Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அமுதமழை சாரல்

அமுதமழை சாரல் 43-2

அத்தியாயம் 43-பார்ட் 2

விழா முடிந்ததும் ஒரு குரூப் சீதாலட்சமி வீட்டிற்கும் ஒரு குரூப் கருணா வீட்டிற்கும் என்று பிரிந்து சென்றனர்.

ஹர்ஷித்தாவிற்கு இது ஒன்பதாம் மாதம். ஒன்றிரண்டு நாட்களில் குழந்தை பிறந்துவிடும் என்று மருத்துவர் கூறியுள்ளார்.

ஏழாம் மாதம் வளைகாப்பு முடிந்ததும் வர்ஷித்தாவை தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டார் சீதா லட்சுமி. ராஜி ஒரு மாதம் முன்பு வந்துவிட்டார்.



Advertisement

நாள் நெருங்கவே விக்ராந்த் கருணா அவினாஷ் மூவரும் கிளம்பி வந்து இருந்தனர். வந்த இடத்தில தான் கருணாவின் ஸ்பீச். ஹர்ஷித்தாவை பாட்டியின் பொறுப்பில் விட்டுவிட்டு அனைவரும் விழாவிற்கு வந்திருந்தார்கள்.

திரும்பி செல்கையில், பாரி, வில்வா, ராஜி, விக்ராந்த், சீதாலட்சமி மிஸ் வீட்டிற்கும் மற்றவர்கள் கருணா வீட்டிற்கும் வந்தனர்.

அங்கே கருணா வீட்டில் பெண்கள் எல்லாம் வரவேற்பறையில் இலகுவாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். ஆண்கள் எல்லாம் வெளியில் வராண்டாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

Advertisement

“நீங்க அங்க போலயா அண்ணி?” என்றாள் கருணா வர்ஷித்தாவிடம்.

Advertisement

“இல்ல கருணா, அங்கே மீ கூட சேர்ந்து உங்க அண்ணாவும் பாரியும் செய்யுற அலும்பு இருக்கே.. அப்பப்பா முடியாது.. அதான் நான் எஸ்கேப்” என்றாள் சிரித்துக்கொண்டே.

உண்மையிலே அவளுக்கு அங்கே செல்ல ஆசை தான். ஆனால் கருணாவும் அவினாஷும் வந்திருக்கையில் வீட்டு மருமகளாக அவர்களை கவனிக்க வேண்டும் என்றே இவர்களுடன் வந்துவிட்டாள். சுமதி எதுவும் சொல்ல மாட்டார் தான், இருந்தாலும் அதிக வேலை செய்து கால் வலியை இழுத்துக்கொள்வார்.

“பார்த்தீங்களா என் மருமகளை” என்று சுமதி கெத்தாக பாட்டியை பார்த்தார்.

Advertisement

“என்ன பார்வை எல்லாம் பலமா இருக்கு? உன் மருமகள் தங்கம்னா என் மருமகளுக்கு மட்டும் என்ன குறைச்சலாம்?” என்றார் பாட்டியும் சிரித்து கொண்டே.

“எனக்கு ரொம்ப எக்சைட்டா  இருக்கு.. பாரிவேந்தனுக்கு என்ன பாப்பா பிறக்கும்னு நினைக்கிறீங்க?” என்றாள் கருணா.

“அவனுக்கு பொண்ணு தான் வேணுமாம் பாப்பா.. ஆனா அவன் பொண்ணை யாரும் பாப்பான்னு கூப்பிட கூடாதாம்” என்றார் தமயந்தி.

“ஆமா அத்தை.. அண்ணா சொல்றது கரெக்ட் தானே?” என்றாள் அருந்ததி.

பேசி கொண்டே நேரம் போனதே தெரியவில்லை.

“கருணா, நாங்க கூட பாரியும் வில்வாவும் ஒரே மாதிரி தானே எல்லாம் செய்வாங்க, அதான் ஒரே நேரத்துல தான் குழந்தையும் பெத்துக்குவாங்கனு நினைத்தோம்.. ஆனா ஹர்ஷ் மட்டும் மாசமா இருக்கவும் நாங்க எல்லாரும் கொஞ்சம் பயந்துட்டே இருந்தோம்.. என்ன கலாட்டா பண்ண போறாங்கன்னு”, என்றார் சுமதி.

