Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

42. Lavanya Rajesh - நெஞ்சமெல்லாம் நிலவாக நீ

நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 3

போனில் அலாரம் அடிக்க கண் விழித்தாள் மதுரா.

போனை எடுத்துப் பார்த்தால், அது அவளின் போன் இல்லை!

அலாரம் அடித்தது அவளின் தங்கை இலக்கியாவின் போனில்.

“லக்கி.. ஏய்.. பாரு உன் அலாரம் அடிக்குது. நீ எதுக்கு இந்த நேரத்துக்கு அலாரம் வச்சுருக்க?”



Advertisement

“ம்ம்.” என்று புரண்டு படுத்த இலக்கியா, வெடுக்கென்று எழுந்து அமர்ந்தாள்.

“ஏய்.. ஏய்.. மெல்ல.. மெல்ல.. ஏண்டி இவ்வளவு வேகம்?

காலையிலேயே இப்படி பதறி அடிச்சுக்கிட்டு எல்லாம் எழுந்துக்க கூடாது!

Advertisement

ஆமா… இப்பவே எழுந்து நீ என்ன செய்ய போறே?”

Advertisement

“அக்கா.. இன்னிக்கு எங்க காலேஜ்ல பொங்கல் செலிப்ரேசன் பண்ணப் போறோம்!

எல்லோரும் இன்னிக்கு சாரி(Saree) கட்டிக்கிட்டு போகப்போறோம்.

அதுக்கு எனக்கு ரொம்ப டைம் எடுக்கும். அதான் சீக்கிரம் எழுந்துக்க அலாரம் வச்சேன்” என்று சொல்லியபடி பாத்ரூம் நோக்கி சென்றாள் இலக்கியா.

Advertisement

அவள் வெளியே வந்ததும்,

“லக்கிம்மா..இன்னும் பால் வரல. நான் வேண்டுமின்னா பழைய பாலில் டீ போட்டுத் தரட்டுமா?”

“இல்ல வேணாம். புதுப் பால் வந்தவுடனே நான் காபியே குடிச்சுக்கிறேன்!”

“அதானே பார்த்தேன். காப்பிய விட மாட்டியே.. இதெல்லாம் உன் கோச் கண்டிக்க மாட்டாரா?”

“ம்ம். திட்டுவார் தான். ஆனா நான் கண்டுக்க மாட்டேன்” என்று சொல்லியபடி அவள் கப்போர்டில் துணிகளை எடுத்துக் கொண்டிருந்தாள்.

“புடவை தான் கட்ட போறேன்னா, என் கப்போர்டில் இருந்து உனக்குப் பிடிச்சத எடுத்துக்கோ லக்கி”

“அக்கா.. நான் பொங்கல் செலிப்ரேசனுக்கு போறேன்.

ஃபேன்சி ட்ரெஸ் காம்பெட்டிசனுக்கு அவ்வையார் வேஷம் போட போகல, உன்னோட சாரி கலெக்சனில் இருந்து கட்டிட்டு போக!”

“அடி..” என்று செல்லமாக கையை ஓங்கியவள்,

“அவ்வளவு மோசமாவா இருக்கு என்னோட புடவை எல்லாம்?”

ரொம்ப மோசம்னு சொல்ல முடியாது..

ஆனா கொஞ்சம் மோசம் தான்! நீயெல்லாம் எப்படி தான் ரேஷ்மா மேம் க்கு போய் பி ஏ வா இருக்கியோ?

அவ்வளவு ஸ்டைலிஷான ஆள் அவங்க! அவங்க பிஏ நீ.

நீ இப்படி..  உன் சாரி கலெக்சன் கூட பரவாயில்லக்கா!

ஆனா நீ அதை கட்டிக்கிற ஸ்டைல் இருக்கே!

அது தான் பெரிய ஆண்ட்டிங்க மாதிரி இருக்கு.

 இதில பவரே இல்லாம ஒரு கண்ணாடி வேற! அப்புறம் இந்த மூக்குத்தி வேற!

போக்கா.. நீ சரியான பூமர் அக்கா.

