Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என்னுள்ளே ஏனடி நுழைந்தாய்?

என்னுள்ளே💞இறுதி அத்தியாயம்

அத்தியாயம் _17

ஸ்வாதி நாம அழுதது போதும்… அறிந்தோ அறியாமலோ நம்ம கடந்த காலம் கசப்பு நிறைந்ததா அமைஞ்சுடுத்து.

இனி வரும் காலத்தை மகிழ்ச்சியாக்கிக்க வேண்டியது நம்மோட பொறுப்பு.

நீ அறியாமையில் செய்த தவறுக்கு சிலுவை சுமக்க வேண்டிய அவசியம் இல்லை.



Advertisement

முதன் முதலா என்னிடம் வேலை கேட்டு வந்தபோது உன் கண்களில் ஏதோ ஒரு வலி தெரிஞ்சுது.

ஏன்னா வலி கொண்ட என் கண்களால் உன் வலியை புரிந்து கொள்ள முடிந்தது.

இனியும் உன்னை நீ தண்டித்து கொள்ள வேண்டாம் ஸ்வாதி… பட்டது போதும்.

Advertisement

பத்மஜா நல்லா வாழறா…. நான் நடை பிணமாயிட்டேன்.

Advertisement

ரூபேஷ் மகிழ்ச்சியா இருக்கான் நீ குற்றவுணர்வோடு மருகிட்டு இருக்க…

இனிமேலாவது நாம நமக்காக வாழ்வோம் ஸ்வாதி…. அவளுக்கு புரியவைத்து அவள் சம்மதம் பெற்றுவிட போராடினான்.

அவள் பதில் பேசாது கையில் கட்டி இருக்கும் வாட்ச்சையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

Advertisement

என்ன ஸ்வாதி நான் இவ்வளவு பேசறேன் நீ பதிலே சொல்ல மாட்டேங்கிற…?

ஸார் நான் உடலால் வேறொருத்தவனை….

முட்டாள்…. நானும் தான் ஒருத்தியை…. அவன் சினம் கொண்டான்.

என் மனசு ஒப்பலை ஸார். நீங்க உங்க தங்கச்சி பார்த்திருக்கும் பெண்ணை ஓகே சொல்லிடுங்க…. அவள் கை கூப்பினாள்.

என்ன ஸ்வாதி… இப்படி சொல்ற…? பிரபா உன்மேல் உயிரா இருக்கான்.

நீங்க ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சு வைத்திருக்கீங்க…. இதை விட வேறென்ன வேணும். பாலாஜி அவர்களை சேர்த்து விட துடித்தான்.

கல்யாணி அம்மாக்கு உன்னை மருமகளாக்கிக்க ரொம்ப ஆசை.

நீ வேண்டாம் என்று மறுத்துட்டா பிரபா கடைசி வரை தனியாவே இருந்துடுவான் ஸ்வாதி.

அவன் மனசு எனக்கு தெரியும். அவன் உன்னை ரொம்ப நல்லா பார்த்துப்பான் ஸ்வாதி.

என் பிரபாவுக்கு நான் கியாரண்டி.

நான் யோசிச்சுட்டு அப்புறமா சொல்றேன் சார்… அவள் வெளியேறினாள்.

பிரபா…. கண்டிப்பா ஸ்வாதி சம்மதம் சொல்வா…. நீ வருத்தபடாதே… நண்பன் தோளை ஆறுதலாய் தட்டி விட்டு போனான் பாலாஜி.

கல்யாணி அம்மாளை வீட்டில் சந்தித்த பாலாஜி…. ஸ்வாதிக்கு பிரபாவை ரொம்ப பிடிச்சிருக்கும்மா…. ஆனால் எதையோ நினைச்சு தயங்குது  அந்த பொண்ணு.

ஒரு வேளை நம்ம வசதியை பார்த்து பயப்படறாளோ…? கல்யாணி அம்மாவிடம் ஏத்தி விட்டான்.

அவனுக்கு தெரியும் அம்மா நேரில் பேசினால் நிச்சயம் ஸ்வாதி சம்மதிப்பாள்.

பாலா சன்டே என்னை ஹாஸ்டலுக்கு கூட்டிட்டு போ…! நான் அந்த பொண்ணுகிட்ட பேசறேன். அவர் புது தெம்புடன் பேசினார்.

