Skip to content
Post Views: 13,474
நீங்காத உறவே!…
அத்தியாயம் 11
தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள் நிறை. தங்கை வீட்டில் எப்படி போய் சமாதானம் பேச, தந்தை செயலுக்கு என்ன நியாயம் சொல்ல முடியும். வயிற்றில் பிள்ளையை வைத்துக் கொண்டு தங்கை அழுவதும் மனதுக்கு பாரமாக இருந்தது. திரும்பித் தந்தையை பார்த்தால், தலையை குனிந்து கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தார்.
“ஏம்பா இப்படி பண்ணுனீங்க. உங்களுக்கு பொறந்த பாவத்துக்கு எங்களை நிம்மதியாக வாழ விட மாட்டீங்களா?” கோபமாக கேட்க,
Advertisement
தலையை நிமிர்ந்து பார்த்தார் தெய்வம், “இனிமே அப்படி பண்ண மாட்டேன் நிறை. எனக்கே தெரியல எப்படி இப்படி புத்தி கெட்டு போனேன்னு”
தந்தை எப்பவும் சொல்லும் வார்த்தை தான் இவை… இவரோடு பேசுவது பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாததற்கு சமம். எத்தனை ஆண்டுகளாக புத்தி கெட்டுப் போய்விட்டது. பதினெட்டு வயதில் மகள் குடும்ப சுமையை சுமக்கும் போது வராத புத்தி, மருமகனும் ஊத்தி கொடுக்கும் போத வரப்போகுது”
“நீங்கதான் தினமும் குடிச்சு சீரழியிறீங்களே.. வீட்டுக்கு ஒரு பத்து ரூபா குடுப்பீங்களா? எப்படியோ போங்க, வீட்டுக்கு ஆம்பளைன்னு ஒரு ஆளா இருந்தா போதும்னு உங்களை தான் தண்ணி தெளிச்சு விட்டாச்சுல்லா..”
Advertisement
“உங்க சுதந்திரத்தில் தான் பொண்டாட்டி, பிள்ளை யாரும் தலையிடுவது கிடையாதே. பேரன், பேத்தி எடுக்கிற வயசுலயும் பேச்சுலர் லைஃப் வாழ்ந்துட்டு இருக்கீங்க. அப்படியே சுத்திட்டு இருக்க வேண்டியது தானே. ஒரு இருநூறு ரூபாய் காசு இல்லாம மருமகனை சமாதானம் செஞ்சு அப்படி என்ன குடி வேண்டி கிடக்கு. கண்ணு முன்னாடி உங்க மக நினைப்பு இல்லை உங்களுக்கு… இப்படியுமா ஒரு தகப்பன் தரங்கெட்டு போய் திரியுவாங்க” வார்த்தைகளால் விளாசி விட்டாள்.
Advertisement
திலகா ஒன்றும் பேசவில்லை. பெரிய மகள் பேசுவதை ஆமோதிப்பது போல் அமைதியாக இருந்தார். அதுவரை அமைதியாக அழுது கொண்டிருந்த தங்கை, தமக்கை பேசுவதை பார்த்ததும் அவளுக்கும் தந்தை மீது கோபம் வந்தது.
“அவருக்கு கொஞ்சம் குடி பழக்கம் இருக்கு தான். ஆனா, அதுக்காக அப்பா மாதிரி தினமும் குடிகாரர் கிடையாது. ஏதோ விசேஷம் கோவில் முக்கியமான நாள் கொஞ்சம் குடிப்பாரு” என்ற தங்கையை அதிர்ந்து போய் பார்த்தாள் நிறை.
தங்கை கணவன் குடிப்பான் என்பதே அவளுக்கு தெரியாது. இதற்கு எப்படி சம்மதித்தார் தாய் என்று திலகாவை அதிர்ச்சியாக பார்க்க,
Advertisement
பெரிய மகளின் முகத்தைப் பார்த்தே அவளின் மனதை கண்டு கொண்டவர், “இந்த காலத்துல குடிக்காதவங்க யாரு இருக்கா? உங்க அப்பன மாதிரி குடிக்கிறதே வேலையா இல்லாம, ஏதோ ஒரு நாள் குடிச்சிட்டு சத்தமில்லாம இருக்குற மனுசன். பிரச்சனை அது கிடையாது. ஒரே வீட்ல மாமனாரும் மருமகனும் சேர்ந்து குடிக்கலாமா? என்னத்த வாங்கி மருமகனுக்கு ஊத்துனாரோ உங்க அப்பன்.. சம்மந்தி வீட்டில் அவ்வளவு சத்தம் போடுறாங்க”
“வளர், உன் புருசன் குடிப்பார்ன்னு உனக்கு முன்னவே தெரியுமா?”
