Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அவள் என் பொன்னெழில்

அவள் என் பொன்னெழில் 17. 2

ராஜதுரை அமைதியாக இருக்க, “என்னதான் சார் சொன்னாங்க? எப்போ வருவாங்கனு எதாவது ஐடியா இருக்கா?” என்றான்.

“எப்போ வருவானு தெரியலடா, ஆனா ரொம்ப நாள் எடுத்துக்கமாட்டா, குழந்தைகளுக்காக வந்திடுவா” என்றவர் ஐந்து நிமிட மௌனத்திற்கு பின்னே,

“அவ தப்பை புரிஞ்சிக்கிட்டாலும், என்னை விட்டு ரொம்ப தூரம் போய்ட்டா, அவளை இந்த நிலைக்கு ஆளாக்கிட்டேன்… எப்படி சரி செய்யப்போறேனோ?” என்றார்.

திருனேஷ்வரனின் பார்வை எள்ளல்போல் இருக்க, “என்னடா பார்க்குற? செத்துடுவேனு கூட சொல்லிட்டேன், நம்ப மாட்டேங்குறா” என்றார்.



Advertisement

“எப்படி நம்புவாங்க? நீங்கள்லாம் சாகுற ஆளா?” என இலகுவாக சொல்லி, “நீங்க சாகமாட்டிங்கனு நம்பலைனாலும் அந்த வார்த்தைக்கு அவங்க எவ்வளோ வேதனைப் பட்டுருப்பாங்கனு புரியுதா சார் உங்களுக்கு?” என்றான்.

“அவ தப்பை உணர்ந்தாளே தவிர, என்னை அவ யோசிக்கவேயில்ல, டிவோர்ஸ் பண்றதுல உறுதியா இருக்கா”

“டிவோர்ஸ்ன்ற வார்த்தையெல்லாம் அவங்க உள் மனசுலயிருந்து வராது சார்… கோபத்துல பேசுறது. வேலையை ரிசைன் பண்ணிட்டு வீட்டோட இருக்கேனு சொல்லிப்பாருங்க, மேடம் உங்களை எவ்வளோ யோசிக்கிறாங்கனு புரியும்”

Advertisement

“வேலையை ரிசைன் பண்றதா?”

Advertisement

“சும்மா சொல்லுங்க சார், நீங்களே ரிசைன் பண்ண நினைச்சாலும் மேடம் விடமாட்டாங்க”

“இதையும் நம்ப மாட்டா”

“நீங்க சொன்னா நம்பமாட்டாங்க, வேற யாரையாவது மேடம்கிட்ட சொல்ல வைங்க”

Advertisement

“அப்படிலாம் டிபார்ட்மண்ட்ல என்னால யார்கிட்டயும் நிக்க முடியாதுடா”

“ஹையர் பொஸிஸன்ல இருக்கவங்ககிட்ட கேட்டு பார்க்க முடியாதா சார்?”

“ம்ஹும்… டிபார்ட்மண்ட்லனு இல்ல, க்ளோஸ் ரிலேட்டிவ்ஸ்க்கு கூட ஃபேமலி விசயம் தெரியறது எனக்கு பிடிக்காது”

எல்லார்கிட்டயும் வெறப்பாவே இருப்பார் போல என கோபமாய் நினைத்தவன், “சரி நானே சொல்றேன் விடுங்க” என்றான்.

“உன்னோட ஹெல்ப் வேண்டாம்” என்றார் இறுக்கமாக.

“மேடம் என்னை வாட்ச் பண்றதை நிறுத்திட்டாங்க, அவங்க முன்னாடி போய் நின்னா ரொம்ப கில்ட்டியா ஃபீல் பண்ணுவாங்க, ஆனா என் கால்ஸை அவங்களால அவாய்ட் பண்ண முடியல. அவங்களுக்குள்ள இருக்க என் நினைப்பை நல்ல விதமா மாத்த இது நல்ல சான்ஸ்.