“———–“

ஸ்வாதி நாளைக்கு ஹோட்டலுக்கு வா….!

எதுக்கு?

சும்மா தான்… உன்னை பார்க்கனும் போல இருக்கு.

நான் வரமாட்டேன்…. அவள் தயவு தாட்சண்யம் இன்றி மறுத்தாள்.

உனக்கு ஒரு மெயில் பண்ணி இருக்கேன் பாரு…!

அவசரமாய் மெயிலை ஓப்பன் பண்ணினாள்.

மேஜிக் டே ஹோட்டலை விற்க பேரம் நடப்பதையும்…. ஹோட்டலை விற்று விட்டு துபாய் போவதையும் தெரிய படுத்தி இருந்தான்.

ஸ்வாதி கால் பண்ணினாள்.

சொல்லுங்க மிஸ். ஸ்வாதி… அவன் அழுத்தமாய் கேட்டான்.

ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க?

நான் இங்கே இருந்து என்ன பண்ண போறேன்?

அம்மாவை பத்தி கொஞ்சம் யோசிக்க மாட்டீங்களா?

ஏன் யோசிக்காம…? அம்மா ஸ்ரீமதி கூட இருந்துப்பாங்க. நான் வருஷத்துக்கு ஒரு முறையோ ஆறு மாசத்துல ஒரு முறையோ வந்து பார்த்துட்டு போவேன்.

ஸார் இப்படி விட்டேற்றியா பேசாதீங்க…! நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்த ஹோட்டல் இது.

எனக்கு வருமானத்தை விட நிம்மதி வேணும் ஸ்வாதி… அவன் வைத்து விட்டான்.

மனம் கேளாமல் ஹோட்டலுக்கு போனாள்.

அக்கவுண்ட் செக்ஷனில் ஆள் இல்லை… அவள் போய் அமர்ந்தாள்.

அவள் வந்ததை கண்டு கொண்டவன் நகைத்தான்.

சோர்வுடன் அமர்ந்திருப்பவளை கண்டு வருந்தினான்.

அவளை வற்புறுத்துகிறோம் என்று தெரிந்தது. ஆனால் வேறு வழி இல்லையே…? இப்படியே விட்டால் அவள் என்னாவாள்…?

மிஸ் ஸ்வாதி என்று அவள் டேபிளில் பெரிய பிளேட்டை வைத்தான்.

நிமிர்ந்து பார்த்தாள்… பிரபா அழகாய் நகைத்தான்.

மார்னிங் சாப்பிடலைன்னு நினைக்கிறேன்… சூடா இட்லி, வடை கொண்டு வந்திருக்கேன்… சாப்பிடுங்க ப்ளீஸ்…. கண் சிமிட்டியபடியே நகர்ந்தான்.

மறுக்கும் நிலையில் அவள் இல்லை…. சாப்பிட்டு பிளேட்டை கொண்டு போய் ஹோட்டலுக்குள் வைத்து விட்டு கம்பியூட்டர் முன் அமர்ந்து வேலை பார்க்க தொடங்கினாள்.

” ஸ்வாதி மேடம் இவரு உங்களை பார்க்கணுமாம்… ” பேரர் குரல் கேட்டு தலை தூக்கி பார்த்தவள் அதிர்ந்தாள்.

“நீயா….? நீ எப்படி இங்கே…?”

கூடுவாஞ்சேரி ஹோட்டலில் விசாரித்தேன். நீ வடபழனியில் இருக்கிறதா சொன்னாங்க. சோ சிம்பிள் உன்னை தேடி வந்துட்டேன்.

எதுக்கு வந்த..? அவள் எரிப்பதை போல் முறைத்தாள்.

உன்னை பார்க்கணும் போல இருக்கு ஸ்வாதி.

ஐ மிஸ் யூ ஸ்வாதி…. நான் M. Sc பயோ கெமிஸ்ட்ரி முடிச்சிட்டேன். வேலை தேடிட்டு இருக்கேன்.

உன்னை பதினேழு வயசுல பார்க்கும் போது சின்ன பொண்ணா அழகா இருந்த…. இப்போ வேற மாதிரி அழகா இருக்க… அவன் ஜொள்ளினான்.

நானும் எத்தனையோ பொண்ணுங்களை கடந்து வந்திருக்கேன். யாரும் உன் அளவிற்கு என்னை அட்ராக்ட் பண்ணலை.

