Skip to content
Post Views: 1,710
நதி 17
தன் வீட்டிற்கு வந்தது முதலே கஸ்தூரியின் மனது பெண்ணாய் அவளின் மாமியாருக்கு புரிந்திருக்கும் போல.
Advertisement
முடிந்த வரை எல்லா விசயத்திலும் ஆறுதலாய் ஆதரவாய் அவர் நிற்க காலப்போக்கில் இருவருக்கும் இடையே நல்ல புரிதலோடு கூடிய உறவு வந்திருந்தது.
தந்தையானவரால் தள்ளாமையில், ‘பிரசவத்திற்கு..’ என அழைத்து சென்று கூட பார்க்க முடியாத நிலையில், ஜெயசீலனின் தாய் கமலம்மா கஸ்தூரிக்கும் தாயாய் மாறி அவளை பார்த்துக்கொள்ள அவரை தன் சொந்த தாயாய் பார்க்க ஆரம்பித்தார் கஸ்தூரியும்.
Advertisement
Advertisement
அவரின் ஆதரவில் குழந்தை வளர்ச்சியில் என மொத்தமாய் அந்த குடும்பத்து மருமகளாய், ஜெயசீலனின் மனைவியாய் உருமாறி இருந்தார் வாணி பிறக்கும் போது.
அதன் பின் ஜெயசீலனோடு நிறைவான வாழ்க்கை தான் அவரும் வாழ்ந்தார்.
Advertisement
ஜெயசீலனோடு முகம் மலர பேசி சிரித்து வலம் வரும் கஸ்தூரியை கண்டு நிம்மதி பெரியவர்கள் இருவருக்கும்.
வாணிக்கு மூன்று வயதாக ஊரையே அழைத்து பிரம்மாண்டமாக காதணி விழா நடத்தினார் பரமசிவம்.
திருமணத்தின் போது எழுந்த சலசலப்பை அடக்கவே அவர் அதை செய்ய நினைத்தார்.
‘என் மகள் நன்றாக குடும்பம் குழந்தை என தழைத்து வாழ்கிறாள். அவள் அதிஷ்ட கட்டையாகி போகவில்லை..’ என்பதை அங்கிருப்பவர்களுக்கு பறைசாற்றும் விதமாகவே அவரின் நடவடிக்கைகள் எல்லாம் இருந்தது.
அவர் நினைத்தது போலவே வந்தவர்களில் பெரும்பாலோர் அவளின் வாழ்க்கை பற்றி மகிழ்ந்து போய் வாழ்த்த, சிலரின் பொறாமை பார்வையும் அவளை தீண்டி செல்லாமல் இல்லை.
‘மகளின் வாழ்க்கை சீராகி விட்டது.. அதை ஊர் உலகுக்கு சொல்லியாகிவிட்டது.. அது போதும்..’ என்ற நிம்மதியோ என்னவோ விழா முடிந்த ஒரு மாதத்தில் மனைவியை தேடி உறக்கத்திலேயே விண்ணுலகம் பயணப்பட்டிருந்தார் பரமசிவம்.
அவரின் காரியத்திற்காக வந்திருந்த கஸ்தூரி முப்பதாம் நாள் காரியமும் முடியும் வரை அங்கேயே மாமியாரோடு தங்கிக்கொள்ள ஜெயசீலன் மட்டும் அவ்வப்போது வந்து போக இருந்தார்.
எல்லாம் முடிந்து ஒரு மாதம் கழித்து தன் வீடு வந்து சேர்ந்த பிறகே அவர் மீண்டும் கர்ப்பம் தரித்திருக்கும் விசயம் தெரியவந்தது.
“உன்ற அப்பாரூ தே உன்ற வவுத்துல புள்ளையா பொறப்பாரூ கண்ணு..” என்ற மாமியாரின் வாக்கை பொய்யாக்காமல் வந்து பிறந்தான் தீனதயாளன்.
கஸ்தூரிக்கு தன் தந்தையே மீண்டும் தன்னிடம் வந்தது அத்தனை சந்தோஷத்தை தர மகனை தங்கமாய் தாங்கினார்.