இது ஹெல்ப் இல்லை சார், என்னோட கடமை. மேடம்க்கு நிறைய நன்றிக்கடன் பட்டுருக்கேன். அவங்க செய்த உதவிக்கு இது ரொம்ப ரொம்ப சின்ன ஹெல்ப்தான். நன்றியை காட்ட எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்க சார்” என்றான் உரிமையாக.

ராஜதுரைக்கும் ரூபலஷ்மியை தனது வழிக்கு கொண்டு வர வேறு வழியில்லாமல் போக, “எப்படி சொல்லப் போற?”  என்றார் விசாரணையாக.

“இனிதான் சார் யோசிக்கனும்” என்றவன், “நேற்று மாலை சத்யப்ரகாஷ் பற்றி பொன்மணி அவளின் தந்தையிடம் பேசியது நினைவு வர, “ஐடியா கிடைச்சிடுச்சுங்க சார்” என்றபடி ரூபலஷ்மிக்கு அழைத்தான்.

“டேய்… இங்க இருக்கேனு சொல்லாத” என கிசுகிசுத்தார் பதட்டத்தோடு.

ரூபலஷ்மி அழைப்பை ஏற்கவில்லை. ‘வெரி அர்ஜன்ட் மேடம், ஹெல்ப் மீ ப்ளீஸ்’ என்று குறுஞ்செய்தி அனுப்பிய அடுத்த நொடி அழைப்பு விடுத்தார் திருனேஷ்வரனுக்கு.

சிறு புன்னகையோடு அழைப்பை ஏற்றவன், “எப்படி இருக்கிங்க மேடம்?” என்றான்.

“ம்ப்ச்… என்ன ஹெல்ப் வேணும்னு சொல்லு” என்றார்.

சத்யப்ரகாஷ் விசயத்தை சொல்ல, “ஏன்? ஊர்ல வச்சி அவனை அடிச்சதான? இதை ஹேண்டில் பண்ண மாட்டியா? என்னால ஏதும் பண்ண முடியாது” என்று இணைப்பை துண்டிக்கப் போக,

“மேடம்… மேடம்” என கெஞ்சியவன், “நேர்ல மாட்டினான்னா உண்டு இல்லைனு பண்ணிடுவேன்தான். ஆனா இவன் பின்னாடி இருந்துட்டு பேசுறானே” என்றான் பயந்தவன் போலவே.

“வெளில இருந்து என்னத்தை கழட்ட போற? திரும்ப ஜெயிலுக்கு போ” என்று இணைப்பை துண்டித்தார் கடுப்போடு.

“என்ன சொன்னா?”

“ம்ப்ச்… நான் எதிர்பார்த்த கேள்வியை கேட்கல சார்” என்றான் ஏமாற்றமாக.

“என்ன எதிர்பார்த்த?”

“உங்ககிட்ட ஹெல்ப் கேட்க சொல்வாங்கனு எதிர்பார்த்தேன்”

“முட்டாள்… என்கிட்ட எப்படி கேட்க சொல்வா?”

“எப்படியோ போகட்டும்னு எல்லாம் மேடம் என்னை விட மாட்டாங்க சார். ஊர்ல இருக்குறதால உங்ககிட்ட கேட்க சொல்வாங்கனு எதிர்பார்த்தேன்” என்றவனுக்கு அழைப்பு வந்தது ரூபலஷ்மியிடமிருந்து.

“நான் ரிசைன் பண்ணலாம்னு இருக்கேன், கேர்ஃபுல்லா இருந்துக்கோ”

“அச்சோ மேடம் நீங்களுமா?” என்றான் அதிர்வாக.

“நானுமான்னா?”

“நீங்க ஊர்ல இல்லைனதும் சார்கிட்ட ஹெல்ப் கேட்டேன், ரிசைன் பண்ணப்போறேன், லட்டர் கூட கொடுத்துட்டேன், என்னால ஒன்னும் பண்ண முடியாதுனு இப்போதான் சொன்னார். சொல்லி வச்சமாதிரி நீங்களும் ரிசைன் பண்றேன்றிங்க,

நல்லவங்க எல்லாரும் ரிசைன் பண்ணிட்டு போய்ட்டா நாட்டை யாரு காப்பாத்துறது? ரௌடிங்களை யாரு கன்ட்ரோலுக்கு கொண்டு வரது?

