Skip to content
Post Views: 1,234
விழாக் காணுமே வானம் 11
வத்சலா ராகவன் – மது ஹனி
சூறாவளியில் தகர்ந்திடுமோ நட்பின் நங்கூரம்?
Advertisement
வார்த்தைகள்! அடுத்தவர்களை நோக்கி நாம் வெகு சாதரணமாக வீசும் வார்த்தைகள். அவை நாம் அலட்சியமாக கடலில் வீசும் ஒற்றை கல்லை போன்றது. ஆனால் அது உள்ளுக்குள் எத்தனை அடி ஆழம் வரை சென்று சேர்கிறது என்பதை கடல் மட்டுமே அறியும்.
“ஆமாம் எனக்கு விக்ரம்மை மட்டும்தான் பிடிக்கும்”
அந்த நேரத்தில் அது எப்படி வெளிவந்தது என்று சொன்னவளும் அறியவில்லை. அதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களும் அறியவில்லை. ஆனால் அது அங்கிருந்த பலர் மீதும் கொடுத்த தாக்கம் அதிகம்.
Advertisement
“ஆனால் விக்ரமை பொறுத்தவரை அது மிகப் பெரிய வெற்றி”
Advertisement
காலை உணவை முடித்துவிட்டு அந்த பீச் ஹவுசின் மாடி அறையின் பெரிய கண்ணாடி ஜன்னலிகளின் வழியே கடலை பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
அறையின் கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தான் உதவியாளன் பூபாலன்.
“எஸ் பாலா” திரும்பினான் விக்ரம்.
Advertisement
“எல்லாரும் ஸ்வாதி மேடமோட டென்னிஸ் அகேடமிலே இருக்காங்க சார்”
“எல்லாரும்னா அர்ஜுன் அண்ட் ஸ்வாதியா?”
“அவங்களோட சேர்த்து அர்விந்த் ஸார் வைஷாலி மேடம் எல்லாரும்”
“ஆஹான்” புருவங்கள் ஏறி இறங்க அழகாக சிரித்தான் அவன் “ஒகே நான் பார்த்துக்கறேன்”
நேற்றிலிருந்து அர்ஜுனின் எண்ணையும் முயல்கிறான் விக்ரம். அவனும் ஏற்பதாக இல்லை.
‘பயம் எல்லாருக்கும் இந்த விக்ரமை பார்த்தல் பயம்’ சிரித்துக் கொண்டான் அவன்.
ஆனாலும் நேரில் சென்று அவர்களை ஒரு முறை உரசி விட்டு வராவிட்டால் இவனுக்கு உறக்கம் பிடிக்காதே. அதுவும் முக்கியமாக ஸ்வாதியை
அதே நேரத்தில் அங்கே அகாடமியில் அவனை திகைப்புடன் பார்த்த ஸ்வாதிக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான் அர்ஜுன்.
“நேத்து எங்க அத்தையை கூட அழ வெச்சுத்தானே அனுப்பிச்சாங்க சில பேர்” என்றான் எங்கேயோ பார்த்துக் கொண்டே “அதுக்கு அவங்க சாரி கேட்க வேண்டாமா?”
பதில் சொல்ல வழியில்லை இவளிடத்தில். ஆனாலும் அவளது மனமெனும் பஞ்சுப் பொதியில் ஒரு சிறு தீப்பொறி மட்டும் விழுந்திருந்தது.
அவள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் எனும் எச்சரிக்கை மணி மட்டும் அர்ஜுனுக்குள் ஒலிக்க ஆரம்பித்திருந்தது.
அவனுக்கு இப்போது அதுதான் வேண்டும். அந்த பஞ்சுப் பொதி பற்றியெரிய வேண்டும். அதில் சில குழப்பங்கள் சரியாக வேண்டும்.
அன்று திருப்பதியில் இவள் முகம் வாடியதையும் அவனால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. நேற்று அத்தையின் கண்களில் இருந்து வந்த கண்ணீரையும் அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எல்லாவற்றுக்கும் காரணம் இவன்தானே!
