Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே

நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே – 1

     நவம்பர் மாத அடைமழையோடு காற்றும் குளிரும் அந்த இரவு வேலையில் உடலை ஊசியாகத் துளைத்தது,  வெளியில் எட்டிப்பார்க்கவே முடியவில்லை எங்கும் இருள் சூழ்ந்திருக்க சாரல் அந்த மருத்துவமனையின் வாயிலைக் கடந்து உள்ளே சிதறிக்கொண்டிருந்தது.

 

 



Advertisement

அந்த இடத்தையே நூறு முறைக்கு மேல் நடந்து நடந்து அளந்துவிட்ட  மாசிலாமணி வரேற்ப்பறையின் இடது பக்க மூலையில் திரும்பிப் பார்த்தார்  அங்கிருந்த சிறிய மர பெஞ்சில் உடலைக் குறுக்கி சுருண்டு படுத்திருந்தாள் அவரின் இளைய மகள்.

 

Advertisement

 

Advertisement

அதைக் கண்டவர் வேகநடையில் அவருடைய மனைவி அன்னம்மாவின் அருகில் சென்றார் “அன்னம் போர்வை இருந்தா ஒன்னு குடு பாப்பா குளிர்ல படுத்திருக்கா” என்க.

 

Advertisement

 

அன்னம்மாவும் வேகமாகத் தான் கொண்டுவந்திருந்த பையிலிருந்து போர்வை ஒன்றை எடுத்துக் கணவனின் கையில் கொடுத்துக்கொண்டே மிக மெல்லிய குரலில் “ஏங்க மாப்ள இன்னும் வரலையே” என்றார்.

 

 

மாசிலாமணியின் விழிகள் தங்களுக்கு கொஞ்சம் தள்ளி அமர்ந்திருந்த தன்னுடைய அக்காவின் மீது படிந்தது “வரமாட்டார்ன்னு தெரிஞ்சும் எதுக்கு இந்தக் கேள்வி அன்னம்” என்றவர் மகளைத்தேடி சென்றார்.

 

 

போர்வையை அவள்மீது போர்த்திவிட  இறுக்கமாக அதைப் பிடித்துக்கொண்டவள் உடலை இன்னும் குறுக்கிக்கொண்டு உறங்கத்தொடங்கினாள்.

 

 

 

நேரம் அதிகாலை நான்கு மணியைத் தொட்டுநின்றது இரவு பண்ணிரெண்டு மணிக்கு மூத்த மகளை இங்குக் கொண்டுவந்து சேர்த்திருந்தனர்,  அடுத்த அரைமணி நேரத்தில் அந்த அறையிலிருந்து வெளியில் வந்த செவிலியர் “பையன் பொறந்திருக்கான்” என்றதோடு கையிலிருந்த பிள்ளையை அன்னம்மாவை நோக்கி நீட்டினார்.

 

 

தயங்கிய அன்னம்மா  “அண்ணி” என்றழைத்துகொன்டே தன்னுடைய நாத்தனார் முத்துலெட்சுமியை நோக்க “என்ன எதுக்கு பாக்குற வாங்கிக்கோ” என்றவர் தள்ளியே நின்றார்.

 

அதற்குமேல் தாமதிக்காமல் பேரனை ஆசையாக வாங்கிக்கொண்டார் அன்னம்மா,  பெரியவர்கள் செய்யும் தவறுக்கெல்லாம் பிள்ளைகள் என்ன செய்யும் மாசிலாமணி பிள்ளையின் முகத்தை ஆசையாய் பார்த்துக்கொண்டார்.

 

செவிலியர் “குழந்தையைக் குடுங்க அவங்கள ரூம்க்கு மாத்தினதும் நீங்க வெச்சுக்கலாம்”  என்றவுடன் மாசிலாமணி அவசரமாக “அம்மா ஒரு நிமிஷம் இதோ வந்துடுறேன்” என்று வேகமாக ஓடியவர் சின்ன மகளை அழைத்துவந்தார்.

