Skip to content
Post Views: 2,617
அத்தியாயம் 27
“ஹரே பாப்ரே .. மீ, கண்டிப்பா அத்தை வீட்ல இருக்கவே முடியாது”
Advertisement
“ஒழுங்கா வேற ஏற்பாடு பண்ணுங்க இல்லனா நாங்க பாட்டுக்கு டெல்லி கிளம்பி போயிட்டே இருப்போம்..”
ஹர்ஷும் வர்ஷும் ஹிந்தியில் ராஜியை மெல்லிய குரலில் வெளுத்து வாங்கி கொண்டிருந்தார்கள்.
Advertisement
Advertisement
இவர்கள் மூவரும் காரில் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தார்கள்.
இவர்களின் இந்த கடுப்புக்கு காரணம், “இப்படியா கொஞ்சம் கூட நளினம் இல்லாம பொண்ணுங்களை வளர்த்து வைப்பீங்க அண்ணி” என்று இதுவரை பத்துமுறை கேட்டுவிட்டார் சீதாலட்சமி.
Advertisement
“இதுவே என்கிட்ட வளர்ந்திருந்தா தேவதை மாதிரி வளர்த்திருப்பேன்” என்று இடையிடையே வேறு கூறி கொண்டிருந்தார்”
“நீங்க யோசிச்சிருக்கணும், கிக் பாக்ஸிங் எல்லாம் ஒரு அளவுக்கு தான் ஓகே.. இப்படி கை எல்லாம் ஆம்பளைங்க மாதிரி முறுக்கேறி இருக்கிறத பார்க்க ஒரு மாதிரி இருக்கு அண்ணி” என்று புலம்பல் வேறு.
விட்டால் காரில் இருந்து குதித்தே விடலாம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர் இருவரும்.
அவரது கணவர், “ஏன் சீதா இப்படி பேசுற? பிள்ளைங்க ரொம்ப வருஷம் கழிச்சு வர்றாங்க.. அவங்க மனசு சங்கடப்படற மாதிரி பேசலாமா?” என்று இடையில் கூறினார் தான்.
“சரிதாங்க, அதான் நானும் சொல்ல வரேன். நம்ம ஊருக்கு எல்லாம் வரதே இல்லை, நம்மகிட்ட எல்லாம் அடிக்கடி வந்து போய்ட்டு இருந்தாங்கன்னா நம்ம கலாச்சாரம் எல்லாம் தெரிஞ்சிருக்கும், பாவடை தாவணி, புடவை, பரதநாட்டியம் இப்படி பார்த்து வளர்ந்திருந்தா அவங்களே ஆசையா நம்மூரு பொண்ணுங்க மாதிரி இருந்திருப்பாங்க இல்லையா?” என்று அதற்கும் ஒரு பதில்.
“சீதா இப்படியே பேசிட்டு இருந்தீன்னா, ஏன்டா வந்தோம்ன்னு நினைக்க போறாங்க” என்று அவர் கூறிய பிறகே கொஞ்சம் அமைதியாக வந்தார் சீதாலட்சுமி.
அதன் பிறகே ராஜியிடம் அத்தை வீட்டில் இருக்க முடியாது என்று இவர்கள் போர் கொடி பிடித்தார்கள்.
சீதாலட்சமி மிகவும் நல்ல குணம் உடையவர் தான். ஆனாலும், அண்ணன் பெண்கள் இப்படி முரட்டுத் தனமாக வளர்ந்து நிற்பது அவருக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது.
ராஜி அமைதியாகவே வந்தார். அவருக்கும் தன் பெண்களை இப்படி கூறுகிறார் என்ற வருத்தம் இருந்ததுதான். அதற்கு பின் சீதாவின் அன்பு தான் காரணம் என்பதை உணர்ந்து அமைதி காத்தார்.
வீட்டிற்கு வந்ததும் இவர்களுக்கு ஒரு அறையை காட்டினார். “நீங்க அந்த ரூம்ல ரெப்பிரேஷ் பண்ணிக்கோங்க அண்ணி. சீக்கிரம் வாங்க நான் சாப்பிட ரெடி பண்றேன்” என்று சீதாலட்சமி பரப்பரப்பானார்.
