Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

40 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 40

.

 



Advertisement

ல்ல்லகு எனக்கு கொய்யாவ பிச்சு தா” என இவனைப் பெரிய மனுஷனாக மதித்து சின்னவள் கேட்க, வீரன் மரம் ஏறக் கிளம்பினான். இங்கு… அங்கு என அருகில் இருந்த கிளைகளில் கால் பதித்து மரம் ஏறுவது ஒன்றும் அவ்வளவு கடினமாக இருக்கவில்லை குட்டி ரகுவிற்கு.

“ஏறிட்டேன் பேபி” எனப் பெருமையாகக் கீழே பார்த்தவனுக்குப் பயம் தொற்றிக் கொண்டது.

Advertisement

Advertisement

“உஉன் தல பக்கத்துல இருக்கே… அத ப்பறி” எனக் கீழே நின்றிருந்தவள் ஆணைகளைப் பறக்கவிட்டாள். ஏறியவன் தலை அருகில் கொய்யாத் தொங்கிக் கொண்டிருந்தாலும் ஒரு கையை உயர்த்தி அதைப் பறிக்கப் பயம்.

“பயமா இருக்கு பேபி” என ரகு குழந்தையாக மாறி அழத் தயாரானான்.

Advertisement

“வ்விழ மாட்ட ல்லகு. உஉன் தல பக்கத்துல தான் டா இருக்கு. ட்ட்டக்குன்னு கைய எடுத்து பறிச்சுட்டு மறுபடியும் மரத்த ப்பிடிச்சுக்கோ.” எனத் தைரியம் ஊட்டினாள் ரகுவின் பேபி.

‘பயப்படாத டா ரகு… விழற மாதிரி இருந்தா குதிச்சுடலாம்’ என எண்ணி கீழே பார்க்கவும், இருந்த பயம் கூடியதே தவிரக் குறையவில்லை.

இவன் பயத்தில் விழித்துக் கொண்டிருக்க, அவன் மரம் ஏறியதின் நோக்கத்தை நினைவுப் படுத்தினாள் தாரா. “ப்பக்கத்துல இருக்கதப் பிச்சுப் போடு லகு” என்றதும், “நான் கீழ விழுந்தா அப்பாட்ட சொல்லாத பேபி. அப்பறம் இங்க இருந்து கூட்டிட்டு போயிடுவாங்க” எனப் பயத்தில் உளறினான்.

“ல்லகு பயமா இருந்தா இறங்கு… ந்நான் ப்பிச்சுக்கிறேன்” என்றவளை முறைத்தவன் தைரியத்தை எல்லாம் திரட்டி ஒரு வழியாக ஒற்றைக் காயைப் பறித்துப் போட்டான். அதற்கே கை நடுங்கக் கீழே விழுந்து விடுவான் போல் இருந்தது.

கொய்யாவை சட்டையில் துடைத்து ஒரு கடி கடித்து, “இஇது பிஞ்சு காயா இருக்கு ல்லகு. உஉனக்கு மேல இருக்கே அத பிச்சு தா” என்றவளை வெட்டவா குத்தவா என பார்த்தவன், “போடி தீனி பண்டம்” என எரிந்து விழுந்தான்.

“ந்நீ கீழ வா… நான் பார்த்துக்கிறேன்” என்றதற்கு, “அது தெரிஞ்சா நான் வர மாட்டேனா?” என அதற்கும் பாய்ந்தான்.

“எஎன்ன லகு? எறங்க தெரியலியா? ந்நான் வேண்ணா மேல வரட்டா?”

“எல்லாம் உன்னால தான். ஏறின எனக்கே எப்படி இறங்கன்னு தெரியல… இதுல இவ வர போறாளாம். வாய மூடு” சுள்ளென விழுந்தான்.

அவன் பயத்தைப் பார்த்தவள் மரத்தில் ஏறி, “இஇதோ இங்க கால வை, இந்த கிளைய பிடி… மெள்ள மெள்ள” என இறங்க வழி காட்டி, மீண்டுமாக மரம் ஏறி, அவனுக்கு ஒன்றும் அவளுக்கு ஒன்றுமாக இரண்டு கொய்யாக்களைப் பிடுங்கிப் போட்டாள்.

