Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நேற்று பார்த்த நிலா முகம்

நேற்று பார்த்த நிலா முகம் – 8

ராஜ்மோகன் தற்போது நன்றாக ஷேவ் செய்து, அழகாக முடி வெட்டிக் கொண்டு, பழைய மாதிரி தெளிவாக ட்யூட்டிக்கு வந்திருந்தான்.

மகிழினி இப்போதும் அவனை ஏறெடுத்தும் பார்க்காதது, மனம் கொஞ்சம் வலித்தாலும், அவள் பின்னே எப்படி இருப்பாள், அன்று தானும் ஒன்றுமே சொல்லாமல் கிளம்பி விட்ட பிறகு!

ஆனால், சந்துருவின் மூலம் அவள் இன்னமும் அவனை நினைத்துக் கொண்டு தான் இருக்கிறாள், வேறு கல்யாணத்திற்கு சம்மதிக்காமல் என்ற செய்தி கொஞ்சம் ஆறுதல் அளித்தது.

சமாதானம் செய்ய வேண்டும் எப்படியாவது!



Advertisement

அவளுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும்!

ஆனால் எப்படி என்று தான் தெரியவில்லை!

ஆனாலும் முயற்சியைக் கை விடாமல், அதே சமயம் அவளை ரொம்பவும் தொந்திரவு செய்யாமலும் அவளுடன் பேச முயற்சித்தான்.

Advertisement

ஆனால் அவள் தான் பிடி கொடுக்க வில்லை இன்னமும்!

Advertisement

இதில், அவனை சைட் அடிக்கும் மற்ற பெண்கள் வேறு! நடுவில் வரும் கவுசிக் மாதிரி!

மற்ற பெண்கள் என்றால், ஒரு பொசசிவ்நெஸ் ஆவது வந்திருக்கும்!

நம்ம ஆள் ரொம்ப ஸ்ட்ராங்! அதுவும் பலிக்காது இங்கே! என்றே எண்ணிக் கொண்டிருந்தவன் மனது கொஞ்சம் அயர்ச்சியானது!

Advertisement

எல்லாம் நல்லபடி நடந்திருந்தால், இந்நேரம் என் மகியுடன் சந்தோசமாக நல்ல புரிதல் உள்ள தம்பதிகளாக நாங்களும் இருந்திருப்போம்!

எல்லாம் அந்த நன்றி கெட்ட ஜென்மங்களால் வந்தது!

ச்சே. இப்படியும் கூட இருப்பார்களா என்றே இன்னமும் கூட அவனுக்கு ஆற்றாமையாக இருந்தது!

எப்படி.. இப்படி சொந்த ரத்த உறவை இப்படி ஏமாற்ற மனசு வரும்? அதிலயும் அவன் அம்மாவிற்கு அவர்கள் செய்தது, கொடுமையிலும் கொடுமை!

தன் வீட்டில் அவனது அந்த சிறிய அறையில் இருந்த ஸ்டீல் கட்டிலில் படுத்துக் கொண்டு யோசித்துக் கொண்டு இருந்தான் அவன்.

அவன் மனதில் பழைய நினைவுகள் மீண்டும் வந்து அவனை சென்ற வருடத்திற்கு இழுத்து சென்றன.

அன்று, மகியை பெண் பார்த்து விட்டு, ப்ரியாவும் ராமுவும் செய்து விட்ட கலாட்டாவின் முடிவில், அவன் கைப்பற்றி இழுத்துக் கொண்டு பிரியா வெளியேறிய போது, ஒன்றும் சொல்ல முடியாமல், மகியைத் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு வந்தான் ராஜ்.

அப்போது தான் என்ன பேசினாலும் ப்ரியா அன்று இருந்த மனநிலையில் நிச்சயம் மகியை,

மகியின் கேரக்டரை இன்னமும் தான் அசிங்கப் படுத்தி விடுவாள் என்று எண்ணியே அவன் ஒன்றும் சொல்லாமல் மவுனமாக இருந்து விட்டது!