 

 

உறக்க கலக்கத்தோடு அப்பாவின் கையைக் கட்டிக்கொண்டு வந்தவள் பிள்ளையைத் தொட்டு பார்த்து ரசித்தாள் செவிலியர் மீண்டும் குழந்தையை உள்ளே கொண்டுசென்றுவிட அம்மாவின் விழிகள் கலங்குவதையும் அத்தை முந்தானையில் கண்களைத் துடைப்பதையும் கண்டாள்.

 

அத்தையின் அருகில் சென்று “தம்பியைப் பாக்கலயா அத்த” என்க.

 

 

அவளின் கையைப் பிடித்துக்கொண்டவர்  “என் மகன் ஆசைப்பட்ட மாதிரி நடந்திருந்தா இப்போ வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சிருப்பேன் அந்தக் குடுப்பணை எங்களுக்கு இல்லையே, என் புள்ளய கண்ணால பாத்தே பத்து நாள் ஆகுது இதுல யாரை பார்த்து எனக்கு என்ன ஆவப்போவுது” என்றவர் மீண்டும் சாய்ந்தமர்ந்து  விழிகளை மூடிக்கொண்டார்.

 

 

 

இதற்கென்ன பதில் சொல்லுவது என்று அவளுக்குத் தெரியவில்லை திரும்பித் தந்தையை பார்க்க “வா” என்றழைத்தார் மாசிலாமணி தலை அசைத்து.

 

 

 

அவள் அருகில் நெருங்கியதும் “இப்படித்தான் பேசிட்டு இருப்பாங்க நீ அதையெல்லாம் மனசுல ஏத்திக்காத” என்றவர் “வீட்டுக்குப் போறியா” என்றார் மகளிடம்.

 

 

“ஹ்ம்ம் கொஞ்சம் நேரம் கழிச்சு போறேன்ப்பா” என்றவள் அப்பாவின் சட்டை பையில் கை நுழைத்து நூறு ரூபாயை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றாள்.

 

 

“மழை பெய்யுது பாப்பா குடை எடுத்துக்கோ” என்றார் தந்தை.

 

 

“வேண்டாம்ப்பா இப்போ விட்டுருச்சு வெளில போகல கான்டீன் தான் போறேன்”  என்றவள் அனைவருக்கும் டீ வாங்கிவந்தாள், அத்தை குடிக்கவில்லை மீண்டும் மகனின் புராணம் அவளும் கட்டாயாப்படுத்தவில்லை.

 

 

‘மாமனுக்கு அழைக்கலாமா’ என்ற யோசனை வெகுநேரமாக மண்டைக்குள் ஓடியது,  அழைப்பை ஏற்கும் நிலையிலாவது அவன் இருப்பானா என்று தெரியவில்லை.

 

 

மாசிலாமணி மருமகனுக்கு அழைத்துப் பார்த்து ஓய்ந்து போனார் இறுதியாக வேறு வழி இல்லாமல் அண்ணன்  மகனை அழைத்தவர் “ரமேஷு உன் தங்கச்சிக்கு ஆம்பள பிள்ளை பிறந்திருக்கு மாப்பிளைக்கு  கூப்பிட்டா எடுக்கமாட்டறார் எங்க இருப்பாருன்னு…” என்றவர் சிறிது தயங்கி “எங்க இருப்பாருன்னு உனக்குத் தெரியுமே கொஞ்சம் பார்த்துக் கூட்டி வரியா” என்க.

 

 

 

“தோ உடனே போறேன் பெரியப்பா நல்ல சேதி சொல்லியிருக்கீங்க” என்றவன் அலைபேசியை துண்டித்துப் பெருமூச்சொன்று விட்டான், எப்படி வாழவேண்டிய பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையை தாங்களே அழித்துக்கொள்கிறார்களே என்று வருந்தினான், மாசிலாமணி உறவுகளுக்கு அழைத்து விஷயத்தி பகிரத் தொடங்கினார்.

 

 

 

 

மாசிலாமணி அன்னம்மாள் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் மூத்தவள் மீனா ஆசைப்பட்ட வாழ்க்கைக்காக என்னவெல்லாமோ செய்துவிட்டாள் இதோ அதன் தொடர்ச்சியாக ஒரு பிள்ளையையும் பெற்றுவிட்டாள்.

