Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

24. கண்மணி - அன்பின் முகவரி அவள்

அன்பின் முகவரி அவள் – 2

அன்பு – 2

“டேய் பிரபா!!! அதான் ஃபைனல்ஸ்க்கு செலக்ட் ஆகிட்ட!!! ரிசல்ட் வரதுக்கு முன்னாடியே ரெண்டு மியூசிக் டைரக்டர்ஸ் உனக்கு பாடுறதுக்கு சான்ஸ் தரேன்னு சொல்லிட்டாங்க.. அதுவும் இல்லாம வாரம் வாரம் ஸ்டார் பெர்ஃபாமரா வேற செலக்ட் ஆகி பிரைஸ் வின் பண்ற!! இன்னும் ஏண்டா இந்த பிஞ்சு போன காப்பு, இத்துப்போன வாட்ச்ன்னு, ஏதோ பஞ்சப் பரதேசி மாதிரி சுத்துற??” என கடுப்பு பாதி ஆதங்கம் மீதி என கவின் கேள்வியெழுப்ப,



Advertisement

“நீங்க சொன்னாலும் சொல்லலைனாலும் நான் பஞ்சப்பரதேசி தான் கவின் சார்!!” என லேசான புன்னகையுடன் மொழிந்த பிரபஞ்சனின் சிரிப்பிற்குப் பின்னால் மறைந்திருக்கும் வலியின் அளவு யாரும் அறியாதது!!!

‘ உண்மை தானே!! என் தேவைகளை கூட கவனித்துக் கொள்ள இயலாத அளவிற்கு நான் பரதேசியாக இருந்ததினால் தானே கையில் கிடைத்தை ரத்தினத்தை இன்று தொலைத்துவிட்டு நிற்கிறேன் ‘ என அவன் மனம் நொடி நேரத்திற்குள் ஏதேதோ எண்ணங்களில் சிக்கிக் கொண்டு விம்மித் தவிக்க,

Advertisement

Advertisement

அவன் தோளிலே பட்டென்று ஒரு அடி வைத்து, பிரபஞ்சனை நினைவுலகிற்கு இழுத்து வந்தாள் மது!!!

ஆம், அந்த நிகழ்ச்சியில் பிரபஞ்சன் தேர்வான பின்பு, இந்த ஆறு மாத காலகட்டத்தில் கவின், மது, பிரபஞ்சன் இடையே அழகாய் ஒரு நட்பு உருவாகியிருந்தது.

Advertisement

அதுவும் மதுரையைச் சொந்த ஊராகக் கொண்ட பிரபஞ்சனுக்கு, நிகழ்ச்சியின் பொருட்டு, சென்னையிலே தங்கவேண்டிய கட்டாயம் வந்த போது, தானாக முன்வந்து உதவிக்கரம் நீட்டிய கவின் மேல், என்றுமே பிரபஞ்சனுக்கு அதீத மரியாதையும், சொல்ல முடியாத அன்பும் அதிகம் உள்ளது.

பிரபஞ்சன் கேட்டுக்கொண்டதன் பெயரில், அவனுக்கு ஒரு டிபார்ட்மெண்டில் ஸ்டோரில் பகுதி நேர வேலையும் வாங்கிக்கொடுத்து தன்னுடனே அறையில் தங்க வைத்துக்கொண்ட கவினுக்கு, பிரபஞ்சனின் மேல் இயல்பாகவே ஏதோ அன்பு சுரக்க, உடன்பிறவா சகோதரனைப் போல் தான் அவனை பாவித்து நட்பு பாராட்டுகிறான் கவின்.

கவினுடன் ஒட்டிக்கொண்டு திரியும் மதுவிற்கும் பிரபஞ்சனின் அமைதி பிடித்துப்போக, காணும் நேரமெல்லாம் அவனை கேலி செய்தே, அவனை ஒரு வழி ஆக்கிவிடுவாள்.

இப்போது தன் நினைவில் சுழன்று கொண்டிருந்த பிரபஞ்சனின் தோளில் அடித்த மது,

“ஏண்டா எப்போபாரு சோக கீதமே வாசிச்சிட்டு இருக்க??? அப்படி என்ன தான் டா உனக்குப் பிரச்சனை??” என பதில் வராது என்று தெரிந்தே ஆயிரமாவது முறையாக அதே கேள்வியைக் கேட்டாள் மது.

