Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

39 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 39

.

கௌதமன் படுத்திருந்த அறையின் சாளரம் அதற்கென அளவெடுத்துத் தைத்திருந்த இரவு உடையை உடுத்தியிருந்ததால் வெளியே படர்ந்து கொண்டிருந்த வெளிச்சம் அறையினுள் எட்டிப்பார்க்க முயன்று தோற்றிருந்தது. மூடியிருந்த ஜன்னலும், உறுமிக் கொண்டிருக்கும் ஏசியும் காலை நேர ‘கட முட’வில் இருந்து தன்னை காக்கும் எனக் கௌதமன் எண்ணியிருக்க, அவன் தூக்கத்தைக் கலைத்தது கிணற்றிற்குள்ளிருந்து ஒலித்த கிண்கிணி சத்தம்.



Advertisement

மீண்டும் மீண்டும் அதே சத்தம். இம்முறை அது அழைப்பு மணியின் சத்தம் என்று எடுத்துக் கொடுத்தது மூளை. கண்களைக் கசக்கியபின்னும் இருளாக இருந்த அறையைப் பார்த்தவனுக்கு எரிச்சலாக வந்தது. இன்றாவது நிம்மதியாக உறங்க நினைத்தால்… இதென்னடா நடு இரவில் தனக்கு வந்த சோதனை எனப் படுக்கையை விட்டு எழுந்தான்.

நடுக்கூடத்தை ஆக்கிரமித்திருந்த மங்கலான ஒளி, விடிந்து கொண்டிருப்பதை உரைக்க, கையில் இருந்த டீ-ஷர்ட்டை போட்டுக் கொண்டே கதவைத் திறந்தான்.

கையில் அன்றைய பால் பாக்கெட்டோடு, “வேலைக்கு கேட்டிருந்தீங்கன்னு மணி அண்ணன் சொல்லிச்சு” என மலர், கௌதமனின் முன் நின்றிருந்தாள்.

Advertisement

கௌதமன் நெற்றி சுருங்கவும், “வேப்ப மரத்தடியில் இஸ்திரி கட போட்டிருக்க அண்ணன்…” எனக் கூறி முடிக்கவும், “ஓஹ் யியா… மலர்?” என்றான் வந்த கொட்டாவியைப் புறங்கையின் பின் மறைத்துக் கொண்டே.

Advertisement

“ஆமாங்க” என்றவளை, “உள்ள வா” என்றவன், “இந்த வீட்டுல முன்ன நீ தான் வேலைக்கு இருந்தியா?” என ஏறிட்டான்.

“ஆமாங்க சார்.” என்றவள் கேட்டதற்கு மட்டுமே பதில் கொடுத்தாள்.

“என்ன வேல எல்லாம் செய்வ?” என இவன் கேட்ட கேள்விகளுக்கு கூறப்பட்டப் பதில் கௌதமனுக்கு உகந்ததாகவே இருந்தன.

Advertisement

இவன் எதிர்பார்ப்பு, மகளின் தேவைகள், அவள் வேலை என அனைத்தையும் கூறியவன், “இன்னைக்கு வேலைய ஆரம்பிக்கிற தான?” எனக் கேட்டறிந்து, “எனக்கு ஒரு காபி போடு” என அறைக்குள் நுழைந்து கொண்டான். முகத்தில் காட்டவில்லை என்றாலும் கௌதமனுக்கு அத்தனை நிம்மதி. இனி மகளுக்கு வீட்டு உணவைக் கொடுக்கலாம். எந்த நேரமும் வீடு முழுவதும் விளையாட்டுச் சாமான்கள் இரைந்து கிடக்காது. பால் எப்பொழுது பொங்கும் என அடுப்புக்குள் தலையை விட வேண்டாம் என நினைத்தவனுக்குள் நிம்மதிப் பெருமூச்சு.

