Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீங்காத உறவே!...

நீங்காத உறவே!… அத்தியாயம் 25 1

நீங்காத உறவே!…
அத்தியாயம் 25
நிறைக்கு வாழ்க்கை மிக சந்தோஷமாக போனது. அவளைப் பொறுத்தவரை வாழ்க்கை ஏறு முகம் தான். இரண்டு வாரத்துக்கு ஒரு முறை பிரபாவும் வீட்டுக்கு வந்து விடுவான். நடந்து பழகிய பின் குட்டி ஜனார்த்தனை பிடிக்கவே முடியவில்லை. அழகான திட்டமிடலோடு நேர்த்தியாக வாழ்க்கையை கொண்டு சென்றாள் நிறை.
ரோகினி சென்ற பின் சினேகாக்கு நிறையோடு நல்ல நெருக்கம். தள்ளி நின்று பார்த்ததோடு நெருங்கி பழகும் போது நிறைய நல்ல குணங்கள் சினேகாவை கவர்ந்தது. பகல் நேரங்களில் இருவருமே ஒருவருக்கொருவர் நல்ல துணை. கல்யாண வீரணன் தம்பதிகளுக்கு பேரனை வைத்து நாட்கள் நகர்ந்தது.


Advertisement

சமீப நாட்களில் நிறைக்கு சினேகாவை குறித்து வேறுபாடு. எப்போதும் கலகலப்பாக இல்லாவிடினும் அமைதியான பெண் என்றெல்லாம் கிடையாது நல்ல விதமாக பழகுபவள். இப்போதும் நன்றாக பழகுகிறாள் தான். குட்டி ஜனாவோடு அதிக நேரம் செலவிடுவது போல் ஒரு எண்ணம். பிரபா ரெண்டு வாரத்திற்கு ஒருமுறைதான் வீட்டுக்கு வருவான். அதனால், நிறை பெரும்பாலும் கூடத்தில் தான் இருப்பாள். பெரியவர்களோடு தான் அவள் பேச்சு வார்த்தை எல்லாம்…
சினேகாவுக்கு என்ன வந்தது. வீரராகவன் வீட்டுக்கு வந்து போகும்போது இருவரும் தள்ளி இருப்பது போல் தோற்றம். ராகவன் வீட்டில் இருந்தாலும் வேலைக்கு சென்றாலும், சினேகா கீழேயே இருந்தாள். முன்பாக இருந்தால் நிறை அவர்களுக்குள் என்னவோ என்று கண்டு கொள்ள மாட்டாள். தற்போது சினேகா ஓடு நல்ல நட்பு இருக்க கேட்காமல் இருக்க முடியவில்லை. சினேகாவும் மிக சோர்வாக அமைதியாக தான் காணப்பட்டாள்.
“என்ன சினேகா ஒரு மாதிரி இருக்க? ஜனாவுக்கு தம்பியா? தங்கச்சியா?” என்றதும்,

Advertisement

“ஆமா, அது ஒன்னு தான் குறை. நீ வேற ஏன் நிறை?” என்றாள் சலிப்பாக…

Advertisement

“என்ன இப்படி சொல்ற? இப்ப இல்லாட்டியும் எப்பவாது அவனுக்கு ஒரு தம்பி, தங்கச்சி வரும் தானே”
“தெரியல” என்றதும், அவள் அருகில் வந்த நிறை.
“என்ன பிரச்சனை சினேகா?”

