43 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:2,236
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 43
.
“மாஸ்டர்ஸ் எங்க பண்ண போற? யோசிச்சுட்டியா?” எனக் கேட்ட தோழியை வேற்று கிரகவாசி போல் பார்த்தாள் தாரா.
Advertisement
தண்ணீரைத் தொண்டைக்குள் இறக்கி, “என்ன டி பார்க்கிற?” எனக் கேட்டவளுக்கும் தாரா அளவிற்கு வியர்த்து வழிந்தது.
Advertisement
வழிந்தோடும் வியர்வையைத் தன் பூந்துவாலை கொண்டு துடைத்துக் கொண்டே, “என்ன சரக்கு அடிச்சன்னு பார்க்கிறேன்” என்றாள் சிரியாது.
Advertisement
“அடிங்”
Advertisement
“பின்ன… டிகிரி முடிச்சா தான் என் ரகு என்னைக் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிட்டார். அவர் மட்டும் ம்ம்ம்-ன்னு சொல்லி இருந்தா, இந்நேரம் அவர கட்டிக்கிட்டு எங்க குட்டி பாப்பாக்கு அம்மாவா ப்ரோமோஷன் வாங்கியிருப்பேன்.
என் கிரகம் சரி இல்ல… அதுதான் மேல் படிப்ப பத்தி எல்லாம் என்ட்ட கூச்சமே இல்லாம பேசிட்டு இருக்க நீ” என்றவளுக்கு, படிப்பு முடிய இன்னும் ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டுமா என்றிருந்தது. தினமும் அவனைக் காணொளியில் பார்ப்பதும் கதைப்பதும் போதவில்லையே.
இதோ இதோ என இரண்டரை வருடங்கள் கடந்துவிட்டன. இன்னும் ஆறே மாதங்கள் ஓட்டிவிட்டால் போதும், ‘நானும் பட்ட படிப்பாளி தான்’ எனக் காலரை ஏற்றிவிட்டுக் கொள்ளலாம்.
திருமணப் பத்திரிக்கையில் அவள் பெயரின் பின்னால் டிகிரியை பறைசாற்றிக் கொள்ளலாம். அவள் படிக்கும் அழகிற்கு வேறு எதற்கும் அந்த பட்டம் உதவும் என்ற நம்பிக்கை அவளுக்கில்லை. கூடைப்பந்தில் இருக்கும் ஆர்வமும் திறமையும் படிப்பில் இல்லை என்பதால் சொல்லிக் கொள்ளும்படியான மதிப்பெண் எதிலும் இல்லை என்பது ஊரறிந்த உண்மை.
“கேள்ஸ்… பிரேக் ஓவர்” என்ற கோச்சின் சத்தம் கேட்டு கூடைப்பந்து கோர்ட்டினுள் நுழைந்தனர் பெண்கள். அடுத்த இரண்டு மணி நேரம் நீடித்த பயிற்சி பெண்களைச் சக்கையாகப் பிழிந்திருந்தது. புத்தங்கள் என்றால் இன்றுமே கொஞ்சம் ஒவ்வாமை தான் பெண்ணிற்கு.
அதற்குப் பதிலாக வேறு தாலந்துகளைக் கொடுக்கலாம் என எண்ணினான் போலும் படைத்தவன், விளையாட்டு திறனையும் இசையையும் இறைவன் அள்ளி கொடுத்திருக்கிறான்.
களைப்போடு வீட்டினுள் நுழைந்த மகளை பார்த்த சந்திரிகா, “கையோட குளிச்சுட்டு வந்திடு தாரா.” எனவும், “மா…” என அழைத்துக் கொண்டே நீள்விருக்கையில் தொப்பென அமர்ந்தவளை,
“பார்க்கவே குப்பக் குட்டி மாதிரி இருக்க. மணி பத்தாச்சு. சீக்கிரம் குளிச்சுட்டு வந்து சாப்பிடு” எனக் கிளப்பிவிட்டார்.
