45.2 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:1,379
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் அத்தியாயம் 45.2
.
படுத்து நேரம் சென்றும் உறங்காது படுத்திருந்த கணவன் முகத்தை சந்திரிகா பார்க்க, அவர் முகத்தில் கலக்கம். “என்னங்க?” என்றதற்கு, “இவளுக்கு எப்போ இருந்து இப்படி ஒரு எண்ணம்? அவன், ‘அப்படி எல்லாம் பழகல’ன்னு சொன்னா என் பொண்ணு மனசு உடைஞ்சுடுடாதா?” எனக் கலங்கினார்.
Advertisement
“நீங்க வேற! ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர விரும்பறாங்க. நமக்குத் தான் அது தெரியாம போச்சு! அவன்ட்ட நீங்க பேசுங்க, இவளுக்கு மேல அவன் நிக்கிறான்.” என்றார் சந்திரிகா.
“அவன் வீட்டுல?” என அடுத்த கலக்கம் மனிதனை ஆக்கிரமித்தது. அந்தப் பயம் தேவையே இல்லாத ஆணி என்றுவிட்டான் ரகு.
Advertisement
Advertisement
“டேய்… மொதல்ல வீட்டுல இருந்து வந்து பேச சொல்லு டா. அவங்க ஏதாவது தடங்கலா சொல்லிட போறாங்க.” என சந்திரிகா கூற, “நீங்கத் தடுத்தாலே கேக்க மாட்டேன். நீங்க வேற…” எனச் சலித்தவன், “பேபிக்கு எக்சாம் முடியட்டும். அவங்க வருவாங்க. பேசுவாங்க. எல்லாம் ஃபார்மாலிட்டிக்கு தான். அவ எப்படி கேக்கறாளோ அந்த மாதிரி தான் எங்களுக்கு கல்யாணம்ன்னு சொல்லிடுங்க.” என்றான்.
“எல்லாம் அவ இஷ்டம் தானா?” கேட்ட சந்திரிகாவை பார்த்துப் புன்னகைத்தான். அந்தப் புன்னகை தாங்கியிருக்கும் அர்த்தங்கள் தான் எத்தனை?
Advertisement
அதன்பின் என்ன… கடைசி தேர்வு முடியும் வரை அமைதியாக இருந்த வீடு, தேர்வு முடிந்ததும் அதன் வாய்ப் பூட்டை களைந்தது. நல்ல நாள்… நட்சத்திரம், திருமண நிச்சயம், பத்திரிக்கை தேர்வு, திருமண நாள், சம்பிரதாயங்கள் என்ற பேச்சு வீட்டை நிறைக்க, வீடு தன்போல் திருமணக் களையைப் பூசிக் கொண்டது.
மகனின் மனம் அறிந்த அடுத்த நாளே கைப்பேசியின் மூலம் நகுலன் தன் ஒப்புதலைத் தெரிவித்தார். தேர்வு முடியவும் திருமண நிச்சயம், அதைத் தொடர்ந்து ஆறு மாதங்களில் திருமணம் வைக்கலாம் என இவர்கள் பேச, ரகு அடுத்த இருமாதங்களில் நிச்சயம் வைத்து, கையோடு திருமணம் என்றான்.
“என்ன ரகு அவசரம்?” என அனைவரும் கேட்டுப் பார்த்தனர். அவள் ஆசை அப்படி இருக்க, இவன் என்ன கூறுவான்? “ஏன்? அவசரப் படக் கூடாதா?” எனக் கேட்டு நின்றான்.
முகத்தில் அரும்பிய புன்னகையோடே, “போடா” என அவன் ஐயா அவன் தோளைத் தட்டிச் சென்றார்.
தாரா கூறுவதற்கெல்லாம் ரகு சரி எனத் தலையாட்டினால், நாளும் பொழுதும் அதற்கு இசைந்து கொடுக்க வேண்டாமா? நகுலன் வீட்டில் உள்ள அனைவருக்கும் தோதுபட வேண்டாமா? மே மாதத்தின் நடுவில் வர முடியும் என்பதால் மே மாதம் இரண்டாம் வாரத்தில் திருமண நிச்சயம் என முடிவானது.
