Skip to content
Post Views: 11,665
நீங்காத உறவே!…
அத்தியாயம் 15
முதல் அணைப்பு.. அதுவும் மனைவியிடம் இருந்து.. மெல்ல உணர தொடங்கினான் பிரபா. அவர்கள் வாழ்வின் அடுத்த கட்டம், பிடிக்காமல் எல்லாம் இல்லை. மிக பிடித்து இருந்தது. தன்னை அணைத்து பிடித்து இருந்த கைகளை மெல்ல வருடி விட்டான்.
பிரபாவுக்கு அழுத்தம் எல்லாம் வர வில்லை. மெல்ல தான் அணைத்தான். நானும் அப்படியே என்று உணர்த்தினான். ஆனால், அடுத்த கட்டம் தான் நகர வில்லை.
Advertisement
முதலில் நகர்ந்தது நிறை தான். அழுத விழிகளோடு அவனை பார்த்து லேசாக சிரிக்க, மனைவி முகத்தை துடைத்து விட்டான்.
“எதுக்கு இவ்வளவு அழுகை?” என்றவனின் கைகளை பற்றி கொண்டவள்,
“ எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சு இருக்கு. அது தான் அழுகை வருது போல.. நானும் சில விசயங்களை தெளிவு படுத்தனும்” என்றதும்,
Advertisement
மனைவி என்ன சொல்ல போகிறாள் என்று புரிந்தவன்,
Advertisement
“நீ எதுவும் சொல்ல வேணாம். நமக்குள்ள எல்லாம் சரியா தான் இருக்கு. மனசு விட்டு பேசுனா போதும்” என்றான் கணவன்,
“எனக்கு ரொம்ப அழுத்தம். நான் சொல்லியே ஆகணும். பொதுவா நான் யார்கிட்டையும் மனசு விட்டு பேச மாட்டேன். எவ்வளவு சொந்தமா இருந்தாலும், என் உணர்வுகளை என் இடத்துல இருந்து புரிஞ்சுக்க கூடிய ஆள் யாரும் எனக்கில்லை. உங்களை மட்டும் என்னவோ என் மனசு நம்புது” என்றவள்,
“எங்க கடையில எல்லாம் சில்லரை இல்லாம ஒரு ரூபாய் கூட யாரும் விட மாட்டாங்க. ஏன்னா, நாம யாரும் ஒரு ரூபாய் மதிப்பை கூட வீணாக்க விரும்ப மாட்டோம். ஏமாளியா இருக்க நினைக்க மாட்டோம். ஆனா, கஷ்ட படுற குடும்பத்துல வீட்டுக்கு மூத்த மகளா பொறந்து, தெரிஞ்சே சொந்த குடும்பத்து கிட்ட ஏமாளியா நின்னேன். எல்லோரா மாதிரி சாதாரண குடும்ப வாழ்க்கை எனக்கு அமையல”
Advertisement
“விட்டு தள்ளு நிறை” என்றாலும்,
“சரியா விவரம் தெரியாத வயசுல குடும்பத்தோட பாரம், என் வயசுக்கு மீறிய பொறுப்பு, நாலு பேருக்கு கிட்ட கைகட்டி கடனுக்கு பதில் சொல்ற நிலைமை. என்னால முடியாதுன்னாலும் நான் தான் அதை சுமக்கணும். நிறைய கடன் பிரச்சனையும், பணக்கஷ்டத்தையும் மட்டும் தான் பார்த்தேன். சொந்தமா இருந்தாலும் ஏதோ உதவுவாங்க தான். ஆனா, யாரும் ஒரு குடும்பத்தை தாங்க மாட்டாங்க. பணம் தான் வாழ்க்கைன்னு இந்த உலகம் எனக்கு புரிய வச்சுட்டு. ஒரு மாசத்தைக் கூட என்னால நிறைவா நடத்த முடியாது. படிக்கிற வயசுல பிள்ளை வேலைக்கு போகுதுன்னு கவலை எங்க அப்பாவுக்கு கிடையாது. எங்க அம்மாவுக்கு கவலை இருந்தாலும் வேற வழி இல்லாம அவங்களை அவங்களே தேத்திக்கிட்டாங்க. எல்லாத்தையும் பாக்குற இடத்துல இருந்ததால, என்னை யாரும் பெருசா பாக்கல. நான் மனசு விட்டு பேசுறதுக்கோ, என்னை தாங்கறதுக்கோ, உனக்கு என்ன வேணும்னு கேக்குறதுக்கு கூட எனக்கு ஆள் கிடையாது. ஏன்னா, நான் பொறுப்பா இருக்கேன். பொறுப்பா இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்” என்று கணவனின் கையை பிடித்து கொண்டவள்,
“அப்ப எல்லாம் என் எதிர்காலத்தை பத்தி நான் நிறைய நினைச்சுப்பேன். என்னோட கஷ்டத்துக்கு கடவுள் நியாயம் செய்யணும்னு நினைச்சேன். இந்த பணப் பிரச்சனை, கடன், கஷ்டம் எல்லாம் என் கல்யாணத்துக்கு அப்புறம் மாறணும்னு ஆசை பட்டேன். வாழ்க்கையில எவ்வளவு அடிபட்டாலும் எதிர்காலத்தை பத்தின கற்பனை நல்லதா தான் நினைப்போம். நானும் அப்படித்தான். என்னுடைய எல்லா கஷ்டத்துக்கும், வலிக்கும் தீர்வா என் கல்யாண வாழ்க்கையை நினைத்தேன்”
பிரபாவின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது. அவன் அறிவானே நிறை எந்த மாதிரியான திருமண வாழ்க்கையை எதிர்பார்த்தாள் என்று…
“என்னோட ஒட்டுமொத்த கஷ்டத்துக்கும் ஒரு பெரிய தீர்வா என் கல்யாண வாழ்க்கையை நான் எதிர்பார்த்தேன். அப்ப கூட நான் ராகவன் மாமாவை நினைக்கல” நிறை குரல் உள்ளே போனது.