அலுப்பு தீர குளித்துவந்தவளுக்குப் பசியில் வயிறு கபகப என காந்தியது. முன் இருந்த காலை உணவைப் பார்த்தவளின் மூக்கு சொர்க்க லோகம் சென்று வந்தது. “என்ன மா… காலையிலேயே இட்டிலிக்கு சிக்கன் கிரேவி செய்திருக்கீங்க?” எனக் கேட்டவள், பதிலை எல்லாம் எதிர்பார்க்கவில்லை.
வயிற்றிற்கும் தொண்டைக்கும் இடையே உருவமில்லா உருளை அதிவேகமாகப் பயணித்தது.
அவள் எதிர்பார்க்கவில்லை என்றாலும் சந்திரிகா பதில் உரைத்தார். பதிலைக் கேட்டவளின் கவனம் இப்பொழுது இட்டிலியிலும் இல்லை, கோழிக் குழம்பிலும் இல்லை. அவள் மூக்கும் நாக்கும் கடத்திய ருசியை விடக் காது கடத்திய செய்தி அதிகம் ருசித்தது.
“ரகு வந்திருக்கான். அவனுக்காக செஞ்சது.” என்ற வாக்கியத்தில் ‘ரகு’ என்ற பெயரிலேயே வயிறும் மனதும் நிறைந்துவிட்டதே. கண்களின் ஏக்கத்தை எப்படித் தீர்ப்பதாம்?
அவசர அவசரமாக இட்டிலியை மகள் விழுங்குவதைப் பார்த்தவர், “பொறுமையா சாப்பிடு. ரகுவுக்கு நாலு நாளா ஒரே கழுத்து வலி. வீட்டுக்கு வந்திருக்கான். அப்பா அவன கூட்டிட்டி டாக்டர் கிட்ட போயிருக்காங்க.” என்றார். விடயத்தைக் கேட்டவளுக்கு மனம் வாடிப்போனது.
சில வாரங்களாகவே இப்படித் தான் தலை, அவ்வபோது கழுத்து என ஏதாவது வலி வந்துவிடுகிறது. அப்படி வந்தால், அவனை ஒருவழி ஆக்கிவிட்டே செல்கிறது. “நல்ல டாக்டரா பாரு லகு” என இவள் கூறியதை எங்கே அவன் கேட்டான்?
இம்முறை முடியவில்லை போலும்… ‘கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுவோம்’ என நினைத்தவன், விடுப்பெடுத்து வந்துவிட்டான். அவன் நிலையைப் பார்க்கும் பெரியவர்கள் சும்மா இருப்பார்களா என்ன? அவன் ஐயா அவனை இழுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார் மருத்துவரைக் காண.
மதியமானது வீட்டிற்கு வந்து சேர. ‘ஸ்ட்ரெஸ் பெயின் மாதிரி தான் இருக்கு. ரிலாக்ஸ் பண்ண மாத்திரை தரேன். கொஞ்சம் ஸ்ட்ராங்கான பெயின் கில்லர் மெடிகேஷன். கண்டிப்பா கேக்கும். நீங்களும் ரெஸ்ட் எடுக்கணும்’ என இவனுக்குத் தோன்றியதையே அவரும் கூறி அனுப்பிவிட்டார்.
வீட்டிற்கு வந்தவனுக்குப் படுத்தால் போதும் என்றிருக்க, வந்தவன் உண்டு, மாத்திரையை விழுங்கி மெத்தையில் விழுந்தான். மாலையானது கண்விழிக்க. வீரியம் கூடிய மாத்திரையின் உபயத்தால், உற்சாகத்தோடே எழுந்தான் ரகு.
குளித்து உடை மாற்றி பளீர் என வந்தவன் கண்ணில் ஒருவரும் படவில்லை. வீடு அமைதியாக இருக்க, பேச்சு சத்தம் வந்த திசையை நோக்கிச் சென்றான். மலர் வாசல் தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருக்க, பாட்டி அவளோடு பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
“எழுந்துட்டியா கண்ணு? கழுத்து வலி எப்படி இருக்கு? காபி குடிக்கிறியா கண்ணு?” எனக் கேட்டவருக்குப் பதில் கொடுக்காது, முழு அலங்காரத்தோடு தன்னை விழுங்கிக் கொண்டே கடந்தவளைப் பார்வையால் குடித்திறக்கினான்.
