Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நாம் கேட்ட காலங்கள்

நாம் கேட்ட காலங்கள் – 11

அத்தியாயம் 11

பிரபஞ்சனுக்கு அரசியலில் துளியும் ஆர்வமில்லை. அவன் பெரியப்பாவின் மரணம் அந்த குடும்பத்தை மிகவும் பாதித்திருக்க, ரஞ்சனின் அப்பா கவியரசன் தன் மகன் அரசியலில் நுழைவதை விரும்பவில்லை. 



Advertisement

சிறுவயதில் அவனும் திலக்கைப் போல முதலமைச்சர் ஆவேன் என்று சொல்லியதுண்டு. அதெல்லாம் தன் பெரியண்ணாவோடு இருக்க வேண்டும் என்ற சிறுபிள்ளை ஆவல்.

ஆனால் பத்தாம் வகுப்பிற்கு மேல் அவனுக்கு அப்படியெல்லாம் தோன்றவில்லை. கணினி அவனை ஈர்த்தது. அதைவிட மிகுந்த கோபக்காரனான அவனுக்கு அரசியல் எல்லாம் வராது என்று அவனே முடிவு செய்துகொண்டான். 

Advertisement

Advertisement

அவன் அப்பா, அம்மாவும் அதற்கோர் காரணம். கூடவே தாத்தாவிற்குத் தன் பெரியண்ணாவை அரசியல் வாரிசாக்க வேண்டும் என்ற எண்ணமிருப்பது தெரிந்து அண்ணாவிற்குப் போட்டியாக என்றும் தான் இருக்கக் கூடாது, அப்படியொரு நினைப்பே வரக்கூடாது என்று நினைத்து கல்லூரி படிப்பும் கூட கணினிப்பொறியியலே படித்தான். மேற்படிப்புக்காக பெங்களூர் சென்றவன் அங்கேயே பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கும் சேர்ந்துவிட்டான். இரண்டு ஆண்டுகள் வரை அங்குதான் பணியில் இருந்தான். 

கோவிட் காலத்தில் வீட்டிலிருந்தே பணி செய்யும் வாய்ப்பு வர, அதிலிருந்து மாதத்தில் ஒருவாரம் மட்டும் அங்கு சென்று வருவான். 

Advertisement

தேர்தல் காரணமாக அண்ணனுக்கு உதவியாக இருக்க வேண்டி ஊருக்கு வந்தவனை, திலக்கின் விபத்து அப்படியே முடக்கிவிட்டது. 

அர்த்தனா, அவன் பெங்களூர் நாட்களின் குளுமை அவள்! இப்போதோ மெட்ராஸின் வெயிலாக மாறியிருக்கிறாள். 

பெங்களூரில் அவன் தங்கியிருந்த விடுதி பக்கமிருக்கும் விளையாட்டுக்கூடம் செல்வது அவனது வாடிக்கை. 

அவன் இருந்த பகுதியில் பெரும்பாலும் ஹிந்திவாசமே. கன்னடம் காதில் விழுவது கூட அரிதே. அப்படியிருக்க செந்தமிழ் வந்து அவன் செவி மோதியது. 

அதுவும் அவனை புகழ்ந்து. 

“இந்த ஊர்ல கூட ஒருத்தன் பார்க்கிற மாதிரி இருக்கான் டி. ஆனா இந்த ஊர்க்காரனா இருப்பானான்னு டவுட்தான்” என்று அர்த்தனா அவனை பற்றி தோழியிடம் அலைப்பேசியில் சொல்ல, விளையாடி முடித்து வியர்வை சொட்ட இளைப்பாற வேண்டி உட்காருமிடம் நோக்கி நடந்தவன் காதில் இவ்வார்த்தைகள் விழுந்தன.

  

நடந்தவன் நடை அரைநொடி நிற்க, புன்னகையோடு அர்த்தனாவை கடந்து சென்றான். 

