Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கரை தாண்டா அலைகள்

அலை-15

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்

மு.வ உரை: மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர்.

அந்த இரவும் நிலவும் கரைந்ததென்னவோ அவர்கள் இருவரின் உரையாடல்களில் தான் போலும். ஒரு பெண் எப்போதுமே எதிர்பார்க்கும் தங்களுக்கான நேரம் என்பது நிறைய பேசப்பட்டு நிறைய கேட்கப்படும் பொழுதுகள் தான்.

அதிலும் செங்காந்தளுக்கு அதெல்லாம் பெரும் ஏக்கமாய் இருந்த ஒன்று.



Advertisement

கணவனின் நேர்ப் பார்வை ஒவ்வொரு நொடியும் உணர்த்தியது அவனுக்கு வேண்டியது உள்ளுக்குள் இருக்கும் உண்மையான அவள் தானே தவிர அவளது உடல் அல்ல.

எந்த ஒரு நொடியிலும் திசை மாறாத பேச்சும் தொடுதலும் அவளின் கரத்தை மென்மையாய் பற்றி அழுத்திக் கொடுப்பதும் அவளது தலை சாய்த்துக் கொள்வதும் அனைத்திற்கும் மேலாய் செங்காந்தள் தன் தயக்கம் ஒதுக்கி கணவனின் பின் தலைப் பற்றி தன் மடி சாய்த்த போது நிறைவான புன்னகையோடு அவன் படுத்துக் கொண்டது ஆயுளுக்கும் நெஞ்சில் இருக்கும் பெண்ணவளுக்கு.

“காந்தா..”

Advertisement

“ம்ம்?”

Advertisement

“என்னை உண்மையாவே மனசார ஏத்துக்க முடியுதா உன்னால?”

“நீங்க கட்டின தாலி எப்போ கழுத்தில் ஏறுச்சோ அப்போ இருந்தே உங்களை மனசாரதேன் மாமா ஏத்துகிட்டுருக்கேன்.”

“நீ ரொம்பவே நல்லவ காந்தா.. நான்தேன் உனக்கு பொருத்தமில்லாதவனா போயிட்டேன்.”

Advertisement

“மாமா நீங்க ஏன் என்னைத் துரத்தி விட்டுட்டு உங்களுக்குப் பிடிச்ச மாதிரி ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கலை?”

“என்ன பேசுற நீ! எப்படி நடந்துருந்தாலும் நடந்த கல்யாணம் பொய்னு ஆகிடாது காந்தா.

உன்னை என் பொறுப்புனு கடவுள் சாட்சியா தாலி கட்டின பிறவு நீ சொல்றதெல்லாம் என்னால யோசிக்க முடியலை.”

“ஒரு வேளை நீங்க நினைச்சுருந்தா எனக்குத் தெரியாம உங்க சந்தோசத்துக்காக யார் கூட..”, என்றவள் பேச்சை அப்படியே நிறுத்திக் கொள்ள ருத்ரேஸ்வரன் அவள் மடியில் இருந்து எழுந்தமர்ந்த வண்ணம் மீண்டுமாய் அவளது கரத்தை அழுந்தப் பற்றிக் கொண்டான்.

“நீ ஒரு வேளை உடம்பு சுகத்தைப் பத்தி பேசுறேனால் அது உனக்கும் பொருந்தும் தான காந்தா..”

“ஐயோ மாமா என்ன பேசுறீக..”, என்றவள் அசௌகரியமாய் தலையைக் குனிந்து கொண்டாள்.

“உண்மையைதேன் சொல்றேன். புருஷனா நான் நடந்துக்காத அப்போ நீ மட்டும் ஏன் என்னைத் தாண்டி எதையும் யோசிக்காம போன.”

“!!”

“கற்புனு ஒண்ணு இருக்குனால் அது ஆம்பளைக்கும் உண்டு.

ஆம்பளைங்களுக்கு அது பொருந்தாதுனு சொன்னா அப்படி ஒண்ணு இல்லவே இல்ல. இதுதான் என் படிப்பு எனக்கு சொல்லிக் கொடுத்தது.