பொறுக்கி…. செருப்பு பிஞ்சுடும் ஓடி போயிடு…! அவள் கொலை செய்யும் வெறியோடு பார்த்தாள்.

நீ மிரட்டினா நாங்க பயந்துடுவோமாக்கும்…?அவன் அருவெறுப்பாய் கண் சிமிட்டினான்.

மரியாதையா போயிடு….! அவள் வாசலை காட்டினாள்.

“நீயும் வா…! போகலாம் அவள் முகம் நோக்கி குனிந்தான்.”

ஸார்… உங்களை ஓனர் கூப்பிடறார்.

ஓனரா…? என்னையா…? தோளை குலுக்கி கொண்டு பேரரை பின் தொடர்ந்தான்.

வாங்க ரூபேஷ்… சௌக்கியமா? பிரபா புன்னகை முகமாய் வரவேற்றான்.

என்னை உங்களுக்கு தெரியுமா?

உங்களை தெரியாம இருக்குமா? நீங்க +2 படிக்கும் போதே ஜித்து வேலை எல்லாம் பண்ணி இருக்கீங்களே…?

வாட் யூ மீன்..? அவன் கோபத்துடன் முறைத்தான்.

பொறுக்கி நாயே… உனக்கு என்னடா சொல்லணும்?

உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் ஹோட்டலுக்கு வந்து…என்கிட்ட வேலை பார்க்கிற பொண்ணுகிட்ட இவ்வளவு கேவலமா நடந்துப்ப…?

ஓங்கி அறைந்த பிரபாவின் அறையில்  கதிகலங்கி நின்றான் ரூபேஷ்.

உங்களுக்கு என்ன ஸார் அவ மேல அவ்வளவு அக்கறை?

உங்களை கரெக்ட் பண்ணிட்டாளா…? கன்னத்தை பற்றியபடியே கேட்டான்.

முட்டாள்…. அவ என்னை கரெக்ட் பண்ணல… கல்யாணம் பண்ணிக்க போறா..!

ஸார் அவளையா கல்யாணம் பண்ணிக்க போறீங்க…?

ஏன்..?

அவளை நான் ஏற்கனவே… அவன் சொல்லி முடிப்பதற்குள் மீண்டும் ஒரு அறை கொடுத்தான் பிரபா.

ஏன்டா… அவ தனியாவா தப்பு பண்ணிட்டா… நீயும் தானே கூட சேர்ந்து பண்ணின…?

நீ யாரையும் மேரேஜ் பண்ணிக்காம பவித்ரமா இருந்துடுவியா…? அவன் சட்டையை பற்றி அருகில் இழுத்து முகத்தில் குத்தினான்.

இனி உன்னை என் கண் எதிரில் பார்த்தேன் குழி தோண்டி புதைச்சுடுவேன்…. ஓடி போயிடு…! அவனை பிடித்து தள்ளினான்.

விழுந்து எழுந்து ஓடிவந்த ரூபேஷை அற்ப புழு என்பது போல் பார்த்தாள் ஸ்வாதி.

வீங்கிய முகத்துடன் தெறித்து ஓடினான் ரூபேஷ்.

“———“

ஸ்வாதி உன்னை பார்க்க ஒரு அம்மா வந்திருக்காங்க… வார்டன் அழைத்தார்

கேள்வியாய் வந்தவள் கல்யாணி அம்மாவை கண்டு திகைத்தாள்.

நான் சுற்றி வளைத்து பேச விரும்பல ஸ்வாதி.

என் வீட்டுக்கு வந்துடு… எனக்கு மகளா வந்துடு…! அவள் கைகளை இறுக பற்றி கொண்டவருக்கு கண்ணில் நீர் வழிந்து கொண்டே இருந்தது.

  என் பிள்ளை டிவோர்சினு உனக்கு தெரியும் என்று  பாலா சொன்னான்.

என் பிள்ளை  மனம் அறிந்து ஒரு ஈ,எறும்புக்கு கூட துரோகம் பண்ண மாட்டான்.

ஆனா அவன் வாழ்க்கை இப்படி சாபமா மாறிடுச்சும்மா. நீதான் அவன் வாழ்க்கைய வரமா மாத்தணும்.

