Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

விழாக் காணுமே வானம்

விழாக் காணுமே வானம் 06

விழாக் காணுமே வானம் 06

அலைபாய்ந்த  மனதிற்கு ஆறுதலான அலைகள்.

அகேடமியில் இருந்து வீட்டிற்கு வந்த ஸ்வாதியின் முகம் மலர்ந்திருந்தது.

“பாட்டி நைட் என்ன சாப்பாடு” என்றபடியே டைனிங் டேபிளில் இருந்த ஹாட்பாக்ஸை திறந்து பார்த்தாள்.



Advertisement

“உன் பேரனுக்குப் பிடிச்சதா செய்து வச்சிருக்க ம்ம்ம்” என கண்சிமிட்டியவள் “சரி குளிச்சிட்டு வந்திடறேன்” என்றவாறே துள்ளிக் கொண்டு சென்றாள்.

மகனைப் பார்த்து புருவம் உயர்த்தி என்னவாக இருக்கும் என்று சைகையிலேயே பாட்டி கேட்க ரங்கநாதனுக்கு என்ன நடந்திருக்கும் என்று ஓரளவு புரிந்தே இருந்தது.

அரவிந்த் ஸ்வாதியை விட இரண்டு வயது மூத்தவன். அவனது பத்து வயது வரை யுஎஸ்ஸில் வளர்ந்தவன். அவன் தந்தை பெங்களூரில் சுயமாக தொழில் தொடங்கவும் அங்கேயே செட்டில் ஆகிவிட்டிருந்தனர்.

Advertisement

யூஎஸ்ஸில் இருக்கும் போது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை என்று இந்தியாவிற்கு வருவான். அப்போது மாமா வீட்டில் தாங்கும் நாட்கள் மிகக் குறைவே.

Advertisement

அப்போதெல்லாம் அவன் அம்மாவை ஒட்டிக் கொண்டே இருப்பான். ரங்கநாதன் டென்னிஸ் கற்றுக் கொடுக்க அழைத்தும் அவனுக்கு அதில் ஆர்வம் இல்லாமல் இருந்தது.

பெங்களூர் வந்த பின்பு பள்ளி விடுமுறைகளுக்கு அன்னையுடன் சென்னை வந்து விடுவான்.

“இவன் அரவிந்த் என் கசின் ப்ரதர்” என்று அர்ஜூனுக்கு அறிமுகம் செய்து வைத்தவள் “அரவிந்த் இவன் என் ப்ரண்ட்” என்று அர்ஜூனை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

Advertisement

அந்த ப்ரண்ட்டை அவ்வளவு உற்சாகத்தோடும் குதூகலத்தோடும் சொன்னவள் அர்ஜூனின்  பெயரைச் சொல்லாமல் விட்டுவிட்டாள்.

“ஐ ஆம் அர்ஜூன்” என்றவன் புன்னகையோடு அரவிந்த் பக்கம் தன் கையை நீட்டினான்.

அரவிந்த் அவன் கரங்களை பற்றிக் கொண்டு “ப்ரண்ட்ஸ்” என்று சொல்ல ஸ்வாதி கோபமாக இருவரின் கரங்களையும் தட்டி விட்டாள். அர்ஜூன் அரவிந்த் இருவருக்கும் அவள் திடீரென ஏன் கோபம் கொண்டாள் என்று புரியவில்லை.

“அரவிந்த்! அர்ஜூன் என்னோட ப்ரண்ட்” ‘என்னோட’ என்பதை அழுத்திக் கூறினாள்.

.ஸ்வாதியை விட இரண்டு வயது மூத்தவன் என்ற போதும் அவளின் கோபத்திற்கும் அதிகாரத்திற்கும் சற்றே பணிந்து போன அரவிந்த் அர்ஜூனின் அமைதியான மென்மையான சுபாவத்தால் ஈர்க்கப்பட்டான் தான், ஆனாலும் ஸ்வாதி எப்போதும் அர்ஜூன் கூடவே ஒட்டிக் கொண்டு இருந்ததால் அதில் கடுப்பாகி அவன் அர்ஜூனோடு உரசிக் கொண்டே இருந்தான்.

டென்னிஸ் மீது ஆர்வம் இல்லாத போதும் ஆடக் கற்றுக் கொண்டான். ஓரளவு நன்றாகவே ஆடவும் செய்தான். ஆனால் அர்ஜூனையோ ஸ்வாதியையோ அவனால் வெற்றிக் கொள்ள முடியவேயில்லை.