காலை உணவை தனது கைப்பையிலிருந்து எடுக்க சென்ற அர்ஜுன் வெறும் கையோடு திரும்ப வந்திருக்க என்னவாயிற்று என்று அவனிடம் கேட்கக் கூட வைஷாலிக்கு தயக்கம்.
நேற்று பேசியபோது அரவிந்த் அர்ஜுனை ராஸ்கல் என்று சொன்னதை இவள் இன்னமும் மறந்து விடவில்லைதான். இப்போது அர்ஜுனிடம் இவள் இன்னமும் பேசுவது அரவிந்தனுக்குள்ளே இன்னமும் கோபத்தை அதிகரிக்கக் கூடும் என்று உள்ளுணர்வு எச்சரித்துக் கொண்டே இருந்தது வைஷாலியை.
“அத்தை என் பேக்லே பிரேக் ஃபாஸ்ட் வைக்க மறந்துட்டாங்களாம். எடுத்திட்டு வந்திட்டே இருக்கேன்னு போன் பண்ணாங்க. எங்க அத்தை எப்பவும் எல்லாத்திலேயும் கரெக்டா இருப்பாங்க. இதோ வந்திடுவாங்க” எல்லாருக்குமாக அவன் சொன்னாலும் அந்த “எங்க அத்தை” ஸ்வாதியை தான் குறிப்பார்த்துக் கொண்டிருந்தது.
அவர் மறக்கவில்லை. இவன் அதை வேண்டுமென்றே மறந்துவிட்டு வந்ததை அவன் மட்டுமே அறிவான். இல்லையென்றால் அவர் இங்கே வருவது எப்படியாம்?
“அவங்க வரட்டும். அதுக்குள்ளே நான் போயிட்டு கொஞ்சம் ரிஃப்ரெஷ் ஆகிட்டு வந்திடறேன்.” அங்கிருந்து விலகினாள் வைஷாலி. உள்ளே சென்றவள் சற்றே கவனமாக இருந்திருக்கலாம். இருந்திருக்கலாம் என்ன இருந்திருக்க வேண்டும்.
எல்லாரும் லவுஞ்சில் காத்திருக்க அவள் வெளியே வந்தவுடன் கை கால் கழுவிக் கொள்ள உள்ளே சென்றான் அர்ஜுன். சற்று நேரம் கழித்து திரும்பி வந்தவன் கையில் இருந்தது அது.
“வைஷாலி இது உங்க ரிங்கா?”
அவன் கையில் அவளது நிச்சியதார்த்த மோதிரத்தை பார்த்தவுடன் ஆடிப் போனாள் அவள். முகம் கை கால் கழுவும் போதும் மோதிரத்தை கழற்றி வைத்துவிட்டு அதன் பிறகு அணிந்துக் கொள்வது அவளது பழக்கம்.
‘இறைவா. இதை எப்படி மறந்தேன்?” திரும்பி அரவிந்தின் முகம் பார்க்கக் கூட துணிவற்றுப் போனது அவளுக்கு.
சத்தியமாய் கோபக் கனலாக மாறிப் போவான் எனத் தெரியும் அவளுக்கு. அதை விட, நான் அந்த மோதிரத்துக்கு கொடுக்கும் மரியாதை அவ்வளவுதான் என்றல்லவா நினைத்துக் கொள்வான். அப்படியெல்லாம் இல்லை என அவனுக்கு எப்படி புரியவைக்க யோசித்தபடியே
‘எஸ் எஸ் அர்ஜுன்.” அவசரமாக எழுந்தாள் அவள் “ஸாரி எப்படியோ மறந்திட்டேன்”
அந்த ஸாரி அரவிந்துக்கானதாகவே இருந்தது. அவள் அர்ஜூனின் அருகில் வருவதற்குள் அரவிந்த் அர்ஜுனின் அருகில் சென்றுவிட்டிருந்தான்.