ஆம்பளை பொம்பளை எல்லாருக்கும் உடல் தேவை இருக்கு. நீ உன் குடும்பத்துக்காக அதை பொருட்டா கூட மதிக்காத அப்போ அந்த பொண்டாட்டிக்கு இந்த விஷத்திலேயாவது நான் உண்மையா இருக்கலைனால் என்ன ஆம்பளை சொல்லு?”

“இப்படி யோசிக்குற நீங்க எப்படி எனக்குப் பொருத்தமில்லாம போவீக மாமா..”

“!!”

“அந்த வயசில் அவளை விட பத்து வயசு பெரியவுகளை கல்யாணம் பண்ற எந்தப் பொண்ணுக்கும் புருசனோட தேவைகளை பிரதானப் படுத்தணும்ங்கிறது தான் முதல் அறிவுரையாவே இருக்கும்.

ஆனால் நீங்க என்னை, நம்ம பாப்பாவை எப்படி பார்த்துக்குறீங்களோ அப்படிதேன் பார்த்துகிடுறீங்க.

அதுவும் கல்யாணம் ஆன புதுசில் எல்லாம் எனக்கு இந்த ரூமில் எப்பவுமே பயமே இருந்ததில்ல மாமா.

எனக்கு இப்படி ஒருத்தரை விட பொருத்தமா எப்பவும் கிடைச்சுருக்காது.”, என்றவளின் கன்னத்தை லேசாய் கிள்ளி ஆட்டிய படி புன்னகைத்தான்.

“ரொம்ப நேரம் ஆகிப் போச்சு நீ கொஞ்சமாவது தூங்கு.”

“நீங்க?”

“மனசு ரொம்ப லேசா இருக்கு டி..”, என்றதில் வெட்கப் புன்னகை செங்காந்தளிடத்தில்.

“டி சொல்றதுக்கு எல்லாம் வெட்கப் படுற நீ?”

“சுலபமா சொல்லிட்டீக. உங்க வாயால அப்படி கூப்பிட்டு கேட்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை மாமா.”, என்றவள் இருவருக்குமாய் தலையணையை சரி செய்து வைக்க மனைவியோடு படுத்துக் கொண்டவனுக்கு அவளின் ஏக்கம் உள்ளுக்குள் கனக்க வைத்தது.

படுத்தவுடன் இருந்த களைப்பிலும் நிம்மதியிலும் செங்காந்தள் அப்படியே உறங்கி விட்டிருந்தாள்.

இவ்வளவு பெரிய உரையாடலில் ஒரு நொடி கூட அவள் மனதின் காதலையும் அன்பையும் அவனிடம் வெளிப்படையாய் கூறவில்லை.

செங்காந்தள் என்பவளை அவள்போக்கில் ஏற்றுக் கொண்ட ஒருவனாய் அவன் காட்டும் அன்பு அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

அதையே அப்படியே தனக்குள் வாங்கிக் கொண்டு திருப்தியடைந்தாள்.

மறுநாள் காலையில் கண் விழிக்கவே செங்காந்தளுக்கு சிரமமாய் இருந்தாலும் கணவனின் அரவணைப்பு தந்த உற்சாகத்தில் எழுந்து குளித்து எப்போதும் போல் வேலையைக் கவனிக்கச் சென்றிருந்தாள்.

முந்தைய தினத்தின் கடுப்பில் ராணி சமையல் கட்டு பக்கமே வராமல் இருக்க பால் வாங்கி வருவதில் இருந்து அனைத்தும் அவளே பார்க்க வேண்டிதாய் போனது.

அவளுக்குப் பின் வெளியே வந்த காமாட்சி எப்போதும் போல் இரண்டாவது மருமகளை வசைப் பாடித் தீர்க்க செங்காந்தளோ சமைலறையை விட்டு வெளியே வரவேயில்லை.

ஆனால் ருத்ரேஸ்வரன் தாயின் புலம்பல்களைக் கவனித்தவனாய் அவரிடம் சென்று,

“ம்மா நம்ம தோப்பு வீட்டுல தங்கிருக்குறவுக மதியான சாப்பாட்டுக்கு கூப்பிட்டுருக்காக.”

“சரிய்யா போயிட்டு வா.”

“இல்ல நாங்க மூணு பேருமே போணும்.”, என்றதில் நிமிர்ந்து மகனைப் பார்த்தார் காமாட்சி.