தன்னை மீட்டு தந்த மகள் அவருக்கு இளவரசி எனில் இப்போது வந்துதித்த மகனோ அவரின் சர்வமுமாய் மாறியிருந்தான்.
தன் மகனை போல கொஞ்சம் கடுசாக இல்லாமல் தயாள குணத்தோடு பேரன் இருக்க வேண்டுமென, ‘தயாளன்..’ என பெயரை வைக்க சொன்னதே ஜெசீலனின் தாயார் தான்.
ஆனால் அந்த பெயர் கஸ்தூரியின் வாழ்க்கையில் விளையாடும்.. என அவர் துளியும் அப்போது யோசிக்கவே இல்லை.
தீனதயாளன் பிறந்த பின் இன்னுமே வாழ்க்கை சீரடைய கஸ்தூரியின் வாழ்க்கை நிம்மதியாக கழியத்தொடங்கியது.
தீனாவிற்கு ஒரு வயது நிறைவடைந்த போது காலை கடன் கழிக்க சென்ற கமலம்மா வழுக்கி விழுந்து விட அதன் பின் அவர் வாழ்க்கை படுக்கையில் என்றானது.
அவருக்கு மருத்துவம் பார்க்க, இரண்டு குழந்தைகளோடு குடும்ப செலவு என ஜெயசீலன் தடுமாற தன்னை பெறாத மகளாய் தாங்கியவருக்காக,
“ஏனுங்க.. என்ற அப்பாரோட சொத்து அங்கன கேப்பாரூ இல்லாத சும்மா தானே கெடக்கு..! குத்தகக்காரங்களும் சரியா பாக்கறதே இல்லன்னு விசனப்பட்டுட்டு இருக்கறதுக்கு அத வித்துப்போடலாங்களா..?
எங்கூட்ட கூட என்ற ஒண்ணுவிட்ட சித்தப்பாகிட்ட கொடுத்துட்டா அவுங்க பொழக்கத்துக்கு நல்லது.. அவுரும் கேட்டுட்டு தானே இருக்கார்..” என ஜெயசீலனிடம் சொன்னார்.
இருக்கும் பணப் பிரச்சனையில் அதை செய்வது நல்லதாக பட ஜெயசீலனும் அதற்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்கினார்.
கஸ்தூரியின் சித்தப்பாவின் மூலமாக எல்லா ஏற்பாடும் நடக்க, விதியின் விளையாட்டாய் கஸ்தூரியின் காடு தயாநிதியின் காடுடன் இணைந்த ஒன்றாக இருக்க,
‘மற்றவர்களுக்கு விட்டு கொடுப்பதை விட அதை தாங்களே வாங்கிப்போட்டால் நல்லது..’ என்ற எண்ணத்தால் அவர்கள் புறமிருந்து கஸ்தூரியின் சித்தப்பாவிடம் பேச்சு வார்த்தை நடந்தது.
அவர்கள் சொன்ன தொகையும் சரியானதாய் இருக்க, காட்டை அவர்களுக்கே கொடுப்பது.. என்றும்
கஸ்தூரியின் வீடு அவரின் சித்தப்பாவுக்கும் என ஜெயசீலனோடு சேர்ந்து அனைவரும் முடிவு செய்ய ஒரு நல்ல நாளில் பத்திரப்பதிவு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஒரு தாயாய் பிள்ளைகளையும், தன்னை தாங்கிய மாமியாரையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு கஸ்தூரிக்கு இருந்ததால்.. பத்திரப்பதிவுக்கு கையெழுத்து போடும் நாள் வரை மற்ற எந்த விசயத்திலும் அவர் தலையிடவே இல்லை.
அதோடு ஜெயசீலனும் மனைவியிடம் அத்தனையும் பகிர்ந்து கொள்ளும் ஆள் அல்லவே.
அதனால் காட்டை தயாநிதி குடும்பத்திற்கு தான் கொடுக்க போகிறார்கள் என்பது அன்று தான் அவருக்கு தெரிய வந்தது.