அவன் மோதிரத்துக்காக கை நீட்ட, அதற்குள் அர்ஜுன் வைஷாலியின் முகம் பார்க்க
“மோதிரத்தை குடுங்க அர்ஜுன்” கர்ஜித்தான் அரவிந்த். அந்த கர்ஜனையில் ஸ்வாதி எழுந்து விட குலை நடுங்கிப் போனாள் வைஷாலி. மோதிரம் அரவிந்தின் கைக்கு இடம் மாறியிருக்க
“இப்போ எதுக்கு இப்படி கத்தறே?” கேட்டது ஸ்வாதி. இன்னும் சற்று நேரத்தில் அவள் கண் மண் தெரியாமல் கோபப் படப்போவது தெரியாமல்.
“நீ ….. வாயை …. மூடு … சரியா”
ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைவெளி விட்டு விட்டு சொன்னான் அரவிந்த். அந்த இடைவெளிக்குள் இருந்தது கோபமா ஆற்றாமையா வருத்தமா இல்லை எல்லாமுமா என்று பிரித்தறிய முடியவில்லை வைஷாலியால்.
என்ன பேசுவதென்று யோசிக்க கூட இயலாத நிலையில் நின்றிருந்தாள் அவள். அவர்கள் இருவருக்கும் இடையில் இருப்பது திரை என்றால் கிழித்து எறிந்து விடலாம். அவளே எழுப்பிய இரும்பு சுவர் ஒன்று பூத்காரமாக இருப்பது புரிந்து போனது அவளுக்கு.
அடுத்த நொடி அந்த மோதிரம் அவனது சட்டை பேக்கட்டுக்குள் போயிருந்தது. வைஷாலியை நோக்கி ஒரு பார்வை. ஒற்றை நொடிப் பார்வை. திரும்பிக் கொண்டான் அதோடு.
ஏதாவது சொல்லி, எல்லார் முன்னிலையில் என்றாலும் கூட அவளை திட்டியிருந்தானாகில், அவளது மனம் ஆறியே போயிருக்கும். அவனிடமிருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை. அங்கே நால்வரிடதிலும் அசாத்தியமான மௌனம். ஒரு தர்மசங்கடமான மௌனம்.
அந்த நேரத்தில் உள்ளே வந்தார் மகாலக்ஷ்மி.
“என்னடா என்னமோ விளையாட போறேன்னு வந்தே. இப்போ எல்லாரும் பொம்மை மாதிரி நிக்கறீங்க?” கொஞ்சமாக கலைந்தது இறுக்கம்.
“சரி சாப்பிடலாம் வாங்க.” பொதுவாக அழைத்தார் மகாலக்ஷ்மி. அங்கே ஏதோ ஒரு களேபரம் நடந்து முடிந்திருக்க வேண்டும் என்பதை மிக எளிதாக யூகிக்க முடிந்திருந்தது அவரால்.
“என்ன கொண்டு வந்திருக்கீங்க அத்தை?” ஸ்வாதியை பார்த்துக்கொண்டே கேட்டான் அர்ஜுன். “சரி நீங்க என்ன கொண்டு வந்திருந்தாலும் எனக்குப் பிடிக்கும். “எங்க அத்தை” கை மணம் யாருக்கு வரும்”
“எங்க அத்தை” இப்போதும் தைத்தது அவளை.
கையில் வைத்திருந்த மொபைலையும் ஹாட்பாக்ஸ்ஸையும் ‘ண்ணங்க்க்’ என டைனிங் டேபிளின் மீது வைத்து விட்டு ஓரத்தில் இருந்த சோபாவில் முகத்தைத் திருப்பி கொண்டு அமர்ந்தாள் ஸ்வாதி.
“நல்ல வேளை கண்ணாடி உடையலை” அவளது மொபைல் மற்றும் ஹாட்பாக்ஸ் மீது பார்வை செலுத்தியபடியே அர்ஜூன் சொல்லிக் கொண்டிருந்த போது பளிச் என மின்னியது மொபைல்.
ஏதோ மெசேஜ் நோடிபிகேஷன்.
அந்த நிமிட நேர பளிச்சிடலில் ஒளிர்ந்த ஸ்க்ரீன் சேவரை கண்ட அர்ஜூன் யோசனையாக அத்தையை நிமிர்ந்து பார்த்தான்.
