Skip to content
Post Views: 3,714
உற்றார், பெற்றார், உறவினர் ஆசியோடு மஞ்சள் நாண் பூட்டியவனின் இதயத்துடிப்பும் சற்று எகிறியது தான். என்னவோ ஒன்று அவனுக்குள் தழும்பி பொங்கியது.
இந்த குங்குமத்தை மோதிர விரலில் தொட்டு திருமாங்கல்யத்தில் வையுங்கோ என்று ஐயர் சொல்ல…. தன் கரத்தை அவள் கழுத்தை சுற்றி கொண்டுவந்தவன் அவள் முகத்தை அணைவாய் தன் மார்பில் சேர்த்து ஜிமிக்கி காதில் மீசை உராய்த்து குங்குமம் தீட்டினான்.
அவள் இதய துடிப்பை இருமடங்காக்கி விட்டான். இயல்பாய் நடந்ததாய் அவள் ஜீரணிக்க முயல குறும்பாய் சிரித்துக்கொண்டான்.
அடப்பாவி என்று ரியாக்ஷன் கூட அவளால் கொடுக்க முடியவில்லை.
Advertisement
பெண்ணை பெற்ற நவமணிக்கு மட்டுமல்ல மன்னரை பெற்ற பாப்பாத்திக்கும் கண்கள் பனித்தது.
ஓரளவு மகனை உணர்ந்தவர் அவர். அவன் சொல்லிலும் செயலிலும் சரியானவன் என்று அவர் நம்பினார்.
அக்கினியை வலம் வர ஏதுவாக மாப்பிள்ளையின் அங்கவஸ்திரத்துடன் பெண்ணின் முந்தானையை முடியிட்டனர்.
Advertisement
அவள் கரம் வேண்டி அவன் கரம் நீட்ட சிறுநடுக்கத்துடன் தன் மருதாணி கரம் நீட்டினாள்.
Advertisement
இறுக்கி பற்றி ஆறுதல் மொழிவான் என்று ஏந்திழை அவள் எதிர்பார்க்க மென்மையாய் மிக மிக மிக மென்மையாய் பற்றிக் கொண்டான்.
சடங்குகள் முடிந்து உணவருந்தி மாப்பிள்ளை வீட்டுக்கு கிளம்பினார்கள்.
மணமக்களுடன் தேவிகா தன் கணவன்,குழந்தையுடன் கிளம்பினாள். கூடவே அவள் தோழி மீனாட்சியும்.
Advertisement
புகுந்த வீட்டுக்கு செல்லும் அவளுக்குள் ஒரு எதிர்பார்ப்பு சிறு கலக்கம் கலவையான உணர்வுகள். உள்ளுக்குள் குறுகுறுக்க எச்சில் கூட்டி விழுங்கினாள். சாப்பிட்ட ஒன்றரை இட்லியும் அரைக்கரண்டி கேசரியும் வெளியில் வர பார்த்தது.
எலுமிச்சம் பழம் இல்லையா? இயல்பாய் தான் கேட்டானோ? அவளுக்கு தான் புரியவில்லை.
போகும் வழியில் காரை நிறுத்த சொல்லி 7up வாங்கி வந்தான்.
சுபி என்னாச்சு? தேவிகா சங்கடமாகி விட்டாள்.
ஒன்னுமில்ல ஏப்பமா இருக்கு போல… அவனே பதில் கூறி விட்டான்.
அவள் சோர்வுடன் குடிக்க…. “அடுத்த மாசமே வாந்தி எடுக்குற” என்றான் அவளுக்கு மட்டும் ரகசியமாய்.
அவள் விழிகள் தெறித்து விடும்படி அவனை பார்க்க…
காரை நிறுத்திட்டு நடந்தே போயிடுவோமா? ரகசிய குரலில் கேட்டான்.
அவள் சோர்வுடன் பார்க்க…
ஒன்பது கிலோ மீட்டர் தான். நடந்துடமாட்ட? மீண்டும் சீண்டினான்.
கடு கடுவென அவள் முறைக்க… தலையை கோதி கொண்டான்.
திமிரு பிடிச்சவன் போல…. நொந்து போனாள்.