கேட்டா எல்லாம் ஒரு காரணமா தான்னு நீ ஒரு லாஜிக் சொல்லுவ!” என்று சலித்துக் கொண்ட படி,

இலக்கியா தன் தோழிகளோடு சேர்ந்து ஒரே விதமாக ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய விலை மலிவான பட்டுப்புடவை!

அதே சமயம் பார்ப்பதற்கு அசல் காஞ்சிபுரம் பட்டுப்புடவை மாதிரியே இருக்கும் புடவை ஒன்றையும் அதுக்கேற்ற ஜாக்கெட்டையும் எடுத்து வைத்தாள்.

“இது எப்படி தைச்ச? காசு ஏது உனக்கு? என்கிட்ட கூட கேக்கலையே நீ?”

“என் ஃபிரண்டோட அம்மா டெய்லர்.

 அவங்க கிட்டவே நாங்க எல்லோரும் ஜாக்கெட் அளவு கொடுத்து, நல்லா டிசைனா ஒரே மாதிரி ஸ்டிட்ச் பண்ண சொல்லிட்டோம்.

அப்புறம் அவங்களே எல்லோருடைய சாரியையும், ப்ரீப்ளீட் பண்ணியும் கொடுத்துட்டாங்க”.

“அது சரி.. இதுக்கு காசு?”

“நான் தான் பார்ட் டைமா ஸ்போர்ட்ஸ் அகேடமியில டிரைனரா வேலை பார்க்குறேனே! அதுல கிடைச்ச சாலரியில வாங்கிட்டேன்”.

“சாலரி வாங்கிட்டியா? என் கிட்ட சொல்லவே இல்ல?”

“அக்கா அது ஒரு சின்ன அமவுண்ட்க்கா.. அதான் சொல்லல” என்றவளை கொஞ்சம் அதிர்ச்சியுடன் பார்த்தாள் மதுரா.

தான் முதன் முதலில் சம்பளம் வாங்கிய அன்று, அந்த கவரை அப்பாவிடம் கொடுத்து காலில் விழுந்து வணங்கியது நினைவு வந்தது!

கூடவே அவர் அதை அம்மாவின் படத்தின் முன்னும், அப்பாயியின் படத்தின் முன்பும் வைத்து எடுத்ததும்!

ஓ. அப்ப.. உண்மையிலேயே நான் பூமர் அக்கா தானா? என்று யோசித்தபடி,

“சரி.. பார்த்து செலவு பண்ணு. சாரி தான் வேண்டாம்னு சொல்லிட்ட..

இந்தா.. இந்த ஜூவல்ஸயாச்சும் போட்டுக்கோ.

இந்தா இந்த ஸ்டட் பட்டுப்படவைக்கு நல்லா சூட் ஆகும்!”

“வேண்டாம்க்கா.. நான் ஏற்கனவே இமிடேசன் ஜூவல்செட் வாங்கிட்டேன்.

ஃபிரண்ட்ஸ் எல்லாம் ஒரே மாதிரி போட்டுக்க போறோம்”

“ஏய்.. இது டயமன்ட் ஸ்டட். ப்ளு ஜாகர் தோடு. இதுக்கு நம்ம வீட்டுல எவ்வளவு சண்டை வந்துச்சு தெரியுமா!”

“தெரியும். அப்பாயி போட்டுருந்தது தானே! எனக்கு வேண்டாம்!”

“அப்பாயி தோடு தான். ஆனா இப்பவும் நாம போடுற மாதிரி டிசைன் தாண்டி இது!”

“உன் அப்பாயி உனக்கு கொடுத்தது, அதனால அதை ஆசைப் பேத்தி நீயே வச்சுக்க எனக்கு வேண்டாம்.

 என்னை தூக்க கூட தூக்காதாம் அந்த கிழவி.. அதோட தோடு ஒண்ணும் எனக்கு வேண்டாம்!

ஆமா.. இப்ப எதுக்கு இத எல்லாம் கடைப் பரப்பி வச்சுக்கிட்டு இருக்க?

மொதல்ல எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டு போய், நீ இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு.

நான் கிளம்பிட்டு எழுப்புறேன்.

ராத்திரி எல்லாம் இனியா அக்கா கிட்ட போன்ல பேசிட்டு இருந்த போல?”

இனியா பெயரைக் கேட்டவுடன், மதுராவின் முகம் ஏகத்துக்கும் மலர்ந்தது!