அப்படி இருந்தும் கூட தான் மகியை பிடித்து இருக்கு என்று சொல்லாமலே கூட, அப்படி சொல்லி விட்டால்,

அக்கா அண்ணனின் அடுத்த பேச்சு எப்படி போகும் என்பதையும் தான் ப்ரியா அப்போதே சொல்லி விட்டாளே!

படிப்பு அதிகம் இல்லை, கொஞ்சம் பிற்போக்குத்தனமான எண்ணங்கள் கொண்டவள், கொஞ்சம் மெச்சுரிட்டி குறைவு தான் அவன் அக்காவுக்கு என்றே எண்ணி,

அன்றைய நிலைமைய இன்னமும் மோசமாக்கி விடாமல், கொஞ்சம் தள்ளிப் போட்டு,

மீண்டும் பாலு பெரியப்பாவை வைத்துப் பேசிக் கொள்ளலாம் என்றே நினைத்து அங்கிருந்து கிளம்பியிருந்தான்.

ஆனாலும் மகியின் அந்த உணர்ச்சி துடைத்த முகம், அந்த பார்வை அவனை மிகவும் வருத்தம் அடைய செய்து, தூங்க விடாமல் செய்தது!

நானே எவ்வளவு நம்பிக்கை கனவுடன் இருந்தேன்! அப்படி தானே அவளும் இருந்திருப்பாள்!

ச்சே.. அதற்குள் யார் யாரோ என்னென்னமோ பேசி வைத்து கலைத்து விட்டு விட்டார்கள்!

ஆனால் அவனுள் இன்னமும் ஒன்றும் கெட்டு விடவில்லை. எதுவும் முடிந்து போய் விட வில்லை!

மகி தான் அவன் மனைவி என்ற எண்ணம் வலுத்து தான் இருந்தது!

கொஞ்சம் ஆறப் போட்டு பேசுவோம் என்றே நம்பிக்கையுடன் இருந்தான்!

பாலு பெரியப்பா வரட்டும் பேசிக்குவோம் என்றே எண்ணி இருந்தான்.

ஆனால் அவன் உடன்பிறப்புகள் விடுவார்களா என்ன?

அன்று வீட்டுக்குள் வந்தவுடன், ஓ என்று கதறி அழுதே விட்டார் கமலா அம்மா.

“பாவிங்களா, எல்லாருமா சேர்ந்து என் மவன் கல்யாணத்தைக் கெடுத்து கலைச்சு விட்டுட்டீங்களே” என்று நெஞ்சில் அடித்துக் கொண்டே அழுது விட்டார்!

“இப்ப என்ன ஆச்சாம், உங்கம்மாவுக்கு? ஒரு பொண்ணைப் பார்த்தோம் செட்டாகல!

அவ்வளவு தானே! என்னமோ குடியே முழுகி போயிட்டது மாதிரி இப்படி நடு வீட்டுல உக்கார்ந்து, ஏதோ எளவு விழுந்த மாதிரி அழறாங்க!

 நாம வாழற வீடு, நம்ம புள்ளை நல்லபடி இருக்க வேண்டாமா?” என்று சத்தமிட தொடங்கினாள் வனிதா!

“அது தானே நீ என்னம்மா இப்படி நடு வீட்டுல இப்படி உக்கார்ந்து அழற? ஒரு பெரிய மனுசி இப்படி அழுவலாமா?” என்று ப்ரியாவும் ஒத்து ஊதினாள்.

“ஆமாடி, இப்ப தான் நான் பெரிய மனுசின்னு உன் கண்ணுக்குத் தெரியுதா? நானா பேசி முடிச்ச சம்பந்தத்தை,

எங்கம்மாவுக்கு நாட்டு நடப்பு தெரியாதுன்னு சொல்லி கலைச்சு விடும் போது தெரியலையா?” என்று அவளிடம் சீறினார் கமலா.

“என்ன இப்போ? இன்னொரு பொண்ணு பார்த்துட்டா போச்சு அதுக்குள்ள நீ ஏன்மா இப்படி அழுது கூப்பாடு போடுற?” ராமுவும் கத்த ஆரம்பித்தான்.