“காந்தா காலை சாப்பாடு பண்ணிட்டானு நினைக்கேன். மதியத்துக்கு ராணி இருக்காளே. பார்த்துகிட சொல்லு.”

“சரி ருத்ரா. சந்தோசமா போயிட்டு வாங்க.”, என்றவரின் முகப்பொலிவு ருத்ரேஸ்வரனுக்கு சிறிதான புன்னகையைக் கொடுத்திருந்தது.

மாமியாரின் மூலம் விஷயமறிந்த செங்காந்தள் கணவனைத் தேடி பின்கட்டிற்குச் செல்ல எப்போதும் போல் அவளது துணியை உலர்த்திக் கொண்டிருந்தான்.

“மாமா..”

“சொல்லு காந்தா..”

“நாம வெளியே போறோமா?”

“ம்ம் ஆமா ரம்யாதேன் கூப்பிட்டா. அவ நாளைக்கே கிளம்பினாலும் கிளம்புவா போல. அதேன் அப்படியே வெளியே போய் வரலாம்னு சொன்னா..”

“ஓ! எப்போ கிளம்பணும்?”

“ஏன் என்னாச்சு?”

“ஒரு அரை மணி நேரம் கொடுங்க. மதியத்துக்கு செஞ்சு வைச்சுட்டு வந்துருவேன்.”

“ராணி வீட்டில தான இருக்கா?”

“!!”

“என்ன இருக்காளா இல்லையா?”

“இருக்கா மாமா..”

“அப்பறம் என்ன அவ பார்த்துப்பா. நீ பாப்பாவை கிளப்பி நீயும் ரெடியாகி வா பத்து நிமிசத்துல கிளம்பணும்.”, என்றவன் உள்ளே சென்றிருக்க ஒன்றும் கூற முடியாதவளாய் குழந்தையை தயார் செய்யச் சென்றாள்.

மூவருமாய் வண்டியில் அமர்ந்த நேரம் தீப்தியிடம் பெரும் துள்ளல் வெளிப்பட்டது.

அதைக் கவனித்தவனாய் ருத்ரேஸ்வரன்,

“என்ன, பாப்பாக்கு ஒரே குஷியா இருக்கு. என்ன விசயம்?”

“இப்போ எல்லாம் நாம மூணு பேரும் அடிக்கடி வண்டியில் போறோமே அது ஜாலியா இருக்கு பா..”, என்றவள் தலையைத் திருப்பி வண்டி ஓட்டிக் கொண்டிருந்த தந்தையைப் பார்த்துச் சிரித்தாள்.

“அப்போ இனி தினமும் போயிருவோம்.”

“ஐ ஜாலி ஜாலி.. ம்மா நீ தினமும் எங்க கூட என்னை ஸ்கூலுக்கு விட வர்றியா?”

“நான் எதுக்கு அப்பாதேன் கூட்டிட்டு போறாங்களே?”

“இல்ல அப்போ மட்டும்தேன் நாம மூணு பேரும் போக முடியும். இல்லைனால் இரண்டு பேரும் வேலையிருக்குனு சொல்லிருவீங்க..”

“..”

“தினமும் இரண்டு பேரோடயும்தேன் நான் ஸ்கூலுக்கு போகப் போறேன். நீ வரணும் மா..”, என்று மகள் அதட்டும் தோரணையில் கூற பெற்றவர்களுக்கு முகம் புன்னகையில் மலர்ந்திருந்தது.

ரம்யா கூறியிருந்த பக்கத்து கிராமத்தில் சென்று மனைவியையும் குழந்தையையும் இறக்கி விட்டவன் வண்டியிலேயே இருப்பதைக் கண்டு செங்காந்தள் கேள்வியாய் பார்க்க ருத்ரேஸ்வரன்,

“ரம்யா மதியானமா சாப்பிட டவுணுக்குதேன் கூப்பிட்டா.

நான்தேன் உன்னை இங்கே கூட்டிட்டு வந்தேன். வேலையை முடிச்சுட்டு டவுணுக்கு போக கூட்டிட்டு போறேன்.

அதுவரை நீ இங்கே அவுகளோட பேசிட்டு இரு காந்தா.”, என்ற நேரம் ரம்யா அவர்கள் அருகில் வந்திருக்க ஒன்றும் கூற முடியாமல் கணவனுக்குத் தலையசைத்து விடையளித்திருந்தாள்.