“சாப்பிடவா அரவிந்த், நீயும் வாம்மா” என அத்தை வைஷாலி அரவிந்தை சாப்பிட அழைத்துக் கொண்டிருந்தார்.
ஸ்வாதி ஏதோ டிவியில் டிராமா போடுவதைப் போல சோபாவில் அமர்ந்து உர்ர் என்ற முகத்தோடு மகாலக்ஷ்மியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
எல்லோரையும் வருந்தி வருந்தி சாப்பிட அழைத்துக் கொண்டிருந்தவர் அவளை அழைக்கவே இல்லையே.
எப்படி அழைப்பார். முதல் நாள் அவள் அவரை அழ வைத்ததற்கு அவர் எப்படி அழைப்பார்.
ஹாட்பாக்சை திறந்து அர்ஜூனின் தட்டில் பரிமாறியபடியே மகாலக்ஷ்மி மீண்டும் ஒரு முறை அரவிந்தை அழைத்தார்.
“இல்லை எனக்குப் பசிக்கலை. நீங்க சாப்பிடுங்க” என்றான் அவர்கள் பக்கம் பார்க்காமலேயே
“டேய்… மணி எட்டரை ஆச்சுடா”
“எனக்கு.. ப..சி..க்.க..லை” சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்று விடும் வேகத்தில் காற்றாக நகர்ந்தான் அரவிந்தன். வேகமாக நடந்தவன் முட்டிக் கொண்டு நின்றான் அந்த எரிமலையின் மீது.
“பீ கேர்ஃபுல் மிஸ்டர் அரவிந்தன். அடி எதுவும் பட்டுடுச்சா என்ன” அவனை மேலும் கீழுமாக பார்த்தபடியே. நக்கலாக கேட்டான் விக்ரம்.
“விக்ரமோட மோதினீங்கன்னா என்ன ஆகும்னு ஸ்வாதியை கேட்டுப் பாருங்க” அவனது பார்வை இப்போது ஸ்வாதியை தொட்டது.
நேற்றிலிருந்து விக்ரம் அர்ஜூனை அழைத்துக் கொண்டிருக்கிறான். அர்ஜூனும் அழைப்பை ஏற்கவில்லை. ஆனால் இப்படி திடுமென வந்து நிற்பான் என கண்டிப்பாக அர்ஜுன் எதிர்பார்க்கவில்லை.
அவனை சில நொடிகள் விழி அகற்றாமல் பார்த்திருந்தான் அர்ஜுன். விக்ரமையும் ஒரு வருடம் கழித்து பார்க்கிறானே அவன்.
அதே நேரத்தில் “இவன் வரவை தனக்கு சாதகமாகிக் கொண்டு நினைத்ததை முடித்துக்கொள்ள ஏதேதோ கணக்குகள் போட்டபடியே மௌனமாக நின்றிருந்தான் அவன்..
அந்த லவுஞ்சில் ஒருவருக்கு ஒருவர் இடைவெளி விட்டு வட்ட வடிவில் நின்றிருக்க ஊன்றுகோலை ஊன்றிய படியே உள்ளே வந்தான் விக்ரம்.
ஊசி விழுந்தால் கூட கேட்கும் நிசப்தம் அங்கே.
“ஆஹா…” விக்ரமின் குரலே அங்கே எதிரொலித்தது.
“எல்லாம் என்னுடன் பழகிய முகங்கள், சண்டை போட்ட முகங்கள் கெஞ்சிய முகங்கள் கொஞ்சிய முகங்கள். ஆங்?” எல்லோரையும் அவனது பார்வை வருடித் திரும்பியது. “எப்படி எல்லாரையும் ஒரே இடத்தில பிடிச்சேன் பார்த்தீங்களா?’
எல்லாருடைய அழுத்தமான ஸ்வாசங்களின் சத்தம் மட்டும் அங்கே உலவிக் கொண்டிருந்தது…
“ஏசி இல்லையா இங்கே. இப்படி வேர்க்குதே? ஒரு வேளை என்னை பார்த்ததும் எல்லாருடைய மூச்சுக் காத்தும் பயங்கர சூடாயிடுச்சோ?” கேட்டுகொண்டே நடந்தவன் அங்கிருந்த ஒரு நாற்காலியில் சற்றே தடுக்கி தடுமாறி சமாளித்துக்கொள்ள அதற்குள் விழுந்தடித்துக் கொண்டு முன்னே வந்திருந்தான் அர்ஜுன்.
