Skip to content
Post Views: 4,660
“பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு
மு.வ உரை: செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பண்பு வேண்டும், செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில் பணியாத உயர்வு வேண்டும்.”
கட்டிலில் ருத்ரேஸ்வரன் அவனிடத்தில் அமர்ந்திருக்க செங்காந்தளும் படுக்காமல் அமைதியாய் அமர்ந்தாள்.
“பாப்பா அங்கே தூங்குறாளா?!”
Advertisement
“ம்ம்..”
“அம்மா எதுவும் சொல்லிச்சா?”
“இல்லையே.. எப்பவும் போலதேன் போயிருக்கா..”
Advertisement
“சரி நீ படுத்துக்கோ..”, என்றவனுக்குத் தலையசைத்து படுக்கச் சென்றவளின் புஜத்தை அழுந்தப் பற்றியிருந்தான்.
Advertisement
என்னவென பதட்டத்தை மறைத்து கணவனை ஏறிட சற்று உள்ளே தள்ளியமர்ந்து மனைவியைத் தன் மடி சாய்த்திருந்தான்.
சட்டென எழப் போனவளின் தோள் பற்றி அழுத்தம் கொடுக்க எப்போதும் போல் கண்களில் இருந்து கண்ணீர் ஊற்றெடுத்திருந்தது செங்காந்தளுக்கு.
மடி சாய்தலே வரம் இதில் கணவனின் தலைகோதல் வேறு மொத்தமாய் உள்ளத்தை உடைத்துக் கொண்டிருந்தது.
Advertisement
“இது தான் நேத்து எனக்குத் தேவையானதா இருந்தது காந்தா..”
“!!!”
“அதை வாய் விட்டு கேட்க முடியாம தான் ஏதேதோ பேசிட்டேன். முறுக்கிகிட்டு திரிஞ்ச எனக்கே அது தேவைனால் உனக்கு அது எம்புட்டு தேவைப்பட்டுருக்கும்னு எனக்குப் புரியுது.”
“பச்சை புள்ளை மாதிரி இருக்குற உன் மனசை ரொம்ப கஸ்டப்படுத்திருக்கேன் டி.”, என்றதில் கணவனின் கரத்தை இழுத்து இறுக்கமாய் பற்றிக் கொண்டாள்.
தன் உரிமைப் பொருளை சில அடிகள் தள்ளி நின்று தான் ரசிக்க வேண்டும் என்றால் குழந்தையின் மனநிலை எப்படியிருக்கும்? யாரும் அதை எடுத்துச் செல்வார்களோ?
தொலைத்து விடுவேனோ என அதன் மனம் எத்தனை பாடுபடும்.
அப்படித்தான் இத்தனை வருடம் செங்காந்தள் வாழ்ந்த வாழ்க்கையும்.
நிலையில்லாத திருமணம் என பார்ப்பவரெல்லாம் கூறி கூறி அவளுள் அந்த பயம் எத்துணை தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.
இப்போது அவளின் இறுக்கம் வாழ்வு மொத்தத்துக்குமாய் அவனைத் தன்னோடு இப்படியே வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான இறுக்கமாய் இருந்தது.
ஆனாலும் ஒரு வார்த்தை பேசவில்லை. காலையில் ரம்யாவுடன் அத்தனை பேச்சு பேசியவளுக்கு கணவனிடம் தன் பக்க வாதத்தையோ ப்ரியத்தையோ முன்னெடுக்க வாய் வரவேயில்லை.
சற்றே தளர்ந்து படுத்தவன் அவளை அப்படியே தன் மீது சாய்த்திருந்தான்.
எவ்வித பேச்சு வார்த்தைகளும் இல்லை. ஏன் இப்படியெல்லாம் செய்தாய் என்ற கேள்வி அவளிடத்தில் இல்லை.
புத்தியில்லாமல் இருந்து விட்டேன் என்ற விளக்கம் அவனிடம் இல்லை. ஆனால் ஒருவரை ஒருவர் தன்னோடு சேர்த்தணைத்திருந்த அந்த இறுக்கம் அத்தனை கேள்விகளுக்கும் விடையாய் அமைந்து போனது.
அந்த பேரமைதியின் இறுதியில் எவ்வித தயக்கமுமின்றி தன்னைச் சுற்றியிருந்த அவனின் வலக்கரத்தை எடுத்து உள்ளங்கையில் அழுத்தமாய் இதழ் பதித்து அவன் முகம் பார்க்காமல் அப்படியே அவனது மார்பில் விழி மூடியிருந்தாள்.
இருவருக்குமே அன்றைய இரவு வெகு நிம்மதியான உறக்கத்தைக் கொடுத்திருந்தது.
காலை தூக்கம் கலைந்தவளுக்கு அதற்குள் விடிந்து விட்டதா என்று எரிச்சலாக இருந்தது.
தூக்கத்தில் செங்காந்தள் மறுபுறம் திரும்பி படுத்திருக்க அவள் முதுகோடு அணைவாய் அவளை அணைத்தபடி தூங்கிக் கொண்டிருந்தான் ருத்ரேஸ்வரன்.
