Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே

நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே – 4

பைக் சத்தம் கேட்டதுமே காமாட்சிக்கு தெரிந்துவிட்டது அவன்தான் என்று அத்தையை திரும்பிப் பார்த்தவள் “நான் உள்ளே  போறேன் அத்த” என்றுவிட்டு அவளின் அறைக்குள் நுழைந்து கதவை அடைத்துக்கொண்டாள்.

 

 



Advertisement

குளித்து உடை மாற்றி வந்திருந்தான் என்றாலும் நடையில் ஒரு சிறிய தள்ளாட்டம் கண்கள் சிவந்து கிடந்தது ஒன்றும் செய்யமுடியா இயலாமையோடு மகனை வேதனையோடு பார்த்தார் முத்துலட்சுமி.

 

Advertisement

 

Advertisement

“பசிக்குதும்மா” என்ற மகனைக் கட்டிக்கொண்டு கதறிவிட்டார் “ஏண்டா இப்படி செய்ற அவளைப் பாக்க பிடிக்கலைன்னா மனசு கொஞ்சம் மாறுற   வரைக்கும் எங்கேயாவது வெளியூர்க்கோ வெளிநாட்டுக்கோ போய்டு ரகு,  காலத்தால் ஆத்த முடியாத காயம் எதுவும் இல்ல கொஞ்சம் தள்ளி இருந்தா இந்தக் கோபம் கூட உனக்குக் குறையலாம்” என்றார் இறுதிவாய்ப்பாக.

 

Advertisement

 

“ஹா ஹா” என்று சத்தமாகச் சிரித்தவன் “என்ன புது நாடகமா என்னை அந்தப் பக்கம் அனுப்பிட்டு என் ஆச்சியை வேற எவனுக்காவுது கட்டி வெச்சிடலாம்னு உன் தம்பி சொன்னாரா” என்றான்.

 

 

அவனிடம் பேசிப் பயனில்லை என்று உணர்தவர் உணவை அவனுக்கு எடுத்து வைத்தார், அவனோ அவள் அறைக்கு  வெளியே நின்றுகொண்டு குரல் கொடுத்தான் “ஏய் ஆச்சி… ஆச்சிமா வெளில வா உள்ளேதான் இருக்கன்னு எனக்குத் தெரியும்,  சாரிடி நீ ஏன் அப்படி பேசின அந்தக் கோபத்துல தெரியாம அடிச்சுட்டேன் தப்புதான் மன்னிசுடு ஆச்சிமா” என்று கெஞ்சிக்கொண்டிருக்க உள்ளே தலையில் கை வைத்து அமர்ந்திருந்தாள் காமாட்சி.

 

 

‘ஆண்டவா இதிலிருந்து எனக்கு விடுதலையே இல்லையா,  கணவனும் மனைவியும் ஏன் என்னை இப்படி படுத்தி எடுக்கிறார்கள்’ என்று நொந்துகொண்டாள்.

 

 

திருமணம் முடிந்த பிறகு மீனா அவனுடைய  வீட்டில்  இருக்க அவள் இருப்பதாலேயே தன்னுடைய வீட்டிற்கு செல்வதை நிறுத்திக்கொண்டான் ரகு,  தினமும் இங்குவந்து காமாட்சியை பார்க்க வேண்டும் என்று நிற்பான் இவனுக்குப் பயந்தே வண்டியில் செல்வதை விட்டுவிட்டு தந்தையுடன் கல்லூரி சென்றுவந்துகொண்டிருந்தாள் காமாட்சி.

 

 

இவன் இம்சை இப்படி  என்றால் மீனா அதற்கும்மேலே  “அவருக்கும் எனக்கும் கல்யாணம் ஆயிடுச்சு உன்னை ஏன் அவர் பார்க்க வரார்” என்று தங்கையிடம் வம்புக்கு நின்றாள்.

 

 

“இங்க எதுக்கு வரார்ன்னு அவர்கிட்ட நீயே கேட்டுக்கோ இங்க யாரும் அவருக்காகக் காத்துக்கிடக்கல,  புருஷனும் பொண்டாட்டியும் என் உயிரை எடுக்காதீங்க” என்று இவளும் கத்தியிருந்தாள் என்றாலும் அவனும் தினமும் வந்து நின்றான் மீனாவும் தினமும் பஞ்சாயத்தை கூட்டினாள்.