கண்கள் நாலும் மோதிக் கொண்டன. ‘எப்படி’ என அவள் கண்கள் கேள்வியைத் தொடுக்க… ‘ஆஹா’ என நெஞ்சம் தொட்டு பெருமூச்சு விட்டான். இரு ஜோடி இதழ்களும் புன்னகையை பூஞ்சாரலாய் தூவின.
பேரனின் பார்வை சென்ற திசையைப் பார்த்த பாட்டி, “இந்நேரம் தனியா எங்க கண்ணு கிளம்பிட்ட?” எனப் பேரனை விடுத்து பேத்தியைப் பிடித்துக் கொண்டார்.
“சொன்னேனே பாட்டி, என் காலேஜ் ஃப்ரெண்டு சுபிக்ஷா… அன்னைக்கு கடையில வச்சுக் காட்டினேனே ஒருத்திய… அவளுக்கு இன்னைக்கு என்கேஜ்மென்ட். அதுக்கு தான் போறேன்.” என்றவளின் பார்வை முழுவதும் ரகுவின் மீதே.
“பட்டும் நகையும் போட்டுட்டு தனியாவா போற?”
“அப்பா கூட்டிட்டு போறதா இருந்துது. ஏதோ வேலை இருக்காம். அதுதான், சுபி வீட்டுக்கு நேரமே போனா, அவ கூடவே மண்டபத்துக்கு போயிடுவேன். கிளம்பறப்ப, அப்பா நேரா மண்டபத்துக்கு வந்து கூப்பிட்டுகிறேன்னு சொல்லி இருக்காங்க” என்றவளை மேல் இருந்து கீழ் பார்த்தவர், “ரகு கண்ணு, அந்த பொண்ணுக்கு உங்க பள்ளிக்கூடம் பக்கம் தான் வீடு. கொஞ்சம் சிரமம் பார்க்காம இவள கொண்டு போய் விட்டுட்டு வா கண்ணு… ஊரு கெட்டு போயி கெடக்கு” என்ற பாட்டியிடம் தலை அசைத்தவன் வேக வேகமாக பைக் சாவியோடு வரவும், அவனின் ஐயா மதில் சுவர் கேட்டை திறந்து கொண்டு உள்ளே வரவும் சரியாக இருந்தது.
“நீ இன்னும் போகலியா? நல்லதா போச்சு… தனியா போக வேண்டாம். நானே கூட்டிட்டு போறேன். வண்டியில ஏறு” என மகளை அழைத்தார், தகப்பன்.
ஏக்கப் பார்வையோடு, ‘நீ வா டா’ அவள் பாவனை செய்ய, “நான் கூட்டிட்டு போறேன் ஐயா” என முன்வந்தவனை, “மாத்திர போட்டதுக்கு இப்போ வலி எப்படி இருக்கு?” எனக் கேட்டுத் தெரிந்து கொண்டவர், “கொஞ்சம் வலி சரியாகிடுச்சுனு எங்கயும் கிளம்பிடாத.
ஏதாவது வேணும்ன்னா என்ட்ட சொல்லு. எங்கயும் போக வேண்டாம். ஒழுங்கா படுத்து ரெஸ்ட் எடு.” எனத் தடுத்து, “வா மா” என மகளைக் கிளப்பினார்.
‘போ’ என அவன் வாயசைக்க, “வாரேன் பாட்டி. பை லகு. டாடா மலரக்கா” என மனமே இல்லாது கிளம்பினாள். பைக், வாயிலை தாண்டும் வரை பாட்டியோடு நின்று பார்த்தவனுக்கு, ஊருக்கு வந்து இவ்வளவு நேரம் ஆகியும் அவளோடு ஆசையாக நின்று ஒரு வார்த்தை பேச முடியவில்லையே என்ற ஏக்கம் எட்டிப்பார்த்தது.
