ஜீவ தாளம் : 1
ஜீவதாளத்தின் லயமிவளோ
(ஆனந்த ஜோதி)
அத்தியாயம் : 1
நகரத்தின் மிக முக்கியமான பகுதியில் பிரம்மாண்டமாக அமைந்திருந்த அந்தத் திருமண மண்டபம் விருந்தினர்களால் நிறைந்திருந்தது! அங்கு வருகைத் தரும் அனைவரையும் வரவேற்று, திருமண நிகழ்வுகளில் பரபரப்பாக மூழ்கி இருந்தார் பெண்ணின் அப்பா அன்புச்செல்வன்.
Advertisement
அவரது மனைவி அபிராமி, அலங்கார நிலையத்துப் பெண்ணின் கைவண்ணத்தால் பளபளவென ஜொலித்துக் கொண்டிருக்கும் மகளைப் பார்த்து நெற்றி வழித்துச் சொடுக்கினாள்! பின்னர், அங்கேயும் இங்கேயுமாக ஓடிக்கொண்டிருக்கும் இளைய மகன் ஆதர்ஷை அழைத்து அக்காவின் அருகில் அமர்ந்து கொள்ளுமாறு பணித்து, அங்கு வந்திருக்கும் நபர்களிடம் பேசியவாறு இருந்தாள்.
காலை நேரம் பத்து மணியிலிருந்து பதினொரு மணிக்குள் திருமண நிச்சயம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாப்பிள்ளை வீட்டார் வருவதற்கு முன்பே அனைத்தும் தயாராக இருக்க வேண்டும் என்ற முனைப்பில் இருவரும் ஈடுபட்டிருந்தார்கள்.
அவர்களின் எண்ணத்தைப் பொய்ப்பிக்காமல், சரியாக மாப்பிள்ளை வீட்டார் வந்து சேர்ந்தனர்! ஆலத்தி கரைத்து அனைவரையும் அழைத்துச் சென்று உள்ளே அமர வைத்தனர்.
Advertisement
மாப்பிள்ளை ஹிரித்திக், அருகில் அமர்ந்திருக்கும் தனது நண்பர்களுடன் உரையாடியபடி, பெண்ணின் அறைப் பக்கமாக அவ்வப்போது நோட்டமிட்டான். அதனைக் கண்டுகொண்ட நண்பர்கள் அவனைக் கேலி செய்ய, “என்னடா இது? வெளிநாட்டுல இருந்தாலும் கூட கிராமத்து முறை மாதிரி பொண்ணை உள்ளேயே அடைச்சு வச்சுருக்காங்க!” என்று சலித்தான்.
Advertisement
அருகில் இருந்த நண்பர்கள் இருவரும் சிரிக்க, “என் நிலைமை உங்களுக்குச் சிரிப்பா தெரியுதாடா? உங்களுக்கும் கல்யாணம் ஆகும் இல்லையா! அப்போ வச்சுக்கிறேன்!” என்று மிரட்டினான்.
“அதெல்லாம் ஒண்ணும் இல்லடா. ஆமாம்… உனக்குத்தான் அந்தப் பொண்ணைப் பார்த்தாலே பிடிக்காதே! பிறகு, எப்படி இந்த அளவுக்குப் ஃபீல் பண்ற? நடிப்பா?” என்று கேட்க, “பிடிக்காதுன்னு எதுவும் இல்ல. நல்ல அழகுடன், கைநிறையப் பணத்தோடு வருபவளா பார்த்துதான் எங்க அப்பா பேசி முடிச்சிருக்கார். கரும்பு தின்னக் கசக்குமா?” என்றான் அவன்.
“கசக்காதுதான்!” என்று மற்ற நண்பர்கள் சிரிக்க, “அவளை எனக்குப் பிடிக்காதுன்னு நான் எப்பவுமே சொல்லலை … அவள் என்னைப் பார்த்தா ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டா, திரும்பிக்கூடப் பார்க்க மாட்டா, ஏதாவது கேட்டாலும் கட் அண்ட் ரைட்டா பேசுவா! முகத்தையும் கடுகடுன்னு வச்சுருப்பா. அதான் உங்ககிட்ட அப்படிச் சொன்னேன். நீங்களே சொல்லுங்களேன்டா… இத்தனை பெர்சனாலிட்டியான என்னைப் பார்த்து முகத்தைத் திருப்பினா கோபம் வருமா? வராதா?”
