Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே

நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே – 15.1

நாட்காட்டியில் தேதியைக் கோபமாகக் கிழித்தாள் காமாட்சி இன்றோடு நாற்பத்தைந்து  நாட்கள் ஆகிறது கணவன் வீட்டிலிருந்து தாத்தா பாட்டி வீட்டிற்கு வந்து,  குளித்து அலுவலகம் கிளம்பிக்கொண்டிருந்தவளின் அலைபேசி அடித்துக்கொண்டிருந்தது அவன்தான் தெரியும் என்றாலும் எடுக்கவில்லை.

 

 



Advertisement

அது எப்பொழுதும்போல அடித்து ஓய்ந்தது “பேசுங்க ராணியம்மா உங்க குரல் கேக்காம தூக்கம் கூட வரல” என்று அவனின் ஏக்கம் நிறைந்த குரல் வாட்சப்பில் வந்து குதித்திருந்தது, தினமும் ஏதேனும் வரும் அந்தக் குரல் மனதை அறுத்தது என்றாலும் பேசவில்லை.

 

Advertisement

 

Advertisement

“பேசமாட்டேன் போடா ரௌடி… கருவாப்பயலே நான் சொல்லச் சொல்லக் கேக்காம விட்டுட்டு போயிட்டு இப்போ என்ன” என்று முறுக்கிக்கொண்டாள்,  அவசரமாக இரண்டு இட்லிகளை விழுங்கியவள் வண்டியை எடுத்துக்கொண்டு அலுவலகம் கிளம்பிவிட்டாள் போகும் வழியெங்கும் கண் கண்ட கணவனை அர்ச்சித்துக்கொண்டே சென்றாள்.

 

Advertisement

 

அறையிலிருந்து வெளியில் வந்தவன் உணவுமேசையில் சித்ராவும் தாயும் அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டுக் கார் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினான் “வேலு நில்லுடா சாப்பிட்டு போ” என்ற தாயை திரும்பிக் கூடப் பார்க்காமல் வெளியில் சென்றான்.

 

 

தந்தையிடம் “திருச்சிவரைக்கும் சவாரி போறேன் வர ரெண்டு நாள் ஆகும்” என்று கிளம்பிச்சென்றான், எண்ணமெல்லாம் மனைவியே அவள் குரல் கேட்டே ஒரு மாதம் கடந்துவிட்டது ஒரு வார்த்தை வாய் திறந்து பேசுவதில்லை.

 

 

அன்று கொஞ்சம் நாள் தாத்தா பாட்டி வீட்டில் இரு என்று கூறி கிளம்ப சொன்ன அன்று தன்னை கட்டிக்கொண்டு அப்படி கெஞ்சினாள் “வேண்டாம் ப்ளீஸ் போகமாட்டேன்,  நான் இல்லாம இருப்பீங்களா என்னால முடியாது… பேசிக்கலாம் ப்ளீஸ்” என்று அழுது கெஞ்சி கோபப்பட்டு என்று பேசியவள்தான் அதன்பிறகு ஒருவார்த்தை பேசவில்லை பார்க்கவும் விடுவதில்லை.

 

 

இருந்திருந்து ஆசைப்பட்டு ஒருத்தியை கட்டி அவளுடன்  முழுதாக ஒரு மாதம் கூட நிம்மதியாய் வாழமுடியவில்லை என்னடா  பிழைப்பு இது என்று சலிப்பாக இருந்தது, காரணமானவர்களை ஒன்றும் செய்யவும் முடியாத நிலைவேறு கோபத்தை கூட்டியது.

 

 

திருமணத்தின் மறுநாள் காலைக் கீர்த்திவாசன் சித்ராவோடு பேசி முடித்து இவர்கள் கோவிலுக்குச் சென்றுவிட்டு வர அவர்கள் கிளம்பியிருந்தனர் “எங்கம்மா ரெண்டுபேரும்” என்றான் வீட்டிற்குள் நுழைந்ததும்.