 

 

வீட்டினருக்கு தான் எங்குச் சென்று முட்டிக்கொள்வது என்று தெரியவில்லை பொறுத்து பொறுத்து  பார்த்த முத்துலட்சுமி ஐந்தாம் மாதம் தொடங்கிய அடுத்த நாளே பேருக்கு இரண்டு வளவிகளை மீனாவின் கையில் மாட்டிவிட்டு அவளைப் பிரசவத்திற்கு மாசிலாமணியின் வீட்டில் கொண்டுவந்து விட்டுவிட்டார்.

 

 

“இவ இங்கேயிருந்தா அவன் இங்க வரமாட்டன் எனக்கு இப்போதைக்கு இதைத் தவிர வேற வழி தெரியல” என்றார் அவர், இதற்க்கு என்ன முடிவு என்று தெரியாமல் மண்டையை உடைத்துக்கொண்டனர் பெரியவர்கள்.

 

 

வேறு வழி தெரியாமல்தான் காமாட்சிக்கு திருமணம் செய்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தார் மாசிலாமணி.

 

 

“வந்து சாப்பிட்டு வீட்டுக்குப் போ ரகு” என்று முத்துலட்சுமி அதட்டலாகக் கூற அமைதியாகச் சென்று அமர்ந்தான் “ஆச்சி சமைச்சாளாமா” என்றவன்   “வறுவல் அப்படியே அள்ளுது” என்று ரசித்து உண்டான்.

 

 

“சாம்பாரும் வறுவலும் சூப்பர் ஆச்சி” என்று அவளிடமும் உரக்க கூறினான் எப்படியோ போராடி அவனை அனுப்பிவிட்டார் முத்துலட்சுமி அவருக்கு மூச்சு முட்டியது அவனிடம் போராடி.

 

 

“வேலு ஏய் வேலு” என்று அழைத்துக்கொண்டு வந்த தந்தையை பார்த்தவன் ஒன்றும் பேசாமல்  முகம் கழுகிக்கொண்டிருந்தான் “எவ்ளோநேரமா கூப்பிடுறேன் என்னனு கேக்க மாட்டியா” என்றார் ராமலிங்கம்.

 

 

“என்ன வேணும்” என்றான் ஆர்வமற்ற குரலில்.

 

 

“இப்படியே போனா எப்படி உன் கல்யாணத்தை பாக்கணும்னு எங்களுக்கும் ஆசை இருக்காதா” என்றார் தந்தை.

 

 

அவரை நக்கலாகப் பார்த்தவன் “ஏதே?? என் கல்யாணமா!! உங்க மக ஆசைப்படுற கல்யாணத்தை நடத்த என்னைப் பலியாடு ஆக்குறீங்கன்னு சொல்லுங்க” என்க அமைதியாகிவிட்டார்.

 

 

 

“இங்க பாருப்பா இன்னொரு வீட்டில இருந்து எடுத்துட்டுவந்து இந்த வீட்டை நிறைக்கணும்னு நினைக்காதீங்க அது நடக்காது நான் நிறைய தடவ சொல்லிட்டேன்”  என்றவன் விழிகள் கொஞ்சம் தொலைவில் தெரிந்த  அந்த வீட்டின் மீது படிந்தது.

 

 

வண்ணம் அடிக்கப்படாத வீடு  கிட்டத்தட்ட முடிந்து விட்டது இன்னும் சில பல வேலைகளை முடித்து வர்ணம் தீட்டிவிட்டால் அவனுடைய கனவு வீட்டில் பால் காய்ச்சலாம் ஆனால் இப்பொழுது முடியாது கோர்ட்டில் கேஸ் நடக்கிறது,  இரண்டுவருடமாகப் பூட்டியே கிடக்கும் வீட்டைப் பார்த்திருந்தான்.

 

 

மனம் வலித்தது எத்தனை கனவோடு கட்டி எழுப்பிய வீடு எத்தனை இரவுகள் உறங்காமல் சவாரிக்கு சென்று சம்பாதித்த காசு, எத்தனை வருட உழைப்பு பெருமூச்சொன்று எழுந்தது அவனிடம் சூடான டீயை அவன் முன் நீட்டினார் மயிலம்மா… அவன் தாய்.

 

 

அதை வாங்கி அவன் பருக “அவங்கதான் சமாதானமா போகலாம்னு சொல்லிட்டாங்களே இப்படி கஷ்டப்படணுமா பேசி முடிச்சிடலாம் தம்பி உனக்கும் ஒரு வாழ்க்கை வேணும் உன் தங்கச்சிக்கும் வயசு போகுது” என்றார்.