அவர்கள் டபிள்ஸ் ஆடும் போது ரங்கநாதனும் அவனும் ஒரு பக்கமும் ஸ்வாதியும் அர்ஜூனும் மற்றொரு பக்கமுமாக ஆடுவார்கள். அப்போதும் ஸ்வாதியும் அர்ஜூனும் தான் வெற்றிப் பெறுவார்கள். இன்று தான் முதல் முறையாக அவன் ஸ்வாதியோடு சேர்ந்து விளையாடினான். வெற்றியும் பெற்றான்.

டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டு பாட்டியிடமும் மாமாவிடமும் ஆட்டத்தை விவரித்துக் கொண்டிருந்தான். குளித்து முடித்து டைனிங் ஹாலுக்கு வந்த ஸ்வாதி தந்தையின் அருகே அமர்ந்து கொண்டாள்.

தட்டை எடுத்து வைத்து தனக்குத் தானே பரிமாறிக் கொண்டவள் எதையோ நினைத்து நினைத்து மகிழ்ந்து போகிறவளாக புன்னகைத்த வண்ணம் இருந்ததை பாட்டி ஆச்சரியமாகப் பார்த்தார்.

“அப்புறம் பாட்டி எங்கே விட்டேன். பர்ஸ்ட் கேம் அவன் வின் பண்ணான். அப்புறம் நாங்க செகண்ட்…இப்படியே போயிட்டு இருந்துதா. மேட்ச் பாயிண்ட்ல நெட்டிலே அடிச்சு வச்சுட்டான். நான் வின் பண்ணிட்டேன்” ஸ்வாதியை பார்த்துக் கொண்டே பாட்டியிடம் உற்சாகமாகக் கூறினான்.

‘நான் வின் பண்ணிட்டேன்’ என்ற அவன் வார்த்தையில் விலுக் என நிமிர்ந்து அரவிந்தை முறைத்தாள்.

“இப்போ எதுக்கு அவனைப் பார்த்து முறைச்சிட்டு இருக்க. அவன் என்ன பொய்யா சொல்றான். உண்மையைத் தானே சொல்றான்” பாட்டி அரவிந்த்திற்கு சப்போர்ட் செய்தார்.

“எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு. உண்மையை முழுசா தெரிஞ்சுட்டு அப்புறம் பேசு” ஸ்வாதி பாட்டியிடம் சொல்லவும் அரவிந்த்துக்குப் புரியவில்லை.

அவன் யூஎஸ்ஸிலும் பெங்களூரிலும் வளர்ந்தவன். தாய்மொழியான தமிழ் பேச மட்டுமே தெரியும். அதனால் ஸ்வாதி கூறிய திருக்குறளின் அர்த்தம் அவனுக்குத் தெரியவில்லை.

ஆனால் ஸ்வாதிக்கும் அர்ஜூனுக்கும் திருக்குறள் அனைத்தும் அத்துப்படி. காலையில் ஜாகிங் செல்லும் போது தினம் ஒரு அதிகாரம் என்று சொல்லிக்கொண்டே செல்வார்கள்.

‘செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு’ 1330 குறள்களில் ஸ்வாதிக்குப் பிடித்த குறள் அது. நட்பதிகாரத்தின் முதல் குறள்.

வெவ்வேறு இடத்தில் இருந்தாலும் இருவரும் ஒன்று போல ஒரே குறளை சொல்லிக் கொண்டிருந்தனர்.

“அப்போ அர்ஜூன் தான் ஜெயித்தானா” பாட்டி அரவிந்த்தைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தபடியே ஸ்வாதியிடம் கேட்டார்.

“இல்ல” ஸ்வாதியின் கோபம் சற்று இளகியிருந்தது.

“அரவிந்த்! நீயும் ஸ்வாதியும் தானே ஜோடி சேர்ந்து ஆடுனீங்க. அப்புறம் நீங்க ரெண்டு பேரும் ஜெயிக்கலைன்னா எப்படி” பாட்டி கேட்கவும் ஸ்வாதி கோபத்தின் உச்சிக்கே சென்றாள்.

பாட்டி அவளையும் அரவிந்த்தையும் ஜோடி என்று சொன்னது அவளுக்குப் பொறுக்கவில்லை.