Advertisement

அவள் கண்கள் கலங்கியது, “எனக்கே தெரியல.. என்னவோ ஒரு பிடிப்பு வரல”
 குழந்தையின்மை வாட்டுகிறதோ என்று நினைத்தவள்,
“கால்ல போடுற செருப்பு கடிக்காத வரைக்கும் அதை நாம கவனிக்க மாட்டோம். அந்த மாதிரி வாழ்க்கையில சின்ன சின்ன சச்சரவுகள், சண்டைகள் வந்தாத்தான் அதை சீரமைக்க முடியும். நீ ரொம்ப மனச போட்டு குழப்பிக்காத?” என்றாள் நிறை.
“எனக்கு சரியாகும்ன்னு தோணலை நிறை. உங்க மாமாவோட எனக்கு நிறைய வேறுபாடு.. எந்த விஷயமும் ஒத்துப் போகல. நிறைய நான்தான் விட்டுக் கொடுத்து போற மாதிரி இருக்கு. அவர் கைக்குள்ள அடங்கி, அவர் சொல்றத கேட்டு ஒரு மாதிரி அழுத்தம். இப்போ எல்லாம் ஒரு சலிப்பு தான் வருது” என்றாள் பெருமூச்சு விட்டு…
அதை நிறையும் கவனித்தாள். முன்பென்றால் வீரராகவன் வீட்டுக்கு வந்தவுடன் அவன் பின்னோடு சென்றுவிடுவாள் சினேகா. அவனின் தேவையை கவனித்து அவனோடு சுற்றுவது மட்டுமே வேலை. தற்போது அவனாக அழைத்தால் மட்டுமே கணவன் அருகில் கூட செல்கிறாள்.
நிறை, சினேகா முகத்தையே பார்த்தாள். இருவரும் ஒரே வீட்டில் திருமணம் ஆகி வந்தாலும் வெவ்வேறு சூழ்நிலையில் வாழ்கிறார்கள். நிறை வீட்டில் பிரபா சம்பாதிக்க, அவள் தான் குடும்பத்தை நடத்துவது. ஆனால், சினேகா வீட்டில் எல்லாம் வீரராகவன் தான். அவன் சொல்வதை அவள் ஏற்று நடக்க வேண்டும். ஒரு காலத்தில் குடும்ப பொறுப்புகள் அற்ற, சுமையற்ற அந்த வாழ்க்கைக்கு நிறை ஏங்கி தவித்தாள். இன்றைக்கு அந்த வாழ்க்கை சினேகாவுக்கு மூச்சு முட்டுகிறது. மனித வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது.
“சரி இப்போ என்ன பண்ணப் போற? என்றாள் நிறை.
“என்ன பண்ண?” புரியாமல் முழித்தாள் சினேகா. வாழ்க்கையை நிற்காமல் ஓட வைக்கும் குழந்தைச் செல்வமும் கை வராமல் இருப்பது சினேகாவின் மந்தத்திற்கு ஒரு காரணம் என நினைத்தாள் நிறை.
“இப்படி யோசிச்சு மன அழுத்தத்தில் இருக்கிறது நல்லது இல்ல சினேகா. ராகவன் மாமா கிட்ட பேசி உன் வாழ்க்கையை சரி பண்ணு..” என்றதும்,
“அப்படியெல்லாம் பேசினா உடனே சரியாக கூடிய ஆள் கிடையாது”
“அப்ப விவாகரத்து எதுவும் யோசிச்சு வச்சிருக்கியா?” பளிச்சென்று நிறை கேட்டதும் திகைத்துப் போனாள் சினேகா. அப்படி ஒன்றை அவள் நினைத்துக் கூட பார்க்கவில்லையே…
“நான் ஒன்னு சொல்லவா சினேகா. இங்க ராகவன் மாமாவை விட மோசமான ஆண்கள் கூட எல்லாம் பெண்கள் அனுசரித்து வாழறாங்க. அதுக்காக உன்னோட மன கஷ்டத்தை நான் தப்புன்னு சொல்லல… அது சரி பண்ணிக்கோன்னு சொல்றேன்”
 புரியாமல் பார்த்தாள் சினேகா..
“நாம நூல் பிடி மாதிரி தான் வாழ்க்கையை எதிர்பார்க்கிறோம். ஆனா, கிடைக்கிறது என்னவோ சிலந்தி வலை மாதிரி குடும்ப அமைப்புதான். பெரும்பாலும் நாம அதை விட்டு வெளியே வர நினைக்கிறது இல்லை. அதேபோல அதை சரி பண்ணவும் நினைக்கிறது இல்லை. அந்தக் குறைகளோடவே வாழை பழகிக்கிறோம். இதுதான் வாழ்க்கைன்னு ஆனதுக்கப்புறம் நமக்காக ஒரு வாய்ப்பு கொடுத்து ஏன் சரி பண்ணிக்க கூடாது”