அவளுக்கு தெரியும் எப்படி இருந்தாலும் ராகவனை இழுக்காமல் அவள் ஒரு விளக்கம் கொடுக்க முடியாது. கணவனின் முகம் இறுகுவதை உணர்ந்தாலும் தன் பக்க கருத்தை எடுத்துரைக்கவே விரும்பினாள். பேச விருப்பப்படாத விஷயம் தான். ஒரு தடவை பேசி விட்டால் இருவரும் தெளிவாகலாம் அல்லவா!…
“மாமாவும், அத்தையும் தான் உறுதி கொடுத்தாங்க… ராகவன் மாமா நெருங்கி வந்து பேசும்பொழுது என் கஷ்டத்துக்கெல்லாம் கடவுள் வழி காட்டியதாக தான் நான் நினைச்சேன். குடும்ப பாரம் இல்லாத நிம்மதியான எதிர்காலம், வசதியான வாழ்க்கை, கடன் பிரச்சனை கிடையாது, நல்லா படிச்ச மாப்பிள்ளை எல்லா நான் யோசித்தேன் தான். மனசார நான் ஆசைப்பட்டேன். உண்மையா எனக்கு அப்ப பெரிய ஏமாற்றம்தான். ரொம்ப வலிச்சது, என்னால தாங்கிக்கவே முடியல. திரும்பவும் அதே கடன், கஷ்டம், பண பிரச்சனை, குடும்ப பாரம் எல்லாம் சேர்ந்து அழுத்த ஆரம்பிச்சாச்சு”
“அவங்க அவங்க குடும்ப சூழ்நிலை, நிதர்சனம் தான் வாழ்க்கையை தீர்மானிக்குது. எனக்கும் அப்படித்தான் ஆறு மாசம் மனசு ஆற மட்டும் அழுதேன். அப்புறம் நடைமுறை பிரச்சனை என்னை எடுத்துகிச்சு. வாழ்க்கையில் பெரிய ஏமாற்றம். இனி, தனியாத்தான் இருப்பேன் எல்லாம் சொல்ல முடியாது. சாதாரண கஷ்டப்படுற குடும்பம், எனக்கு அப்புறம் ஒரு தங்கச்சி… வந்த வரனுக்கு கழுத்த நீட்டு வேண்டியதுதான். என்கிட்ட எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்த வரன் நீங்க மட்டும் தான் சொந்தமும் கூட… நகை போட்டு சீர் செஞ்சு ரெண்டு பொண்ணுங்களை கல்யாணம் பண்ணி கொடுக்கிற அளவுக்கு எங்க வீட்ல வசதி கிடையாது. உங்க வீட்ல எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. எப்பவும் போல குடும்பத்தை முன்னிறுத்தி உங்களுக்கு கழுத்த நீட்டிடேன்” பிரபா மனைவியை தட்டி கொடுத்தான்.
“உங்க இடத்துல யார் இருந்தாலும், அவர் எப்படிப்பட்டவரா இருந்தாலும் சமாளித்து வாழ்ந்து இருப்பேன். அதுதான் என் குடும்ப சூழ்நிலை. ஆனா, நான் எதிர்பார்க்கவே இல்லை நீங்க இவ்ளோ நல்லவரா இருப்பீங்கன்னு”
“நிறை…”
“எப்படி இருந்தாலும் நான் வாழ்ந்து இருப்பேன். அது வேற.. ஆனா, உங்களோட எனக்கு பிடிச்சிருக்கு. உங்களோட நான் எதார்த்த கணவன், மனைவியா வாழ ஆசைப்படுறேன். இப்பவும் நான் என் எதிர்காலத்தை ரொம்ப நம்பிக்கையா எதிர்பார்க்கிறேன். ஆனா, அதுக்கான காரணம் நீங்க மட்டும் தான். உங்க மேல எனக்குள்ள நம்பிக்கை”
பிரபாவின் இதழ்களில் மெல்ல புன்னகை மலர்ந்தது.
