Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கரை தாண்டா அலைகள்

அலை-9

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்

மு.வ உரை: மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.

அதிகாலை எப்போதும் போல் தூக்கம் கலைந்தவளுக்கு கண்களைத் திறக்கவே பதட்டமாய் இருந்தது.

கணவனை எதிர்கொள்ளும் தைரியமே இல்லை அவளிடத்தில்.
இரவு நடந்தது தற்செயலானது தான் ஆனால் அதில் அவனின் உடல் தேவை துளியும் இல்லையே.



Advertisement

அப்படி அதற்கு முன்னுரிமை கொடுப்பவனாய் இருந்திருந்தால் இத்தனை நாட்கள் அவளை விட்டு தள்ளியிருந்திருக்க மாட்டானே!

மனதார அவளுக்காக அவளை முன்னிருத்தி கொடுத்த முத்தமல்லவா அது! மொட்டை மாடியில் அவனாகவே தன்னை அவன் மீது சாய்த்துக் கொண்டதே பெரும் கனவு போல் இருந்தது.

இப்போது இந்த முத்தத்தை எப்படி ஏற்றுக் கொள்வதென்றே புரியவில்லை செங்காந்தளிற்கு.

Advertisement

அவள் நிலையை புரிந்து கொண்டானோ என்னவோ ருத்ரேஸ்வரேனே,

Advertisement

“காந்தா அவுக வர நேரமாச்சு நான் கிளம்பணும் காபி தரியா?”

“ஆங் இதோ போறேன் மாமா..”, என்றவள் தலைமுடியைத் தூக்கி கொண்டையிட்ட வண்ணம் வெளியே குளிக்கச் சென்றிருக்க ருத்ரேஸ்வரனின் விரல்கள் அவனது உதடுகளை வருடிக் கொண்டன.

நேற்று மனைவியவளின் தலை கோதல் அவனை மொத்தமாய் உள்ளுக்குள் உருக்கியிருந்தது.

Advertisement

தான் தூங்கும் நேரத்தில் எத்தனை நாட்கள் இப்படி அமர்ந்து தன்னைப் பார்த்திருக்கிறாளோ என்று எண்ணியவனுக்கு குற்றவுணர்வு இன்னுமாய் அதிகரித்தது.

காரணமேயின்றி ஒருத்தியை இத்தனை வருடங்கள் தவிக்க வைத்து விட்டோம் என்ற உண்மை அவனை வாட்டி வதைத்தது.

இப்படி கணவனும் மனைவியுமாய் கண்ணாமூச்சியிலேயே காலத்தை கழிக்க அந்த ஆட்டத்தை முடித்து வைக்கவே அவனது தோழி ரம்யா அங்கு வந்திருந்தாள்.

அவர்களின் கார் ஊர் எல்லையை அடைந்து விடுவதற்கு முன்பாகவே அங்கு சென்று காத்திருந்தான் ருத்ரேஸ்வரன்.

ஐந்து நிமிடத்தில் கார் வந்து விட அதிலிருந்து இறங்கிய ரம்யா நண்பனைப் பார்த்து ஆச்சரியமாய் பார்ப்பது போன்ற பாவனை செய்தாள்.

“ஹே படிப்ஸ்.. என்ன டா வேஷ்டி சட்டை முறுக்கு மீசைனு ஆளே மாறிட்ட?”

“வந்தவுடனே ஆரம்பிக்காத. எப்படியிருக்க நீ?”

“நல்லாயிருக்கேன். அப்பறம் இது தான் என் டீம் ஜானகி சந்தோஷ் அரவிந்த் சுரேஷ்.”

“வணக்கம் வாங்க வீட்டுக்கு போயிட்டு காபி சாப்பிட்டுட்டு நீங்க தங்க வேண்டிய இடத்துக்கு போகலாம்.”

