பொன்மணியை சாட,

நான் சொன்ன பொய்யால் நடக்க முடியாத அளவிற்கு அன்று திருனேஷ்வரனை அடித்தார்கள் என்று தந்தை சொன்னது நினைவிற்கு வர, இந்த திட்டெல்லாம் போதவே போதாது என்பதாய்தான் நின்றிருந்தாள் பொன்மணி.

*** *** *** *** *** ***

திருனேஷ்வரன் தனது வீட்டருகே வர, தனது தந்தையிடம் பேசியபடி பைக்கில் வந்து கொண்டிருந்தவனின் வாயில் ‘அந்த பொன்மணி ஒரு ஃப்ராடு’ என்ற பேச்சு திருனேஷ்வரன் காதினில் விழ, சட்டென பைக்கை வழி மறைத்த திருனேஷ்வரன், “சத்யப்ரகாஷ்?” என்றான் கேள்வியாக.

“ஆமாம், எனக்கு அர்ஜன்ட் வேலையிருக்கு” என்று இவன் கிளம்பப்பார்க்க, பொன்மணி வீட்டிற்கும் இதுதான் வழி, சற்று முன் நண்பன் பேசியதை நினைத்தவன், ஆக… பொன்மணி வீட்டிலிருந்துதான் வருகிறான்.

பொன்மணியை மிரட்ட சென்றிருக்கிறான் என நினைத்தபடி அவனின் சர்ட்டை கொத்தாக பிடித்து கீழிறக்கியவன், தனது வீட்டினுள் இழுத்துச் சென்றான்.

வீட்டில் யாரும் இல்லாதது சந்தேகத்தை விளைவித்த போதும், தற்போது அது நல்லதாக படவே, “பொன்மணியை பழிவாங்க போனியா?” என்றான் பிடியை தளர்த்தாமல்.

“இ… இல்ல, என்னை விடு திருனேஷ்”

“ஓ… நான் திருனேஷ்வரனு தெரிஞ்சிருச்சா?” என்றவன் வேறெதுவும் பேசவில்லை. கதவை தாழிட்டு, சத்யப்ரகாஷின் கைகளை பின்புறமாக சேர்த்துக் கட்டியவன், அவனின் வாயினில் துணியையும் திணித்து, சிறு வயதில் தான் விளையாட உபயோகப்படுத்திய கிரிக்கெட் ஸ்டெம்ப்பை பரணிலிருந்து எடுத்து, அடித்தான் பத்து நிமிடம் வரை.

அடி ஒவ்வொன்றும் சில நொடிகள் இடைவெளி விட்டுத்தான் அடித்தான். ஆனால் ஒவ்வொரு அடியும் இடியாய் இறங்கியது சத்யனுள்.

இந்த அடியை அவன் உயிர் உள்ள வரை மறக்கக்கூடாது, ஆனால் காயம் ஆகக்கூடாது, என்பதில் கவனம் வைத்து அடித்தான்.

அடி… உள்ளங்காலிலும், அவனின் பின் புறத்தில் மட்டுமேதான். அடித்த இடத்திலேயே அடி விழ, துடித்துப்போனான் சத்யப்ரகாஷ்.

“இந்த அடி… என் வீட்டுக்கே வந்து என் அப்பாம்மாகிட்டயே உண்மையையும் சொல்லி, பணம் வாங்கிக்க கேட்டதுக்கு மட்டும்தான். நீ வாங்க வேண்டிய பாக்கி இன்னும் நிறைய இருக்கு” என்க, கதவை தட்டும் சத்தத்தில் திருனேஷ்வரன் வெளியே வந்தான்.

பக்கத்திலுள்ளவர்கள் விசயத்தை சொல்லி, “உன் அப்பாம்மாலாம் அங்கதான் போயிருக்காங்க” என்றனர்.

சரி என்பதாய் தலையசைத்து உள்ளே சென்றவன், சத்யப்ரகாஷின் கட்டுகளை அவிழ்த்து விட்டு, “உன் நல்ல நேரம் இன்னைக்கு தப்பிச்சிட்ட, பொன்மணி குடும்பத்துக்கு உன்னால எதாவது பிரச்சனை ஆனது… உயிரோட இருப்ப… ஆனா உடம்புல ஒரு உறுப்பும் வேலை செய்யாது” என்று எச்சரித்து விடுவித்து, பொன்மணி வீட்டிற்கு விரைந்தான் திருனேஷ்வரன்.