“அய்யோ.. பார்த்து விக்ரம். அடி எதுவும் பட்டுச்சா என்ன?” உண்மையிலேயே அவன் விழுந்து விடப் போகிறான் எனும் பதற்றம் இருக்கத்தான் செய்தது அர்ஜுனிடம்.
அந்த ஒரு செய்கை, அர்ஜுனின் அந்த ஒற்றை செய்கை ஸ்வாதியை கண் மண் தெரியாமல் தாக்கியிருந்தது. உடலும் மனமும் மொத்தமாக தளர்ந்து போன உணர்வு.
மகாலக்ஷ்மிக்கே இது ஒரு வகையில் ஆச்சரியம்தான். ஆனாலும் ஒன்றும் பேசவில்லை அவர்.
நிஜமாகவே நெகிழ்ந்து போயிருந்தான் விக்ரம் நீரின்றி தவித்த வேருக்கு மழை வெள்ளம் கிடைத்து விட்டதைப் போனறதொரு ஆனந்தம் அவனுக்கு. அவனது மனம் அவனது நடுங்கும் உடல் மொழியிலிருந்து புரிந்து போனது அர்ஜுனுக்கு.
“தாங்க் யூ மிஸ்டர் அர்ஜுன்” அவனது கரம் அர்ஜுனின் தோளை அணைத்துக் கொண்டது. அவனை தலை முதல் காலாக அளந்தான் விக்ரம் “உங்க அக்கறைக்கு ரொம்ப தேங்க்ஸ்.” அவனது குரலில் நிறையவே சந்தோஷம்.
சில நொடிகளில் தன்னை நிலைப் படுத்திக் கொண்டான்
“நான் கிட்டத்தட்ட ஜெயிச்சிட்டேன் போலிருக்கே” ஸ்வாதியின் முகத்தை பார்த்துக் கொண்டே கொக்கி போட்டான் அர்ஜுனிடத்தில்.
தனது கண்கள் பார்த்துக் கொண்டிருப்பதை சத்தியமாக நம்ப முடியவில்லை அவளால். தனக்குள்ளே மொத்தமாக தோற்றுப் போயிருந்தாள் ஸ்வாதி. அவளது உடலின் கொதிநிலை உச்சக்கட்டத்துக்கு சென்று நின்றிருந்தது.
அர்ஜுனிடமிருந்து விலகி நேராக ஸ்வாதியின் முன்னால் வந்து நின்றான் விக்ரம் “என்ன பார்க்குறே பேபி. இங்கே இருக்கிறவங்க எல்லாருக்கும் விக்ரமை மட்டும்தான் பிடிக்கும்”
அந்த வார்த்தையில் அர்ஜுனின் முகமே கொஞ்சம் மாற்றம் கொண்டது.
அவன் பேசி முடிக்கக் கூட இல்லை, பாய்ந்து வந்திருந்தான் அரவிந்த். அவன் சட்டையை கொத்தாக பிடித்தவன் “வாயை மூடிட்டு எங்கிருந்து வெளியே போடா” என்றான் காரமாக.
இதழோரம் கூடிய சிரிப்புடன் அவனை பார்த்தான் விக்ரம்
“என்ன சிரிப்பு? ஸ்வாதிக்கு கேட்க ஆளில்லைன்னு நினைச்சியா. நான் இருக்கேன்”
“பச் பச் பச்.. இந்த சட்டையை பிடிக்கறது அடிக்கறது வாடா போடான்னு பேசறது இது எல்லாம் நான் சின்ன வயசிலேயே விளையாடி முடிச்சிட்டேன் இப்போ போர் அடிச்சு போச்சு. இப்போ நான் உங்களை தொட்டேனா அடிச்சேனா ஆனா பதறியடிச்சு ஓடி வர வெச்சேன் பார்த்தீங்களா. அதுதான் விக்ரம். விளையாடினா அப்படி விளையாடணும்” என்றான் அவன் கண்களுக்குள் பார்த்து.