“தெரியும். ஆனா, பெருசா எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டார். என்ன ரொம்ப நல்லா பாத்துக்கிறாரு” என்றாள் கணவனை விட்டுக் கொடுக்காமல்..
நிறைக்கு லேசாக தங்கை மீது இருந்த பொறாமை கூட தள்ளிப் போய்விட்டது. நிறைக்கு குடிகாரன் என்றாலே அப்படி ஒரு அலர்ஜி. இந்த குடியால் தானே தங்களின் வாழ்க்கை கெட்டது. தங்களுக்கு என்று இருந்த கொஞ்ச இடத்தையும் விட்டு, படிக்க வேண்டிய வயதிலே வேலைக்கு போய், கடனை சுமந்து, இன்னமும் ஒரு நிலை இல்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்க யார் காரணம்? தந்தை குடிகாரர்.
அதனாலே, நிறையும், வளரும் குடிகாரர்களைக் கண்டாலே ஒதுங்கி கொள்வார்கள். அப்படி இருந்த தங்கை இப்படி ஒரு கணவனை தனக்கு மணவாளனாக ஏற்க காரணம்? ஒரு வசதியான வாழ்க்கை. படித்தவன், அரசு வேலையில் இருக்கிறான் ஓரளவு வசதியான குடும்பம்.
குடிகாரன் என்பதை தாண்டி வேற எந்த குறையும் அவனிடம் கிடையாது. தன்னால் அமைந்த சம்பந்தம் இது… அப்படி இல்லாமல் அரசு வேலையில் இருக்கும் ஒரு மணமகனை நிச்சயம் தன் வீட்டில் பார்த்திருக்க மாட்டார்கள். அதனால் நிறைய நிறைகளோடு, ஓரத்தில் இருந்த ஒரு குறை அவளுக்கு பெரிதாக தெரியவில்லை.
ஆனால், நிறைக்கு குடி என்றாலே ஒவ்வாமை. தலை வாழ இலையில் நிறைய பலகாரங்களை அடுக்கி ஓரத்தில் சாணி வைத்துவிட்டு, அதைப் பார்க்காமல் மற்ற உணவுகளை உண்ணு என்றால் உண்ண முடியுமா? நிச்சயமாக முடியாது. அப்படி ஒரு மனநிலை தான் நிறைக்கு…
அவளால் ஒரு நாளும் எவ்வளவு வசதியானவனாக இருந்தாலும் குடிப்பழக்கம் உள்ள ஒருவனை ஏற்றுக்கொள்ளவே முடியாது. வளர், வீட்டில் இருக்கும் கஷ்ட நஷ்டங்களை பார்த்தாலே தவிர உணரவில்லை. ஆனால், நிறை அந்தக் கஷ்ட நஷ்டங்களை தன் தோளில் சுமந்தவள். அதனாலே, தங்கையின் முடிவு அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
முதல் முறையாக பிரபாகரனை தன் கணவனாக அமைத்துக் கொடுத்த கடவுளுக்கு மனதில் நன்றி கூறிக் கொண்டாள். என்னவோ தான் பெரிய துரதிஷ்டசாலி என்று நினைத்திருக்க, இல்லை மன நிம்மதியான மணவாழ்க்கை அல்லவா அதிர்ஷ்டம். அத்தகைய மன நிம்மதி நிச்சயம் பிரபாகாரனிடம் அவளுக்கு உண்டு. இதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் நிறை அமர்ந்திருக்க, வளர் தொடங்கி விட்டாள்.
“ஏற்கனவே எங்க மாமியார் வீட்டில எனக்கு அவ்வளவு ஒன்னும் மரியாதை கிடையாது. பெரிய அளவுல சீர் செய்யல, உனக்காகத்தான் நாங்க கட்டி வந்தோம்னு சொல்றாங்க…” என்றதும், நிறைக்கு கோபம் வர,
“பொண்ணு மட்டும் போதும் வேற எதுவும் பெருசா வேணாம்.. அப்படின்னு சொல்லி தானே உங்க வீட்ல பொண்ணு எடுத்தாங்க. நம்ம வீட்டு நிலவரம் தான் அவர்களுக்கு தெரியுமே வளரு.. அப்படி இருக்க உன்னை எதுக்கு எதுவும் சொல்லணும்?”