“வின் பண்ணது அரவிந்த் இல்லையாம். அர்ஜுன் சொல்லிட்டுதான் போனான்” முகம் இறுக சொன்னாள் ஸ்வாதி.

“அது மட்டுமா சொன்னான். எல்லா உண்மையும் சொல்லு ஆங்க்ரி பர்ட். அர்ஜூன் சொல்றான் பாட்டி, வின் பண்ணது….. ”

“அரவிந்த்! ஸ்டாப் இட்! குஷ்பூன்னு உன் வாயில இருந்து வந்துச்சுன்னு வை உன்னைக் கொன்னுடுவேன்” கோபத்தில் முகம் சிவக்க எழுந்தாள்.

பாதி சாப்பாட்டில் எழுந்து கொள்ளப் போனவளை ரங்கநாதன் தடுத்தார்.

“கண்ணா, பாதி சாப்பிட்டில் இப்படியா எழுவது. அம்மா சத்தம் போடுவா” எப்போதும் போல அவர் இயல்பாய் சொல்லிவிட்டார். சொன்னவுடன் தான் என்ன சொன்னோம் என்று உணர்ந்தார்.

‘அம்மா’. அந்த வார்த்தையைக் கேட்டவுடன் அமைதியாக அமர்ந்தவள் தலையை குனிந்து கொண்டு சாப்பிடுவது போல பாவனை செய்தாள்.

‘என்னவோ நினைச்சு விளையாட போனா என்னவோ நடக்குது’ அரவிந்த் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

.எப்போதும் அர்ஜூனோடு மட்டுமே டபிள்ஸ் ஆடுபவள் இவனோடு ஆடுகிறாள். அதை அவன் புன்னகையோடு ரசிக்கிறான். மேட்ச் பாயிண்டில் அவன் நெட்டில் பந்தை அடித்து தோற்றுப் போனதும் இவள் துள்ளி குதிக்காமல் முகத்தை தொங்க வைத்துக் கொண்டு போகிறாள்.

“அட் லாஸ்ட் நான் உன்னை வின் செய்துட்டேன்” என்று அரவிந்த் சொல்ல அர்ஜூன் இல்லை என்று தலையாட்டி

“வின் பண்ணது நீயில்லை அரவிந்த். வின் பண்ணது என் குஷ்பூ” என்ற வார்த்தையில் ஸ்விச் போட்டது போல அவள் கண்களில் பிரகாசம் வருகிறது.

“கோவக்கார குஷ்பூ” என்றபடியே அவன் செல்ல இவளுக்கு கோபத்திற்கு பதில் சந்தோஷம் வருகிறது.

நொடிக்கொரு முறை மாறும் உணர்வுகள் கொண்டவளாக எதிரில் அமர்ந்திருந்தவளையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் கோபமாக இருந்தால் கூட பரவாயில்லை. இப்படி சோகமாக இருப்பது அரவிந்திற்குப் பொறுக்கவில்லை.

“என்ன பாட்டி, ஆங்க்ரி பர்ட் எல்லாத்தையும் அவ தட்டிலே கொட்டிகிட்டா. பாருங்க நான் ஹங்கிரி பர்ட் ஆகிட்டேன்” அவன் சிரிக்காமல் சொல்லி வைத்ததில் பாட்டி சிரித்துவிட ரங்கநாதனும் முறுவல் செய்தார்.

ஆனால் அவளிடம் எவ்வித அசைவும் இல்லை.

சுற்றும் முற்றும் பார்த்தவனின் கவனம் காலியாக இருந்த ஷோ கேஸ் மீதும் சுவர்கள் மீதும் படிந்தது.

“என்ன பாட்டி என் மாமா பொண்ணோட வீர தீர சாகசங்கள் எதையும் காணோம்” மாமா பொண்ணை நிதானமாக அழுத்திச் சொன்னான் அவன்.

அப்போதாவது அவள் சிலுப்பிக் கொண்டு ஏதேனும் பதில் சொல்வாள் என்று எதிர்பார்த்தான்.

ஒரு முறை அரவிந்த்தின் அப்பா வகை சொந்தத்தின் விசேஷத்தில் “இவ அரவிந்த்தோட மாமா பொண்ணு” என்று அவனின் அப்பாவின் தங்கையான அத்தை சொல்லி வைக்க “அரவிந்தோட கசின் சிஸ்டர்ன்னு சொல்லுங்க சித்தி” என்று அவரைத் திருத்தினாள் ஸ்வாதி.