அன்று தோட்டத்திலிருந்து வீட்டுக்குச் சென்றவர்கள் பறித்து வந்த கொய்யாக் காய்களை வெட்டி உப்பும் மிளகாய் தூளும் தூவி உண்டதும், “நீயும் நானும் பெருசானதும் இந்த தோட்டம் ஃபுல்லா இதே மாதிரி டேஸ்டியான கொய்யா, சப்போட்டா, சீத்தாப்பழம் எல்லாம் வளத்து விடணும் பேபி. அப்போ தான் டெய்லி இப்டி சாப்பிடலாம்“ என்றதும் நினைவில் வந்து நின்றது.

“இனி மரம் ஏறின… காலுலேயே நாலு வைப்பேன்” எனப் பாட்டி சின்னவளைத் திட்டியதும் அதற்கு இவன், “உனக்கு ரொம்ப தைரியம் பேபி” எனப் பாராட்டியதும், அதற்குப் பெருமை பொங்க, “உனக்காக மரம் என்ன… மலை கூட ஏறுவேன் லகு” எனக் கொய்யாவைச் சப்பு கொட்டி தின்றதும், இன்றைய ரகுவின் முகத்தை மலரச் செய்தது.

“இவ தின்றதுக்கு அவன மரம் ஏத்தி விட்டுட்டு… இப்போ விடுற கதைய பாரு” என சந்திரிகா தலையில் அடித்துக் கொண்டு சென்றதை அவள் அன்று காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. அவன் கேட்டான் என்றதற்காக அந்த விடுமுறை முடியும் வரை தோட்டத்துக் கனிகளை அவனுக்காகப் பறித்தாள்… ஒரு முறை விழுந்து கால் பிசகியபின்னும், அவள் செயலைக் கைவிட்டாள் இல்லை.

அவன் சண்டிராணி அவள். அவனுக்காக அவள் எந்த எல்லைக்கும் செல்வாள் என அவனுக்கு மட்டுமா அவர்கள் நண்பர்களுக்கும் தெரியுமே. அவனைப் பார்க்காது அவள் நாள் விடிந்ததும் இல்லை… அவன் இல்லாது அவள் நாள் முழுமை பெற்றதும் இல்லை. அப்படிப்பட்டவள் ஏன் ஒரே ஒரு முறை கூட அவனிடம் பேச முயலவில்லை என ரகுவிற்கு புரியவில்லை. காதலனாக மனம் ஏற்கவில்லை என்றாலும் மன்னித்து முன்போல் தோழனாக ஏற்கலாமே என மனம் சுணங்கியது.

அந்த விமானப் பயணம் முழுவதும் யோசனையில் வந்தவனைத் தனிமை வரவேற்றது. மூன்று மாதங்கள் தந்தை, தந்தையின் குடும்பம் என ஃபின்லாந்தில் இன்பமாக இருந்துவிட்டு வந்தவனுக்கு கான்பூர் கசந்து வழிந்தது. சொத்துகளை பேரப்பிள்ளைகளுக்கு எழுதி வைத்த தாத்தா, வீட்டை இவன் பெயருக்கு எழுதி வைத்திருந்தார்.

தாத்தா சென்ற கையோடு வீட்டை விற்க மனமில்லை ரகுவிற்கு. தாத்தா மட்டுமே அவனை இங்குப் பிடித்து வைத்திருந்தார். இன்று அவரும் இல்லை. பெங்களூரில் வேலை கிடைத்திருக்க, இதற்கு மேல் கான்பூரில் இவனுக்கு இருக்க காரணம் இல்லை. அடுத்து வந்த நாள்களில் வீட்டைப் புதுப்பித்து, கல்லூரியில் படிக்கும் பிள்ளைகளுக்கு வாடகை விடுவதாக அறிவித்து, அங்கிருந்த அறைகளை வாடகை விட்டவன் திருச்சியை நோக்கிப் பயணப்பட்டான்.

விமானப் பயணம் ஒரு வகை நிம்மதியின்மையோடே கடந்தது. குடும்பமாக திருச்சி வீட்டில் வாழ்வான் எனக் கனவு கண்டவன் கனவில் அவனே மண்ணை அள்ளி போட்டிருக்க, இனி அதற்கு வழி இல்லை. அவன் பேபி அவனை புறக்கணித்தால்? மீண்டுமாகப் புது இடம், புது வாழ்க்கை, யாருமற்ற தனிமை. ரகுவிற்கு மனம் விட்டுப்போனது. வேலைக்குச் சென்றபின் சில மாதங்களில் அம்மம்மாவையும் தாத்தாவையும் அவனோடு பெங்களூருக்கு அழைத்துக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்தான். பயணம் முழுவதும் வேலை, வீடு வாங்குவது, வரவு செலவு எனப் பல கணக்குகள் மூளைக்குள் ஓடியது.