“நீ அவனுக்கு பொண்ணு பார்த்த லட்சணம் தான் தெரியுமே? இத்தினி வருசத்துல எத்தினி ஜாதகம் கொண்டு வந்திருப்ப, ராஜுவுக்குன்னு?

அது நொட்டை, இது நொள்ளைன்னு ஆயிரம் காரணம் சொல்லி சொல்லி, தள்ளிப் போடுறியே தவிர உருப்படியா ஒரு பொண்ணைப் பார்த்திருப்பியா?” கமலா அம்மா அவனிடமும் கத்த ஆரம்பித்தார்!

“நீங்களாவும் பார்க்க மாட்டிங்க, சரி. சொந்தத்துல பேசி முடிக்கலாம்னா,

இதோ உன் பொண்டாட்டி அவ தங்கச்சிக்கு கேட்டா, தாம் தூம்னு குதிக்கிறா! உன் அக்காவும் மாட்டேங்கிறா!

சரி போகட்டும்னு நானே பேசி கொண்டு வந்ததையும் இப்படி கண்டதையும் பேசி கலைச்சு விட்டுட்டீங்க!”

“சும்மா கலைச்சு விட்டோம், கலைச்சு விட்டோம்னு சொல்லாதீங்க, நாங்க என்ன சொன்னோம்,

எங்க பையன் நிறத்துக்கு, பொண்ணு கொஞ்சம் கருப்பா இருக்குனு சொன்னோம்!” என்று பிரியா இழுக்க,

“அப்படியாடி சொன்ன நீ? அதுமட்டுமா சொன்ன?

ராஜுவுக்கு அந்த பொண்ணை போனில் பேசின பின்ன,

பிடிச்சுருக்குன்னு அவன்  சொன்னதால தான் நான் நிச்சயம் பண்ணிக்கலாம்னு அவங்களுக்கு உறுதி கொடுத்தேன்!

அந்த பொண்ணு கிட்ட போன் நம்பர் வாங்கி முதல்ல பேச ஆரம்பிச்சது நம்ம ராஜு தான்!

உண்டா இல்லையானு நீயே அவன் கிட்ட கேளு!

அப்படி அவன் பேசினதுக்கு அப்புறம் தான் அந்த பொண்ணு பேசுச்சு! அத எவ்வளவு அசிங்கமா பேசின நீ?

நீயும் ஒரு பொண்ணுக்கு ரெண்டு பொண்ணைப் பெத்து வச்சுட்டுக்கிட்டு இப்படி இன்னொரு வீட்டுப் பொண்ண பேசலாமா?

அந்த பாவம் உன்னை சும்மா விடுமா?” என்று அவர் கோபமாக பேசிக் கொண்டிருந்த போது, சரியாக உள்ளே வந்தான் ப்ரியாவின் புருஷன் வேல்முருகன்.

வந்தவன், நேரே, “இதுக்கு தான் அடுத்தவங்க குடும்ப விசயத்துல மூக்கை நுழைக்காதன்னு படிச்சு படிச்சு சொன்னேன் கேட்டியாடி நீ?

சொல்ல சொல்ல கேக்காம போய்ட்டு வந்து,

இப்ப என் பொண்ணுங்களுக்கு சாபம் வாங்கிக் கொடுக்கிறியா?” என்று கோபமாக சொல்லி,

அவள் தலைமுடியைப் பிடித்து இழுத்துப் போட்டு, ஓங்கி அறைந்து தள்ளினான்.

அவன் அடித்த அடியில் பிரியாவின் உதடு கிழிந்து ரத்தம் வந்தது!

அது வரை இவர்கள் சண்டையில் வெறும் பார்வையாளனாக இருந்த ராஜு, வேகமாக வந்து அவன் அக்காவைப் பிடித்துக் கொண்டான்!

“மாமா..” என்றான் ஆத்திரமாக.