அவளின் கேள்விக்கு, எப்போதும் போல் புன்னகையையே பதிலாக பிரபஞ்சன் கொடுக்க,

“பெரிய புன்னகை மன்னன்னு நினைப்பு!! போட்டேனா பாரு” என அருகிலிருந்த தலையணையை எடுத்து அடிக்க வந்துவிட்டாள் மது.

“ப்ச்!! விடு மது!!! ஆமா உனக்கு இன்னைக்கு அந்த நியூ மூவி பிரமோஷன் இன்டர்வியூ இருந்ததே!! எப்படிப் போச்சு???” என பேச்சை மாற்றினான் கவின்.

“அட!! அதை வேற ஏன் டா கேட்குற?? டிரெய்லர் பார்த்தப்போவே இது ஊத்திக்கும்னு மணி சார்கிட்ட (கிரியேட்டிவ் ஹெட்) சொல்றேன், இந்த படத்துக்குலாம் நம்ம ப்ரோமோஷன் பண்ண வேண்டாம்னு!! அவர் கொஞ்சம் கூட அதை காதிலேயே வாங்காம இன்டர்வியூக்கு ரெடி பண்ணிட்டார்.. இந்த இன்டர்வியூ மட்டும் டெலிக்காஸ்ட் ஆச்சு, அன்னையோட டிரெண்டிங் நம்ம சேனலா தான் இருப்போம்.. “

“அவ்ளோ கண்டென்ட் கொடுத்து வச்சிருக்கான் டா அந்த ஹீரோ!!! நடிப்பு தான் சுத்தமா வரலை அவனுக்கு!! மத்தபடி நல்லா வழியிறான்.. அவன் பண்ணி வச்சிருக்க அலும்புக்கு, மீம் கிரியேட்டர்ஸ் எல்லாருக்கும் நிறைய டெம்ப்ளேட் கிடைக்கப் போகுது” என சிரித்துக் கொண்டே மது சொல்ல,

அதன் பின் அவர்கள் பேச்சுக்கள் எல்லாம் அவர்களின் தொழிலைப் பற்றியும், இன்னும் நான்கு நாளில் நடக்கவுள்ள சிங்கிங் சேம்பியன்ஸ் நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று பற்றியுமே இருக்க, இவர்களின் பேச்சில் கலந்து கொள்ளாமல், எப்போதும் போல் ஏதோ ஒரு சிந்தனையோடு தனக்கென ஒரு தனி உலகில் சஞ்சரித்திருந்தான் பிரபஞ்சன்.

கவினும் பல நாட்களாக அவனை கவனித்துக் கொண்டு தான் இருக்கிறான். பாடலை பயிற்சி செய்து பாடும் நேரம் தவிர்த்து, மற்ற நேரமெல்லாம் ஏதோவொன்றை யோசித்துக்கொண்டு, எங்கேயோ பார்வையை வெறித்துக்கொண்டே, வாழ்க்கையே வெறுத்துவிட்ட தோற்றத்தில் சுற்றித் திரியும் பிரபஞ்சன் அவனுக்கு இன்றளவிலும் புரியாத புதிர் தான்.

சொந்த ஊர் மதுரை, உறவென யாரும் அவனுக்கென்று இல்லை, உடல்நிலை காரணமாக பொறியியல் படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டான் அவன், என்பதைத் தவிர அவனைப் பற்றி வேறெந்த விஷயமும் இதுவரை யாருக்கும் தெரியவரவில்லை என்று சொல்லுவதை விட, தெரியப்படுத்த பிரபஞ்சன் விரும்பவில்லை.

நிகழ்ச்சிக்காக ஒவ்வொரு போட்டியாளரைப் பற்றியும், சிறியதாக அறிமுகம் செய்து வீடியோ வெளியிட சேனலின் தரப்பில் இருந்து இவனை அணுகிய பொழுது கூட வாயைத் திறக்க மறுத்துவிட்டான் அந்த கல்லுளி மங்கன்.

மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான போட்டியாளரான இவனின் கதையை ஒளிப்பதிவு செய்து வெளியிட்டால், அவர்களின் நிகழ்ச்சியின் டி.ஆர்.பி ரேட்டிங் எங்கோ சென்றுவிடும். அதற்கு வழியில்லாமல் செய்துவிட்ட, பிரபஞ்சன் மீதுஅவர்களுக்கு  சற்று கடுப்பு தான் என்றாலும், அவனின் திறமை அவர்கள் வாயை அடைத்திருந்தது.

கஷ்டம் என்று அழுபவனிடம், அவனின் துயரைப் போக்குவதைப் போல்,  ஏதாவது ஒன்றைக் கொடுத்தோ, இல்லை ஏதாவது ஒன்றை செய்தோ, அவர்களின் ஆனந்தக் கண்ணீர் மூலம், சேனலின் டி.ஆர்.பியை உயர்த்திக் கொள்ளும் சூட்சமம் கொண்டுள்ள இந்த தனியார் நிறுவனத்திற்கு, இப்படி வாய்ப்பூட்டு போட்டு நிற்பவனிடம் என்ன செய்து ஆதாயம் அடைவது எனப் புரியாமல் குழம்பிப் போய் இருந்தனர்.

இப்படி ஒரு அருமையான பாடகரை, திரைத்துறைக்கு அறிமுகம் செய்து வைப்பதில் அவர்களின் நிகழ்ச்சிக்கும் அந்த சேனலுக்கும் எவ்வளவு லாபம் என்பதை அவர்கள் உணர்ந்திருந்ததாலே, அவனின் பின்புலம் தெரியாவிட்டாலும் அவர்கள் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

“டேய் பிரபா!! ஃபைனல்ஸ்க்கு நல்லா பிராக்டிஸ் பண்ணிட்டியா??? எப்படி இருந்தாலும் நீ தான் டைட்டில் வின்னராகப் போற.. இருந்தாலும் தி பெஸ்ட் பெர்ஃபாமென்ஸை கொடுக்கணும் நீ!! அப்போதான் சினி பீல்டுல உனக்கு இன்னும் நிறைய வாய்ப்பு கிடைக்கும்.. அதை வச்சு நீ இன்னும் முன்னேறலாம்” என உண்மையான அக்கறையுடன் கவின் பேசிக்கொண்டிருக்க,

பிரபஞ்சன் கனிந்த முகத்துடன் கவினைப் பார்த்து, “நீங்க சொல்ற மாதிரி ஜெய்ப்பேனா இல்லையான்னு எனக்குத் தெரியலை.. ஆனா கண்டிப்பா நல்லா பாடுவேன் கவின் சார்!!!” என்றான் உறுதியுடன்.

“ஓய் பிரபா!!! அடுத்த வாரம் எல்லாம் டைட்டில் வின்னராகி ஒரு பெரிய வீட்டுக்கே ஓனர் ஆகிடுப்ப.. இதுல பெரிய பெரிய மியூசிக் டைரக்டர் கிட்ட இப்போவே சான்ஸ் கிடைச்சாச்சு உனக்கு.. பெரியாள் ஆனதும் எங்களை எல்லாம் மறந்துடாதப்பா” என மது கேலி செய்ய,

பதறிப் போன பிரபஞ்சன், “ஒன்னுமே இல்லாம அனாதையா வந்த எனக்கு, தங்க இடம் கொடுத்து, வேலையும் வாங்கி கொடுத்த கவின் சார் எனக்கு கடவுள் மாதிரி மேடம்!!! நான் என்ன மாதிரியான ஒரு சூழ்நிலையில இருந்து இங்க வந்திருக்கேன், இந்த வெற்றி எனக்கு எவ்வளவு முக்கியம்னு உங்க யாருக்கும் தெரியாது மேடம்..”