Advertisement
அவர்கள் இருவரும் “ஆமாம்” என்க, “அதுக்குத் தான் சைட் அடிச்சுச் சும்மா நேரத்தை வீணடிப்பதை விட, நேரடியா கல்யாணம் பண்ணிடலாம்னு நமக்கு வேண்டப்பட்ட நபர் மூலம் சொல்லிச் சம்பந்தம் கேட்க வச்சேன். இப்ப பாரு, நான் ஆசைப்பட்ட படியே எல்லாம் நடக்கப் போகுது!” என்று மிதப்பாகக் கூறினான்.
நண்பர்கள் இருவரும் நகைக்க, “அவளும் என்னைப் போட்டோவில் பார்த்ததும் சரின்னு சொல்லி, பெண் பார்க்க வந்தப்பவும் ரொம்பவும் சாதாரணமா பேசினா. அவளோட எளிமை எனக்குப் பிடிச்சது. ஐ லைக் இட்!” என்றான் ஹிரித்திக்.
“ஓ!!”
இருவரும் மார்பில் கையை வைத்துக் கொள்ள, அவன் சின்னக் கண் சிமிட்டலுடன் அவள் நடந்து வருவதைப் பார்த்துவிட்டு, “பாத்தியாடா, தேவதை நடந்து வருவது மாதிரியே இல்லை!” என்று பூரித்தான்.
நண்பனுக்கு அவளை இந்த அளவிற்குப் பிடித்திருக்கிறதே என்று வியந்து போன இருவரும் புன்னகையுடன் தலையசைக்க, ஜீவா அறையிலிருந்து வெளியே அழைத்து வரப்பட்டுச் சம்பிரதாயச் சடங்குகள் நடந்தன.
மாப்பிள்ளை வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்த சீர்வரிசைகள் தாம்பாளத்தில் வைத்து வரிசையாகக் கொடுக்கப்பட்டது. மாப்பிள்ளை வீட்டார் கொண்டு வந்திருந்த பட்டுப் புடவையில் பெண் சற்று நேரத்தில் தயாராகி வந்ததும், இருவருக்கும் திருமண நிச்சயம் நடந்தேறியது!
அவளுடன் பேசுவது, சிரிப்பது, அவர்களின் நெருங்கிய உறவினர்களையும் நண்பர்களையும் அறிமுகப்படுத்துவது என்று அவன் கலகலப்புடன் இருக்க, பெற்றோர் பார்த்து வைத்திருக்கும் வரனைத் திருமணம் செய்யும் ஆசையில் சம்மதித்து, இப்போது நடப்பவற்றையும் உளமார ஏற்று நின்றாள் ஜீவா.
மதிய உணவை முடித்துச் சற்று நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் விடைபெற்றுச் சென்றுவிட, அமெரிக்காவில் வசித்து வந்தாலும் தங்களது பாரம்பரியச் சடங்குகள் தடைபட்டு விடக்கூடாது எனும் எண்ணத்தில் அது போலவே அனைத்தையும் செய்து முடித்திருந்தார் அன்புச்செல்வன்.
வீட்டிற்கு வந்து மனைவியிடம் பேசியவாறு இருந்தவருக்கு நினைவுகள் மொத்தமும் சொந்த ஊரிலேயே இருந்தன. அவரது பெற்றோர், உடன்பிறப்புகள் ஞாபகத்தில் கண் கலங்கியது.
அபிராமி கணவனின் நிலை அறிந்தவளாக அவரது தோளில் கை வைக்க, மனைவியைப் பார்த்ததும் மனதிற்குள் இருப்பதை மறைத்து மகளின் திருமண நிச்சயம் குறித்துப் பேச்சை மாற்றினார். ஆனால், இத்தனை வருடங்களாக அவருடன் வாழ்ந்து வருபவளுக்குக் கணவனின் எண்ணவோட்டங்களைப் புரிந்து கொள்வது அத்தனை சிரமமாக இருக்கவில்லை.