வீட்டு வாயிலில் வந்து நின்றவன் சிந்தனையை அழையா விருந்தாளியாகப் பெண் ஆக்கிரமித்தாள். பேசுவாளா? முகம் திருப்புவாளா? தெரியவில்லை. அன்று, அம்மம்மாவிடம் தான் பேசியது அவளுக்குக் கண்டிப்பாகக் கேட்டிருக்கும். ஆனாலும் ஒரு பார்வையோ, எதிர் பேச்சோ இல்லை. அந்த மௌன மொழியின் அர்த்தம் தான் என்ன? வெறுத்தே விட்டாளா? அவள் வெறுப்பைத் தாங்கும் தைரியம் தனக்கு இல்லை என்பது நிச்சயமாகத் தெரியும் என்பதால் அவளை பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் எனத் தீர்மானித்திருந்தான்.

திடீர் எனப் பாட்டியின் முன் சென்று நின்றவனை ஆச்சரியத்தோடு பார்த்தவரின் கண்கள் கலங்கிப் போனது. நடுங்கும் கரம் கொண்டு பேரன் முகத்தை ஆசையாக வருடியவருக்குப் பேச வார்த்தைகள் வரவில்லை.

“வந்துட்டேன் அம்மம்மா” என்றவன் அவரை தோளோடு அணைத்து உச்சந்தலையில் முத்தமிட்டு நகர்ந்தான்.

பேரனின் பேச்சில் உயிர் பெற்றவராய், “என்ன டா வெயில் காலத்துல மேகமூட்டமா இருக்குன்னு நினைச்சேன். நீ வந்து நிக்கிற” எனக் கேலியும் செய்தார்.

“ஹ ஹ ஹா… எங்க டா என் அம்மம்மான்னு பார்த்தேன்.” எனச் சிரித்தவாறே அவன் அறைக்குச் சென்றவனை வினோதமாகப் பார்த்தார் பாட்டி. வந்ததும் வராததுமாகப் பின் வீட்டுக்கு ஓடுபவன் எங்கே என்பதே அந்தப் பார்வைக்கான அர்த்தம்.

கட்டிலில் விழுந்தவனுக்கு அப்படி ஒரு நிம்மதி. அன்னை மடியில் வந்துவிட்டவனாக, கண்கள் சொருக ஒரு மணி நேரம் தூங்கி எழுந்தான். எழுந்தவன் பார்வை ஜன்னல் வழியே பின் வீட்டை நோக்கியது. ஒருவரும் தென்படவில்லை. இங்கு இருந்தால் தானே பார்வை அங்குச் செல்லும் என நினைத்தவன், தாத்தாவைத் தேடி தோட்டம் சென்றான். கதலி, கற்பூரவல்லி, பூவன், பேயன் எனப் பலவகை வாழைப்பழங்கள் குலை விட்டிருந்தன.

பேரனைப் பார்த்த தாத்தா, “வந்துட்டியா?” எனக் கேட்டார் முகம் பிரகாசிக்க. “இன்னும் எத்தன வருஷம் என் உடம்பு ஈடு கொடுக்குமோ? ரெண்டு மூணு வருஷம் நீ ஆசப்பட்ட மாதிரி வேலைக்கு போயிட்டு வந்துடு. வந்ததும், பலருக்குச் சோறு போடற நம்ம தொழில கவனி ரகு.” என்றார்.

பாப்போம் தாத்தா” என்றதன் அர்த்தம் என்ன? பார்ப்பேன் என்கிறானா? இல்லை யோசிக்கிறேன் என்கிறானா? அவனுக்குத் தான் வெளிச்சம்.

எப்போ பெங்களூரு கிளம்பணும்?”

சனிக்கிழம காலையில தாத்தா” என்றவன் தாத்தாவின் முறைப்பை வாங்கிக் கொண்டான்.

“ரெண்டு வாரம் இருக்க மாதிரி வர நினைச்சேன். ஆனா அங்க வீட்ட வாடகை விட்டுட்டு வர லேட் ஆகிடுச்சு தாத்தா. அடுத்த வாரம் வேலையில ஜாயின் பண்ணனும். இங்க இருக்கு பெங்களூரு… கார ஒரு மிதி மிதிச்சா வந்து நிக்கப்போறேன். அப்பப்போ வந்து போகலாம்” என ஏதேதோ கூறி தாத்தாவைச் சமாதானம் செய்தான்.

