Skip to content
Post Views: 4,655
“தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை
மு.வ உரை: மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலைமையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர்.”
ருத்ரேஸ்வரன் வரவேற்பறை நாற்காலியில் அமர்ந்திருக்க மாமியாரோடு பதட்டமாய் உள்ளே வந்த மனைவியைக் கவனித்தவன் மீண்டுமாய் தலையை திருப்பிக் கொண்டான்.
ராணி கணவனுக்கு போன் போட்டு அழைத்திருக்க இவர்களுக்குப் பின்னே லிங்க மூர்த்தியும் வந்து நின்றிருந்தான்.
“என்ன ண்ணே என்ன ஆச்சு?”
Advertisement
“என்ன ஆகணும் நீ ஆரம்பிச்சு வைச்சதை பத்தி பேசதேன் கூப்பிட்டுருக்கான்.”
“ம்மா நீ கொஞ்சம் சும்மா இரு.”
“..”
Advertisement
“இங்கே பாரு என்ன பிரச்சனையா வேணாலும் இருக்கட்டும். அதை பேசுறதுக்கு ஒரு முறையில்லையா?
Advertisement
மாமியார்னு அம்மாகிட்ட ராணி பேசுறது சரி. ஆனால் காந்தாகிட்ட தேவையில்லாத பேச்செல்லாம் ஏன் பேசணும்?”, என்றதில் காமாட்சிக்கு நெஞ்சு வலி வராத குறை.
பிள்ளை பண விஷயத்திற்காக தம்பியைக் கண்டிக்க நினைக்கிறான் என்று நினைத்திருந்தால் இங்கு நடப்பது என்ன என்று விழித்திருந்தார்.
“ஏய் மதினிட்ட என்ன பேசின?”
Advertisement
“இல்லாததை ஒண்ணும் சொல்லலை”
“இந்த வாய்க் கொழுப்பு குறையுதானு பாரு. ஏன் டி செங்கா என்ன டி சொன்னா அவ?”, என்ற மாமியாரைப் பாவமாய் பார்த்து நின்றாள்.
“எனக்கென்ன பயமா? நானே சொல்லுறேன். இவுக சும்மா இப்படி ஊமையா நடிச்சு மொத்த சொத்தையும் எடுத்துக்க நினைக்குறாக.
இல்லைனால் பிடிக்காத கல்யாணத்தை பண்ணிகிட்டு ஏன் இத்தனை வருசம் இருக்கணும்னு கேட்டேன்.”, என்றதில் ருத்ரேஸ்வரன் இருக்கையில் இருந்து எழுந்திருந்தான்.
“இதேன். என்ன பேச்சு இது? வயசுக்கும் மரியாதை இல்ல உறவுக்கும் மரியாதை இல்ல. இங்கே பாரு லிங்கா இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும். இன்னொரு முறை இது மாதிரி பேச்சு வந்துச்சு நடக்குறதே வேற சொல்லிட்டேன்.”
“ண்ணே..”
“உன் அண்ணன்தேன் அதுக்காக என் பொண்டாட்டியை யாரு வேணா என்ன வேணா பேசுங்கனு விட்டுட்டு இருக்க முடியாது சொல்லிட்டேன். இத்தனை நாள் இப்படி பேச வேண்டிய அவசியம் வரலை.
இன்னைக்கு வந்திருச்சு நான் கேட்கதேன் செய்வேன். முதல்ல எல்லாரும் வேலை வெட்டியை விட்டுட்டு எங்க படுக்கையறையை எட்டிப் பார்க்குறதை நிறுத்துங்க.”, என்றவன் தாயையும் முறைத்து விட்டு அப்படியே வெளியேறியிருந்தான்.
“ஏன் டி அறிவு கெட்டவளே இந்த தேவையில்லாத பேச்செல்லாம் உனக்கு எதுக்கு? இங்கே என்ன பிரச்சனை போயிட்டு இருக்கு நீ சம்மந்தமே இல்லாம வேற ஒரு ஏழரையை இழுத்துட்டு வர்ற.
போடி பொழப்பை பார்த்துட்டு..”, என்ற கணவனை முறைத்த வண்ணம் ராணி தங்களறைக்குச் செல்ல லிங்கா செங்காந்தளிடம்,
“அறிவில்லாம என்னத்தையோ உளறிட்டு இருக்கா மதினி மன்னிச்சுகிடுங்க..”
“ஐயோ அத்தான் அதெல்லாம் ஒண்ணுமில்ல..”, என்று அவசரமாய் கூற லிங்கமூர்த்தியும் உள்ளே சென்றிருந்தான்.
“ஆத்தீ செங்கா நெஞ்செல்லாம் வலிக்குது டி. கொஞ்சம் தண்ணி கொண்டா..”, என்ற காமாட்சியின் முன் கண்ணில் நீர்கோர்க்க நின்றிருந்தாள் செங்காந்தள்.
“அழாத டி எனக்கும் அழுகைதேன் வருது. இந்த பய பேசிட்டு போனது எம்புட்டு சந்தோசமா இருக்கு தெரியுமா?
