Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

45 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 45.1

.

“வீட்டுக்கு எப்போ வர?” பேச்சினிடையே சந்திரிகா ரகுவை திருச்சிக்கு அழைத்தார்.



Advertisement

“வரேன் மா… டீம் மேட் ஒருத்தன் மெடிக்கல் லீவ்ல போயிருக்கான். சோ வேல கொஞ்சம் அதிகமாகிடுச்சு. சேட்டர்டே கூட ரெஸ்ட் இல்ல… இதெல்லாம் முடியட்டும் வரேன்”

“என்ன டிராபிக் சத்தம் மாதிரி கேக்குது? இன்னும் வீடு போய் சேரல? ரொம்ப இழுத்துப் போட்டுச் செய்யாத. ஓவர் ஸ்ட்ரெஸ் ஆகாத ரகு, கழுத்து வலி வந்திடப் போகுது” என்றவரிடம் எப்படிக் கூறுவான் ‘எல்லாம் உங்க பொண்ணால தான். எனக்கு வேலையே ஓடல. எதுலயும் கவனும் இல்ல. அவ கொடுக்குற டென்ஷனால தலை வலி வரலைன்னா தான் ஆச்சரியம்’ என்று?

Advertisement

Advertisement

அப்படி என்ன டென்ஷனாம்? வேறு என்ன? “நிச்சயத்துக்கு என்ன கலர் புடவை வாங்கறது லகு? ஷாப்பிங் எப்போ போறது?” என்பது போலான இனிமையான டென்ஷன் தான்.

‘அட… இது எப்போதிலிருந்து?’ என்ற கேள்விக்கு, ‘சென்ற முறை திருச்சிராப்பள்ளிக்குச் சென்ற போதிலிருந்து’ என்பதே பதில்.

Advertisement

சென்ற முறை ஊருக்குச் சென்றிருந்த போது அவனுக்குத் திருமணப் பேச்சை ஆரம்பிக்கும் நோக்கமெல்லாம் இல்லை. இப்பொழுதே கையில் புத்தகத்தை எடுக்க மறுப்பவள் திருமணப் பேச்சு ஆரம்பித்தால் அதைத் தொடக் கூட மாட்டாளே. அதை எண்ணி அவன் வாய் திறவாது போனாலும் விதி யாரை விட்டது? ஏதேச்சையாக சந்திரிகா மகளின் திருமணம் பற்றிப் பேச… இவன் காதலைப் போட்டுடைத்தான் எந்த வெளிப்பூச்சும் இல்லாது.

என்றும் போல் விடிந்தது அன்று. கடைசி வருடத் தேர்வு நேரம் என்பதால் தாரா, “வலிக்குது டா… அடிக்காத” எனப் புஜத்தைத் தேய்த்துக் கொண்டு புத்தகமும் கையுமாக ரகுவின் முன் அமர்ந்திருந்தாள்.

“எனக்கும் தான் டி உன்ன நினைச்சாலே தல வலிக்குது. அட்லீஸ்ட் பேருக்கு பின்னாடி டிகிரி போடவாது படி” எனப் புத்தகத்தை அவள் முன் போட்டான் ரகு. “எனக்குத் தெரியும்… நீ போடா” என அவன் கீழே போட்ட புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு, விட்டால் போதும் என்று அவள் அறையை நோக்கி ஓட்டம் பிடித்தாள் பெண்.

“இவளோட…” என முணுமுணுத்துக் கொண்டே எழுந்தவன், “வீட்டுக்கு போறேன் மா” எனக் கூறிக் கொண்டே அடுக்களையை ஒட்டியிருந்த அறைக்குள் சென்றான். சந்திரிகா, சலவை இயந்திரம் துவைத்து முடித்த ஈரத் துணிகளை வாளியில் போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தவன், “பின்னாடியா? மாடியா?” எனக் கேட்டுத் தேங்கி நின்றான்.