“இன்னைக்கு நடந்த நிச்சயத்தில் நம்ம மகள் தேவதை மாதிரியே ஜொலிச்சுட்டு இருந்தா பாத்தியா? அப்படியே எங்க அம்மாவை நேர்ல பார்த்த மாதிரியே இருந்தது! எங்க அம்மாவுக்கு ஸ்பெஷல் அந்த இதழ்களுக்குக் கீழே வலது பக்கம் இருக்கக்கூடிய கருப்பு நிற மச்சம். அது அப்படியே நம்ம ஜீவாவுக்கும் இருப்பதும், ரெண்டு பேரும் ஒரே நாள் நட்சத்திரத்தில் பிறந்திருப்பதும் என்னால எப்பவுமே நம்ப முடியாதது!
எங்க அம்மா ஜீவாவைப் பாக்கணும்… நம்ம கூடவே கொஞ்ச நாளாவது இருக்கணும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை. ஆனா, வருஷக்கணக்கா வெளிநாட்டுல வாழ்ந்து வருவதால் எதுவுமே செய்ய முடியல… ம்கூம்…” என்று பெருமூச்சை வெளியேற்றினார்.
அபிராமி கணவனின் அருகில் அமர்ந்து சற்று நேரம் அது விஷயமாகப் பேசிக் கொண்டிருக்க, அவரது முகத்தில் ஒரு வித இறுக்கம் வந்து தானாக ஒட்டிக்கொண்டது.
“அது மட்டும் என்னால முடியாது! என் மகள் வாழ்க்கைதான் எனக்கு முக்கியம்!” என்று அவர் உறுதியாகச் சொல்ல, அபிராமியின் முகத்தில் தவிப்பின் சாயல்கள்.
திருமண நிச்சயம் நடந்த ஒரு மாதத்தில் மகளுக்குத் திருமண ஏற்பாடு செய்வதாக இருந்ததால், அதற்குள்ளாகச் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்ய அவர் தனக்கு வேண்டப்பட்ட நபரை உதவிக்கு அழைத்திருந்தார். அதன்படி அனைத்து வேலைகளும் சரசரவென நடந்தேற, அனைவரின் முகமும் புன்னகையைத் தத்தெடுத்துச் சந்தோஷமாகச் காட்சியளித்தது!
அன்புச்செல்வனின் நெருங்கிய நண்பன் பூபாலன். சென்னையில் வசித்து வந்து இவரது வெளிநாட்டு நிறுவனத்துடன் தொழிலை நடத்தி வருபவர். பூபாலனும், அன்புச்செல்வனும் இணைந்து உருவாக்கிய நிறுவனம் தான் அது! அங்கு இருப்பதை அவர் பார்த்துக் கொள்ள, வெளிநாட்டில் இவர் பார்த்து வருகிறார்.
தனது நெருங்கிய நண்பராகிய அவரையும் திருமணத்திற்கு கண்டிப்பாகக் குடும்பத்துடன் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.
அவருக்கும் வருவதற்கு ஆசைதான். எப்படி மகன், மனைவியை அழைத்து இவ்வளவு தொலைவிற்கு வர முடியும்? அதிலும் அவர்கள் இருவரும் இணைந்து நடத்தும் நிறுவனத்தைப் பார்க்கும் பொறுப்புகள் இருப்பதால் சற்று தயங்கினார். அவரது தயக்கத்தை அன்புச்செல்வனின் பேச்சு துடைத்து எறிந்தது!
அதனால், பூபாலன் மகனிடம் அலுவலகத்தைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஒப்படைத்து, திருமணத்திற்கு முந்தைய நாள் சென்று வர முடிவு செய்தார்.