 

 

அவரைத் தீர்க்கமாகப் பார்த்தவன் ஒன்றும் பேசாமல் எழுந்து சென்றான் “எல்லாம் உங்களாலதான் பொழைக்க தெரியாத மனுஷனை கட்டிக்கிட்டு நானும் என் பிள்ளைகளும் கஷ்டப்படுறோம்,  பெரிய ராஜ பரம்பரை  வெச்சுக்கோன்னு அண்ணனுக்கு எழுதிக்குடுத்துட்டார் அவன் நல்லா இருப்பானா” என்று வசை பாட தொடங்கினர் மயிலு.

 

 

“ஆமாடி நான் தான் தப்பு பண்ணிட்டேன் நீ ரொம்ப புத்திசாலிதான நம்ம பையன்தான் சொல்றானே உன் அண்ணன் மகனுக்கு நம்ம பிள்ளையைக் கொடுக்க வேண்டாம் நம்ம வசதிக்கு ஏத்த மாதிரி மாப்பிளை இருக்கு பாக்கலாம்னு நீ கேக்குறியா உனக்கும் உன் மவளுக்கும் குடும்பத்தோட கஷ்டம் தெரியுதா அவனைப் புடிங்கி திங்குறீங்க அம்மாவும் பொண்ணும்” என்று அவரும் கத்த குளித்து வந்தவன் அவர்களைக் கண்டுகொள்ளாமல் அந்தப் புதிய வீட்டின் வராண்டாவில் சென்று படுத்துக்கொண்டான்.

 

 

இன்னும் சுற்றுமதில் கட்டப்படவில்லை வேலை பாதியிலே நின்று போனதற்கு அடையாளமாகப் பாதி கட்டிய சுவரும் ஜல்லி சிமெண்ட் கம்பி மணல் என்று அங்கங்கே கிடந்தது அடக்கமான அழகான வீடு”.

 

 

கொஞ்சம் பெரிய  வரவேற்பறை இரண்டு படுக்கையறை சமையல் அறை சாமிக்குத் தனியாக அறை முன்னில் வண்டி நிறுத்த இடம், அதோடு  சேலத்திலிருந்து வாங்கி வந்து ஆசையாக நட்டு வைத்திருந்த மாமரம் வளர்ந்து நிழல் பரப்பி நின்றது  பின்னில் ஒரு சிறிய தோட்டம் வைக்கும் அளவுக்கு இடமும் இருந்தது.

 

 

செங்கல்பட்டு மாவட்டத்தின் வீராபுரம் கிராமம் ராமலிங்கத்தின் பூர்விகம்,  விவசாயம் செய்துதான் வாழ்ந்துவந்தனர் அவரின் அப்பாவின் காலம்வரை அதன் பிறகு வந்த தலைமுறை நிலங்களை மெல்ல மெல்ல ரியல் எஸ்டேக்கு விற்க தொடங்கினர் ராமலிங்கமும் லாரி டிரைவராகத் தன் வாழ்க்கையை ஓட்டினார்.

 

 

அவரின் மனைவி மயிலு இரண்டு பிள்ளைகள் மூத்தவன் மருதவேலு சொந்தமாகக் கார் மற்றும் வேன் ஒன்றும் லோனில் வாங்கிய ஷேர் ஆட்டோ ஒன்றும் உள்ளது ராமலிங்கம் ஷேர் ஆட்டோ ஓட்டத் தூர சவாரிகளை வேலு எடுத்துக்கொள்வான் கடினமான உழைப்பாளி டூரிஸ்ட் பஸ் ஓட்டச் செல்வான் ட்ராவெல்ஸில் ட்ரைவர் தேவைப்பட்டால்  அங்கும் செல்வான்.

 

 

ராமலிங்கத்தின் உடன் பிறந்தவர்கள் மூன்றுபேர் இவர்தான் இளையவர் மூத்தவர் சங்கரன் அவருக்குப் பிறகு இரண்டு பெண்கள் இறுதியாக ராமலிங்கம்,  மயிலுக்கும் ராமலிங்கத்திற்கும் திருமணம் நடக்கும்போது மூத்தவர்கள் மூவருக்கும் திருமணம் முடிந்து பிள்ளைகளும் பதின் வயதில் இருந்தனர்.

 

 

மருதவேலுக்கு எட்டு வயதானபோது அவனுடைய பெரியப்பா சங்கரன் செய்துவந்த தொழில் நஷ்டமடைந்து அவர் பெரிதும் கஷ்டப்பட ராமலிங்கத்தின் பெற்றோர் மகனின் துயரை துடைக்கச் சொத்துக்களை மகனுக்கு எழுதிக்கொடுக்க முடிவு செய்தனர்.

