Skip to content
Post Views: 4,582
அன்பு – 3
சென்னை மாகாணத்தில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், பெரும் மக்கள் திரளால் நிறைந்திருந்தது!!!
Advertisement
காரணம், அன்று தமிழ்நாட்டின் மிகப் பிரபலமான சிங்கிங் சேம்பியன்ஸ் நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று அங்கே நடைபெற்றுக் கொண்டிருந்தது.
பல்லாயிரக் கணக்கிலான மக்கள் நேரிலும், பல லட்சக் கணக்கிலான மக்கள் தொலைக்காட்சியில் நேரலையாகவும் அந்த நிகழ்ச்சியைக் கண்டு களித்து, தங்கள் அன்பையும் ஆதரவையும் தங்களுக்கு பிடித்தமான போட்டியாளருக்கு, தங்களின் கைபேசி மூலம் வாக்களித்து தெரிவித்துக் கொண்டிருந்தனர்.
Advertisement
Advertisement
நேரம் இரவு எட்டரையைக் கடந்திருக்க, கிளாசிக்கல் சாங்ஸ் எனப்படும் கர்நாடக இசைப்பாடல்கள் சுற்று நிறைவடைந்திருக்க, இரண்டாம் சுற்று தொடங்குவதற்காக சற்று இடைவேளை விடப்பட்டிருந்தது.
இறுதிச்சுற்றுக்குத் தேர்வான ஐந்து நபர்களில், மித்ரா எனும் பெண் பாடிய,
Advertisement
‘பாடறியேன் படிப்பறியேன்
பள்ளிக்கூடம்தான் அறியேன்…’ பாடலும்,
நம் பிரபஞ்சன் பாடிய,
‘பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உன்னை நான் பாடவைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே’ பாடலும் மக்கள் மத்தியிலும், நடுவர்கள் மத்தியிலும் பலத்த ஆதரவை பெற்றிருந்தது.
இரண்டு பாடல்களும், எத்தனை கடினமானது என இசையை அறிந்தவர்களுக்கு நன்றாகப் புரியும். அப்படி இருக்கையில், அதை எவ்வித அலட்டலும் இன்றி அழகாக இருவரும், தங்கள் பாணியில் பாடியிருக்க, அதுவே அந்த பாடல்களுக்கு தனி அழகை வழங்கி, இருவருக்கும் பயங்கரமான ஆதரவையும், வாக்குகளையும் வழங்கிக் குவித்திருந்தது, அதிலும் முறையாக சங்கீதம் கற்றுக்கொள்ளாத பிரபஞ்சன், இப்படி ஒரு கடினமான பாடலை அசாத்தியமாக பாடி அனைவரையும் அசர வைத்தது, அவனுக்கு இன்னும் அதிக வாக்குகளை தேடித் தந்தது.
தற்போது, இரண்டாம் சுற்று இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில், தனக்கென கொடுக்கப்பட்டிருந்த அறையில் கையில் வைத்திருந்த கிழிந்த புகைப்படம் ஒன்றை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் பிரபஞ்சன்.
இன்றைய நாளின் முக்கியத்துவத்தைக் கூட மறந்துவிட்டு, அவனின் மனம் அந்த கிழிந்த புகைப்படத்தில் புன்னகையுடன் நின்றிருந்த அவனின் கவியிடமே தஞ்சமடைந்துவிட்டது.
நிச்சயம் அவன் தான் வெற்றியாளர் என அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்திருந்தது!! அவனின் உழைப்புக்கும் திறமைக்கும் கிடைக்கப்போகும் முதல் வெற்றி!!! ஆனால், அவனின் ஒவ்வொரு தோல்வியிலும் துவண்டு போகாமல், உடன் நின்று அனைத்தையும் கடக்க அவனுக்கு பெரும்துணையாய் இருந்தவளின், அண்மை இல்லாமல் இந்த வெற்றி கூட அவனுக்கு வேப்பங்காயாய் கசந்தது.