 

 

இளையவள் காமாட்சி மாசிலாமணியின் தாயாரின் பெயர் அவரைப்போலவே பிறந்திருந்த மகளுக்குத் தாயின் பெயரையே சூட்டிவிட்டார்.

 

 

 

முழுதாக அழைக்கவே மாட்டார் “பாப்பா” இல்லையென்றால் “ஆச்சி ” என்றுதான் அழைப்பது,  அப்படியே அனைவரும் அழைக்க அவளின் முழு பெயர் அவளுக்கே மறந்துவிட்ட நிலைதான்.

 

 

 

அருகில் வந்த இளயமகளை நிமிர்ந்து பார்த்தார் அன்னம்மா “அம்மா நான் வீட்டுக்குப் போயிட்டு சமைச்சு வெச்சிட்டு வரேன்,  அப்புறம் நீங்க வீட்டுக்குப் போங்க” என்க.

 

 

“சரி” என்றவர் “பாத்து பத்திரமா போகணும் பாப்பா இன்னும் சரியா விடிய ஆரம்பிக்கல மழை வேற நசநசன்னு” என்றார்.

 

 

“அதெல்லாம் ஒன்னும் பயமில்லை நம்ம ஊருதானே” என்றவள் அத்தையை திரும்பிப் பார்க்க “நானும் வரேன் ஆச்சி  தலையை வலிக்குது” என்றவாரே எழுந்துகொண்டவர் அன்னம்மாவிடம் “நான் வீட்டுக்குப் போறேன் இங்க இருக்க முடியல” என்றார்.

 

 

“சரிங்கண்ணி” என்ற அன்னம்மா மகளுக்குக் கண் காண்பித்தார் பார்த்துக்கொள் என்று ‘சரி’ என்பதாகத் தலை அசைத்தவள் “போலாம் அத்த” என்று முன்னே நடந்தாள்.

 

 

வெளியே நின்றிருந்த மாசிலாமணியிடம் சென்றவள் அவரிடமும் சொல்லிக்கொண்டு தன்னுடைய ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டாள் அத்தையை பின்னால் அமர்த்திக்கொண்டு அவள் செல்ல இருவரையும் ஆற்றாமையோடு பார்த்து  நின்றார் அவர்.

 

 

செங்கல்பட்டு மாவட்டத்தின் சிறிதும் அல்லாத பெரிதும் அல்லாத ஒரு நகரம் பேரமனுர் அங்குதான் தன்னுடைய சிறுவயது முதலே வாழ்ந்து வருகிறார் மாசிலாமணி சொந்தமாக வீடு இருக்கிறது கீழ்த்தளத்தில் வரவேற்பறை மூன்று படுக்கை அறை அடுக்களை சாமி அறை என்று உள்ளது.

 

 

மேல் தளத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு குடும்பங்களுக்கு வாடகைக்கு விட்டுவிட்டார்,  இரண்டு கடைகள் உள்ளது ஒன்றை வாடகைக்கு விட்டிருக்கிறார் ஒன்றில் மெக்கானிக் கடை வைத்திருக்கிறார்.

 

 

 

கொஞ்சம் பசை உள்ள ஆள்தான் இரண்டு பெண்பிள்ளைகளை வைத்திருக்கிறேனே ஒரே போலச் செய்யவேண்டாமா என்பார்,  இளயமகள் சென்றபிறகு தளர்வாக வந்து மனைவியின் அருகில் அமர்ந்தார்.

 

“இதுக்கு என்னதாங்க வழி ரெண்டு பேர் வாழ்க்கையும் இப்படி வீனா போகுதே எப்படி சரிபண்ண” என்றார் அன்னம் வேதனையோடு.

 

 

“ஆச்சிக்கு மாப்ள பாக்க சொல்லிட்டேன் அன்னம் பிள்ளையை நல்லபடியா அனுப்பிவிட்டுடலாம் இவங்க பிரச்சனையை அப்ரமாதான் பாக்கணும்” என்ற கணவனைப் பார்த்தவர்.