கௌதமனின் தோற்றதைக் கனத்த மனதோடு பார்த்திருந்தவள், அவன் தலை மறையவும் மெல்ல மூச்சை இழுத்து விட்டாள். அறையைச் சுற்றி கண்கள் அலைந்தன. ‘மலரு… மலரக்கா… கண்ணு மலரு’ எனப் பல சத்தங்கள் காதுக்குள் ரீங்காரமிடக் கண்கள் கரித்துக் கொண்டு வந்தன. அவன் இருந்திருந்தால்… இந்த வளர்ந்தவனைப் போல் இருந்திருப்பான். ‘எப்படி இருக்கீங்க மலரக்கா?’ எனக் கண்கள் மின்ன வசீகரப் புன்னகையோடே கேட்டிருப்பான். அவன் போனான்… கையோடு அனைவரையும் எட்டா தூரத்திற்கு இழுத்துக் கொண்டு போயே போய்விட்டான். எஞ்சிய இரு ஜீவன்களின் ஜீவன் மட்டுமே மிஞ்சியுள்ளது.

பதினேழு வயதிருக்குமா இந்த வீட்டில் முதல் முதலாக வேலைக்கு வந்தபோது? அத்தனை அன்பான மனிதர்களைத் தாங்கி நின்ற தரைகளில் விளையாட்டு சாமான்கள் கிடந்தன. ‘கண்ணு மலரு இந்த பசங்க காத்தாடி பண்றேன்னு வீடு பூரா பேப்பர கிழுச்சு போட்டிருக்குங்க பாரு. கொஞ்சம் கூட்டி துடைச்சுடு’ காதில் வீட்டுப் பெரியம்மாவின் சத்தம் கேட்டது. ‘மலரக்கா என் வெள்ளச் சட்டையில் இந்தக் குட்டி பேய் கிறுக்கிட்டா… தொவைச்சு தாக்கா’ எனக் குட்டி வாண்டு வெள்ளைச் சட்டையோடு நின்றிருந்தான். ‘மா மலரு ஒரு கப் தண்ணி எடுத்து வா மா’ எனப் பெரியவர் முகத்தைத் துடைத்துக் கொண்டே சோஃபாவில் அமர்ந்தார். அழைக்காது வந்த கண்ணீர் கன்னம் கடந்து கீழே செல்லும் முன் புடவை முந்தானை அதைத் துடைத்தது. “அப்பா” என்ற மழலையின் சத்தம் அறையிலிருந்து வந்தது. கண்முன் விரிந்த காட்சிகள் எல்லாம் கனவாய் கலைந்து போனது.

அடுக்களையை நோக்கி கால்கள் செல்ல, கண்கள் அந்த வீட்டை வாஞ்சையோடு சுற்றிப் பார்த்தன. வீட்டில் இருந்த பொருட்கள் மாறியிருந்தன. பொருட்கள் மாறியிருந்தாலும் அந்த வீட்டில் சுற்றித் திரியும் தென்றலும், அசையாது நின்றிருக்கும் சுவரும் இன்னும் பழங்கதைகளை அவள் காதுகளில் ஒலிக்கவிட்டுக் கொண்டிருப்பது போலவே தோன்றியது.

மூடியிருந்த அடுக்களையைத் திறக்க, மாறியிராத அந்த வீட்டின் தலை எழுத்தைப் பார்த்தாள் மலர். குட்டி புயல் ஏற்படுத்தியிருந்த சேதாரம் முகத்தில் புன்னகையை உற்பத்தி செய்தது.

காலை ஆறு மணியிலிருந்து பத்து வரை வேலை நீண்டது. வேலைக்கு இடையே, முந்தானை இழுபட்டு, “ஆந்தி…” என்ற இன்னிசை ஒலித்தது.

திரும்பிப் பார்த்தாள். குண்டு கன்னங்களும், பெரிய விழிகளும், மீன் குஞ்சு வாயுமாக நின்றிருந்தாள் குழந்தை. இது என்ன இந்த வீட்டிற்கு வரும் குழந்தைகள் கூட ஒரே ஜாடையில் இருக்குமா? மலர் வியந்து பார்த்தாள்.

“நீங்க மலல் ஆந்தியா?”