அவள் உடனில்லாதது, வார்த்தைகளால் சொல்ல முடியாத வலி தான் அவனுக்கு என்றாலும், இப்படியே இடிந்து போய் அமர்ந்து விட முடியாதே!! நிச்சயம் இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டும்.. அது அவனுக்கு எவ்வளவு அவசியம் என்பதை அவன் மட்டுமே அறிவான். ஆக வெற்றி பெற, அவன் அடுத்த சுற்றில் இன்னும் மெனக்கெட்டு தன் முழு உழைப்பையும் போட்டு நன்றாக பாட வேண்டும்.
ஒரு முடிவுடன் அந்த கிழிந்த புகைப்படத்தை தன் இதயத்தின் அருகே உள்ள பாக்கெட்டில் பத்திரமாக வைத்தவன்,
“நிச்சயம் ஜெய்ச்சிருவேன் கவி!!! கண்டிப்பா ஜெய்ச்சிட்டு உன் முன்னாடி வருவேன்” என மனதோடு அவளுடன் பேசிக்கொண்டவன், இதயத்தை இதமாய் ஒரு முறை வருடிக் கொடுத்துவிட்டு எழுந்து சென்றான்.
***
“எனக்கு ரொம்ப தலை வலிக்குது!! இன்னைக்கு மட்டும் கொஞ்ச நேரம் பாப்பாவை பார்த்துக்கிறீங்களா???” என மிகுந்த தயக்கத்திற்குப் பிறகு தன் அன்னையிடம் அஞ்சலி கேட்டிட,
அவளின் அன்னையின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது!! பின்னே இத்தனை வருடங்களாய் அவசியத்திற்கு தவிர தன்னுடன் ஒரு வார்த்தை அதிகமாக பேசியிராத மகள், இன்று உதவியாக ஒன்றைக் கேட்கையில் அவருக்கு ஆச்சரியமாக இருந்தாலும், மலையளவு கோபத்தை மனதில் அழுத்தி வைத்திருக்கும் மகள், அதை விட்டு இறங்கி வந்து தன்னுடன் பேசுகிறாள் என்றால், அந்த அளவிற்கு தாங்க முடியாத வலியோ??? என தாயுள்ளம் பரிதவித்தது அடுத்த நொடி.
அவரின் ஆச்சரியம் எதனால் என்று புரிந்த அஞ்சலிக்கு, தயக்கம் அதிகமாக, ‘அவங்ககிட்ட கேட்டிருக்கக் கூடாதோ!!!’ என நினைத்துக்கொண்டவள் மறுத்து ஏதோ சொல்லப்போக,
மகளின் எண்ணப்போக்கை அறிந்துகொண்ட அவளின் அன்னை பொற்கொடி,
“நீ போய் சாப்பிட்டு தூங்கு!! இவளுக்கு சாப்பாடு ஊட்டி நான் தூங்க வச்சுக்கிறேன்” என பேத்தியை தன் கைகளில் அள்ளிக்கொண்டார்.
“இல்லை.. கொஞ்ச நேரம் தான்.. என் கூடவே அம்மு தூங்கட்டும்!!!” என அவசரமாய் அஞ்சலி மறுக்க,
பேத்தி உடனிருந்தால் தான் அஞ்சலிக்கு சொற்ப நேரமாவது உறக்கம் என்பது அருகே வரும் என உணர்ந்திருந்த பொற்கொடியும்,
“சரி!! அவ தூங்குனதும் உன்கிட்ட வந்து நான் படுக்க வச்சிடுறேன்.. நீ முதல்ல சாப்பிட்டு மாத்திரை போட்டுட்டு படு.. நான் இவளை வெளிய விளையாட்டு காட்டிட்டே சாப்பாடு ஊட்டி விடுறேன்.. இங்க இருந்தா சத்தம் போட்டு உன்னை தொந்தரவு செஞ்சுட்டே இருப்பா.. ” என்றவர் பேத்திக்கான உணவை தயார் செய்து கொண்டு, அந்த மழலையுடன் விளையாடியவாரு வெளியேற,
அஞ்சலிக்கு அன்னையிடம் பொய்யுரைக்கிறோமே என நெஞ்சம் குறுகுறுத்தது.