“பணம் இருந்தால்தான் உங்களோட வாழ்வேன்னு நான் சொல்லவே இல்ல. பணக்கஷ்டத்தை மட்டுமே பார்த்து வளர்ந்ததால ஒரு வசதியான வாழ்க்கையை நான் எதிர்பார்த்தேன் தான். அது வந்து முன்னாடி… அப்ப நான் என் வாழ்க்கையில என்ன கஷ்டப்பட்டனோ அதை மட்டுமே வச்சு நான் யோசிச்சேன். எனக்கு கணவன் மனைவிக்கான வாழ்க்கையோட அர்த்தம் தெரியலை. ஒரு புருஷன் பொண்டாட்டியா வாழ்கிற வாழ்க்கை எப்படி இருக்கும்னு நான் யோசிக்காம விட்டுட்டேன். இன்னைக்கு நான் சொல்றேன். எனக்கு பணம் பெரிய விஷயமே கிடையாது. எனக்கு எப்படிப்பட்ட வாழ்க்கையும் வேணாம். உங்களோடு வாழ்கிற ஒரு சாதாரண வாழ்க்கையே போதும்” மிக உறுதியாக சொன்னாள் நிறை.
“அது அப்படி இல்லை நிறை. இப்போ தோணாது, பின்னாடி நம்ம குடும்பம் பெரிசாகும் போது தோணும். நமக்கும் குழந்தைகள் வரும்போது வசதி வாய்ப்பை மனசு தேடும். ஓரளவுக்காது நம்ம குடும்பத்தை நான் நிலை நிறுத்த விரும்புகிறேன்” என்று கணவன், அவன் நினைப்பை சொல்ல,
“தேவையில்லை” என்றாள் மனைவி.
“மனுசங்க மனச திருப்தி படுத்த முடியாது. ஒன்னை தொட்டு ஒன்னைத் தொட்டு தேடுதல் நீண்டுகிட்டே தான் போகும். எனக்கு நான் இப்போ வாழ்கிற நிம்மதியான வாழ்க்கையை கடைசி வரைக்கும் கிடைச்சா போதும்” என்றவள்,
“எங்க அப்பா சரி இல்லை. அதனால எங்க அம்மா இருந்து நாங்க எல்லாம் கஷ்டப்பட்டோம். ஆனா, நீங்க அப்படி கிடையாது. உங்களால உங்க குடும்பத்தை கஷ்டப்படுத்த முடியாது. உங்களோட என் வாழ்க்கை எனக்கு கஷ்டமே கிடையாது பிரபா… நீங்க இதுவரைக்கும் எந்த இடத்திலும் என்னை தலை குனிய விடல. நீங்க ஒரு சிறந்த கணவர். எல்லாருக்கும் பணக்கார வாழ்க்கை கிடைக்கிறது இல்லை. அந்த வாழ்க்கையை நோக்கி ஓடிட்டு இருந்தா வயசு போகுமே தவிர, நம்மளால வாழ முடியாது. என்ன பொறுத்த வரைக்கும் என் புருஷன் நல்ல புருஷன் தான். எனக்கு எந்த குறையும் கிடையாது. என்னுடைய பதினேழு வயசுல அடுத்தவங்களுக்கு கைகட்டி கடனுக்கு பதில் சொல்லி இருக்கேன். வறுமையை பார்த்து இருக்கேன்”
“எங்க அப்பா மாதிரி நீங்க கிடையாது. நம்மளோட வருமானம் கம்மியா இருந்தாலும், யாரை எதிர்பார்த்து நம்ம வாழ்க்கை இல்லை. இதுவரைக்கும் கடன்னு ஒருத்தர் நம்ம வீட்டுக்கு வந்தது கிடையாது. ஆடம்பர வாழ்க்கை இல்லாட்டியும் வறுமையான வாழ்க்கை கிடையாது. எனக்கு என்ன தேவையோ அதைப் பார்க்க என் புருசன் இருக்கார். பணக்கார வாழ்க்கை இல்லாட்டி என்ன? நிச்சயமா ஒரு நாள் முன்னேறுவோம் அப்படின்ற நம்பிக்கை இருக்கு. நீங்க ஊதாரி கிடையாது. குடிகாரர் இல்லை. அனாவசிய ஆடம்பர செலவுகளை விரும்புபவரும் கிடையாது. நிச்சயமா நாம முன்னேறுவோம் பிரபா. ஆனா, என்ன ஒரே நாள்ல இல்லாம படிப்படியா முன்னேறுவோம். நான் என்னுடைய எதிர்காலத்தை ரொம்ப வளமானதா நினைச்சு கனவு காண்றேன். அதுக்கான முழு காரணம் நீங்க மட்டும் தான்”
“ஆனா” என்று அவனை பார்த்து முறைத்தவள், “பணமும், வசதியும் இருந்தால்தான் என் புருஷன் கூட நான் குடும்பம் நடத்துவேன்னு நான் சொன்னதே இல்லை. உங்க கருத்துக்கு என்ன காரணம் சொல்லாதீங்க. முழுமையான ஒன்னு இந்த உலகத்திலே கிடையாது. குறை, நிறை, கஷ்ட நஷ்டத்தோடு தான் இந்த வாழ்க்கையே… எதிர்கால வாழ்க்கை என்னவோ, உங்களோட ஒரு நல்ல வாழ்க்கையை வாழத்தான் நான் ஆசைப்படுறேன். இனி முடிவு நீங்க தான் எடுக்கணும்” என்றவள், அவனை யோசிக்க விட்டு அமைதியாக படுத்துக்கொண்டாள்.