“நல்ல காரியத்த காலையில செய்யாம, இது என்ன பழக்கமோ…” பாட்டி புலம்பிக் கொண்டே அடுக்களையை நோக்கிச் செல்ல, “அவங்க வசதிக்கு எப்பவாது வச்சுட்டு போறாங்க. எனக்கும் பேபிக்கும் நிச்சயத்த காலையில வச்சுக்கலாம் அம்மம்மா” எனப் பாட்டியின் தோள் அணைத்து நடந்தான்.
பேரனைத் திரும்பிப் பார்த்தவர் ஏதும் கூறாது, குடிநீரை அடுப்பில் வைத்தார். இவன் கூறிய ‘பேபியும் எனக்கும்’ என்பது ஒற்றை தொடரா? இல்லை, ‘பேபிக்கு நிச்சயம்’, ‘எனக்கு நிச்சயம்’ என இரு வேறு நிகழ்வா? பாட்டிக்கு புரியவில்லை. ஏனோ அப்படி ஒரு கேள்வியை அவரால் பேரனிடம் கேட்க முடியவில்லை. தெளிந்திருக்கும் குளத்தில் முதல் கல்லை தான் எறிந்ததாக இருக்க வேண்டாமே.
“சாயந்தரத்துக்கு மாத்திர ஏதாவது இருக்கா? இப்போ வலி ஏதும் இல்லியே?” எனப் பாட்டி கேள்விகளை அடுக்க, அமைதியாகப் பாட்டியின் ஒவ்வொரு கேள்விக்கும், கருப்பு காபியை அருந்திக் கொண்டே பதிலைக் கொடுத்தான் பேரன்.
நேரம், அசையாக்கரடியின் வேகத்தில் ஊர்ந்தது ரகுவிற்கு. வெளியே செல்லப் பாட்டி அனுமதிக்கவில்லை. சூரியனும் தன் வேலையை முடித்துக் கொண்டு சென்றுவிட்டான். இவன் மட்டுமே வீட்டையே சுற்றி வருகிறான். எவ்வளவு நேரம் தான் அறையில் பந்தும் கையுமாக அடைந்து கிடப்பது?
கைப்பேசியைப் பார்த்தான். அழைக்கலாமா… வேண்டாமா? கேள்விக்கான பதில் கிடைக்காது போக, கைப்பேசியை ஓரம் வைத்தான். மிண்டுமாகப் பந்து சுவரில் ‘நொட் நொட்’ எனத் தன் மண்டையை இடித்துக் கொண்டு, ஆன்டி ஹீரோவின் கைக்குள் தஞ்சம் அடையும் கதாநாயகியைப் போல் வேறு வழியில்லாது பந்து பாய்ந்து வந்து அவன் கைக்குள் ஒண்டியது.
மின்சாரம் தடைப்படக் குளிர்சாதனப் பெட்டி வேலை நிறுத்தம் செய்தது. இன்வர்ட்டரின் உதவியோடு கடனே எனத் தன் வேலையைத் தொடர்ந்த மின்விசிறியால் அவன் உஷ்ணத்தைத் தணிக்க முடியவில்லை. பந்தை ஓரம் போட்டவன் வெளியே சென்றான்.
பாட்டியும் தாத்தாவும் வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, இவன் மாடிக்குச் சென்றான். தெரு விளக்குகளுக்கும் என்ன பிரச்சனையோ, அதுவும் உயிரை விட்டிருக்க இருள் ஊரைக் கவ்வி இருந்தது. பார்வை பக்கத்து வீட்டு மாடியை நோக்கு பயணித்தது. தடைப்பட்டிருந்த மின்சாரம் தடையை உடைத்துக் கொண்டு பஞ்சள் நிறக் குண்டு பல்பை ஒளிரவிட்டது.
மஞ்சள் விளக்கின் கீழ் நின்றிருந்தவள் அவன் கண்களுக்குத் தேவதையாகவே தெரிந்தாள்.