அவளின் முகத்தைக் கண்டுவிட்டு தயங்கிய பொற்கொடி, “ரொம்ப வலிக்குதா அஞ்சலி??” என கலக்கத்துடன் கேட்க,
சட்டென முகத்தை சீராக்கிக் கொண்டவள், “இல்லை.. ” என தலையை இடைவலமாய் ஆட்டிவிட்டு தன்னறைக்குள் புகுந்து கொண்டாள்.
பல வருடங்கள் கழித்து பெற்றவளிடம் ஒரு பொய்!!!
அன்றும் அவனுக்காக!!! இதோ இன்றும் அவனுக்காக!!!
நினைக்கையில் ஒரு விரக்திச் சிரிப்பு பெண்ணவளின் இதழோரம்.
எங்கோ ஆரம்பித்த சிந்தனை அவளின் கடந்த கால நினைவுகளை மொத்தமாய் மீட்டிப் பார்க்க வைத்திருக்க,
‘எவ்வளவு அழகாய் ஆரம்பித்த காதல்!!! ஆம் காதல் தான்!!! பெருங்காதல் அவளின் பிரபாவின் மீது!!!’ இன்று இந்த நிலைமையில் தன்னை நிறுத்தியிருக்கிறதே என தன்னுடைய தற்போதைய நிலையை எண்ணி தன்னை மீறி கழிவிரக்கத்தில் அவள் கண்ணீர் சிந்த, வெளியே கேட்ட மகளின் சிரிப்பொலி தான் அவளை நினைவிற்கு இழுத்துக்கொண்டு வந்தது.
“அச்சோ நேரமாச்சே!!!” என தலையில் தட்டிக்கொண்டவள், அவசரமாக தன் கைபேசியை இயக்கி ஒரு குறிப்பிட்ட செயலியை திறந்து, அவளுக்கு வேண்டிய நிகழ்ச்சியைத் தேட, சில நொடித் தேடல்களிலே அவள் கண்களில் சிக்கிவிட்டது,
சிங்கிங் சேம்பியன்ஸ் நிகழ்ச்சியின் நேரலை!!!!
‘ இந்நேரம் பாடியிருப்பானோ???’ என அவள் மனம் படபடக்க, விரைவாக அந்த நிகழ்ச்சியை இயக்கி அதில் கண்களில் அலைபாய விட்டாள் அஞ்சலி.
அவள் நினைத்தது போலவே முதல் சுற்று முடிந்திருக்க, இரண்டாவது சுற்று இப்போது தான் தொடங்கவிருப்பதாக அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளினி மது அறிவித்துக் கொண்டிருந்தாள்.
முதலில் பாடியதை தவறுவிட்டுவிட்டதில் அனிச்சை செயலாய் மங்கையவளின் மதி முகம் வாடிப் போய்விட,
இப்போது பாடுவதையாவது தவறுவிட்டுவிடக்கூடாது என தனக்குத் தானே சொல்லிக்கொண்டு கண்களை கைபேசி திரையை விட்டு சிறிதும் அகற்றாமல் அதையே கண்கொட்டாமல் பார்த்திருந்தாள் அவள்!!
இரண்டாவது சுற்று தொடங்குவதற்கு முன், தமிழகம் மட்டுமல்லாது, மற்ற மொழிகளிலும் தன் நடிப்புத் திறமையால், முன்னணி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபல நடிகர் ஒருவரை சிறப்பு விருந்தினராக வரவழைத்து அவரைப் பற்றி புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
“ப்ச்!! இப்போ இது ரொம்ப அவசியமா???” என சலித்துக்கொண்டவள், ஒரு காலத்தில் அந்த முன்னணி நடிகரின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவழியாக மனமிறங்கி அந்த நடிகரை அவருக்கான இருக்கையை கொடுத்து அமரவைத்த பிறகு, இரண்டாவது சுற்றைத் துவங்கினர்.