“——————-“
மணமகளே மருமகளே வா – உன்
வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா – தமிழ்க்
கோவில் வாசல் திறந்து வைப்போம் வா வா!
கார் தெருமுனையை நெருங்கும் போதே பாடல் ஒலிக்க தொடங்கிவிட்டது. இன்றளவும் கிராமத்தில் எல்லா திருமண வீடுகளிலும் மணமகன் வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கும் மணமகளை இந்த பாடலே வரவேற்கிறது.
வாசலில் பந்தல் போட்டு வாழைமரம் தோரணம் கட்டப்பட்டிருந்தது. கடல் நீல வண்ணம் கொண்ட பெயிண்ட் தீட்டப்பட்ட பெரிய வீடாகவே இருந்தது.
அக்கம் பக்கத்து பொண்டு பொடுசுகள் எல்லாம் புதுப்பெண்ணை வேடிக்கை பார்க்க கூடிவிட்டது.
மணமகளே மருமகளே வா! பாட்டு கேட்டுவிட்டாலே பொண்ணு மாப்பிள்ளை வந்து விட்டதாக அர்த்தம். பட்டாடை அலங்காரத்துடன் இருக்கும் மணமகளை பார்ப்பதில் அவர்களுக்கு ஒரு குஷி.
இப்படி வாயை பிளந்து பார்ப்பது அசிங்கம் என்று நகரத்தில் வேண்டுமானால் நினைப்பார்கள். கிராமத்தில் அது உரிமை. அண்டை அயலார் எல்லாரும் ஏதோ ஒரு உறவின் முறையிலே இருப்பார்கள்.
மணமக்கள் மாக்கோலம் போடப்பட்ட வாசலில் இணைந்து நிற்க பாப்பாத்தி ஆரத்தியுடன் வந்து நின்றார். உறவுக்கார ஆண் ஒருவர் தேங்காய் மீது கற்பூரம் வைத்துக்கொண்டு நின்றார்.
பாப்பாத்தி மணமக்களுக்கு ஆரத்தி சுற்றி இடது கை பெருவிரலால் திலகமிட்டார். அந்த பங்காளி சித்தப்பா தேங்காயின் குடுமி பகுதியில் கற்பூரம் வைத்து திருஷ்டி சுற்றி வாசலில் சிதறுகாய் உடைத்தவிட்டு வந்தார்.
சேர்ந்தமாதிரி வலது காலை வச்சு வாங்க என்றார் ஒரு பெண்மணி.
கொஞ்சமாய் நடுங்கியவளின் கரம் பற்றிக் கொண்டான் அவளை கொண்டவன். ஒன்றாய் வலது காலை வைத்து நுழைந்தனர் மணமக்கள்.
பூஜை அறையில் விளக்கேற்றி பால் பழம் கொடுத்து மற்ற சம்பிரதாயங்கள் முடிந்து சற்று நேரம் மணமக்களை ஓய்வெடுக்க சொல்லி சென்றனர்.
அக்கா ஜடையை அவிழ்க்கவா? பூவின் பாரத்தோடு ஆங்காங்கே இறுக்கமாய் குத்தப்பட்டிருந்த ஹேர்பின் அவளுக்கு கடுமையான தலைவலியை கொடுத்துக் கொண்டிருந்தது.
சுபி இன்னும் ஒரு மணிநேரத்தில் நம்ம கிளம்பணும். மணக்கோலத்தோடு தான் பிறந்த வீட்டுக்கு போகணும். இன்னும் ஒரு மணிநேரம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ என்றாள் தேவிகா.
“வா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ” என்று முன்னே சென்ற மன்னனரின் பின்னால் செல்ல கூச்சமாய் இருந்தது.
போ சுபி கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கோ என்றாள் தேவிகா.
நீயும் வாக்கா!
எது…. லூசு போய் உன் புருஷன் ரூமை பார்த்துட்டு வா! செல்லமாய் விரட்டினாள் தேவிகா.
சுற்றும் முற்றும் பார்த்தபடியே சங்கடமாய் அவன் சென்ற அறைக்குள் சென்றாள். கதைகளில் வரும் கதாநாயகர்களின் அறை போல் ஒரு ஊரையே உள்ளடக்கியதாக இல்லை.