அம்மாடி சுவாதி… கடவுள் புண்ணியத்துல எங்களுக்கு ஒரு குறையும் இல்லை.    நிம்மதி இல்லை என்ற ஒரு குறையைத் தவிர வேற எதுவும் இல்லை.

எம்புள்ள பாவம்மா அவனுக்கு எதுவும் ஆசைப்பட கூட தெரியாது.

என் பிள்ளை ஆசைப்பட்ட பொண்ணு  நீ மட்டும் தான்.

வசதியை நினைத்தெல்லாம் நீ மனசை போட்டு குழப்பிக்காதம்மா….!

உன்ன தங்கமா தாங்க நான் இருக்கேன்.

என்ன பேசுவது எப்படிப் புரிய வைப்பது என்று தெரியாமல் தவித்து நின்றாள் சுவாதி.

நீ எதை நெனச்சு மறுக்கிறேன்னு  எனக்கு புரியலம்மா.  உங்க அப்பா அம்மா கிட்ட பேசணும்னா சொல்லுமா நானே போய் பேசறேன்.

ஐயோ அம்மா தயவுசெய்து நீங்க தவறா நினைச்சுக்காதீங்க… பதில் பேசும் திரானி இல்லாமல் கண் கலங்கினாள்.

நான்  ஒரு ரெண்டு நாள் யோசிச்சு பதில் சொல்லவா?

சரி ஸ்வாதி உன்  இஷ்டபடி டைம் எடுத்துக்கோ ஆனா நல்ல பதிலா சொல்லும்மா. அவர் கண்ணீருடன் கை கூப்பினார்.

என் பிள்ளை வாழ்க்கை உன் கையில தாம்மா  இருக்கு!நான் வரட்டுமா..?

வாசல் வரை வந்து வழி அனுப்பி வைத்தாள்.

இதுவும் கடந்து போகும் என்று ஸ்வாதியால்  எளிதாக கடந்து போக முடியவில்லை.

உண்மையில் அவள் மனதிற்கு பிரபாவை மிகவும் பிடித்திருக்கிறது.

கசப்பான கடந்தகாலம் வெளிப்படையாக அன்பை காட்ட யோசிக்கிறது.

ரூபேஷ் செய்த தவறுக்கு பிரபாவை தண்டிப்பது பாவம் என்று அவள் மனது அடித்துக் கூறியது.

பிரபா தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயமில்லை. ஆயினும் என்மேல் அன்பு காட்டுவது உண்மையில் பெருமையான ஒன்று.

வழக்கமாக ஒரு  ஆண் தான்  எப்படிப்பட்டவனாக இருந்தாலும் தன் மனைவி உத்தமியாக இருக்கவேண்டும் என்று எண்ணுவான்.

அந்த வகையில் பிரபாவை பாராட்டியே தீர வேண்டும்.

எவ்வளவு யோசித்தும் பிரபாவை மறுக்க ஒரு காரணம் கூட அவளிடம் இல்லை.

இரண்டு நாட்களாக ஹோட்டலுக்கு வராத ஸ்வாதியை போன் செய்து பாலா நலம் விசாரித்தான்.

என்ன சுவாதி முடிவு எடுத்திருக்க? என்று  உரிமையாக கேட்டான்  பாலாஜி.

சார் அது வந்து… அது…அப்பா அம்மா கிட்ட இன்னும் கலந்து பேசல…

ஹா… ஹா அவ்வளவுதானா…?சுகந்திம்மா அண்ட் தணிகாசலம் ஸார் ரெண்டு பேரோடும்  பேசி முடிச்சாச்சு.

சார் என்ன சொல்றீங்க…? அவளால் நம்பவே இயலவில்லை.

எஸ் ஸ்வாதி நானும்  கல்யாணி அம்மாவும் உங்க ஊருக்கு போய்  உன் பேரெண்ட்ஸ்   பார்த்து பேசி முடிச்சிட்டோம்.

வீட்ல என்ன சொன்னாங்க? அவள் ஆவலாக கேட்டாள்.

பொண்ணு  கூட கலந்து பேசிட்டு சொல்றேன்னு சொல்லி இருக்காங்க.

அப்பா அம்மாக்கு விருப்பம்னா எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல சார்.

சரி இந்த  சந்தோஷமான செய்தியை உடனே பிரபாக்கு  சொல்றேன்.

இரவு…. விவேக் அக்காவிற்கு அழைத்தான்.