முதலாவது போட்டியாளராக தர்ஷன் என நடுத்தர வயதுடைய ஒருவன் வந்து, சேது படத்திலிருந்து ‘ மாலை என் வேதனை கூட்டுதடி ‘ எனும் பாடலை காதல் ரசம் சொட்டச் சொட்ட மிக அருமையாக பாடி அரங்கம் அதிரும் கைதட்டுக்களை பரிசாய் பெற்றான்.
உண்மையில் மிக அற்புதமாய் பாடிய அவனை பாராட்டாமல், பெண்ணவளின் மனமோ, ‘ ச்சே!! என்ன இவளோ நல்லா பாடுறாங்க.. இவளோ டப் காம்பெடிஷன் இருந்தா அவன் பயப்படுவானே!!! ‘ என பிரபாவை எண்ணி கலக்கம் அடைந்தது.
“கடவுளே!!! பிரபாவைத் தவிர மத்த எல்லாரும் கொஞ்சம், கொஞ்சமே கொஞ்சம் கம்மியா பெர்ஃபார்ம் பண்ணனும்!!!” என ஒரு அவசர வேண்டுதல் வேறு வைத்த பெண்ணவளை, கடவுள் புரியாமல் பார்த்து வைத்தார் என்பது தனிக்கதை!!!
அடுத்தாவது பிரபா பாடுவான் என அவள் காத்திருக்க, அவள் பொறுமையை சோதிப்பதைப் போல் ஒரு பெண் வந்து, ஏதோ ஒரு பாடலை பாடிக்கொண்டிருந்தாள்.
ஆம், ஏதோ ஒரு பாடல் தான் அஞ்சலியைப் பொறுத்தவரை!! அவளின் கவனம் எல்லாம் பிரபாவை எங்காவது ஒரு மூலையில் காட்டிவிட மாட்டார்களா?? என அந்த குட்டித் திரையில் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருக்க, பாடியவள் மீதோ, அவள் பாட்டின் மீதோ சுத்தமாக கவனம் செல்லவில்லை.
ஆனாலும், அந்த போட்டியாளரை நடுவர்கள் இரண்டு பேர் மேடைக்கு வந்து வாழ்த்திவிட்டு சென்றது, அவளின் பயத்தை மட்டும் மேலும் அதிகரித்தது.
“எப்போ தான் பிரபாவை கூப்பிடுவாங்க!!!” என அவள் நகத்தைக் கடித்து, விலகிச் செல்லக் காத்திருக்கும் பொறுமையை இழுத்துப் பிடித்தாள்.
அவளை அதிகம் சோதிக்க வைத்துவிட்டே அடுத்த அரைமணி நேரம் கழித்து,
“இதோ உங்களுக்காக அடுத்து பாட வருவது, நம் அனைவரின் அபிமான போட்டியாளர், பிரபஞ்சன்!!!!” என மது தன் உற்சாகக் குரலில் அறிவித்தாள்.
மது அறிவித்ததும், அந்த பிரம்மாண்டமான எல்.ஈ.டி திரையெங்கும் பிரபஞ்சனின் நிழற்படம் பெரிதாக தோன்ற, பெண்ணவளின் பார்வை அதிலே நிலைத்துவிட்டது.
மது அறிவித்ததும், ஆரவாரத்துடன், போட்டியாளர்களுக்கென்றே பிரத்யேகமாக செய்யப்பட்ட மின்தூக்கி வழியாக பிரபஞ்சன் மேலே வர, கேமராவின் பார்வை அவனின் பக்கம் திரும்பியது.
சேனலின் தரப்பில் வடிவமைத்து கொடுக்கப்பட்ட ஆகாயநீல வண்ண ஷர்வாணியில் அசத்தும் அழகுடன், அளவான புன்னகையுடன் வந்த பிரபஞ்சனைக் கண்டு, மக்கள் மத்தியில் எழுந்த ஆரவாரக் கூச்சலில் பெண்ணவளின் மனம் பெருமிதத்தில் விம்மித் தவித்தது!!!