வர்ஷித்தா எதாவது தவறாக நினைத்துகொள்வாளோ என்று கருணா வேகமாக திரும்பி வர்ஷித்தாவை பார்த்தாள்.

அதை கவனித்த பாட்டி,”மிகவும் எதார்த்தமான பொண்ணுங்க ரெண்டு பேரும். சூது வாது தெரியாது.. உங்க அம்மா சொன்னதை சரியா தான் எடுத்துக்குவா, வர்ஷ் தப்பா எல்லாம் ஒன்னும் நினைச்சுக்க மாட்டா” என்றார் பாட்டி கருணாவிடம் யாருக்கும் கேக்காத வண்ணம்.

“ஆனா கருணா, ஹர்ஷ்  மாசமா இருக்கிறதுல வில்வா தான் ஒரே கொண்டாட்டம்.

என் நண்பனுக்கு குழந்தை வரப்போகுது.. அப்படின்னு, பாரியை தூக்கி ஒரே சுத்து சுத்திதான் கீழே விட்டான்” என்றார் தமயந்தி.

“நானும் ஹர்ஷும் ஒன்னா ப்ரெக்னென்ட் ஆனா, அகாடெமியை  பார்த்துக்க முடியாது  இல்லையா? அதே மாதிரி மனைவியை பார்த்துகிறவங்களுக்கு பிசியோ சென்டர்ல இருந்தும் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணி விடணும் இல்லையா? அதான் முதல்ல ஒருத்தரும் அடுத்த ஒரு வருஷம் கழிச்சு இன்னொருத்தரும்ன்னு வில்வனும் பாரியும் தான் பிளான் போட்டாங்க” என்றாள் வர்ஷித்தா.

“பார்த்தீங்களா எல்லாரும்.. எங்க அண்ணாஸ் எவ்வளவு சூப்பர்ன்னு”, என்றாள்  அருந்ததி.

“போடி அண்ணா கோண்டு, அவனுங்க பண்ண அட்டூழியம் எல்லாம் கொஞ்சமா?” என்றார் பாட்டி.

“என்ன என்ன பண்ணுனாங்க ?சொல்லுங்க பாட்டி?” என்றாள் கருணா ஆசையாக.

“பாரி குழந்தை சிவப்பா இருக்கனும்ன்னு ஒரு கிலோ குங்கமப்பூ வாங்கிட்டு வந்து ஹர்ஷ் பொண்ண சாப்பிட சொல்லி பாடாய் படுத்தி வச்சான். 

அதுமட்டுமா, வெங்காயம் நறுக்கினப்ப கண்ணுல தண்ணி வந்துடுச்சு. அதுக்கு நீ சந்தோசமா இருந்தா தான் பாப்பா ஹாப்பியா இருக்கும்னு அவளை அதுக்கப்புறம்  வெங்காயம்  வெட்டவே  விட மாட்டான்..”

“ஹா ஹா ஹா “

“அதுகூட பரவாயில்ல கருணா, பாப்பா உள்ள இருக்கிற வரைக்கும் பார்த்துக்கிட்டா போதும், வெளிய வந்ததும் நான் பார்த்துப்பேன், இந்த பாட்டை கேளு, இந்த புக்கை படி, அப்படின்னு  ஒரே ரகளை.. இதுக்கு பாரியும் கூட்டு.

குழந்தை பிறந்தபுறம் இவங்க கிட்ட மாட்டிகிட்டு என்ன பாடு பட போகுதோன்னு தான் பயமா இருக்கு”

“ஹா ஹா ஹா.. ஹர்ஷித்தா ஒன்னும் சொல்லலையா?”