இவர்கள் மூவரும் ரூமினுள் சென்று அமர்ந்தார்கள். அங்கே எல்லா பக்கமும் ஹர்ஷ் வர்ஷ் இருவரது சின்ன வயது புகைப்படங்கள் தான் நிறைந்திருந்தது. இருவரும் கொழுக் மொழுக் என்று பொம்மைகள் போல இருந்தார்கள்.
“ஏன் மீ நம்ம வீட்ல கூட எங்க போட்டோஸ் இவ்வளவு இருக்காதுல்ல”
“ஆமா ஹர்ஷ்.. நீங்க ஸ்கூல் போற வரைக்கும் அடிக்கடி இங்கே வருவோம். அப்ப எல்லாம் சீதா உங்க ரெண்டு பேருக்கும் வித விதமா டிரஸ் பண்ணி போட்டோ எடுப்பா.. அது தான் இது எல்லாம்” என்றார்.
“மீ, ப்ளீஸ் எப்படி இருந்தாலும் எங்களை வேற எங்கயாச்சும் தங்க ஏற்பாடு பண்ணுங்க”
“இரு வர்ஷ்.. இப்ப தானே வந்திருக்கோம், மெதுவா பேசுவோம்”
அரை மணி நேரம் கழித்து சீதாலட்சமி வந்து கதவை தட்டினார்.
மூவரும் குளித்து தயாராக இருந்தனர்.
“பாட்டிய பார்க்காமலே உள்ளே போய்ட்டீங்களே, வாங்க” என்று பாட்டி இருக்கும் அறைக்கு அழைத்து சென்றார்.
பாட்டி என்றால், சீதாலட்சுமி விக்ராந்தின் தாயார்.
சில வருடங்களாக அவரால் அதிகம் நடக்க முடிவதில்லை. அதற்கு முன் வருடத்திற்கு ஒரு முறை டெல்லி சென்று வருவார். மற்றபடி தாத்தாவின் மறைவுக்குப்பின் சீதாலட்சமி வீட்டில் தான் இருக்கிறார்.
“நல்லா இருக்கீங்களா கண்ணுங்களா?” என்றார் பேத்திகளை பார்த்ததும் ஆசையாக.
பின் ராஜியை பார்த்து கண்கலங்கினார்.
“எப்படி இருக்கீங்க அத்தை?” என்று கேட்கும் பொழுதே ராஜியின் குரலும் கரகரத்து.
இருவருக்கும் இடையில் ஒரு அழகான நட்பு இருந்தது. எந்த உறவிற்கும் ஒரு ஆரோக்கியமான இடைவெளி இருந்தால், அந்த உறவு அழகானதாக இருக்கும், அது மாமியார் மருமகள் உறவானாலும் என்பது அவரது கருத்து.
“நல்லா இருக்கேன் ராஜி, என்ன இந்த வெரிகோஸ் பிரச்சனையால் அதிகம் நிக்க முடியறது இல்லை. டாக்டர் நடக்க சொல்றாங்க தான்..ஆனா முடியறது இல்ல. சாப்பிடவும் பாத்ரூம் போகவும் மட்டும் நடக்கிறேன்”
“அப்படி சொல்லக்கூடாது பாட்டி, நடக்கறது ரொம்ப அவசியம், கட்டாயம் நடக்கணும்” என்றாள் வர்ஷ்.
“நீங்க வந்துட்டீங்கள்ல இனிமே உங்க பாட்டியை நீங்களே நடக்க வைங்க” என்றார் சீதா இடையே.
சகோதரிகள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். பாட்டி அதை கவனித்தார். மருமகளின் முகமும் வாட்டமாக இருப்பதை அப்பொழுது தான் கவனித்தார்.
“சரி சரி சாப்பிட்டீங்களா?” என்றார்.
“இதோ அம்மா, எல்லாம் ரெடியா இருக்கு, நீங்களும் வாங்க எல்லாரும் சேர்ந்தே சாப்பிடுவோம்” என்று அனைவரையும் அழைத்து சென்றார் சீதா.