“ஆமா..” என்றாள்.

“என்ன சொன்னான் குட்டிப்பையன் பிரணவ்.. பெரியம்மா கிட்ட?”

“ம்ம். பெரியம்மா ஐ லவ் யூன்னு சொன்னான்” என்றாள் முகம் முழுக்க பூரிப்பாக!

“ம்ம். அம்மா ஆகாமலே பெரியம்மா ஆகிட்ட.. டைரக்ட்டா டபுள்  பிரமோசன் தான் உனக்கு!

ம்ம். அக்கா.. உனக்கு கொஞ்சம் கூட ஆசை இல்லையா அக்கா?”

“என்ன ஆசை?”

“உனக்கும் இனியா அக்கா மாதிரி கல்யாணம் பண்ணிக்கணும், குழந்தை பெத்துக்கணும்னு எல்லாம்!”

“ஆஹா வந்துட்டா பெரிய மனுசி கேள்வி கேக்க?

 போடி.. போ.. கெய்சர் போட்டு எவ்வளவு நேரமாச்சு போ.. போ..

 குளிச்சு ரெடியாகு..” என்று சொல்லிவிட்டு, போர்வை எடுத்து போர்த்திக் கொண்டு விட்டாள் மதுரா!

“உடனே எஸ்கேப் ஆகிடுவியே..

ஆனா ஒண்ணு.. உன் பருப்பு இனியா அக்கா கிட்ட வேணுமின்னா வேகலாம்.

இந்த இலக்கியா கிட்ட வேகாது.

 நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் நான் பண்ணிப்பேன்.

இல்லைனா நாம ரெண்டு பேருமே அப்படியே லைஃப் லாங் இருந்துட்டு போக வேண்டியது தான்!” என்று உறுதியாக சொல்லி விட்டு குளிக்க சென்றாள் இலக்கியா!

என்ன இது இப்படி சொல்லிட்டு போறா?

இவ இனியா போல இல்லை தான்!

இனியா பெயருக்கு ஏற்றார் போல இனியவள்!

மென்மையாகவே பேசுவாள்.

மதுரா போல அல்ல!

மதுராவிற்கு பெயரில் தான் மதுரம் இருக்கும்! பேச்சில் இருக்காது!

அவள் அப்பாயி மதுராம்பாள் போல!

அவர் பெயரை தான் மதுராவுக்கு வைத்தார்கள்.

அவர்களின் அம்மா வானதி. வானதி என்பதற்கு பதில் வாசுகி என்றே வைத்திருக்கலாம்!

அப்படி ஒரு கணவர் சொல் தட்டாத வாசுகி வகையறா!

அப்பா அருள்மொழி!

நல்ல பெயர் பொருத்தம் தான்!

மாப்பிள்ளை பெயரைக் கேட்டவுடனே கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னாராம் அவர் அம்மா வானதி!

திருமணத்திற்கு முன்பு நிறைய கதைப் புத்தகம் படிப்பார்.

 தமிழில் சின்ன சின்ன கவிதைகள் கூட எழுத வரும்.

ஆனால் அவை எல்லாம் கோல நோட்டைத் தாண்டி வெளியே வந்ததில்லை!

கல்யாணம் ஆகி மதுராம்பாள் மகனுக்கு வாழ்க்கைப்பட்டு பெரிய விவசாய கூட்டுக் குடும்பத்திற்கு வந்தவுடன்  கவிதை யாவது ஒன்றாவது!

யார் இருக்கிறார்கள்  ரசிக்க?

அம்மாவிற்கு தெரியாமல் அப்பா வாங்கிக் கொடுக்கும் கதைப் புத்தகங்கள் இருந்தாலும் படிக்க நேரம் இருக்காது.

மாதவிடாய் காலங்களில் அவரை அடுப்படிக்குள் விட மாட்டார்கள்!

அப்போது படித்து ஆசையைத் தீர்த்துக் கொள்வார் அவர்களின் அன்னை வானதி!

வேலையே டங்குவார் கிழியும் போது எங்கே கவிதை? கதை வாசிப்பு?

ஆனால் அவர் ஆசைக்கு தன் பெண் குழந்தைகளுக்கு தமிழ் மதுரா, தமிழ் இனியா, தமிழ் இலக்கியா என்றும் பெயர் வைத்தார்!