அங்கே மக்களின் ஒவ்வொரு சந்தோஷக் கூச்சலுக்கும் பெண்ணவளின் இதயம் பெருமையில் மிளிர, கண்கள் ஆனந்த மிகுதியில் கலங்கிவிட்டது!!
“இவ்வளவு மக்களோட அன்பை சம்பாதிச்சபோவே நீ ஜெய்ச்சுட்ட டா பிரபா!!!” என மானசீகமாக அவனுடன் உரையாடிக் கொண்டவளின் பார்வை பிரபஞ்சனை விட்டு இம்மியும் அகலவில்லை.
“வாங்க!! வாங்க பிரபஞ்சன்!!!” என அவனை லேசாய் கட்டியணைத்து வரவேற்ற மது,
“நம்ம பிரபஞ்சனுக்காக ஒரு விசில் போடுங்க!!!!” என மக்களை நோக்கி குரல் கொடுத்த மது, தன் தொகுப்பாளினி வேலையை சிறப்பாக செய்தாள்.
அவள் சொன்னதும் அனைத்து திசைகளிலும் இருந்து பறந்து வந்த விசில் சப்தம் செவியைக் கிழித்தது.
“ப்பாஹ்!!! விண்ணை முட்டும் விசில் சப்தம்ன்னு கேள்வி பட்டிருக்கேன்.. இப்போ தான் பார்க்கிறேன்” என சிலாகித்தவள்,
“பிரபஞ்சன்!! பார்த்தீங்களா!! மக்கள் உங்கமேல எவ்வளவு அன்பு வச்சிருக்காங்கன்னு ..” என் அவன் பக்கம் திரும்பினாள் மது.
இத்தனை அன்புக்கு தான் தகுதியானவன் தானா என கலங்கிப் போய் நின்றிருந்த பிரபஞ்சன்,
“என்ன சொல்றதுன்னு தெரியலை!!! உண்மையா.. உண்மையா ரொம்ப பிரம்மிப்பா இருக்கு.. என் வாழ்க்கையில.. இதெல்லாம் கனவுல கூட நடக்கும்னு நான் நினைச்சுப் பார்த்ததில்லை.. ரொம்ப ரொம்ப நன்றி!!!!” என இதயத்தில் கைவைத்து உளமாற அவன் நன்றியைத் தெரிவித்திருக்க,
அவன் எந்த அளவிற்கு உணர்ச்சிவசப் பட்டிருக்கிறான் என அஞ்சலிக்கு மட்டுமே புரிந்தது!!
“யூ டிசர்வ் இட் பிரபா!!” என முணுமுணுத்துக் கொண்டவளின் கண்களிலும் கண்ணீர் துளிகள்.
“ஓகே பிரபா!! இந்த ரவுண்டலயும் சிறப்பா பாடுங்க!! வாழ்த்துக்கள்!!!” என மது அவனை வாழ்த்தி விடைபெற,
பிரபஞ்சன் எப்போதும் போல் கண்களை மூடி மானசீகமாக அவன் கவியிடம் உரையாடினான்.
“என் கூடவே இரு கவி!!” என சொல்லிக் கொண்டவனின் செவிக்குள் அசரீரியாக, “நான் இருக்கேன் டா உன்கூட!! நல்லா பாடு!!” என அவளின் வார்த்தைகள் ரீங்காரமிட, புன்னகையில் மிக மெல்லியதாய் அவன் இதழ்கள் வளைந்தது.
அதை கண்டுகொண்ட அவனின் கவிதாஞ்சலியின் இதழ்களிலும் மென்முறுவல்.
இசை தொடங்கும் போதே, பாடலை கண்டுகொண்ட மக்களுக்கு நிச்சயம் இவன் குரலால் அனைவரையும் அழுக வைக்கப் போகிறான் என புரிந்துவிட்டது.
நினைத்ததைப் போலவே,
“நினைத்து
நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே
வாழ்கிறேன் ஓஹோ
உன்னில் இன்று என்னை
பார்க்கிறேன்”
என்று உயிரை உருக்கும் குரலில் அவன் தொடங்கிட, காதலின் வாசனையே அறிந்திராதவர் கூட அவன் குரலில் தெரிந்த வலியில், காதலின் வேதனையை உணர்ந்தனர்.