இந்த வீட்டில் வளரும் பெண் குழந்தைகளுக்கு ‘ர’ வரவே வராதா? சிரிப்பு வந்தது. “ஆமா. நான் மலர். பாப்பா பேர் என்ன?” எனக் குழந்தையின் உயரத்திற்கு அமர்ந்தாள் மலர். “ஆலி பேபி. பேபிக்கு பால் நேணும்” கூறி நின்ற குழந்தையின் கன்னம் கிள்ளிய மலரோடு அரும்பு நன்றாக ஒட்டிக் கொண்டது.

காலை, மாலை என மலர் இருமுறை வந்தாள். வீட்டு வேலைகள் அனைத்தையும் அவளே எடுத்துப்போட்டுச் செய்ய, அன்றைய நாள் கௌதமனுக்கும் யாழினியாளுக்கும் நன்றாகவே கடந்தது. அன்று மட்டும் அல்ல தொடர்ந்த வந்த நாள்கள், சுறுசுறுப்பாக… சோம்பலாக எனப் பல வேகத்தில் கடந்தன. கௌதமனுக்கு திருச்சி பிடிபட்டது. தனிமை பல பாடங்களைக் கௌதமனுக்கு கற்றுக் கொடுத்தது. ஒற்றை தகப்பனாக மகளைக் கையாள கற்றுக் கொடுத்தது. பக்கத்து வீட்டு யசோவோடு தோழமையை ஏற்படுத்தியது. கண்டதும் காதல் போல் முதன் முதலாக அரவிந்தனை பார்த்த அன்றே அவர் மீது எழுந்த அன்பு பன்மடங்காகி, அரவிந்தன் மீது அதிக மரியாதையும் அன்பையும் பொழிய வைத்தது. இவை எல்லாவற்றிற்கும் மேல், தனக்குத் தனிமை சுத்தமாகப் பிடிக்காது என்பதையும் பெற்றவள் தன்னை அதிகம் தேடுகிறாள் என்பதையும் உணர்ந்து கொண்டான் கௌதமன்.

விழித்திருக்கும் நேரங்களில் மகள் அவன் மனதை நிறைத்தாலும், கண்ணயரும் நேரம் மனம் கதகதப்பைத் தேடியது. தன் நேசத்தைக் கொட்டி வளர்த்த காதலைத் தேடியது. “ஏன் டி…” என்ற கேள்வியோடே பல இரவுகளை வேதனையோடே கழித்தான். தாக்ஷாவிடம் செல்ல மனம் உந்தியது. ‘உன் மகளா? இல்லை நானா?’  என்ற முட்டாள்தனமான கேள்வியைக் கேட்டவள் தானே தன் தவற்றை உணர்ந்து வர வேண்டும்? தன் காதல் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்த கௌதமன், தாக்ஷா வருவாள் என்றே நம்பினான்.

“கௌதமா… நீ கிளம்பி ரெண்டு வாரம் ஆச்சு டா. எப்போ வர?” என்ற வைஷாலியின் கேள்விக்கு, இம்முறை, “ரெண்டு வாரத்துல வந்திடுறேன் மா” என்ற பதிலை உரைத்தவன் அடுத்த வாரத்திலேயே அவன் முடிவை “இப்போதைக்கு என்னை எதிர்பாக்காதீங்க மா” என மாற்றிக் கொண்டதின் காரணகர்த்தா தாக்ஷாயினி மட்டுமே.

“உங்க கல்யாணம் நடக்க இருந்த அதே நாள்ல தாக்ஷாக்கு அவ கசின் கவினோட கல்யாணம் டா மச்சான். உங்க மேரேஜ் பிரேக் ஆனதும் அவனோட ஜப்பான் போனவ இன்னும் ரெண்டு வாரம் கழிச்சு தான் வரா போல. மேரேஜ் ஆனதும் அவனோட கிளம்பிடுவான்னு தோணுது… ஏன்னா அவ பிசினஸ் எல்லாம் தர்ஷன் கைக்கு மாறிடுச்சு” என்ற செய்தியில் கௌதமன் நிலைகுலையவில்லை என்றாலும், கௌதமனுக்கு அதிகம் வலித்தது.

