Skip to content
Post Views: 1,951
யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 1.2
“வாசவன் மருகா வருக வருக..
நேசக் குறமகள் நினைவோன் வருக..
ஆறுமுகம் படைத்த ஐயா வருக..
நீறிடும் வேலவன் நித்தம் வருக..
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக..
சரவண பவனார் சடுதியில் வருக!
வீடு முழுவதும் ஊதுபத்தி புகையுடன் தெய்வீக மணம் கமழ கந்த சஷ்டி கவசம் ஒலித்துக் கொண்டிருந்தது.
மகாவிஷ்ணுவிற்கு ஆதிகேசவன் குடையாக இருப்பதுபோல்,
சிவராமன் வீட்டிற்கும் ஒரு குடை இருந்தது.
அது அவர் தன் கைகளால் வளர்த்த ஜாதி மல்லி மரம்.
Advertisement
ரீடு கடைதான் அவரது தொழில் என்றாலும்,
தோட்டக்கலையில் அவருக்கிருந்த ஆர்வம் அதற்கெல்லாம் மேல்.
ரோஜா,மல்லி,துளசி,வெற்றிலை கொடி, கற்பூரவல்லி என அனைத்தும் அவர் வீட்டில் வாசம் செய்தனர். ஒருநாள் சிறு நாற்றாக ஜாதி மல்லியை வாங்கி வந்து, வீட்டுக்கும் பாத்ரூமுக்கும் இடைப்பட்ட வெட்ட வெளியில் நட்டார்.
நாட்கள் செல்லச் செல்ல, அந்த நாற்று கிளை விரித்து, வீட்டின் மேல் குடை போல் நிழல் தரும் மரமாக வளர்ந்தது.
Advertisement
ஜாதிமல்லி சீசன் வந்தால், இரவு ஏழு மணியின் போது வீடு முழுவதும் ஜாதிமல்லியின் நறுமணம் நிறைந்து விடும். அந்த மணமே அந்த வீட்டின் அடையாளமாகி இருந்தது.
Advertisement
லட்சுமி இரண்டு இரண்டு பூக்களாக வைத்து ஒரு அழகிய மாலை கட்டி வீட்டின் சாமி படங்களுக்கு சாற்றினார்.
சிவராமன் இடது கையில் மணியை ஆட்டிக் கொண்டே வலது கையில் மூன்று ஊதுபத்திகளை ஒரு சேர பிடித்து பயபக்தியுடன் சாமி படத்தை மூன்று சுற்று சுற்றினார்.
கங்காவும்,கெளசியும் ” நல்லா படிக்கனும்னு” சாமி கும்பிட்டு கொண்டார்கள்.
Advertisement
சிவராமன் இருமகள்கள் நெற்றியிலும் திருநீறு வைத்து விட்டு, அவர் நெற்றியிலும் பட்டை இட்டுக் கொண்டார்.
லட்சுமி மூவரின் மதிய உணவாக தேங்காய் சாதமும், இடைவேளையின் போது உண்ண முறுக்கும் என பையை தயார் செய்து கொடுத்தார்.
மகள்கள் இருவரும் பள்ளி செல்ல ரெடி. சிவராமன் எட்டு மணி தலைப்பு செய்தி முடிந்தவுடன் சைக்கிளில் மகள்களை பள்ளியில் கொண்டு விடுவது வழக்கம்.
அப்பா செய்தி பார்க்கும் போது மகள்கள் குண்டூசி விழும் சத்தம் கூட எழுப்ப மாட்டார்கள்.
புரியுதோ புரியவில்லையோ இருவரும் தந்தையின் அருகில் பவ்யமாக அமர்ந்து செய்தியை பார்த்து விட்டு அம்மாவுக்கு “டாட்டா” சொல்லி கிளம்புவார்கள்.
பெண் கல்விக்கு பிரபலமான கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளியில் இருவரும் படித்து கொண்டிருக்கிறாள்.
அது அவர்கள் வீட்டில் இருந்து இரண்டு தெரு தள்ளி இருந்தது.
எல்.கே.ஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை கங்காவும், கெளசியும் அந்த பள்ளியில் தான் படிக்க போகிறார்கள். அவர்கள் மட்டுமல்ல அவர்களின் சித்தி பிள்ளைகள் இருவர், அத்தை பிள்ளைகள் இருவர் என அனைவரும் அந்த பள்ளியில்தான் படிக்க போகிறார்கள்.