கட்டில் போடப்பட்டிருந்தது. மின்விசிறி சுழன்று கொண்டிருந்தது. ஒரு சிறு மேசை,மர நாற்காலி ஜன்னலோரம் போடப்பட்டிருந்தது. கபோர்ட் சுவற்றோடு இணைந்து இருந்தது.
“வாஷ் ரூம் “என்று கை காட்டினான்.
அவள் வேண்டாம் என்பதாய் மறுத்தாள்.
திட்டமான அறை. நல்ல காற்றோட்டமும் வெளிச்சமுமாய் இருந்தது.
உட்கார் என்று கட்டிலை காட்டினான். அவள் நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.
அறையை பார்வையில் அளவீடு செய்து கொண்டிருந்தாள்.
நாலு ரூம்,ஹால் ,கிச்சன் அவ்வளவு தான் வீடு என்றான்.
ம்ம்ம்ம் என்றாள் நிமிர்ந்து பார்க்காமல்.
பின்னாடி பழைய வீடு இருக்கு சமையல் அங்கே தான். தட்டுமுட்டு சாமான் எல்லாம் அங்கே தான் போட்டிருக்கு.
ம்ம்ம்ம்ம்ம் என்றாள்.
தலை வலிக்குதா? காபி குடிக்கிறியா?
வேண்டாம் என்று தலையாட்டினாள்.
உங்க அக்காவை அனுப்புறேன் என்று வெளியேறிவிட்டான்.
“——————-“
வீடெல்லாம் பிடிச்சிருக்கா? தீபா கேட்டாள்.
ம்ம்ம்ம்ம் என்றாள் புதுப்பெண்.
இது ரொம்ப கிராமம் கொஞ்சம் பட்டிக்காடு தான் எனக்கெல்லாம் இங்கே பிடிக்காது என்றாள் மிதப்பாய்.
சுபி பதில் எதுவும் சொல்லவில்லை.
கட்டில் இன்னும் கொஞ்சம் பெருசா இருந்திருக்கலாம் என்றாள் சீராக வந்த கட்டிலை பார்த்தபடி தீபா.
இதுவே கிங் சைஸ் தான் தேக்கில் செய்தது என்றாள் தேவிகா.
என்னோடது இன்னும் பெருசு! நாலு பேர் தாராளமா படுக்கலாம் என்றாள்.
சுருக்கென்று ஏதாவது சொல்லிவிட வாய் துடித்தது தேவிகாவிற்கு.
முதல் கோணல் முற்றிலும் கோணலாகி விடக் கூடாதே என்று கஷ்டப்பட்டு அமைதியை கடைபிடித்தாள்.
கொழுந்தனாரை ரூமில் விட்டுட்டு நீ இங்கே வந்து உட்கார்ந்துட்ட அஞ்சலி சிரித்தாள்.
சமையல் எல்லாம் செய்வியா? தீபா தான் கேட்டாள்.
ஏதோ சுமாரா சமைப்பா என்றாள் தேவிகா.
தங்கையை நடுவில் அமர்த்தி அவர்கள் ராக்கிங் செய்வது போல் நக்கலான கேள்விகள் கேட்பது அவளுக்கு பிடிக்கவில்லை.
சுமாராவா? கொழுந்தனாரு நல்லா சாப்பிடுவாரே…. அஞ்சலி சிரித்தாள்.
அது தான் எனக்கே தெரியுமே என்று நினைத்து பெருமூச்சு விட்டாள் சுப்ரஜா.
நீங்க அக்கா தங்கச்சி ரெண்டுபேரும் எங்களை மாதிரி வெளிப்படையா பேசறீங்க! எங்க மன்னரு கொஞ்சம் அழுத்தம், முசுடு மாதிரி சட்டுன்னு கோபப்படுற டைப்…. எப்படி சமாளிப்பியோ? என்று திகிலை கிளப்பினாள் அஞ்சலி.
சுப்ரஜா உன் போன் பெல் அடிக்குது பாரு என்று அழைத்தான் மன்னர்.
சார்ஜரில் போட்டுவிட்டு வந்திருந்தாள்.
அவன் அழைக்கிறான் என்று அறைக்கு சென்றவள் போனை எடுத்து பார்த்தால் அழைப்பு ஏதும் இல்லை.