இத்தனை நேரம் ஊரார் திட்டை இன்பமாக வாங்கிக்கொண்டிருந்த பொன்மணிக்கு திருனேஷ்வரனை கண்டதும்தான் முகம் தவிப்பிற்குள்ளானது. அன்று மருத்துவமணையில் பார்த்த போது தோன்றியது போல, தற்போதும் காலைப் பிடித்துக்கொண்டு கத்தி அழவேண்டும் என்று தோன்ற, திருனேஷ்வரனையே இமைக்காமல் பார்த்திருந்தாள் பொன்மணி.

நடந்தவைகளை செல்லம்மாள் மகனுக்கு விளக்க, தனது அவப்பெயர் போக்க, அவளின் எதிர் வாழ்வைப் பற்றிய பயமும் கவலையும் இல்லாமல் எத்தனை சிரத்தை எடுத்திருக்கிறாள் எனப்புரிந்தது திருனேஷ்வரனுக்கு.

இவள் கடந்த ஐந்து வருடம் மட்டும் தன்னை சுமக்கவில்லை. இனி வரப்போகும் காலங்களிலும் இவள் நினைவிலிருந்து நான் மறையப்போவதில்லை என்று தெளிவாக புரிய, கூட்டத்திலிருந்து சற்று விலகியவன், நண்பனுக்கு அழைத்து சொற்ப நொடிகளே பேசி, “அஞ்சு நிமிஷத்துல சொன்னதை வாங்கிட்டு வாடா” என்று இணைப்பை துண்டித்தான்.

“இப்போ போன் பேசுறதுதான் முக்கியமா? உன் வாழ்க்கையை நாசமாக்கினவனவ உன் கண்முன்னாடி நிக்கிறா, ஒத்த வார்த்த அந்த புள்ளையை கேக்குறியாடா?” என செல்லம்மாள் கடிய,

“அதான் நீங்களும் ஊராரும் கேக்குறாங்களேம்மா. இன்னும் என்ன பேசனுமோ இப்போவே பேசிக்கோங்க. இன்னும் பத்து நிமிஷம் கழிச்சு உங்களால ஏதும் பேச முடியாது” என்றான் அன்னையிடம்.

சத்யப்ரகாஷை இவள்தான் வரவழைத்திக்கிறாள், நினைத்தபடி ஊரார் முன்னே தனது அவப்பெயர் போக்க அவளால் ஆனதை நிகழ்த்திவிட்டாள் என நினைத்தபடி நண்பன் வரும்வரை பொன்மணியைத்தான் பார்த்திருந்தான்.

ஆனால் அது எப்படிப்பட்ட பார்வை என்று யாராலும் கணிக்க முடியாமல் போக, திருனேஷ்வரனின் அத்தைக்கு மட்டும் கிலி பிடித்தது.

திருனேஷ்வரனின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் அவனருகே பொன்மணி வர, திருனேஷ்வரனின் நண்பனும் வந்திருந்தான்.

“பழி வாங்க நினைச்சு உன் வாழ்க்கையை நரகமாக்கிக்காதடா” என்ற நண்பனின் அறிவுரைகள் திருனேஷ்வரனின் செவியை சென்றடைந்தபோதும் மனதை சென்றடையவில்லை.

திருனேஷ்வரனின் பாதங்களில் சரணடைந்து பொன்மணி கண்ணீர் விட, அவளை தோள்தொட்டு தூக்கி நிறுத்தினான்.

ஊரார் திகைத்து நிற்க, பொன்மணி தனது மறுப்பை தெரிவிக்க, திருனேஷ்வரன் மற்றும் பொன்மணியின் பெற்றோர் பதைத்து நிற்க, திருனேஷ்வரனின் அத்தை அவனின் செயலை தடுக்கப்பார்க்க, அனைத்தையும் மீறி பொன்மணி கழுத்தில் மஞ்சள் கயிற்றினை அணிவித்தான் திருனேஷ்வரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!