உள்ளுக்குள்ளே ஆசை இல்லாமயா இத்தனை வருசம் அமைதியா இருந்திருப்பான்.
இப்படியே கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் சரியாகணும் டி செங்கா.
உன் மவ இனி என்னோடேயே இருக்கட்டும்.”, என்றதில் என்ன செய்வதென புரியாமல் உள்ளே ஓடியிருந்தாள்.
ருத்ரேஸ்வரன் நிதானத்திற்கு வருவதற்கு நேரம் எடுத்தது. பம்பு செட்டிற்கு அருகில் வண்டியை நிறுத்தியவன் இறங்கி வண்டியில் சாய்ந்த படி எங்கோ வெறித்து நின்றான்.
எப்போதெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ யாருக்கெல்லாம் வாய்ப்பிருக்கிறதோ அவளிடம் இந்த திருமணத்தைப் பற்றி குத்திக் காட்டிக் கொண்டே தான் இருப்பார்கள் போலும்.
அன்று அவளது அண்ணன் மனைவி அவளின் தாய் இன்று தன் தம்பி மனைவி.
தனக்கு இதற்கே எரிச்சல் படுகிறதே இத்தனை வருடங்களில் எவ்வளவு வலிகளைத் தாங்கிக் கொண்டு ஒன்றுமே நடவாதது போன்று இருந்திருப்பாள்.
தான் தன் தேவை என்பதை மட்டுமே யோசித்து சுயநலமாய் இருந்து விட்டோமே என்று மனதார வருந்தினான்.
சுய சிந்தனையில் உழன்றவனை தொழில் விஷயமாய் வந்த கைப்பேசி அழைப்பு நினைவிற்குக் கொண்டு வந்திருந்தது.
அன்றைய தினம் வேலை அதிகமாய் இருக்க தோப்பில் வேலை செய்யும் பையனிடம் மதிய உணவைக் கொடுத்து விடுமாறு கூறிவிட்டான் ருத்ரேஸ்வரன்.
வேலை அதிகமாக இருக்கும் நேரங்களில் இது அவனது வழக்கம் தான்.
செங்காந்தளும் உணவை டிபன் பாக்ஸில் போட்டு கொடுத்து விட்டிருந்தாள்.
இரவு வீட்டிற்கு வந்தவனிடம் கையிலிருந்த பையை வாங்கிக் கொண்டவள் ஒன்றும் பேசாமல் சமையலறைக்குச் சென்று மதிய உணவு பாத்திரத்தை பாத்திரங்களை தேய்க்கும் இடத்தில் போட எடுத்தவளுக்கு அது கனமாக இருப்பதாய் தோன்ற லேசாய் அசைத்துப் பார்த்தால் ஏதோ இருப்பது தெளிவாய் தெரிந்தது.
உணவை சாப்பிடாமல் எடுத்து வந்து விட்டானோ என்ற யோசனையில் பாத்திரத்தைத் திறந்தவளுக்கு ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தன.
உள்ளே வாழையில் சுற்றிய படி நெருக்கமாய் கட்டப்பட்ட மல்லிச் சரம் இருந்தது.
யாரும் சமையலறைக்குள் வந்து விடுவார்களோ என்று பதட்டமாய் அவள் திரும்பிய நேரம் சமையலறை வாசலில் கைகளைக் கட்டிய படி நின்றிருந்தான் ருத்ரேஸ்வரன்.
அழகான சிரிப்போடு செங்காந்தள் தலை குனிந்து கொள்ள அவளின் புன்னகையை மனதில் நிரப்பிக் கொண்டு அவனும் மீசை மறைத்த மென்னகையோடு அங்கிருந்து நகர்ந்திருந்தான்.
முன்தினம் போலவே மாமியாரின் அறைக்குள் செல்ல குழந்தை அதே கதையை தான் இன்றும் சொன்னது. காமாட்சியோ மருமகளை முறைத்து,
“நான்தேன் அவ இங்கே இருக்கட்டும்னு சொன்னேன்ல போய் தூங்கு போ.”, என்று வெளியே கண் காட்டினார்.
ருத்ரேஸ்வரன் ஏற்கனவே அறைக்குள் சென்றிருக்க செங்காந்தள் படபடக்கும் இதயத்தோடு அந்த உணவு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு உள்ளே வந்திருந்தாள்.
கட்டிலில் வாகாய் சாய்ந்து கால் நீட்டி அமர்ந்திருந்தவன் மனைவியின் கையில் பாத்திரத்தைப் பார்த்து புருவம் சுருக்கினான்.
“என்ன காந்தா கையில?”, என்றதில் அவனருகில் வந்தவள் அவனது காலருகில் கட்டில் நுனியில் அமர்ந்து பாத்திரத்தைத் திறந்து அவன் முன் நீட்டினாள்.
ருத்ரேஸ்வரன் என்னவென மனைவியைப் பார்த்திருக்க அவள் நீட்டிய கையை இறக்காமல் அவனைத் தான் பார்த்திருந்தாள்.
மல்லியை அவன் கையில் எடுத்துக் கொள்ள பற்கள் தெரிய அமைதியாய் சிரித்தவள் கணவனுக்கு முதுகு காட்டி அமர்ந்து விட இப்போது ருத்ரேஸ்வனிடத்தில் விரிந்த புன்னகை.