அவசரம்… அவசரம் என் அடித்துக் கொண்டவன் நிச்சய நாள் முடிவு செய்தபின்னும் இப்படி பெங்களூரே கதி எனக் கிடந்தால்… அவளும் என்ன செய்வாள்? “நம்ம ஃபங்ஷனுக்கு நாம சேர்ந்து தான் ஷாப்பிங் போகணும். நீ இல்லாம நான் புடவ எடுக்க மாட்டேன். உன்னால இங்க வர முடியாட்டா நான் அங்க வரட்டா?” என ரகுவை பிடுங்கித் தின்று கொண்டிருக்கிறாள்.
“ரொம்ப இழுத்து போட்டு செய்யாத. ஓவர் ஸ்ட்ரெஸ் ஆகாத ரகு, கழுத்து வலி வந்துட போது. இன்னும் ரெண்டு வாரம் தான் இருக்கு. நீ வந்தா தான் புடவை எடுப்பேன்னு நிக்கிறா. இந்த வார கடைசில வா. புடவை எடுத்தாத்தான் நேரத்துக்கு பிளவுஸ் தச்சு வாங்க முடியும்” என்ற சந்திரிகாவிடம்,
“வரேன் மா” எனப் பதில் கொடுத்து கைப்பேசியை வைத்தான்.
ஒருவழியாக வேலை முடித்து வீட்டுக்கு வந்தவன், குளித்து, தயாரித்த உணவை எடுத்து மேசை மீது வைக்கவும், மீண்டும் கைப்பேசி அழைத்தது. அக்ஷரா அழைத்திருந்தார். புடவை, நகை, பத்திரிக்கை என அவரோடு பேசி முடித்தவன் விளக்கணைத்துப் படுத்துக் கொண்டான். சில வாரங்களாக இல்லாத அளவிற்குக் கழுத்து இழுத்துப் பிடித்தது.
“இந்த வேலைய இப்போவே விட்டு தொலயலாம் போல” என மனம் எண்ணியது. பின்னே இருக்காதா? ஆசையாக எதிர்பார்த்த தருணங்களை எல்லாம் இழந்து கொண்டிருக்கிறான். குடும்பமாகத் துணி எடுக்கச் செல்ல வேண்டும், ஒன்றாக அமர்ந்து அனைத்து முடிவுகளிலும் பங்கெடுக்க வேண்டும், அவள் ஆசைப்பட்டுப் பார்க்கும் அனைத்தையும் செய்து முடிக்கவேண்டும் என்ற இவன் கனவுகள் எதையுமே செய்ய விடாத வேலையை வைத்துக்கொண்டு என்ன செய்வதாம்? புலம்பலோடே ரகுவின் அன்றைய இரவும் முடிந்தது.
கண்ணாடிக் கதவின் வழியே கதிரவன் ரகுவிற்கு காலை வணக்கம் வைத்தான். அறையை ஒட்டியிருக்கும் குளியல் அறையில் காலைக் கடன்களை முடித்து வெளிவந்தவனுக்குப் பசியில் வயிறு ஓலமிட்டது. “இதென்னடா என்னைக்கும் இல்லாம இன்னைக்கு இப்பிடி பசிக்குது? உடனடியா வாயிறோட வாய அடைக்கணுமே” என நினைத்துக் கொண்டு வந்தவனை உணவு மேசை மீதிருந்த உணவுத் தட்டு வரவேற்றது.
“ப்ச்… நேத்துமா?” என நெற்றியைத் தேய்த்தான். இது என்ன… சமீபக் காலமாக இப்படி ஒரு மறதி தனக்கு? பசித்துத் தொலைத்தாலாவது சாப்பிட நினைவிருக்கும். அதிகம் பசிப்பதில்லை… ஒழுங்காக உணவு உட்கொள்ளுவதில்லை என்பதால் எப்பொழுதும் தீராத அசதி. அசதி அதிகமானால் தலைவலி! என்ன தான் டா உன் பிரச்சனை? என நினைத்தவனுக்குத் தனிமை தான் காரணம் எனப் புலப்படாது இருக்குமா? வீட்டில் ஆட்கள் இருந்தால் தானே சிரிக்க, பேச, விளையாட, சாப்பிட எனத் தோன்றும்? இப்படியே இன்னும் எத்தனை நாள்களை ஓட்டுவதாம்?