“உள்ளங்கையில்
வெப்பம் சேர்க்கும் விரல்கள்
இன்று எங்கே தோளில்
சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே”
என்று பாடியவனின் குரலில் இருந்த ஏக்கம் பெண்ணவளின் மனதை, கத்தியின்றியே குத்திக் கிழித்தது!!
‘ என்னை மறந்துடு டா பிரபா!!! இவளோ கஷ்டப்படாத!!’ என ஊமையாய் அவள் மனம் அழுது அரற்றியதை பிரபா அறிய வாய்ப்பேயில்லை.
“பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா?
பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா?”
நடுவர்களுக்குக் கூட லேசாய் கண்கள் கலங்கிவிட்டது இந்த இடத்தில்!!!
“தொடந்து வந்த நிழலின் பிம்பம் வந்து வந்து போகும்
திருட்டுப் போன தடயம் பார்த்தும்
நம்பவே இல்லை நானும்
ஒரு தருணம் எதிரில் தோன்றுவாயென
நானும் வாழ்கிறேன்.”
இறுதி வரியில் தன்னையும் மீறி பிரபாவின் கண்கள் கலங்கி விட, இடது புறங்கையால் முகத்தைத் துடைத்துக் கொண்டான்.
காலங்கள் கடந்தும் அவன் காதல் மாறவேயில்லை என கண்டுகொண்ட கவிக்கு நெஞ்சை அடைக்கும் உணர்வு!!!
இதற்கு மேலும் அவனின் முகத்தைப் பார்க்க திராணியில்லாமல் அலைபேசியை பட்டென அணைத்தவள்,
“என்னை மன்னிச்சிடு பிரபா!!!! நான் உனக்கு தகுதியானவ இல்லை டா… ஐ டோண்ட் டிசர்வ் யுவர் லவ்!!!!” என கைகளில் முகத்தைப் புதைத்து அவள் தேற்றுவாறின்றி அழுது கரைய,
சரியாக அதே நேரம் படபடப்புடன் மகளின் அறைக்கதவைத் திறந்து உள்ளே வந்த பொற்கொடி, அழுகையோடு கூறிய செய்தியில் அஞ்சலியின் கண்ணீர் பட்டென நின்றுவிட, அவளின் இதழோரம் ஓர் இகழ்ச்சிப் புன்னகை!!!!
****
“த்ரீ!!!”
“டூ!!”
“ஒன்!!”
“அண்ட் தி டைட்டில் வின்னர் ஆஃப் சிங்கிங் சேம்பியன்ஸ் சீசன் 5 அவார்ட் கோஸ் டூ…” என அந்த முன்னணி நடிகர் புன்னகையுடன் ஒலிவாங்கியை(மைக்) மக்கள் புறம் நோக்கி நீட்ட,
“பிரபஞ்சன்!! பிரபஞ்சன்!! பிரபஞ்சன்!!” என எட்டுத்திக்கும் இருந்து ஒருசேர வந்த சப்தத்தில்,
அந்த நடிகரின் புன்னகை இன்னும் விரிய,
“யெஸ்!!! தி வின்னர் இஸ் பிரபஞ்சன்!!!!” என்று அறிவித்தவன்,
அங்கு மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போய் நின்றிருந்த பிரபஞ்சனை அணைத்து வாழ்த்தி, வெற்றிக்கோப்பையை அவனுக்கு பரிசளித்தார்.
அவரைத் தொடர்ந்து நடுவர்கள், சக போட்டியாளர்களின் வாழ்த்து மழையில் பிரபஞ்சன் நனைந்து கொண்டிருக்க, அந்த சேனலின் தயாரிப்பாளர், அவனின் வெற்றிக்கான பரிசாய், பத்து லட்சம் ரூபாய் காசோலையும், M.D. பிரமோட்டார்ஸ் வழங்கும் அறுபது லட்சம் ரூபாய் மதிப்பிலான 2BHK வீட்டையும் பரிசாக அவனுக்கு வழங்க, பிரபஞ்சனுக்கு பேச்சு மூச்சற்ற நிலை தான்.