அவனின் நடை நின்றதை கவனித்த அர்த்தனா பெரிதாக நினைக்கவில்லை. அதுவரை அவனோடு விளையாடியவனுடன் சரளமான ஹிந்தியில் பேசியவனை தமிழன் என நினைக்கவே தோன்றவில்லை. 

அவன் சிறுவயது முதல் ஹிந்தி கற்றவன். அது அறியாமல் அர்த்தனா அவனைப் பற்றி பேசிவைத்தாள். பிரபஞ்சன் அந்த விளையாட்டுக் கூடத்தை ஒட்டியிருந்த தேநீர் கடையில் நின்றான். அவனோடு நின்ற நண்பனோடு தமிழில் அவன் பேச, டீ குடிக்க சென்ற அர்த்தனா அப்படியே நின்றாள். 

“ச்ச, கேடி கேட்டிருப்பானோ” என்று தனக்குள் புலம்பியபடி அவனைப் பார்க்க, அவன் பார்வை கிண்டலாக அவளைப் பார்க்க, அர்த்தனாவிற்குக் கோபம் வந்துவிட்டது. ரஞ்சனோடு நின்றவன் விளையாட்டுக்கூடம் உள்ளே சென்றுவிட்டான்.

வேக நடையோடு அவன் பக்கம் சென்றவள், 

“ஹலோ! என்ன லுக்கு?” என்றவளின் வலக்கை கேள்வியாக அவனை நோக்கியது. பேசும்போது அவள் பாவனை முகமெல்லாம் நிறைந்திருந்தது. 

பிரபஞ்சன் ஒரு நொடி அதிர்ந்துவிட்டான். அவன் யாரிடமும் அனாவசியமாக பேச்சு வைத்துக் கொள்ளாதவன். ஏதோ அவள் பேசியதில் புன்னகைத்தால் என்ன இது என்று அவளைப் பார்க்க, 

“உங்களுக்கு நல்லா தமிழ் தெரியும்னு எனக்குத் தெரியும். அப்புறம் என்ன ஒன்னும் தெரியாத மாதிரி லுக்கு? பார்க்கிற மாதிரி இருந்தீங்க கமெண்ட் பண்ணினேன். அவ்வளவுதான்! அதுக்குனு சும்மா குறுகுறுனு பார்க்கிற வேலையெல்லாம் வேண்டாம்” என்றாள் படபடவென. 

“ஏங்க? நான் ஒன்னுமே சொல்லலயே. உங்க காம்ப்ளிமென்ட்டை எஞ்சாய் பண்ணினது ஒரு குத்தமா?” என்றான் ரஞ்சன். 

அர்த்தனா அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாகிவிட, 

“ஃப்ரீயா விடுங்க. இங்க கன்னட ஆளுங்க கூட ஹிந்திதான் பேசுவாங்க. ரொம்ப நாள் கழிச்சு

தமிழ் காதுல கேட்கவும் கவனிச்சேன். ஆனா நீங்க என்னைப் பத்தி பேசுவீங்கனு எதிர்ப்பார்க்கல. விடுங்க ஜி” என்றான் இயல்பாக. 

அவன் இயல்பாக பேசினாலும் அர்த்தாவிற்கு அவனோடு பேச விருப்பமில்லை. ஆகையால், “ஓகே” என்றதோடு அவள் பாட்டிற்கு இஞ்சி டீ வாங்கி குடித்து சென்றுவிட்டாள். 

‘இஞ்சி டீ குடிக்கிறதால இப்படி கோவம் வருதோ?’ என்று சில நொடி அவள் குறித்த சிந்தனை வந்தாலும், இஞ்சி வாசமே பிடிக்காத அவன் அந்த யோசனையையும் அப்படியே விட்டான். 

ஒரு மாதத்திற்குப் பின் அந்த பகுதி பூங்காவில் நடைப்பயிற்சியில் இருந்தபோது அர்த்தனா கண்ணில் பட்டாள். 