 

 

“மாப்ள தான் ஏதோ அவசர வேலைன்னு கூட்டிட்டு போய்ட்டாரு, சித்ரா இருக்கட்டும்னு சொன்னேன் பரவாயில்லை புதுசா கல்யாணம் ஆகியிருக்கு அவங்க கொஞ்சம் தனியா இருக்கட்டும் அப்பறம் வரோம்னு சொல்லிட்டாரு” என்க.

 

 

மருதவேலு சாதாரணமாகக் கடந்துவிட்டான் காமாட்சிக்கு என்னமோ தவறாகவே பட்டது அன்று மாலை ராமலிங்கம் பழனிக்கு போக ட்ரெயின் டிக்கெட்டோடு வந்துவிட்டார்.

 

 

“என்னங்க திடீர்ன்னு… மறுவீடு சடங்கெல்லாம் இருக்கே இப்போ போய் டிக்கெட் கொண்டுவரீங்க அப்படியே எப்படி வர முடியும்” என்று எரிச்சல்பட்டார் மயிலம்மா.

 

 

“இங்கபாரு என் மவனுக்கு நல்லபடியா கல்யாணம் நடக்கணும்னு வேண்டியிருந்தேன் இப்போ வேண்டுதல் தான் முக்கியம் உடனே போகணும் உனக்குப் புள்ள மேல அக்கறை இல்லனா வராத நான் போகத்தான் போறேன் மறுவீடு எல்லாம் நாலு நாள் கழிச்சு பாத்துக்கலாம் சம்மந்திகிட்ட சொல்லியாச்சு” என்றவர் தன் துணிகளை எடுத்துவைக்க கணவனைக் கரித்துக்கொட்டிக்கொண்டே உள்ளே சென்றார் மயிலம்மா.

 

 

மீசை நீவி இதழ் கடித்து புன்னகையை ஒலித்துக்கொண்டான் மருதவேலு தங்களுக்காகத்தான் தந்தை இப்படி உடனே பழனிக்கு போகிறார் என்று அவனுக்குப் புரிந்துவிட்டது “வீட்டைப் பாத்துக்கோ” என்று மருமகளிடம் நொடிப்பாகச் சொல்லிச் சென்றார் மயிலம்மா மகனை அர்த்தமாகப் பார்த்துச் சென்றார் ராமலிங்கம்.

 

 

அவர்கள் சென்ற அடுத்தநொடி மனைவியை அள்ளிக்கொண்டான் மருதவேலு “ஐயோ என்ன என்ன” என்று பதறினாள் அவள்,  முதல் கட்ட தயக்கங்களை களைய இந்தத் தனிமை அவர்களுக்குத் தேவைதானே ஓட்டிக்கொண்டே திரிந்தான் கொண்டாடி தீர்த்தான்,  அடுப்படியில் இருந்தாலும் வாசலில் கோலமிட்டுக்கொண்டிருந்தாலும் குளித்துக்கொண்டிருந்தாலும் தோளில் தூக்கி போட்டுக்கொண்டு சென்றுவிடுவான்.

 

 

அவளைக் களைப்படைய செய்யும் வேலையை நான்கு நாட்களும் சிறப்பாகச் செய்துகொண்டிருந்தான் “நீங்க என்ன வில்லனா ஏன் இப்படி தூக்கிட்டு போறீங்க” என்றாள்  “கூப்பிட்டா நீ வர்ரதில்லையே அப்போ வில்லன் வேலைதானே செய்ய முடியும்” என்றான்.

 

 

தாய் வீடு செல்ல வேண்டும் என்ற சித்ராவை வாசனே பிடித்துவைத்துக்கொண்டான் விடாமல்,  நான்கு நாட்களும் நொடிகளாகக் கடந்துவிட்டது இவர்களுக்குத் திரும்பி வந்து மருமகளை பார்த்த மயிலம்மாவிற்கு எரிச்சல்தான் இன்னும் அழகாகிவிட்டதாகத் தோன்றியது அவருக்கு.