பள்ளிக்கால நண்பன் வெகு நாட்களுக்குப் பிறகு வரப்போகிறான் என்ற மகிழ்ச்சியில் அன்புச்செல்வன் ஆழ்ந்திருக்க, பெற்றோரின் மகிழ்ச்சியைத் தனதாக எடுத்து இத்தனை வருடங்களாக வாழ்ந்து வருகின்ற ஜீவா, தனக்கு வேண்டப்பட்ட சாதனங்களை அவர்களுடன் சென்று வாங்குவது, புது விதமான நகைகளைத் தேர்வு செய்வது, ஹிரித்திக்கின் அழைப்பின் பேரில் வெளியே சென்று வருவது, தனது நெருங்கிய நண்பர்களுக்குப் பத்திரிகை வைப்பது, தம்பியுடன் பேசி மகிழ்வது… என்று குதூகலமாக இருந்தாள்!
நாட்கள் வேகமாகச் செல்ல, அன்று பெற்றோரின் திருமண நாளாக இருந்ததால் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வரும்போது எதிர்பாராத விதமாக விபத்து நேர்ந்தது!
நால்வரின் அலறல் சத்தம், இரு வாகனத்தின் சத்தத்தில், அங்கிருந்த அனைவரும் ஓடி வந்து பார்த்தனர். உடனடியாகக் காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அடுத்த கணமே ஆம்புலன்சில் நால்வரின் உடலும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
எவ்வளவு புதுவிதமான மருத்துவக் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான ரீதியில் வளர்ச்சி அடைந்தாலும் ஆண்டவனின் படைப்பை மீறும் சக்தி யாருக்கும் இல்லை என்பதற்கு ஏற்ப, அபிராமியும் அன்புச்செல்வனும் இறந்து போயிருக்க, அவனது மகன் கோமாவிற்குச் சென்றிருக்க, கை, கால் உடைந்து கட்டு போடப்பட்டு அசைய முடியாமல் மயக்கத்தில் இருந்தாள் ஜீவா!
அவளுக்கு நினைவு வந்தபோது இருக்கும் இடம் பயமுறுத்தியது. எழுந்து செல்ல முடியாமல் கட்டுப் போடப்பட்டு இருக்கும் காலும், கையும்… மற்றவர்களுக்கு என்ன ஆனதோ? என்று திகிலூட்டியது.
தன் பதைபதைப்பைக் கட்டுப்படுத்த முடியாமல், அருகில் நின்றிருந்த செவிலியரைத் தவிப்புடன் அழைத்தாள் ஜீவா. அவளோ உண்மையைச் சொல்லத் துணிவின்றிப் பார்வையைத் தழைத்துக் கொண்டு மௌனமானாள். அந்த ஒரு நொடித் தயக்கம், ஏதோ விபரீதம் நடந்துவிட்டதை அவளுக்குச் சொல்லாமல் சொல்ல, ஜீவாவின் உடல் அச்சத்தில் உறையத் தொடங்கியது!
“என் பெற்றோரையும், தம்பியும் பார்க்கணும். அவர்களுக்கு ஒண்ணும் இல்லையே?”
ஆங்கிலத்தில் கேட்டதும் அவள் நடந்ததை மறைக்க முடியாமல் சொல்லி விட, நம்ப முடியாத அதிர்ச்சியில் மூழ்கி மறுபடியும் மயங்கி விட்டாள் ஜீவா!
மருத்துவர் வந்து கேட்டால் என்ன செய்வது என்று பயந்தாலும், அந்த மருத்துவ செவிலியர் அவளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள, தொழிலதிபர் அன்புச்செல்வனுக்கு நடந்த விபத்தும், அவரது குடும்பத்து நிலையும் ஊர் முழுவதும் பரவி, கடன் கொடுத்திருந்தவர்கள் முற்றுகையிடும் அளவிற்கு வந்தது!
ஹிரித்திக்கின் அப்பா தனசேகரன், தங்களை விட வசதியாக இருந்து, அவருக்குக் கிடைக்க வேண்டிய பல விஷயங்கள் அன்புச்செல்வனால் தட்டிப் போன கோபத்தில் இருந்து, தரகர் மூலமாக வீட்டிற்குச் சம்பந்தம் வந்ததால் மட்டுமே சம்மதம் தெரிவித்தார்.