தாக்ஷாயினியின் திருமணம் முடிந்து அவள் ஜப்பான் செல்லும் வரை அவள் இருக்கும் பக்கம் தலை வைத்து படுப்பதில்லை என இவன் முடிவு செய்தால் போதுமா? காலமும் அதையே நினைக்க வேண்டாமா?

அந்த வாரமே வாசுதேவனிடமிருந்து அழைப்பு வந்தது. தர்ஷனோடு இணைந்து எடுக்கப் போகும் திரைபடத்தின் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை அவன் பார்க்க விரும்புவதாகக் கூறினார். “ஹோட்டல் ஹால்ல சின்னதா ஒரு பார்ட்டி மாதிரி ஒரு மீட்டிங்… அப்படியே லன்ஞ்.” என்றார்.

‘இவ்வளவு நடந்தபின்னுமா?’ என இவன் புருவம் உயர்த்த, வாசுதேவன் தர்ஷன் புகழ் பாடினார். “சும்மா ஒண்ணும் இந்த வயசுல அவன் இவ்வளவு பெரிய இடத்த பிடிக்கல கௌதமா. மனுஷாட்கள நல்லா எடைபோட தெரியுது. தொழில்ன்னு வந்துட்டா, அவன் கணக்கே தனிதான்.” என்றார்.

“பிசினஸ் வேற, குடும்பம் வேற. அவங்க விரும்பினாங்க… அவங்களா பிரிஞ்சாங்க. இதுல நம்ம பிசினஸ் எங்க வருது?” என்றுவிட்டானாம்.

“எல்லாருக்கும் இன்ஃபார்மல் இன்விடேஷன் தான். நீ நாளைக்குப் பத்து மணிக்கா நான் அனுப்புற லொக்கேஷனுக்கு வா, இந்த படத்துல முக்கியமான வேலையில இருக்க போற டெக்னீஷன்ஸ்ச நாளைக்கு மீட் பண்றோம், நீயும் இருக்கணும்… கண்டிப்பா வா” என வாசுதேவன் அழைத்தார்.

சோழர் காலத்தை மையமாகக் கொண்ட காதல் கதை. சோழ இளவரசிக்கும் அவர்களின் பகை நாட்டை சேர்ந்த இளைஞனுக்கும் ஏற்படும் காதல், அதனால் ராஜியத்தினுள் ஏற்படும் மோதல் என நீளும் கதை என்பதால் தஞ்சையை ஒட்டிய பகுதியில் பிரமாண்ட மாளிகையும், சோழர் காலத்துத் தஞ்சை நகரும் உருவாகப் போவதை வாசுதேவன் மகனிடம் விளக்கினார்.

காலையில் அரக்கப் பரக்க மகளோடு கிளம்பினான் கௌதமன். ஒரு மணி நேரப் பயணத்தின் பின் தந்தையும் மகளும் வந்து சேர்ந்தனர் வாசுதேவன் கூறிய ஹோட்டல் அறைக்கு.

“தாத்தா” எனப் பாய்ந்து வந்த குழந்தையை அள்ளி வாரிக் கொண்ட வாசுதேவனை இறுகக் கட்டிக் கொண்டாள் குழந்தை. வாரங்களுக்குப் பின் பார்க்கும் தாத்தாவிடம் தன் அச்சோ அம்மா, அலவிந் தாத்தா, மலல் ஆந்தி பற்றிய கதைகளை வாரி இரைத்தாள். கௌதமன் வந்த நேரம் முதலே இவன் மீது பதிந்திருந்த தர்ஷனின் கண்களில் விழுந்தாள் யாழினியாள். தன் தங்கையின் ஆசைக்கு இடையூராக வந்த சின்ன வாண்டை பார்த்து அமர்ந்திருந்தான் தர்ஷன்.

“நீ தான் அசிஸ்டென்ட் டைரக்டர்… தெரியுமில்ல? டைரக்டருக்கு முன்ன நீ வந்து நிக்க வேண்டி இருக்கும். தினமும் இப்படி குழந்தையைத் தூக்கிட்டு வந்தா வேலைய எப்படி பார்ப்ப? குழந்தைக்கு இது சேஃப் இல்ல. நான் இங்க இருந்து வீட்டுக்கு கூட்டிட்டு போறேன், நாங்க பார்த்துக்கிறோம். நீ இங்க உன் வேலையை பாரு” என வாசுதேவன் எவ்வளவு கூறியும் கௌதமன் ஒத்துக் கொள்ளவே இல்லை.