“உன்கிட்ட ஒழுச்சு மறைச்சு பேச எதுவும் கிடையாது. என் வாழ்க்கைல என்ன நடந்துச்சுன்னு உனக்கு தெரியும். நான் நினைச்சு கூட பாக்காத ஒரு கல்யாண வாழ்க்கை. எப்படியும் இந்த வாழ்க்கையிலிருந்து வெளியேறுகின்ற தைரியம் எனக்கு கிடையாது. அதை நான் என்னைக்கும் பண்ணவும் மாட்டேன். அப்ப ஏன் அதை சரி பண்ணிக்க கூடாது. எப்படியும் இதுதான் வாழ்க்கை என்று வாழ போறோம். அத நல்ல முறையில் கொண்டு போலாம். எனக்காக நானே போராடாமல் விட்டால் யாருக்காக நான் நியாயம் பேச முடியும். கையெடுத்து கடவுளே என்று தான் நான் கைகூப்பி வணங்கினேன். என் கையில கிடைச்சது என்னவோ களிமண்ணு தான்” என்றதும், சினேகா நிமிர்ந்து பார்க்க,
லேசாக சிரித்தவள், “என் வாழ்க்கையில நான் வைத்திருந்த எதிர்பார்ப்பா சொன்னேன். என் வாழ்க்கை மண்ணா போச்சுன்னு நினைக்காம பிள்ளையாராம் புடிச்சுக்கிட்டேன். குடும்பத்தை கட்டுறது பொண்ணு தான். நம்ம முன்னாடி வெறும் களிமண்ணே கிட்டகட்டும், அத பிள்ளையாரா பிடிக்கிறதும், குரங்கா மாத்துறதும் நம்ம கைல தான் இருக்கு. என்னைக்காவது ஒரு நாள் சாகப் போறோம் அதுக்கு எதுக்கு வாழனும். அப்படின்னு யாராவது நினைப்பாங்களா? இருக்கிறவரை வாழ்க்கையை சந்தோசமா கொண்டு போக நினைப்பாங்க.. அதுதான் உன் வாழ்க்கைக்கான வழி..” நிறைய இலை மறை காயாக எடுத்துச் சொல்ல, யோசித்தாள் சினேகா.
ஆம், நம்ம வாழ்க்கைக்காக நாம் போராடாமல், ஒரு அடி முன்னெடுத்து வைக்காமல் விதியே என்று ஏன் வாழ வேண்டும். சினேகாவுக்கு ஒரு தெளிவு கிடைத்தது.
 அந்த பேச்சு வார்த்தைக்குப் பின் நிறை அவர்கள் குடும்ப விஷயத்தை துருவவில்லை. ஆனால், சினேகா முகத்தில் ஒரு தெளிவு இருந்தது. வீரராகவனுக்கு வெளியூர் மாற்றல் வர, சினேகா அதை தேவை என்று யோசித்தாள். இடமாற்றம் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வருமோ என்று நினைத்தாள்.
வீரணன் தம்பதிகள் என்ன சொல்ல போகிறார்கள். வேலை முக்கியம்… எங்க அவர்கள் தேவையோ, அங்கு வாழட்டும் என்று விட்டார்கள். அண்ணன் வெளியூர் செல்வதால் அந்த வாரம் பிரபாகரன் வீட்டுக்கு வந்திருந்தான். அவனிடம் நிறை எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. சினேகா தன்னிடம் சொன்ன விஷயத்தை தன் கணவனிடம் ஏன் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால், ராகவன் பகிர்ந்து கொண்டான்.
பிரபாவுக்கு மனைவியை குறித்து அவ்வளவு பெருமை. நிறை கண்டு கொள்ளாமல் கூட கடந்து செல்லலாம், இல்லையா என்னை வேண்டாம் என்று சொன்னாயே உன் வாழ்க்கை அப்படித்தான் போகும் என்று அற்ப சந்தோச படலாம். அதை விட்டு நல்ல முறையில் எடுத்து சொல்ல வேண்டுமே!…
அன்றிரவு மகனை உறங்க வைத்து விட்டு படுக்கையை தட்டி போட, பின்புறம் இருந்து ஒரு கை நிறையை இடுப்போடு அணைத்தது.. முகத்தில் லேசாக சிரிப்பு மலர்ந்தாலும்,
“என்னவாம், சாருக்கு என் நினைப்பு?” என்றாள் சடவாக,
“ஏன் மேடத்தை கவனிக்கிறதே இல்லையாமா?” அவள் கழுத்தில் முகம் வைத்து கேட்டான்.
“கவனிக்கிறீங்க.. மகன் பொறந்ததுக்கப்புறம் சித்திரை மாசத்தில் மழை பெய்யிற மாதிரி கவனிக்கிறீங்க. அடிக்கடி என்ன கண்டுக்கறதில்லையே” நொடித்து கொண்டாள்.