ஆக்ஸ்போர்ட் யுனிவர் சிட்டி கூட தோற்றுதான் போகும் அந்த பள்ளியின் நிர்வாக திறமைக்கு அவ்வளவு ராணுவ கட்டுகோப்பாக கன்னியாஸ்திரிகளின் தலைமையில் பெண் ஆசிரியர்களால் திறமையாக நடத்தப்பட்டு வருகிறது.
சிவராமன் மகள்களை சைக்கிளில் இருந்து பள்ளி முன்பு இறக்கி விட்டு இருவரின் மதிய உணவு பையையும் கங்காவின் கைகளில் தந்து,” கங்கா பாப்பாவை அவங்க க்ளாஸ்லே கொண்டு போய் விட்டுட்டு நீ உன் க்ளாஸ்க்கு போ, இன்டர்வெல் விட்டா பாப்பாவை போய் பாரு,சாயந்தரம் அம்மா வந்தா அதை வாங்கி தா இதை வாங்கிதானு அடம் பிடிக்க கூடாது.நீ தான் பெரிய பொண்ணு நீ என்ன செய்யறையோ அதையேதா பாப்பாவும் பண்ணுவா,
வீட்டுக்கு போய் டீவி பார்க்காம ஹோம்வொர்க் எழுதனும்,அப்பா வரும் போது சில்லி வாங்கிட்டு வரே, ரெண்டு பேரும் நல்லா படிக்கனும் பை என சொல்ல இருவரும் அப்பாவிற்கு சிரித்த முகமாக பை சொல்லி பள்ளியின் உள்ளே கிளம்பினார்கள்.
பள்ளியின் வலது புறம் உயர் நிலை பள்ளியும், இடது புறம் மேனிலைப்பள்ளியும் உயர்ந்து நிற்க ,அதை தாண்டி பிரைமரி பள்ளிக்கு நடந்து சென்றனர் இருவரும்.
சிறிது தூரம் நடந்து சென்றபின் கங்கா திரும்பி பார்க்க, சிவராமன் சைக்கிளில் பெடல் எடுக்க ரெடியாக அமர்ந்தவாறே இருமகள்களையும் பார்த்துக் கொண்டிருந்தார்.
கங்கா பிரைமரி பள்ளியில் நுழையும் வரை திரும்பி திரும்பி அப்பாவிற்கு பை சொல்ல,கெளசியும் இணைந்து கொண்டாள்.
மகள்கள் தலை மறையும் வரை பார்த்துவிட்டு சைக்கிளை நேராக தன் கடைக்கு விட்டார்.
தோட்டக்கலை மட்டுமல்ல,ஆடு, கோழி வளர்ப்பதிலும்
சேவல் கட்டு போட்டிகளில் கலந்துகொள்வதிலும்
சிவராமனுக்கு அலாதியான பிரியம்.
அவர் வளர்த்த சேவல்கள்
பெரும்பாலும் வெற்றி வாகை சூடியே திரும்பும். காடுகளுக்குச் சென்று வேட்டையாடுவதிலும்
உற்சாகம் கொண்டவர்.
ஒருகாலத்தில் வேட்டையாடிய மானின் கொம்பை
வீட்டில் பெருமையாக வைத்திருந்தார்.
அது சட்டப்படி குற்றம் என்ற செய்தி வந்தபோது, மனம் இல்லாமல்
அதை காட்டிற்கே கொண்டு சென்று விட்டுவிட்டு வந்தார். ஏனெனில் இவை எல்லாவற்றையும்விட அரசியலில் அதீத ஆர்வம் கொண்டவர்.
கங்காவுக்கு சிறுவயதில்
விரல் சூப்பும் பழக்கம் இருந்தது.அதை மறக்க வைக்க ஒருநாள்
ஒரு நரிவாலை கொண்டு வந்து
வீட்டுத் தாழ்வாரத்தில் கட்டினார்.
“கங்கா, இதைப் பாரு…
இது நரிவால். இனிமே நீ கையை வாயிலே வச்சா, நரி வந்து உன் கையை பிடுங்கிட்டு
காடுக்குள்ள போயிரும்” என்றார்.
காற்றில் ஆடும் நரியின் வாலைப் பார்த்த கங்கா,
பயந்து போய்,
அன்றோடு விரல் சூப்பும் பழக்கத்தை
மெல்ல மெல்ல விட்டாள்.