“ஆமா, உண்மைதான். ஆனா ஓரளவுக்காவது செய்வாங்கன்னு தான் எங்க வீட்ல எதிர்பார்த்தாங்க. இங்க பெருசா ஒன்னும் செய்யல” என்றதும் அதிர்ச்சியாகி பார்த்தார்கள் மற்ற மூவரும்…
இந்த நகையும், சீரும் செய்வதற்கே இவர்கள் எத்தனை இடத்தில் கடன் வாங்கினார்கள் என்று அவர்களுக்குத் தான் தெரியும். அப்படி இருக்க எல்லாம் தெரிந்தும் வளர் பேசுவது நிறைக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“அங்க நான் எவ்வளவு சங்கடப்பட்டு வாழ்கிறேன் தெரியுமா?… எங்க வீட்ல என் நாத்தனார் செஞ்சதுல கால்வாசி கூட எனக்கு செய்யல” என்றதும் கோபமான திலகா,
“இருக்கிறது எல்லாம் உனக்கு தானடி போட்டோம்”
“ஆமா, என்னத்த போட்டீங்க. அவரோட வேலைக்கு தக்க ஒன்னும் நீங்க எனக்கு செய்யலையே”
“என்ன வளரு இப்படி பேசுற. உன் அக்காவுக்கெல்லாம் நாங்க என்ன செஞ்சோம். நகை, சீரை கூட விடு உன்னை தான் படிக்க வச்சோம்”
“என்னத்த பெருசா படிக்க வச்சீங்க. டாக்டருக்கா படிக்க வச்சீங்க. பக்கத்துல இருக்க காலேஜ்ல ஒரு டிகிரி முடிச்சேன் அவ்வளவு தானே. ஊர் உலகத்துல பாருங்க பிள்ளைகளுக்காக என்னவும் பண்றாங்க. ஓடி ஓடி சம்பாதிச்சு பிள்ளைகளுக்கு சேர்த்து வைக்கிறாங்க. உங்களுக்கு உங்க சுயநலம் தான் முக்கியம். மருமகன் கிட்ட காசு வாங்கி குடிக்கிற ரொம்ப உத்தமான தகப்பன்” என்றவள்,
“நிறை எனக்கு மூத்தவளா இருக்க போயி ஏதோ எனக்கு செஞ்சா… மத்தபடி நீங்க எனக்கு என்ன பெருசா செஞ்சுட்டீங்க. அவர் ஒரு குடிகாரர். அவர் என்ன சொன்னாலும் சரின்னு போற அம்மா.. நீ தாம்மா தப்பு. ஆரம்பத்திலேயே நீ சண்டை போட்டு தட்டி வச்சிருந்தா மருமகன் கூட ஜோடி சேர்ந்து குடிக்கிற நினைப்பு வருமா இவருக்கு?…”
“நீங்க மட்டும் அரசாங்க உத்தியோகத்து மருமகன் என்று வெளிய பெருமை பேசுறீங்க தானே. அந்த மரியாதையை காப்பாற்ற வேணாம். நீங்க எவ்வளவுதான் எனக்கு குறைச்சு செஞ்சாலும் என் வீட்டுக்காரர் என்ன நல்லாத்தான் பாத்துக்கிறாரு” நிறை ஒரு வார்த்தை தங்கையை பேசவில்லை.
வீட்டில் யாராவது ஒரு ஆளாவது அதட்டி பேசட்டும். அத்தோடு வளரும் அவர்கள் மகள் தானே. அவர்களை கேள்வி கேட்க அவளுக்கும் உரிமை இருக்கு. இதில் நான் எப்படி தலையிட முடியும். வளரும் விடவில்லை. அவளை பாதிக்காத வரை தான் எதுவும்…
“உங்களுக்கு எல்லாம் நல்ல மருமகன் அமைஞ்சும், சரியா நடந்துக்க தெரியல. இப்பவே எங்க மாமியார், உங்க அம்மா வீட்டு சவகாசம் தேவையான கேக்குறாங்க. பெத்த தகப்பனா எங்களுக்கு எதுவும் செய்யல. எங்களை அசிங்கப்படுத்தாமவாது இருக்கலாம் இல்ல” என்றதும்,
திலகாவுக்கு கண்களில் நீர் வந்துவிட்டது. நிறை இப்படியெல்லாம் பேசக்கூடிய ஆள் கிடையாது. நாம் கோபமாக பேசினால் அவர்கள் கஷ்டப்படுவார்களோ என்று அடுத்தவர்களை சங்கட்டப்படுத்துற எந்த வார்த்தையையும் நிறை உபயோகிக்க மாட்டாள்.
திலகா தன் சின்ன மகளை நம்ப முடியாமல் பார்த்தார். சின்ன மகளை நிறைவாக கட்டிக் கொடுத்ததாக அவர் நினைத்திருக்க.. நீங்கள் எனக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்கிறாள். எதுவும் பேச முடியாமல் பெரிய மகளை பார்க்க, நிறை எதிர்த்து எதுவும் பேசவில்லையே தவிர, தங்கையை அடக்கவும் இல்லை.