ஆனால் அந்த ஆசை கூட கொஞ்சம் அடிவாங்கியது.

மதுரா அவரின் மாமியாரின் பெயர்!

அவர் அப்படி அந்த பெயர் சொல்லி அழைக்க முடியாததால், அருள்மொழியின் சின்ன தம்பி அவளுக்கு ஸ்வீட்டி என்று செல்ல பெயர் வைத்தான்!

“நீங்க தமிழில் வச்சுருக்கீங்க.. நான் இங்கிலிஷ்ல வச்சுருக்கேன்” என்று!

அதன் பின் இனியா மட்டுமே இனியா என்று அழைக்கப்பட்டாள்.

மூன்றாவதும் பெண் குழந்தை என்று அப்பாயி மதுராம்பாளிற்கு வருத்தம்.

அதனால் அவளை தூக்க கூட  மாட்டார்!

“நீங்க போங்கம்மா.. இவ தான் என்னோட அதிர்ஷ்ட தேவதை!

இவ பொறந்த வருஷம் தான் நம்ம காட்டுல நல்ல விளைச்சல்.

வாழை நல்ல ரேட்டுக்கு போனுச்சு” என்று முதன் முறையாக தாயை எதிர்த்து பேசி, இலக்கியாவை லக்கி என்றே அழைத்தார் அவர்!

குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்ததும் அம்மாவின் கோல நோட்டுக் கவிதைகள் கண்ணில் பட்டன!

மதுரா, “எனக்கு கவிதைகள் பிடிக்காது. கவிதைக்கு பொய் அழகு.

எனக்கு பொய்யும் பிடிக்காது கவிதையும் பிடிக்காது” என்றே சொல்லி விட்டாள்.

ஆனால், அப்போது கூட ஆறாவது படித்துக் கொண்டிருந்த இனியா தான் அதை சிலாகித்து பாராட்டினாள்.

அவளுக்கு யாரையுமே கடிந்து கொள்ள வராது!

அந்த இனிமையான குணம் பிடித்துப் போய் தான், வெறும் பிஎஸ்சி கம்யூட்டர் சைன்ஸ் படித்து விட்டே,

தன் திறமையால் வளாக நேர்க்காணலில் வெற்றிப் பெற்று,

பெரிய நிறுவனத்தில் வேலைப் பார்த்த போது, அவளின் டீம் மேனேஜர் வீட்டில் பெண் கேட்டு வந்தார்கள்.

இனியா மறுத்தாள்.

அக்காவிற்கு ஆகாமல் தனக்கு முதலில் வேண்டாம் என்று அடம்பிடித்தாள்.

ஆனால், அவளின் மென்மையான குணம், மதுராவின் பிடிவாதத்திற்கு முன்பு செல்லுபடி ஆகவில்லை!

வேறு வழியில்லாமல் சம்மதித்தாள்!

இதோ ஆகிற்று. மூன்று வருடம்! கையில் ஒரு ஆண் குழந்தை!

நிறைவான வாழ்க்கை!

மதுராவிற்கும் ஒரு தங்கையைக் கரை சேர்த்த நிம்மதி!

அப்பா.. நான் உனக்கு கொடுத்த வாக்கில் ஒண்ணை நிறைவேத்திட்டேன். இன்னும் லக்கியையும் கரை சேர்த்துட்டா.. போதும் எனக்கு! என்று நினைத்துக் கொண்டாள்.

ஆனால் இப்போது தான் தன் கையைப் பிடித்து நடக்க ஆரம்பித்த மாதிரி இருக்கு..

இந்த லக்கி என்ன பேச்சு பேசுது..

நான் பூமராம்.. அவ ஜென் ஸி யாம்.

அப்பப்பா.. நீ இல்லாம போயிட்டப்பா.. இதெல்லாம் பார்க்காம.

அது மட்டுமா , நேத்து உன் பேரன் என்னைப் பார்த்து ஐ லவ் யூன்னு சொல்றான். எப்படி இருந்துச்சு தெரியுமா?

என்று அப்பாவின் நினைவில் மூழ்கியவளுக்கு, அவள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது அவர் கேட்ட அந்த கேள்வி நினைவில் வந்தது!