மனைவியிடமிருந்து இப்படி ஒரு தெளிவான வார்த்தையை பிரபா எதிர்பார்க்கவே இல்லை. அவளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து அவளுக்கு கணவனாக வாழ நினைத்தான். ஆனால், நிறை உன்னோடு வாழ்வது தான் என் எதிர்பார்ப்பு என்று சொல்லிவிட்டாள்.
உண்மைதான், கஷ்டம், பணம், குறை எல்லாம் வரும் போகும். சந்தோஷமும் நிரந்தரம் கிடையாது. கஷ்டமும் நிரந்தரம் கிடையாது. அதனால் எதையும் பிடித்து வைக்க முடியாது. அதேபோல, வாழ்க்கையையும், தங்களின் வயசையும்… இவை இரண்டுமே கடந்து போனபின் திரும்ப கிடைக்காது. வாழ்க்கையும், வயசும் போனபின் ஒரு நாளும் திரும்ப வருவது கிடையாது. அதனால் பிரபாவும், மனைவியோடு தன் வாழ்க்கையை வாழவே நினைத்தான். முன்னேற்றம் தானே முன்னேறி கொள்ளலாம். கஷ்டம் தானே சமாளித்துக் கொள்ளலாம். வாழ்க்கை தானே நல்ல முறையில் வாழ்ந்து பார்க்கலாம்.
ஒரு தெளிவு கிடைத்த பின் எழுந்து மனைவிய அருகில் வந்து பார்த்தான். உறங்குவது போலத்தான் தெரிந்தது. அவளை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. எப்போதும் படுப்பது போல் இடம் விட்டு படுக்காமல் அவளை நெருங்கி, அவள் பின்னங்கழுத்தில் முகம் புதைத்து படுத்தான். கையை அவளை சுற்றி அணைவாக போட்டு இருந்தான். அழுத்தி அல்ல. அதை நிறை உணர்ந்தாலும், அமைதியாக உள்வாங்கி உறங்கத் தொடங்கினாள்.
அடுத்து ஒரு நான்கு நாட்கள் கடந்து இருக்கும். அன்று அவள் வேலை பார்க்கும் கடையில் விடும்போதே, “நிறை ஒரு நாலு நாள் லீவு போடு” என்றான் கணவன்.
“என்னவாம்”
“நாம வெளிய போறோம் ஹனிமூன்… ஏற்காடு” என்றதும் அதிர்ந்து போய் திரும்பி பார்த்தவள்,
“என்ன சொல்றீங்க?” மனம் படபடப்பாக இருந்தது.
“நிஜம் தான். ரூம் புக் பண்ணி, டிக்கெட் போட்டாச்சு. இன்னைக்கு ஈவினிங் அஞ்சு மணிக்கு கிளம்புறோம் ரெடியா இரு” என்றான் சிரித்த முகமாக,
நிறைக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் “என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையே” என்று முகத்தை தூக்கினாள்.
“என்ன பண்றது என் பொண்டாட்டி ஒரு கஞ்சம். இப்போதான் வண்டி வேற வாங்கி இருக்கோம். ஹனிமூன் எல்லாம் மேடம் தனியா பட்ஜெட் ஒதுக்க மாட்டீங்க. அதான் சர்ப்ரைஸ்” என்றதும், கணவனை முறைத்தவள்,
“எனக்கு லீவு தரலனா?”
“அது உன் பாடு எனக்கு தெரியாது. நான் சாயங்காலம் அஞ்சு மணிக்கு வீட்டுக்கு வந்து விடுவேன்” என்று பறந்து விட்டான்.
அதற்குப் பின் நிறை பரபரப்பானாள். ஏற்கனவே நிறைய லீவு இருக்க அதையும் சமாளித்து முதலாளியிடம் நான்கு நாட்கள் லீவ் வாங்கினாள். அன்று மதியமே நிறை வீட்டுக்கு கிளம்பி விட்டாள்.