“ஹாய் ப்ரோ உங்களை நம்பி தான் இவ கூப்பிட்டாளேனு வந்துருக்கோம். எப்படியாவது மூணு வேளையும் நல்ல சாப்பாடு மட்டும் கொடுத்துருங்க.”

“அதுக்கென்ன விருந்தே போட்டுருவோம்.”, என்றவன் தனது இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து வண்டியை உயிர்பித்திருந்தான்.

பத்து நிமிடத்தில் வீட்டை அடைந்தவன் அவர்கள் காரை நிறுத்துவதற்கு உதவி விட்டு அனைவரையுமாய் உள்ளே அழைத்தான்.

காமாட்சி திண்ணையில் அமர்ந்திருக்க அனைவரும் அவருக்கு வணக்கம் வைத்து எதிர் திண்ணையில் அமர்ந்தனர்.

“உள்ளே வாங்க..”

“இருக்கட்டும் ருத்ரா. இதெல்லாம் எங்க சென்னை 600 சதுர அடி வீட்டில் கிடைக்காது டா.”

“நீ இன்னும் மாறவேயில்ல. அப்படியே அந்த பக்கமா போனா கொல்லைப் பக்கத்தில் பாத்ரூம் இருக்கு யூஸ் பண்ணிக்கோங்க.”

“தேங்க்ஸ் ப்ரோ..”, என்ற அரவிந்த் முதல் ஆளாய் தனது கைப் பையோடு சென்றிருந்தான்.

“காந்தா.. அவுக எல்லாம் வந்துட்டாக பாரு..”

“தோ வரேன் மாமா..”, என்ற குரலில் ரம்யா உட்பக்கம் தலையைத் திருப்பினாள்.

சிறு பெண்ணாய் அதே நேரம் அதீத முகக் களையோடு வந்து நின்றவளைப் பார்த்து ரம்யா நண்பனுக்கு கண்சாடை செய்தாள்.

“அடப்பாவி இந்த உள்ளூர் அழகியை எங்ககிட்ட காட்டாம இருக்க தான் கல்யாணத்துக்கு கூப்பிடலையா நீ?”, என ருத்ரேஸ்வரனின் காதில் கிசுகிசுத்தாள்.

“ஹாய் என் பேர் ரம்யா. உங்க மாமாவோட காலேஜ் ப்ரெண்ட்.”

“வாங்க கா. காபி எடுத்துக்கோங்க.”

“உங்க பேர் சொல்லவேயில்லையே?”

“என் பேர் செங்காந்தள்.”

“வாவ் ரொம்ப அழகான பேரா இருக்கு. ஆனால் உங்களுக்கு ஏத்த மாதிரி தான் வைச்சுருக்காங்க.”, என்ற சந்தோஷ் வந்து ஒரு காபி டம்ளரை எடுத்துக் கொண்டான்.

“உங்க புருஷன் மேலே செம கோவத்தில் இருந்தேன். எங்களையெல்லாம் கல்யாணத்துக்கு கூப்பிடவே இல்ல.

ஆனால் இப்போ இவனை விட்டா வேற வழியில்ல அதான் இங்கே வந்துருக்கேன்.”

“இங்கே தான இருக்க போறீங்க பொறுமையா சண்டை போடுங்க.”, என்றவள் அனைவருக்கும் பொதுவாய் புன்னகைத்து நின்றாள்.

“ப்ளவர் நீங்க எங்கேயாவது கிளம்பிட்டீங்களா? எங்களால தான் லேட் ஆகுதா?”

“இல்லையே. நான் எங்கேயும் போகலை.”

“இல்ல காலையிலேயே இப்படி ரெடியாகி இருக்கீங்களே அதான் கேட்டேன்.”

“ரெடியெல்லாம் ஆகலை நான் தினமுமே இப்படிதேன் இருப்பேன்.”, என்றதில் ரம்யா மீண்டுமாய் நண்பனின் காதில்,

“கொடுத்து வைச்சவன் டா. சென்னையில் கல்யாணம் பண்ணிருந்தா அழுக்கு நைட் ட்ரெஸும் தூக்கி போட்ட கொண்டையுமா தான் பொண்ணு இருந்துருக்கும். அதனால தான் ஊர் பக்கமா பொண்ணை உஷார் பண்ணிருக்க.”