அவள் கேள்வியாய் அவனை நோக்க… கட்டிலில் படுத்திருந்தவன் அவளையே பார்த்திருந்தான்.
போன் வரலையே….. என்றாள்.
உன்னை கூப்பிட தான் அப்படி சொன்னேன்.
ஏன்?
அவங்க அதிகம் பேசுவாங்க, அனாவசியமா பேசுவாங்க! நமக்கு ஏன் அதெல்லாம் என்றான்.
அவள் பதில் எதுவும் பேசவில்லை. கொஞ்சம் கடுப்பு தான் அவன் மீது.
“———————“
மதிய உணவு தயார் என பாப்பாத்தி சாப்பிட அழைத்தார்.
மதிய விருந்தை முடித்துக் கொண்டு மணமக்கள் பெண் வீட்டிற்கு கிளம்பினார்கள்.
அங்கே சென்றவுடன் அப்படி ஒரு ஆசுவாசம் சுப்ரஜாவிற்கு. ஏதோ பலவருடம் பிறந்த வீட்டை பிரிந்து சென்றிருந்தது போலும் இதோ இந்த கணம் மீண்டும் தன் கூட்டுக்கு ஓடிவந்து விட்டது போலும் அப்படி ஒரு நிம்மதி.
அவனுக்கு தான் அங்கு கொஞ்சம் ஒட்டுதலாக சிரமமாக இருந்தது.
கிருஷ்ணா….. மாப்பிள்ளை சங்கோஜப்படறாரு போய் அவர்கூட பேசிட்டு இரு என்று மகனை அனுப்பினார் பூவராகன்.
இரவு உணவு நேரம் சுபிக்கு பதட்டம் தொற்றிக் கொண்டது.
சாயந்திரம் காபி ஸ்னாக்ஸ் சாப்பிடும்போது இன்னைக்கே நல்ல நாள் தான் சடங்கை வைத்துடுவோம் என்று அம்மாவும் அண்ணியும் பேசிக் கொண்டார்களே…
இல்லறம் பற்றி இருபத்து இரண்டு வயதில் அவளுக்கு புரியாதா?
லப் டப் அதிகரிக்க அதிகரிக்க கொஞ்சம் அழுகை வரும்போல இருந்தது.
எனக்கு இதெல்லாம் வேண்டாம் என்று அவர்களிடம் சொல்ல முடியாதே…
தேவிகாவும் சுகன்யாவும் சேர்ந்து அலங்கரித்து விட்டு அறிவுரை சொல்லி அனுப்பினார்கள்.
பால் சொம்புடன் அறைக்குள் செல்ல அவ்வளவு பயம். அவள் வீடு அவள் புழங்கிய அறை ஆனால் கணவன் என்ற உறவுடன் புதிதாய் ஒருவன் உள்ளே உரிமையாய் காத்திருக்கிறானே.
வெட வெடத்து உள்ளே நுழைந்தாள். கட்டிலில் சரிந்து படுத்து மொபைல் பார்த்துக் கொண்டிருந்தான் மன்னர் மன்னன்
கதவை தாழிடாமல் நடுக்கமாய் நின்றிருந்த புத்தம் புது மனையாளை கண்டவன் “சுப்பு என்ன சிலையா நிக்குற? என்றான்”
எதே சுப்புவா? சடாரென்று நிமிர்ந்து பார்த்தாள்.
என்ன காதல் கொண்டேன் தனுஷ் மாதிரி இருக்கேனா? அப்படி பாக்குற?
அவன் பேச்சில் அவளுக்கு மூச்சடைத்துவிட்டது.
அவள் சந்தேகமாய் விழி உருட்டி பார்க்க…
உனக்கு தூக்கம் வரலையா? இயல்பாய் கேட்டான்.
அது… அது.. அன்னைக்கு… அவளுக்கு பேச்சு வரவில்லை.
என்னைக்கு? மீசையை லேசாய் நீவிக் கொண்டு சிரித்தான்.
பொண்ணு பார்க்க வந்தன்னைக்கு… அவளுக்கு நாக்கு வறண்டுவிட்டது.
நீயும் வேணும்னு பேசல… நானும் வேணும்னு கேட்கல… சிரித்துக்கொண்டே அவள் கரம் பற்றி தள்ளி நிறுத்தியவன் கதவை தாழிட்டான்.