‘புத்தம் புதியதோர் பொன்னு சிலைஒன்னு குளிக்குது மஞ்சளிலே’ என்ற வரியை அந்த நொடிக்காகவே பாடலாசிரியர் பழனி பாரதி எழுதி வைத்தாரோ? அவன் பார்வை பதிந்த இடத்தில் நின்றிருந்தவளின் பார்வையும் இந்தப் பக்கம் இருக்க, இரு முகங்களின் பிரகாசத்தின் முன் மஞ்சள் விளக்கு அதன் பொலிவை இழந்து தவித்தது.
‘ஒளியிலே தெரிவது தேவதையா?’ என அவன் பார்த்து நிற்க, ‘என்ன?’ என்பது போல் அல்லி மொட்டு விரல்களை விரித்தாள் மங்கை.
‘ஒண்ணும் இல்லை’ என்பது போல் தோள் குலுக்கினான் காளை.
‘எப்போ வந்த?’ இவன் வலக் கை, கைக் கடிகாரத்தைக் காட்டி கேட்டதற்கு, ‘அப்போவே’ என இவள் கை, காதை கடந்து பின்னுக்கு சென்றது.
தலை சாய்த்து கையை காதுக்குக் கீழ் கொண்டு சென்றவள், ‘தூங்கலியா?’ என்ற கேள்வியை வைத்தாள்.
‘ப்ச்’ என உதடு பிதுக்கியவன், ‘வா’ என அழைத்தான்.
‘இப்போவா?’ என ஆட்காட்டி விரலைக் கீழ் நோக்கிக் காட்டி விழித்தாள்.
மூன்று வயதுக் குழந்தை, ‘பீஷ்’ என விரல் குவித்து கண் சுருக்கி கெஞ்சுவது போல், இவன் ‘பிளீஸ் டி’ என விரல்கள் குவித்துக் கெஞ்சும் பார்வை பார்த்தால் அவளும் என்ன செய்வாள்?
‘நாளைக்கு…’ என முத்தம் ஒன்றைப் பறக்கவிட்டாள்.
டீ-ஷர்ட்டை முன்னுக்கு இழுத்து முத்தத்தை இயத்துக்குள் பத்திரப்படுத்தி, ‘வா பேபி’ என்ற பார்வையை அனுப்பி வைத்தான்.
இடையில் கை வைத்து சற்று நேரம் அவனைப் பார்த்தவள், ‘மாடியில தூங்கு… பத்து மணிக்கு வரேன்’ என்றாள் செய்கையில்.
தூங்குவதா? எப்படியாம்? தூக்கம் வராது புரண்டான் ரகு. மணி பத்தை கடந்து ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. தலையணைக்கும் தலைக்கும் இடையே கைகள் கொண்டு பாலம் போட்டுப் படுத்திருந்தவன் மனமெல்லாம் மெல்லிடையாளின் வாசம்.
நிலவுக்குத் தூக்கம் வந்துவிட்டது போலும், மேகத்தைத் தலை வரை இழுத்துப் போர்த்திக் கொண்டிருந்தது.
நிலவு இல்லை என்றால் என்ன? ஒளியை நான் தருகிறேன் என்றது கொடை வள்ளலாய், கடனே எனத் தன்னை சுற்றி மங்கிய மஞ்சள் ஒளியைக் கசிய விட்டுக் கொண்டிருந்த மஞ்சள் குண்டு பல்பு. மின்விளக்கின் மேல் எண்ணெய்யைப் பூசிய தாளைத் தாத்தா கட்டிவிட்டிருக்க, ஈசல்கள் அதில் ஒட்டிக் கொண்டு உயிரை மாய்த்திருந்தன.
“லகு” என மெல்லிய சத்தத்தோடே அவன் படுத்திருந்த கட்டிலில் அமர்ந்தாள் பெண். நகர்ந்து இடம் கொடுக்க, அவனை ஒட்டிப் படுத்துக் கொண்டாள். ரகுவின் மனம் அந்த நிமிடத்தைக் கனகச்சிதமாகத் தன் பொக்கிஷப் பேழைக்குள் பதுக்கி வைத்துக் கொண்டது.