“நாளைக்கு ஏதாவது ஒன்னுனா என்கிட்ட வந்து நிக்காதீங்க. என் புருஷன் வீட்டு ஆளுங்க முன்னாடி அசிங்கப்படுத்திட்டார் இவரு… பெத்த கடமையை செய்யல உரிமையை மட்டும் முதலில் பேசுவார். இனிமே இவர் வெளியில, ரோட்ல, எங்க என் புருஷனை பார்த்தாலும் போய் நிக்கக்கூடாது. அவர்கிட்ட பேசக்கூடாது. அவர் விட்டு தள்ளியே நிக்க சொல்லும்மா இவரை” வெறுப்பாக சொன்னாள் திருவளர் செல்வி.
நிறையும் வேற எதுவும் பேசாமல், “நீ வா வளரு, உங்க வீட்ல பேசி உன்னை விட்டுட்டு வரேன்” என்று கிளம்பி விட்டாள்.
அக்கா சொன்னதே போதுமானதாக இருக்க வளரும் கிளம்பி விட்டாள். திலகாவை அவர்கள் கவனிக்கவில்லை. இரு பெண்கள் மனதிலுமே ஒரு எண்ணம். தாய் கொஞ்சம் இறுக்கி பிடித்து கண்டித்து இருந்தால் இந்த அளவுக்கு போய் இருக்காதே, ஆரம்பத்தில் இருந்தே அவர் அப்படித்தான் என்று தந்தையை கண்டு கொள்ளாமல் விட்டது திலகா தான். பெரிய மகள் வாய் திறக்கவில்லை. சின்ன மகள் உடைத்துப் பேசி விட்டாள்.
திருநிறை செல்விக்கும் தெரியும். திலகா சுத்தி சுத்தி அழுவார் மகளிடம் சொல்லிப் புலம்புவார் தவிர, எந்த காரியத்தையும் முன்னெடுக்க மாட்டார். இனி நிறையை தவிர, வேறு யாரும் வளர் கணவன் வீட்டில் சென்று பேச முடியாது. எப்படி இருந்தாலும் உடன் பிறந்து விட்டாள், கண்டுகொள்ளாமல் இருக்க முடியாதே… தங்கையை அழைத்து போய் அவளின் மாமனார், மாமியார் இடம் சமாதானம் பேசி, அவர்கள் பேசிய வார்த்தையையும் பொறுமையாக கேட்டு, இனி இவ்வாறு நடக்காது என்று வாக்கு கொடுத்து, அவர்கள் பேச்சுக்கு தந்தையையும் விட்டுக் கொடுத்து, சரி கட்டி தங்கையை அங்கு விட்டு வந்தாள்.
உடல் பயங்கர அசதியாக இருந்தது. வயதுக்கு மீறிய பக்குவம், மனதை தளர்ச்சி அடைய செய்தது. பத்து மணி பஸ்சுக்கு தான் வீட்டுக்கு போக வண்டி ஏறினாள். சோர்வாக தலை சாய்த்து அமர்ந்திருக்க, அடுத்த ஸ்டாப்பில் ஏறினான் பிரபாகரன். இவளை கவனிக்கவே இல்லை. கணவனைப் பார்த்ததும் அதுவரை இருந்த சோர்வு நீங்கி, முகம் பூரிக்க…
“என்னங்க” என்றாள்.
“இங்க வாங்க” என்று தன் அருகில் இருந்த இடத்தை காட்டினாள். மனைவியைப் பார்த்து முகம் மலர்ந்தாலும் எட்டு மணிக்கு வீட்டுக்கு செல்ல வேண்டியவள் இவ்வளவு நேரம் என்ன செய்தாள் என்ற யோசனையோடு மனைவிய அருகில் அமர்ந்தான்.
“என்ன நிறை இன்னைக்கு வேலை அதிகமா?” என்று கேட்க.
என்ன சொல்வதென்று தெரியாமல், சொல்வதா வேண்டாமா என்றும் புரியாமல் மத்தியமாக தலையாட்டி வைத்தாள்.
அடுத்த நிறுத்தத்தில் பஸ் நிற்க, எப்படியும் கால் மணி நேரம் ஆகும். வேகமாக கீழே இறங்கிய பிரபாகரன், பஸ் எடுக்கும் வரை வரவில்லை. ஒரு மாதிரி பதட்டமானது நிறைக்கு… எங்கு சென்றான்? காணவில்லையே?
தானும் இறங்கி விடுவோம் என்று எழுந்து கொள்ள பார்க்க,
“நிறை, நான் இங்க இருக்கேன்” என்று வந்தான் அவள் கணவன்.
அவள் முறைத்துப் பார்க்க, அவன் லேசாக சிரித்தான்.