 

“அவளுக்கு இப்போதானே இருபதே ஆரம்பிச்சிருக்கு  அதுக்குள்ள கல்யாணமா சின்னப் புள்ளைங்க” என்க.

 

 

 

“வேற என்ன செய்யச் சொல்ற அன்னம்…  பெரியவளுக்கு மட்டும் என்ன வயசு ஒரு புள்ளய பெத்துட்டா” என்றார் ஆற்றமாட்டாமல்,  என்ன என்ன கனவுகள் இருந்தது அனைத்தும் இப்படி வீணாகப் போய்விட்டதே.

 

 

 

வண்டியை வீட்டின் முன்னில் நிறுத்தியவள் இறங்கி கேட்டைத் திறக்கச் செல்ல முத்துலெட்சுமியும் இறங்கி ஓரமாக நின்றார் அவரைக் கண்டதும் அடுத்த வீட்டு பெண்மணி “என்ன முத்து மருமகளுக்கு புள்ள பொறந்திடுச்சா” என்று அருகில் நெருங்கினார்.

 

 

 

அவரைத் திரும்பிக் கூடப் பார்க்காத முத்து லட்சுமி உள்ளே நுழைந்துவிட காமாட்சிதான் நின்று பதில் சொன்னாள் “ஆண் குழந்தை பிறந்திருக்கு செல்வியக்கா, அத்தைக்கு தலை வலி அதான் நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்காதீங்க” என்றவளை பார்த்தவர்.

 

 

 

“அதான நீ உன் அத்தையை விட்டுக் குடுப்பியா மாமனை தான் கோட்டை விட்டுட்ட உன் அக்காக்காரி அடிச்சிட்டு போய்ட்டா” என்க இவளுக்குக் கோபமாக வந்தது, மரியாதைக்காக நின்று பதில் பேசினால்  என்ன பேச்சு இது? அவரை முறைத்து பார்த்தவள்.

 

 

 

“இதுக்குதான் எங்க அத்தை உங்ககிட்ட பேசல” என்றுகூறிவிட்டு வண்டியை உள்ளே கொண்டு நிறுத்திவிட்டு கேட்டை இழுத்து சாத்தினாள்.

 

 

 

வேகமாகச் சென்று கதவைத் திறக்க முத்துலட்சுமி அப்படியே மூன்றாவதாக இருந்த அறைக்குள் சென்று அடைந்துகொண்டார் பெருமூச்சொன்று எழுந்தது அவளுக்கு, சென்று குளித்துவந்தவள் முதலில் மதிய உணவைச் சமைக்க தொடங்கினாள்.

 

 

 

சாதம் வெந்துகொண்டிருக்க வெண்டைக்காய் சாம்பாரும் கருணைக்கிழங்கு வறுவலும் ரசமும் வைத்தாள்,  மெல்ல அத்தையின் அறையை எட்டி பார்க்கக் கட்டிலில் படுத்திருந்தார் விழிகள் மூடி இருந்தது ஆனால் உறங்கவில்லை.

 

 

 

அருகில் சென்றவள் “அத்த எழுந்து குளிச்சுட்டு வா டீப்போடறேன் குடி அப்புறம் கொஞ்சமா சாப்பிடு நாளைக்கே உங்க மகன் வந்து என் அம்மாவை இப்படி பட்டினி போட்டு வெச்சுருக்கன்னு என்னய தான திட்டுவாங்க” என்றாள்.

 

 

 

 

ஒரு ஏளன சிரிப்பு முத்துலெட்சுமியிடம் “அம்மாவைப் பத்தின நெனப்பு இறுக்கவன் செய்ற வேலையவா அவன் செஞ்சிருக்கான்,  தன்னையே மறந்துபோற அளவுக்கு ஒரு மனுஷனுக்கு போதை இருக்குன்னா அவன் என்ன மாதிரி ஒரு வாழ்க்கையை வாழுறான்” என்றவர் அவளின் கன்னம் வருடினார்.