அவன் சட்டையை விட்டு மெதுவாய் விலகியது அரவிந்தின் கரம்.
“தட்ஸ் குட்” என்றான் விக்ரம் சட்டையை சரி செய்தபடியே.
“இப்போ எல்லாரையும் ஒரே இடத்தில பார்த்தாச்சு. ரொம்ப சந்தோஷம். ஆங் ஸ்வாதி…” என மறுபடியும் அவள் பக்கம் திரும்பினான்
“நான் எங்கே தங்கியிருக்கேன் தெரியுமா. இங்கே பீ..ச்.. ஹவ்சிலே.” என்றான் அவளைப் பார்த்து கண்சிமிட்டி.
“உனக்கு என்னை மீட் பண்ணனும்னு தோணிச்சுன்னா என்னை எப்போ வேணும்னாலும் அங்கே வந்து பார்க்கலாம். இன்னும் ஒரு வாரம் பத்து நாள் அங்கேதான் இருப்பேன். ஒகே பேபி. நான் எங்கே தங்கியிருக்கேன் மறுபடியும் சொல்லு?”
ஆத்திரத்தின் உச்சியில் காலை தரையில் ஓங்கி மிதித்து விட்டு திரும்பிக் கொண்டாள் அவள்.
வாய்விட்டு மலர்ந்து சிரித்தவன் மகாலஷ்மியை மட்டும் கவனமாக தவிர்த்து அங்கிருந்த எல்லார் மீதும் பார்வையை ஓட விட்ட விட்டு “ஸீ யூ ஆல் என பொதுவாக சொல்லிவிட்டு அர்ஜுனின் தோளை தட்டிவிட்டு அங்கிருந்து அகன்றான்.
அவன் சென்று ஒரு நிமிடம் யாரிடமும் அசைவில்லை. அர்ஜுன் மட்டும் அடுத்து வர இருக்கும் புயலை எதிர்ப்பார்த்து காத்திருக்க வைஷாலி சிலையாகிப் போய் அனைவரையும் பார்த்திருந்தாள்.
அவனது எதிர்ப்பார்ப்பு பொய்க்கவில்லை. உணர்ச்சியின் பிடியில் உடல் மொத்தமும் நடுங்கிக் கொண்டிருக்க அவன் பக்கம் திரும்பினாள் ஸ்வாதி. சில நொடிகள் அவன் முகத்தைப் பார்த்தவள் நேராக மகாலக்ஷ்மியிடம் வந்தாள்.
“அத்தை பசிக்குது நாம சாப்பிடலாமா?” அர்ஜுன் வேண்டுமென்றே கிளறினான்.
“யாரு யாருக்குடா அத்தை?” படீரென வெடித்து வெளி வந்தது ஸ்வாதியின் குரல்.
‘அத்தை அவ கத்த ஆரம்பிச்சிட்டா நிறுத்த மாட்டா. எனக்கு ரொம்ப பசிக்குது நீங்க வாங்க”
“நில்லுமா” கூவினாள் ஸ்வாதி. “நீ எனக்குதான் அம்மா. எனக்கு மட்டும்தான் அம்மா. அவனுக்கு அத்தை எல்லாம் இல்லை”
அந்த வார்த்தைகள் மகால்க்ஷ்மியின் மனதிற்குள் சந்தோஷ மழையை தோற்றுவித்தது.
“அம்மா” மறுபடி அழைத்தாள் மகள். ஒரு வருடத்திற்கு பிறகு மறுபடி அவரை அம்மாவென அழைத்தாள் அவரது மகள்.
மெல்லத் திரும்பி அவள் முகம் பார்த்தார் மகாலக்ஷ்மி. அவரது முழுப் பெயர் ஸ்ரீதேவி மகாலக்ஷ்மி.
“அம்மா நீ என்கூட வீட்டுக்கு வந்திடுமா”
“நீ எப்பவும் போல அர்ஜுனோட பேசு நான் வந்திடறேன்” என்றார் அவர் உறுதியாக.