அவன் தீண்டல் ஏற்படுத்திய குறுகுறுப்பில் அவள் தலை குனிந்து நின்றாள்.
எதுக்கு இப்படி மழையில் நனைந்த ஆட்டுக்குட்டி கணக்கா நடுங்கிட்டு நிற்கிற ?
சட்டுப்புட்டுனு இன்னைக்கே வாழ்க்கையை ஆரம்பிக்கணும்னு எந்த கட்டாயமும் இல்லை.எவ்வளவு வேணா டைம் எடுத்துக்கோ!
ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கிட்டு இன்னும் ரெண்டு மூனு நாளில் நம் தாம்பத்திய பயணத்தை தொடங்கிடுவோம் சரியா?பின்னிருந்து அணைத்து அவள் கழுத்தில் முகம் புதைக்க
பெண்ணவளின் பொன்மேனி நடுக்கம் கண்டுவிட்டது.
குட் நைட் பொண்டாட்டி அவள் பின்னங்கழுத்தில் முத்தமிட்டு விலகி சென்றுவிட்டான்.
சிலிர்த்து நின்றவள் சுயம் பெறுவதற்கு முன் விளக்கணைத்து ஜீரோ வாட் விளக்கை ஆன் பண்ணி படுத்து விட்டான்.
நீ சரியா சாப்பிடல கொஞ்சம் பால் குடிச்சுட்டு படு! தூக்கத்தில் உருளுற பழக்கம் எனக்கு இல்லை. நீ தைரியமா பக்கத்தில் படுக்கலாம் என்றவவன் கண் மூடிக்கொண்டான்.
அவளுக்குள் என்னென்னவோ என்னென்னவோ மாற்றம்…
சிலிர்ப்பு அடங்கி தன்னை திடப்படுத்திக் கொண்டவள் கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டு படுத்துவிட்டாள்.
இவன் எந்த மாதிரி? அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. பின்னங்கழுத்தில் இன்னும் இருந்த குறுகுறுப்பில் அவனை பார்க்க வெட்கப்பட்டு அவளும் அழுத்தமாய் கண்மூடிக்கொண்டாள்.
அவளை அணைத்து கூட படுப்பதில்லை. ரொமான்ஸ் லுக் எல்லாம் அவனிடம் இல்லை. திடீரென்று கன்னத்தை தட்டிவிட்டு போவான். சட்டென்று கரம் பற்றி கோர்த்துக் கொள்வான். இதெல்லாம் பகல் பொழுதில். இரவில் பார்வையால் ஸ்பரிசித்து ஒருபுது வித பாவனையில் சிரிப்பான்.
மூன்று நாட்களாக அப்படியே அத்தம்பதிகளின் நாட்கள் சென்றது.
அவன் அதிகம் பேசுவதில்லை. அப்படி பேசினாலும் அவனை பற்றி புரிந்து கொள்ள முடியுமா என்ன?
“————————“
மூன்று நாள் விருந்து முடிந்தது சமயபுரம், வெக்காளி அம்மன் தரிசனம் என்று மணமக்களுடன் பெரியவர்களும் சென்று வந்திருந்தனர்.
இன்னும் சற்று நேரத்தில் புகுந்த வீடு கிளம்ப தயாராகி கொண்டிருந்த சுப்ரஜாவின் முகத்தில் உயிர்ப்பில்லை.
காதில் புகை வராதது தான் குறை. ஆளுக்கு ஆள் அறிவுரையை அள்ளி வீசிக் கொண்டிருந்தார்கள்.
ஒத்தஓரவத்தி மாமியாருன்னு சனம் நிறைஞ்ச குடும்பம் பார்த்து பக்குவமா நடந்துக்கணும் குட்டி என்ற நவமணியின் பேச்சில் அவ்வளவு கவலை.
மாப்பிள்ளை நல்ல மாதிரியா இருக்காரு தைரியமா இரு! என்றார் பூவராகன்.
பட்டுபடக்குனு வார்த்தைகளை விட்டுடாம இரு…! கொஞ்ச நாள் ஆகும் யாரு எப்படின்னு புரிஞ்சுக்க… தேவிகா தன் பங்குக்கு தங்கைக்கு அறிவுரை கொடுத்தாள்.