பள்ளியில்,”கங்கா கெளசியை அவள் வகுப்பிற்கு கொண்டு சென்றுவிட அவளுடன் இணைந்து கொண்டாள் அவளது உயிர்த் தோழி சுமதி”.
லட்சுமியின் கடைசி சித்தப்பா மகள்தான் சுமதி இருவரும் நினைவு தெரியும் நாள் முன்பே ஒருவர் கைகளை மற்றொருவர் பிடித்து வளர்ந்தவர்கள்.
உறவினர்கள் என்பதை தாண்டி இணை பிரியா தோழிகள் இருவரும்.
பள்ளி முடிந்து இருமகள்களையும் வீட்டிற்கு அழைத்து வந்தார் லட்சுமி.
சிறிது நேரம் இருவரும் விளையாடினர்.முறுக்கு மீசையுடன் மாட்டு வண்டியில் அரிசி வியாபாரம் செய்ய ஒரு பெரியவர் வருவது வழக்கம்.
அவர் வருவது தெரிந்தால் கங்கா கெளசியை உள்ளே இழுத்து வந்து விடுவாள் காரணம் அந்த மீசை தாத்தா, “கங்கா நா ஒரு நாள் உங்க பாப்பாவை தூங்கிட்டு போய்ருவே” என மீசையை முறுக்கி கொண்டே மாட்டை சாட்டையால் அடித்து இவளை பயமுறுத்துவார்.
“அம்மா அந்த மீசை தாத்தா நம்ம பாப்பாவை தூக்கிட்டு போய்ருவேனு சொல்றாரு மா” என்று கவலையுடன் சொல்ல, அவரோ அப்படியெல்லா தூக்கிட்டு போக மாட்டாங்க நீ பயப்படாதே என்றார்.
இயல்பாகவே வீட்டில் மூத்த பிள்ளைகள் கட்டுப்பெட்டியாகவே வளர்கிறார்கள்.
காரணம், முதல் குழந்தை பிறந்த நொடியிலிருந்தே
பெற்றவர்கள் அவர்கள் வீட்டில் எப்படி வளர்ந்திருந்தாலும்,
“பொறுப்பு” என்ற கவசத்துக்குள் வந்துவிடுகிறார்கள்.
தங்களால் பூமிக்கு வந்த முதல் உயிரை எந்த துரும்பும் தீண்டக்கூடாது என்று கைகளிலும் நெஞ்சிலும் பொத்தி வளர்க்கிறார்கள்.
அதிலும் கங்கா,அவள் வீட்டின் முதல் பெண், முதல் பேத்தி,முதல் மருமகள்.
ஒரு சித்தி குளிப்பாட்ட, இன்னொரு சித்தி பாடம் சொல்லித் தர, தடுக்கி விழுந்தால் ஒரு தாய் மாமன் தூக்கி விட, இன்னொரு தாய் மாமன் ஊரைச் சுற்றிக் காட்ட என எல்லாரின் கைகளுக்குள்ளேயே வளர்ந்தவள்.ஆனால் கெளசி அப்படி அல்ல.
முதல் குழந்தையின் மூலம் பெற்றவர்கள் பக்குவம் அடைந்தபின், இரண்டாம் குழந்தையை தன்னிச்சையாக செயல்பட விடுகிறார்கள்.
ஏதாவது செய்ய வேண்டுமென்றால், கங்கா பின்னால் அப்பா துணைக்கு இருக்கிறாரா? என்று முதலில் திரும்பிப் பார்ப்பாள்.
கெளசி செய்துவிட்டு வந்து, “அப்பா இங்க பாரு …” என காட்டுவாள்.
இரவு எட்டு மணி இருவரும் ஹோம்வொர்க் செய்ய லட்சுமி மகள்களின் மீது ஒரு கண்ணை வைத்தவாறே மண்ணெண்ணை ஸ்டவ்வில் தோசை ஊற்றிக் கொண்டிருந்தார்.
கெளசி சற்று கிறுக்கி எழுத தேசை திருப்பியால் லேசாக ஒரு அடி வைத்து நல்லா எழுது என்றார்.
வெளியில் சைக்கிள் பெல் சத்தம், சிவராமன் வந்துவிட்டார்.அடி சின்ன அடிதான் அப்பாவை பார்தது விட்டதால் வலி பெரியதாகி விட்டது.