அதன் பிறகு, அவர் இயல்பாக நடந்து கொண்ட முறையும், மகளுக்குச் செய்வதாகச் சொன்ன சீர்வரிசையும் மனதை மாற்றி இருக்க, திருமண வேலைகளில் அவரது பங்களிப்பும் தொடர்ந்தது.
அன்புச்செல்வன், தனது மகன் ஆதர்ஷ் இப்போது தான் பத்தாவது வகுப்பு படித்து வருவதால், மகளும் மருமகனும் தன்னுடன் நிறுவனத்தின் பொறுப்பைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ள, முழுமனதுடன் சம்மதம் தெரிவித்து இருந்தார்.
இப்போது, அவரது நிறுவனத்தில் வேலைகள் நடக்காமல் நின்று போனது. தங்களுக்குரிய பணம்… குறித்து மற்றவர்களின் நிலை கேள்விக்குறியானது!
தனசேகரன் வந்து அவர்களிடம் பேசியதில், அன்புச்செல்வனோடு சேர்ந்து இன்னும் ஒருவருக்கும் அதன் மீது உரிமை இருப்பது தெரிய வந்தது.
வெளிநாட்டில் இருந்து கப்பல் வழியாகச் சென்னைக்கு வியாபாரம் செய்து வந்தவர், அந்தக் கப்பல் கடலில் கவிழ்ந்து விட்டதால் பெருத்த நஷ்டத்தைச் சந்தித்து, அந்த அதிர்ச்சியில் தான் வரும்போது விபத்து நேர்ந்து உள்ளது என்பது தெரிய வர, அவரால் எதுவும் சொல்ல முடியாத நிலை.
எந்த வசதியை நினைத்து மகனுக்குத் திருமணம் செய்து வைக்கப் பார்த்தாரோ, இப்போது அது அவர்களை விட்டுப் போயிருந்தது! நிறுவனத்தில் பணி புரிபவர்களுக்கு ஊதியம், கடன், வியாபார ரீதியில் பரிவர்த்தனை செய்தது… எல்லாவற்றிற்கும் அன்புச்செல்வனின் சேமிப்புகள் சரியாகி விடும். பலதையும் அறிந்து வீட்டிற்குச் சென்றவர், அந்தத் திருமணம் வேண்டாம், வேறு நல்ல பெண்ணாகப் பார்த்துச் செய்யலாம் என்று சொல்லி, நடந்ததை அறிந்ததை நேரில் பார்த்ததை விவரிக்க, அவனால் மறுக்க முடியாத நிலை.
ஆனாலும், அவளை அவனால் மறக்க முடியவில்லை. அப்பாவிடம் எப்படி எடுத்துச் சொல்வது என்றும் தெரியவில்லை. அவர் அறியாமல் சென்று பார்த்து வர, இது எதுவும் தெரியாமல் ஜீவா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தாள்.
அலுவலக விஷயமாக நண்பனிடம் தினமும் செய்திகளைப் பரிமாறி வருகின்ற பூபாலன், திருமண நேரத்தில் இப்படி ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டு விட்டதே என்று கலக்கமுற்றார். அங்கு நடந்த விபத்து மற்றும் இறப்பை செயலாளரின் மூலமாக அறிந்து பேரிடி தாக்கியது போல அதிர்ந்தார்.
அதற்கு மேலும் தாமதிக்காமல் உடனேயே மகன் மற்றும் மனைவியிடம் தெரிவித்துப் புறப்பட்டு வந்து விட்டார். ஜீவா சுய உணர்வு பெற்றதும் நடந்த சம்பவங்களை நினைத்துக் கண்ணீர் விட, அவரது கைகள் இதமாகக் கூந்தலை வருடியது.
அவரது தோளில் சாய்ந்து கதறி அழுதவள், ‘அப்பா, அம்மா, தம்பி’ என ஒப்பாரி வைக்க, அவளுக்கும் எதுவும் ஆகிவிடக் கூடாது என்பதால், எப்படி எல்லாமோ பேசி மனதை மாற்ற முயற்சித்தார் பூபாலன்.