“என்ன சிரிப்பு எங்க போயிட்டீங்க. நான் பயந்துட்டேன் தெரியுமா?” முகம் சுருங்கியது அவளுக்கு…
அவளின் தோள் உரச அமர்ந்தவன், “என்ன கோபம் இந்த மேடத்துக்கு… உன் முகத்தை பார்த்தேன். ரொம்ப சோர்வா இருந்த, நிறைய வேலை போல… இங்க பக்கத்துல ஒரு கடை இருந்துச்சு, சாப்பாடு நல்லா இருக்கும். அதான் நம்ம ரெண்டு பேரும் இட்லி வாங்கிட்டு வந்துட்டேன். இனி வீட்டுக்கு போயி சமையல் பண்ணி எப்போ சாப்பிட. உனக்கும் சோர்வா இருக்கும் தானே” என்ற கணவனை நிறை இமைக்காமல் பார்த்தாள்.
தனக்காக எவ்வளவு பார்க்கிறான். ஒரு நிமிடமும் தான் அவன் மனைவி என்பதை மறக்கவில்லை. எந்த இடத்திலும் தன்னை கொண்டே அவன் யோசனை இருக்கும். சொந்த மாமன் மகன்தானே, இவனை எப்படி தான் அறியாமல் போனோம். தான் இவனுக்கு என்ன செய்தோம். இவன் கையால் தாலி வாங்கிக் கொண்டோம். அந்த தாலி அவ்வளவு சொந்தத்தை கொடுக்குமா என்ன?…
ஆம், தாலிக்கொடி அந்த அளவுக்கு சொந்தத்தை கொடுக்கும் என்பதை உணர்ந்தாள் நிறை. இருவரும் தெரியாதவர்கள் அல்லவே!… இத்தனை வருடங்களாக ஒருவரை ஒருவர் பார்த்து பழகியவர்கள் தான். அப்படி இருந்தும் உண்மையில் தான் யார் என்பதை அறிந்து கொள்வது வாழ்க்கைத் துணையிடமிருந்து தான். என்னவோ மன நிறைவாக இருக்க, கணவனை அமைதியாக கவனிக்க ஆரம்பித்தாள்.
வீட்டிற்குள் வரும்போது ரோகினி வெளியே தான் அமர்ந்து இருந்தாள். அவள் கையில் இருந்த பார்சலை பார்த்தவள், “கொடுத்து வச்ச மகராசி. வேலைன்னு வெளியே சுத்த போகிறா.. சொந்த வருமானம், இஷ்டத்துக்கு வீட்டுக்கு வாரது. எந்த கட்டுப்பாடும் கிடையாது. ஹோட்டல் சாப்பாடு, தலையில் தூக்கி வைத்து கொண்டாடடுற புருசன்” நிறை மேல் மனதில் பொறாமை வந்தது.
நிறை ஒன்றை கவனித்தாள். பிரபாகரன் அவளிடம் எதையும் மறைக்கவில்லை. தான் அவனின் மனைவி என்பதை இயல்பாக ஏற்றான். கட்டாயம் என்று இல்லாமல் நான் உன் கணவன், நீ என் மனைவி என்பது மெல்ல அவள் மனதிற்கு புரிய வைத்தான்.
இதுவரை தன் காதல் தோல்வி, தன் குடும்ப பிரச்சனை என்று அதிலேயே உழன்று கொண்டிருந்த நிறைக்கு, முதல்முறையாக கணவனை திரும்பிப் பார்த்தாள். பிரபாகரன் நல்ல மனிதன். ஆனால், தன் மனதிற்கு பிடித்த கணவனா என்றால் அது கேள்வி குறி? அப்படி ஒரு பார்வையில் இதுவரை கணவனை பார்க்கவில்லை. பிடித்த வாழ்க்கை கிடைக்க வில்லை. என்ன அமைந்ததோ அதை நல்ல முறையில் கொண்டு போக நினைத்தாள். ஆனால், அவளே எதிர்பார்க்காத வகையில் பிரபாகரன் அவளை நன்றாக பார்த்துக் கொண்டான்.
நீண்ட நாட்களுக்குப் பின் இருவர் சம்பளமும் கை நிறைய இருந்தது. பிரபாகரன் பெரிதாக எதுவும் சொல்லவில்லை உன் விருப்பம் என்று விட்டான். வாங்கிய வருமானம் முழுதாக கையில் இருப்பதே நிறைவாக இருக்க, வேற ஒன்று பெருசாக தோன்றவில்லை.
“நம்ம கட்டிலுக்கு ஒரு மெத்தை வாங்குவோமா?” என்றான் பிரபாகரன்.
“ஏன்?”