ரஞ்சன் அவளை கண்டதும் பழகிய பார்வையோடு புன்னகைத்தான். ஆனால் சட்டென்று அவளின் பேச்சு நினைவில் வர, வேகமாக முகம் திருப்பி அவள் வந்த வழிக்கு எதிர்வழியில் நடந்தான். அர்த்தனாவும் அதனைப் பார்த்துவிட, அவளுக்கே அன்றைய செயல் அதிகப்படியாக தோன்றியது. 

“ஹலோ ஜி” என்று அழைத்து அவன் முன் நின்றாள். 

“சாரிங்க, டக்குனு பார்க்கவும் தெரிஞ்சவங்கனு சிரிச்சிட்டேன்” என்று ரஞ்சன் உடனே சரணடைய, 

“அய்யோ, நீங்க சாரி சொல்ல வேண்டாம். நான் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன். எங்க நீங்க என்னை ஜட்ஜ் பண்ணிடுவீங்களோனு. அதான் அன்னிக்கு அப்படி பேசிட்டேன்” என்று இயல்பாக பேசியவள், 

“என்ன பண்றீங்க?” என்று விசாரித்தாள். 

அவன் வேலைப்பார்க்கும் நிறுவனத்தின் பெயரை சொல்ல, அவள் கண்களில் ஆச்சரியப்பாவனை. 

“அடங்கேப்பா! சமூகம் பெரிய இடம் போல” என்று அர்த்தனா கிண்டல் செய்ய, 

“ஏங்க நான் படிச்சேன், இண்டர்வியுல செலெக்ட் ஆனேன். வேலை கிடைச்சது. இதெல்லன்ன இருக்கு?” என்று ரஞ்சன் அலட்டிக்கொள்ளாமல் பேசினான்.

“அது சரி, நான் ஏங்க இல்லை. அர்த்தனா” என்றாள் பளிச்சென்ற புன்னகையோடு. 

“பிரபஞ்சன்” என்று ரஞ்சன் தன்னை அறிமுகம் செய்துகொள்ள, 

“நான் இங்க  டெவெலெப்பரா வர்க் பண்றேன்” என்று அர்த்தனாவும் தன் வேலைப் பற்றி பகிர்ந்தாள். 

அப்பா தொழில் செய்கிறார், அண்ணா போலிஸ் என்று மட்டும் சொன்னாள். பிரபஞ்சன் தன் பின்புலத்தை என்றுமே பகிர விரும்பாதவன், ஆகையால் அவனும் அப்பா சொந்தமாக தொழில் வைத்திருக்கிறார், தங்கை இருக்கிறாள் என்றதோடு அறிமுகத்தை நிறுத்தினான். 

அதன்பின் விளையாட்டுக் கூடத்திலும், பூங்காவிலும் சில நேரம் இருவரும் பார்ப்பதுண்டு. அவனோடு கூட சேர்ந்து வாயடித்தபடி நடப்பது அர்த்தனாவின் பிடித்தமான வாடிக்கையானது. 

ஆனால் அவர்களுக்குள் பிடித்தமிருந்தாலும், அதனை காதல் என்று பகிரவில்லை. காரணம் அர்த்தனா. 

“இங்க பாருங்க ஜி, நான் நல்லா பேசுறேன். ஏதோ பார்க்க நீங்க நல்லாயிருக்கீங்கனு ஒரு நாள் சொல்லிட்டேன் என் பின்னாடி சுத்துறது எல்லாம் கூடாது. அப்படி ரெண்டு பேர் செஞ்சு என்னை வெறுக்க வச்சுட்டானுங்க, ஓகேவா? ஒரே ஊர்க்காரங்க பேச்சுத்துணையா, ப்ரண்ட்ஸா இருக்கணும். ஓகே?” என்று அவனோடு நன்றாக பேச ஆரம்பித்த போதே கேட்டிருந்தாள். 