அக்கா சென்னையிலிருந்து உன்னைப் பெண் கேட்டு ஒரு அம்மா வந்தாங்க.

ரொம்ப  பெரிய இடம் போல…! அம்மாக்கு ரொம்ப பிடிச்சிருக்குக்கா.

உன்கிட்ட கலந்துபேசிட்டு  சொல்றேன்னு அம்மா சொல்லி அனுப்பிட்டாங்க.

அம்மா உன்ன வீட்டுக்கு வர சொன்னாங்க அக்கா. ப்ளீஸ் மறுப்பேதும் சொல்லாம வரியா…?

ம்ம்ம்ம்… வரேண்டா விக்கி என்றாள்.

ஹை ஜாலி சுவாதி அக்கா வராங்க…! அவன் சந்தோஷத்தில் துள்ளி குதித்தான்.

இரவு பிரபா போன் பண்ணினான்.தேங்க்ஸ் ஸ்வாதி என்றான்.

நான் தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்.

சரி ரெண்டு பேரும் தேங்க்ஸ் சொல்ல வேண்டாம் ஓகேவா. அவன் குறும்பாய் சிரித்தான் .

ஊருக்கு போகலைய சுவாதி? அறியாதது போல் கேட்டான்.

போகணும் சார் அவளும் மழுப்பலாக பதில் சொன்னாள்.

நீ நாளைக்கே கிளம்பு! பாலா கொண்டு வந்து உன்னை ட்ராப் பண்ணுவான்.

ஐயோ இல்ல வேண்டாம் சார் நான் பஸ்ல போய்க்கிறேன்.

என்னது ஓனரம்மா பஸ்ல போறதா? ஹா ஹா ஹா ஹா ஹா அவன் வாய் விட்டு சிரித்தான்.

“————“

சுவாதி தாயிடம் சம்மதம் சொல்ல.. இனிதே பெண் பார்க்கும் படலம் ஆரம்பமானது.

அம்மா நீங்க பெரிய இடம் உங்க மனசும்  பெருசுதான். ஆனா எங்க தகுதிக்கு எங்களால முடிஞ்சது “பொன் வைக்கிற இடத்தில் பூ வைக்கிறோம்.”

பொண்ணுக்கு அஞ்சு பவுன் மாப்பிள்ளைக்கு மூனு பவுன் போட்டுடறேன்மா…  தணிகாசலம்  நெஞ்சை நிமிர்த்தி கூறினார்.

இப்போதெல்லாம் தணிகா  அதிகம் குடிப்பது இல்லை.

தான் குடிப்பதால் தான் தன் மகள் ஊருக்கு வருவதில்லை என்று அவர் நம்பினார். அதற்காக அவரால் குடியை மொத்தமாய் நிறுத்தவும் முடியவில்லை.

சுகந்தி சிறுக…சிறுக சேமித்து காதுக்கு, மூக்குக்கு, கழுத்துக்கு என்று எட்டு பவுன்  சேமித்து வைத்திருந்தார்.

பிரபா குடும்பத்திற்கு 8 பவுன் ஒரு பெரிய விஷயம் இல்லை என்றாலும் ஸ்வாதிக்கு பிறந்த வீட்டு சீர்  பெருமையாக இருந்தது.

நீண்ட காலத்திற்குப் பிறகு சுகந்தி இன்று தான் நிம்மதி ஆனார்.

வார்த்தையால் மகளை துடிக்க வைத்து மனதால் அவர் தினமும் துடித்துக் கொண்டிருக்கிறார்.

எங்கு தன் மகள் பாலையாகி நிற்பாளோ  என்று கவலைப்பட்ட தாய்மனம் இன்று உச்ச கட்ட மகிழ்ச்சியில் கூத்தாடியது.

சிம்பிளாக வடபழனி முருகன் கோயிலில் திருமணம் செய்வது என்று பேசி முடிக்கப்பட்டது.

பட்டுப்புடவையில் மணப்பெண் அலங்காரத்துடன்  அழகு மிளிர தன் அருகில் அமர்ந்திருக்கும் ஸ்வாதியை காதல் பொங்க பார்த்தான் பிரபா.

நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஹோட்டல் ஊழியர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருந்தான்  பிரபா.

குறித்த முகூர்த்தத்தில் தன் மனம் விரும்பிய மங்கைக்கு மாலையிட்டான் பிரபா.

