Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

பூத்தூவுதே வானம்!

பூத்தூவுதே வானம் – 08

அன்று ஜெயசிம்மன் வீட்டில் பணி நேரம் முடிவடைந்ததும் வாசுதேவனைச் சந்திக்கவென ஹாஸ்பிடல் வரை சென்றிருந்தாள், சாருலதா.

அவளது நல்ல நேரமோ என்னவோ வீட்டுக்கு செல்லவெனப் புறப்பட்டு பார்க்கிங் வந்து கொண்டிருந்தவன் இடையிலேயே அவளை எதிர்ப்பட்டான்.

அவளை அங்கே எதிர்பார்த்திராததால் சற்று வியந்த முக பாவனையோடு, “மிஸ் சாருலதா..” என விழித்து அவளை நோக்க,



Advertisement

“டாக்டர்!” என முறுவலுடன் கூடிய அழைப்போடு அவனை நெருங்கினாள், சாரு.

“ஈஸ் எவ்ரிதிங் ஆல்ரைட்? ஹாஸ்பிடல் வந்திருக்கீங்களே!”

ஆமெனும் விதமாகத் தலை அசைத்தவள், “ஆக்சுவலி நான் உங்களை மீட் பண்ண தான் வந்தேன் டாக்டர்..” என்க,

Advertisement

“எதுவா இருந்தாலும் கால் பண்ணி இருக்கலாமே! வீண் அலைச்சல் எதுக்கு? இன்னைக்கு எனக்கு கொஞ்சம் லேட்டானதுல ஓகே, இல்லனா என்னைப் பார்க்க வீட்டுக்கு தான் வந்திருக்கணும்..” என்றான்.

Advertisement

அவன் சாதாரணமாகத் தான் அக்கறைப்பட்டான். ஆனால் அவளுக்குத் தான் ‘டாக்டர் எனக்காக யோசிக்கிறாரு!’ என சிறகின்றி வானில் பறக்குமுணர்வில் நெஞ்சமெங்கும் குளிர்ந்து போயிற்று!

“பரவால்ல டாக்டர், ஃபோன்ல பேசுறதை விட நேர்லயே சொல்லிக்கிறது பெட்டர்னு..” என இழுவையாய் நிறுத்த,

“சரி வாங்க..” என நகர்ந்து சென்று கார் கதவை அவளுக்காக திறந்து விட்டான், வாசுதேவன்.

Advertisement

குழப்ப ரேகைகள் படர்ந்த அவனது இறுகிய முகம், அவள் சொல்ல வருவது என்னவாக இருக்குமென்ற ஊகிப்பில் அவன் மூழ்கியிருக்கிறான் என்பதைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது.

அருகருகேயான இருக்கையில் அவன் அமர்வதை குளுகுளு மைண்ட் செட்டோடு பார்த்திருந்தவள், “நாளை ஒருநாள் மட்டும் என் பங்குக்கு நீங்க யாரையாவது அர்ரேன்ஞ் பண்ணனும் டாக்டர்..” என்றாள்.

வாசுதேவன் விழித்தான். அடியின்றி நுனியுமின்றி அவள் கூறியது புரியவே சற்று நேரம் எடுத்தது ஆடவனுக்கு.

புரிந்த கணம், “என்ன! ஏன்?” என ஒரேயடியாக வினாக்கள் கிளம்பின.

“ஒரு முக்கியமான அக்கேஷன். தவிர்க்க முடியல டாக்டர். இதை சொன்னா எப்படியும் நீங்க கோபப்படுவீங்கனு தான், நேர்லயே சொல்லிக்கலாம்னு வந்துட்டேன். ஒருநாள் தான், அதுக்குள்ள ஃபிரீ ஆகிடுவேன்..”

வாசுதேவன் பெரிதாக ஒன்றும் அலட்டிக் கொள்ளவே இல்லை.

“இதை நீங்க கால்லயே சொல்லி இருக்கலாம்!” என்றவன் சிறு இதழ் விரியல் மூலமாக தன் சம்மதத்தை வழங்க,

“என்ன!! ஒண்ணுமே சொல்லல..” என சாருலதா தான் குழம்பிப் போனாள். அவள் நினைத்து வந்த அளவுக்கு இவன் பெரிதாக ஒன்றும் ‘ரியாக்ட்’ செய்யவில்லையே!

“என்ன சொல்லணும்.. மனுஷன்னு பொறந்துட்டா இதெல்லாம் சகஜம் தானே? முக்கியமான அக்கேஷன்னு வேற சொல்றிங்க. இதுல நான் கோபப்பட என்ன இருக்கு? பட் ஐ அம் கிளாட் யூ லெட் மீ க்னோ இன் அட்வான்ஸ் சாருலதா!”