‘ஆறே ஆறு மாசம் தான் டா… அப்பறம் உனக்கே உனக்குன்னு ஒருத்தி. அவ கூடவே சேர்த்து உனக்குன்னு ஒரு குடும்பம்!’ நினைக்க நினைக்க இனித்தது ரகுவிற்கு. அதே இனிமையான மனதோடு அலுவலகம் கிளம்பிய ரகு, கைப்பேசியில் அழைப்பு வரவும் அதை ஏற்றான். பேசிக்கொண்டே வெளியே வந்த ரகு, அன்றை ‘மறதி’ கோட்டாவை நிறைவேற்றக் கதவைப் பூட்டி சாவியை எடுக்க மறந்திருந்தான்.
“கிளம்பியாச்சா? சாப்டியா? நேத்து திரும்பவும் தலைவலியாமே… வேற டாக்டர பார்போம். சரியா? இந்த வாரம் வரத்தான?” என அவன் பேபி கேட்டதற்கெல்லாம் தலை அசைத்தான். “எல்லாத்துக்கும் பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டு. ஆனா, இந்தப் பக்கம் வந்திடாத. சரி விடு, உன் வேல அப்படி. ஹேவ் அ வொண்டர்ஃபுல் டே” என என்றும் போல் இன்றும் வாழ்த்தி வைத்தாள். அவனும் என்றும் போல் தலையை ஆட்டி வைத்தான். என்றும் போல் என்றால்? திருமணப் பேச்சு ஆரம்பித்த அன்றிலிருந்தே இப்படியான தலை அசைப்போடு செல்கிறது அவன் நாள்கள்.
தலை அசைப்பதோடு நிற்காது, “தெரிஞ்சவன்னு சம்பரதாயத்த மாத்த நினைக்கதீங்க. பொண்ணு பாக்க வருவேன். பஜ்ஜி, சொஜ்ஜி, காபி எல்லாம் தூக்கலா இருக்கணும். பொண்ணுட்ட தனியா பேசி என் முடிவ சொல்லுவேன்” என அட்டூழியம் செய்தான். நடிப்பும், வசனமும் ரகுவினதாக இருக்க, கதை, திரைக்கதை அனைத்திற்கும் அம்மணியே சொந்தக்காரி.
“நான் பட்டு உடுத்துவேன். எனக்கு மேச்சிங்கா, நான் எடுக்கிற லினென்ல சட்டையும், சில்வர் பாடர் போட்ட வேட்டியுமா வரணும் நீ” என்றிருந்த தாராவின் ஆசைப்படி, தாத்தா பாட்டியோடு ரகு வேட்டி சட்டையில் பெண்பார்க்கச் சென்றான். அவளுக்கு எப்படியோ, ரகுவின் முகத்தின் டன் டனாக வெட்கம் வழிந்தோடியது. ஏதோ விளையாட்டாகக் கேட்கிறாள். இருகுடும்பம் தானே என நினைத்தான். ஆனால் ஊரையே கூட்டி வைத்திருப்பாள் என இவன் கண்டானா என்ன? இருவருக்குமான தோழர்களோடு நிறுத்தாது, கோபாலன், சென்பாவில் ஆரம்பித்து, அந்தத் தெருவில் இருந்த நண்டு சிண்டு வரை அழைத்திருந்தாள்.
“மாப்பிள்ளை, வெக்கபடாம எங்க பொண்ண பாருடா” என யார் கூறியதோ, கடைக்கண்ணால் பார்க்கலாம் என நினைத்தவனால் அதைக்கூடச் செய்ய முடியவில்லை.
“மாப்பிள்ளை சார், காபிய எடுங்க. எங்க பொண்ணு எவ்வளவு நேரம் தான் அத நீட்டிட்டே நிப்பா?” பக்கத்து வீட்டு நண்டு வம்பிழுத்தான்.
“காபி கப்ப வாங்குற சாக்குல கைய பிடிச்சுடாதீங்க” என ஒருவன் சிரிக்க, ‘டேய்… மீ பாவம் டா’ எனச் சிரிப்பை அடக்க முடியாது அமர்ந்திருந்தான் ரகு.