விருந்தை தடபுடலாக செய்திருந்தார்.
அண்ணியும் பிள்ளைகளும் நீண்ட நெடிய ஆண்டுகளுக்கு பிறகு வருகிறார்கள் என்று பார்த்து பார்த்து தான் எல்லாம் செய்தார்.
அத்தையின் படபட பேச்சும் அவரது அன்பின் வெளிப்பாடு என்று புரிந்தது பெண்களுக்கு.
உணவிற்கு பிறகு, மெதுவாக ஹாஸ்டலில் தங்குவதற்கான பேச்சை தொடங்கினாள் ஹர்ஷித்தா. அவளுக்கு பொறுமை கொஞ்சம் கம்மி.
அதிர்ச்சியாக அவர்களை பார்த்தார் சீதாலட்சுமி. அவர் கண்கள் எல்லாம் கலங்கி விட்டது.
ராஜி அவளை முறைக்கவும், மீ என்று பாவமாக பார்த்தாள்.
“இன்னிக்கு தானே வந்திருக்கீங்க, மெதுவா பேசலாம். இப்ப கொஞ்ச நேரம் ஓய்வா இருங்க” என்று அப்பொழுதைக்கு பாட்டி விஷயத்தை தள்ளி வைத்தார்.
பாட்டி அவர் அறைக்கு சென்றபின், ஹர்ஷும் வர்ஷும் அனைத்தையும் ஒதுங்கவைக்க உதவினார்கள். மிஞ்சிய உணவுகளை வேற பாத்திரங்களுக்கு மாற்றி, டேபிள் சுத்தம் செய்து, பின் பாத்திரங்களையும் அழகாக கழுவி எடுத்து வைத்தனர்.
உதவிக்கு வந்த சீதாவையும் மறுத்துவிட்டு இருவருமே எல்லாம் செய்தனர்.
எந்த பந்தாவும் இல்லாமல், இலகுவாகவே வேலைகளை பார்த்தனர்.
இப்பொழுது சீதாலட்சமிக்கு தான் அதிகம் பேசிவிட்டோமோ என்று குற்ற உணர்வாகிவிட்டது.
“விடு சீதா”, என்று ராஜி தான் அவரை சமாதானாம் செய்ய வேண்டியதாகி விட்டது.
ராஜியும் சீதாவும் நீளிருக்கையில் அமர்ந்து பேசத்தொடங்கினர். இவர்கள் பாட்டியின் அறைக்கு சென்றனர்.
“என்ன சொன்னா உங்க அத்தை? அப்படியே உங்க தாத்தா மாதிரி, நல்ல மனசு இருந்து என்ன புண்ணியம், வாய் சரியில்லையே” என்று தான் தொடங்கினார் பாட்டி.
இவர்களும் மறைக்காமல் சீதாவின் பேச்சை கூறினார்கள்.
“இந்த கமெண்ட்ஸ் உங்களுக்கு புதுசு இல்லையே? ஏற்கனவே நிறைய பேர் சொல்றது தானே, அதை எப்பொழுதுமே நீங்க பெருசா எடுத்துக்க மாட்டீங்களே?”
“மத்தவங்க சொல்றதும் அத்தை சொல்றதும் ஒன்னா பாட்டி?”
“கண்டிப்பா இல்லதான். மத்தவங்க சொல்றது உங்களை கேலி செய்ய, உங்க அத்தை சொல்றது உங்க மேல உள்ள அக்கரையில, ஒரு உரிமையில”
“ஆனாலும்…”
“அப்படி பேசுனது கண்டிப்பா தப்பு தான்..“
“போங்க பாட்டி… நீங்க எங்களை சமாதானம் செய்ய பார்க்குறீங்க”
“விடுங்க டா.. நம்ம அத்தை தானே”
“எங்களுக்கும் அத்தை மேலே கோபமில்லை பாட்டி, ஆனா இப்படி பேசிட்டே இருந்தா எங்களால இயல்பா இருக்க முடியாது. எங்க வாழ்கை முறை கொஞ்சம் வேற தானே, எங்க ப்ராக்டிஸ்க்கு தடையா இருந்தா கஷ்டம். அதான் ஹாஸ்டல் போலாம்ன்னு யோசிக்கிறோம்”
“நான் அவகிட்ட பேசுறேன்.. இனி இப்படி கண்டிப்பா நடக்காது. நீங்க இப்ப இங்க ஏன் வந்திருக்கீங்கன்னு உங்க மீ சொல்லலையா?”
