Skip to content
Post Views: 1,492
அத்தியாயம் 21
“ஆராவை எனக்கு புடிச்சிருக்கு ம்மா!” என்றவன் கூற்றில் அசையாது மகனை பார்த்தபடி இருந்தார் மகேஸ்வரி.
Advertisement
“ம்மா!” என்று அவர் கைகளை விடாமலேயே எழுந்து அமர்ந்து அன்னை முகம் பார்க்க,
“என்ன சொல்ற ரகு? புடிச்சிருக்குனா?” மகன் என்ன அர்த்தத்தில் கூறுகிறான் என நினைத்தவருக்கு தன் யூகம் சரி தான் என்றே தோன்றினாலும் மகனே சொல்லட்டுமே என்று கேட்க,
Advertisement
Advertisement
‘நான் நினைக்குறது சரி தானா?’ என்று கேட்ட ஆராத்யா நியாபகத்தில் இப்பொழுதும் சிரித்துக் கொண்டவன்,
“நீங்க நினைக்குறதும் சரி தான் ம்மா!” என்றான்.
Advertisement
“ரகு! நிஜமாவா?” என்றவருக்கு புரிந்தது. புரிந்ததில் சந்தோசம் தான் என்றாலும் உடனே வேறொன்றும் நியாபகம் வர,
“ரகு!” என்றார் பதறி.
“என்னாச்சு ம்மா?” சட்டென்று மாறிய அன்னை முகம் பார்த்து புரியாமல் ரகு கேட்க, பல சிந்தனைகள் அவரிடம் அதில் அவன் வருட கணக்காய் காதலித்து இருப்பான் என்று தெரியாமல் போனது.
“ம்மா! எனக்கு ஆரா.. ஆராத்யாவை புடிச்சிருக்கு.. கல்யாணம் பண்ணி வைக்குறிங்களா?” என்று நேராய் கேட்டும் அன்னை அப்படியே இருக்க, புருவங்கள் சுருங்க பார்த்தவன்,
“என்னாச்சு ம்மா.. உங்களுக்கு பிடிக்கலையா?” என்றான்.
“ரகு! புடிச்சிருக்கு.. கல்யாணம்.. எல்லாம் சரி தான்.. ஆனா என்ன திடீர்னு.. அந்த பொண்ணை காப்பாத்துறேன்னு எதுவும்…”
கல்யாணமே வேண்டாம் என வருடம் கடந்து சொல்லிக் கொண்டு இருந்தவன் திடீரென வந்து பிடித்திருக்கிறது என்றதோடு கல்யாணம் என்றெல்லாம் பேச, எங்கே அந்த பெண்ணை காப்பாற்ற வேறு வழி இல்லையோ, அதனால் காப்பாற்ற மகன் இப்படி சொல்கிறானோ, திருமணம் செய்துவிட்டு அவள் பிரச்சனைகளை முடித்தால் போதும் என இருந்து விடுவானோ என்ற கேள்விகளில், இதில் மகனின் வாழ்க்கை எப்படி சிறக்கும் என்ற எண்ணத்தில் திடுக்கிட்டவர் பதறி அவனிடமே கேட்டும் விட்டார்.
அன்னையின் கடைசி வரிகளில் அத்தனை சிரிப்பு ரகுவிற்கு. வாய்விட்டே சிரித்துவிட்டான் சத்தமாய்.
அதில் மகேஸ்வரியும் மகனை ஆசையாய் சிறு புன்னகை தாங்கி பார்க்க, அறையில் உறங்காமல் இருந்த தர்ஷினியோடு, தண்ணீர் எடுக்க வந்த கல்பனாவும் அங்கே வந்துவிட்டாள்.
“அத்த! நாளைக்கு பூகம்பம், சுனாமினு ஏதோ ஒன்னு வர போகுது.. எதுக்கும் நாம எல்லாம் கொஞ்சம் பத்திரமான இடத்துக்கு போய்டலாம்!” என்று கல்பனா அவர்கள் அருகில் வர,
“ஆமாமா அண்ணி! எனக்கு கூட அப்படி தான் தோணுது..” என்று வந்தாள் தர்ஷினி.