என்ன இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டாள் என்று ரோகினி பார்க்க, யாரையும் கவனிக்கும் நிலையில் இல்லை நிறை. அவசர அவசரமாக இருக்கும் துணிகளை எல்லாம் துவைத்து, வீட்டை ஒழுங்கு படுத்தினாள்.
“நம்ம பொண்டாட்டி கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு ஏற்பாடு பண்ணுவோம் என்று இல்லை. நான் என்ன வேணான்னா சொல்ல போறேன். அவர் பாட்டுக்கு சர்ப்ரைஸ் சொல்லிட்டு போயிட்டாரு.. வீட்டை போட்டபடி வர முடியுமா? இந்த வேலை எல்லாம் செஞ்சு முடிக்காம, எனக்கு வெளியே கிளம்பவே மனசு வராது” புலம்பிக்கொண்டே அவசர அவசரமாக வேலை பார்த்தாள்.
வீட்டின் கூடத்தில் தான் அயன் பாக்ஸ், பெரிய நிலை கண்ணாடி எல்லாம் இருக்கும். அவசரமாக அந்த நிலை கண்ணாடியில் ஒவ்வொரு சுடிதாராக தன் மேனியில் வைத்து பார்த்துக் கொண்டாள். எது தனக்குப் பொருத்தமாக இருக்கோ எல்லாவற்றையும் தனியாக எடுத்து அயன் பண்ண துவங்கினாள். அதேபோல கணவனின் உடைகளையும் எடுத்து வைத்தாள்.
“எங்கடி அவசரமா கிளம்புற?” என்றார் கல்யாணி.
மாமியாரிடம் என்ன சொல்ல முடியும்? கொஞ்சம் தயக்கமாக இருந்தது.
“உங்க பையன் தான் கிளம்ப சொன்னார் அத்தை. அவர்கிட்ட கேளுங்க, எனக்கு தெரியல” என்றதும்,
“யாரு அவனா? உன்கிட்ட சொல்லாம ஒன்னு செஞ்சிட்டாலும்?.. உனக்கு சொல்ல மனசு இல்லை போல?” இடக்காக பேசினார் கல்யாணி.
ரோகினி கூட அப்படித்தான் நினைத்தாள், “என்ன சினேகா இது? இவள் பரபரப்பா கிளம்பறா? தடுக்கி விழுந்தா இருக்கிற அம்மா வீட்டுக்கே போய் வர வழியை காணோம். இதுல எங்க அவ்வளவு அவசரமா கிளம்புறவ” என்று பார்க்க,
மாமியாரின் வார்த்தைக்கு பின் மறைக்க முடியாமல், “அத்தை அது வந்து.. அவங்க தான்.. ஏற்காடு போலாம், ரெடியாகுன்னு சொன்னாங்க”
“என்ன!…” மற்ற மூன்று பெண்களும் அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக பார்க்க,
“ஆமா அத்தை, கல்யாணம் ஆனதிலிருந்து என்னை எங்கேயும் கூட்டிட்டு போகலை. அதனாலதான் ஒரு நாலு நாள் வெளிய போறோம்”
“ஹனிமூனா” என்றாள் சினேகா.
லேசாக முகம் சிவக்க ஆமாம் என்று தலையாட்டினாள் நிறை.
“இவளுக்கு வந்த வாழ்வைப் பாரேன்” நினைத்தது ரோகினி தான்.
மாலை ஐந்து மணிக்கு எல்லாம் கையில் பூவோடு பிரபா வந்துவிட்டான். இளமஞ்சள் நிறத்தில் சுடிதார் அணிந்து இருந்தாள் நிறை. பூவை மனைவி கையில் கொடுத்தவன். அவசரமாக ரெடியாகி வந்தான். முன்பே போன் பண்ணி தாயிடம் சொல்லி இருந்ததால்,
“அம்மா நாங்க கிளம்பறோம்”
“சரி பார்த்து போயிட்டு வாங்க. அப்படியே சாமி ரூம் போயி, சாமியை கும்பிட்டுட்டு போங்க” என்றார் கல்யாணி.
தனக்கு என்று மகன் ஒன்றை செய்கிறான். எப்படியோ தன் மகன் நன்றாக இருந்தால் சரி தான். அவர்கள் ஊரை விட்டு பஸ் ஸ்டாண்ட் வந்ததும்,
“நிறை, நான் போய் வாட்டர் பாட்டில், கொஞ்சம் பண்டம் வாங்கி வாரேன். நீ நில்லு” என்று நகர்ந்தான்.