“அவ என்ன இப்போ தப்பா சொல்லிட்டா. நீ அவனுக்கு மாமா பொண்ணு இல்லையா” அவர்கள் பக்கமும் இவள் பாட்டியைப் போலே ஒரு பாட்டி ஸ்வாதியை வம்பிழுக்க ஸ்வாதியா அசந்து போவாள்!

அரவிந்தை தேடிப் பிடித்து அவர்கள் முன் நிறுத்தி அவன் வாயாலேயே “இவள் என் கசின் சிஸ்டர்” என்று சொல்ல வைத்து  விட்டாள்.

சிறு வயதில் கசின் சிஸ்டர் என்று கற்றுக் கொடுத்தவனே அரவிந்த் தான். யூஎஸ்ஸில் மாமா அத்தை பிள்ளைகளை அப்படித் தான் சொல்வது வழக்கம் என்பதால் அவனுக்கு அப்பழக்கம் ஒட்டிக் கொண்டது. ஆனால் ஸ்வாதி கடைசி வரை அதையே பிடித்துக் கொண்டாள்.

அரவிந்த் அவளை மாமா பொண்ணு என்று சொல்லி சீண்டிக் கொண்டிருப்பதைக் கூட கவனிக்காமல் அவள் தந்தையின் தோளில் சாய்ந்த வண்ணம் சோபாவில் அமர்ந்திருந்தாள்.

“போட்டோ, ஷீல்ட், கப் எல்லாவற்றையும் அர்ஜூன் எடுத்துட்டுப் போயிட்டானோ. ரெண்டு பேரும் சேர்ந்து தானே எல்லா ப்ரைஸூம் வின் செய்தாங்க. ஆனா உன் சிங்கிள்ஸ் சாம்பியன்ஷிப் ஷீல்ட்ஸ் இருக்கணுமே” யோசிப்பவன் போல பாவனை செய்தவனை இப்போது நிமிர்ந்து பார்த்தாள்.

“அதையும் அவனோடது என்று நினைத்து எடுத்துக் கொண்டு போய்விட்டானா. அதனாலே என்ன. வரும் விம்பிள்டன்ல ஸ்வாதி மூணு சாம்பியன்ஷிப் கப் வின் செய்து கொண்டு வந்ததும் ஷோ கேசில் வைத்துவிடு பாட்டி” அரவிந்த்தின் யுக்தி வேலை செய்தது.

“நான் ஒன்னும் விம்பிள்டன் விளையாட போறதில்லை” அரவிந்த்தைப் பார்த்து சொன்னாலும் அவள் சொல்வதை அவளே விரும்பவில்லை என்பதாக அவள் குரல்.

விம்பிள்டன். டென்னிஸ் வீரர்களின் கனவு. மற்ற கிரான்ட் ஸ்லாம் போட்டிகளில் வெற்றி பெற்றாலும் விம்பிள்டன் என்பது ஒரு பெருமிதம். ஸ்வாதி அர்ஜூன் இருவரது முதல் கிரான்ட் ஸ்லாம் வெற்றி விம்பிள்டன் கலப்பு இரட்டையர் சாம்பியன்ஷிப் தான்.

இது வரை நிறைய போட்டிகளில் வெற்றி பெற்றிருகிறார்கள். சிலவற்றை தவற விட்டிருக்கிறார்கள்  ஆனால் விம்பிள்டன் மிக்ஸட் டபிள்ஸ் சாம்பியன்ஷிப் அவர்களுக்குத் தான்.

டென்னிஸ் உலகில் இவர்களது ரெக்கார்ட்டை இனி யாரேனும் உடைக்க முடியுமா என்பதும் சந்தேகம் தான்.

“இந்த வார ஸ்போர்ட்ஸ் வீக்லீயில் அட்டைப்பட நியூஸ் போட்டிருக்கான். நீ இல்லைன்னு சொல்லிட்டு இருக்க. மாமா நீங்களா நியூஸ் கொடுத்தீங்க” அரவிந்த் சொல்ல ஸ்வாதி தந்தையைப் பார்த்து முறைத்தாள்.