“ராஜு.. நீ இதில தலையிடாத! என் பொண்டாட்டி, நான் அடிப்பேன்! வீணா அடுத்தவங்க விசயத்துல தலையிட்டா இப்படி தான் அடி வாங்கி  சாவணும்!”

“மாமா..” என்று அவன் மீண்டும் கத்த,

“டேய்.. நீ இருடா.. அவர் என்னை என்ன வேணா செய்யட்டும்! என் தம்பி நீ!

உன் நல்லது கெட்டதுல தலையிடக் கூடாதுன்னு இவர் யாரு சொல்றதுக்கு?

 நீங்க என்ன எத்தனை வாட்டி அடிச்சாலும், நான் இப்படி தான் இருப்பேன்” என்றாள் வீம்பாக.

“அவன் கருப்பிய கட்றான், இல்ல சிவப்பிய கட்றான், கல்யாணத்துக்கு முன்னாடி  போனில் பேசுறான்,

இல்ல தாலி கட்டாமலே குடும்பமே நடத்தறான் உனக்கு என்ன போச்சுன்னேன்?” வேல்முருகன் மீண்டும் அவளை அடிக்க போக,

இப்போது ராமு வந்து அவனைத் தடுத்தான், போதும் என்று ராஜுவை கண் ஜாடைக்  காட்டி!

ராஜு அதிர்ந்து போய் தான் நின்றிருந்தான்!

“நீங்க அவளை அழைச்சுட்டுப் போங்க மாமா.

நான் பேசிக்கிறேன் அம்மா கிட்ட! இனி அவங்க ஒண்ணும் சொல்ல மாட்டாங்க” என்று சொல்லி அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தான் ராமு.

கமலா இன்னமும் கோபமுடன் தான் இருந்தார்.

கோபத்திலும் அழுகையிலும் அவருக்கு மூச்சிரைத்தது!

“நீ என்னம்மா? டக்குன்னு பேத்திங்கன்னு கூடப்பார்க்காம, இப்படி வாக்குசம் விடற மாதிரி பேசிட்ட? அதுவும் மாமா சரியா வீட்டுக்குள்ள நுழையற நேரம் பார்த்து!” என்றான் ராமு.

“ஏங்க.. நீங்க சும்மா இருங்க.. அப்புறம் நாமளும் பொண்ணைப் பெத்து வச்சுருக்கோம்.

நம்ம பொண்ணையும் சபிச்சுட போறாங்க” என்றாள் வனிதா.

“ஏய்.. நீ சும்மாயிரு. நீங்க பொம்பளைங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் குட்டி கலாட்டா பண்ணிட்டீங்க!” என்றான் ராமு.

“நானா, நான் என்ன பண்ணினேன், பேசினது எல்லாம் உங்க அக்கா! இதில என்னை குத்தம் சொல்றீங்க?”

“ஆமா, நீ ரொம்ப யோக்கியம்! அவங்க வீட்டுல போய்,

தட்டு அப்படி இருக்கு, டம்ளர் அப்படி இருக்குனு நீ ஜாடை மாடையா நக்கல் பண்ணியது எனக்கும் தெரியும்டி! நீ பேசாத!” என்றான் ராமு.

அவளுக்கு “எல்லாம் சும்மா” என்று ஒரு கண் ஜாடைக் காட்டிக் கொண்டு!

“ஓ. இப்ப எல்லாம் போக, நான் அக்யூஸ்ட் ஆகிட்டேனா?

நம்ம வீட்டு குடும்ப விஷயத்தை அதுக்குள்ள பொண்ணோட அண்ணி கிட்ட போய் மூட்டைக் கட்டிக்கிட்டு சொன்ன உங்கம்மா நல்லவங்க!  நான் கெட்டவ!

அது தான் அவ நடு சபையில வச்சு நக்கலா சொல்றா! உங்க வீட்டு வண்டவாளம் தெரியும்னு!”

“ஏய்.. எங்கம்மா கொஞ்சம் வெள்ளந்தியானவங்க!