“நான் பார்த்துகிறேன் பா. அவ இல்லாம நானும், நான் இல்லாம அவளும்… ப்ச்… நானே பார்த்துகிறேன் பா. பிளே ஸ்கூல்ல போடறேன். நான் இல்லாத நேரம் மலர் பார்த்துப்பா.” என முடித்துவிட்டான்.

தன் தகப்பனிடம் தன் குழந்தையைத் தர மறுக்கும் கௌதமனிடமிருந்து குழந்தையைப் பிரிக்க முடியும் எனத் தன் தாய் எப்படி நினைத்தார்? அதற்கு எப்படித் தன் தங்கையும் இசைந்தாள்? இரண்டு மணி நேரத்தில் தான் உணர்ந்ததை, இரண்டு வருட கௌதமனோடான பழக்கம் அவளுக்கு ஏன் உணர்த்தவில்லை? பெருமூச்சு விட்டுக் கடந்து சென்றான் தர்ஷன்.

தர்ஷன் அனைவரையும் பார்த்தான். பேசினான். அவன் ஓர் எட்டா கனி. அப்படியெல்லாம் அவனை ஒருவரும் பார்த்துவிட முடியாது. இப்பொழுதும் சற்று தள்ளி அவன் மெய்க்காவலர் அவனைச் சுற்றி அவர்களது பார்வையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் கௌதமன் எதிர்பார்த்த எந்த வெட்டி பந்தாவும் அவனிடம் இல்லை. மிக மிக எளிதாகப் பேசக் கூடிய பழகக் கூட ஒருவனாக… தாக்ஷாவை போலவே அத்தனை வசீகரனாக இருந்தான்.

கௌதமன் அவனை அளவெடுக்க, அவனோ இயக்குநரோடு மும்முரமாகப் பேசிக்கொண்டிருந்தான். கதை, திரைக்கதை நன்றாக இருந்தால் போதுமா… அதைத் திரையில் பார்ப்பவர்களுக்குச் சரியான உணர்வைக் கடத்துவதில் தானே அனைத்தும் இருக்கிறது. அதைச் செயல்படுத்தப் போகும் திறமைசாலிகளைப் பார்த்தான். பேசினான். பேச்சினூடே அவன் கவனம் கௌதமனையும் அவன் மகளையும் சுற்றியது.

இருபதிலிருந்து அறுபது வரை இருந்த அந்தக் கூட்டத்தினிடையே குட்டி தேன்சிட்டாய் அனைவரையும் தன் சிரிப்பால் மழலையால் கவர்ந்தாள் குழந்தை. குட்டி குட்டி சேட்டைகளும், அடமும், சிரிப்பும், சிணுங்கலுமாகத் தந்தையைச் சுற்றி, அங்கிருந்தவர்களைக் கவர்ந்த யாழி, தர்ஷனின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பியிருந்தாள்.

“நான் பார்த்துகிறேன் டா. நீ வந்த வேல பாரு. இப்படி உன் பொண்ணையே சுத்திட்டு இருந்தா சரியா வராது” என வாசுதேவன் பேத்தியின் பின் செல்ல, கௌதமன், மற்ற தொழில் நுட்பக் கலைஞர்களோடு பேச்சில் ஈடுபட்டான்.

தந்தையிடம் இருந்த மகள் அவர் அருகில் இல்லை என்றதும், “எங்க ப்பா பேபி?” எனத் தந்தையிடம் சண்டைக்கு நின்ற கௌதமனின் உணர்வு வாசுதவேனுக்கு மட்டுமல்ல, அவர்களைக் கடந்து சென்ற தர்ஷனுக்கும் துல்லியமாகப் புரிந்தது.