“ரெண்டு பேருமே வேலைக்கு போயிட்டு வரோம். என்னை விட உனக்குத்தான் கால் வலி, பேக் பெயின் அதிகம் இருக்கும். பெருசா இடம், நகை வாங்குற அளவுக்கு பணம் இல்லை. ஆனாலும், வீட்டுக்கு தேவையான பொருள் வாங்கற அளவுக்கு பணம் இருக்கே” என்றதும்,
அவளுக்கும் அவன் யோசனை சரி என்று பட்டது. அவனும் வேலைக்கு போய் வருபவன் தான். நிம்மதியான உறக்கம் வேண்டுமே!.. இருவருமே ஆலோசித்து இப்போதைக்கு மெத்தை மட்டும் வாங்குவது என்று முடிவுக்கு வந்தார்கள்.
ரொம்பவும் தேடிப் பார்த்து ஒன்றை வாங்கிக் கொண்டு வந்தார்கள். நிறைக்கு அவ்வளவு சந்தோஷம். தொட்டு தொட்டு பார்த்துக் கொண்டாள்.
“இதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா?” என்று பிரபாகரன் கேட்க.
“சிறுசு பெருசுன்றதில்லை விசயம். எனக்கு புடிச்ச ஒன்னை எனக்காக நான் வாங்கி இருக்கேன். அப்படியெல்லாம் ரொம்ப ஈஸியா எனக்காக ஒன்னை நான் வாங்கவே மாட்டேன். நிறைய யோசிச்சு தள்ளி போட்டு விடுவேன்” என்றபடி அந்த மெத்தையில் ஆசையாக அமர்ந்தாள்.
“அப்ப நீ எதையும் ஆசைப்பட்டு வாங்க மாட்டியா நிறை?”
“பெருசா சேவிங்னு கையில நிக்காது. அப்புறம் எனக்குன்னு நான் ஒன்னு வாங்கினேன் அப்படின்னா, என் தங்கச்சிக்கு ஒன்னு வாங்கணும். ரெண்டு செலவுன்னு யோசிச்சு வாங்குற ஆர்வமே போயிடும்” என்றவள்,
தன் போன் கேலரியில் இருந்த ஒரு சாரியை எடுத்துக் காட்டினாள், “இந்த சேலையை நான் அஞ்சு வருஷமா பாத்துட்டு வாரேன். ரொம்ப புடிச்சி இருந்துச்சு. ஆனாலும், இன்னவரைக்கும் நான் வாங்கல”
“ஏன்?” அவள் நினைத்தால் வாங்கலாம் தானே, வருமானம் அவளுடையது…
“ஒவ்வொரு வருஷமும் தீபாவளி, பொங்கலுக்கு எனக்கு ஏதாவது வாங்கணும்னு பிளான் போட்டு ரெடி பண்ணிடுவேன். அப்புறம் அதோட வரவு செலவு எல்லாம் கணக்கு போட்டு கொஞ்சம் தள்ளி வாங்கலாம்னு எனக்கு நானே முடிவு பண்ணி தள்ளி போட்டு, தள்ளி போட்டு அஞ்சு வருஷம் ஆச்சு”
“உனக்கு வாங்குவதற்கு விருப்பம் கிடையாது” என்றான் பிரபா.
“உண்மைதான். ஆனாலும் சேலையை பார்த்தால் ஒரு ஆசை வந்துடுது. அதனால என்னை நானே சமாதானப்படுத்த சேவ் பண்ணி, பிளான் பண்ணி வச்சுடுவேன். ஆனா, அதை உடனே வாங்காம தள்ளிப் போடுவேன். அப்படி தள்ளி போடும்போது அந்த பொருள் மேல இருக்கிற ஆர்வம் எனக்கு குறைஞ்சு போயிடும். முதல்ல வாங்கணும்னு நினைக்கிற மனசு, அப்புறம் வாங்காட்டி என்னன்னு நினைப்பு வந்துடும்” என்று பெரிய விளக்கம் கொடுத்தவள்,
“இந்த சேலையை மட்டும் அப்படி நினைச்சு ஒதுக்க முடியவில்லை. என்னவோ மைண்ட்ல நின்னுட்டே இருக்கு இந்த சேலை”
மனைவி கையில் இருந்த போனை வாங்கி பார்த்தான். அந்த சேலையை கண்களில் பதிந்து கொண்டான். பிரபாகரன் தம்பதி தங்களுக்கு என்று வாங்கிய ஒரு பொருள் வீட்டில் பேசு பொருளானது.
“அவள் மெத்தை வாங்கினாள் என்பது பெரிய விஷயம் அல்ல. நிறை ஆசைப்பட்டாள். கணவன் வாங்கிக் கொடுத்தான்” அதுதான் விஷயமாகி போனது.