எதுவும் பேசாமலே நின்ற அவளது கண்களில் இருந்து நீர் சுரந்தது
“மாட்டேன் நான் பேச மாட்டேன்” உச்சக் கட்ட ஆத்திரத்தில் கத்தினாள் அவள். பார்த்தே தானே அவன் அந்த விக்ரம்கிட்டே கொஞ்சினதையும் அவன் தோளிலே கைப் போட்டதையும் நீ பார்த்தே இல்லை” அவளது குரல் தேம்பலாக எழுந்தது.
ஆயிரம்தான் இங்கே இப்படித்தான் நடக்க வேண்டும் என அர்ஜுன் திட்டம் வகுதிருந்தாலும் அவளது கண்ணீரை தாங்கும் சக்தி என்றைக்கும் அர்ஜுனுக்கு இருந்தது இல்லை. இன்றைக்கும் இல்லை,
“ஸ்வாதி” அவன் ஏதோ சொல்ல வர
“நீ பேசாதே அர்ஜுன். இனிமே உனக்கும் எனக்கும் எல்லாம் முடிஞ்சு போச்சு. உன்னோட இனிமே விளையாட மாட்டேன். எல்லாத்தையும் பிரிச்சிடுவோம். எல்லாத்தையும். பீச் ஹவுசையும் சேர்த்து” அர்ஜுனின் இதயத்துக்குள் மடமடவென பாய்ந்தன பல குண்டுகள். மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டு நின்றிருந்தான் அவன்.
அந்த ஒற்றை காட்சியின் தாக்கம். இவன் விக்ரமை அணைத்துக் கொண்டதின் தாக்கம்
“ஸ்வாதி..’ மகாலக்ஷ்மி அதட்ட
“அம்மா’ வெடித்தாள் பெண் “நீ என்கூட வந்தா சரி. இல்லன்னா நான் என்ன வேணும்னாலும் செய்வேன். முக்கியமா நீ வேண்டாம்னு சொல்றது எல்லாம் செய்வேன்.
அதற்கு மேல் அங்கே நின்று அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் தைரியம் கண்டிப்பாக இல்லை வைஷாலிக்கு.
இவர்களை தான் கட்டுரை எழுத அழைத்ததுதான் மிகப் பெரிய தவறோ என்று ஒரு குற்ற உணர்வு அவளை வருத்திக் கொண்டிருக்க அடுத்த இரண்டு நிமிடங்களில் தனது பொருட்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்திருந்தாள். அவள் போகும் திசையையே பார்த்திருந்தான் அரவிந்தன்.
உடைந்து தரையில் அமர்ந்தாள் ஸ்வாதி கண்ணீர் வழிய முகத்தை கைகளுக்குள் புதைத்துக் கொண்டாள் அவள் அதற்கு மேல் தாள முடியாமல் அவள் அருகில் அமர்ந்தார் அவளது அன்னை. அவளை தனது மடியில் சாய்த்துக் கொண்டார்.
“அம்மா நீ என்கூட வந்திடு மா” அவரது கரம் அவளது தலையை வருடிக் கொண்டிருக்க மெல்ல நிமிர்ந்து அர்ஜுனின் முகம் பார்த்தார் மகாலக்ஷ்மி.
அந்த ஒற்றைப் பார்வையில் நெகிழ்ந்து விட்டிருந்தான் அர்ஜூன்.
பெற்ற மகளை அரவணைக்க மனம் துடித்த போதும் பரிவுடன் அர்ஜூனை அவர் பார்த்த ஒற்றைப் பார்வையில் நெகிழ்ந்து விட்டிருந்தான் தான்.
தங்களுக்கென தனி ஸ்மார்ட் போன் வைத்துக் கொண்ட நாளிலிருந்து போனை மாற்றினாலும் ஸ்க்ரீன் சேவராக அவர்கள் இருவரும் ஏழு வயதில் கோப்பையை பிடித்தபடியே சிரித்துக் கொண்டிருக்கும் படத்தை மட்டும் ஸ்வாதி ஒரு போதும் மாற்றியதே இல்லை.