தன் மீதிருந்த அவனது கரத்தை ஒவ்வொரு விரல்களாய் பட்டும் படாமல் அவன் தூக்கம் கலையாமல் வருடினாள்.
பலநாள் தூரத்திலிருந்து ரசித்திருந்த அந்த நீள் விரல்களை ஆசை தீர பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனது கரத்தின் மேல் தன் கரத்தை வைத்துப் பார்க்க அவனின் கரத்தின் அருகில் தன் கரம் தீப்தியின் கரம் போன்று குட்டியாய் இருந்ததில் மெலிதாய் புன்னகைத்துக் கொண்டாள்.
கணவனிடத்தில் லேசான அசைவு தெரிய வேகமாய் எழுந்து கொண்டவள் அவனை ஒரு முறை கண்களுக்குள் நிரப்பிக் கொண்டு அறையிலிருந்து வெளியேறியிருந்தாள்.
செங்காந்தள் குளித்து முடித்து காபியோடு மாமியாரைப் பார்க்க வந்த போது லிங்கமூர்த்தியிடம் ஏதோ கத்திக் கொண்டிருந்தார் காமாட்சி.
“என்னத்த புரிஞ்சுகிடணும் உனக்கு? இங்கேரு இதுதான் நம்ம தொழில் இதைதேன் நீ பார்க்கணும். விருப்பமில்லையா தனியா கிளம்பி போயிகிட்டே இரு. சொல்லிப்புட்டேன்.”
“ம்மா.. ஏன் மா புரியாம பேசுற?”
“யாரு டா புரியாம பேசுறா அம்புட்டு படிப்பை படிச்சாலும் அவன் ஏன் வேற வேலைக்குப் போகாம இருக்கான்?
இதுதேன் நம்ம குலசாமி உங்க அப்பாரு பார்த்து பார்த்து வளர்த்து விட்ட தொழிலு. சுலபமா பங்கு பிரிச்சு கேட்குற?
இதெல்லாம் யாரு கொடுக்குற சாவினு நல்லாவே தெரியும் எனக்கு. மாமியா வீட்டுக்கு போனோமோ மூக்கு முட்ட தின்னோமானு வந்துரணும்.
அதை விட்டு போட்டு என் வீட்டுல என்ன நடக்கணும்னு அவுக முடிவு பண்ண கூடாது சொல்லிட்டேன்.”
“அத்தை..”, என்ற செங்காந்தளின் குரலில் லிங்கமூர்த்தி பேச்சை வளர்க்காமல் அப்படியே வெளியே சென்றிருந்தான்.
காமாட்சி கோபத்தில் வேக மூச்சுகளை எடுத்த படி அமர்ந்திருந்தார்.
செங்காந்தள் அவரிடம் காபியை நீட்டி விட்டு சற்றுத் தள்ளி நிலை வாசலில் சாய்ந்த படி நின்றிருந்தாள்.
சில நொடிகள் கழித்து ஒரு வாய் காபியைக் குடித்தவர் மருமகளை முறைத்தார்.
“என்னனு கேட்டா முத்து உதுந்துருமோ உனக்கு?”
“கோவமா இருக்கீகளேனு அமைதியா இருந்தேன்..”
“ம்ம் இல்லையானால் அப்படியே பேசி தள்ளிருவ நீ..”, என்றதற்கும் வாயை மூடிக் கொண்டு நின்றாள்.
“அவன் மாமியா வீட்டுப் பக்கம் கடை ஒண்ணு விலைக்கு வருதாம். அங்கே துணிக்கடையோ ஹோட்டலோ போட்டா நல்ல வியாபாரம் நடக்குமாம்.
அதுக்கு இவனுக்கு நிலத்தை வித்து காசு கொடுக்கணுமாம். எப்படியிருக்கு கதை பார்த்தியா?”
“…”
“மருமகனை கைக்குள்ளே போட்டுகிடணும்னால் அவுகளே காசையும் கொடுக்க வேண்டியது தானே? இதுக்கு மட்டும் நாம வேணுமாக்கும்?!”
“ஆயிரம் பேரு ஆயிரம் அறிவுரை சொல்லுவான் அதையெல்லாம் கேட்டுகிட்டு நாம ஆட முடியுமா? பொண்டாட்டினு இருக்குவளுக்கு மாமியா வீட்டுல இருக்க வலிக்குது போல.”
“அத்தை இப்போ எதுக்கு தேவையில்லாம என்னைப் பத்தி பேசுறீக?”
“வாடி ராசாத்தி! ஏதோ உலகத்துலேயே நீ ஒருத்திதேன் பிள்ளையை பெத்தாப்புல இடுப்புல தூக்கியே திரிஞ்சு ஒரு வேலையும் பார்க்குறது கிடையாது.
அம்புட்டையும் இந்த மகராசி பார்த்துப்புட்றா. அப்படி இருந்தும் உனக்கு உன் ஆத்தா வீடுதேன் சுகமா இருக்கோ?”