கொஞ்சம் நல்லா பேசினா, எல்லாத்தையும் சொல்லிடுவாங்க. எல்லாத்தையும் நம்பிடுவாங்க சீக்கிரமே!

அதனால தான்.. ராஜு.. நீயும் கேட்டுக்கோ.. ஏதுடா அண்ணன் நம்ம கல்யாண பேச்சு வார்த்தைய முடிச்சு விட்டுட்டான்னு நினைச்சுடாதே!

அம்மா ரொம்ப இன்னசென்ட். அவங்கள எல்லாம் ஈசியா ஏமாத்திடலாம் யாரும்!

அதனால தான் கொஞ்ச இன்னமும் நல்லா விசாரிக்கலாம்னு தாண்டா நானும் நினைச்சேன்.

இப்ப என்ன.. உனக்கு அந்த பொண்ணை ரொம்ப பிடிச்சருக்கா? நானே அவ அண்ணன் கிட்ட பேசுறேன்” என்று சொன்னான் ராமு.

அதற்குள் கமலா அம்மாவிற்கு பிபி எகிறி கண்கள் சொருக ஆரம்பித்து விட்டிருக்க, காரை எடுத்தான் ராஜு.

அவரை ஹாஸ்பிட்டல் கூட்டி சென்று வந்தார்கள்.

திரும்பி வரும் போது கிடைத்த தனிமையில் கமலா அம்மா ராஜுவிடம் சொன்னார்.

“அந்த மகி ரொம்ப நல்ல பொண்ணுடா. என் கிட்ட அம்மாச்சி அம்மாச்சினு அவ்வளவு பிரியமா பேசுச்சு. நீ வரும்வரை தினம் என்கிட்ட போனில் பேசும்!

என்னை அதோட வண்டியில ஏத்தி கூட்டிட்டு வந்துச்சு பஸ் எத்திவிட! அப்படியே உன்னை மாதிரி பத்திரமா!

அதோட தோளைப் பிடிச்சுக்கிட்டு வந்தேன்! அது கையைப் பிடிச்சு கூட்டிட்டு வரும் போது எனக்கு அதோட பிரியம் அந்த கையில தெரிஞ்சுது!

நல்ல பொண்ணுடா அவ!  அத தட்டி விட்டுடுச்சுங்க இந்த சனியன்ங்க மூனு பேருமா சேர்ந்து!” அவர் மிகவும் வருத்தப்பட்டார்.

“விடுங்கம்மா. எனக்கு அவ தான்னு எழுதியிருந்தா, யார் தடுத்தாலும் எங்க கல்யாணம் நடக்கும்!

நீங்க கவலைப் படாதீங்க” என்று சொல்லி  அவரை  சமாதானம் செய்தான்.

அதன் பின் வனிதாவின் அப்பா, ஒரு நாள் வந்து கமலா அம்மாவைப் பார்த்து விட்டு சென்றார்.

“ராஜு.. தம்பி.. வனிதா சொல்லுச்சு.. அம்மா அனிதாவை பொண்ணு கேட்டாங்கன்னு. தப்பா நினைச்சுக்காதீங்க தம்பி.

அனிதா சின்ன வயசுல இருந்தே அது கூட ஸ்கூலில் ஒண்ணா படிச்ச பையன  விரும்புறாளாம்.

எனக்கே இப்போ தான் தெரியும்!

அவனை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ரொம்ப பிடிவாதமா இருக்கு!

இத உங்கம்மா கிட்ட சொன்னா கேவலமா நினைச்சுடுவாங்களோன்னு நினைச்சு தான் வனிதா கோபமா பேசி சமாளிச்சுருக்கு!

நீங்க தப்பா நினைச்சுடாதீங்க தம்பி!

 இன்னொருத்தன மனசுல நினைச்சுகிட்டு இருக்கிறவள உங்களுக்கு கட்டி வச்சு, உங்களுக்கு துரோகம் பண்ண எனக்கு மனசு வரல!

அது தான் உங்களுக்கு பொண்ணு கொடுக்க முடியாத சூழ்நிலை!