 

 

 

“உன் மனசு தெளிவா இருக்குனு நீ சொல்ற ஆசை எதும் இருந்ததில்லைன்னு சொல்ற, உண்மையா சொல்றியா இல்ல காலம் உன்னைச் சொல்ல வெச்சுச்சா எனக்குத் தெரியல ஆனா அப்படி இல்லாம போயிருந்தா உன் மனசு காயப்பட்டிருந்தா அந்தப் பாவத்தை நான் எங்க கொண்டுபோய் சேத்திருப்பேன்”  என்றவர் கண்ணீர் விட.

 

 

 

“அத்த…” என்றவள் குரலும் இடறியது “முடிஞ்சு போனதைவிடுங்க நீங்க இப்படி இருக்கிறது எங்களுக்குப் பயமா இருக்கு அத்த, அப்பா ரொம்ப வருத்தாடுறாரு மனசை தேத்திக்கோங்க அத்த எனக்காக” என்றாள்.

 

 

 

சில நொடிகள் அமைதியாக இருந்தவர் “நீயே தனியா கஷ்டப்படுற இரு நான் குளிச்சிட்டுவரேன் சமைக்கலாம்” என்க.

 

 

“மதிய சமையல் முடிச்சுட்டேன் சாம்பார் இருக்கு கொஞ்சம் தேங்காய் சட்னி அறைச்சுட்டா பொங்கல் வெச்சுக்கலாம் இருங்க நான் டீ கொண்டுவரேன் குடிச்சிட்டு குளிங்க அதுக்குள்ள வேலை முடிஞ்சிடும்” என்றவள் வேகமாக அடுப்பைப்பிடி சென்று இருவருக்கும் தேநீர் கொண்டுவந்தாள்.

 

 

அப்படி இப்படி என்று அவரை அனுப்பிவிட்டு காலை டிபனயும் செய்துவிட்டாள்  அப்படியே அத்தையோடு அமர்ந்து அவரையும் சாப்பிட வைத்துத் தானும் உண்டுகொண்டாள்.

 

 

“நான் போயிட்டு அப்பா அம்மாவை அனுப்பிவிடுறேன் நீ கொஞ்ச நேரம் படு வெளில நான் பூட்டிட்டு போறேன்”  என்றவள் கதவைப் பூட்டிக்கொண்டாள்,  கையில் குழந்தைக்கென்று துணிகளும் அக்காவிற்கு மிதமான சூட்டில் கலக்கிய ஹார்லிக்ஸ்சும் தனக்கான மத்தியான உணவும் இருந்தது.

 

 

 

“தனியா நீ என்ன செய்வ உனக்கு என்ன தெரியும் இங்க நான் இருக்கேன் நீ அப்பாவைக் கூட்டிட்டு போ” என்றார் அன்னம்மா.

 

 

 

“அம்மா இங்க நமக்கு எதுவும் பெருசா வேலை இல்லை அவங்களே பாத்துப்பாங்க அதுக்குதான் அவ்ளோ காசு வாங்குறாங்க அப்பறம் குழந்தையைத் தூக்குறதெல்லாம் சொல்லிக் குடுப்பாங்க அதெல்லாம் நான் பாத்துப்பேன்”.

 

 

“சமையல் முடிச்சுட்டேன் காலைச் சாப்பாடு சாப்டுட்டு மாவு அரைச்சிடு இட்லிக்கு ஊற போட்டிருக்கேன் மதியம் சாப்ட்டு நல்லா தூங்கி எழுந்து வா ராத்திரி நீயும் அப்பாவும் இருந்துக்கோங்க இப்போ கிளம்புங்க”  என்று  இருவரையும் அனுப்பினாள்.

 

 

 

சில இரண்டாயிரம் ருபாய் தாள்களையும் தன்னுடைய எ.டி.எம் கார்டயும்  மகள் கையில் வைத்தார் மாசிலாமணி,  கணவன் மனைவி இருவரும் மகளுக்கு அறிவுரை வழங்கிக்கொண்டே வாசலுக்கு நடக்க அவர்களை மறைத்துக்கொண்டு வந்து நின்றான் அவர்களின் ஆசை மருமகன் சிவந்த விழிகள் கசங்கிய உடை களைந்த தலை கெட்ட வாடையோடு  முழு போதையில்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!