“வேலைக்கு தான்”
“டெல்லில இல்லாத வேலையா?”
“நினைச்சேன் பாட்டி, இதுல வேற என்னமோ விஷயம் இருக்குன்னு, அதையும் நீங்களே சொல்லுங்க பாட்டி. நல்லா ஃபுல்லா சாப்பிட்டது யோசிக்க முடியலை”
பாட்டியின் மெத்தையின் கீழே தரையில் இருவரும் படுத்துக்கொண்டனர்.
“உங்க அத்தைக்கு குழந்தை இல்லைனு உங்களுக்கு தெரியும் தானே.
ஒரு தடவ உங்க அம்மா இங்க வந்திருந்தப்ப, அவ தான் இவளை ஹாஸ்ப்பிட்டல்கு கூட்டிட்டு போனா.. அப்ப உங்க ரெண்டு பேருக்கும் ரெண்டு வயசு.. சீதாக்கு குழந்தை பிறக்கிற வாய்ப்பு இல்லைனு சொல்லிட்டாங்க.
சீதா அங்கேயே ஒரே அழுகை..
அப்ப அங்க இருந்த டாக்டர், எதுக்கு அழறீங்க. இதோ உங்க அண்ணனுக்கு தான் முத்து முத்தா ரெண்டு குழந்தைங்க இருக்காங்ளே. அதுல ஒரு குழந்தையை நீங்க எடுத்துக்கோங்கன்னு சொல்லி இருக்காங்க.
உடனே உங்க அத்தையும் அப்ப இருந்த மனநிலையில, எனக்கு தர்றீங்களா அண்ணின்னு கேட்டுட்டா..
உங்க அம்மா பதில் சொல்லாமலே அத்தையை கூட்டிட்டு வீட்டுக்கு வந்துட்டா.
விஷயத்தை கேள்வி பட்டதும் எனக்கும் ஒரே வருத்தம். ஆசை ஆசையா வளர்த்த பொண்ணு, மனசொடிஞ்சு நிக்குறத பார்க்க முடியல. எங்கே நானும் உங்களை கொடுக்க சொல்லிடுவேனோன்னு பயந்துட்டு, உங்க அம்மா உங்களை கூட்டிட்டு சொல்லாமலே கிளம்பி போய்ட்டா”
இது பெண்களுக்கு புது தகவல். இதுவரை ராஜி இவர்களிடம் கூறியது இல்லை.
“உங்களுக்கு அம்மா மேலே கோவமா? எங்க பப்பா என்ன சொன்னாங்க?”
“நான் கண்டிப்பா குழந்தையை கேட்டிருக்க மாட்டேன். இது பெத்தவள் மட்டுமே முடிவு செய்யுற விஷயம். சீதாவும் ஒரு உணர்ச்சி வேகத்துல கேட்டுட்டாளே தவிர உங்களை உங்க அம்மாகிட்ட இருந்து பிரிக்கிற எண்ணம் எல்லாம் அவளுக்கு இல்லை”
“உங்க அப்பா ராஜிக்கு துணையா நின்னுட்டான், அவனுக்கு சீதா பத்தி கேட்டு மனசுக்கு வருத்தம் தான். விதிக்கு யார் விடை சொல்ல முடியும்?”
“அப்புறம் தர்ஷன் பிறக்கிற வரைக்கும் பேச்சு வார்த்தையே இல்லை. தர்ஷன் பிறந்தபுறம் அவனை பார்க்க நாங்க தான் டெல்லி வந்தோம். அப்புறமும் நாங்க தான் முடிஞ்சப்ப வந்துகிட்டு இருந்தோம்”
“அதுக்கப்புறம் உங்க அம்மா உங்களை கூட்டிட்டு இங்க இப்ப தான் வரா. உங்க அம்மம்மா வீட்டுக்கு வந்தாலும் இங்கே வரமாட்டா“
அவர்கள் இருப்பது காஞ்சிபுரத்தில்.