“எங்க பையன், பொண்ணோட தனியா பேசணுமாம்” என்றான் ஒருவன். “பேச்சு வார்த்த முடியற வரை அப்படி எல்லாம் எங்க பொண்ணுட்ட பேச முடியாது” என்றாள் ஒருத்தி. நடக்கும் கூத்தைப் புன்னகை முகமாகப் பெரியவர்கள் பார்த்திருந்தனர்.
‘சொல்லட்டுமா?’ என அவன் பார்க்க, ‘சொல்லேன்’ என அவள் பார்க்க, ஊர் பார்க்க அவள் கரம் பற்றி தன் விருப்பத்தை உரைத்தான் ரகு.
தங்களின் ஒட்டு மொத்தப் பாசத்திற்கும் சொந்தக்காரர்கள் வாழ்க்கையில் இணையப் போவதைப் பார்த்து அமர்ந்திருந்த பெற்றவர்களுக்கு மனதில் அப்படி ஒரு நிம்மதியும் மகிழ்ச்சியும்.
பாட்டி, அவர் பேத்தியின் தலையில் பூ வைத்து, கழுத்தில் ஆரம் போட்டு, “நீயும் என் பேரனும் எல்லாச் சுகமும் பெற்று, தீர்காயுசோட வாழணும்” என நெற்றியில் முத்தமிட்டார்.
பெற்றவரும், குடும்பமும் இல்லை என்ற குறை தெரியாது இருக்க, நகுலனும் அவர்கள் குடும்பமும் நேரலையில் புன்னகை வாடா முகத்தோடு அனைத்தையும் பார்த்து அமர்ந்திருந்தனர். கேலி கிண்டலோடு காரமும் இனிப்புமாக அன்றைய பெண்பார்க்கும் படலம் மிக மிக நிறைவாக முடிந்தது. நகுலனும் குடும்பமும் வர தோது படுவது போல் நிச்சயதார்த்தத்திற்கு நாளும் அன்றே குறிக்கப்பட்டது.
அன்றிலிருந்தே, நிச்சயத் தினத்திற்கு அலைந்து திரிவதற்கு ரகுவிற்கு வசதிபடவில்லை என்பதால், பெண்-மாப்பிள்ளையின் உடை தேர்வுக்கும், அவளுக்கான அணிகலன் தேர்வுக்கு மட்டுமாவது வா எனப் பிடுங்கிக் கொண்டிருக்கிறாள் பெண்.
வேகமாகக் கரைவதாகத் தோன்றினாலும்… ஆமை வேகத்தில் செல்கிறது எனப் புலம்பினாலும், ஒரு நாளுக்கு 24 மணி நேரம் தான் அனைவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. பிறகு பயன்படுத்த அதைச் சேமிக்கவும் முடியாது, வேண்டாம் என வெட்டி எறியவும் முடியாது. பல வேகத்தில் நாள்கள் கடந்து, அனைவரும் காத்திருந்த ரகு-தாராவின் நிச்சய நாளும் வந்து சேர்ந்தது.
சுற்றுப்புறத்தில் இருந்த தோழமைகள், குடும்ப அங்கத்தினர், அக்ஷராவின் பெற்ற வீட்டுக் கூட்டம் என அந்தச் சிறிய மண்டபம் நிறைந்து வழிந்தது. ஒரு குறை என்றால், அது ரகுவோடு சேர்ந்து சுற்றிய அவன் கல்லூரி நட்புகளும், அவனோடு தங்கியிருந்த இரு நண்பர்களும் வர முடியாது போனதே. ஒருவன் துபாயில் மாட்டிக் கொண்டான். மற்றவன் அவன் தோழர்களோடு வெளிநாட்டைச் சுற்றிக் கொண்டிருக்கிறான்.
“நிச்சய போட்டோ அனுப்பு டா மச்சான்… சிஸ்டர்ட்ட போன குடுடா, விஷ் பண்றேன்” என்ற இருவருக்கும், “வேணும்னா கல்யாணத்துல வந்து நேர்ல பார்த்து விஷ் பண்ணிக்கோங்க டா. ஃபோட்டோவும் கிடையாது ஒண்ணும் கிடையாது போங்கடா” என ஆத்திரத்தில் கத்திவிட்டான்.