‘ஓ’ வென கத்தி ஒரே ஆர்ப்பாட்டம் செய்து விட்டாள் கெளசி.
யாரு எம்புள்ளைய அடிச்சது? என மகளை தூக்கி மடியில் வைத்துக் கொண்டார்.
“எஞ்சாமி அழுகாதே” யார் உன்னைய அடிச்சா? என கேட்க, அம்மா என தேம்பிக் கொண்டே சொன்னாள்.
அந்த கஞ்சன்புள்ளைய அவங்க அப்பன் வீட்டுக்கு அனுப்பிறலாம் நீ அழாதே என கண்ணை துடைத்து விட்டார்.
என்னை எங்க அப்பன் வீட்டுக்கு அனுப்பிட்டு நீங்க மூனு பேரும் என்ன செய்வீங்கனு பாக்கறே என்றார் நக்கலாக,
இப்போ எதுக்கு புள்ளைய அடிச்சே?
நோட்டை பாரு எப்புடி கிறுக்கி வெச்சுருக்கானு என நீட்டினார் லட்சுமி.
இப்போதானே ஸ்கூல் போது, போக போக கங்கா மாறி எழுதி பழகிரும் அதுக்கு போய் இப்படி அடிச்சு வெச்சிருக்கே பாவம் என வராத கண்ணீரை துடைத்தார் மகளை சமாதான படுத்த…
சில்லியை கங்காவிடம் தர ஆசையாக வாங்கி கொண்டாள்.
அப்பா எனக்கு மீன்தா வேணும் என்றாள் கெளசி. ஏற்கனவே அழுத பிள்ளை இல்லை என்று கூறினால்,மீண்டும் ஆரம்பித்து இன்றைக்கு சிவராத்திரி ஆக்கிவிடும் என எண்ணி மீண்டும் சைக்கிளை எடுக்க, நானும் வருவேன் என தொத்திக் கொண்டாள் இளைய மகள்.
மீனை வாங்கி வந்து அதில் இருந்த முள்ளை எடுத்து கொடுக்க இருவரும் உண்டனர்.
“அப்பா… நான் ஹோம்வொர்க் எழுதலப்பா.
நாளைக்கு லீவு போட்டுக்கவா?” என்று கெளசி மெல்லக் கேட்டாள்.
“வேண்டா கெளசி.
அடுத்த வாரம் அப்பா வண்டி வாங்கப் போறேன். அப்போ நாலு பேரும் குலதெய்வ கோவிலுக்கு போலாம்.
அப்போ லீவு போட்டுக்கலாம்,”
என்று சொன்னார் சிவராமன்.
‘அப்பா வண்டி வாங்கப் போறே’ என்ற வார்த்தை, இரு மகள்களுக்கும் ஒரே நேரத்தில்
உற்சாகத்தை ஊற்றி விட்டது.
“கங்கா… இனிமே நாம ரெண்டு பேரும்
டாடியப்பா வண்டியிலதான்
ஸ்கூலுக்குப் போகப்போறோம்,”
என்று கெளசி கண்கள் ஜொலிக்கச் சொன்னாள்.
கங்கா பதிலுக்கு எதுவும் சொல்லவில்லை.
மீனை மெதுவாகச் சாப்பிட்டபடியே சிரித்தாள். அடுத்த நொடியே தொண்டையில் முள் மாட்டிக் கொண்டது.
அவ்வளவுதான்…வீட்டை இரண்டாக்கி விட்டாள். வீடு முழுக்க ஒரே பதட்டம்.
“அம்மா… அப்பா…” என்று கங்கா அழ, லட்சுமி ஓடி வந்து
வாழைப்பழம் கொடுத்து சமாதானப்படுத்தினார்.
சிவராமன் கங்காவின் முதுகில் தட்டி,
“அவ்வளவுதான்… ஒன்னுமில்லை சரியாகிடும்,” என்றார்.
ஒருவழியாக,இனி கங்காவிற்கு மீன் வேண்டாம். சில்லி மட்டும் போதும்
என்று நாட்டமை போல் முடிவு எழுதப்பட்டது.
அன்றைய நாள்
சிரிப்பும் சிறு பரபரப்பும் கலந்த
ஒரு சாதாரண குடும்ப இரவாக
முடிந்து போனது.
நால்வரும்
அடுத்த நாள் வாழ்க்கையை நினைத்தபடியே
உறங்க சென்றனர்.
— தலைவன் வருவான்..
error: Content is protected !!