“ஓய்! இன்னும் தூங்காம என்ன பண்ணுற? ஆமா வாக் போனியா? மாமாக்கு கால் பண்ணவா?” ரகு தர்ஷினி மேடிட்ட வயிற்றோடு வருவதைப் பார்த்து கேட்க,
“உன் மாமாகிட்ட நான் பேசிக்குறேன்.. இப்ப எதுக்கு மேல போற பேய் எல்லாம் வீட்டுக்குள்ள வர்ற மாதிரி ஒரு சிரிப்பு சிரிச்ச?” என்றாள் தர்ஷினி.
“அய்யோ தர்ஷி! நார் சிரிச்சதயே என்னால நம்ப முடியலை.. அப்ப நான் தூக்கத்துல கனவு கண்டுட்டே எல்லாம் வரல.. நிஜமா உன் அண்ணா சிரிச்சார் அப்படி தானே?” என்றாள் கல்பனா.
“அண்ணி! மிட் நைட்ல இந்த ஆராய்ச்சி அவசியமா? அகி தூங்கிட்டானா?” என்று பேச்சை மாற்ற பார்த்தான் ரகு.
“உங்க அண்ணன் தான? சீக்கிரமே வந்ததுக்கு மூக்குமுட்ட சாப்பிட்டு முதல் ஆளா தூங்கியாச்சு.. நீங்க சொல்லுங்க ஏன் சிரிச்சீங்க?” என்று விடவில்லை கல்பனாவும்.
அதில் மீண்டும் பூத்த புன்னகையுடன் அன்னையை அவன் பார்க்க,
“ம்மா! நீங்க சொல்லுங்க.. அப்படி என்ன காமெடி பண்ணீங்க?” என்றாள் தர்ஷினி.
“இப்ப நான் சொல்லவா வேண்டாமா ரகு?” என்று பாவமாய் மகனைப் பார்த்தார் மகேஸ்வரி.
“ம்மா!” அவர் கேட்ட விதத்தில் உடனே அன்னையை அணைத்துக் கொண்டவன்,
“நான் என்ன ரகசியமா சொன்னேன்!” என்று சிரித்து தள்ளி அமர்ந்து,
“ஒன்னும் இல்ல தர்ஷ்! எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு அம்மாகிட்ட கேட்டேன்.. அதுக்கு அம்மா குடுத்த ரியாக்ஷன்ல நான் காலி!” என்றான் சிரித்துக் கொண்டே.
“ஆமா தர்ஷி! அந்த பொண்ணு இல்ல.. அந்த பொண்ணு..” என்று கையசைத்த மகேஸ்வரிக்கு, சட்டென பெயர் வாயில் வரவில்லை.
“எந்த பொண்ணு ம்மா?” என்றாள் தர்ஷினியும் விளையாட்டை தொடர்ந்து.
“அதான் அந்த பொண்ணு தர்ஷி.. உன் பிரண்ட்டு..”
“ஆராத்யாவா த்த?” என்று கல்பனா கேட்க,
“ஹா ஆமா ஆமா கல்பனா! நீ கேளேன்! அந்த பொண்ணு தான்.. ஆரா பிடிச்சிருக்கு.. கல்யாணம் பண்ணி வையுங்கன்னு கேட்குறான்.. அங்க தான் ஷாக் ஆகி உட்கார்ந்திருந்தேன்..” என்று மகேஸ்வரி சொல்ல,
“இதுல ஷாக் ஆக என்ன இருக்கு த்த.. நீங்க தான என்கிட்ட சண்டை போட்டு போர் அடிச்சு போச்சுன்னு இன்னொரு மருமக வேணும்னு கேட்டுட்டு இருந்திங்க? கட்டி வச்சுட்டு நீங்க கட்டி புரள வேண்டியது தான?” என்றாள் கல்பனா.
“அதில்ல அண்ணி! நான் இரக்கப்பட்டு பாவப்பட்டு ஏதோ வாழ்வு குடுக்குறதுக்காக கல்யாணம் பன்றேனோனு அவங்களுக்கு சந்தேகம்..” என்றான் தெளிவாய் ரகு.
“அடடா போதும்! எல்லாரும் என் அம்மாவை போட்டு டார்ச்சரா பண்றீங்க?” என மகேஸ்வரி அருகே அமர்ந்த தர்ஷினி,
“என்னம்மா? உங்களுக்கு ஆராவை பிடிக்கலையா?” என்றாள்.