“ஒரு லோடு துணியும், ஒரு லோடு பெட் ஷீட்டும் இருக்கு. மாடிக்குத் தான் போகணும்” என்றார்.

இரண்டு வாளிகளையும் கையில் எடுத்தவன், “நான் தூக்கிட்டு வரேன் மா” என அவரோடு மாடிக்குச் சென்றான் ரகு.

பேசிக்கொண்டே துணியை உலர்த்திக் கொண்டிருந்தவர், “உன் கூட படிச்சாளே பாக்கியலஷ்மி… ஞாபகம் இருக்கா? அவளுக்குப் போன மாசம் கல்யாணம் ஆகிடுச்சு” என அவன் பள்ளித் தோழியின் திருமணம் பற்றிக் கூறினார்.

“ஸ்கூல் குரூப்ல ஏதோ போட்டோ போட்டிருந்தாங்க. ஏகப்பட்ட குரூப்புக்கு நடுவுல எதை எல்லாம் பாக்கன்னு ஒழுங்கா கவனிக்கல. இவளுக்கு தானா? மாப்பிள்ள என்ன பண்றான்?”

“பையன் வேலூர்ல வேலை பாக்கிறான். அக்கம் பக்கத்துல விசேஷ வீட்டுக்கு போயிட்டு வந்ததுல இருந்து உன் பாட்டி உனக்கு பொண்ணு பாக்க போறதா பேசிட்டு இருக்காங்க”

“ஓஹ்… என்ட்ட சொல்லவே இல்ல”

“நான் தான் இப்போவே எதுக்கு? இன்னும் கொஞ்சம் வருஷம் போகட்டும்ன்னு சொன்னேன்” என்றார், அவன் உதறிக் கொடுத்த துணியை உலர்த்தியவாரே.

“ஏன் மா? இப்போ பண்ணாம எப்போ பண்றதாம்? 30… 35லயா? இது தான் நாட்டுல அவன் அவன் பிள்ள இல்லாம ஹாஸ்பிட்டல் ஹாஸ்பிட்டலா சுத்த காரணம்” என்றான் சலிப்பாய்.

உலர்த்திக் கொண்டிருக்கும் துணியின் மீதிருந்து பார்வையைத் திருப்பாது, “என்ன டா பேச்சு இது?” எனக் கேட்டவர் முகத்தில் மெலிதான புன்னகை கீற்று.

“மா… முன்ன காலத்துல இப்பிடி, முன்ன காலத்துல அப்பிடின்னு எல்லாத்துக்கும் வரிஞ்சு கட்டிட்டு வர்றீங்க? இதுக்கு மட்டும் முன்ன காலம் மறந்துடுச்சா? அப்போ எல்லாம் கால காலத்துல கல்யாணம் பண்ணி வச்சாங்க. படிச்சு, வேலை வாங்கிட்டு வந்து நிக்கிறேன், கல்யாணத்துக்கு என்ன அவசரம்ன்னு கேள்வி வேற?” என்றவன் அடுத்த துணியை உதறிக் கொடுத்தான்.

“அதுசரி… அப்போ சார் கல்யாணத்துக்கு ரெடியா? பொண்ண பார்த்து அடுத்த முகூர்த்த நாள்ல கல்யாணத்த முடிச்சிடலாம் போல” எனக் கேட்டார் புன்னகை மாற முகத்தோடு.

“இல்ல இல்ல… அவ்வளவு அவசரம் வேண்டாம். பேபி எக்சாம் முடியட்டும்” என்றான், ஏதோ அவளை அவனுக்குப் பேசி வைத்திருப்பது போல்.

“மா… நரேன் அண்ணா வீட்டுல இருந்து போன். சென்பா அத்த பேசணும்மாம். கொண்டு வரட்டா?” எனக் கீழ் இருந்து வந்த மகளின் சத்தத்திற்குப் பேச்சு தடைப்பட்டது.

“நீ பேசிட்டு வை. நான் கீழ வந்ததும் காள் போடுறேன்” என்றவர் மீண்டுமாக விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தார்.