“அட நீ வேற கருணா, பொறுமையா தான் இருந்துச்சு முதல்ல, வேகமா நடந்தா பாரி மெதுவா நட ஹர்ஷிம்மான்னு சொல்லுவான்.. அதுக்கு வில்வா பாப்பா சுறுசுறுப்பா இருக்கனும் பாரி, வேகமாவே நடக்கட்டும்னு சொல்லுவான்.. வில்வா ஆப்பிள் கட் பண்ணி சாப்பிட சொன்னா, பாரி ஆரஞ்ச உரிச்சு சேர்த்து சாப்பிடுன்னு சொல்லுவான்.. ஒரு நாள் ரெண்டு பேரும் ஆளுக்கொரு பக்கம் உட்கார்ந்துகிட்டு எங்க நட்பை பத்தி குழந்தை வயித்துல இருக்கப்பவே கேட்கட்டும்னு இவனுங்க ஒண்ணாங் கிளாஸ்ல இருந்து இவங்க நட்ப பத்தி மாத்தி மாத்தி சொல்லிட்டுருந்தானுங்க பாரு, ஹர்ஷ் கடுப்பாகி நல்லா இரண்டு பேர் தலையிலும்  நங் நங்குன்னு கொட்டி வச்சிடுச்சு.. பாவம் காய்ச்சே  போயிடுச்சு..”

“பின்ன, மாசமா இருக்கிற பிள்ளையை பார்த்துக்க நாங்க இத்தனை பேர் இருக்கோம் இல்ல? இவனுங்களுக்கு என்ன தெரியும்னு ஒரே ஆட்டம்.

ஹர்ஷ்  போட்ட அடியில தான் ரெண்டு பேரும் அடங்குனாங்க.. “

பேச்சும் சிரிப்புமாக நேரம் இனிமையாக சென்றது. மாலை சிற்றுண்டிக்கு பிறகு கருணா அவினாஷ்  அருந்ததி அவர்கள் வீட்டிற்கு சென்றார்கள். தமயந்தியும் தர்மராஜும் அவர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர்.

வில்வா உம்மென்று இரவு வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

“நான் போன் பண்ணும்போது வந்தா போதும்னு மாமா அனுப்பிட்டாங்க..” என்றான் சோகமாக.

“பின்ன, ஹர்ஷியை பார்க்கிறதா உங்களை  பார்க்கிறதா? பேசாம இருடா” என்றார் சங்கரன்.

இவன் வருவதற்கு சற்று நேரம் முன்பு தான் விக்ராந்த் அழைத்து பேசி இருந்தார்.

ஹர்ஷித்தா மூச்சை கொஞ்சம் வேகமாக விட்டால்கூட, வலிக்குதா , ஹாஸ்ப்பிட்டல்  போவோமேன்னு வில்வா பதற, அதை பார்த்து ஏற்கனவே பதற்றத்தில் இருக்கிற பாரி  பயப்பட, ராஜி வேறு இன்னும் டென்ஷன் படுத்த ஹர்ஷிதாவிற்கு ஆயாசமாக இருப்பதால் தான் அதட்டலிட்டு வில்வாவை அனுப்பி விட்டதாக கூறினார்.

“எனக்கு புரியுதுங்க, நீங்க ஹர்ஷியை பாருங்க” என்றிருந்தார் சங்கரன்.

“பாரி பாப்பாவை நான் தான் முதல்ல தூக்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு வர்ஷி” என்றான் இரவு மனைவியிடம். 

‘பத்து மாசம் வயிற்றில் சுமப்பது என்னவோ ஹர்ஷித்தா தான், ஆனாலும் ஒவ்வொரு நொடியும் மனதில் அல்லவா இவன் சுமந்து கொண்டிருக்கிறான்.. எப்படி இப்படி ஒரு அன்பு இருக்க முடியும்’ என்று ஆச்சர்யமாக இருந்தது வர்ஷித்தாவிற்கு,

“கண்டிப்பா, உங்க கையில் தான் பாப்பாவை வாங்க போறீங்க.. ஹாஸ்ப்பிட்டல்  போனதும் போன் பண்ணிடுவாங்கா, நாம் போய்டலாம்.. நீங்க கொஞ்சம் தூங்குங்க” என்று அவனை தேற்றி தூங்க வைத்தாள்.