கடைசி நேரத்தில் எதுவும் சொல்ல முடியாத நிலையில் அவர்களை எதிர்கொண்டார் கஸ்தூரி.
தயாநிதியின் தந்தையும், அண்ணனும் நல்ல முறையில் பேசிய போதும் அவரின் தாயாருக்கு இன்னும் அவளின் மீதான கோபம் பன்மடங்காக மாறியிருந்தது.
சொத்தை அவரின் பெயரிலும் பதிவதால் அவரும் அங்கு வந்திருக்க, அவரின் அக்னி பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி நின்றார் கஸ்தூரி.
ஒருவழியாக கையெழுத்து போட்டு முடித்தவுடன் கூட்டத்தால் வந்த கசகசப்பில் லேசாக சிணுங்கிய பிள்ளையை காரணம் காட்டி,
“ஏனுங்க கொஞ்ச நேரோ காத்தாட புள்ளய வச்சிருக்கேனுங்க..” என ஜெயசீலனிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தவர், அந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் அமைந்திருந்த ஒரு மரத்தின் நிழலில் மகனோடு நின்றார்.
சற்று நேரத்தில் வெளியே வந்த தயாநிதியின் தாயாரோ தனியே இருந்தவளிடம் வந்து,
“என்ற புள்ளைய மயக்கி.. அவென குழிக்குள்ள தள்ளிப்போட்டு.. அதே மூகூர்த்ததுல அடுத்தவன கண்ணாலம் கட்ட எப்புடிடீ மனசு வந்துச்சு..?
அதும் அடுத்த பத்தாமாசமே புள்ளைய பெத்துருக்கே.. ச்சீ.. என்ன ஜென்மமோ..
உன்னைய போயி அவனுசுரா நெனச்சானே.. அவனோட நேசத்துக்கு கிடச்ச மரியாத இதானா..?” என சீற கூனிக்குறுகி நின்றார் கஸ்தூரி.
மகனை இழந்த ஓர் தாயின் வேதனை அவரின் பேச்சில் வெளிப்பட அதை தடுக்கவும் முடியாது தன் நிலையை விளக்கவும் முடியாது நின்றவளை காக்கவென வந்தார் தயாநிதியின் அண்ணன்.
“ம்மா.. இங்கன என்ன செய்யறீங்க..? உங்கள காருல தானே இருக்க சொன்னேன். போங்க மொதல்ல..” என கோபமாக பேச,
“என்னடா.. இவள என்ற வாயிலிருந்து காப்பாத்த வந்தீயோ..? இவளால தான்டா உன்ற தம்பி நம்மகூட இல்லாம போனா..” என அவர் கண்கலங்க,
மகனாய் அவரின் வலி புரிந்தாலும் அவர் சொல்வதில் நியாயமில்லை என்பதை உணர்ந்த அவரோ,
“ம்மா.. அதெல்லா முடுஞ்சு போனதுங்க.. இப்போ எதுக்கு அத பேசிட்டு. நீங்க போங்க மொதல்ல..” என அவரை அனுப்பியவன்,
“மன்னுச்சுக்க கஸ்தூரி.. அம்மாக்கு இத்தினி வருசமாயும் இன்னும் அவனோட இழப்ப ஏத்துக்க முடியல.
என்னைய விட அவென் தான் அவுகளுக்கு உசுரு. அதா உன்னைய பாத்ததூ கோபத்த காட்டிப்போட்டாங்க..” என்றிட,
“பரவாயில்லைங்க.. அவுக வேதன எனக்கும் புரியுதுங்க.. ஆனா, நா.. என்ற சூழ்நில..” என ஆரம்பித்தவளால், ‘அன்று தான் பட்ட கஷ்டங்கள் கண்முன் வந்து போக..’ கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது போனது.