கஷ்ட்டப்பட்டு படிச்சி வாங்கின வேலையை ஏன் ரிசைன் பண்றிங்க? இரண்டு பேருக்கும் ஒர்க் ப்ரஸ்ஸர் அதிகமா மேடம்?” என்றான் கவலை போல.

“அவர்கிட்ட எதுக்கு ஹெல்ப் கேட்ட? வை போனை” என்று கடுகடுத்து, கணவனுக்கு அழைத்தார் ரூபலஷ்மி.

“சார் மேடமாத்தான் இருக்கும், எப்படியாவது பேசி வீட்டுக்கு வர வச்சிடுங்க, ரிசைன் பண்றேன்னு சொன்னதுல பின்வாங்கிடாதிங்க” என கிசுகிசுத்து, கிளம்புவதாய் செய்கையில் சொல்ல, “வெய்ட் பண்ணு” என்று மனைவி அழைப்பை ஏற்று தனியறைக்கு சென்றார்.

“வேலையை ரிசைன் பண்ணப்போறிங்களா?” என கணவனிடம் கேட்டார் ஏகக்கடுப்போடு.

“வேற என்ன பண்றது? நீ டிவோர்ஸ் வேணும்னு பிடிவாதமா இருக்க, யாருக்கு சம்பாதிக்கனும்?”

சண்டை போடும்போதும், உணர்வுகளை மதிக்காத போதும் கோபம்தான் வரும். ஆனால் தற்போதைய கணவனின் உடைந்த குரல் மனதை சற்றே அசைக்க, “ஏன் உங்களுக்கு வாய் வயிறு இல்லையா? ரிசைன் பண்ணுனிங்க… கொன்னுடுவேன்” என்றார்.

மிரட்டும் வார்த்தை, ஆனால் பயந்த குரல்… மனதை இதமாக்க, பணியை விட்டுவிட்டால்தான் என்ன என்று தோன்றியது ராஜதுரைக்கு.

தனது மனைவியை திருனேஷ்வரன் புரிந்திருக்கும் அளவிற்கு கூட நமக்கு தெரியவில்லையே… என வருந்தி, “இனி வீட்டுக்கு வான்னு சொல்ல மாட்டேன், உனக்கு பிடிச்சமாதிரி நீ இரு, எனக்கு தோணின மாதிரி நானிருக்கேன்” என்று இணைப்பை துண்டித்தார் ராஜதுரை.

மனைவி வந்துவிடுவாள் என்ற நம்பிக்கை தற்போதுதான் பிறக்க, மனதின் பாரம் சற்றே குறைந்தது. ஐந்து நிமிடம் வரை அமைதியாக அமர்ந்திருந்து பின்னே திருனேஷ்வரனை காண ஹாலுக்கு வந்தார்.

கார்ட்டூன் பார்த்துக்கொண்டிருக்கும் யுகன், யுகதியிடம் பேசிக்கொண்டிருந்தான் திருனேஷ்வரன். “நிஜமா அம்மா வந்துடுவாங்களா?” என கண்களை அகல விரித்த யுகதி, தந்தையைக் கண்டதும், “அப்பா… அம்மா ஹையர் ஆஃபீஸர்ஸ்கிட்ட பர்மிஷன் கேட்டுட்டு சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுவாங்களாம், திரு அங்கிள் சொல்றார்” என்றாள்.

“ஆமாம்டா, வந்துடுவா” என்றவர், பணிப்பெண்ணிடம் பழரசம் எடுத்து வர சொல்லி, “சத்யப்ரகாஷ் இப்போ எங்க இருப்பான்? ஹௌ ஹி லுக்ஸ்?” என்றார்.

“சார்… மேடம்கிட்ட பேசுறதுக்காகத்தான் அவனை சொன்னேன், அவனை நானே ஹேண்டில் பண்ணிப்பேன் சார்”

“ஒரு சில விசயம் தெரிஞ்சுட்டா எல்லாமும் தெரிஞ்சிடுமா? செய்யாத தப்புக்கு அஞ்சு வருசம் ஜெயில்ல இருந்தும் புத்தி வரலையா? சொல்றான்றேன்” என்றார் உரிமை மிரட்டலாக.