“சொல்ல வந்தத சொல்ல விடுறியா நீ? பேபின்னு நீ சொல்லவும் நினைவுக்கு வருது,” என ஆரம்பித்து, “பாக்கியாவோட கல்யாணத்துக்குப் போனோமா… அங்க பையனோட அப்பா உன் ஐயாக்கு தெரிஞ்சவர். கல்யாணம் அன்னைக்கு எங்கள பார்த்தவருக்கு அப்படியொரு சந்தோஷம். போன வாரம் அவர் சம்பந்தி வீட்டுக்கு வந்த போது, குடும்பமா நம்ம வீட்டுக்கு வந்தாங்க.

ரொம்ப நல்ல மனுஷங்க. அவரோட ரெண்டாவது பையன் பாலகுருக்கு இருபத்தி ஆறாகுது. நல்ல குணமா தெரியறான். பாக்கவும் லட்சணமா இருக்கான். நல்லா படிச்சிருக்கான். ‘ஐடி’ல வேலை பாக்கறான். நல்ல சம்பளம். வசதியும் மோசம் இல்ல. அவனுக்கு நம்ம தாராவ பிடிச்சிருக்குன்னு பொண்ணு கேட்டாங்க. இப்போ தான் படிப்பு முடியுது. இருபத்தி ஒண்ணுக்கு அப்பறம் தான் கல்யாணம் பத்தி யோசிக்கணும்ன்னு உன் ஐயா சொல்லிட்டாங்க. அந்த பையன் ‘ஆறு மாசம் தானே… வெயிட் பண்றேன் அங்கிள்’ன்னு நேராவே சொல்லிட்டான்.” என கடைசி துணியை உலர்த்தி முடித்தார்.

“முடிஞ்சுது. என்ன வெயில் இல்ல… வா கீழ போலாம்,” என்றார் அமைதியாக நின்றிருந்த ரகுவின் முகம் பார்த்து. அவன் முகத்தில் இது என்ன பாவனை?

“கிளிப்ப கையில வச்சுகிட்டு அப்படி என்னடா யோசன? சட்டுன்னு போட்டுட்டு வா, கீழ போவோம்” என்றார் ரகுவின் சுருங்கிய நெற்றியைப் பார்த்து.

துணி பறக்காது இருக்க கிளிப்பை வைத்தவன், “அவளுக்குத் தெரியாதா?” எனக் கேட்டான் பிடரியை தேய்த்துக் கொண்டே.

“இல்ல டா ரகு… அவ வரைக்கும் எல்லாம் கொண்டு போகல. ஆறு மாசம் போகட்டும். பையன பத்தி நல்லா விசாரிப்போம். சரி வந்தா சொல்லிக்கலாம்”

“வேண்டாம் மா. விசாரிக்க எல்லாம் வேணாம். அவங்கட்ட சொல்லிடுங்க. என் பொண்ணுக்கு ஏற்கனவே பையன் பாத்து முடிவு பண்ணியாச்சுன்னு.” என்றான் எந்த அவசரமும் இல்லாது, நிதானமாக.

“என்ன டா சொல்ற? நம்ம எப்போ… யார பார்த்து முடிவு பண்ணினோம்?” எனக் கேட்ட சந்திரிகாவின் முகத்தில் குழப்பம் மட்டுமே.

“என்ன இருக்கு சொல்ல? காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் கொண்டு போவானா?”

“அம்மாவோட டென்ஷன ஏத்தாத ரகு. இவ யாரையாவது விரும்பறாளா? அந்தப் பையன் காத்திருக்கானா? உனக்கு யார் சொன்னா? இவளா?” எனக் கேட்டுக் கொண்டே போனவரை முறைத்துத் தள்ளினான் ரகு.

“என்ன டா?” எனப் பரிதாபமாகப் பார்த்தவர், “சரி நான் வாய திறக்கல. நீயே சொல்லு” என அவனைப் பார்த்தார்.