மாலை வேளையில் விசேஷம் வேண்டும் எனத் தாரா கேட்டிருக்க, விஜயா பாட்டியோ காலை தான் விசேஷம் இருக்க வேண்டும் என அடமாய் நின்றார்.
“மேரேஜ் ரிஷப்ஷன் நமக்கு பிடிச்ச மாதிரி வச்சுகலாம்” எனப் பாட்டியின் ஆசைக்கு விட்டுக்கொடுத்ததின் பலனாக, காலை ஒன்பது மணி அளவில் விழா ஆரம்பமானது. செல்லச் சீண்டல்களும், பொங்கி வழியும் வெட்க சிரிப்பும், சின்ன முறைப்புமாக இருவரும் விழாவை ரசித்தனர்.
விழாவின் நிறைவாகத் தாம்பூலம் மாற்றப்பட்டு, பெண் மாப்பிள்ளை மோதிரம் மாற்றிக் கொண்டனர். காலை விருந்தில் ஆரம்பித்து மதிய உணவோடு நிச்சயதார்த்த விழா நிறைவாக நிறைவடைந்தது.
அன்று இரவு பாட்டி வீட்டு வராந்தாவில் தாராவின் குடும்பத்தோடு ரகுவின் குடும்பமும் அமர்ந்திருந்து கதை அடித்துக் கொண்டிருந்தனர். இரு குடும்பத்தினருக்கும் அளவில்லா மகிழ்ச்சி.
“ஒரு வாரம் இருந்துட்டு போகலாமே” சந்திரிகா, அக்ஷரா மற்றும் நகுலனிடம் கேட்க,
“கல்யாணத்துக்கு லீவ் தேவைப்படும். ஒரு மாசம் லீவ் அப்ளை பண்ணி இருக்கேன். என் மகனுக்குன்னு நேரம் ஒதுக்கினதே இல்ல… கல்யாண வேலைய முழுசா நான் பாக்கணும்.” நகுலன் பதில் அளித்தார்.
இப்படியாக இவர்கள் பேசிக் கொண்டிருக்க, இளையவனின் கண்கள் மனதைக் கொய்தவளைத் தேடின. அவள் இங்கும் இல்லை அவள் வீட்டிலும் இல்லை என்றதும் அவன் பார்வை அவள் வீட்டு மாடிக்குச் சென்றது. பார்வை படும் இடத்தில் அவள் இல்லை. இவன் தவிப்பைப் பார்த்து, “மூணு பேருமா மாடிக்கு போனாங்க. கீழ வந்த பசங்க ரெண்டு பேரும் பக்கத்துக் கடைக்கு போயிருக்காங்க. அவ வந்த மாதிரி தெரியல. மேல தான் இருக்கான்னு நினைக்கிறேன்” என்றார் தாத்தா.
‘ஓர் நாள் உன்னைக் காணாவிடில்
எங்கே உன் அன்பென்று கேட்கின்றன
நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே’
கைப்பேசி பழைய பாடல் ஒன்றை வீசிய காற்றோடு கலந்து கொண்டிருந்தது. நிலவு மங்கை அவனை ஏமாற்றாது அவன் வரவிற்காகக் காத்திருந்தாள்.
மலைக் கோட்டையின் பக்கமாக நின்றிருந்தவளைப் பின்னோடு அணைத்தவனின் மார்போடு சாய்ந்தவள், “வர இவ்வளவு நேராம் ஆச்சா?” எனப் புன்னகைத்தாள்.
“முழு கூட்டமும் இன்னும் வாசல்ல தான் இருக்கு. எஸ்கேப் ஆகி வர நேரம் பிடிக்காதா?” என்றவன் பின்னிருந்தவாரே, கன்னத்தோடு கன்னம் இழைத்து “என் பேபிமா ஹப்பியா?” எனக் கேட்டான்.
“ரொம்ப ரொம்ப” என்றாள் முழுவதுமாக அவன் மீது சாய்ந்து.
“இந்த நிமிஷம் என் சந்தோஷத்துக்கு அளவே இல்ல பேபி” என்றவன், “என் சந்தோஷத்துக்குக் காரணமா இருக்க என் பேபிக்கு…” எனப் பாதியில் நிறுத்தியவன், அவள் வலது கரத்தின் மோதிர விரலில் இதய வடிவில் மோதிரம் ஒன்றை அணிவித்தான். மோதிரத்தைக் காட்டிலும் பார்த்தவள் கண்கள் மின்னின.