என்னை மன்னிச்சுடுங்க! தயவு செய்து என்னை நன்றி கெட்டவன்னு மட்டும் நினைச்சுடாதீங்க ப்ளீஸ்!” அவர் கை எடுத்துக் கும்பிட்டார்!

“அய்யோ.. மாமா. எதுக்கு நீங்க போய் சாரி எல்லாம் கேட்டுகிட்டு! விடுங்க. எனக்கும் அனிதா மேல அப்படியெல்லாம் எண்ணம் இல்லை!

அப்புறம்.. அத்தை எப்படி இருக்காங்க.

வசந்த் என்ன பண்றான்? நல்லா படிக்கிறானா?” என்று பேச்சை மாற்றி அவர் இளைய மகனைப் பற்றி கேட்டான் ராஜு.

“ம்ம். நல்லா படிக்கிறான். இந்த வருஷம் காலேஜ் சேர்ந்துட்டான்” என்று சொன்னவர், “நான் வரேன் தம்பி” என்று சொல்லி அவனிடம் விடைப்பெற்றார்.

ராஜுவின் பின்னே நின்று கொண்டு அவரிடம் தம்ஸ்அப் காட்டினாள் வனிதா!

“ரொம்ப சந்தோசம்” என்று சொல்லி அவரை வழியனுப்பி வைத்தான் வெகுளி ராஜு.

அதன் பின் ராமு பேருக்கு ஒருமுறை மகேந்திரனிடம் பேசுகிறேன் என்று ராஜுவின் முன்னே டயல் செய்ய, அவன் போனை எடுக்கவில்லை!

“போனையே எடுக்க மாட்டேங்கிறான்!” என்றான் பொய்யான சலிப்புடன்!

“நான் வேணுமின்னா, பாலு பெரியப்பா மூலம் பேசட்டா?’ என்றான் ராமு.

அதற்குள், “எத்தனை வாட்டி அந்த பெரிய மனுசனை அசிங்கப்படுத்துவீங்க! அதெல்லாம் வேண்டாம்” என்றாள் வனிதா!

“ஏய்.. சும்மாயிரு.. உன் கருத்தை இப்ப யார் கேட்டா?” என்று அவளிடம் போலியாக சீறினான் ராமு.

அவளும் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

இப்படி தினமும் ஏதாவது பேசி ராஜு கல்யாணம் நின்று போனதை சொல்லி, சொல்லி அவர்களே புருசனும் பொண்டாட்டியுமாக

கமலா அம்மாவை பேச விடாமல் அவர்களே பேசி பேசி சண்டையிட்டுக் கொள்வார்கள்!

ராஜுவுக்கு எப்போதடா துபாய் திரும்பி செல்வோம் என்றே தோன்ற ஆரம்பித்து விட்டது இவர்கள் சண்டைகளால்!

அது தானே அவர்களுக்கும் வேண்டும்! அதற்கு தானே இந்த சண்டை நாடகம்!

அதிலும் வெற்றி தான் அவர்களுக்கு!

ராஜு, தன் லீவை கேன்சல் செய்ய கேட்டு மெயில் போட்டான்.

அவன் நேரம் அவன் கம்பெனியில் வேறு யாருக்கோ, மெடிக்கல் எமர்ஜென்சி லீவ் தேவைப்பட, அவனை அழைத்துக் கொண்டார்கள் அவன் கம்பெனியில்!

வழியனுப்ப ஏர்போர்ட் வந்தாள் ப்ரியா.

கண்களில் கண்ணீருடன், “அக்கா மேல வருத்தமாடா? என்னால தான் உன் கல்யாணம் நின்னுப் போச்சுன்னு நீயும் அம்மா மாதிரி நினைக்கிறியாடா?” அவள் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு கேட்டாள்!

“அப்படியெல்லாம் இல்லக்கா. என் கல்யாணம் நின்னுப் போச்சுன்னோ, அதுக்கு நீ காரணம்னோ நான் நினைக்கவே இல்லை!