பிரபா கடையில் இருக்க, அங்கு இருந்தது அவனின் அத்தையும், மாமாவும் தான். அவர்கள் இவனைப் பார்க்கவில்லை. எப்படி பார்த்துவிட்டு இரண்டு வார்த்தை கூட பேசாமல் செல்வது,
“அத்தை” என்றான்.
“அட பிரபா. வேலை முடிஞ்சு வீட்டுக்கு போறியா?” நீண்ட நாள் சென்று மருமகனை காண்கிறார்.
லேசாக சிரித்தவன், “இல்ல அத்தை. சும்மா ஏற்காடு வரைக்கும் நானும், நிறையும் கிளம்புறோம். நிறை அங்க தான் இருக்கா.. வாங்க” என்று அழைத்து சென்றான்.
மகளைப் பார்த்தும் நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால், ஆவலாக பார்க்க சென்றார்கள். அங்கு ஒரு பென்சில் கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருந்தாள் நிறை. எப்போது கணவன் வருவான் என்று பார்த்திருக்க, அவன் தன் பெற்றோர்களோடு வந்ததும் அவசரமாக எழுந்து நின்றாள்.
மகளின் தோற்றத்தை பார்த்ததுமே அவளின் சந்தோஷமான மண வாழ்க்கை தெரிய, திலகாவுக்கு திருப்தி. நிறைக்கு, அவர்களை பார்த்து லேசான தயக்கம் வந்தது.
திலகாவுக்கு மகளை பார்த்து கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது. அப்படி பல்ப் எரிந்தது நிறையின் முகம். மகளை தடவி பார்த்தவர்,
“நல்ல படியா போயிட்டு வாங்க” என்று அனுப்பி வைத்தார்.
நிறைக்கு என்னவோ மனதில் அவ்வளவு சந்தோஷம். எல்லாம் நல்லதாக நடப்பதாக தோன்றியது. நல்ல குளிர், பஸ்ஸில் ஏறியதும் கொண்டு வந்த போர்வையை போர்த்தி கொண்டாள். பிரபா மனைவியை நெருங்கி அமர்ந்தான்.
பத்து மணிக்கு மேல் பஸ் ஓர் இடத்தில் நிற்க, இருவரும் உணவை முடித்தார்கள். அவள் வாழ்க்கையில் இப்படி எல்லாம் வெளியில் வந்ததே இல்லை. அந்த குளிர், நெருக்கத்தில் கணவன், சூடான இட்லி, சிக்கன் குழம்பு. அப்புறம் கிளம்பும் போது ஏலக்காய் டீ, பஸ்ஸில் மெல்லிய பாட்டு. வெளியே ஒரே இருட்டாக இருந்தாலும், நிறை மனம் பிரகாசமாக இருந்தது.
எல்லோரும் உறங்குவதால் கணவன் மனைவி இருவரும் நெருக்கத்தில் அமர்ந்து என்னவோ மெல்ல பேசிக் கொண்டு வந்தார்கள். நிறை அந்தப் பயணத்தை முழுமையாக அனுபவித்தாள். விளக்கு அணைக்கப்பட்டதும், பிரபா மனைவியை லேசாக அணைத்து தோள் சாய்த்து கொண்டான்.
“தூங்கு” என்றதும்,
“ம்கூம், சத்தியமா எனக்கு தூக்கம் வராது. இப்படி எல்லாம் என் வாழ்க்கையை நான் உணர்ந்ததே இல்லை தெரியுமா!.. நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா? என்னங்க, எனக்கு பணம் காசு எல்லாம் வேணாம். இப்படி வாழ்கிற வாழ்க்கை மட்டும் போதும்” முகம் பூரிக்க சொன்னாள்.
பிரபா அவள் கன்னத்தில் லேசாக முத்தம் வைக்க,
“இப்படி பொது இடத்துல முத்தம் கொடுத்தா நான் எப்படி பீல் பண்றதாம். சுத்தி முத்தி தான் பார்க்க வேண்டி இருக்கு”
“எது பொது இடம். உன் கன்னம் எனக்கானது இல்லையா?”
“உங்களுக்கு தான். ஆனா நாம இருக்கிற இடம் வேற”
“அதனாலதான் கன்னத்துல முத்தம் கொடுத்தேன். தனியா இருந்தா” கணவன் பார்வை வேறு சொன்னது,
முகம் சிவந்தாலும், “நீங்க இப்படி எல்லாம் பேசுவீங்களா?”
“பேசுவேனே என் பொண்டாட்டி கிட்ட மட்டும்” என்று மேலும் ஒரு முத்தம் வைத்தான் சத்தமில்லாமல்…
அதிகாலை மூன்று மணிக்கு தான் ஏற்காடு வந்தார்கள். அறைக்கு வந்ததும் பிரபா உறங்கி விட்டான். நிறைக்கு லேசான உறக்கம் மட்டும் தான். கொஞ்ச நேரம் கணவனின் நெருக்கத்தில் படுத்து இருந்தவள், ஆறு மணிக்கு மேல் எழுந்து கொண்டாள்.