வீடு, அகடமியைத் தாண்டி ஸ்வாதி அர்ஜூன் இருவரும் பெரிய ஸ்டார்ஸ். உலகம் கொண்டாடும் செலிப்ரிடீஸ்.. சென்ற ஆண்டு வரை ரங்கநாதன் தான் அனைத்தையும் பொறுப்பேற்றுக் கொண்டிருந்தார்.

அவர்களின் கோச் மட்டுமல்லாமல் அவர்களின் மேனேஜர் ,பிஆர்ஓ எல்லாம் அவர் தான். டென்னிஸ் கோர்ட்டில் கோப்பையை வென்ற பின் கொடுக்கும் சிறு நன்றி நவிலல் தவிர இருவர் சார்பாகவும் ரங்கநாதன் தான் பேட்டிகளை கையாண்டார்.

ஒரு வருடமாய் தனித்தனியே ஆடிய பிரண்ட்ஷிப் மேட்ச்கள் தவிர இருவரும் எந்த கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.

“நான் எதுவும் நியூஸ் கொடுக்கவில்லை கண்ணா” ரங்கநாதனுக்கும் தெரிந்திருக்கவில்லை.

“ஒரு வேளை அர்ஜூன் கொடுத்திருப்பானோ” அவரே சந்தேகமாய் சொன்னார்.

“இல்லப்பா அவன் கொடுத்திருக்க மாட்டான்” உறுதியாக சொன்னாள் பெண்.

“மெய்ப்பொருள் காண்பதறிவு. யாரோ கொஞ்ச நேரத்துக்கு முன் தான் டியூஷன் எடுத்தாங்க. யாரு பாட்டி” அரவிந்த் கேலியாக கூறினான்.

“எதுக்குடா இப்போ என்னை வம்பிழுத்துட்டே இருக்க” பாட்டி பேரனை கோபாமாக கொஞ்சினார்.

“கோவக்காரப் பாட்டி” வேண்டுமென்றே அவன் சொல்லி வைக்க அவனை கோபமாக முறைத்த ஸ்வாதி சோகத்திரையை தூக்கி எறிந்திருந்தாள்.

அதற்குள் ரங்கநாதன் அந்தப் பத்திரிக்கையின் ஆன்லைன் எடிஷனை தேடிப்பிடித்து விட்டார்.

“என்ன போட்டிருக்காங்க அரவிந்த்” என்று கேட்டுக் கொண்டே தனது மொபைலில் டவுன்லோட் செய்து கொண்டிருந்தார்.

“அதெல்லாம் நான் என்னிக்கு படிச்சேன் மாமா. ஏர்போர்ட்ல மேகசின் ஸ்டாண்ட்ல அர்ஜூன் ஸ்வாதி விம்பிள்டன் கப்போட இருக்கும் போட்டோ போட்டிருந்தது. கீழே ‘இஸ் தி சாம்பியன்ஷிப் கப் வெயிண்டிங் பார் தி விக்டோரியஸ் பேர்’ன்னு கேப்ஷன் இருந்தது” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ரங்கநாதன் கவர் பேஜ் கட்டுரையை ஓபன் செய்தார்.

அக்கட்டுரையில் இடம் பெற்றிருந்த போட்டோவைப்  பார்த்த ஸ்வாதி ஒரு முறை கண் மூடித் திறந்தாள். அவளது அலைபாயும் மனது கரையை தேடிப் போகச் சொன்னது.

அப்படி போவதால் அவளின் கோபமும், வருத்தமும், ஆதங்கமும் நீங்கிவிடப்போவதில்லை. எதுவும் மாறிவிடப் போவதில்லை. இருப்பினும் அவள் போக முடிவு செய்துவிட்டாள்.

“அப்பா கிளம்புங்க  பா” பதிலைக் கூட எதிர்ப்பார்க்காமல் ஹோல்டரில் மாட்டியிருந்த காரின் சாவியை எடுத்துக் கொண்டு வாசலை நோக்கி சென்று விட்டிருந்தாள்.

அவள் போர்டிகோவிற்கு சென்று காரை ஸ்டார்ட் செய்தே விட ரங்கநாதனுக்கு அவள் பின்னே போவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

என்ன என்று புரியாமல் நின்று கொண்டிருந்த அன்னையிடம் “அம்மா போன் செய்கிறேன்” என்றவர் காரை நோக்கி விரைந்தார்.

ஸ்வாதியும் ரங்கநாதனும் கிளம்பிச் சென்றது கூட தெரியாமல் அரவிந்த் உறைந்து போய் அமர்ந்திருந்தான்.