மனைவியின் பேச்சு அவனுக்கு அப்படி ஒரு சிரிப்பை கொடுத்தது. நிறை என் கணவன் என் உரிமை என்னும் ராகம். அவனிடம் அவளுக்கு ஒளிவு மறைவே இருக்காது. பல நேரங்களின் மனைவியின் பேச்சில் பிரபா தான் வெட்கப்பட்டு போவான்.
“இப்பதான் ஜனா எழுந்து நடக்கிறான். அடுத்த குழந்தை ஐந்து வருடத்திற்கு பிறகு தான்” என்று கண்டிப்பாக சொல்ல,
அட தத்தி!… என்று பார்த்தாள் நிறை… “புருஷன் பொண்டாட்டி சந்தோசமா இருக்குறதுக்கும் பிள்ளை பெத்துக்கறதுக்கும் என்ன சம்பந்தம்” என்று அவள் கேட்க.
“வெட்கம் கெட்டுச்சு”
“என்ன வெட்கப்படுறீங்க.. பின்னாடி ரெண்டு பிள்ளை பெத்து நான் குடும்ப கட்டுப்பாடு பண்ணதுக்கு அப்புறம்.. அதான் குழந்தை பிறந்துருச்சேன்னு என்னை விட்டு தள்ளியே இருப்பீங்களா? உங்க லாஜிக்கில் தீயவைக்க” தன்னை அணைத்து பிடித்திருந்தவனின் கை மடக்கி செல்லமாக குத்தினாள்.
பிரபா பதில் சொல்லவில்லை. ஆனால் அவனை அணைப்பு இறுகியது… ஒரு குழந்தை வருவதற்கும் முன் தம்பதிகளுக்கு இருந்த சுதந்திரம் வேறு… குழந்தை வந்த பின் அவர்களின் கட்டுப்பாடு வேறு… நிறைக்கு அது புரியாது. புரிந்தாலும் கண்டு கொள்ள மாட்டாள். ஆனால், பிரபா எப்போதும் கவனத்தில் வைப்பான். நிறை அதை எப்போதும் உடைத்து விடுவாள்.
நல்ல முறையில் வீரராகவன் சினேகா இருவரும் தனி குடுத்தனம் செல்ல நிறையும், பிரபாவம் உடனிருந்து உதவி செய்தார்கள். சினேகா இன்னும் நிறையோடு அதிகமாக ஒட்டினாள்.
“மேடம் பெரிய மனுசி ஆயிட்டீங்க போல.. நல்ல அட்வைஸ் கொடுத்தீங்களாம்” என்றான் பிரபா, ஓய்ந்து அமர்ந்திருந்த மனைவியை பார்த்து…
ராகவனோடு ஒரு உறவு எனக்கு தேவையில்லை என்று நிறை ஒதுக்கி இருந்தாலும், நிச்சயம் பிரபா மனைவியின் நியாயத்தை புரிந்து அவள் பக்கம் தான் இருப்பான். ஆனால், ஒரே குடும்பம் என்ற அமைப்பு பாதிக்கப்பட்டிருக்கும். வாழ்க்கையில் சில பக்கங்களை கண்டிப்பாக மறக்க வேண்டும். நிறை சந்தோஷமாகவே மறந்து போனாள். அவள் குணம் பிரபாவுக்கு ஆச்சரியம்.
“அவ்வளவு ஈஸியா பொம்பளைங்க புருஷன் பொண்டாட்டி விவாகரத்தை யார்கிட்டயும் சொல்ல மாட்டோம். அப்படி ஒருத்தர் கிட்ட சொன்னா? அவங்க ரொம்ப நம்பிக்கையானவங்கன்னு அர்த்தம். சினேகா என்கிட்ட சொன்னா.. அந்த நம்பிக்கைக்கு உண்மையா இருந்தேன்”
“என் வாழ்க்கையில நான் கண்ட தீர்வு நிச்சயம் அவள் வாழ்க்கைக்கு தீர்வா இருக்காது. கண்டிப்பா ஒரு வழிகாட்டியா இருக்கும். இப்படின்னு நான் சொன்னா… அதை புரிந்து அவ வாழ்க்கையை சரி பண்ணிக்கிட்டது அவ சாமர்த்தியம்” என்றாள் நிறை.
“ஐயோ! நீ அவ்வளவு அழகு நிறை” என்று கொஞ்சினால் கணவன். அவனுக்கு மனைவியை குறித்து அவ்வளவு பெருமை.
வாழ்க்கை ஒரு மாதிரி நீரோடையாக நிறைக்கு சென்றது. ஆனாலும், குடும்பத்தில் தனித்தனி சமையல்தான். மற்ற இருவரும் சென்ற பின் ஒரே குடும்பமாக வாழ்வது அவர்களை ஒதுக்கி வைப்பது போல் ஆகுமோ என்று நிறையும் தனியாகவே நின்று விட்டாள்.