மஞ்சள் கயிறின்  இரண்டு முடிச்சு பிரபா போட… மூன்றாவது முடிச்சு நாத்தனார் முடிச்சாக ஸ்ரீமதி போட்டாள்.

கல்யாணி கண்ணில் ஆனந்த கண்ணீர் பிரவாகமாக ஊற்றெடுத்து ஓடியது.பாலாவிற்கும் கண்கள் கலங்கியது.

தன் நண்பன் கலங்கி நின்ற காலங்களை அவன் அறிவான்.

சுகந்தி, தணிகாசலம் தம்பதியினர் பெரிய இடத்தில் தன் பெண்ணிற்கு வாழ்க்கை கிடைத்ததை எண்ணி உள்ளம் பூரித்தனர்.

தாலி கட்டி தாய் வீடு வந்த மகளை கட்டி அணைத்து கண்ணீர் சிந்தினார் சுகந்தி.

நீண்ட காலத்திற்கு பிறகான தாயின் ஸ்பரிசத்தில் விம்மி அழுதாள் ஸ்வாதி.

இருவருக்கும் இடையில் மௌனமான தேறுதல் இதயத்தில் இருந்து கண்கள் வழியே நடந்தேறி கொண்டிருந்தது.

மணமக்களுக்கு இங்கு சௌகர்யமாக இருக்காது என்று மாப்பிள்ளை வீட்டிலேயே மற்ற விஷயங்களை வைத்து கொள்ள சொல்லி அனுப்பி வைத்தார் சுகந்தி.

தாயின் மார்பில் புதைந்து நீண்ட நேரம் அழுது விலகினாள் ஸ்வாதி.

அந்த அணைப்பும் அழுத்தமும் ஆயிரம் விளக்கம் கூறியது சுகந்திக்கு.

தான் தாயாக இருந்தாலும் இப்படி தான் நடந்து கொண்டிருப்போம் என்று உணர்ந்தே தாயை அணைத்து கண்ணீர் சிந்தினாள்.

“———–“

மணமக்களை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்றாள் ஸ்ரீமதி.

மற்ற எல்லா சடங்கும் முடிந்து மணமக்களுக்கான நேரம்.

தன்னை நன்கு அறிந்தவன்… தன்னை விரும்பி ஏற்றவனே கணவனாக வாய்த்த போதும். மாது அவளின் சித்திர மேனி கிடு கிடுவென நடுங்கியது.

என்ன முயன்றும்  பத்மஜா உடனான  முதலிரவு மன கண்முன் வந்து போனது பிரபாவிற்கு.

தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவன்… மிரண்டு நிற்கும் மனையாளை எண்ணி சாந்தமானான்.

தயங்கி வந்த ஸ்வாதியின் மென் கரங்கள் பற்றி “ரிலாக்ஸ் ஸ்வாதி என்றான் “

அவள் எவ்வளவு பிரம்மபிரயத்தனப்பட்டு…. பழையதை மறந்தாலும். ரூபேஷின் தொடுகை ஒரு வினாடியில் வந்து போனது.

நாம் பிரபாவின் மனைவி…. ஒரு பொறுக்கியை எண்ணி அஞ்சக்கூடாது என்று தனக்குள் ஜபித்து கொண்டாள்.

“ஸ்வாதி உன் விருப்பம் இல்லாம எதுவும் நடக்காது…” அவள் தலை கோதினான்.

” ஒரு தலை கோதலில் அவனிடம் தாய்மையின் பாதுகாப்பை உணர்ந்தாள்.”

நிறுத்தி… நிதானமாக அவனை சிறு புன்னகையுடன் ஏறிட்டாள்.

ஸ்வாதி… வித் யுவர் பெர்மிஷன் ஒரு கிஸ் பண்ணிக்கவா  ப்ளீஸ்….! அவன் கண்களும் சேர்ந்து கெஞ்சியது.

ஏற்கனவே ஒரு நாள் உங்க வீட்டுக்கு வந்தப்போ கிஸ் பண்ணினீங்களே அப்போ என் பெர்மிஷன் கேட்டிங்களா…?

சட்டென கேட்டவள் நாக்கை கடித்து கொண்டு… நாணமுடன் தலை கவிழ்ந்தாள்.