“என்ன தர்ஷி நீ? ரகுக்கு பிடிச்சா எனக்கு தனியா பிடிக்க என்ன இருக்கு? எவ்வளவு வியாக்கியானம் பேசினான் கல்யாணமா வேண்டவே வேண்டாம்னு.. திடிர்னு சொல்றான் இப்ப வந்து கல்யாணம் பண்ணிக்குறேன்னு.. அதான் ஒரு வேகத்துல பண்ணிட்டு…” என்று முடிக்காமல் மகளைப் பார்க்க,
“ம்மா!” என்று சிரித்த தர்ஷினிக்கும் அன்னை பயம் புரிந்து குழந்தையாய் தெரிந்தார் மகேஸ்வரி.
“உங்களுக்கு டெரர் மாமியார் வேஷம் குடுக்கலாம்னு பார்த்தா நீங்க அஞ்சலி பாப்பாவா மாறிட்டிங்க போங்க!” என சிரித்தவள்,
“உங்க பையன் இந்த பொண்ணு.. எப்படி? இந்த பொண்ணு ஆராக்காக தான் கல்யாணம் வேண்டாம்னு வருஷத்தை ஓட்டிட்டு இருந்தார் புரியுதா?” என்று புள்ளி வைத்து கேட்க,
“ஆமா ஆமா த்த! ரெண்டு வருஷமா லவ்வோ லவ்வு.. அதுவும் அந்த பொண்ணுக்கு கூட தெரியாதுன்னா பாருங்களேன்!” என்று கல்பனாவும் கிண்டல் செய்தாள்.
“அண்ணி!” என்று ரகு முறைக்க,
“இரு இரு! லவ்வா? ரெண்டு வருஷமாவா?” என்று குழம்பிய மகேஸ்வரி,
“ஆமா இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று மகள் மருமகளைப் பார்க்க,
“தர்ஷ்! நான் தூங்க போறேன்.. டைம் ஆகிடுச்சு.. நீங்களும் சீக்கிரம் போங்க!” என அனைவருக்கும் பொதுவாய் கூறியவன், கூறிய வேகத்தில் அன்னை அழைக்கும் முன் இரண்டு இரண்டு படிகளாக தாவி மேலே சென்று அறைக்குள் புகுந்து கொண்டான்.
கீழே சந்தோசமாய் அன்னையிடம் தர்ஷினி அனைத்தையும் பகிர, கல்பனாவும் தனக்கு தெரிந்ததை சொல்ல, நம்ப முடியாமல் கேட்டுக் கொண்டிருந்தவர் இருவரையும் மறைத்ததற்கு முறைத்து அடித்து பின் சமாதானம் ஆகி என தன் சந்தோஷத்தை அவர்களோடு பகிர்ந்து கொண்டார் மகேஸ்வரி.
தன் அறைக்கு வந்த ரகுவிற்கு பெரும் மகிழ்ச்சி என்று தான் சொல்ல வேண்டும்.
ஆராவிடம் தன் காதலை கூறியது ஒருவித மகிழ்ச்சி என்றால் எதிர்பாராமல் தன் அன்னையிடம் மனதை வெளிப்படுத்தியதில் இன்னும் ஒரு நிம்மதி.
பெரும் காலமாய் தனக்குள் சுமந்து கொண்டிருந்த காதல் தனக்குள் மட்டும் ஒளிந்திருந்த காதல் இன்றைக்கு எதிர்பாராமல் வேண்டியவர்களிடம் எல்லாம் சேர்ப்பித்து இருக்க, மனம் இலகுவாய் இருந்தது.
ஆராத்யா தன் காதலை ஏற்றுக் கொள்வளா என்ற சிந்தனை எல்லாம் இப்பொழுது அவனிடம் இல்லை. அவள் தன்னை புரிந்து கொள்ளவும் சில நேரம் வேண்டுமே என்று நினைத்தவனுக்கு, முதலில் தன் காதல் தெரியட்டும், பின் புரியட்டும், அதற்கான காலம் வரும் வரை காத்திருப்பதில் சுகம் தான் என்று மனதினை சமன் செய்து கொண்டான்.
“ஆரா!” என்று அழைத்து தன் நெஞ்சை நீவிக் கொண்டவனுக்கு, தன் உணர்வுகளை விளக்கும் வகை தெரியவில்லை.