“செந்தில் குழந்தைய பார்த்ததும் ஆசையா தூக்கிட்டுப் போனான் டா.” என ஆரம்பித்தவரை அவன் முறைக்க, “வெளியில இருக்க தோட்டத்துக்குத் தான் டா போனான்… ரொம்ப பண்ணாத” எனக் கடிந்தவர், “யாழி ஓடி வரா பாரு” என்றார், வாயில் பக்கம் பார்வையை ஓட்டி. பின்னோடு வந்த செந்திலிடம் தலை அசைக்க, அவன் வெளியே சென்றுவிட்டான்.

ஆசையாக ஓடி வந்த மகள் தன் கையில் இருந்த ஒற்றை மல்லியைத் தகப்பனிடம் காட்ட, மகள் உயரத்திற்கு ஒற்றை முட்டியில் அமர்ந்தவன் விரல் நீட்டி எச்சரிப்பது தர்ஷனுக்கு தெரிந்தது.

கௌதமன் கண்டிக்க, குட்டி முகம் வாடியது. இதழ் பிதுங்க அழத் தயாராவது போல் இருந்தாலும் குழந்தை அழுவதாகத் தெரியவில்லை. தர்ஷனுக்கு சுவாரசியம் கூடியது. சின்ன கைக் கொண்டு தகப்பனின் வாயைக் குழந்தை மூட இவன் முகம் புன்னகையைப் பூசிக் கொண்டது. கையை எடுத்துவிட்ட கௌதமன் திட்டுவதை நிறுத்துவதாக இல்லை. பொறுத்துப் பார்த்த யாழி ஒரே தாவலில் தந்தையின் கழுத்தைக் கட்டிக் கொண்டு முகம் முழுவதும் முத்தம் கொடுக்க ஆரம்பித்தாள்.

“குட்டி கழுத” என வாய் முணுமுணுக்க, தர்ஷன் வாய்விட்டுச் சிரித்தான்.

“அப்பாட்ட சொல்லாம எங்கயும் போக கூடாது. தெரிஞ்சவங்கனாலும் அப்பாட்ட கேட்கணும்… யார் கூட விளையாடினன்னு அப்பா கேட்டா, அவங்க பேர சொல்லணும்… ” மகளின் கன்னத்தில் இதழ் பதித்துக் கொண்டே நடக்கும் கௌதமனை பார்த்தவன் பார்வை முற்றிலும் மாறி இருந்தது.

திருமண நிச்சயம் அன்றே எல்லாம் முடிந்துவிட்டதாக தர்ஷனுக்கு தகவல் சென்றபின்னும் அவனால் உடனே தங்கையைக் காண வர முடியாது போனது. அவன் சென்னைக்கு வந்து சேரும்முன் தாக்ஷா கவினோடு கிளம்பியிருந்தாள். வீட்டினுள் நுழைந்தவனிடம் அவன் அன்னை ஏதேதோ கூறினார். கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த பதிவு, வேறு கதை கூறியது. என்ன நடந்திருக்கும் என தர்ஷனுக்கு புரிந்தாலும், அவரவர் வாழ்வு, அவரவர் முடிவு என தாக்ஷாவின் முடிவில் அவன் தலையிடவில்லை.

குழந்தையோடு நிற்பவனுக்குத் தங்கையைக் கொடுப்பதில் தமயனுக்கு உடன்பாடில்லை. “அவ அவரோட வளர்ப்பு குழந்தை ண்ணா” என தாக்ஷா கூறய பின் இவனுக்குக் கூற ஒன்றுமில்லாது போனது. “பெத்தப் பொண்ணுக்காக கோவிச்சிருந்தா கூட மன்னிச்சிருப்பேன். ஆனா… யாரோ பெத்த குழந்தைக்காக என்னை கன்சிடர் பண்ணாதவர… நீ தான் முக்கியம்ன்னு ஒரு பொய் கூடச் சொல்ல டிரை பண்ணாதவர, எப்பிடி நான் கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருப்பேன்?” எனத் தங்கை கைப்பேசியின் மூலம் கேட்டபோதும் இவனுக்குக் கூற ஒன்றுமில்லை. ஆனால், யாழியைப் பார்த்தபின்… தந்தை மகளாக வலம் வரும் அந்த அழகிய கவிதையைப் பார்த்தபின்… தாக்ஷாவின் முடிவில் தலையிட்டிருக்க வேண்டுமோ என இன்று தோன்றுகிறது.