‘அப்ப நான் ஒரு பொறுப்பில்லாத பேர்வழினு நினைக்கலயா?’ என தன்னைத் தானே கேட்டுக் கொண்டவளாக அசடு வழிந்தவள்,

“தேங்க்ஸ் ஃபார் யுவர் அண்டர்ஸ்டாண்ட்டிங் டாக்டர்..” என்க, லேசாக தலையாட்டிக் கொண்டான்.

“அப்படினா நான் வர்றேன் டாக்டர்” என்று கூறிக் கொண்டு கார் கதவைத் திறந்து இறங்கிக் கொண்டவளுக்கு ‘நானே ட்ரோப் பண்ணுறேன் என அவன் அழைத்தால் என்ன’ என்கின்ற நப்பாசை.

மாறாக சிறு தலை அசைப்புடன் வாசுதேவன் செல்ல ஆயத்தமாகி விடவே,

“சரியான முசுடு!” என உள்ளுக்குள் கடுகடுத்தாள் சாரு. மானங்கெட்ட மனம் ‘கொஞ்சம் டாக்டர் கூட டைம் ஸ்பென்ட் பண்ணினா தேவலை’ என இன்னுமே அவளை உசுப்பேற்றிக் கொண்டிருந்தது.

“ஓ புவர் சாரு! இது உனக்கே நியாயமா.. நீ அவர்கிட்ட என்னத்த எதிர்பார்க்கற?” என உள்மனம் அவளை குற்றக் கண் கொண்டு பார்க்க,

“ம்ம்கூம், சும்மா சும்மா எதையாவது யோசிக்க கூடாது. டாக்டராச்சே! அவர்கிட்ட பேசுனா  பொது அறிவு விஷயங்கள் எதையாவது தெரிஞ்சுக்கலாம்னு நினைக்கிறது ஒரு தப்பா..” என மழுப்ப வேண்டியதாகப் போயிற்று சாருவுக்கு.

காலையிலேயே இன்று என்னை அழைத்துச் செல்ல வர வேண்டாமென வீட்டு டிரைவரிடம் கூறி அனுப்பி வைத்திருக்க, இப்போது அவரை அழைத்து வர சொல்லிக் காத்திருந்தால் இன்னும் நேரமாகுமே என டெக்ஸி பிடித்து வீட்டை வந்தடைந்தாள்.

நேரம் எப்படியும் ஏழரை மணியிருக்கும்.

வீடு மொத்தமும் சிரிப்பும், கலகலப்புமாக இருக்குமென எதிர்பார்த்து வந்தவளுக்கு பெருத்த ஏமாற்றம்! என்றும் போல் திலோ வாசலில் அமர்ந்திருக்க, வழமைக்கு மாற்றமாக அவளோடு கதையளந்தபடி கேஷவன் அருகிலிருந்தார்.

இருவருக்கும் பொதுவான ஒரு ஹாய் போட்டவள் எதிர் சோபாவில் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டாள்.

இருவரின் முக மலர்ச்சி மகனின் வரவில் விழைந்த மகிழ்வை அவளுக்கு உணர்த்தியது.

‘ஒருவேளை என்னோட அம்மா அப்பாவும் உயிரோட இருந்திருந்தா எனக்காகவும் ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு நாளும் இப்படி தானே காத்துகிட்டு இருந்திருப்பாங்க? என்னோட வருகை அவங்களுக்கு கொடுக்க போற சந்தோஷத்தை பார்த்து என்னோட மனசு எந்த அளவுக்கு உருகிப் போயிருக்கும்’ என இயல்பாகத் தோன்றிய சிந்தனையில் உள்ளம் நொந்தது, சாருலதாவுக்கு.

இப்போது இந்த நேரத்தில், பெற்றவர்களின் நினைவில் முகம் வாடுவது சரியானது அல்ல என உள்ளுக்குள் அலாரம் அடிக்க, சுதாரித்துக் கொண்டு நிமிர்ந்தவள்,

“நிகில் எங்க?” என்றாள்.

இந்த வினாவை அவர்கள் தன்னிடமிருந்து பெரிதும் எதிர்பார்க்கிறார்கள் எனப் புரிந்து தான் கேட்டாள்.

“ரூம்ல தான். அசதியா இருக்கு, ரெஸ்ட் எடுத்துட்டு வரேன்னு போயிட்டான்” – இது கேஷவன்.

“அப்படியா? வரும்போது எத்தனை மணி இருக்கும் மாமா..”