 

 

மறுவீடு விருந்து உறவினர் விருந்து என்று பத்து நாட்கள் ஓடியிருக்க அன்றுதான் மறுபடியும் அலுவலகம் சென்றாள் காமாட்சி அவனால் தினமும் கொண்டு சென்று விட முடியாது சவாரி எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம் என்பதால் அவளே எப்பொழுதும் போலச் செல்லத்தொடங்கினாள், அவளுக்கு வாசனின் நினைவே இல்லை அலுவலகம் வந்தாலும் வேலையில் இருந்தாலும் நினைவுகளைக் கணவனே களவாடினான்.

 

 

ஒரு வாரத்திற்கு பிறகு மகளைப் பார்த்தே பத்து நாட்கள் ஆகிறது ஏனோ மாப்பிளை அனுப்பவில்லை என்று புலம்பிக்கொண்டிருந்தார் மயிலம்மா அப்பொழுதுதான் வாசனின் வேலையைப் பற்றியே நினைவு வந்தது அவளுக்கு.

 

 

இரவுணவை உண்டுகொண்டிருந்த வேலுவும் “ஆமா ராணியம்மா நீங்கப் பாத்தீங்களா மாப்பிளையை ஆபிஸ்ல” என்றவன் “ஆனா அவர் எப்போவாவதுதான் ஆபிஸ் போவார் இந்தக் கொரோனாவுக்கு அப்புறம் வீட்ல இருந்தே வேலை செய்றாங்களே அப்படிதான் அவருக்கும் உங்களுக்கு அப்படி இல்லையா” என்றான் அவளிடம்.

 

 

“இல்ல எங்க டீம்ம்கு அது கிடையாது” என்றவள் மனதில் மற்றவர்களுக்கும் அப்படிதான் இவர் மட்டும் எப்படி  இத்தனை நாட்கள் வீட்டில் இருக்கிறார் என்ற எண்ணமே.

 

 

அடுத்தநாள் முதல் வேலையாக அவன் பெயரை வைத்துத் தேடி பார்த்தாள் ஹெச்.ஆர் டிபார்ட்மென்ட் ஆகையால் மற்ற ஊழியர்களின் விவரங்கள் எடுப்பது கொஞ்சம் எளிது அதுவும் ஆக்கவுண்ட்ஸ் என்னும்போது சம்பளம் முதலான தகவல்களும் பார்க்கலாம்.

 

 

அவனுடைய டீம் ஒரு எட்டுஅடுக்கு தளத்தின் நான்காம் தளத்தில் இருந்தது, காரணம் இல்லாமல் அங்குச் செல்ல முடியாது இவளுடையது அதற்கடுத்த ஏழடுக்கு தளத்தின் மேல் தளத்தில் இருந்தது அவனுடைய பெயரை வைத்துத் தேடிப்பார்த்தாள் கீர்த்திவாசன் என்ற பெயரிலே பத்து பேர் இருந்தனர்.

 

 

உள்ளே நுழைந்து விவரங்களை எடுக்க முடியவில்லை அக்கவுண்ட்ஸ்  என்பதால் அவனுடைய சம்பள விவரம் அவளால் பார்க்க முடிந்தது அதில் ஒரு கீர்த்திவாசன் மட்டும் இரண்டு வருடமாகச் சம்பளம் வாங்குவதில்லை அவனுடைய பெயருக்கு நேரே டெர்மினேடட்  (வேளையிலிருந்து நீக்கப்பட்டதாக) என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

 

 

அவனை வேலையை விட்டு அனுப்பியே இரண்டு வருடங்கள் ஆகியிருந்தது அதும் அவனுடைய செர்டிபிகேட்ஸ் கொடுக்கப்படவில்லை அவன் மீதுபுகார் இருக்க காவல் துறை நடவடிக்கை காரணமாகக் கரும்புள்ளி இருந்தது அதிர்ந்துதான் விட்டாள்,  வேலையே இல்லை வேறு எங்கும் வேளையிலும் சேர முடியாது ஆனால் அந்த உண்மையை மறைத்துத் திருமணத்தையும் நடத்தி அனைவரையும் ஏமாற்றியிருக்கிறான்.