“என்ன வேணும் குட்டி பிரின்சசுக்கு?” நெளிந்து கொண்டே, தன்னை பார்த்து ‘ஈ’ எனச் சிரிக்கும் குழந்தையின் அழகில் விழுந்தவனாக தர்ஷன் கேட்க, “ஒன் பலூன்” என்றாள் குழந்தை, அவன் பின்னால் இருந்த பலூனை காட்டி.

அவன் நீட்டிய பலூனை பார்த்த குழந்தையின் முகம் மலர்ந்தது. கண்கள் விரிய, மழலை, “ஃபோலுமே நானுக்கா?” என்ற சின்னவளின் முகபாவங்களைப் பார்க்க அத்தனை அழகாக இருக்க,

இதழ் விரிந்த புன்னகையோட, “ஃபோர் இல்ல… சிக்ஸ் இருக்கு. ஆமா… உங்க பேரு என்ன?” எனக் கேட்டான்.

பலூனை கட்டியிருந்த நூலைப் பிடித்த குழந்தை தன் மழலை மாறா குரலில், “ஆலி பேபி பேலு, ஆலினி கௌமனன்” என்றவள், “நீங்க பேலு என்ன?” என தர்ஷனை பார்த்துக் கேட்டாள்.

புருவங்கள் உயர ஆச்சரியம் காட்டிய முகத்தோடு,  சிரித்துக் கொண்டே, “தர்ஷன்” என்றான்.

“தல்… தல்ச்சன்” என அந்தப் பெயரை ஒரு முறை வாய்விட்டுக் கூற, தர்ஷனுக்கு இன்னுமே சிரிப்பு கூடியது.

குழந்தை அங்கிருந்து நகரப்போவதை உணர்ந்தவன், “ரொம்ப அழகா இருக்கே உங்க பேரு. யாழி பேபிக்கு பூ பிடிக்குமா?” எனப் பேச்சை வளர்த்தான்.

“லெட் ஃபிளவர் லொம்ப பிடிக்கும்” என்ற குழந்தையிடம், “நான் உங்களுக்கு பலூன் வச்சு ரெட் ஃபிளவர் செஞ்சு தரட்டுமா?” எனக் கையில் நீள பலூன் ஒன்றை எடுக்க, குட்டி மகள் “ஓ எஷ்” என்றாள் தலையை வேகமாக ஆட்டி.

அவன் செய்வதையே ஆர்வம் பொங்கும் விழிகளோடு அவள் பார்க்க, அந்தப் பார்வையில், அது காட்டிய பாவனையில் விழுந்தவன் எழுந்து கொள்ள விருப்பப்படவே இல்லை.

“அச்சோ அம்மா ஆலி பேபிக்கு லெட் டெஸ் போத்தாங்களா… அப்பா நேனுக்கு கலைல லெட் லோஸ் வாங்கி தந்தாங்க” எனத் தன் சிகப்பு நிற ஃபிராக்கை ஆட்டி காட்ட, “ரொம்ப அழகா இருக்கே உங்க டிரெஸ்” என தர்ஷன் பாராட்ட,

“டேங்ஷ்” என பெரிதாகச் சிரித்த குழந்தை, “பேபி லெட் லோஸ் நல்லாக்கா?” எனக் குடுமியைத் தொட, அந்தோ பரிதாபம், சிகப்பு ரோஜாவைக் காணவில்லை.

சட்டென சிறு வாட்டம்… அடுத்த நொடியே உதட்டைப் பிதுக்கி, “பூ காணம் போச்சு” எனக் கை விரித்துச் சிரித்த குழந்தையை அள்ளிக் கொள்ள தர்ஷனுக்கு ஆசை வந்தது.