சிறு தயக்கத்திற்கு பிறகு, “மார்னிங்லயே வரேன்னு சொன்னவன் தான், வந்ததுமே யாரையோ முக்கியமா மீட் பண்ணனும்னு சொல்லிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்ததே லேட்டா தான். லஞ்ச் நேரமாகிடுச்சுனா பாரேன்..” என்று திலோ கூற,

“ஓ தேங்க் கோட்! அவன் வீட்டுக்கு வர்ற நேரத்துல நான் அங்க இல்லையேன்னு ரொம்ப யோசிச்சுக்கிட்டு இருந்தேன். இப்பதான் ஓரளவு மனசுக்கு இதமா இருக்கு..” என்று கூறி பொய்யான நிம்மதிப் பெருமூச்சென்றை வெளியேற்றியவள்,

“நான் டக்குனு போய் ஃபிரஷ் ஆயிட்டு வந்துடறேன் ஆன்ட்டி, வரேன் மாமா!” என எழுந்து கொண்டாள்.

அவளது இந்த அவசரம் நிகிலனைச் சந்திக்கப் போவதால் வந்தது என தவறாக எண்ணிக் கொண்ட பெரியவர்கள் முகத்துக்கு முகம் பார்த்து கள்ளத்தனமாக சிரித்துக் கொண்டனர்.

அதைக் கண்ணுற்று உள்ளுக்குள் வருந்தியவளாக அறைக்கு வந்த சாருலதா, சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் கட்டிலில் சாய்ந்து இருப்பதும், வானில் உலா வரத் தொடங்கிய நிலவை வெறித்துப் பார்ப்பதும், அறைக்குள் ஆங்காங்கு நடந்து திரிவதும், அலைபேசியை அலசுவதுமாக நேரத்தை நெட்டித் தள்ளிவிட்டு அளவில் பெரியதான ஒரு டீஷர்ட்டும், பெகி பேண்ட்டும் அணிந்து மாடிப்படியில் துள்ளி இறங்கி வந்தாள்.

மூவரும் உணவு மேஜையில் அவளுக்காகத் தான் காத்திருந்தனர்.

“லேட் ஆகிடுச்சு இல்ல? டாக்டர் கால் பண்ணி இருந்தாரு, அதான்..” எனப் பெரியவர்கள் நம்பும் படியாக ஒரு பொய்யை உதிர்த்தவள்,

“என்ன நிக்கி.. மூணு நாலு மாசம் தான் ஊரைவிட்டு நீங்கி இருந்த! அதுக்குள்ள வெள்ளைக்காரன் மாதிரி இந்த செவப்பு செவந்துட்டியே!” எனக் கேலி செய்தபடி வந்து ஒரு இருக்கையில் அமர்ந்தாள்.

“நீ கொஞ்சம் கலரா இருக்கேன்றதால அவனை இப்படி எல்லாம் ஓட்டாத, சொல்லிட்டேன்..” எனக் கேசவன் அவளது கேலி விளையாட்டில் இணைந்து கொள்ள,

“உனக்கு பொறாமை!” என திலோத்தமையும் பக்கவாட்டுச் சிரிப்புடன் தலை நீட்டினாள்.

இந்தப் பேச்சு அவனுக்கு பெரிதாக உவப்பைக் கொடுக்கவில்லை போலும், லேசான சிடுசிடுப்போடு,

“இந்த கேலி கிண்டலை எல்லாம் அப்புறம் வச்சுக்கோங்க, சாப்பிடற நேரத்தில இது என்ன பேச்சு?” என்றான்.

“சாப்பிட்டுக்கிட்டு இருக்கிறப்போ பேசுறது அவனுக்கு எப்போவுமே பிடிக்காது!” என மகனின் சிடுசிடுப்புக்குக் காரணம் கற்பித்து விட்டு திலோ உணவில் கவனமானாள்.

உணவுக்குப் பிறகு நால்வருமாக கூடத்தில் அமர்ந்திருக்கையில் தங்களின் கவனயீனத்தால் நேர்ந்த விபத்தைப் பற்றி மகனிடம் பகிர்ந்து கொண்டார், கேஷவன்.

பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், “ஸோ வாட்? நடந்தது நடந்து போச்சு. நஷ்ட ஈடு தரேன்னு சொல்லுங்க.. போன பஸ்க்கு கை காட்டுறதால எதுவும் நடக்க போறதில்லயே!” என்க,

“வாட்!” என பற்களை நறநறத்தாள், சாருலதா. இப்படியொரு அலட்சியமா.. வெறுப்பில் சுழிந்த முகத்துடன் உதடுகள் துடிதுடிக்க அவனை வெறித்தவள்,

“என்ன மாதிரியான பதிலிது நிகில்? இப்படி நடந்து போச்சேங்குற குற்ற உணர்ச்சியில தத்தளிச்சிக்கிட்டு இருக்குறவங்களுக்கு உன்னால ஆறுதல் சொல்ல முடியலைனா கூட பரவால்ல, இப்படி அலட்சியமா பதில் சொல்லி அவங்களை ஏமாத்தத்துல தள்ளாத! உயிர்ங்குறது உனக்கு இவ்ளோ இளக்காரமா போச்சா..” என மற்றவர்களை மறந்து சீறினாள்.

“ஹே லுக், நீ பெருசா ரியாக்ட் பண்ணுற அளவுக்கு இங்க எதுவும் நடந்துடல. உயிரோட மதிப்பு எனக்கும் தெரியும், அது போலவே பணம் பாதாளம் வரை பாயும்னும் ரொம்ப நல்லாவே தெரியும். நீ சும்மாரு!” என அவளை அதட்டியவன்,

“ஸோ டாட்..” என தந்தையை ஏறிட்டான்.

மேற்கொண்டு பேச முடியாதவாறு கேஷவனை ஏதோவொன்று தடுத்தது. திலோவும் கை பிசைந்தபடி அமைதி காக்க,

“கோர்ட், கேஸ்னு ஏதாவது பிரச்சனை பண்ணாங்களா டாட்?” என்றான் அவனே!

மறுப்பாகத் தலை அசைத்து, “பையனோட ட்ரீட்மென்ட்டுக்கு தேவையான மொத்த செலவையும் நானே பார்த்துக்கறேன்னு சொன்னேன். ஆனா அவங்க அதுக்கு ஒத்துழைக்கல, அதை அவங்களே பார்த்துக்கறதா சொல்லிட்டாங்க.

நான் ரொம்ப இரங்கி கேட்டுக்கிட்டதால இப்போதைக்கு எதுவும் ஆக்ஷன் எடுக்கல. மூணு மாசக் கெடுவுக்குள்ள பையன் ஓரளவுக்காவது குணமாகிட்டான்னா மனிதாபிமான அடிப்படைல மன்னிச்சி விடறேன்ற மாதிரி பேசுனாரு.

இல்லனா எப்படியும் ஜெயசிம்மன் சும்மா இருக்க மாட்டாருனு தான் தோணுது. வீட்டுக்கு ஒரே பையன். அவனும் கட்டிலோட ஆகிப் போனதுல அவருக்கு வருத்தம் இருக்க தானே செய்யும்?” என்றார்.

“பாப்போம், அவங்க இப்போதைக்கு சும்மா தானே இருக்காங்க? அடிக்கடி நீங்களே தலை நீட்டி அவங்களுக்கு நியாபகப்படுத்தி விடாம உங்க வேலைய பாருங்க..”

சாருலதா அவனை கடுப்பாகப் பார்த்தாள். ‘இதே உன் குடும்பத்துக்குள்ள ஏதாவது நடந்து, நரம்பு பாதிக்கப்பட்டதால நடக்க முடியாம ஆகியிருந்தாலும் நீ இப்படியா ரியாக்ட் பண்ணுவ?’ எனக் கேட்கத் துடித்த நாவை அடக்கவே பெரும்பாடு படவேண்டி இருந்தது. ஆத்திரப்பட்டு பேசுவதால் மட்டும் புத்தி வந்து விடப் போவதில்லையே! பேசி களைப்பானேன் என கடித்த பற்களும், முறைத்த கண்களுமாக மௌனம் காத்தவள்,

“டுமாரோ நிறைய ஒர்க்ஸ் இருக்கு, ஐ அம் கோயிங் டு ஸ்லீப்!” என்று விட்டு அவன் நகர்ந்ததும்,

“இதுக்கு நீங்க அவன் கிட்ட சொல்லாமலே இருந்திருக்கலாம்..” என்றாள், குற்றம் சாட்டும் குரலில்.

உங்களுக்காக நான் எத்தனை தியாகங்கள் வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறேன். இருந்தும் என்னிடம் கூறத் தயங்கியதை, மகன் என்கின்ற உயர் எண்ணம் கொண்டு அவனிடம் பகிர்ந்தீர்களே? என்ன நலவு நேர்ந்திற்று எனக் கேலி செய்தது, அவளது பார்வை.

“சொல்லலனா, ஒருநாள் அவனாவே தெரிஞ்சுக்கும் போது குறை காணுவான். நீயும் காலம் தாழ்த்தாம சர்வீஸ் ப்ளேஸ் மாத்திக்கிட்டதைப் பத்தி அவன் கிட்ட சொல்லிரு!” என்றார் கேஷவன்.