இரவு இரண்டு மணிக்கு வலி வரவே ஹர்ஷித்தாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். உண்மையில் பாரி மிகவும் பயந்து போய் இருந்தான். மனைவியின் கையை பிடித்துக்கொண்டே காரில் அவள் அருகில் அமர்ந்து கொண்டான். பயப்படாதே ஹர்ஷிமா.. என்று கூறிக்கொண்டே இருந்தான்.

வில்வாவுக்கு தகவல் சொல்லுமாறு வலியிலும் ஹர்ஷித்தா தான் கூறினாள். தங்கள் நட்பை புரிந்து கொண்ட மனைவியை அவ்வளவு பிடித்தது பாரிக்கு. மிகவும் உணர்ச்சிவசத்தில் இருந்தான் பாரி.

ராஜி தான், “இங்க பாரு, பாரி, ஹர்ஷ் தைரியமா இருக்கா… அவ சமாளிச்சிடுவா, உன்னை பார்த்தா தான் எனக்கு பயமா இருக்கு. பேசாம அமைதியா இரு” என்று மிரட்டி அவனை அமைதி படுத்தினார். ஸ்ரீனிவாசன் வில்வாவிற்கு அழைத்து விஷயத்தை கூறினார். 

உடனே அவன் மனைவியை எழுப்பி விஷயத்தை கூற, அடுத்த இரண்டே நிமிடங்களில் மொத்த குடும்பமும் எழுந்துவிட்டது. அவினாஷ் கருணா வந்துவிட்டனர். விக்ராந்த் தர்மராஜிற்கு அழைத்திருக்கவே அவர்களும் எழுந்து வந்துவிட்டனர்.

“நான் முதல்ல போறேன்” என்று நின்ற வில்வாவை யாராலும் அதற்கு மேலே பிடித்து வைக்க முடியவில்லை.

“நான் கூட போறேன்” என்று வர்ஷித்தா விரைந்து விட்டாள்.

“நீங்க வண்டி ஓட்ட வேண்டாம் கொடுங்க”, என்று வண்டி சாவியை வாங்கிக்கொண்டு வர்ஷித்தா வில்வாவை அழைத்து ஹாஸ்ப்பிட்டல் நோக்கி விரைந்தாள்.

“எல்லாரும் இப்பவே போக வேண்டாம்.. தமயந்தி தர்மராஜ்  போகட்டும்.. குழந்தை பிறந்ததும் நம்ம எல்லாம் போலாம்” என்று கூறினார் பாட்டி. 

அவினாஷ் மட்டும் “நான் கார் எடுக்கிறேன், மாமா இந்த நேரத்தில் ஓட்ட வேண்டாம்” என்று உடன் கிளம்பி சென்றான்.

அப்பொழுதே முருகானந்தம் தாத்தாவிற்கு அழைத்து விஷயத்தை கூறிவிட்டார் தர்மராஜ். அவர் உடனே ட்ரைவரை அழைத்துக்கொண்டு கிளம்புவதாக கூறினார்.

ஹர்ஷித்தாவை உடனே லேபர் ரூம் உள்ளே அழைத்து சென்று விட்டனர். பாரி, விக்ராந்த், ராஜி, ஸ்ரீனிவாசன் நால்வரும் வெளியே அமர்ந்து கொண்டிருந்தனர்.

வில்வாவும் வர்ஷித்தாவும் வந்து விட்டனர்.

வில்வாவை பார்த்ததும், வில்லிலுருந்து புறப்பட்ட அம்பு போல பாரி, “வில்வா…” என்று ஓடி வந்து அவனை கட்டி பிடித்து கொண்டான்.

நண்பர்கள் ஒருவர் கையை ஒருவர் பிடித்து கொண்டு அமைதியாக அமர்ந்து கொண்டார்கள்.

ராஜி குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தார்.

விக்ராந்த் முகத்தில் தகப்பனுக்கே உரிய டென்ஷன் இருந்தாலும் அமைதியாக இருந்தார். அவினாஷுடன் தமயந்தி தர்மராஜும் வந்து விட்டார்கள்.