இவர்கள் அனைவரோடும் சற்றே பழகி விட்டதால் தீப்தி பொன்னியோடு அவர்கள் அருகில் ஓடிவிட ரம்யா எப்போதும் போல் செங்காந்தளின் தோளில் கைப்போட்டுக் கொண்டாள்.

“என்ன மேடம் உங்க புருஷனே எனக்கு போன் போட்டு உன்னை இங்கே கூட்டிட்டு வர்றதா சொன்னான். என்ன விஷயம்?”, என்றதற்கு செங்காந்தளின் அழகிய புன்னகை ஆயிரம் அர்த்தங்கள் கூறியது ரம்யாவிற்கு.

“பாரு டா.. எது எப்படியோ உன்னை இப்படி பார்க்கும் போதெல்லாம் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு குட்டிப் பொண்ணே..”

“வாழ்க்கையில சில நேரம் நாம தேடுறதெல்லாம் நமக்காக எதுவும் பண்ணவோ பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கவோ யாரும் இல்லை கா.

சும்மா கொஞ்ச நேரம் நாம பேசுறதை கேட்குறதுக்கு, நாம பேசுறதெல்லாம் கவனிக்குறதுக்கு ஒருத்தர். அம்புட்டுதேன்.

எனக்கு நீங்க அப்படிதேன்.
உங்ககிட்ட பேசினது மனசுக்கு ரொம்பவே நிம்மதியா இருந்திச்சு. ரொம்ப நன்றி.”

“பார்த்தியா தேங்க்ஸ் சொல்லி என்னைப் பிரிக்க பார்க்குற. என் நண்பனோட பொண்டாட்டி நீ உனக்காக இது கூட பண்ணலைனால் எப்படி?”

“..”

“உண்மையை சொல்லணும்னால் உன்னை மாதிரி யாரையாவது நானும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாம காதலிக்கணும்னு ஆசையா இருக்கு செங்கா.”

“என்னை மாதிரியா எனக்கு காதலுக்கு ஒழுங்கா அர்த்தம் கூட தெரியாது கா.”

“உனக்கே காதலிக்க தெரியாதுனு சொன்னா இந்த உலகத்தில் யாருக்குமே காதல் எப்படியிருக்கும்னு தெரியாது.

அவனுக்காக காத்திருக்குறதை நீ நிறுத்தலை. அவனுக்காக கடவுள் கிட்ட வேண்டிக்குதை நிறுத்தலை.

அவனை விட்டுக் கொடுக்க எந்த நிலைமையிலேயும் நீ தயாரா இல்ல செங்கா. இதெல்லாம் தான் காதல். ரொம்ப ரொம்ப அழகான காதல்.”

“…”

“இன்னொன்னு சொல்லுவாங்க நமக்கு ரொம்ப பிடிச்சது மேல நாம காட்டுற பிடிவாதமே அந்த பொருளை ஒரு நாள் நம்மகிட்ட கொண்டு வந்து சேர்க்கும். உனக்கும் உன் மாமா ஒரு நாள் மொத்தமா கிடைப்பான் பாரு.”, என்றவள் உண்மையாகவே உணர்ந்து கூறினாள்.

“நீங்க சொல்றதெல்லாம் என் விஷயத்தில் பொருந்துமானு கூட எனக்குத் தெரியலை.

ஆனால் நீங்க பேசினதை யோசிச்சு பார்த்தப்போ ஒண்ணு தோணுச்சு.
இத்தனை வருசமா இம்புட்டு பிரச்சனைகளையும் பேச்சுகளையும் சமாளிக்க எனக்கு இருந்த தைரியம் என் மாமா இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ சுத்தமா இல்லக்கா.

அதுதேன் நான் இந்த வாழ்க்கையை இறுகப் பிடிச்சுருக்க காரணமோனு தோணுச்சு.”

“…”

“இந்த வாழ்க்கைக்கு எனக்கு இந்த ஜென்மத்தில் மொத்த சொந்தகாரன் என் மாமா மட்டும்தேன்.”, என்றவளின் கன்னம் கிள்ளி அணைத்துக் கொண்ட ரம்யா மறு கையில் வைத்திருந்த தன் கைப்பேசியின் ரெக்கார்டரை அணைத்து வைத்திருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!