ஒருவித இயலாமையுடன் எழுந்து மாடிக்கு வந்தாள், சாருலதா.

ஹாலுடன் ஒட்டியிருந்த பேல்கனி கதவு திறந்திருக்க, சில்லென்ற காற்று உடலையும் அதன் குளிர்மை மனதையும் தீண்டியது.

சிலிர்த்து அடங்கியவள் இரு கைகளை மடித்து தன்னைத் தானே அணைத்தபடி வந்து பேல்கனி கம்பியில் சாய்ந்து நின்றாள். குட்டி விஷாகன் மனக்கண் முன் வந்து சென்றான்.

இது உண்மையில் ஒரு விபத்து அல்ல! ஓட்டுநரின் கவனக் குறைவால் ஏற்பட்ட விளைவு. இதனால் பாதிக்கப்பட்டது எந்தப் பாவமும் அறியாத – கள்ளமில்லாத அச்சிறுவன் தானே?

அவ்வப்போது உணர்வில்லாத காலைத் தொட்டுப் பார்த்து அவன் முகம் வாடுவதை அவளே பார்த்திருக்கிறாள்.

வெளிக்காட்டிக் கொள்ளாவிட்டாலும் திடீரென ஊனமாகிப் போன தன் நிலைமையை எண்ணி அவனுக்குள்ளும் ஒரு சுய கழிவிறக்கம் இல்லாமல் இருக்காதே?

அவனின் வேதனையை உணரும் நேரமெல்லாம் சாருலதா ஊமையாகக் கண்ணீர் வடிப்பாள்.

போதாதகுறைக்கு இந்த விஜிதா வேறு, மதிய தூக்கத்தின் போது கூட அவ்வப்போது நடுக்கம் காண்பாளே!

கண்மூடித் திறக்கும் நொடியில் பார்வைக்கு முன் தோன்றிய கனரக வண்டி; வெடித்துச் சிதறிய காரின் நாலா பக்கக் கண்ணாடிகள்; துடித்துத் தூக்கி எறியப்பட்ட அன்புக்குறிய மகன். இரவின் நிஷப்தத்தை கிழிக்கும் வகையில் எங்கும் எதிரொலித்த அவளின் அலறல்..

இவை ஒவ்வொன்றும் அவளை இன்றும் பயமுறுத்திக் கொண்டு தான் இருக்கிறது.

நிம்மதியான உறக்கத்துக்கு மத்தியில் திடீரென துடித்து அடங்குவாள். சிற்சில நேரங்களில் எதை எதையோ பிதற்றவும் செய்வாள்.

இந்த அதிர்ச்சியிலிருந்து மீள விஜிதாவுக்கு எத்தனை காலம் எடுக்குமோ என்ற ஐயம் ஜெயசிம்மனை வருத்தம் கொள்ளச் செய்ய,

‘ஓரளவு குணமாகுனதும் அவங்களை கவுன்சிலிங்க் அனுப்பலாம் சார்!’ என ஆலோசனை கூறி அவரைத் தேற்ற முயன்றிருக்கிறாள் சாரு.

கொசுவலையாக அவளைச் சூழ்ந்து கொண்ட யோசனை, இரவின் இதத்தையும் பனி மூட்டத்தின் ஈரளிப்பையும் ஒன்றுமில்லாததாக்கி விட, வானத்து வெண்ணிலவை வெறித்தபடி கல்லாக சமைந்திருந்தாள் பாவை.

இதே நிலவை.. இதே ஈரளிப்பை.. இதே போன்றதொரு பெல்கனி ஓரமாய் நின்று பார்த்திருந்தான், வாசுதேவ பிரதாப்!

போர்க்களத்தில் தலைவனைத் தீண்டிய அதே தென்றல், கட்டிலில் அவனைப் பிரிந்த துயரோடு சோர்வுறப் படுத்திருக்கும் தலைவியையும் தீண்டிச் சென்றது எனப் பழங்கால சரித்திரங்களில் கூறப்பட்டதைப் போல், அங்கு அவனையும், இங்கு இவளையும் அதே காற்றுத் தான் மென்மையாக வருடிச் சென்றதோ..

நிலாமகளின் கள்ளக் கண் சிமிட்டல் ரகசியமாய் என்ன ரகசியம் சொன்னதோ, வாசுதேவனின் உதடுகளில் அளவில்லா புன்னகை விரிந்தது. சாருவின் மனதிலும் திடீரென்று ஒரு இனிய பனிச்சாரல்..

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!