காலை ஆறு மணிக்கு, வீல் என்ற சத்தத்துடன் பிறந்தாள் பாரிவேந்தன் ஹர்ஷ்த்தாவின் தவப்புதல்வி.

குழந்தையை முதலில் வில்வா தான் வாங்கினான். அவன் கண்ணீர் ஒரு துளி வைரமென குழந்தை கையில் தெறித்து சிதறியது.

காலையிலே அனைவரும் வந்துவிட்டனர் குழந்தையை பார்ப்பதற்கு. யாரையும் அதிகம் தூக்க விட மாட்டான் வில்வா, பாப்பாவுக்கு உடம்பு வலிக்கும் என்று விரட்டிவிடுவான்.

முருகானந்தம் தாத்தாவிற்கு குழந்தையை கையில் வாங்கியதும் பேரானந்தம்… குழந்தைக்கு பெயர் வைக்கும் உரிமையை தாத்தாவிற்கு கொடுத்துவிட்டான் பாரி. அதில் அவருக்கு ஏகப்பெருமை.

ராஜி தான்,”அப்ப  நான் பேர் செலக்ட் பண்ண வேண்டாமா?” என்று சிறு பிள்ளையாகி முகத்தை தூக்கி வைத்துக்கொண்டார்.

“நீங்க என்ன ராஜிம்மா வைக்கப்போறீங்க.. சிக்ஷா ..பிக்ஷா..ஆட்டோ ரிக்ஷான்னு தானே.. அதுக்கு தாத்தாவே நல்ல பேரா வைப்பாரு, விட்டுடுங்க” என்றான் வில்வா.

“அதானே…” என்றான் பாரி.

தித்திக்கும் இவர்கள் வாழ்வில் மேலும் இனிமையை கூட்டியது குழந்தை.

தாத்தாவின் விருப்பப்படி, அவர் மனைவியின் பெயரான ‘வசுந்தரா’ என்று குழந்தைக்கு பெயர் சூட்டினார்கள்.

அவினாஷும் கருணாவும் ஊருக்கு கிளம்பவுதற்கு முன் தாத்தா அவர்களிடம் அருந்தியின் திருமணத்தை பற்றி பேசினார். “எனக்கு நம்ம பாப்பாவை அனந்தன் பேரனுக்கு கொடுக்கணும்னு ஆசை அவி. பசங்களுக்கும் விருப்பம்  போல தான் தெரியுது. நான் நல்லா இருக்கும் போதே அவங்க கல்யாணத்தை  முடிச்சிடலாம்” என்றார்.

அருந்ததிக்கும் ராகவுக்கும் விருப்பம் தான் என்று உறுதி ஆகவே, அனந்தன் தாத்தாவிடம் வேதா தாத்தா பேசினார்.

“பெண்ணுக்கும் பையனுக்கும் ஒரே வயசு.. பையனுக்கு இது சீக்கிரம் இல்லையா?” என்றார் ரஞ்சி யோசனையாக.

அனந்தன் தாத்தா, “மூத்தவன் கல்யாணத்தை தான் பார்க்க முடியல.. இவன் கல்யாணத்தையாவது  நான் நல்லா இருக்கும் போதே பார்த்திட்டா எனக்கு நிம்மதி” என்று கூறவும் ரஞ்சியும் சரி என்று  விட்டார்.

அடுத்த மூன்று மாதத்திலே அருந்ததி ராகவராமின் திருமணம் நடைபெற்றது.

கருணாவும் அவினாஷும் முன்னின்று இந்த கல்யாணத்தை ஊரே மெச்சும்படி சீரும் சிறப்புமாக நடத்தி வைத்தனர்.

“இப்ப மட்டும் செலவு செய்யலாமா?” என்று கேட்டு வைத்தான் வில்வா.