மகியோட என் கல்யாணம் தள்ளிப் போச்சு. அவ்வளவு தான்!

நான் ஊருக்குப் போய் போனில் பேசி எல்லாத்தையும் சரி பண்ணிக்கிறேன்! நீ கவலைப் படாதே.

 இந்தா.. இந்த வாட்ச் தானே மாமா ஆசைப்பட்டார்னு சொல்லிட்டு இருந்தே! இந்தா இத கொடுத்துடு அவர்கிட்ட” என்று சொல்லி,

தன் கையில் கட்டியிருந்த அந்த விலை உயர்ந்த ஸ்மார்ட் வாட்ச்சை – அவனுக்கு அவன் கம்பெனியில் பெஸ்ட் எம்ப்ளாயி அவார்டுடன் கிடைத்த அந்த வாட்சையும் கழற்றிக் கொடுத்து விட்டு தான் சென்றான் ராஜு.

“எப்படிடா.. அந்த பொண்ணு தான் உன்கிட்ட பேச மாட்டேங்குதுன்னு சொன்னியே? அப்புறம் எப்படி?”

“அது என் கவலை! நான் பார்த்துக்கிறேன்” என்று சொல்லி ப்ளைட் ஏறினான் ராஜு.

அவன் சென்றவுடன்,

“டேய்.. ராமு எப்படியும் ராஜு அந்த பொண்ணை தான் கட்டுவான் போல! ரொம்ப உறுதியா இருக்கான்” என்றாள் பிரியா.

“சரி விடு. அவனை இங்க வர விட்டா தானே! பார்த்துக்குவோம்” என்றான் ராமுவும்.

ஆனால் ப்ரியாவுக்கு பயம்!

அவள் வேகமாக வேலைகள் பார்த்து, அடுத்த ஆறு மாதத்தில்  கல்லூரியில் அப்போது  படித்துக்கொண்டிருந்த அவள் பெரிய பெண்ணிற்கு

அவள் நாத்தனார் பையனைக் கல்யாணம் பண்ண ஏற்பாடு செய்து விட்டாள்!

நிச்சயமும் முடித்து விட்டாள்!

அடுத்து வந்த மாதங்களில், கல்யாண செலவுக்கு பணம் போத வில்லை என்று ராஜுவிடம் சில்லரையாகவே  ரெண்டு லட்சம் பணமும் அழுது அழுது வாங்கி விட்டாள்!

அது இல்லாமல், தாய்மாமன் சீர் என்று நகை, பட்டுப்புடவை என்று பலதும்.

ராமுவும் நம் குடும்ப முறை அது இது என்று சொல்லி மேலும் மேலும் அவனிடம் பணம் அனுப்ப சொல்லி வாங்கிக் கொண்டே இருந்தான்.

அதிலும் பாதி கமிசன் அடித்துக் கொண்டு செலவுகள் செய்தான்.

கல்யாண தேதி நெருங்கியது.

ராஜுவும் கொரியரில் கல்யாணப் பத்திரிக்கை அனுப்பி வைத்தாள் ப்ரியா.

“எப்படிக்கா போயிட்டு இருக்கு கல்யாண வேலை?” என்ற ராஜுவிடம்,

“நீ வர முடியாத முறை ஒண்ணைத் தவிர, எல்லாம் சிறப்பாக போய்ட்டு இருக்குடா தம்பி” என்றாள் ப்ரியா.

“நான் இல்லாத குறையா? நான் வரலன்னு எப்போ சொன்னேன்?

நான் இன்னும் ரெண்டு நாளில், நீ முஹூர்த்த கால் போடுற அன்னிக்கு முத நாள் சரியா வந்திடுவேன்!

நீ கவலையே படாதே” என்றான் ராஜு உற்சாகமாய்.

“என்னடா..இவன், கல்யாணத்துக்கு வந்திடுவேன்னு சொல்றான்? வந்து அம்மா எங்கன்னு கேட்டா என்ன பண்றது?” என்றாள் ப்ரியா ராமுவிடம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!