“நான் எப்படி இருக்கேன் பார்க்க?”

“உனக்கு என்னடா? உன் கூட வெளியில போனா… பக்கத்துல ஒரு பெரிய மனுஷி இருக்காளேன்னு கூட யோசிக்காம, உன்ன தின்ற மாதிரி பாக்குறாளுங்களே!”

“என் படிப்பு?”

“கான்பூர் ஐஐடி-ல படிச்சு வந்தவன் இப்படி ஒரு கேள்வி கேட்டா என்ன சொல்றது?”

“என் வசதி?”

“டேய்… அடிக்கிற வெயில்ல நீ வேற ஏன் டா? இப்போ என்னத்த பத்தி பேசிட்டு இருக்கோம்? நீ என்ன கேட்டுட்டு இருக்க? அவ யாரையாவது விரும்பறதா உன்ட்ட ஏதாவது சொன்னாளா?” எனச் சந்திரிகா பரபரப்ப,

“என்னை விட ஒருத்தன் என் பேபி மேல பாசமா இருப்பானா? என் பேபிய என்னை விட யாரால நல்லா பாத்துக்க முடியும்? அதெல்லாம் முடியாது. என் பேபி எனக்கு மட்டும் தான். பேபி படிச்சு முடிக்கட்டும்ன்னு நான் காத்திருந்தா… நீங்க என்னென்னமோ யோசிக்கிறீங்க? நான் தான் உங்க மகன், மருமகன் எல்லாம். ஐயாட்ட சொல்லிடுங்க” என்றான் எந்த வெளிப் பூச்சும் இல்லாது.

“என்ன ரகு பேசற?” என்றவர் முகத்தில் ஆச்சரியமா? அதிர்ச்சியா? எதுவாக இருந்தாலும் இப்படியான பேச்சை அவர் எதிர்பார்க்கவே இல்லை என்பது திண்ணம்.

“ஏன் மா… எனக்கு என்ன குறைச்சல்? கெட்ட பழக்கம் எதுவும் இல்ல. உடம்பையும் மனசையும் நல்லா ஹெல்தியா வச்சிருக்கேன். எங்களுக்குள்ள மூணு வருஷம் தான் வயசு வித்தியாசம். படிப்பில குறையில்ல. வருமானமும் நல்லா வருது. ரெண்டு தாத்தா வீடும் என் பேர்ல இருக்கு. இங்க வந்து செட்டில் ஆன பிறகும் பார்த்துக்க தோப்பு துரவுன்னு கைவசம் தொழில் இருக்கு. எல்லாத்துக்கும் மேல… என் பேபி எப்பவும் போல இந்த வீட்டுக்கும் அந்த வீட்டுக்குமா சுத்தலாம். என் பேபிய பார்த்துகிற மாதிரியே உங்களையும் ஐயாவையும் கண்ணுக்குள்ள வச்சுப் பார்த்துப்பேன்.

ரெண்டு பேருக்கும் சின்ன வயசு. சோ… பேர பிள்ளைங்களுக்கு பஞ்சம் இருக்காது. உங்க ரிட்டயர்மென்ட் நல்லா போகும்.  இதுக்கும் மேல வேற எதையாது எதிர்பார்க்குறீங்களா? எதுனாலும் சொல்லுங்க. குறையா இருந்தாலும் சொல்லுங்க, சரி பண்ணிக்கிறேன். ஆனா, எந்தக் காரணம் கொண்டும் என் பேபிய விட்டுத் தர மாட்டேன்.” என்றான் தீர்மானமாக.

சந்திரிகாவிற்கு என்ன பேசுவதென்று தெரியாது அவனையே பார்த்து நிற்க, “கீழ போறேன் மா. வெயில் கொளுத்துது, நீங்களும் வாங்க” என்றவன், வாளிகளோடு படிகளில் இறங்க ஆரம்பித்தான்.