கண்களில் தூக்கம் வருவேனா என்றிருக்க, புதிதாகப் பார்வை கிடைத்தவர்கள் போல் இருவரும் மாடியை, மரத்தை, வானை, நட்சத்திரங்களை என அனைத்திலும் பார்வையை ஓட்டினர்.
ஊர் ஊமையாகி இருந்தது. அதனால் பூச்சிகளின் ரீங்காரம் நன்றாகவே கேட்டது. அமைதியைக் காக்கத் தவறியவனாக, “போன செம்ல ஏன் இவ்வளவு கேவலமான மார்க் வாங்கியிருக்க?” என ஆரம்பித்தான்.
இரவு… தனிமை… கரத்தில் தலை சாய்த்துப் படுத்திருப்பது அவன் காதலி! இந்த நேரத்தில் என்ன கேள்வி இது ரகு? – இது நாம்.
“எல்லா சப்ஜக்ட்லயும் பாஸ் ஆனேனேன்னு சந்தோஷ படு” என்றவள், “பாவி… உன்னால மனசு உடைஞ்சு நான் ஜஸ்ட் பாஸ் வாங்கினா… நீ என் நினைப்பே இல்லாம சின்சியர் சிகாமணியா, தலை வலியோட வேலை பார்த்து ப்ரொமோஷன் வாங்கியிருக்க…” என அவள் அடிக்குக் கொண்டே போக,
“ஓ… அம்மையார போல நானும் அரை வேக்காடா இல்லன்னு பெரிய வருத்தம் போல… அடுப்புல சோறு வேக ஒருத்தராது சம்பாரிக்கணும் டி” என்றவன் வாய்விட்டுச் சிரித்தான்.
வசீகரிக்கும் அவன் சிரிப்பு அவளையும் தொற்றிக் கொண்டாலும், சின்ன சுணக்கம் எட்டிப்பார்க்கத் தான் செய்தது. முகம் பார்த்தவன்
புன்னகை மாறாது, “என்ன பேபி?” என்றான் தன் புஜத்தில் தலை சாய்த்திருந்தவளைப் பார்த்து.
“வைரமுத்து சொன்னது நிஜம் தான் இல்ல?” அவள் அலுத்துக்கொண்டாள்.
“அப்படி என்ன நிஜத்தைச் சொன்னார் அவர்?” ஆர்வத்தில் கேலி எக்கச்சக்கமாக கொட்டி கிடந்தது.
“ஆணின் தவிப்பு அடங்கிடும். பெண்ணின் தவிப்பு தொடர்ந்துவிடும்ன்னு” என்றாள் ராகத்தோடு.
“திருக்குறள் முதல் அதிகாரத்துல வர முதல் குறள் என்ன?” எனச் சம்பந்தம் இல்லாத கேள்வியை அவன் கேட்க, அவள் விழித்தாள்.
அவள் கேட்ட கேள்வியை எப்படி எல்லாம் டெவலப் செய்து… எங்கெல்லாம் பயணித்து… எப்படி எல்லாம் ரொமேன்ஸ் செய்திருக்கலாம். அவள் வைரமுத்துவை இழுத்தால் நீ வாலியை இழுக்க வேண்டாமா? ப்ச்… என்ன டா கேள்வி இது, ரகு?
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. இத எல்லாம் மண்டையில வச்சுக்காத… வைரமுத்து சொன்ன தத்துவத்த மட்டும் நினைவுல வச்சுக்கோ” எனத் தலையில் வலிக்காமல் கொட்டு ஒன்றை இடக்கையால் வைத்தான்.
“போடா” என அவள் சிணுங்கினாள். “நீ அடிக்கடி வரதே இல்ல. உன்ன பார்க்காம என் மனசு எப்படி இருந்துது தெரியுமா? பெரிய ஆயின்ட்மென்ட் ட்யூபால கூட என் மன புண்ண ஆத்த முடியல” எனப் புலம்பினாள். அவன் வாய் விட்டு சற்று சத்தமாகவே சிரித்தான்.
“என்ன சிரிப்பு மிஸ்டர்?”
“புண்ண ஆத்த என்ட்ட மெடிசின் இருக்கு” என்றவன், சட்டென தன் தலையைத் திருப்பி அவள் கன்னத்தில் முத்தம் வைத்தான்.