தாத்தாவோடு தோட்டத்தில் சுற்றித் திரிந்தவன், பம்ப் செட்டை போட்டு நீர் நிறைந்த தொட்டியில் நீர்யானையாக மாறி ஆசை தீர நீந்தினான். “சாப்பிட போலாம் வா ரகு” என அழைத்த தாத்தாவோடு செல்லாது, “நீங்க வீட்டுக்குப் போங்க தாத்தா ஃப்ரெண்ச பார்த்துட்டு வரேன்” என ஊர் சுற்றக் கிளம்பினான். ஏனோ வீட்டுப் பக்கம் செல்லவே பயமாக இருந்தது. அவளைப் பார்த்திடக் கூடாது என்ற முடிவோடு வந்தான் தான்… ஆனால்… ப்ச்!

முன்மாலை வீட்டுக்கு வந்தவன் பாட்டியிடம் நன்றாக அர்ச்சனை வாங்கி… வயிற்றை நிறைத்தான். சற்று நேரம் மெத்தையில் விழுந்தான். அவன் விட்டுச் சென்ற பந்து அவனைப் பார்த்துச் சிரித்தது. பந்தை எடுத்தவன் படுத்துக் கொண்டே தூக்கிப் போட அது வழக்கம் போல் சுவரை முத்தமிட்டு சமத்தாக அவன் கைக்குள் வந்து சேர்ந்தது.

“டேய்… லொட்டு லொட்டுன்னு ஆரம்பிச்சுட்டியா?” எனப் பாட்டி சத்தம் போடவும் எழுந்து அமர்ந்தான்.

“மழ வரும் போல இருக்கு… நீங்க காப்பிய குடிங்க. நான் காஞ்ச துணிய எடுத்துட்டு வரேன்” எனப் பாட்டி தாத்தாவிடம் பேசும் சத்தம் கேட்டது. வெளியே பார்த்தான் இருட்டிக் கொண்டு வந்தது. கோடை மழைக்கு ஏது ஆயுள்? வருவதும் தெரியாது போவதும் தெரியாது. ஆனால் வந்த வேலையைச் சிறப்பாகச் செய்துவிடும் என்பதால், வெளியே சென்று பாட்டிக்கு உதவினான்.

வீட்டில் வந்து பாட்டியோடு அமர்ந்தவனுக்கு அவளைப் பார்க்க மனம் உந்தியது. தொலைக்காட்சிப் பெட்டியைப் போட்டுக் கொண்டு பாட்டி துணி மடிக்க ஆரம்பித்தார். அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கண்கள் திரையைப் பார்த்திருந்தாலும், ரகுவால் அங்கு அமர்ந்திருக்கவே முடியவில்லை. திரையில் அவள் தெரிந்தாள், அவள் பார்வையில் விழுந்து எழுந்தான். உயிரோடு கலந்தவளை எப்படித் தவிர்ப்பது எனத் தெரியவில்லை. வந்திருக்கவே கூடாது என நூறாவது முறையாக நினைத்துவிட்டவனுக்கு எங்கு ஓடி ஒளிவது எனத் தெரியவில்லை. மது கிடைக்காத குடிகாரன் போல் அடங்கா படபடப்போடு வீட்டுக்குள் நடையாய் நடந்தான்.

பேரனைப் பார்த்தவர் எதுவும் கூறவில்லை. என்ன ஆனது இவனுக்கு என மனம் வருத்தம் கொண்டது. இருப்புக் கொள்ளாது ரகு வாசல் பக்கம் போகவும், “மழ வர மாதிரி இருக்கு. கொட எடுக்காம எங்க ரகு போற?” என்றவரிடம் என்ன உரைப்பான்?

“பக்கத்துல அம்மம்மா” என நிறுத்திக் கொண்டான்.

“வந்ததுல இருந்து வீட்டுல நிமிஷ நேரம் தங்கல. அப்படி எங்கத் தான் போவியோ? நேரத்தோட வந்து சேரு” எனப் புலம்பிக் கொண்டே குடையை அவன் கையில் திணித்தார் பாட்டி.