 

 

பெண்பிள்ளைகள் இருவரும் ஒன்றும் சொல்லாமல் கையெழுத்திட்டனர் அவர்களுக்குச் சொத்தில் பங்கில்லை என்பதை முன்பே பெற்றோர் கூறியிருந்தனர் நகை நட்டு போட்டுச் சீர் செஞ்சு அனுப்புறோம் அப்புறம் காலத்துக்கும் அவனுங்கதானே செய்யணும் அதனால சொத்து பசங்களுக்குத்தான் என்று கூறியிருக்க அவர்களுக்கும் எதிர்ப்பில்லை.

 

 

மயிலம்மா மாத்திரம் கணவனிடம் “எல்லாத்துலயும் கையெழுத்து  போட்டுக் கொடுக்காதீங்க நாளைக்கே இதும் நஷ்டமானா நம்ம பிள்ளையும் தெருவுல நிக்குற மாதிரி ஆயிடும்” என்று கூறியிருக்க ராமலிங்கமும் அந்தக் காரணத்தைச் சொல்லியே ஒரு இடத்தை மட்டும் விட்டுவிட்டு மற்றதை அண்ணன் பெயருக்கு மாற்றக் கையெழுத்திட்டார்.

 

 

நிலங்களை விற்று கடனை அடைத்துப் புதிய தொழிலும் தொடங்கினார் சங்கரன்,  அவர் பிள்ளைகள் சிறிய சிறிய வேளையில் சேர்ந்திருந்தனர் சகோதரிகள் இருவரும் அண்ணன் மகன்களுக்கே தங்களுடைய பெண் மக்களைக் கல்யாணம் செய்துகொடுத்தனர்.

 

 

அடுத்த நான்கே வருடத்தில் சங்கரன் பெரிதாக உயரத்தொடங்கினார் வசதி வாய்ப்பும் பெருகியது அவரின் பெற்றோர் அவரிடம் “சங்கரா இப்போ நீ நல்ல நிலைமைக்கு வந்துட்டியே உனக்கும் சின்னவனுக்கும் பொதுவான சொத்தைத்தானே வித்துகுடுத்தோம் அதனால சின்னவனுக்கு சேர வேண்டிய பங்கை அவனுக்குக் குடுத்துடேன்” என்றனர் ஒன்றும் சொல்லாமல் சென்றுவிட்டார் அவர்.

 

 

பிறகு தன்னுடைய சகோதிரிகளை அழைத்துப் பேசினார் “இங்க பாருங்க இப்போ நான் நல்ல நிலைமைல இருக்கேன் என் தொழிலையே என் பசங்களும் பாத்துக்குறாங்க இதல்லாம் யாருக்காக நம்ம பசங்களுக்காக நானும் என் பிள்ளைகளும் நல்லா சம்பாரிச்சா சொத்து சேர்த்தா உங்க பொண்ணுங்க இங்க ராணி மாதிரி வாழ்வாங்க, அப்பா அம்மா சொல்ற மாதிரி செஞ்சா இதுல பாதிய ராமலிங்கத்துக்கு குடுக்கணும் அது வேணுமா” என்க.

 

 

கொஞ்சமும் யோசிக்கவில்லை தங்கைகள் “வேண்டாம்ணா” என்க.

 

 

“ஹ்ம்ம் அப்போ நல்லா கேட்டுக்கோங்க அவனோ அப்பா அம்மாவோ கேட்டா நான் குடுக்க மாட்டேன்னு சொல்லுவேன் நீங்க என்கூட நிக்கணும்” என்றார் மகள்களின் வாழ்க்கைக்கு முன் மனசாட்சியாவது மண்ணாவது அவர்களும் அவருடன் நின்றனர்.

 

 

ஒன்றுமே கொடுக்காமல் தங்களை ஏமாற்றுகிறார்கள் என்பது புரிவதற்க்கே காலம் கடந்துவிட்டது ராமலிங்கத்துக்கு ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் அவர்களை மண்ணள்ளி தூற்றி சாபமிட்டார் மயிலம்மா அந்த வஞ்சத்தை மனதில் வைத்திருந்தார் சங்கரன்,  ஏற்கனவே முழுவதுமாகச் சொத்தைக் கொடுக்காமல் ஒரு இடத்தை மட்டும் தாய் தந்தை பெயரிலே வைத்து விட்ட வஞ்சம் வேறு இருந்தது இவர்கள்மீது.