“இங்கே சிறப்பாக திருமணம் நடந்தது தான். ஆனால் வீண் செலவு என்னன்னு சொல்லு பார்ப்போம்? இது அவினாஷோட கனவு..  தங்கைக்கு எந்த குறையும் இல்லாமல் திருமணத்தை செஞ்சு வைக்கணும்ங்கிறது. அதனால் இதை நாங்க  செலவா பார்க்கல… பொறுப்பா தான் செய்றோம்…” என்று அடுத்த பத்து நிமிடத்துக்கு கருணா பேசினாள். பின் யாரோ வந்து அழைக்கவும் தான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

“ஏன் வில்லு? நாலு அடி கூட வாங்கிக்கலாம்.. தேவை இல்லாம ஒரு கேள்வி கேட்டு இப்படி பத்து நிமிஷத்துக்கு காதில் ரத்தம் வர வரைக்கும் கருணா பேசறதை கேக்க வைச்சிட்டியே?” என்று நொந்து போய் கூறினார் ராஜி.

வில்வா பாரி ராஜி மூவரின் கலாட்டாவுடன், நிறைவாக நடந்தது திருமணம்.

————————

மேடிட்ட வயிறுடன் அசைந்தாடும் தேர் போல வலம் வந்தால் கருணா.. கருணாவும் வர்ஷித்தாவும் ஒரு மாதம் முன்னே பின்னே  பிள்ளை உண்டாகி இருந்தார்கள்.. நாத்தனாரும்  அண்ணியும் ஒருவரை  ஒருவர் பார்த்துக்கொள்ள கூடாது என்று பாட்டி கூறிவிடவே, கருணா டெல்லியிலும் வர்ஷித்தா சென்னைலும் தான் இருந்தார்கள்..

அவினாஷ் கண்ணுக்குள் வைத்து தாங்கினான் தன்  கண்ணம்மாவை. ராஜியும்  உடன் இருந்து அத்தனை நன்றாக பார்த்துக்கொண்டார் கருணாவை.

இங்கே வில்வா பாரியின் அலப்பறைகளோடு பாட்டி, சுமதி, தமயந்தி அனைவரும் வர்ஷித்தாவை தாங்கினார்கள்.

முதலில் வர்ஷித்தாவிற்கு தான் குழந்தை பிறந்தது. வில்வநாதன் வர்ஷித்தாவின் பெண்ணரசியை முதலில் பாரி தான் வாங்கினான்.

எங்க பொண்ணுக்கு நீங்க பேர் வைங்க தாத்தா என்றுவிட்டான் வில்வா வீரராகு தாத்தாவிடம்.

 தாத்தாவின் விருப்பப்படி “அபயாம்பிகை” என்று பெயர் சூட்டினார்கள்.

வில்வாவின் குழந்தை பிறந்ததும், கருணாவை மெல்ல பாதுகாப்பாக சென்னை அழைத்து வந்துவிட்டான் அவினாஷ். அவனுக்கு அவன் தாத்தா உடன் இருக்கவேண்டும் என்ற ஆசை. கணவனை அறிந்த கருணாவும் உடன் கிளம்பி வந்துவிட்டாள்.

அபயா பிறந்து இருபது நாளில் கருணாவிற்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

கைகள் நடுங்க கண்கள் கலங்க தன் தங்க பேரனின் மகனை கையில் முதலில் வாங்கினார் வேதா தாத்தா.

அப்படியே அவினாஷை உரித்து வைத்து பிறந்திருந்தான் குட்டி பையன்.

“நாங்க சொன்ன மாதிரி உன்னை மாதிரியே பையனை பெத்துட்டியே .. பேஷ் பேஷ்” என்று அவினாஷை கட்டிப்பிடித்து கொண்டாடினர் பாரியும் வில்வாவும்.

அவினாஷ் தங்கள் மகனின் பெயர் தன் தாத்தாவை தேர்ந்தெடுக்குமாறு கூறவே, பொங்கி விட்டார் ராஜி.

“இது எல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லை.. ஆளாளுக்கு தாத்தா பெயர் வைக்கட்டும்னு சொன்னா நான் யாரு குழந்தைக்கு தான் பெயர் வைக்கிறது?” என கூறிக்கொண்டே அவர் அருந்ததியை பார்க்க,

மீசையை முறுக்கிவிட்டு  கொண்டு முன்னே வந்தார் அனந்தன் தாத்தா.