அடுத்த இரண்டு வாரமும் அமைதியாக போனது. இருவருக்கும் இடையே பெரிதாக எந்த தொந்தரவும் இல்லை. நிறையும், வளரும் அவர்கள் பெற்றோரை தொடர்பு கொள்ளவே இல்லை. கொஞ்சம் தள்ளி நின்றால் மட்டுமே பெற்றோர்கள் உணர்வார்கள் என்று நினைத்தார்கள் போல…
அன்று நிறை கடையில் இருக்கும் போதே திலகா போன் செய்து விட்டார், “மகள்கள் பேசலைன்னு ரெண்டு வாரம் அமைதியா இருந்தாரு. இப்போ திரும்பவும் குடிக்க ஆரம்பிச்சுட்டாரு நிறை உங்க அப்பா” என்று அழுதார்.
நிறைக்கு ஒரு பெருமூச்சு வந்தது. இவரெல்லாம் என்ன நடந்தாலும் திருந்த மாட்டாரு போல… ஆனாலும், ஒரு நப்பாசை இருந்தது பிள்ளைகள் தள்ளி நின்றால் பெற்றவர் திருந்தி விடுவார் என்று…
“இது என்ன புதுசா ம்மா. எப்பவும் நடக்கிற கதை தானே விட்டுத்தள்ளு” என்றாள் நிறை.
“அதில்லை நிறை, முன்னாடி எல்லாம் உங்க அப்பா சாயங்காலம் மட்டும் தான் குடிக்க போவாரு. இப்ப காலையிலேயே தேடி ஓடுறாரு. அவரை சுத்தி நாலு பேரு… எங்கேயும் போயி, எந்த வம்பையும் வாங்கிட்டு வந்துடக்கூடாது. நீ கொஞ்சம் வீட்டுக்கு வாரியா”
“நான் எப்படிம்மா வர முடியும். எனக்கு வேலை முடிஞ்சு வீட்டுக்கு போகவே மணி பத்து ஆயிடும். என்ன சொன்னாலும் அவர் மாற போறதில்ல, விட்டுடுங்க. அவர் இருக்கிற வரைக்கும் இப்படித்தான் இருக்க போறாரு. அப்படியே இருந்துட்டு போகட்டும்” மனம் வெறுத்துப் போய் தான் வார்த்தை வந்தது.
தாயிடம் அவ்வாறு பேசிவிட்டாலும் மனசெல்லாம் ஒரு மாதிரி வலி. நிறைக்கு விவரம் தெரிந்த வயதிலிருந்தே தந்தை குடிகாரர் தான். திரும்பிப் பார்க்க காலம் ஓடிவிட்டது. இவளும் இன்னொரு வீட்டுக்கு மருமகளாக சென்று விட்டாள். ஆனாலும், தந்தை மட்டும் மாறவே இல்லை. அவர் மாறவும் மாட்டார்.
முன்பு போல அம்மா ஒரு போன் போட்டதும் பதறி கொண்டு ஓடவில்லை நிறை. நேராக தன் வீட்டுக்கு தான் வந்தாள். ஆனாலும், தாய் வீட்டு நினைப்பை ஒதுக்கி வைக்க தெரியவில்லை. தாயை நினைத்து பரிதாபமாக இருந்தது. தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.
அப்போதுதான் வேலை முடிந்து வந்தான் பிரபாகரன். மனைவியின் நிலை பார்த்து பதறி போனவன்,
“என்னாச்சு நிறை” என்றான்.
இப்போது அவளுக்கு கணவனிடம் எதையும் மறைக்க தோன்றவில்லை. ஒரு குண்டு ஊசி வாங்கினால் கூட தன்னிடம் சொல்லும் கணவனிடம் தானும் எதையும் மறைக்கவில்லை. என்ன நடந்ததோ அப்படியே சொல்லிவிட்டாள்.
“என்ன பண்ணலாம்னு இருக்க” என்றான் நிதானமாக,
“என்ன பண்ண முடியும்? திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது”
“அப்புறம் ஏன் இவ்வளவு சோர்வா இருக்க நிறை”
“அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரைக்கும் எங்க அப்பா அப்படித்தான். ஆனாலும், ஒரு மனசு பொறந்த வீட்டுல ஒரு கஷ்டம்னா விட்டு தள்ள முடியல. என் தங்கச்சி மாதிரி எனக்கு எதையும் கண்டுக்காம ஒதுங்க தெரியலையே. என்ன பண்றது” அவள் குரலில் இயலாமை அதிகமாக இருந்தது.
வேலை விட்டு வந்ததும் அப்படியே அமர்ந்திருப்பாள் போல… முகம் கூட கழுவவில்லை இனி எங்கிருந்து சமையல் வேலையை தொடங்க,
“சாப்பாட்டுக்கு வெளியில சொல்லவா” என்று கணவன் சொன்னதும், சமையல் வேலையை தொடங்கவில்லை என்பது ஞாபகம் வர, அவசரமாக கிச்சன் சென்றாள்.