“ஹ்ம்ம் …”
“இப்ப உங்க அத்தைக்கு கர்ப்பப்பையில் கட்டி, அதை எடுக்கனும்னு சொல்லி இருக்காங்க. அது ஒரு விதத்துல அவளுக்கு டிப்ரெஷ்சன் ஏற்படுத்தி இருக்கு. அதனால் பீபி அதிகமா இருக்கு. அது குறைஞ்சப்புறம் தான் சர்ஜெரி பண்ண முடியும். அவங்க சந்தோஷமா இருக்கனும்னு டாக்டர் சொல்லவும், நான் தான் உங்க அம்மாவுக்கு போன் பண்ணி கொஞ்ச நாள் உங்க ரெண்டு பேரையும் இங்க அனுப்ப சொன்னேன்”
“இப்ப என்ன சொல்றீங்க?”
“மாமியாரும் மருமகளும் நிறைய பிளாஷ் பேக் சொல்றீங்க.. கடைசியில நீங்க நினைச்சதை தான் நடத்துவீங்க.. ஆனா எங்க மீ பிளாஷ் பேக்குக்கு இது பெட்டர்”
“அப்படி இல்ல கண்ணுங்களா..“
“நீங்க சொன்னதை கேட்டப்புறம் வேற என்ன பாட்டி செய்ய முடியும். நாங்க இங்கேயே இருக்கிறோம்”
சீதா லட்சமியின் கணவர் ஸ்ரீனிவாசன் தான் இவர்கள் வந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டார். சீதாவின் அன்பு தொல்லையில் இருந்து இவர்களை காப்பாற்றிவிட்டுக்கொண்டிருந்தார்.
“இன்னும் ஸ்கூல்ல ஜாயின் பண்ண மூனு நாள் இருக்கே? எங்கயாச்சும் சுத்தி பார்க்க போலாமா?” என்றார் விளையாடிக்கொண்டே.
அடுத்தநாள் பீச்சிற்கு சென்றுவிட்டு அப்படியே கருணா வீட்டிற்கும் சென்று வந்தார்கள். அங்கே தமி, சுமி, பாட்டி இவர்களுடன் டெல்லி வருவதை பற்றி பேசி உறுதி செய்துவிட்டு கிளம்பினார்கள்.
பாட்டியின் அறிவுரையா அல்லது ஸ்ரீனிவாசனின் கெடுபிடியா தெரியவில்லை, அதற்கு பிறகு சீதாலட்சுமி மறந்தும் இவர்களின் தோற்றத்தை பற்றி ஒரு வார்ததை கூறவில்லை.
————————-
இரவு அனைவரும் சேர்ந்து உணவு உண்டுகொண்டிருந்தார்கள். ராஜி சுட சுட புல்கா போட்டுக்கொண்டிருந்தார்.
“மீ, நாளைக்கு காலையில நாங்க ஜாகிங் ஆரம்பிக்கணும்”
“ஜாக்கிங்கா? எத்தனை மணிக்கு?” என்றார் சீதா ஆர்வமாக.
“காலையில ஒரு நாலரைக்கு ஆரம்பிச்சா சரியா இருக்கும் அத்தை”
“ஏங்க, நீங்களும் காலையில எழுந்து பசங்க கூட போயிட்டு வாங்க” என்றார் ஸ்ரீனிவாசனை பார்த்து.
“எதுக்கு சீதா அண்ணாவை தொந்தரவு செய்யணும்? அது எல்லாம் இவங்க போயிட்டு வந்துடுவாங்க” என்றார் ராஜி.