“புண்ணு கன்னத்துல இல்ல” என உதட்டைப் பிதுக்கிக் காட்டினாள்.
உதட்டையும், அவனை ஈர்க்கும் விழியையும் மாறி மாறி பார்த்தவன், விழி மீது இதழ் பதித்தான்.
உதட்டைப் பார்த்து பெருமூச்சு விட்டவனைப் பார்த்தவளுக்குச் சிரிப்பு வந்தது. “போடா பக்கி” என அவன் மார்பில் செல்லமாகத் தட்டியவளின் வாய் ஓய்வேனா எனக் கல்லூரி கதைகளையும், கூடைப்பந்து கதைகளையும் அடுக்கியது.
கதையின் நடுவே வாய் பொத்தி சத்தம் வராது சிரித்தனர். “போடா பக்கி” என அவன் தோளில் அடிகள் பல விழுந்தன. “என் செல்லம் டி” என பெண்ணின் கன்னம் கிள்ளி முத்தம் கொடுத்தான். “படின்னா கேட்டியா?” எனத் தலையில் கொட்டினான். அடுத்த சில மணி நேரம், விளக்கில் விழுந்த பனியாய் கரைந்து போனது.
“லாவண்யாவுக்குக் கொஞ்ச டைம் கொடுக்கலாம். ஏன் தான் அவங்க வீட்டுல இவ்வளவு அவசரம் காட்டுறாங்களோ?” அவன் அலுத்துக் கொண்டான்.
“நமக்கு எப்போ?” என அவள் அவன் பக்கமாகத் திரும்பினாள்.
அவனுக்கு ஆசை இருக்கத்தானே செய்கிறது. கை காலை வைத்துக் கொண்டு இருக்க முடியவில்லை தான்… ஆனாலும்… “படிச்சு முடி. லைப்ல எதுலயாது கால் பதி. உனக்குன்னு ஒரு இன்ட்ரெஸ்ட், பிடிப்பு வந்து அதுல உன் கெரியர பில்ட் பண்ணின பிறகு வீட்டுல கல்யாணம் பத்தி பேசலாம். இது தான் என் முடிவு” என்றான் கறாராய்.
குழைவாய், “லகு…” என்றவளின் கை அவன் மார்பில் ஊர்வலம் சென்று சிக்கு கோலமிட்டது. கட்டி வெல்லம் பாகாய் உருகி வழிந்தது. அவன் விழிகள் இரண்டும் ஆசையாக அவள் கண்கள், மூக்கு, உதடு என
ஊர்வலம் சென்றன. கரையை நோக்கிச் செல்லும் பெரும் அலைகளாக ஆரம்பித்த உணர்ச்சிகளை நெற்றியில் இதழ் பதித்து அடக்கியவன், கரகரத்த குரலைக் கனைத்து, “டிகிரி முடி… பேசுவோம்” என்றான், தன் கறாரைக் கைவிட்டவனாய்.
மார்பில் கிள்ளியவள், “அவ்வளவு தானா டா நீ” எனச் சிரிக்க, கைகள் இரண்டையும் தலைக்கடியில் கொடுத்துப் படுத்திருந்தவனைப் பார்த்து ‘நீ வேலைக்கே ஆகமாட்ட ரகு’ என நிலா மங்கையும் சிரித்தாள்.
“நீன்னு வந்துட்டா அவ்வளவு தான் டி நான்” என அவனும் சிரித்துக் கொண்டான்.
“நீ என் தங்க பையன் டா” எனக் கொஞ்சினாள்.
“என்ன… பேபி கொஞ்சுது?” அவன் புன்னகையோடே பார்த்தான்.
“கல்யாணத்துக்கு அப்பறம் ஒரு வருஷம் உன் ஆசைக்காக பெங்களூரு. ஒரு வருஷத்துல நானும் நல்லா ஊரச் சுத்தி பார்த்திடுவேன். அப்பறம் திருச்சிக்கு வந்துடணும்… சரியா?” எனப் பெண் குயில், ஆண் குயிலின் குரலில் கூவியது.