அப்போ நான் உன்னை காதலித்தவன்…அவன் மனநிலை வேற…. இப்போ நான் உனக்கு தாலி கட்டிய கணவன்… இப்போ உன் உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்கணும்!

அனர்த்தமான பயமும் இறுக்கமும் தளர்ந்து வெட்கி சிவந்தாள்.

அவளை மென்மையாய் அணைத்து நெற்றியில் இதழ் பதித்தான்.

ஸ்வாதி உன்கிட்ட ஒரு சின்ன விண்ணப்பம்… எக்காரணம் கொண்டும் உன்னுடைய கடந்த காலத்தை நினைத்து கூனி குறுகி போகக் கூடாது.

அதே சமயம் உன்னோட பாஸ்டை எந்த சூழ்நிலையிலும் யார்கிட்டேயும் பகிர்ந்துக்கவும் கூடாது.

ம்ம்ம்ம்…. என்றாள். அவன் மீது காதலுடன் மிகுந்த மரியாதையும் கூடியது.

ஸ்வாதி உன்கிட்ட சொல்லணும்னு நினைச்சுட்டே இருந்தேன்…. இது பாரு பத்மஜா நம்ம மேரேஜ்க்கு விஷ் பண்ணி இருக்கா….! வாட்ஸப் மெசேஜ் காட்டினான்.

ம்ம்ம்ம்…என்றாள்…!

கோபமா…. அவள் விரல்களை நீவியபடி கேட்டான்.

சத்தியமாய் இல்லை… என்கிட்ட மறைக்கணும்னு நீங்க நினைக்கலையே..?

பத்மஜாக்கு நம்ம மேரேஜ் எப்படி தெரிந்ததுன்னு தெரியல… என்னோட மொபைல் நம்பர் எப்படி கிடைத்ததோ தெரியல..?

பரவாயில்லை… இனியாவது அவங்க கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டும்… முகமலர்ந்து மென்மையாய் சிரித்தாள்.

அவளையே பிரம்மிப்பாய் பார்த்து ரசித்து கொண்டிருந்தான் பிரபா.

அவன்  பிரம்மிப்பில் தன்னை தொலைத்தவள்… அவன் மார்பில் சாய்ந்து… தனக்கொரு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தி கொண்டாள்.

வித் யுவர் பெர்மிஷன் ஒரு கிஸ் பண்ணிக்கவா….? இமை கொட்டி… குறும்பொழுகும் பார்வையுடன் அவனை கேட்டாள்.

ஏய்…. கேடி…. நான் உனக்கானவன். “என்னை என்ன செய்யவும் உரிமை உள்ளவ நீ மட்டும் தான்டி…! ” அவளை இடையை இறுக்கி தன் மீது சாய்த்து கொண்டான்.

நன்றி உணர்ச்சி பெருக்கெடுக்க…. சிறு விசும்பலுடன் அவன் நெற்றியில் இதழ் பதித்தாள்.

ஆசை பட்டவ இங்கேயா கொடுப்பா….?அவன் முகம் சுழித்து சிரித்தான்.

ஸார் எங்கே கொடுத்தீங்க…? அவள் லஜ்ஜையுடன் கேட்டாள்.

அப்படியா….?

அவள் நடுங்கும் செவ்விதழை முற்றுகை இட்டான்.

மூச்சு திணறி அவள் விழி இறக்கைகள் அடித்து கொள்ள…

எங்கே… நீ கொடுடி பார்ப்போம்…? அவன் புஜபல பராக்கிரமம் காட்டினான்.

“கொடுத்த்த்துட்டா போச்சு…” அவன் மார்பில் கை வைத்து கட்டிலில் தள்ளி அவன் மீது சாய்ந்தாள்.

“———-“

யாரது என் பொண்டாட்டி முதுகில்  இவ்வளவு உரிமையா உப்பு மூட்டை கட்டிக்கிட்டு நிற்கிறது….?

“ம்ம்ம்ம்…. குட்டி வரதராஜன்…” நான்கு வயது கவினேஷ் கண் சிமிட்டி சிரித்தான்.

ஸ்வாதி இந்த நிலையிலும் நீ ஹோட்டலுக்கு போகணுமா? கல்யாணி கவலை பட்டார்.

அம்மா… ஆறு மாதம் தானே… ஒன்னும் பிரச்சனை இல்லை. இன்னும் ரெண்டு மாசம் தாக்கு பிடிப்பேன்… ப்ளீஸ் மா… தன் மேடிட்ட வயிறுடன் சிணுங்கினாள்.