“என்கிட்ட அவன் போட்டோ இல்லை சார்” என்று அவனின் விலாசம், தொழில் என அனைத்தும் சொன்னான்.

“சரி நான் பார்த்துக்கிறேன், ஜுஸ் குடி” என்றார்.

பணிப்பெண்ணிடமிருந்து பழரசத்தை வாங்கிப் பருக, “வீட்டை காலி பண்றியா? வேற வீடு பார்த்துருக்கியா? பணம் இருக்கா” என்றார்.

“இப்போ பணம் இல்லை சார், ஆனா ஒன் மன்த்ல தேவைக்கு அதிகமாவே கிடைக்கும்” என்று, தான் செய்து கொண்டிருக்கும் வேலையைப் பற்றி சொல்லி, “பைக்கையும் அப்புறம் கொடுத்துடறேன் சார்” என்றான்.

“பணம் வந்த பின்னாடி வீட்டை காலி பண்ணிக்கோ” என்றார் கட்டளையாகவே.

“உதவியை கூட விறப்பாவே செய்தா எப்படித்தான் உங்களோட குப்பை கொட்டறது? மேடம் ரொம்ப பாவம்” என முணுமுணுக்க, “கிளம்புடா… எப்படி பேசனு எனக்கு க்ளாஸ் எடுக்க வந்துட்டான்” என்று அதட்ட,

“இதோ கிளம்பிட்டேன் சார்” என்று பயந்த பாவனை காண்பித்து கிளம்பிய பின்னே… “ரேர் பீஸ்” என்று திருனேஷ்வரனை பாராட்டினார் சின்ன சிரிப்போடு.

*** *** *** *** *** ***

வீட்டிற்கு வந்ததும் மொபைலை பார்க்க, பத்து முறைக்கு மேல் அழைத்திருந்தாள் பொன்மணி. தற்போதும் அழைப்பு வந்தது. பொன்மணியிடமிருந்து அல்லாமல் தென்றலிடமிருந்து.

அழைப்பை ஏற்றவன், “அவ போன் செய்ய சொன்னா நீ செய்திடுவியா? சென்ஸ் இருக்கா உனக்கு? ரிடிகுலஸ்” அதீத கோபத்தோடு.

“இல்ல சார்.. சாரி சார்” என உளறி, “பொன்மணி டின்னர் எடுத்துட்டு வீட்டுக்கு போயிருக்கா, கீ இல்லையாம்” எனும்போதே “அஃபிஸியல் ஒர்க்ன்னா மட்டும்தான் கால் பண்ணனும்” என கட்டளையிட்டு இணைப்பை துண்டித்தான்.

பின்னே பொன்மணிக்கு அழைத்தவன், “சாப்பாடு கொடுத்துட்டு, என்னோட” ‘படுத்துட்டு’ என சொல்ல வந்தவன், பல்லை கடித்து வார்த்தையை முழுங்கி… “காலைல கிளம்பிடுவ. பிரேக்ஃபாஸ்ட், லன்ச் சமைச்சு கொடுப்ப. திரும்ப நைட் வருவ. இப்படி செய்யுறவளுக்கு பேர் என்ன தெரியுமா?” என கத்தினான் முகம் சிவக்க.

“இ… இல்ல, நான் அப்படி”

“தென்றலை எதுக்குடீ போன் செய்ய சொன்னா? அறிவிருக்கா உனக்கு?” என்றவன், பொன்மணி பதில் சொல்ல வாய்ப்பளிக்கவில்லை.

“மூச்…” என அதட்டியவன், “ஒழுங்கா வீட்டுக்கு போய்டு, இனி இப்படி சோத்து மூட்டையை எடுத்துக்கிட்டு கிளம்பின… அவ்வளோதான் பார்த்துக்க” என்று இணைப்பை துண்டித்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!