“அட பாவமே!”, ராஜி பாவமாக பாரி வில்வாவை பார்க்க,

“கவலையே படாதீங்க ராஜிம்மா.. நம்ம தர்ஷ் குழந்தைக்கு நீங்க பெயர் வைக்கலாம்” என்றான் பாரி சமாதானமாக.

“டேய் அவனே ஒரு வெள்ளைக்கார பொண்ணை லவ் பண்ணிட்டு சுத்திட்டு இருக்கான். விது கிட்ட எப்படி சொல்றதுன்னு நானே முழிச்சிட்டு இருக்கேன்.. வெள்ளைக்கார மருமகளும் தாத்தாவோட வந்தா என்ன பண்றது?” என்றார் சோகமாக.

“நாங்க ரெண்டு பேரும் ஒரு கார் வாங்கலாம்னு முடிவு செஞ்சு இருக்கோம் ராஜிம்மா” என்றான் பாரி.

“சரி, அதுக்கு?”

“க்ரிஷ், குஷ்க்கு எல்லாம் நீங்க தானே பேர் வச்சிருக்கீங்க.. எங்க காருக்கும் ஒரு நல்ல பேரா வைச்சிடுங்க..” என்று வில்வா கூற,

ராஜி முறைக்கவும் இருவரும் எஸ்கேப்..

கருணாம்பிகை அவினாஷின் மகனிற்கு “வேல் அமுதன்” என்ற பெயரை  வைத்தார் தாத்தா.

“தன் அப்பா அம்மாவின் வாழ்வில் அமுதமாக இருப்பான் இவன்” என்று மனதார ஆசிர்வதித்தார்.

கருணாவிற்கு சென்னைக்கு மாற்றல் கேட்டுக்கொண்டிருக்கிறாள்.  இன்னும் இரண்டு ஆண்டுகளாவது ஆகும் என்று கூறவே, கருணா அவினாஷ் மீண்டும் டெல்லி சென்றுவிட்டனர்.

ராஜி தான் அமுதனை பார்த்துக்கொள்கிறார்.

இங்கே சுமதி தமயந்தி பாட்டி மூவரும் அபயாம்பிகை வசுந்தராவை பார்த்துக்கொள்ள, ஹர்ஷித்தாவும் வர்ஷித்தாவும் நிம்மதியாக வேலைக்கு சென்று வருகிறார்கள்.

அருந்ததி  இப்பொழுது இவர்கள் சென்ட்டரிலே சேர்ந்து விட்டாள். அவர்கள் சென்டர் நன்றாக பிக் ஆகவும், இன்னொரு ஆள் இல்லாமல் சமாளிக்க முடியாது என்று அருந்ததியை கட்டாயப்படுத்தி சேர்த்துக்கொண்டனர். ராகவிற்கும் தனியே லேப் வைத்து கொடுப்பதாக அவினாஷ் கேட்டதற்கு, இன்னும் ஒரு வருஷம் போகட்டும் என்று கூறிவிட்டான். பொம்மியின் நாட்கள் பிள்ளைகளோடு இனிமையாக சென்றது.

ரஞ்சி ஆன்ட்டிக்கு அவினாஷ் சொல்லே வேதவாக்கு. கணவன் இறந்ததும் நாங்க பார்த்துகிறோம் என்று கூறிய மாமனாரும் மகனும் அவருக்கு இஷ்டம் என்றாலும், “யாரும் உங்களை பார்த்துக்க வேண்டாம், உங்களால  உங்களை பார்த்துக்க முடியும்” என்று நம்பிக்கை கொடுத்து அவருக்கு தொழில் அமைத்து கொடுத்து, ஊக்கம் கொடுத்து வழிநடத்தி இன்று கை நிறைய வருமானம் வரும் நிலைமைக்கு தன்னை மாற்றிய அவினாஷ் என்றால் தனி மரியாதையும் பிரியமும் தான்.

நட்பால் இணைந்து உறவுகளாக மாறி அன்பால் பிணைக்கப்பட்டு இவர்கள்  அனைவரது வாழ்விலும் எப்பொழுதும் அமுதமழை சாரல் வீசட்டும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!