பூவை மனைவியின் தலையில் சிறு முடி கற்றைகளை எடுத்து அதற்குள் வைத்து விட்டான்.
ஒரு புறம் அவளது தோளில் சரிந்த மல்லிச் சரத்தையும் அவளையும் வாஞ்சையாய் பர்த்திருந்தான்.
“பேச்சு இன்னும் குறைஞ்சு போச்சே ஏன்?”, என்றவன் அவளது கரத்தை எடுத்து தனக்குள் அழுத்திக் கொண்டான்.
“மாமா..”
“ம்ம்..”
“எனக்கு உங்களை மாதிரி ரம்யா அக்கா மாதிரி எல்லாம் அறிவா பேச வராது.”, என்றவள் வார்த்தைகளை முடிக்கும் முன் முந்திக் கொண்டவனாய்,
“நீ யாரை மாதிரியும் இருக்க வேணாம். நீ நீயா இருந்தாலே போதும் காந்தா. இப்படியெல்லாம் யோசிச்சு என்னை இன்னும் குற்றவுணர்ச்சிகுள்ளே தள்ளாத..”
“மன்னிச்சுருங்க உங்களை கஷ்டப் படுத்தனும்னு சொல்லலை.”
“பரவால்ல. ஆமா எங்கே பாப்பா?”
“அவ இனி அத்தை கூடதேன் படுப்பாளாம்.”, என்றவளின் குரல் இறங்கியிருந்தது.
“அவ சொன்னாளா?”
“ம்ஹூம்.. அத்தை..”, என்றதில் தலையில் கை வைத்திருந்தான்.
“என்னவாம் உங்க அத்தைக்கு?”
“அதெல்லாம் தெரியலை.”, என்றவள் வாய் கூசாமல் பொய்யுரைத்தாள்.
“சரி நீ போய் நைட்டி மாத்திட்டு வா படுப்போம்.”
“அது.. இல்ல வேண்டாம் இப்படியே இருக்கட்டும்.”, என்றதில் எதையோ கேட்க வந்தவன் அமைதியாய் படுத்து விட செங்காந்தள் அப்படியே அவனது பக்கவாட்டில் அமர்ந்திருந்தாள்.
“என்னைப் பார்த்தா கோவம் வரலையா?”
“ம்ஹும்..”
“அடிக்கணும் போல இல்ல?”
“ஐயோ.. ம்ஹும்.”
“ஏன் அப்படி?”
“ஏன்னால்..”, என்றவள் பிடிக்கும் என்பதை கூறாமல் வார்த்தையை நிறுத்தியிருந்தாள்.
“எனக்கு உன்கிட்ட ரொம்ப நாளாவே ஒண்ணு கேட்கணும். தப்பா நினைக்காத..”
“என்ன மாமா?”
“நேத்து நீ என்னை பார்த்த மாதிரி தான் முன்னாடி ஒரு நாளும் பார்த்த..”
“!!!!”
“அந்த பார்வைக்கு என்ன அர்த்தம் காந்தா?”
“…”
“இத்தனை வருசம் கழிச்சும் நியாபகத்தில் இருக்குனால் புரிஞ்சுக்கோ உண்மையாவே இதை உன்கிட்ட கேட்க நினைச்சுருக்கேன்.”
“…”
“ஏன் டி அப்படி பார்த்த?”, என்றதில் அந்த சிறு இடத்தில் அப்படியே அவன் மார்பில் சாய்ந்து அவள் படுத்துக் கொள்ள நன்றாகத் தள்ளிப் படுத்து அவளுக்கு இடம் கொடுத்தான் ருத்ரேஸ்வரன்.
“அது.. உங்களை அவ்வளவு பக்கத்தில் பார்த்ததேயில்லைல. அதனால ஆசை தீர பார்த்துகிட்டேன்.”
“அப்போ ஆசை தீர்ந்து போச்சா?”, என்றதில் இன்னுமாய் தலை குனிந்து கொண்டாள்.
“சொல்லு.”, என்றதற்கு இடவலமாய் தலையசைத்தாள் செங்காந்தள்.
“இன்னுமும் நீ உன் மனசில் நினைக்குறதை வெளிப்படையா பேச மாட்டேங்குற ஏன் காந்தா?”
“உங்க பக்கத்தில் பேச்சு வர மாட்டேங்குது. ரொம்ப சந்தோஷமா இருக்கு.
இத்தனை நாள் இருந்த பயமெல்லாம் போய் ரொம்ப பாதுகாப்பா இருக்குற மாதிரி தோணுது மாமா. அதேன்..”, என்றதில் அவளது தாடைப் பற்றி நிமிர்த்தியவன் அவளது நெற்றியில் அழுத்தமாய் இதழ் பதித்திருந்தான்.
அந்த முத்தம் பெண்ணவளுக்கு எத்தனை பெரிய நிகழ்வு என்பதை அந்நேரத்தில் அவன் நிச்சயமாய் உணர்ந்திருக்கப் போவதில்லை.
error: Content is protected !!