“ஆத்தா வந்தன்னைக்கே ஒரு வழியாக்காத என்னை. காபியை குடிச்சுட்டு வா தோப்பு வீட்டுக்குப் போகலாம்.”

“விரட்டாத டா வரேன். ஓகே செங்காந்தள் நாங்க வரோம்.”

“சரிக்கா போயிட்டு வாங்க. அங்கே உங்களோட உதவிக்கு பொன்னி இருப்பா. எது வேணும்னாலும் அவகிட்ட சொல்லுங்க.”

“தேங்க் யூ சோ மச் டா. அப்போ நீங்க அங்கே வர மாட்டீங்களா?”

“வந்தா போச்சு. நீங்க வேலையா இருப்பீகளே?!”

“எப்பவும் தான் வேலையிருக்கு. பார்த்துக்கலாம். நீங்க வாங்க. ஆமா உங்க குழந்தை?”

“பொண்ணு தீப்தி. தூங்குறா நான் அப்பறமா கூட்டிட்டு வாரேன்.”

“சரி டா பார்க்கலாம். பை.”, என்ற படி அனைவருமாய் விடைபெற்று கிளம்பியிருந்தனர்.

“ஆத்தே எத்தனை டா போட்டு பேசுது அந்த புள்ள!!”, என்ற காமாட்சியிடம் செங்காந்தள்,

“ஒண்ணா படிச்சவுக அத்தை. அப்படிதேன் பேசிப்பாக.”

“சரிதேன். நல்ல வேளை இவன் பேச்சை கேட்டு பொண்ணு பார்க்கலை.”, என்றதற்கு அமைதியாய் உள்ளே சென்றிருந்தாள்.

தோப்பு வீட்டை பார்த்தவர்களுக்கு இன்னுமும் குஷியாகி விட அனைவரையுமாய் உள்ளே அமர்த்தி விட்டு பொன்னியிடமும் விவரங்கள் கூறிவிட்டு ருத்ரேஸ்வரன் கிளம்ப ஆய்த்தமானான்.

“சரி நான் சாயங்காலம் வேலையை முடிச்சு வரேன் ரம்யா. வெளியே போகும் போதும் பொன்னியை கூப்பிட்டுக்கோங்க அவளுக்கு எல்லா இடமும் தெரியும்.”

“ரொம்ப தேங்க்ஸ் ருத்ரா. பெரிய சவாலா இருந்தது இந்த வேலை. ஆனால் உன்னால ரொம்பவே சுலபமாயிடுச்சு.”

“தேங்க்ஸ் சொல்ல எல்லாம் ஆரம்பிச்சுருக்கியா? பரவாயில்லையே!”

“ஏய்..”

“சரி உன் பேமிலி பசங்க?”

“அதெல்லாம் பெரிய கதை. டிவோர்ஸ் ஆகிடுச்சு டா. பசங்க எல்லாம் இல்ல. சோ சிங்கிளா ஹேப்பியா இருக்கேன்.”, என்றதில் ருத்ரேஸ்வரன் அமைதியாகி விட்டிருந்தான்.

“ஓய் அதெல்லாம் அதர பழைய கதை. இப்போ உட்காந்து ஃபீல் பண்ணிட்டு இருக்க நீ. மொத்தமா வெளியில வந்து பல வருஷம் ஆச்சு ருத்ரா.”

“என்னவோ போ சாயங்காலம் வரேன் நிதானமா பேசுவோம். வரட்டுமா?”

“ம்ம் சரி டா.”, என்று அவன் கிளம்பிச் சென்ற பின் உள்ளே வந்தவளை அத்தனை கண்களும் குறுகுறுப்பாய் பார்த்தன.