“அந்த பூ காணாம போனா போகுது. இந்த இந்த ரெட் பூவ வச்சுக்கோ” எனச் செய்து முடித்த சிகப்பு பலூனை கொடுத்தவன், மேசை மீது அவனுக்கு கொடுக்கப்பட்ட பொக்கேவில் இருந்து சிகப்பு மலர் ஒன்றை அவள் குட்டி குடுமியில் வைத்து விட்டான்.

முகத்தில் ஆசையும் ஆச்சரியமும் பொங்கி வழிய, “நேனுக்கு பலூன் ஃபிளவலா… டேங்ஷ் அங்கிள்” என்றவளின் தலை வருடி, “எனிடைம்” என்றான்.

“அப்பா நானுக்கு அங்கிள் சிஸ் பலூன்… ஒன் லெட் ஃபிளவர் பலூன்… பிக் லெட் ஃபிளவர் தந்தாங்க” எனப் பாடிக் கொண்டே சிறகில்லாது பறக்கும் குழந்தை வாஞ்சையோடு பார்த்திருந்தான் தர்ஷன். குழந்தைகள் என்றால் ஆனந்தம் தானே.

தங்கையின் நிச்சயம் அன்று தான் இருந்திருக்க வேண்டும் என மனம் இன்று கூறியது. ஏன் அன்பை அரவணைக்கத் தெரியவில்லை தங்கைக்கு? ஏன் அழகிய கவிதையை ஆராதிக்கவில்லை தாக்ஷா? கோன் ஐசின் மீது இருக்கும் குளிர்ந்த பனிக்கூழின் குளுமையும் இனிமையும் வேண்டாம் என்றால், அந்த கோன் ஐசின் மீது ஏன் ஆசை வைப்பானேன்? ஏன்… எப்படி… எங்குத் தவறினாள் தாக்ஷா என தர்ஷனால் எண்ணாதிருக்க முடியவில்லை.

கௌதமனிடம் அவனே வந்து கை குலுக்கினான். “எனக்கும் உங்கள மாதிரி இது புதுத் தொழில். கத்துக்க நிறைய இருக்கில்ல…” எனப் புன்னகைத்தவன், அளந்து பேசினாலும் இன்முகமாகவே பேசினான்.

“அவ்வளவு புதுசில்ல. இது சம்பந்தமா தானே படிச்சிருக்கேன்… போதாததுக்கு சின்னதுல இருந்தே ஸ்டுடியோ பக்கம் நிறையச் சுத்தி இருக்கேன். பல டைரக்டர்ஸ் எனக்கு ஃப்ரெண்டுஸ். ஆமா, உங்களுக்கு எப்படி இதுல இன்ட்ரெஸ்ட்?” என இவன் பங்கிற்குப் பேசினாலும், மறந்தும் இரு ஆண்களும் உடைந்து போன உறவைப் பற்றிப் பேசவோ, கண்களில் காட்டவோ இல்லை.

“ஆல் த பெஸ்ட்” எனக் கைகுலுக்கியவன், தந்தையின் கரத்தில் தூங்கி வழிந்து கொண்டிருந்த குழந்தையின் கன்னம் தட்டி, “சிலருக்குச் சிலதோட அருமை புரியறது இல்ல.” என்றான்.

“வெரி ஸ்மார்ட் கிட்…. அண்ட் வெரி கியூட். நானா இருந்தாலும் இந்த டன் ஆஃப் ஹாப்பினஸ்ச யாருக்காகவும் விட்டுக் கொடுத்திருக்க மாட்டேன்” எனப் புன்னகைத்து விடைபெற்றான்.

சென்றவன் வாயிலைத் தாண்டும்முன் உள்ளே நுழைந்த யாருடனோ பேசிவிட்டுக் கிளம்ப, “நாங்களும் கிளம்பறோம் பா. பேபி டயர்ட் ஆகிட்டா. தூக்கம் கெட்டா அனத்த ஆர்ம்பிச்சுடுவா” எனக் கௌதமன் கிளம்பத் தயார் ஆன நேரம் உள்ளே நுழைந்தான் டைரக்டரால் சல்லடை போட்டு தேடிப் பிடிக்கப்பட்ட படத்தின் சினிமாட்டோகிராப்பர்.

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!