ஆம்… ஸ்வாதி இரண்டாவது  குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறாள்.

கூடுவாஞ்சேரி ஹோட்டலை விட்டு செங்கல்பட்டு தாண்டி மதுராந்தகம் அருகில் காஃபி டே ஹோட்டல் தொடங்கி… ஸ்வாதி கண் காணிப்பில் செக்கை போடு போட்டு கொண்டிருக்கிறது.

விழுப்புரம்…அரசூருக்கு இடையில் ஒரு ஹோட்டல் துவங்கும் பணி போய் கொண்டிருக்கிறது.

கண் அசைத்து மனைவியை உள்ளே அழைத்தான் பிரபா.

என்னவாம்… கொஞ்சி பேசி அவன் மார்பில் சாய்ந்தாள்.

ஹலோ…. யாரது என் அப்பா மேல… இவ்வளவு உரிமையா சாயறது….? கவி குட்டி கேட்டு சிரித்தான்.

” ம்ம்ம்ம்…. அவர் செல்ல பொண்டாட்டி “

என் புருஷன் மேல நான் சாய்ந்துப்பேன் உனக்கு என்னடா…? போடா… மகனை விரட்டினாள்.

வர… வர… யாரு குழந்தைனே தெரியலடி … அவள் மூக்கை பிடித்து ஆட்டினான்.

இதிலென்ன சந்தேகம் கவி அப்பாக்கு… நான் தான் முதல் குழந்தை….கன்னம் குழிய சிரித்தாள்.

அது என்னடி எப்போ பார்த்தாலும் கவி அப்பா…? நான் கவிக்கு அப்பா ஆகறதுக்கு முன்னாடியே என் ஸ்வீட் பொண்டாட்டி ஸ்வாதியோட புருஷன். மீசையை நீவி கொண்டு கண் சிமிட்டினான்.

தன் கண்ணான மனையாளின் தாய்மை பூரிப்பில் பூசி இருக்கும் கன்னம் பற்றி…. காதல் வழிய முத்தமிட்டான்.

என்னுள் ஏனடி நுழைந்தாய் என்று புலம்பி கொண்டிருந்தவனின் திருவாய் இப்போதெல்லாம் என்னை என்னடி செய்தாய் என்று முனு முனுக்கிறது.

அவர்கள் வாழ்க்கை மகிழ்வுடன் இருக்க வாழ்த்தி விடை பெறுவோம்.

——–சுபம் —–

இக்கதையுடன் பயணித்து என்னை ஊக்க படுத்திய அனைத்து கண்மணிகளுக்கும் என் நன்றிகள் பல…🙏

கொஞ்சம் கனமான கதை… ரொமான்ஸ் அதிகம் இல்லை. ஆயினும் உங்கள் ஆதரவு அபரிமிதமானது.

ஸ்வாதி பிரபா போல் பாதிக்கபட்டவர்கள் பாவபட்டவர்கள் அல்ல… அவர்களும் மகிழ்வுடன் வாழும் உரிமை பெற்றவர்கள் தான்.

இக்கதை உண்மையை தழுவி எழுதப்பட்டது. ஸ்வாதி கதை உண்மை… பிரபா கதாபாத்திரம் புனைவு.

பெண் குழந்தைகள் வளர்ப்பு இன்றைய கால கட்டத்தில் பெரும் சவால்…. என்றாலும் பெண்மை போற்றுவோம்… புதுமை பெண்ணாக புரட்சி பெண்ணாக நம் குழந்தைகளை  வார்த்தெடுப்போம்.

தவறி நடக்கும் எதற்கும் நாம் பொறுப்பேற்க முடியாது.

அது உடல் சார்ந்த நிகழ்வானாலும் சரி… உள்ளம் சார்ந்த நிகழ்வானாலும் சரி.

********************

என்னை ஊக்கப்படுத்தி…. எனக்காக நேரம் ஒதுக்கி தொடர்ந்து கமெண்ட் கொடுத்து உற்சாக படுத்தும் என் அன்பிற்கினிய தோழமைகளுக்கு சித்துவின்  நெஞ்சார்ந்த நன்றி 🙏🙏🙏💘🌹💘🌹

🙏 நன்றி….🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!