“அது எல்லாம் வேணாம் அண்ணி, இது அவங்களுக்கு புது ஊர் வேற? பொம்பளை பிள்ளைகளை தனியா எப்படி அனுப்புறது, அது எல்லாம் அவர் போவார்”
“வேணாம் சீதா, அண்ணவால முடியாது”
“ஏன் அண்ணி உங்க வீட்டுக்காரர் மாதிரி இவரு ஆர்மில இல்லாம இருக்கலாம், ஆனாலும் என் வீட்டுக்காரரும் செம பிட் தெரியுமா?” என்றார் ரோஷமாக.
“அடப்பாவி..” என்று மனைவியை பார்த்தார் அவர்.
“அப்புறம் உங்க இஷ்டம்” என்று விட்டு விட்டார் ராஜி.
ஜாகிங் தானே என்று ஸ்ரீனிவாசனும் பெரிதாக அலட்டி கொள்ளவில்லை.
காலை நாலு மணிக்கு அலாரம் வைத்து எழுந்து தயார் ஆகி வந்தார்.
பெண்கள் இருவரும் தயாராகி வார்ம் அப் எக்செர்ஸைஸ் செய்து கொண்டிருந்தார்கள்.
இங்கே பக்கத்துல பெரிய கிரவுண்ட் இருக்குல்ல மாமா அங்கேயே போய்டலாம் என்று கூறி இருவரும் தெருவில் இறங்கி ஓடத் தொடங்கினார்கள்.
ஸ்ரீநிவாசன் பின்னே இருந்து சீதா, “என்ன நிக்குறீங்க, சீக்கிரம் போங்க, நான் சொன்னது நியாபகம் இருக்குல்ல? அவங்க பின்னாடியே போகணும், தனியா விடாதீங்க” என்று பிடித்து ஒரு தள்ளு தள்ளினார்.
அவரும் பாவமாக ஓடத்தொடங்கினார். இவர்கள் வீட்டில் இருந்து அந்த கிரவுண்டு மூன்று கிலோமீட்டர். இது போய் பக்கம்ன்னு சொல்றாங்களே, புது இடம் இல்ல தெரியமா சொல்லி இருப்பாங்க என்று நினைத்துக்கொண்டார்.
கிரௌண்டை பார்த்துட்டு திரும்பிடுவாங்க என்று இவர் எதிர் பார்த்திருக்க இருவரும் உள்ளே சென்று ஓடத் தொடங்கினார்கள்.
சீதா வேற பின்னாடியே ஓட சொல்லி இருக்காளே, என்று அவரும் பின்னாடியே ஓடினார். ஒரு ரவுண்ட் ஐந்து கிலோமீட்டர். பெண்கள் அசால்ட்டாக மூன்று ரவுண்ட் ஓடி முடித்துவிட்டு திரும்பி பார்த்தனர்.
ஸ்ரீனிவாசன் மூச்சிரைக்க மயக்கமாகும் நிலையில் சற்று தூரத்தில் அமர்ந்திருந்தார்.
“என்ன மாமா? என்னாச்சு?” என்று பதறி இருவரும் அருகில் சென்றனர்.
“சொன்னா கேட்டா தானே, ப்ர்ஸ்ட் ரவுண்டு அப்பவே சொன்னேன் இல்ல, உட்காருங்க நாங்க முடிச்சிட்டு வறோம்னு” என்று கேட்டாள் வர்ஷித்தா.
“நான் உட்கார்ந்தேன் வர்ஷ், அப்ப சரியா உங்க அத்தை போன் பண்ணி இருந்தா, நீங்க பிட்டுன்னு ப்ரூவ் பண்ணியே ஆகணும், அதனால் கஷ்டப்பட்டாவது ஒடுங்கன்னு சொன்னா”
“லூசா மாமா நீங்க?அத்தை லூசா நீங்க லூசான்னு தெரியலை” என்றாள் ஹர்ஷ் இப்பொழுது கடுப்பாக.
அவரால் பதில் கூட சொல்ல முடியவில்லை.
பின் இருவரும் சேர்ந்து கை தாங்களாக அவரை அழைத்துக்கொண்டு ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தனர்.
வாசலில் கையில் க்ளுக்கோஸோடு காத்துக்கொண்டிருந்தார் ராஜி.
————————–
error: Content is protected !!