 

 

மருதவேலும் “வேண்டாம் விடுங்கள் அந்தச் சொத்தை வைத்துக்கொண்டு அவர்களே நன்றாக வாழட்டும் விட்டுவிடுங்கள்” என்று கூறிவிட்டான்,   பெரியமகனும் பெண்பிள்ளைகளும் இப்படியொரு துரோகத்தைச் செய்வார்கள் என்று எண்ணிப்பார்க்காத ராமலிங்கத்தின் பெற்றோர்  தங்கள் பெயரில் இருந்த இடத்தில் வீடு கட்டிக்கொள்ள சின்ன மகனிடம் கூறினர்.

 

 

தன்னுடைய பல வருட உழைப்பை கொட்டி ஆசையாக வீட்டைக் கட்டினான் மருதவேல் கட்டிமுடிக்கும் தருவாய் வரை காத்திருந்து தாய் தந்தை பெயரில் இருக்கும் சொத்து அனைவருக்கும் பொதுவானது   அதில் தங்களுக்கு தெரியாமலே வீட்டைக் கட்டிக்கொண்டனர் என்று சங்கரன் வழக்கு பதிய தங்கைகள் அவருடன் நின்றனர்.

 

 

 

தன்னிடம் இருக்கும் சொத்துக்கள் அனைத்தும் தன்னுடைய சுயசம்பாத்தியம் அனைத்தும் தன் பெயரில் தான் இருக்கிறது என்றும் ஆதாரங்களைக் காட்டினார்,  ராமலிங்கம் குடும்பம் தனியாகப் போராடிக்கொண்டிருந்தனர்   இப்படியே சென்றால் சரியாக வராது என்று முடிவு செய்த மருதவேல் பெரும் பணம் செலவு செய்து பழைய ஆதாரங்களை மீட்டிருந்தான்.

 

 

இதைச் சங்கரன் எதிர்பார்க்கவில்லை இந்த ஆதாரங்கள் வெளியில் வந்தால் அவருடைய சொத்துக்களை பிரிக்கவேண்டி வரும் அதோடு அவருடைய பெற்றோரும் மருதவேலுக்கு ஆதரவாக நின்றனர்,  இப்பொழுது சமாதானமாகப் போய்விடலாம் அந்த இடத்தையும் வீட்டையும் நீயே வைத்துக்கொள்ள என்கிறார் சங்கரன்.

 

 

முடியாது கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துக் கையை விட்டுப் போனால் எப்படி இருக்கும் என்று உங்களுக்கும் தெரிய வேண்டும் அந்தச் சொத்துக்களை தானமாகக் கூடக் கொடுப்பேன் ஆனால் இனிமேலும் அது உங்களுக்குப் பயன் படவிடமாட்டேன்  என்று இவனும் பிடிவாதமாக நிற்க வாய்தா வாய்தா என்று வழக்கு நீள்கிறது.

 

 

மயிலம்மாவின் தற்போதைய பிரச்சனை மகனுக்கு இருபத்தெட்டு நடக்கிறது மகளுக்கு இருபத்திநாலு இந்த வருடம் மகள் திருமணத்தை நடத்த வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார் மருதவேல் கிட்டத்தட்ட பத்து  லச்சம்  கடன் வாங்கியிருந்தான் வீட்டின் இறுதிக்கட்ட வேலைக்கும் இந்தக் கேஸ் நடத்துவது சம்பந்தமாகவும் அதுவானால் முடியாமல் இழுத்துக்கொண்டே செல்கிறது இவன் என்னவென்றால் விடமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறான்.

 

 

மகனுக்குக் கல்யாணம் செய்து அதன் மூலம் வரும் வரதட்ச்சனையில் மகள் கல்யாணத்தை நடத்த திட்டமிடுகிறார் மயில்லம்மா தங்கைக்கென்று பதினைந்து பவன் சேர்த்து வைத்திருக்கிறான் அதோடு அணைத்து சீரும் செய்து  சிறப்பாக நடத்துகிறேன் மாப்பிளை பார்க்கிறேன் என்கிறான் அம்மாவும் மகளும் வேண்டாம் என்கிறார்கள்.

 

 

கொஞ்சம் வசதியோடு இருக்கும் அண்ணன் வீட்டிற்கு மகளை அனுப்ப விரும்புகிறார் மயில்லம்மா,  அவர்களோ முப்பது பவன் நகை பண்டம்  பாத்திரம் ரொக்கம் ஆறு லச்சம் என்று கேட்கிறார்கள் இப்படி சிக்கலில் கிடக்கும் வீட்டிற்கு இடியாப்ப சிக்கலில் கிடக்கும் காமாட்சியின் ஜாதகம் வந்து சேர்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!