‘ஸ்டோரி அண்ட் போட்டோகிரபி பை வைஷாலி’ அதில் அவன் பார்வை பதிய அவனுக்குள் வெறுமை கலந்த ஓர் ஏக்கம் எழுந்ததை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை.

அறைக்குள் சென்று புகுந்து கொண்ட பேரனை வியப்பாக பார்த்தபடியே ‘என்ன நடக்கிறது’ என்று புரியாமல் அமர்ந்திருந்தார் பாட்டி.

ஈசிஆர் ரோட்டில் சற்று வேகமாகவே காரை செலுத்தினாள் ஸ்வாதி.

“கண்ணா மெதுவா ஓட்டு” கார் சென்ற திசை வைத்தே எங்கே செல்கிறாள் என்று புரிந்து கொண்டார் தந்தை.

கடற்கரையை ஒட்டிய பார்ம் ஹவுசின் முன் காரை நிறுத்திய ஸ்வாதி இறங்கிச் சென்று கேட்டின் பக்கச்சுவரில் இருந்த சென்சாரில் தனது கட்டை விரலைப் பதித்தாள். கதவு திறந்து கொண்டதும் தந்தையிடம் காரை உள்ளே செலுத்தச் சொல்லிவிட்டு அவள் கடலை நோக்கி ஓடினாள்.

பழத் தோட்டங்களும், தென்னை மரங்களுமாய் பாரதியின் காணி நிலம் வேண்டும் பாடலை நினைவு படுத்தும் அழகிய பண்ணை வீடு. அலைகடல் கரையைத் தழுவிட, ஏகாந்த நிலவொளியில் ரம்மியமாக இருந்தது இரவு.

அர்ஜூன் ஸ்வாதியின் முதல் விம்பிள்டன் வெற்றியின் நினைவாக வாங்கிய பண்ணை வீடு. அவர்கள் இருவரின் முதல் சொத்து. இருவருக்கும் பொதுவான ஜாயின்ட் ப்ராபர்டியாக இருந்தது.

அது ப்ரைவேட் பீச். வீட்டையும் தோட்டங்களையும் கவனித்துக் கொள்ளும் தம்பதி அவுட்ஹவுஸில் குடியிருந்தனர். அதனால் பாதுகாப்பு தான்.

இருப்பினும் காரை நிறுத்திவிட்டு கடலை நோக்கி நடந்த ரங்கநாதன், மகள் கண்பார்வையில் படும் தூரத்தில் நின்றிருந்தார்.

மார்கழி மாதக் குளிரில் கடல் நீரும் குளிர்ந்திருக்க தன் பங்காக நிலவும் குளுமையை அள்ளி வீசிக் கொண்டிருந்தது.

கரையினில் கூரை வேய்ந்த பெரிய குடையை நோக்கி ஓடி வந்தவள் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து மூச்சு வாங்கினாள். ஓர் உந்துதலில் இவ்வளவு தூரம் வந்துவிட்டாள். ஆனால் இப்போது அவள் மனம் படபடவென அடித்துக் கொண்டது.

ஒரு வருடம் முன் இதே நாளில் இதே இடத்தில் நடந்த நிகழ்வுகள், அதன் பின் ஏற்பட்ட வேதனைகள் எல்லாம் அவள் மனக்கண்ணில் விரிந்தன. அவள் எழுந்து அலைகளை நோக்கிச் சென்றாள்.

‘எங்கள் மீது என்ன கோபம் உனக்கு. ஒரு வருடமாக பாராமுகம் காட்டினாயே’ என்று அலைகள் ஓடி வந்து அவள் பாதங்களை வருடிக் கொடுத்தன.

கரை மணலில் சுட்டு விரல் கொண்டு கே.வி என பெரிதாக ஆங்கிலத்தில் எழுதியவள் தள்ளி நின்று கொண்டாள்

கண் மூடி நின்றவளின் மனம் என்ன வேண்டுகிறது என அலைகளும் அறியும். தொலைவிலிருந்து அவளையே கூர்ந்து நோக்கும் இரு விழிகளும் அறியும். மெல்லக் கண் திறந்தவளின் வதனம் நிலவொளியை தோற்கடிக்கும் மலரொளியாய் பிரகாசிக்க அவ்வொளி குறையாமல் காரை நோக்கி நடந்தாள்.

தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!