அவள் பின்னாடியே வந்தவன் “பெருசா எதுவும் வேணாம். கால் மணி நேரத்துல முடியற மாதிரி ஏதாவது கொண்டு வந்து கொடு” என்றதும்,
அவனின் பசியை அறிந்து அவளுக்கு மிகவும் குற்ற உணர்வாகி போனது. தன் நிலையை எண்ணி நொந்து கொண்டே கிச்சடி செய்தாள்.
இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே பிரபாகரன், “நிறை எனக்கு ஒரு வேண்டுதல் இருக்கு” என்றான் சீரியசாக,
நிமிர்ந்து பார்த்தவள் “என்ன வேண்டுதல்?”
“அடுத்த ஜென்மம் ஒன்னு இருந்தா, நான் அதுல உனக்கு தம்பியா பொறக்கணும்” என்ற சிரிக்காமல் சீரியஸ் மோடில் பிரபாகரன் சொல்ல,
புறை ஏறி போனது நிறைக்கு, என்ன சொல்கிறான் இவன்…
“என்ன சொல்றீங்க?”
“ஆமா, நீ உன் குடும்பத்து மேல வச்சிருக்கற பாசத்தை பார்த்து… எனக்கே, உனக்கு தம்பியா பொறக்கணும்னு ஆசை வந்துருச்சு” என்றதும்,
“பேச்சைப் பாரு ஒழுங்கா சாப்பிட்டு எழுந்து போங்க” கடுப்பாக சொன்னாள் நிறை.
“உண்மையைத்தான் சொல்றேன். நமக்கெல்லாம் புருசன், பொண்டாட்டியா இருக்கிற ராசி இல்லை” வேற என்ன சொல்லி இருப்பானோ, அதற்குள் ஒரு சொம்பு நீரை எடுத்து அவன் முகத்தில் அடித்து இருந்தாள் நிறை.
அவன் கேலியாக சொன்னானோ? கிண்டலாக சொன்னானோ? இல்லை உன் குடும்பத்தை தான் நீ அதிகமாக கவனிக்கிறாய் என்று சொன்னானோ? என்னவோ ஆனால் அவன் சொன்ன வார்த்தையை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
அழுகை வேறு வந்தது. அடுத்து சாப்பிடவே அவளுக்கு தோன்றவில்லை. வெறும் வாய் வார்த்தை தான் என்றாலும் மனதை பாதிக்கும் சில வார்த்தைகளை சும்மா கூட உபயோகிக்காமல் இருப்பது தான் நல்லது.
“நிறை ஏன் அழுகிறா? நான் சும்மா ஒரு கேலியாகதான் சொன்னேன் விடு” அவனுக்கு மனைவி தன்னை அடித்தது கூட பெரிய விஷயமாக படவில்லை. ஒரு கேலியை இவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்வாள் என்று நினைக்கவில்லை. தன்னை மறந்து அவளை தேற்ற ஆரம்பித்தான். அவளுக்கு என்னவோ மனம் சமாதானம் அடைய மறுத்தது. ஏதேதோ பேசி சரி செய்து இருவரும் உறங்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே பிரபாகரனுக்கு மூச்சு திணறல் வந்து விட்டது.
அரண்டு போனாள் நிறை. முன்பே அவன் கொஞ்சம் முடியாதவன் என்று தெரியும் தான். ஆனால், திருமணம் முடிந்த இந்த சில மாதங்களில் அவனுக்கு உடல் ரீதியாக எந்த தொந்தரவும் வந்ததில்லை. மிக நன்றாக இருந்தான்.
இந்த சில நாட்களாக தான் தொடர்ந்து மழை வேறு வந்து கொண்டிருந்தது இவனும் தாமதமாகவே வீட்டுக்கு வர, நிறை உணரவே இல்லை. இவனுக்கு இந்த மாதிரி தொந்தரவுகள் வரும் என்று… மிகவும் தடுமாறி போனாள்.
அவசரமாக மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓட, இவளால் அருகில் கூட செல்ல முடியவில்லை. அவனின் அண்ணனும், அம்மா, அப்பாவும் மட்டுமே முன் நின்று இருந்தார்கள். தன்னோடு ஒட்டி நின்ற தன் கணவனை யாரோ போல தள்ளி நின்று பார்ப்பதே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தனக்கு என்று எந்த நல்லதுமே நடக்காதா?.. எனக்கு ஒரு நல்லது நடந்தால் கடவுளுக்கு கூட அது பொறுக்காதா?.. அழுக கூட தெம்பில்லாத நிலை அவளது…
error: Content is protected !!