சுற்றிலும் வெயில் இல்லாமல் பனிமூட்டமாக இருக்க, ரம்யமான காலை பொழுதை உள்ளம் துள்ள ரசித்தாள். அப்படியே அவள் நின்று இருக்க, பின்பக்கம் யாரோ அவளை இறுக்கமாக அணைத்தார்கள். வேறு யார் கணவன் தான். காது மடலில் இருந்து கீழே கழுத்து வரை முத்தம் தொடர,
“சும்மா இருங்க. காலங்காத்தாலே ஆரம்பிக்காதீங்க. எல்லாத்துக்கும் நேரம் காலம் இருக்கு” என்றதும்,
“நேரங்காலமே பார்க்க கூடாது என்று தான் எல்லாரும் ஹனிமூன் வருவாங்க. இங்க வந்து நேரம் காலம் பாக்ககுறாளே என் பொண்டாட்டி” நிறைய உரிமையாக பேசினான் பிரபா.
முன் பக்கம் திரும்பி அவன் அணைப்பை இன்னும் இறுக்கியவள், “ரொம்ப நல்லா இருக்குல்ல” என்றதும்,
“எது” என்றான் விசமமாக,
கணவனைப் பார்த்து முறைத்தாலும் அவள் முகம் சிவந்து இருந்தது. பிரபா சொன்னது போலவே நான்கு நாட்களும் அவர்களுக்கு நேர காலமே கிடையாது. மிக மிகத் தித்திப்பான இல்வாழ்க்கையை, மிக சந்தோஷமாக தொடங்கினார்கள். அடிக்கடி மழையும் பெய்ய, அதை சாக்காக கொண்டு அறையிலே இருந்து கொண்டார்கள். மனைவியாக கணவனின் மற்றொரு பரிமாணத்தை தான் கண்டாள் நிறை. கணவனின் அன்பையும், ஆதரவையும் பார்த்தவளுக்கு அவரின் காதலில் கரைந்து போனாள். பிரபா இவ்வளவு ரொமாண்டிக் பர்சன் என்று இதுவரை அவள் நினைத்ததே இல்லை. அவ்வளவு தூரம் அவளைக் கொண்டாடினான்.
வருடத்திற்கு ஒரு முறையாவது இப்படி வெளியே செல்ல வேண்டும் என்ற திட்டமிடலோடு தான் இருவரும் தங்கள் ஊர் திரும்பினார்கள். அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது அவர்களுக்கு இந்த ட்ரிப்…
வீட்டிற்கு வந்ததும் எல்லோர் பார்வையும் அவர்கள் இருவர் மீது ஓட, எப்போதும் போல அவர்கள் யாரையும் கண்டுகொள்ளவில்லை. நாலு நாள் லீவு அதிகம் என்பதால், காலையிலே அவரவர் வேலையை பார்க்க சென்று விட்டார்கள். நிறைவுக்கு வேலை செய்யும்போதெல்லாம் கணவன் நினைப்புதான். அடிக்கடி தன்னாலே சிரித்துக்கொண்டாள்.
திவ்யா கூட, “ என்னாச்சு நிறை. தனியா சிரிக்கிற” என்று கேட்கும் அளவுக்கு இருந்தது கணவனின் நினைப்பு.
முன்பே பிரபா மனைவியை விட்டு எங்கும் நகர மாட்டான். தற்போது தாம்பத்திய வாழ்க்கையின் இனிமையை அறிந்தபின் அவளை விட்டு நகர்வதே இல்லை. எல்லா நேரமும் பேச்சும், சிரிப்பும் தான். நிறைவுக்கு கணவனை கட்டிக் கொண்டு உறங்க மிகப் பிடிக்கும். உறங்கும் பொழுது அவனை அணைத்துக் கொண்டு உறங்குவாள். அப்புறம் பார்த்தல் எங்கோ கிடப்பாள்.
“உங்க காரியம் முடிஞ்ச உடனே என்னை விட்டு பத்தடி தள்ளி போயிருங்க. ஏன் என்னை ஒட்டி எல்லாம் தூங்க மாட்டீங்களா?” சடவாக கேட்க.
“நான் உன் பக்கத்துல தான் படுத்து இருக்கேன். நீதான் என்ன தள்ளி விட்டுற” என்றான் பிரபா.
நிறை தூக்கத்தில் உருளும் ரகம். பிரபா படுக்கை விரிப்பு கூட கசங்காமல் அப்பாவியாக படுத்து உறங்குவான். நிறைய அசந்து உறங்கும் வரை தான் கணவனின் கைப்பிடியில், அடுத்து அவனவே உருட்டி விட்டு விடுவாள்.