 

 

அங்கேயே சில வருடமாக வேலை  செய்யும் வேறு பெண்ணிடம் தெரிந்த பெண்ணின் கணவன் என்று கூறி விவரம் கேட்டாள் “வேலைல ஆள் கொஞ்சம் சுமார்தான் டீம்ல கொஞ்சம் பிரச்சனை ஆகியிருக்கு அந்தக் கோபத்துல இவன்கூட பிரச்சனை செஞ்ச பையனும் அவன் கேர்ள் பிரெண்டும் பார்கிங்கில ஒண்ணா இருந்தது போட்டோ எடுத்திருக்கான் அந்தப் பொண்ணு போட்டோவை டெலிட்  பண்ண சொல்லியிருக்கு இவன் கேக்கல கைகலப்பாகி சண்டை முத்த இவன் தள்ளிவிட்டதுல அந்தப் பொண்ணுக்கு  தலைல அடி”.

 

 

 

“அந்தப் பொண்ணு போலீஸ் கேஸ் குடுத்துடுச்சு தப்பா நடந்துக்க பாத்தான்னு ஒரே பிரச்சனை, கேஸ் இருந்ததால  ஒழுங்கா ரிலீவ் ஆகல இவனோட அப்பா அம்மா எல்லாம் வந்தாங்க அந்தப் பொண்ணுகிட்ட பேசிச் சமாதானப்படுத்தி இவனை அந்தப் பொண்ணு கிட்ட மன்னிப்பு கேக்க வெச்சு அப்புறம்தான் முடிஞ்சிச்சு”.

 

 

“ஆனாலும் ரிலீவ் ஆர்டர் பிளாக் மார்கோடத்தான் வரும் இவனும் அதுக்கப்புறம் ஆபிஸ் பக்கமே வரல செர்டிபிகேட் கூட வாங்காம என்னதான் பண்றானோ இவனுக்கெல்லாம் எப்படி விசாரிக்காம பொண்ணு கொடுக்குறாங்க” என்றாள் அவள்.

 

 

இவளுக்கு வலித்தது எப்படி ஏமாந்தான் கணவன் எப்படி நடந்தது ஒன்றுமே புரியவில்லை அதற்குமேல் வேலையில் கவனம் இல்லை கணவனுக்கு அழைத்து எங்கிருந்தாலும் மாலை தன்னை அழைக்க வர வேண்டும் இன்று வெளியில் செல்கிறோம் என்று கண்டிப்பாகச் சொன்னாள்.

 

 

இப்படியெல்லாம் பேசமாட்டாளே என்று எண்ணியவன் சீக்கிரமே வந்துவிட்டான் “என்னாச்சு” என்றான் அவள் முகத்தின் வாட்டம் பார்த்து.

 

 

“கொஞ்சம் தூரமா டிராபிக் இல்லாத இடம் போலாம்” என்றாள்.

 

 

“என்னனு சொல்லு பதறுது உடம்பு முடியலையா, அம்மா எதுவும் சொன்னுச்சா அந்தப் பொருக்கி வந்தானா” என்று வரிசையாக அடுக்கினான்.

 

 

“அதெல்லாம் இல்ல ப்ளீஸ் போங்க” என்றாள்.

 

 

அதன் பிறகு ஒன்றும் பேசாமல் ஹைவே சென்று ஓரிடத்தில் ஓரமாக நிறுத்தியவன் “என்னாச்சு” என்றான் அவள் முகத்தைப் பற்றித் திருப்பி, அவளிடம் நிறைய தயக்கங்கள் வார்த்தைகளைக் கோர்க்க மிகவும் சிரமப்பட்டாள்.