“யாருனே தெரியாத என்னை, சொந்தத்தம்பி மாதிரி பார்த்துக்கிற கவின் சார், நல்ல நண்பனா என்னை ஏத்துக்கிட்ட நீங்க.. உங்களுக்கெல்லாம், எவ்வளவு பெரிய மன ஆறுதலை எனக்கு நீங்க கொடுத்திருக்கீங்கன்னு தெரியாது மேடம்.. உதவி செய்யுறவங்களுக்கு அதோட அளவு சிறுசா தெரியலாம், ஆனா ஒருத்தரோட கஷ்ட காலத்துல கிடைக்குற அந்த சின்ன உதவியோட பலம், நீங்க யாரும் நினைச்சுப் பார்க்க முடியாத அளவு பெருசு மேடம்!!!! இனி ஒரு முறை இப்படி பேசிறாதீங்க  பிளீஸ்!!!! காலம் முழுக்க உங்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன் மேடம்” என லேசாய் குரல் கமற பிரபஞ்சன் கூறி முடிக்க,

சிறு கேலிக்குக் கூட இவன் அளவிற்கு அதிகமாய் உணர்ச்சிவசப்படுவது, கவின் மற்றும் மதுவிற்கு யோசனையை அளித்தது.

நிச்சயம், இவன் ஏதோ அதீத மன அழுத்ததில் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்பதை உணர்ந்த கவின்,

“பிரபா!! உனக்கு ஏதோ பெரிய பிரச்சனைன்னு எனக்குப் புரியுது.. பட்!! நீ என்னன்னு தெளிவா சொன்னா தான், அதுக்கு சொல்யூஷன் கண்டுபிடிக்க முடியும்.. எல்லாத்தையும் உனக்குள்ளேயே போட்டு டம்ப் பண்ணிக்காத!! அது ரொம்ப டேஞ்சர் டா!! எதுனாலும் சொல்லு!! பார்த்துக்கலாம்.. நான் இருக்கேன் உன் கூட!!!” என பிரபஞ்சனின் தோளைத் தொட,

கவினின் அக்கறையும், அவனின் அன்பும் பிரபஞ்சனுக்கு அவளை நினைவுபடுத்தியது!!

அதுவும் கவினின் ‘ நான் இருக்கேன் உன் கூட ‘ எனும் கடைசி வரிகள், எப்பொழுது பிரபஞ்சன் சோர்ந்து, வீழ்கிறானோ அவனை மீண்டும் நம்பிக்கை கொண்டு எழச்செய்ய அவனின் கவி கூறும் அதே நம்பிக்கை வார்த்தைகள்!!!

நமக்காக ஒருவர் இந்த பரந்த உலகில் இருக்கிறார் என்பதை விட மனிதனுக்கு வேறென்ன பெரிதான பலம் இருந்துவிடப் போகிறது!!!

அப்படி ஒரு பலத்தை, பிரபஞ்சனுக்கு முன்பு கொடுத்தது அவனின் கவி!!! இப்போது கவின்!!

அந்த வார்த்தைகள் அவன் மனதில் அதீத தாக்கத்தை ஏற்படுத்தியதன் பயனாய், பிரபஞ்சனின் விழியோரம் கண்ணீர் தடங்கள்!!

“நீங்க சொன்னதே போதும் கவின் சார்!!! இப்போ எனக்கு எந்த உதவியும் வேண்டாம்.. ஆனா கூடிய சீக்கிரமே உங்ககிட்ட தான் வருவேன்.. அப்போ எனக்கு உதவி, என் வாழ்க்கையை எனக்கு திருப்பிக் கொடுத்திருங்க சார்!!!” என கவினின் கைகளைப் பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டவன், அதற்கு மேலும் அவர்களின் முன் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்த விரும்பாமல், தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றுவிட்டான்.

செல்லும் அவனையே யோசனையாக பார்த்திருந்த கவின்,

“ஹி டெஃபனட்லி  நீட்ஸ் அ கவுன்சிலிங் மது!!!” என்றான்.

அவனிற்கு ஆமோதிப்பாய் தலையசைத்த மதுவும், “பார்க்க ரொம்ப யங்கா இருக்கான்.. 25 வயசுக்குள்ள தான் இருக்கும்.. இப்போவே அப்படி என்ன டா கஷ்டம் இவனுக்கு!!! இவளோ டிப்ரஷன்ல இருக்கான் இவன்.. ” என பிரபஞ்சனை நினைத்து பெருமூச்சு விட்டவள்,

“ஃபைனல்ஸ் முடியட்டும்.. நம்ம சைக்கோ(மனநல) டாக்டர் எட்வர்ட் கிட்ட கூட்டிட்டு போகலாம்..” என்றாள்.