சுபி உன் ரெண்டாவது ஓர்ப்படி கொஞ்சம் மினிக்கியா இருக்கா பார்த்து நடந்துக்கோ என்றாள் அண்ணி சுகன்யா.
கார் வந்து விட்டதாக கிருஷ்ணா குரல் கொடுத்தான்.
லட்டு, சோமாஸ், மைசூர்பாகு என்று பலகாரம் நிறைந்த சம்படங்கள்,சுபியின் துணிமணிகள் அவளுடைய பொருட்கள் என்று லக்கேஜ் அதிகம் இருந்தது.
வாடகை கார் வந்துவிட்டது. கிருஷ்ணா சுகன்யா தம்பதிகள் மணமக்களை கொண்டுபோய் விட்டுவிட்டு வருவதாய் ஏற்பாடு.
மகளிடம் தனியே சில ஐநூறு ரூபாய் நோட்டுக்களை கொடுத்தார் பூவராகன்.
எதுக்குப்பா? வாங்க மறுத்தாள்.
நம்ம குடும்பன்னு தோணவே கொஞ்ச நாள் ஆகும். உன்னோட தேவைக்கு உரிமையா அவங்கட்ட கேட்க கூச்சமா இருக்கும். உன்னோட அவசர தேவைக்கு வச்சுக்கோ என்றார்.
கண்ணீருடன் விடைபெற்று கிளம்பினாள் சுப்ரஜா.
மாப்பிள….சுபி சூதுவாது தெரியாம வளர்ந்த புள்ள. பெரியவங்கட்ட பேசறோம் நிதானமா மரியாதையா பேசணும்னு இல்லாம சின்ன குழந்தையா கலகலப்பா பட்டுன்னு பேசிடுவா…. குரல் உடைந்துவிட்டார் பூவராகன்.
பார்த்துக்கறேன் மாமா என்று அவர் கரம் பற்றினான்.
“————————“
சுபி நாலு மகன்களுக்கும் நாலு ரூமாம். மாடியில் ஒரு சின்ன ரூம் இருக்கு. பின்னாடி பாரு பெரிய ஓட்டு வீடு இருக்கு. தோட்டத்தில் எவ்வளவு செடி மரம் எல்லாம் இருக்கு. ஆடு மாடு வளர்க்குறாங்க. கோழி கூட நிறைய இருக்கு.வீட்டை சுற்றி பார்த்துவிட்டு வந்த சுகன்யா நாத்தனாருக்கு தகவல் சொல்லிக் கொண்டிருந்தாள்.
சோர்வுடன் அமர்ந்திருந்த சுபி வெறுமனே ம்ம்ம்ம் என்று கேட்டுக் கொண்டாள்.
மாலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டு கிருஷ்ணாவும் அவன் மனைவியும் விடைபெற்றனர்.
அண்ணனும் அண்ணியும் கிளம்பும் வேளை அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. பெற்றவர்களை பிரிந்து விடுதியில் கூட அவள் தங்கி படித்தது இல்லை.
ஆறாம் வகுப்பு படிக்கையில் மதுரையில் ரயில்வே பணியில் இருக்கும் தாய் மாமன் நவநீதன் வீட்டுக்கு கோடை விடுமுறைக்கு சென்றிருந்தாள். இரண்டு நாள் தாக்குப்பிடித்தவள் மூன்றாவது நாள் அழுது கரைய ஆரம்பித்து விட்டாள்.
என்னென்னவோ வாங்கி கொடுத்து சமாதானப்படுத்தி பார்த்தனர். அம்மாட்ட போகணும் அப்பா வேணும்… ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்துவிட்டாள். அழுது அழுது இரவு காய்ச்சல் கண்டுவிட்டது.
அடுத்த நாளே பூவராகன் விழுந்தடித்து ஓடிப்போய் செல்ல மகளை அழைத்து வந்துவிட்டார்.
அப்படி தாய் தகப்பன் காலை சுற்றி வளர்ந்த செல்ல மகள் இன்று மணமாகி வேறு வீட்டுக்கு மருமகளாக வந்திருக்கிறாள்.
அவள் வேதனையை சொல்லவும் வேண்டுமோ?
error: Content is protected !!