மழைக்கு ஒதுங்க கூட இடமில்லாமல் அவன் கண்ணீருடன் ரோட்டில் கழித்த சில நாட்கள் எல்லாம் அவன் கண்முன்னே வலம் வர, தலையை உலுக்கி நினைவுகளில் இருந்து கலைந்தவன், அளவான புன்னகையுடன் நன்றி தெரிவித்து பரிசைப் பெற்றுக்கொண்டான்.
“சொல்லுங்க பிரபஞ்சன்!!! இந்த நிமிஷம் எப்படி ஃபீல் பண்றீங்க??? இந்த போட்டிக்கு முதல்முறை வரப்போ இந்த டிராபியை கையில வாங்குவோம்னு நினைச்சிருக்கீங்களா??? ஜஸ்ட் ஷேர் யுவர் தாட்ஸ்!!!” என்ற மது, அவனை இப்போதாவது பேசிவிடேன் என்பது போல் பார்க்க,
கலங்கிய குரலை செருமி சரி படுத்திக் கொண்டவன்,
“எல்லா.. எல்லாருக்கும் ரொம்ப நன்றி!!! இதைத்தவிர என்ன சொல்லன்னு தெரியலை எனக்கு!!!! இவளோ அன்புக்கு நான் என்ன கைமாறு செய்யப்போறேன்னு சத்தியமா எனக்குத் தெரியலை!!!”
“இங்க இந்த மேடையில வந்து நின்னு தைரியமா நான் பாடுவேன்னு ஒரு நாலு வருஷத்துக்கு முன்னாடி யாராவது சத்தியம் செஞ்சு சொல்லியிருந்தா கூட நம்பியிருக்க மாட்டேன் நான்.. எனக்கான பொக்கிஷம் என் கூடவே இருந்தப்போ அதோட மதிப்பு தெரியலை!!! அதை தொலைச்ச பின்னாடி தான், என்ன செஞ்சாவது அந்த பொக்கிஷத்தை தேடி திரும்ப எடுத்துட்டு வந்து பத்திரமா கைக்குள்ள வச்சிக்கணும்னு தோணுது!!! திரும்ப கிடைக்குமான்னு தெரியலை..!!” என தன்னை மறந்து மனம் திறந்தவனை மதுவும் கவினும் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருக்க,
சட்டென சுதாரித்தவன்,
“நான் வெற்றி அடையனும்னு நினைச்சு, எனக்கு வாக்களித்த அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!!” என்றவன், தொடர்ந்து சேனல் நிர்வாகம், சிங்கிங் சேம்பியன்ஸ் குழுவினர், சக போட்டியாளர்கள், நடுவர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து முடித்து, இறுதியாக,
“ஃபைனலி!!! நான் இன்னைக்கு இங்க வந்து நிக்க காரணமான ஒருத்தங்க இருக்காங்க!!! ஐ டோண்ட் வாண்ட் டு மென்ஷன் தி நேம்!!! பட் அவங்க இல்லைன்னா இன்னைக்கு நீங்க பார்த்திட்டு இருக்க பிரபஞ்சன் இல்லை.. நான் இந்த பீல்டுல நல்லா வரணும்னு என்னை விட ரொம்ப ஆசைப்பட்டவங்க..” என உதட்டைக் கடித்து உணர்ச்சிகளை அடக்கியவன்,
“தேங்க் யூ!!! தேங்க் யூ ஃபார் எவிரிதிங்!!!!” என மனமார்ந்த நன்றிகளையும், அவனின் வெற்றியையும் அவனின் கவியின் பாதத்தில் மானசீகமாக சமர்ப்பித்தான் அந்த காதல் கிறுக்கன்!!!
“கை கோர்த்து காலங்களைக் கடப்பது மட்டுமல்ல காதல்!!!
சில சமயம், பிரிதலில் கூட பெருங்காதல் ஒளிந்திருக்கும்!!!!”
error: Content is protected !!