வீரணன் மாட்டு வியாபாரம் செய்யும் ஆள். சமீபகாலமாகவே பெரிய மகன் தொழிலை விட்டு விடுமாறு சொல்லிக் கொண்டிருக்கிறான். முன்பு போல அவரால் அலைந்து திரிந்து வேலை பார்க்க முடியவில்லை. வாழும் வரை மகன்களை எதிர்பார்க்காமல் வாழ வேண்டும் என்ற எண்ணம். அவரை ஓட வைத்துக் கொண்டிருந்தது.
அப்போதுதான் நிறை வெளி வாசலை பெருக்கிக் கொண்டிருக்க.. ஜனார்த்தன் அப்பத்தாவின் கையில் இருந்தான். அங்கு அவசரமாக வந்தான் வீரசிவா,
“என்ன மகன் ஒத்தையில வாரான்” என்றவாறு அருகில் வந்தார் கல்யாணி.
“என்னடா பெரியவனே” மனதில் ஒரு பதட்டம்.
“அம்மா, அப்பாவுக்கு மாடு மிதிச்சிருச்சு”
“என்னடா சொல்ற கடன்கார?” பதறினார் கல்யாணி.
“எத்தனை தடவை சொல்றது அவர்கிட்ட வயசான காலத்துல இந்த தொழில் வேணாம்னு.. சீக்கிரம் கிளம்புங்க டவுன் ஆஸ்பத்திரில வைத்திருக்கோம்” என்றதும், அவசரமாக நிறையும் மகனுக்கு தேவையானதோடு கிளம்பி விட்டாள்.
 “உங்க தம்பிக்கு சொல்லிட்டீங்களா மாமா?”
“சொல்லிட்டேன் நிறை வந்துட்டு இருக்கான். நான் உங்களை கூட்டிட்டு போக வந்தேன்” அவசரமாக கிளம்பி ஹாஸ்பிடல் சென்றார்கள். நிறை கொஞ்சம் தைரியமாக இருக்க, கல்யாணி தான் அழுது கொண்டே வந்தார்.
அவர்கள் செல்லும்போது சினேகா, வீரராகவன் இருந்தார்கள்.
“என்னடா ஆச்சு உங்க அப்பாவுக்கு காலைல நல்லா தானடா வேலைக்கு போனாரு”
“முட்டிக்கு கீழ கால்ல தான் ம்மா மாடு மிதிச்சிருக்கு. நல்ல காயம், சுகர் வேற..” அந்த பயம் தான் எல்லோருக்கும்..
 ரோகினி மட்டும் வரவில்லை. கை பிள்ளையை வைத்துக்கொண்டு வர முடியாது என்று விட்டாள்.அடுத்து பிரபாகரனும் வந்து விட்டான்.
வீரணனுக்கு சுகர் அதிகமாக இருந்தது. கால் சிதைந்தது போல் காணப்பட்டது. தாங்க முடியவில்லை மகன்களுக்கு.. தாயிடம் காட்டாமல் மறைத்தார்கள். தொடர்ந்து மருத்துவம் பார்ப்போம் புண் ஆற வேண்டும். அப்படி இல்லாமல் உள்வரை சீல் வைத்து விட்டால் முட்டி வரை இருக்கும் காலை எடுக்கத்தான் வேண்டும். கல்யாணிக்கு தாங்கவில்லை அப்போதே கத்தி அழுக ஆரம்பித்து விட்டார்.
ஒரு மாதத்துக்கு மேல் வரை மருத்துவமனையே வாசம். கல்யாணியும், மூன்று மகன்களும் மாற்றி மாற்றி பார்த்து கொண்டார்கள். நிறை, சினேகா இருவரும் உணவுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். ரோகினி அவ்வப்போது வந்து பார்ப்பாள். குழந்தை இருப்பதால் தொடர்ந்து இருக்க மாட்டாள்.
நாட்கள் கடந்த பின் தொடர்ந்து விடுமுறை எடுக்க முடியாமல் மகன்கள் ஒவ்வொருவராக வேலைக்கு செல்ல ஆரம்பித்தார்கள். வீரணன் தொடர்ந்து மருத்துவமனையில் தான் இருந்தார். எப்படியாவது சரி செய்ய நினைத்து விட்டார்கள். புண் ஆற நாட்கள் எடுத்தது. வேதனையும் வலியுமாக அவருக்கு மிக கஷ்டம்.
ஹாஸ்பிடலுக்கு அருகில் தான் சினேகா வீடு.. அங்கு தான் நிறையும் தங்கி இருந்தாள். பெண் பிள்ளை இல்லாதவர்கள் எப்படியும் மருமகள்கள் பார்க்கத்தான் வேண்டும். மகன்கள் நன்றாக கவனித்தாலும் கூட இருந்து பார்த்துக் கொள்ள முடியவில்லை. கல்யாணியும் தளர்ந்து போக, மகனை சினேகாவிடம் விட்டு நிறையும் மருத்துவமனை செல்ல தொடங்கினாள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!