“அத்தை ஆம்பளைங்க தொழில் விசயமா எதோ யோசனை சொன்னா அதுல என்னைய ஏன் இழுக்கீக? நானெல்லாம் ஒண்ணும் சொல்லிக் கொடுக்கலை.”
“ஒண்ணும் சொல்லிக் கொடுக்காமதேன் கதவுக்கு பின்னாடி நின்னு எல்லாத்தையும் ஒட்டு கேட்டு வாரியாக்கும்?”
“!!”
“இங்கேரு இது ஒண்ணும் பாட்டன் சொத்து இல்ல. அத்தனையும் என் புருசன் சம்பாத்தியம் யாருக்கு கொடுக்கணும் யாருக்கு கொடுக்க கூடாதுனு நான்தேன் முடிவு பண்ணனும்.
ஓடா உழைச்சு ஓஞ்சு போற பெரியவனே இது வரை காசு கொடுனு கேட்டதில்ல. வந்துட்டாங்க புருசனும் பொண்டாட்டியும்.”
“..”
“ஊருக்குள்ளே மூத்த பிள்ளைக்கு மொளகா அரைச்சு இளைய பிள்ளைக வயித்த ரொப்புவாகளே இந்த காமாட்சி அப்படிபட்டவ கிடையாது.
உழைப்புக்கு ஏத்த ஊதியந்தேன். இதுவரை எம் பேச்சை கேட்காதவனுக்கு எல்லாம் ஒத்த பைசா தர முடியாதுனு மொத்தத்தையும் பெரியவனுக்கு எழுதி வைச்சுப்புடுவேன் சொல்லிட்டேன். போடி பொழப்பை பாத்துகிட்டு..”, என்றவர் வெளியே செல்ல ராணி செங்காந்தளிடம் கத்த ஆரம்பித்திருந்தள்.
“ஏன்க்கா அவுக எம்புட்டு பேசுறாக? வாயே திறக்காம நின்னு நல்லவ பட்டம் வாங்கிகுறீக.
இப்பதேன் தெரியுது புடிக்காத கல்யாணமானாலும் ஏன் இங்கேயே இருக்கீகனு.”
“ராணி பேச்சு சரியில்ல. இதோட விடு. போய் வேலையைப் பாரு.”
“நான் ஏன் பேச்சை நிறுத்தணும் உண்மையைதேன் சொல்லுதேன். நல்லவக வேசம் போட்டு மொத்த சொத்தையும் உங்களுக்கே வாங்கிக்கலாம்னு இருக்கீகனு இப்பதேன் புரியுது.
யாருக்குத் தெரியும் உள்ளுக்குள்ளே ஒண்ணும் மண்ணுமா இருந்துட்டு வெளிக்கு பிடிக்காத வேசம் போட்டு அத்தையை கைக்குள்ளே போட்டு வைக்குறீகளோ என்னவோ?!”, என்ற நேரம் பின் கேட்ட குரலில் வாயை மூடியிருந்தாள் ராணி.
“போதும் நிறுத்து ராணி!”, என்றவனின் குரலில் அதிர்ந்து போனாள் செங்காந்தள்.
உண்மையில் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பது அவளுக்குப் புரியவில்லை.
இரவில் ஏதோ எதிர்பாராமல் ஒரு அணைப்பு கிடைத்தது ஆனால் அதை வைத்துக் கொண்டு இப்போது அவனை அடக்குவதெல்லாம் சாத்தியமா என உள்ளுக்குள் ஆயிரம் யோசனைகள்.
“அத்தான்..”
“நான் உன்ட்ட பேச விரும்பலை. உன் புருசனை எங்கே? போனை போட்டு வரச் சொல்லு.
இப்போவே அவன் இங்கே வந்தாகணும்.”, என்றவன் உள்ளே சென்று விட செங்காந்தள் மாமியாரைத் தேடி வாசலுக்கு ஓடினாள்.
இரு வீடுகள் தள்ளி நடந்து கொண்டிருந்த மாமியாரை அழைத்த படி ஓடினாள்.
“அத்தை..”
“என்ன டி என்னத்துக்கு இப்படி வெறுங்காலில் ஓடி வர்றவ?”
“அத்தை ராணி ஏதேதோ பேசப் போய் இவுக கோபமா கத்திடாக. லிங்க அத்தானை இப்போவே வர சொல்லுனு கத்திட்டு இருக்காக.”
“இததேன் எதிர்பார்த்தேன். அவன் வரட்டும் இன்னைக்கு. எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டிப்புடுதேன்.”
“அத்தை பிரச்சனை வேண்டாம் அத்தை..”
“அடிப்போடி நானா சண்டைக்கு அலைஞ்சேன். இவங்களை இப்போ தட்டி வைக்கலைனால் என் தலையிலேயே ஏறி உட்காந்தாலும் ஆச்சரியப் படுறதுக்கு இல்ல. நீ வா என்கூட.”, என்றவர் மருமகளின் கரம் பற்றி வீட்டிற்கு இழுத்துச் சென்றார்.
error: Content is protected !!