வெளியே வந்தவன் திரும்பிப் பார்க்கப் பாட்டி உள்ளே சென்றிருந்தார். யோசனையோடே திண்ணையில் அமர்ந்தான். இதயம் படு வேகமாக அடித்துக் கொண்டது. இந்தச் சித்திரவதையை தவிர்க தானே இந்தப் பக்கமே வராது இருந்தான். இதயம் வெளியே குதித்துவிடும் போல் தோன்றவுமே, அவளின் வீட்டை நோக்கி நடந்தான். ‘நீ எப்போ போரது… நான் எப்போ பெய்யரது?’ என அதற்குமேல் பொறுக்க முடியாது, முட்டி நின்ற நீரை மேகம் கொட்ட ஆரம்பித்தது.

நனைந்து கொண்டே ஐயாவின் வீட்டின் முன் போய் நின்றவனுக்குக் கதவைத் தட்டத் தயக்கம் வந்து ஒட்டிக் கொண்டது. வீட்டின் பக்கவாட்டு ஜன்னலுக்கு மேல் இருந்த நிழற் தட்டியின் கீழ் போய் நின்றான். முதுகின் பின் இருந்த ஜன்னல் அவளது அறையின் ஜன்னல் இல்லை என்றாலும், அது பழைய நினைவுகளைக் கொண்டு வந்தது. அதனால் விளைந்த அனைத்தும் அவன் முன் வந்து போக, நொடி நேரம் கூட அங்கு நிற்கப் பிடிக்காதவனாய் அவசர அவசரமாகச் சற்றுத் தள்ளியிருந்த வேப்ப மரத்தை நோக்கி ஓடினான்.

“பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்” என ஜானகி அம்மா தொலைக்காட்சிப் பெட்டியில் பாடிக் கொண்டிருப்பது அங்கு வரை கேட்டது.

பாட்டி வீட்டின் அடுக்களையிலிருந்து பார்த்தால் இவன் நிற்பது தெரியும். ‘என்ன ரகு பண்ணிட்டு இருக்க? பாட்டி பார்த்து கேட்கதுக்கு முன்ன வீட்டுக்கு போ’ என எண்ணி நகர நினைத்தவன் காதினில் ‘டன்னானா டன்னாவுது இந்நேரம்… அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்’ என ராகமும் முணுமுணுப்புமாக விழுந்தது.

இடியும் மின்னலுமாக ஒன்று சேர ரகு மீது விழுந்தால், அவன் என்னாவான்? இப்படித் தான் உயிரோடே மழைத்துளியில் கரைந்து காற்றோடு கரைந்திருப்பானோ? அந்தப் பக்கம் திரும்பாதே என்றதையோ, போதும் பார்த்தது என்றதையோ கேட்காதவன், அந்தப் பக்கம் போகாதே என்றால் மட்டும் கேட்பானா என்ன? ரகு, அவன் உயிரைக் கசக்கிப் பிழிந்து கொண்டிருந்த யட்சனியை நோக்கி நடந்தான்.

கொட்டும் மழையில் நனைந்து தொங்கிக் கொண்டிருந்த துணியை எதற்கு எடுக்கிறோம் என்ற எண்ணமில்லாது, நிலா காய்ந்து கொண்டிருப்பவள் போல் மிக மிக நிதானமாக ஒவ்வொரு துணியாக எடுத்துக் கொண்டிருந்தவள் மீது விழுந்து கொண்டிருந்த நீர் நின்று போனது. தலை மீது வந்து நின்ற குடையை அண்ணாந்து பார்த்தவளுக்கு என்ன தோன்றியதோ அமைதியாக நின்றுவிட்டாள். திடுக்கிடவோ திரும்பிப் பார்க்கவோ இல்லை. அவன் வந்திருப்பது தெரியும் போலும். மூச்சு முட்டியது. கண்கள் கரித்தன. தொண்டை அடைத்துக் கொண்டு வலித்தது. எப்படியோ தவம் கலைத்து தன்னை காண வந்துவிட்டான்.

தன் முன் மங்கலாக நீண்டிருந்த அந்த நரம்பு புடைத்த வெண்ணிறக் கரத்தை பார்த்தவள் அதைப் பார்த்தே நின்றிருந்தாள். அவள், அவன் மேனியில் ஏற்படுத்திருயிருக்கும் தழும்புகளில் ஒன்று அந்த கரத்தில் இருந்தது. நான்கு பற்களின் தடங்கள் மேலும், இரண்டு பற்களின் தடங்கள் கீழுமாக ஆறு நீளப் புள்ளிகள் அந்த ஈர கரத்தில் இருந்தன.