கவினிற்கும் அதுதான் சரியென்று பட, பிரபஞ்சனை  எப்படியாவது மன அழுத்தத்தில் இருந்து வெளிக்கொண்டு வந்துவிட வேண்டும் என முடிவெடுத்துக்கொண்டே தன் வேலைகளை கவனிக்கலானான்.

****

“குழந்தையை பார்த்துக்கிறதை விட வேறென்ன வெட்டி முறிக்குற வேலை உனக்கு?? கவனத்தை புள்ளை மேல வைக்காம கண்டவன் நினைப்புலையும் இருந்தா இப்படித்தான் நடக்கும்!!! உன் அசட்டையால புள்ளை தான் இப்போ அவதிப்படுது!!” என பின் சீட்டில் அமர்ந்து நிற்காது வழிந்த கண்ணீருடன்,  மகளின் கைகளின் கட்டை மீறி வழிந்த ரத்தத்தை துடைத்துக்கொண்டிருந்தவளை வார்த்தை எனும் வாள் கொண்டு காயப்படுத்திக் கொண்டிருந்தார் ஓட்டுநர் இருக்கையில் இருந்த சேதுராமன்.

இதைவிட மோசமான பேச்சுக்களை எல்லாம் இத்தனை வருடங்களில் கேட்டுக்கேட்டு அவளின் மனம் மரத்திருந்தது. எனவே, அவரின் பேச்சை எண்ணி எல்லாம் பெண்ணவளின் கண்ணீர் இல்லை, மாறாக மகளின் வலியைக் கண்டு அன்னையாக அவளின் மனம் உதிரத்தை சிந்தியது.

குழந்தைக்கு குளிக்க வைக்க வெந்நீரை எடுத்துக்கொண்டு அவள் குளியலறை சென்ற போது, சமையலறையில் காய் நறுக்க வைத்திருந்த கத்தியை நாற்காலியின் உதவியுடன் கைப்பற்றிய குழந்தை, அன்னையைப் போலே காய் நறுக்க முயற்சித்து, விரலை வெட்டியிருந்தது.

அதிக ஆழம் இல்லை என்றாலும், பிஞ்சு விரல் என்பதால் நிற்காமல் ரத்தம் மட்டும் வழிந்து கொண்டே இருக்க, வலியிலும், ரத்தத்தைப் பார்த்த பயத்திலும் அழுது கொண்டே இருந்த குழந்தை சற்று முன்பு தான் கிறங்கிப் போய் அமைதியாகி இருந்தது.

நடந்த சம்பவத்தில் குழந்தையின் அன்னையின் மேல் தவறொன்றும் இல்லை என்றாலும், காணும் அனைவரும் அவளையே குற்றவாளியாக்கி குளிர் காய்ந்தனர். மற்றவர்களோடு சேர்த்து அவளைப் பெற்றவர்களும் இருந்தது தான் அவளை மேலும் ஒடுக்கியது.

இதோ!! இப்போது கூட, என்ன நடந்ததென்று ஒரு வார்த்தை கூட அவளிடம் கேட்காமல், அப்போதிருந்து வார்த்தைகளால் அவளை வதம் செய்து கொண்டிருக்கிறார் அவளின் தந்தை.

இது, இன்று நேற்று ஆரம்பித்ததல்ல, பிரபஞ்சன் அவள் வாழ்க்கையில் நுழைந்ததில் இருந்தே இப்படியான வசவு பேச்சுகளுக்கு அவள் மனம் பழகியிருந்தது.

முதலில் அவளின் தந்தையோடு சேர்ந்துகொண்டு அவளின் அன்னையும் கடுஞ்சொற்களால் அவளை காயப்படுத்திக் கொண்டு தான் இருந்தார். இப்போது, சில காலங்களாக, மகள் படும் துயரை அருகில் இருந்து பார்த்து வருபவருக்கு, கொஞ்சம் கொஞ்சமாக அவளின் மனம் புரிய, தன் வார்த்தைகளை சுருக்கிக் கொண்டார்.

இதோ இப்போது கூட, வாய் ஓயாமல் திட்டிக் கொண்டிருக்கும் கணவனிடம்,

“ப்ச்!! பேசாம ரோட்டைப் பார்த்து வேகமா வண்டியை ஓட்டுங்க.. அம்மு கிறங்கிட்டா” என்று அவரின் திட்டுக்களில் இருந்து தற்காலிக விடுதலை வாங்கிக் கொடுத்திருந்தார் அவரின் மகளுக்கு.