போராட்டமான வாழ்க்கை நீடித்தது. அவர்களை அங்கே விட்டுச் செல்ல விரும்பாமல் அவர் தன்னுடன் அழைத்துச் சென்று விட முயற்சிக்க, அப்பா அம்மாவின் நினைவுகளுடன் அங்கேயே இருந்து விடுவதாகச் சொன்னாள் ஜீவா.
சுயமாக எழுந்து நடமாட முடியாமல், உண்ணவும் மனமற்று அவள் விழுந்து கிடக்கும் தோற்றம் அவரைப் பெரிதும் பாதித்தது. நண்பனின் மகளையும் மகனையும் அப்படியே விட்டுச் செல்ல துணிவு இல்லாமல், சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து ஆதர்ஷைப் பார்த்துக் கொள்வதாக உறுதி அளித்தவர், அங்கிருக்கும் நிறுவனத்தின் பொறுப்பை அவளிடம் ஒப்படைக்கப் போவதாகச் சொன்னார்.
அவள் புரியாமல் அவரைப் பார்க்க, இங்குள்ள நிலவரத்தை அவள் மனம் வருந்தாத வகையில் சொல்ல நினைத்தும், குமுறி அழுபவளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அடுத்ததாகத் தனசேகரன் மருத்துவமனைக்கு வந்து அவரிடம் தெரிவித்த தகவலை எப்படிச் சொல்வது என்று தடுமாற்றத்துடன் நின்றவர், அவளது கேள்வி தாங்கிய முகத்தைக் கண்டு மறைக்க முடியாமல் கொட்டிவிட்டார்!
அவளுக்குக் கண்ணீர் வற்றி வறண்டு போய் விடும் போலிருந்தது. அத்துடன், அப்பாவின் நெருங்கிய நண்பர்கள், வசதியானவர்கள் யாருமே அவர்களைப் பார்க்க வரவில்லை. எங்கே கடன் தொல்லை தன் மீது விழுந்து விடுமோ என்ற பயத்தில் ஒதுங்கி விட்டார்கள் போலும்!
அன்புச்செல்வன் இருந்தவரை தொடர்ந்து வந்த பலரும் தானாகப் பின்வாங்கியதாகப்பட்டது.
மனம் முழுவதும் வேதனை படர்ந்தது. மருத்துவரிடம் பேசி வீட்டிற்குச் செல்வதற்கு அனுமதி பெற்று, தம்பியை மட்டுமே முழு நேரமும் மருத்துவமனையில் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு வந்தவள், குடும்பப் புகைப்படத்தில் முகத்தைப் புதைத்து கண்ணீரால் தனது கவலைகளை வெளியேற்றினாள்.
அக்காவும் தம்பியுமாக இணைந்திருந்த புகைப்படங்கள் அவர்களின் பாசத்தை எடுத்துரைக்க, அப்படிப்பட்ட தம்பி இப்போது இருக்கும் நிலை அறிந்து அவளது மேனி எங்கும் விதிர் விதிர்த்து நடுங்கியது!
எந்த வசதியைக் காரணமாக்கி அவர்களை விட்டு விலகிச் சென்றார்களோ அவர்கள் யாரும் தனக்கு வேண்டாம் என்ற முடிவுடன், அப்பாவின் நிறுவனத்தில் உள்ள கணக்கு வழக்குகளை ஆடிட்டர், வழக்கறிஞர், செயலாளர் அனைவரின் மூலமும் தெரிந்து கொள்ள வரவழைத்தாள்.
அப்பா பெற்றிருக்கும் கடன் தொகையிலிருந்து அனைத்தையும் அறிந்து, தானே அந்த நிறுவனத்தை நடத்துவதாக முடிவு செய்தாள். ஆனால் பூபாலன் இங்குள்ள எதுவுமே வேண்டாம், சென்னைக்கு நிரந்தரமாக வந்து விடுமாறு அழைப்பு விடுக்க, அப்பா இருந்தவரை வேண்டாம் என்று விலக்கி வைத்திருந்த சென்னையை அவளும் வேண்டாம் என்று ஒரேடியாக மறுத்தாள்.