அவளின் அழுகை கண்டு தீனாவும் அழ, “இல்லடா தயாக்குட்டி.. அம்மா அழல பாரேன்..” என குழந்தைக்காக முயன்று தன்னை தேற்றிக்கொண்டவளை காணும் போது அவருக்கும் கஷ்டமாகி போனது.
அவனின் அழுகையை நிறுத்த வேண்டி தனது பையிலிருந்த பிஸ்கட் ஒன்றை அவன் கரத்தில் கொடுக்க லேசான விசும்பலோடே அதை வாங்கி வாயில் வைத்தான் குட்டி தீனா.
அவளின் சோர்ந்த முகத்தை கண்டுவிட்டு அவளின் எண்ணத்தை திசை திரும்ப நினைத்தவர், “உன்ற பையனா..? உனக்கு முதல்ல பொண்ணில்ல..? எங்க அவ..?” எனக்கேட்க,
“அவ ஊட்டுல இருக்காங்க. அவளையுங் கூட்டியாந்தா ரெண்டு பேத்தையும் சமாளிக்க ஆவாதுங்க..” என பிள்ளைகளை பற்றிய பேச்சு என்பதால் கண்ணீரை மறந்து கஸ்தூரியும் பேச,
“அப்புடியா அம்மணி. பைய பேரென்ன.. தயான்னையே..?” என்றார் தன்னையே குறுகுறுவென பார்த்திருக்கும்
பிள்ளையின் தலையை கோதி.
“தயா கூப்புடறதுங்க. முழு பேரு தீனதாயளனுங்க..” என்றதும்,
“தயா..” என்றவரின் குரலும் கலங்கலாய் வந்து போனது.
“என்ற தம்பி பேரு..” என அவரின் கரகரத்த குரலில் அதை கேட்ட பிறகே கஸ்தூரிக்கும் அது நினைவிலேயே எழுந்தது.
அதுவரை அப்படி ஒரு கோணத்தில் அதை அவர் யோசித்ததே இல்லையே..!!
கமலம்மா, “தயா..” என அழைக்க அதே அழைப்பாக்கி இதுவரை அழைத்தவளுக்கு,
அவளின் கடந்த காலத்தில் கடந்து போனவரின் அழைப்பும் அதே என்பது அதுவரை அவரின் நினைவிலேயே இல்லை.
இப்போது அது நினைவில் வர ஒரு நொடி ஸ்தம்பித்து போனார் அவர்.
“உன்னைய.. அவெனுக்கு ரொம்ப பிடிக்குங்கம்மணி. அதுலையும் உன்ற கண்ணுன்னா அவெனுக்கு ரொம்ப இஷ்டம்.. என்னோட மான் குட்டி ண்ணே அவ ன்னு அப்புடி ஆசையா சொல்லுவான் என்றகிட்ட..
உன்னைய கட்டிக்கோனுமுன்னு ஊட்டுல அத்தன ஆர்ப்பட்டம் பண்ணித்தே சம்மதம் வாங்குனான்.
என்ன பண்ண.. அவனோட விதி அவன உன்னோட வாழ விடுலன்னு இத்தன வருஷமா தவிச்சுட்டு இருந்தேன்..
இப்போ உன்ற மகன பாக்க அவனே உன்னைய உட்டு இருக்க முடியாம உன்ற மகனா உங்கிட்டயே வந்து பொறந்திருக்கான்னு தோணுது..
இவனுக்கும் உன்ற கண்ணு அப்புடியே அமஞ்சிருக்கு.. இவன பத்திரமா பாத்துக்கோ கண்ணு..” என்று பரிவோடு தீனாவை பார்த்துவிட்டு கசிய ஆரம்பித்த கண்ணை துடைத்தபடி அங்கிருந்து வெளியேறினார்.
கஸ்தூரியும் அதையே நினைத்துக்கொண்டு தீனாவோடு அமர்ந்திருக்க, ஜெயசீலன் வந்தது.. அவரோடு கிளம்பி வீடு வந்தது.. எல்லாம் தன்னிச்சையாக நடந்ததே அன்றி அவர் சுயத்திலேயே இல்லை.
error: Content is protected !!