 

 

“என்ன ராணியம்மா” என்றவன் குரல் பதறியது “இல்ல…” என்றவள் ஒரு பெருமூச்சை வெளியிட்டு அனைத்தையும் சொல்லி முடித்தாள்.

 

 

“என்ன” என்று அதிர்ந்தான் “இல்ல அப்படிலாம் இருக்காது நீ நீங்க நல்லா விசாரிச்சீங்களா” என்றான், என்னவோ அவனிடம் நிதானம் இல்லை எப்படி இது சாத்தியம் அப்படியா ஏமாந்துவிட்டோம் என்றெண்ணியவன் தலையை அழுந்தக் கோத.

 

 

“உங்க சொந்த மாமா பையன் அவர் அங்க வேலை செய்றது உங்க எல்லார்க்கும் தெரியும் இந்தப் பிரச்சனையைக் கூட வெளில வராமலே  முடிச்சுட்டாங்க,  இப்போ நிறைய பேர் வீட்டில இருந்தே வேலை செய்றதால உங்களுக்கும் சந்தேகம் வரல உங்கமேல தப்பில்லை” என்றாள் அவன் கையைப் பற்றி.

 

 

“எப்படி இப்படி ஏமாத்தினாங்க வேற நல்ல நல்ல சம்மந்தம் வருது இதைவிட நிறைய குடுப்பாங்க உனக்காகத்தான் யோசிக்கிறேன்னு அம்மாகிட்ட அத்தை அடிக்கடி சொன்னது இதுக்குத்தானா வெளில பொண்ணு எடுத்தா நாளைக்கு இது பிரச்சனை ஆகும் இங்க சொந்தம்…” என்றவன்.

 

 

“சரி தப்பு நடந்துச்சு அதைச் சரி பண்ணாம இது என்ன இப்படியே இருந்தா எப்படி வாழ்வான் இவனை நம்பி என் தங்கச்சி அவ வயித்துல பிள்ளை” என்றவனுக்கு இதைத் தாங்கவே முடியவில்லை,  எப்படி பட்ட துரோகம் இவனைக் கட்டிக்கொள்ளவா இவள் இத்தனை ஆர்ப்பாட்டம் செய்தாள் இவனுக்காகவா என் கனவைத் தொலைத்தேன் என்று மனம் எரிந்தது.

 

 

“இன்னைக்கு அவனைக் கொள்ளாம விடமாட்டேன்” என்று அவன் வண்டியை எடுக்க “ஐயோ ப்ளீஸ் நான் சொல்றதை கேளுங்க இப்போ பொறுமை தேவை ப்ளீஸ் ப்ளீஸ்” என்று கெஞ்சி அவனைக் கொஞ்சம் சமாதானப்படுத்தியவள் “மாமாகிட்ட மொதல்ல பேசுங்க” என்றாள்.

 

 

வீடு வந்தவர்களைப் பார்த்துவிட்டு முணுமுணுத்துக்கொண்டே எழுந்த மயிலம்மா “உனக்கு ஆபிஸ் ஆறு மணிக்கே முடியும்தானே உன் புருஷன் கூட வெளில போறேன்னா  சொல்லணும்னு தெரியாதா நாங்க எல்லார்க்கும் வடிச்சு கொட்டிக்கிட்டு இருக்கணுமா” என்றார்.

 

விழிகளை இறுக மூடித் திறந்த மருதவேலு ஏதோ சொல்லவர “இன்னைக்கு கொஞ்சம் வேலை அதிகம் அதான் அவரை வரச் சொன்னேன் நாங்க சாப்பிட்டோம் எதுவும் வேண்டாம்” என்றவள் உள்ளே சென்றுவிட்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!