மூச்சு அதன் கட்டுப்பாட்டை இழந்து வேகம் பிடித்தது. இதயம் தன் தாளத்தைத் தப்பியது. ஜீவன் எல்லாம் வடிய முதுகின் பின் நின்றிருந்தவன் மார்பின் சாய்ந்து நின்று கொண்டாள். ‘இப்போ தான் ஆறு மாசம் ஆச்சா?’ எனக் கத்தத் தோன்றினாலும் முடியவில்லை.

உடல் குலங்க அழுகிறாள் எனத் தெரிகிறது ரகுவிற்கு. மார்போடு அணைத்துக் கொள்ள ஆசை, ஆனால் செய்யவில்லை. குனிந்தவன், கன்னங்கள் இரண்டும் பட்டும் படாமலும் “பேபி” என்றான், மென்மையை எல்லாம் குரலுக்குத் தத்துக் கொடுத்து.

உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்த தீப்பிழம்பின் மீது பனி பொழிந்து உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை பெண்ணை குளிர்வித்தது. கண்கள் மூடியே இருக்க ‘ல்லகு’ மனம் வாஞ்சையோடு முணுமுணுத்தது. “பேபி…” என்றவனின் உஷ்ண மூச்சோடு வெம்மையான உதடுகள் மூடியிருந்த இமை மீது பட்டு விலகியது. உடலுக்குள் உயிர் பாய ஒட்டுமொத்த உடலும் சிலிர்த்து அடங்கியது.

வார்த்தைக்கும் வலிக்காது… காற்றும் வலிக்காது, “கோபம் போக வருஷம் ரெண்டு தேவ பட்டுதா பேபி?” என்றவன் இதழ் அவள் காது மடலைத் தீண்டியது.

உயிர் பெற்ற சிலைக்கு எங்கிருந்து அவ்வளவு கோபம் வந்ததோ, ‘போ என்றால் விட்டுவிட்டுப் போய்விடுவானா? மிரட்டிய இரவுகளும், தனிமை கொடுத்த அவஸ்தைகளும் இவனால் தானே… வந்துவிட்டான் ‘பேபி’ என கொஞ்சிக் கொண்டு! நீ வந்து அழைத்தால், உருகிவிடுவேனோ… போடா’ சட்டென நிமிர்ந்தவள் அவன் குடையைத் தூக்கி எறிந்து, நின்றிருந்தவனைத் தள்ளிவிட்டு வீட்டிற்குள் ஓடி மறைந்தாள். முகத்தை கூட பார்க்காது ஓடியவளை இயலாமையோடே பார்த்து நின்றவன் கொட்டும் மழையில் கிணற்று சுவர் மீது அமர்ந்தான்.

‘வந்துட்டான் குடைய தூக்கிட்டு’ என அவள் விட்டெறிந்த குடை நனைந்து கொண்டு அவள் கிணற்றடியில் மல்லாந்து கிடந்து நீரை அதன் வயிற்றுக்குள் தேக்கிக் கொண்டது. “வாய மூடிட்டு பேசாம நின்னிருந்தா குடையாது தப்பிச்சிருக்கும்” முணுமுணுத்துக் கொண்டான். கம்பிகள் இரண்டைத் துருத்திக் கொண்டிருக்கும் கருப்பு குடைக்குப் பாட்டியிடம் பாட்டு வாங்க வேண்டுமே என நினைத்தவனுக்குச் சிரிப்பு வந்தது.

அவளுக்கு அவன் மீது கோபம். வெறுப்பல்ல… கோபம். அவள் சாய்ந்து நின்ற மார்பை வருடியவனுக்குள் குதூகலம் எட்டிப் பார்த்தது. தன்னை தேடியிருக்கிறாள். அவன் வரவில்லை என்ற கோபம் இது. “என் பேபி டி நீ” என வாய்விட்டுக் கூறியவனின் மனம் மிக இலேசாக உணர்ந்தது.

கதவுக்குப் பின் கண்ணோரம் நீர் வழிய நின்றிருந்தவள் காதுகளில், “தங்கத் தாமரை மலர்ந்த பின்பு மூடுமோ; பட்டு பூங்கொடி படர இடம் தேடுமோ” என அவள் விட்ட இடத்திலிருந்து அவன் பாடுவது கேட்டது.

கொட்டும் மழையில், கிணற்றின் கைபிடி சுவர் மீது வாகாக அமர்ந்தவனின் பார்வை கதவின் இடுக்கில் மாட்டி இருந்த பெண்ணின் வெண்ணிற சல்வாரின் மீது இருந்தாலும் வாய் பாடுவதை நிறுத்தவில்லை.

“இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா…”

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!