“நான் உயிரோட இருக்கும் போதே மாப்பிள்ளை பாக்கிறாங்களாம்…. மாப்பிள்ளை! அப்போ அவளுக்கு நான் யாராம்?” என வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே அவன் செல்ல, அவன் புலம்பல் அவர் காதுகளில் நன்றாகவே விழுந்தது. இதழோரம் சிறியதாக ஆரம்பித்த புன்முறுவல் மெல்ல மெல்லப் பெரிதாகி, ‘மாப்பிள்ளையாமே’ என இன்பமாக முணுமுணுத்தது.

தான் பார்த்து வளர்ந்த ரகுவை மருமகனாக்கிக் கொள்ள சந்திரிகாவிற்கு விருப்பமே என்றாலும் மகளுக்குப் பிடிக்க வேண்டுமே என்றிருந்தது. ஆனால் இதை மகளிடம் எப்படிக் கேட்பது என்பது தான் அவருக்குப் புரியவில்லை. அன்று முழுவதும் மகளைக் கவனித்தார் சந்திரிகா. ரகுவோடு அவள் பேசும் நயன மொழி அவருக்கு எதையோ உணர்த்தியது. யோசனையில் விழுந்தவரிடம், ‘மகளுக்கு ரகுவின் மீது பிடித்தம் இருக்கும்’ என்றது உள்ளுணர்வு.

அன்று இரவு உணவை முடித்து மகள் அறைக்குள் நுழையும் வேளை சந்திரிகா தன் கணவனிடம், “உங்க பொண்ணுக்கு மேல படிக்க இஷ்டம் இல்ல. இவ படிக்கிற லட்சணத்துக்கு வேல எல்லாம் கிடைக்கும்ன்னு எனக்கு நம்பிக்கை இல்ல. காலா காலத்துக்கு கல்யாணமாவது செய்து வைக்கலாம். உங்க ஃப்ரெண்டு வீட்டுல இருந்து இவள அவங்க பையனுக்கு கேட்டிருந்தாங்களே, அவன பத்தி விசாரிங்க… நல்ல பையனாத்தான் தெரியறான். சரியா வந்தா, சட்டுன்னு கல்யாணத்த வச்சுப்போம். நல்ல விஷயத்த ஏன் தள்ளி போடணும்?” என்றார் மகளை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே.

நடந்து கொண்டிருந்தவளின் இதயம் மத்தளம் வாசிக்க, நா வறண்டது. ‘டேய் ரகு… இதுக்குத் தானே உன்ன முன்னமே பேசச் சொன்னேன். மடையா!’ என உள்ளுக்குள் நரநரத்தவள், அவனை நம்பி பிரயோஜனம் இல்லை என எண்ணினாள் போலும்…

“ம்மா… இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம்?” எனக் கடுகடுத்தாள்.

“படிக்க பிடிக்கல. வேலைக்கு போர நினைப்பும் இல்ல. மணிக் கணக்கா புல்லாங்குழலோட நேரத்த செலவு செய்யணும். இல்ல… பால தூக்கிட்டு ஊர் ஊரா சுத்த தெரியும். இது எதிர்காலத்துக்குச் சரியா வருமா? அதுதான் உருப்படியா, காலா காலத்துக்குக் கல்யாணம் பண்ணி வைக்கலாம்ன்னு பாக்கறேன். நீயே சொல்லு… வேற என்ன பண்றதாம்?”

“அதுக்கு கல்யாணமா?”

“ஏன் வேற பெட்டர் பிளான் வச்சிருக்கியா?” எனப் பார்ப்பவரிடம் என்னவென கூறுவாள்? அவர் கூறுவதில் பிழை இல்லையே.

உண்மையை உரைப்பதே உகந்தது என நினைத்தவள், “இல்ல… பெட்டர் மாப்பிள்ளை வச்சிகிருக்கேன்” என்றவள், “ரகு” என்ற பெயரை உதிர்த்துச் சென்றாள்.

‘நினைச்சேன்’ என அன்னை பார்த்தார் என்றால், தந்தையோ நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டார்.

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!