முதல்பார்வையிலிருந்தே ரஞ்சனுக்கு அவள் மீது ஈர்ப்புண்டு. அர்த்தனாவோடு பேச, பழக இன்னும் இன்னும் ஈர்க்கும் விசையானாள் பெண். கோவிட் வந்தபின் ரஞ்சனின் வருகை குறைந்து போயிருக்க, பெங்களூர் வருகின்ற ஒரு வாரம் நிச்சயம் அர்த்தனாவை சந்திந்து விடுவான். 

இருவரும் சந்தித்த வேளைகள் எல்லாம் சினேகத்தின் ரகசியமாகின. அண்ணனுக்குத் திருமணமாகட்டும் சொல்வோம் என்று ரஞ்சன் தன் பிரியத்தைப் பகிராது இருந்தான். அதைவிட அப்படி சொல்லி அர்த்தனா நட்பைத் துண்டித்தால் என்ற அச்சமும் காரணம். 

இதோ சொல்லாமல் இருந்த காதல் இனி சொல்லப்படாமலே இருக்கப்போகிறது என்ற உண்மை பிரபஞ்சனை அழுத்தியது. 

**************

காலை எழுந்தபோதே ராஜமகேந்திரன் உற்சாகமாக இருந்தான். அருகில் அவன் மனைவி இருக்க அது கொடுத்த உவகை அலாதியானது. 

வெறுமையை வெறுப்பவன் அவன். அப்படியானவனை திருமணமான ஐந்து மாதங்களில் மனைவி விட்டுச் சென்ற வருத்தம், கோபம் எல்லாம் அவனிடம் உண்டு. 

அவள் சொல்கின்ற அத்தனையும் அவன் அறிவுக்குப் புரிந்தது. செயல்படுத்த கடினமாக இருந்தது. 

தன் வெற்றிகளில் சந்தோஷம் கொள்ள அவள் இல்லை என்ற கோபம் அவனிடம், தன் துன்பத்தில் ஆறுதல் சொல்ல அவன் இல்லையே என்ற ஆதங்கம் அவளிடம். 

இருவரின் தேவைகளும் தேடல்களும் வேறாக இருந்தாலும், ஒருவருக்கு ஒருவர் தேவை என்பதே ஒற்றை உண்மை. 

கட்சித்தாவல் கூட சகஜமாக நடக்கின்ற நாட்டில், காதலில் விழுவதும் எழுவதும் கொஞ்சம் கடினமாக இருந்தது. 

‘எப்படித்தான் இவனுங்க மனசாட்சி இல்லாம கட்சி மாறிட்டு பேசுறானுங்க. நமக்கு இவகிட்ட பழசு மறந்து நார்மலா பேச நாக்குத் தள்ளுதே’ என்று தனக்குள் திண்டாடினான்.

‘இன்னும் ஒரு தேர்ந்த அரசியல்வாதி ஆகணும் போலயே’ என்று நினைத்தவன் உள்ளமோ காதலில் முதலில் தேறச் சொன்னது. 

காதலின் தேர்வில் காதலிப்பவர் கையில் அதன் முடிவில்லையே, காதலிக்கப்படுபவரின் கையில் அல்லவா அதன் முடிவு இருக்கிறது. 

ராஜமகேந்திரனின் காதலின் பாஷையை எப்படி அவன் பிரசன்னாவிற்குப் புரியவைக்க என்று யோசித்தபடி அவளையே பார்க்க, பிரசன்னா அதற்குள் விழித்திருந்தாள். 

வெகுநாட்கள் கழித்து கணவனின் கண்களோடு காலை நேர விழிப்பு. இரவின் உளறல்கள் எதுவும் நினைவில் இல்லை. புதிதாக ஒரு விடியல் போல உணர்ந்தவள் அவனை கண்டு புன்னகைத்தாள். 

மகேந்திரனும் மனைவியைக் கண்டு இதழ் விரிக்க, இம்சையாக ஒலித்தது அலைப்பேசி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!