“என்னை குறை சொல்லாதீங்க. நீங்க ஃப்ரீயா உறங்க நினைக்கிறீங்க”
“பின்ன, உன்னை கட்டி பிடிச்சு உறங்குன கரும்பு மெஷின்ல மாட்ன மாதிரி புழிஞ்சு எடுத்துடுற”
“யாரு நானு.. நான் தான் உங்களை சொல்லணும்” என்றதும், பிரபா முகம் லேசான வெட்கத்தை காட்டியது. அவள் கன்னத்தை வலிக்காமல் கடித்து வைத்தான்.
மூன்று மகன்களும் மனைவியோடு சந்தோஷமாக வாழ்ந்தாலும், அந்த குடும்பத்திற்கு வாரிசு என்ற ஒன்று, இன்னும் கை வர வில்லை. குலதெய்வதிற்கு பொங்கல் வைக்கிறார்கள்.
வீர சிவா கார் ஏற்பாடு செய்து இருக்க, “அம்மா எல்லோரும் ஒரே வண்டியில் வர முடியாது. அதுல இடமும் இருக்காது. நானும் நிறையும் எங்க வண்டியில் வந்து விடுகிறோம்” என்று விட்டான் பிரபா.
மற்றவர்கள் முன்னே செல்ல, பின் தொடர்ந்தார்கள் பிரபா தம்பதிகள். போகும் வழியிலே பூக்கடையில் நிறுத்தி பூ வாங்கி கொடுத்தான்.
“நிறை அம்மாவுக்கும் அண்ணிக்கும் வாங்கு” என்றதும் அவள் முறைத்து பார்க்க,
“என்ன? ஒரே குடும்பமா போகும்போது நீ மட்டும் பூ வைத்திருந்து, அவங்களுக்கு வாங்கி போகாம இருக்க முடியுமா? நான் போய் எல்லாருக்கும் இட்லி வாங்கிட்டு வாரேன். பொங்கல் வைத்து சாப்பிட லேட் ஆகும்”
“ஆமா, உங்க அண்ணன்க ரெண்டு பேரும் தம்பி பொண்டாட்டின்னு ஒரு மிட்டாய் கூட வாங்கி கொடுத்தது இல்ல தெரியுமா?” முகத்தை தூக்கி தான் வைத்து இருந்தாள்.
மனைவி பேச்சை அவன் கண்டு கொள்ளவில்லை.
“பூவ அண்ணிகிட்ட கொடு”
“நான் கொடுத்தா வாங்க மாட்டாங்க. கௌரவம் பார்ப்பாங்க. நீங்களே கொடுத்துடுங்க. என்ன இருந்தாலும் நீங்க கொழுந்தன். நான் அடுத்த வீட்டு பொண்ணு..”
“அடி என்னடி!…” என்றவன், ரோகினி அருகே சென்று,
“அண்ணி இந்தாங்க பூ” என்று கொடுக்க,
“காலையில கிளம்பற அவசரத்துல உங்க அண்ணன் வாங்கி கொடுக்கல. சினேகா வா” என்று வாங்கி கொண்டாள்.
அப்படியெல்லாம் சிவா மனைவியின் தலையை பார்த்து வாங்கி கொடுக்கும் ஆள் கிடையாது. அதை அவனும் அறிவான்.
அந்த ஊரில் அவர்களுக்கு சில சொந்தங்களும் இருந்தது. வீரணன் எல்லோரோடும் பேசிக் கொண்டிருந்தார்.
“வாரிசு தாமதமாகுதே தவிர வேற எந்த குறையும் இல்லை எனக்கு.. மூணு பசங்களும் நல்லபடியா கல்யாணம் முடிஞ்சுருச்சு. அங்க பொங்கல் வைக்கிறது என் மூத்த மருமக, அந்த விறகு எடுக்கிறது என் ரெண்டாவது மருமக” என்றவர், நிறையை தேட, தண்ணி குடம் சுமந்து வந்தாள்.
“செல்வி, கொஞ்சம் தண்ணி கொடுத்தா” என்றார். அவர் திருநிறைச் செல்வியை, செல்வி என்றுதான் அழைப்பார்.
நிறை தண்ணி கொண்டு செல்ல, “இது திருநிறைச்செல்வி. என் தங்கச்சி மக, என் கடைசி மகனுக்கு எடுத்து இருக்கேன்” என்றார் சந்தோஷமாக.
சாமி கும்பிட்டு முடிய, “மாமா” என்று வந்தாள் நிறை.
“என்ன செல்வி”
“என்னை என்ன சொல்லி அறிமுகம் செஞ்சீங்க” என்றாள்.
புரியாமல் பார்த்தவர், “என் தங்கச்சி மகள்” என்றார்.
“அப்படி வேணாம். நான் உங்க மூணாவது மருமகள். அது மட்டும் போதும்” என்று நகர்ந்து விட, திகைத்து போய் பார்த்தார் வீரணன்.
error: Content is protected !!