“யசோதரா ரகுவீர்! இன்னைல இருந்து நீ என் பொண்டாட்டி. இந்த ஹார்ட்டுக்குள்ள இருக்க Yயும் Rரும் எப்படி பின்னி பிணைஞ்சு இருக்கோ… நம்ம ஹார்ட்டும் எப்பவும் இப்படித் தான் பின்னி பிணைஞ்சு இருக்கணும் பேபி. தாலி கட்டின பின்னாடி நாம இப்படி…” என்றவன் அவள் காது மடல்களைக் குட்டி குட்டி முத்தங்களால் கூசச் செய்தானா, இல்லை அவன் கூறிய பெரிய பெரிய கனவுகளால் கூசச் செய்தானா? அவர்களே அறிவார்கள்.
பல இச்சுகளுக்கு இடையே, “ல்ல்லகு பையா… போதும்” என்ற செல்லச் சிணுங்கலும் காற்றோடு கலந்தது. இரு ஜீவன்கனின் ஆன்மாவும் ஒன்றோடு ஒன்றாகக் கலந்து… ஊனும் உயிரும் உணர்வும் கலந்து… இறக்கை விரித்து விண்ணில் பறந்தால்… இப்படித் தான் இருக்குமோ?
‘பரவாலியே… தேறிட்ட ரகு’ என்ற நிலவுக்கு இன்று போர்வைக்குள் போகும் எண்ணமில்லை போலும், வெட்கம் கெட்டு வேடிக்கை பார்த்து நின்றது.
‘விழுந்தாலும் உன் கண்ணில் கனவாக நான் விழுவேன்
எழுந்தாலும் உன் நெஞ்சில் நினைவாக நான் எழுவேன்
மடிந்தாலும் உன் மூச்சின் சூட்டால் மடிவேன்
பிறந்தாலும் உனையே தான் மீண்டும் சேர்வேன்
இனி உன் மூச்சை கடன் வாங்கி நான் வாழுவேன்’ கைப்பேசியோடு அவனும் முணுமுணுத்தான்.
கைகள் இரண்டையும் அவள் விரல்களோடு கோர்த்து வயிற்றோடு கட்டிக் கொண்டவனுக்குள் அப்படி ஒரு நிம்மதி. கட்டிக் கொண்டவன் கரத்தின் மீது அவர்களின் புகைப்படம் தாங்கிய நினைவுப் புத்தகம் ஒன்றை வைத்தாள் தாரா. புத்தகம் தாங்கிய மயில் இறகு அவனுக்குள் ஏதேதோ செய்தது. என் எல்லாமே உனக்குத் தான் என்கிறாளா?
கனவுகள் எல்லாம் இப்படி எளிதில் கைகூடினால் அவன் சின்ன இதயம் எப்படி அதைத் தாங்கும்? “யசோ பேபி” என்றவனுக்கு அந்த இனிமையின் கனத்தைத் தாள முடியவில்லை. இந்த மாடி… இந்த இடம் எத்தனை நினைவுகளைத் தாங்கி நிற்கிறது? எத்தனை கனவு?
அருகில் இருந்த அவர்களின் கட்டிலில் அவன் அமைதியாக அமர்ந்துவிட, அருகில் வந்து அவன் கேசம் வருடியவளின் வயிற்றில் முகம் புதைத்துக் கொண்டான். அவன் காதலை எல்லாம் ஒன்றை வார்த்தையில் புதைத்து, “பேபி” என்றான், கண்கள் மூடி. மூடிய இமைகளுக்கு இடையே சொட்டு நீர் எட்டிப் பார்த்து புடவை மறைக்காத மெல்லிடையை முத்தமிட்டது.
அந்தப் பழைய கட்டிலும், அவர்கள் நினைவுகளைத் தாங்க போகும் நினைவுப் புத்தகமும், ஏகாந்த இரவும், கொட்டக் கொட்ட வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நிலவும் அவர்கள் காதல் காவியத்திற்கு சாட்சிகளாக நின்றன.