ஆனால் அவளது ஸ்க்ரீன் சேவரில் இப்போது அவளது அன்னையும் அவனது அத்தையுமான ஸ்ரீதேவி மகாலக்ஷ்மி சிரித்துக் கொண்டிருந்தார்.
ஸ்க்ரீன் சேவரில் அம்மாவின் படத்தை வைத்து தினமும் பார்த்துக் கொண்டு எவ்வளவு வேதனை பட்டிருப்பாள் என்று நினைக்கவே அர்ஜூனுக்கு மிகவும் வலித்தது.
அத்தையை நோக்கி புன்னகைத்து சரியென தலையசைத்தான் அர்ஜூன்.
‘அம்மா ப்ளீஸ்” அவள் கெஞ்ச
“சரி வரேன்” என்றார் அவர் மெதுவாக.
“அவனை இங்கிருந்து போகச் சொல்லு முதலிலே. அவன் முகத்தை பார்க்கக் கூட எனக்கு பிடிக்கலை. அவனை எனக்கு பிடிக்கலை” உச்சக்கட்ட கோபத்தில் கத்தினாள் ஸ்வாதி.
“ஸ்வாதி” அம்மா அதட்ட அவரை கண்களால் சமாதான படுத்திவிட்டு தனது பொருட்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினான் அர்ஜுன். அவனையே பார்த்துக் கொண்டிருந்த அரவிந்தனின் பார்வையில் என்னென்ன இருந்தது என்பதை யோசிக்கக் கூடத் தோன்றவில்லை அர்ஜுனுக்கு.
ஆனாலும் புரிந்திருந்தது அரவிந்தனுக்கு. மகாலக்ஷ்மியை வீட்டுக்கு வரவைக்க இவன் ஏதேதோ திட்டங்கள் வகுத்து வைத்திருக்க அர்ஜுனின் விழிகளில் இருந்த சில சொட்டு கண்ணீரும் அவன் முக பாவமும் அவன் தெரிந்தே நடத்திய நாடகத்தை அரவிந்தனுக்கு உணர்த்தி இருந்தது.
ஸ்வாதியும் ஒரு நொடி நிமிர்ந்து பார்த்திருந்தால் இதை புரிந்துக் கொண்டிருப்பாளோ என்னவோ. செய்யவில்லையே அவள்.
இத்தனை நாட்கள் அவனது கண்களில் இருந்து கொஞ்சம் கண்ணீர் வந்து விடாதா என அரவிந்தன் பொருமிய நாட்கள் பல உண்டுதான். ஆனால் இன்று ஏனோ மனம் அவனது கண்ணீரை ரசிக்க மறுத்து நின்றது.
“அவனை எனக்கு பிடிக்கலை” அந்த வார்த்தைகள்தான் காரணமா? அவனுக்கே புரியவில்லை.
பறத்தலின் சூத்திரம் மறந்து போன பறவை போல் தடுமாறி தடுமாறி நடந்தான் அர்ஜுன் எப்படி காரை செலுத்திக் கொண்டு எப்படி வீட்டுக்கு வந்தான் என்பது கூட அவனுக்கு புரியவில்லை. அவனது துக்கம் புரிந்ததோ என்னவோ அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் கட்டுப் பட்டு அவனை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தது அவனது ஸ்கோடா.
“நீ பேசாதே அர்ஜுன். இனிமே உனக்கும் எனக்கும் எல்லாம் முடிஞ்சு போச்சு. உன்னோட இனிமே விளையாட மாட்டேன். எல்லாத்தையும் பிரிச்ச்சிடுவோம். எல்லாத்தையும். பீச் ஹவுசையும் சேர்த்து”
“அவனை இங்கிருந்து போகச் சொல்லு முதலிலே. அவன் முகத்தை பார்க்கக் கூட எனக்கு பிடிக்கலை. அவனை எனக்கு பிடிக்கலை”
வந்து இரண்டு மணி நேரம் கடந்த பின்பும் இந்த வார்தைகளையே யோசித்தபடி இறுகிப் போய் அமர்ந்திருந்தான் அர்ஜுன்.
error: Content is protected !!