“யாரையாச்சும் மனசில் நினைக்கிறியா பாப்பா.. அப்படி இருந்தா சொல்லுடா..

அப்பா உன் ஆசையை நிறைவேத்தி வைக்கிறேன்!

ஏன்னா.. நீ அப்பாவோட விவரமானவ. தெளிவானவ.

உனக்கு என்னை விட ஆட்களை எடை போட தெரியுது. அப்பனுக்கு புத்தி சொன்ன அந்த சுப்பையன் போலடா.. நீ..

நீ மட்டும் தெளிவா இல்லாம இருந்திருந்தா.. நான் உங்க மூணு பேத்தோட தெருவுல தான் நின்னுருக்கணும்!

அதனால அப்பாவுக்கு நம்பிக்கை இருக்குடா.. உன் தேர்வு சரியா தான் இருக்கும்! சொல்லுடா” என்றார் ஒரு முறை!

“லூஸாப்பா.. நீ.. அப்பா மாதிரி பேசு..

என்னை எல்லாம் எவன் திரும்பிப் பார்ப்பான்?

அப்படியே திரும்பி பார்த்து பின்னால் வந்தான்னே வச்சுக்க,

நான் அவன் கிட்ட என்ன என்று ஒரு வார்த்தை கேட்டாலே, என் குரல் மாடுலேசனில் பயந்து ஓடியே போய்டுவான்..

அதனால.. இத்தோட இந்த பேச்சை விடுறியா” என்று சிரித்தபடி சொன்னாள் அவள்!

ஆனால் அன்றும் கூட  அவள் மனதின் மூலையில் அவன் இல்லாமல் இல்லை!

இருந்தான் தான்.

இன்றைக்கும் இப்போது இந்த இருபத்து ஒன்பதைத் தொடப் போகும் வயதிலும் இருக்கிறான்.

ஆனால் இந்நேரம் அவனுக்கு எல்லாம் கல்யாணம் ஆகி குழந்தை குட்டின்னு அமெரிக்காவிலோ இல்லை கனடாவிலோ செட்டில் ஆகியிருப்பான்!

இப்படி இருக்க, நான் போய் கல்யாணம் பண்ணிக் கொள்வதா?

இனி என் வாழ்வில் கல்யாணமா எனக்கா? நெவர்.. என்று நினைத்தவள் டக்கென்று போர்வையை விலக்கினாள்.

அவள் பார்வை, எதிரில் இருந்த கண்ணாடி ஷோ  கேஸில் இருந்த அந்த பழைய போட்டோவின் மேல் சென்றது!

அது சகோதரிகள் மூவரும் தான்!

மஞ்சள் நிற மிடி ஒன்றைப் போட்டுக் கொண்டு தலைக்கு குளித்து விட்டு தலையில் துண்டு கட்டிக் கொண்டு பனிரெண்டு வயது மதுரா!

மதுராவின் இடுப்பில் இலக்கியா! அருகில் கவுன் அணிந்த படி இனியா. அவிழ்ந்து விட்டிருந்த அவள் கவுனின் ஜிப்பை போட்டு விட்டபடி மதுரா.

இது ஒரு இன்ஸ்டன்ட் போட்டோ எடுக்கும் கேமிராவால் எடுக்கப்பட்டது.

ஒரே ஒரு காப்பி மட்டுமே உண்டு.

அந்த கால கேண்டிட் போட்டோ  வகையை சேர்ந்தது.

அந்த போட்டோ இனியா எடுக்க சொல்லிக் கேட்டு, மதுரா கவனியாத போது எடுத்தது!

மதுராவுக்கு இந்த போட்டோவும் ஒரு பொக்கிஷம். போட்டோ எடுத்தவனின் நினைவுகளும் பொக்கிஷம்!

அவன்..

அவனது பெயர்..

நண்பர்கள் அவனுக்கு வைத்த அந்த பட்டப் பெயர் – செல்லப் பெயர்.

இன்றும் மதுராவும் உள்ளுக்குள் அவனை அழைக்கும் பெயர்!

“ஊட்டி”

ஸ்வீட்டியின் ஊட்டி, இப்போது எங்கு இருக்கிறான்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!