“ஆக… இன்னும் ரெண்டு வருஷத்துல ஒரு ஏரோஸ்பேஸ் எஞ்சினியரை தோட்டகாரனாக்குற முடிவுல இருக்க”
“ம்ம்ம்…” என்றாள்.
அவன் விருப்பமும் அதுதான் என்பதால், “ஓக்கே டன்” என்றான்.
‘ரெண்டு பேரும் என்னத்தத் தான் பேசுவாங்களோ?’ என்ற பார்வையோடு நிலா மகள் போர்வையைக் களைந்து அவர்களை வெகு நேரம் வேடிக்கை பார்த்தாள்.
எக்சாம் முடிஞ்சதும், கூர்க்ல டெஸ்டினேஷன் வெட்டிங். ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் பஸ் ஏற்பாடு பண்ணி போறோம் தெரியுமா? ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் வேலை அது இதுன்னு போகதுக்கு முன்ன நம்மாளும் கல்யாணம் பண்ணினா தானே இது மாதிரி எல்லாரும் வருவாங்க. ஜாலியா இருக்கும் லகு… பிளீஸ் பேசு டா.
நீ சொன்னா மறு பேச்சு இல்லாம அம்மாவும் அப்பா சரின்னு எல்லாத்துக்கும் தலை ஆட்டுவாங்க.”
“உனக்கு சிங்கிள்லா சுத்த ஆசையே இல்லியா டி?”
“அதவிட உன் கூட சுத்த தானே எனக்கு பிடிச்சிருக்கு. நான் உன்னச் சுத்தி வர… நீ என்னைச் சுத்தி வர…” என அவள் பேசிக் கொண்டே போக… “நம்மள சுத்த பத்தே மாசத்துல ஒண்ணு வந்து குதிக்கும்” என்றான் புன்னகை தவழ.
“உன்ன மாதிரி ரெண்டும், அப்பா மாதிரி ஒண்ணும், அம்மா மாதிரி ஒண்ணும். மொத்தம் நாலு வேணும்.” என்றவள் அவன் மார்பில் கன்னம் பதித்தாள். கண்கள் மூடினாள். இரண்டு குழந்தைகள் அவன் இருபுற தோள்களிலும், மற்ற இரண்டும் அவன் புஜங்களிலுமாக தொங்கி கொண்டிந்தனர்.
கனவுக்கு பிஜிம்-மாக இதயம், ‘லப் டப்’ என அவளுக்குப் பிடித்த கீதம் வாசித்தது. கண்கள் மெல்லத் தூக்கத்தைத் தழுவ ஆரம்பித்தன.
தலைக்கடியில் இருந்த வலக்கரம் அவள் தோளுக்கு இடம் மாறி மெல்ல அதை வருடி விட்டது. உச்சந்தலையில் இதழ் பதித்தவன், “கிளம்பு… வீட்டுல போய் தூங்கு” என்றான்.
“இன்னும் கொஞ்சம் நேரம் டா” என அவன் மார்பிலிருந்து தோளுக்கு இடம் மாறியவள், “பௌர்ணமி வர போகுது போல” என்றாள் நிலவைப் பார்த்து.
“தெரியல… பௌர்ணமி முடிஞ்சு ரெண்டு நாள் ஆகியிருக்கலாம்” என்றான்.
“என்னவோ போ… இத்தன வருஷத்துல ஒண்ணா ஒரு தரம் கூட பௌர்ணமிக்கு மலகோவிலுக்கு போகல” என அலுத்துக் கொண்டாள்.
“கல்யாணம் ஆனதும் குழந்தையோட போகலாம்” எனப் பதில் அளித்தான்.
“லகு…” என அவள் செல்லமாகச் சிணுங்கினாள்.
“போலாம் போலாம்… அது எங்க போயிட போகுது?” என்றான்.
நிலமும் மலையும் எங்குச் சென்றுவிடும்? அது அது அதன் இடத்தில் இருக்கத்தான் செய்கிறது. நாம் தான் இருப்பதில்லை.