ஆனால், அது எல்லாம் அங்கே அழுது கொண்டிருந்த அவரின் மகளின் கண்ணிலும் படவில்லை, கருத்திலும் பதியவில்லை.

அவளின் தற்போதைய உலகம் அவளின் மகள் மட்டுமே!!!

எத்தனையோ துயரை அனுபவித்தும் இன்று அவள் உயிர் வாழ்வதற்கான ஒரே காரணம் அவள் மகள் என்று சொல்லலாம். அப்படி இருக்கையில், குழந்தையின் கண்ணீர் அவளை உயிர் வரை அசைத்துப் பார்த்திருந்தது.

‘ தான் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டுமோ!!’ என ஆயிரமாவது முறையாக தன்னையே நிந்தித்துக் கொண்டாள் அந்த பேதை!!

செய்யாத குற்றத்திற்கு சிலுவை சுமப்பது ஒன்றும் அவளுக்கு புதிதல்லவே!!

குழந்தையை எண்ணி அவள் தன்னையே வருத்திக் கொண்டிருக்க, அவளை மேலும் சோதிக்காமல் மருத்துவமனையும் வந்துவிட, விரைவாக மகளைக் கைகளில் அள்ளிக்கொண்டு பெற்றவர்களுக்கு கூட காத்திராமல் உள்ளே ஓடினாள் அவள்!! அஞ்சலி!! கவிதாஞ்சலி!!!

குழந்தையை பரிசோதித்த மருத்துவர், பெரிதாக காயம் இல்லை என்று சொல்லி, காயத்தை சுத்தம் செய்து மருந்து வைத்து கட்டு மட்டும் போட்டு விட்டனர்.

குழந்தை அழுதழுது மிகவும் துவண்டு போய் விட்டதால், ஒரு மணி நேரம் மட்டும் அங்கே அனுமதித்து, சிரைவழி சொட்டுநீர் சிகிச்சை(IV drips) வழங்கப்பட்டது. தொற்று ஏற்றபடாமல் இருக்க மருந்தையும் ஐவி வழியாகவே செலுத்திக்கொண்டு, குழந்தை ஓரளவிற்கு தெளிச்சி அடைந்தபின் அங்கிருந்து கிளம்பினார்கள்.

மகளின் சிரிப்பைக் கண்ட பின் தான் அஞ்சலியின் முகமும் லேசாகத் தெளிந்தது.

அது பொறுக்காத அவளின் தந்தை,

“இன்னும் எத்தனை நாளைக்குத் தான் இங்கேயே இருக்கதா உத்தேசம் உனக்கு?? அப்படி என்ன ஊர் உலகத்துல நடக்காத தப்பை அவன் பண்ணிட்டான்?? ஒழுங்கா அவனோட போய் குடும்பம் நடத்துற வழியைப் பாரு!!!” என கட்டளை போல் சொல்ல,

இத்தனை நேரம் சோகத்தில் கசங்கிப் போய் இருந்த அஞ்சலியின் முகம், தந்தையின் பேச்சில் இரும்பென இறுகியது!!

‘ உலகத்தில் நடக்கின்ற தப்பு தான் என்றாலும், தவறு தவறு தானே??? அதிலும் அவன் தனக்குச் செய்தது!!!!!’ பெற்றவர்களிடம் கூட பகிர முடியாத அந்த கொடூர சம்பவத்தை எண்ணி அவள் மனம் உலைகளனாக கொதிக்க,

“என்னால இனி ஜென்மத்துக்கும் அங்க போக முடியாது!!! உங்களுக்கு நான் இங்க இருக்கது கஷ்டமா இருந்தா சொல்லிடுங்க!! நானும் அம்முவும் வேற எங்கேயாவது போயிடுறோம்” என தெளிவாக உரைத்த மகளை, ஆதங்கத்துடன் அவளின் அன்னை கண்டார் என்றால், ஆத்திரத்துடன் அவளின் தந்தை முறைத்துக் கொண்டே மௌனியானார்.

“கை தொடும் தூரத்தில் இல்லா நட்சத்திரங்களைத் 

தொட்டு விட துடிக்கும் ஆயுள் கைதி நான்!!!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!