சேர்த்து வைத்த காதலை எல்லாம் அவளிடம் சேமித்து வைக்கசொல்லி மனம் சிணுங்க தனக்கே தன்னை குறித்து சிறு புன்னகை.
அடுத்த நாள் காலை உற்சாகமாய் கிளம்பி வந்த ரகு, படிகளில் இறங்கும் பொழுதே சாப்பிட அனைவரும் அமர்ந்திருப்பதை பார்த்தவன், தன்னை அடக்கி வாசிக்க, கல்பனா, தர்ஷினி விடுவார்களா என்ன?
“என்ன ம்மா இன்னைக்கு பாயாசம் எல்லாம்?” என்று அகிலன் கேட்க,
“ஆமா! அதெப்படி இந்த நாளை அத்தை மறப்பாங்க? இல்ல த்தை?” என்றாள் கல்பனா.
“அப்படி என்ன ஸ்பெஷல்? அப்பா பிறந்தநாள்.., கல்யாண நாள்… ம்ம்ம் அப்படி ஒன்னும் இந்த மாசம் ஸ்பெஷல் இல்லையே!” என்றான் அகிலன் புரியாமல்.
“என்ன இன்னைக்கு இன்னும் பேங்க் போகல நீ?” என்று கேட்டபடி வந்து அமர்ந்தான் ரகு.
“ரகு தம்பி! அவர் எப்பவும் வர்ற டைம்ல தான் சாப்பிட வந்தார்.. நீங்க தான் ஆர்வக்கோளாறுல கொஞ்சம் சீக்கிரமா வந்தாப்புல இருக்கு..” கல்பனா இழுத்து கூற,
“அண்ணி!” என்றவன் சிரித்தானோ சிணுங்கினானோ ஆனால் அங்கிருந்தவர்களை ஆச்சார்யப்பட வைத்தான்.
“வர வர உனக்கு வாய் அதிகமா போச்சு டி!” அகிலன் தன் மனைவியை கூற,
“அப்படி சொல்லு டா.. என்ன பேச்சு பேசுறா..” என்று மகேஸ்வரியும் வர,
“அத்தை!” படக்கென்று மகேஸ்வரி காலில் விழுந்து எழுந்த கல்பனா,
“நான் போய் வாய் பேசுவேனா? அதுவும் இந்த வீட்டுல உங்க முன்னாடி?” என்று கேட்க,
“உலக நடிப்பு டி.. ஆமா உங்க அம்மா கால் பண்ணினாங்க தான? என்கிட்ட கூட கால் பண்ணி பத்து நாள் வந்து உன்னை தங்க சொல்ல அனுமதி கேட்டுட்டு இருந்தாங்க.. நான் என்ன இங்க உன்னை கொடுமையா படுத்துறேன்.. நானாவது கொஞ்சம் நிம்மதியா இருப்பேன்.. பத்து என்ன இருபது நாளுக்கு போய்ட்டு வாயேன்!” என்றான் அகிலன்.
“எப்ப டா கிளப்பலாம்னு தெரியுரீங்க இல்ல.. அப்படி எல்லாம் கல்யாண வீட்டை பாதில விட்டுட்டு போக முடியாது!” என்ற கல்பனா பதிலில், செல்கள் எல்லாம் பூ பூத்தது ரகுவிற்கு.
“ஆமா ஆமா டா.. பத்திரிக்கைல பேர் எழுதுறதுல இருந்து என்னென்ன வாங்கணும்னு லிஸ்ட் போட எனக்கு கல்பனா வேணும்..” என்றார் மகேஸ்வரி.
“அப்ப இந்த வேலைக்காக தான் நான் இங்க இருக்கனும் இல்ல த்தை?” என்று கோபமான கல்பனா குரலில்,
“எல்லாம் தமிழ்ல தானே பேசுறீங்க? நீங்க லூசா இல்ல நான் லூசா? அவ கல்யாண வீடுன்றா.. நீங்க பத்திரிக்கை பேருன்றிங்க.. டேய்! என்ன டா நடக்குது இங்க?” என்ற அகிலன் கேள்விக்கு ரகு சிரிக்க,
“நீ ஏன் டா ஒரு மார்க்கமா சிரிக்குற?” என்று வேறு கேட்டு வைத்தான் அகிலன்.
error: Content is protected !!