“என்னங்க டா?”

“காலேஜ் டேஸில் உன்னோட ஒன் சைட் லவ்வா சார்?”

“டேய்!!!”

“முகரையைப் பார்த்தாலே தெரியுதே சொல்லு”

“அதெல்லாம் அறியாத வயசில் நடக்குறது தான். அவனுக்கே சொன்னதில்ல அப்பறம் எப்படி டா கண்டு பிடிச்சீங்க?”

“ம்ம் க்ரேட் மிஸ்னு தோணுது ரம்ஸ்.. உன் மனசை சொல்லிருக்கலாம்.”

“முடிஞ்சு போனதை பேசி என்ன ஆகணும். இப்போ அவனோட அழகான குடும்பத்தைப் பார்த்தீங்கல? நாம ஔட் சைட்டர்ஸ் தான். சோ!”, என்றவள் வாயை மூடிக் கொள்ளுமாறு செய்கை செய்தாள்.

வீட்டிற்கு வந்தவனுக்கு குளித்துக் கிளம்பவே நேரம் சரியாய் இருக்க அதற்குள் கடையிலிருந்து அழைப்பு வர ஆரம்பித்திருந்தது.

“காந்தா பணப் பையை ரூமிலேயே வைச்சுட்டேன். கொஞ்சம் எடுத்துட்டு வாயேன்.”, என்றதில் செங்காந்தள் தங்களறைக்கு வேகமாய் சென்றாள்.

ருத்ரேஸ்வரன் இப்படியெல்லாம் அவளிடம் சிறு வேலை கூட உரிமையாய் கேட்டதில்லை. எத்தனை அவசரமானாலும் அவன் வேலையை அவனேப் பார்த்துக் கொள்வான்.

இரு நாட்களாய் ஏனோ தன்னைச் சுற்றி அனைத்தும் அழகாக மாறி விட்டதாய் தோன்றியது செங்காந்தளிற்கு.

பையை எடுத்துக் கொண்டு வேகமாய் வெளியேறியவள் கணவனின் மீது பலமாய் மோதிக் கொண்டாள்.

“ஸ்ஸ்…”

“மன்னிச்சுருங்க மாமா பார்க்கலை..”, என்றவள் பின்னே நகர அவளது தலை முடி நன்றாக அவனது சட்டைப் பொத்தானில் மாட்டியிருந்தது.

“எதுக்கு இம்புட்டு அவசரம் காந்தா. மெதுவா..”, என்றவன் பொறுமையாய் அவளது தலைமுடியை பிரித்து விட்ட படி மஞ்சள் வாசத்தை நாசியில் நிரப்பிக் கொண்டிருந்தான்.

ஒரு புறமாய் தலை திரும்பிய படி அவள் நிற்க நான்கு கல் மூக்குத்தி கண்ணைப் பறித்தது ருத்ரேஸ்வரனுக்கு.

முடியை எடுத்து விட்டவன் காதுக்குப் பின்னால் ஒதுக்கி விட்ட படி கையை எடுக்காமல் மனைவியைப் பார்த்து நிற்க பதிலுக்கு அவளிடமிருந்து வந்த பார்வை அவன் மனதில் ஆழமாய் பதிந்து போயிருந்த அதே பார்வை.

“ஏன் இப்படி பார்க்குற காந்தா?”, என்றவனின் குரல் இருவரையுமே அந்த நொடியில் அப்படியே கட்டிப் போடுவதாய்.

பார்வையைத் தாங்க முடியாதவனாய் கன்னத்தில் லேசாய் அழுத்தம் கூட்டி,

“அப்படி பார்க்காத டி.”, என்று முணுமுணுத்தவன் சிறிது சிறிதாய் தன்னை மறக்கும் நேரம் தீப்தி உள்ளே ஓடி வந்ததில் செங்காந்தள் திரும்பி பார்க்காமல் ஓடியிருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!