அவருக்கும் அதிக நாட்கள் அங்கு இருக்க முடியாத நிலை. அவளை எப்படியாவது கையோடு அழைத்துச் சென்றுவிடலாம் என்று பார்க்கிறார். அவளோ வர மறுக்கிறாள். அதிலும் அவள் தம்பியின் உடல்நிலை வேறு சீர்கேடாகப் போய்விட்டதால், இருவரையும் அங்கு விட்டுச் செல்லவும் முடியவில்லை.
கிட்டத்தட்ட ஒரு மாதம் அவர்களுடன் தங்கியிருந்து அவளுக்குத் தேவையான அனைத்தும் செய்துவிட்டுத் தான் மட்டும் சென்னைக்குச் சென்று விட, முன்பிருந்த ஜீவா காணாமல் போய் புத்தம் புது மனுஷியாக அவதரித்திருந்தாள் அவள்!
ஆறு மாதங்களுக்குப் பிறகு…
அமெரிக்காவில் இருந்து சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய ஜீவா, தன்னை அழைத்துச் செல்ல வந்திருக்கும் பூபாலனைக் காண விரைந்தாள்! ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்த அந்தப் பயந்த சுபாவம் கொண்ட பெண் இவள் தானா என்று காண்போர் வியக்கும் வண்ணம் அவளது தோற்றம் மாறியிருந்தது.
அவளது ஒவ்வொரு நடையிலும் ஒருவிதமான அழுத்தமும், அதிகாரமும் தென்பட்டது!
தரை அதிரும் அந்த வேகத்தில், ஒரு பெரும் சாம்ராஜ்யத்தை ஆளப் போகும் அரசியின் கம்பீரம் தெரிந்தது. இழப்புகளால் துவண்டு விடாமல், எதையும் எதிர்கொள்ளும் அசாத்திய தைரியம் அவளது முகத்தில் கனலாகத் தகித்தது! காலம் அவளுக்குக் கற்பித்த பாடங்கள், அவளது கண்களில் இதுவரை இல்லாத ஒரு புதிய துணிச்சலை ஏற்றி வைத்திருந்தது! இடிந்து போன இடத்திலிருந்து மீண்டும் எழுந்து நிற்கும் அந்தப் புது மனுஷியின் வேகம், அங்கிருந்தவர்களின் பார்வையைத் தன் பக்கம் ஈர்த்தது!
பூபாலனின் அழைப்பை ஏற்று, உற்சாகமாகப் பேசிக்கொண்டே புயலென நடந்து வந்தவள், தனக்கு எதிர்புறத்தில் இருந்து அதே வேக நடையுடன் வந்த ஆறடி உயர ஆண் மகனைக் கவனிக்கத் தவறினாள்! அந்த மோதலின் அதிர்வில், அவனது கையிலிருந்த விலை உயர்ந்த ஐபோன் நழுவி, தரை மோதி சில்லு சில்லாக உடைந்து சிதறியது!
ஒரு கணம் அவனது கண்கள் சிதறிக் கிடக்கும் அத்தூண்டுகளின் மீதிலேயே உறைந்து போயிருக்க, அவளோ அச்சேதத்தைப் பொருட்படுத்தாமல், ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் அவ்விடத்தை மின்னலெனக் கடந்து சென்றிருந்தாள்!
அளவுக்கு மீறிய கோபத்துடன் அவனது கண்கள், தன் கைப்பேசியை உடைத்துவிட்டுத் திரும்பிக் கூடப் பார்க்காமல் கர்வத்துடன் சென்றுவிட்ட அந்தப் பெண்ணை எரிப்பது போல வெறித்தனமாகப் பார்த்தன!
அதேநேரம், “மிஸ்டர். ஆனந்த்! நீங்க வந்து ரொம்ப நேரம் ஆகுதா?” என்ற ஒரு குரல் ஒலிக்க, முகத்தில் இருக்கும் கடுமையை ஒரு நொடியில் துடைத்தெறிந்தான் அவன். அடுத்த கணமே வசீகரமான மென்னகையைப் படரவிட்டு, அத்தனை நேரம் கோபத்தில் அழுத்தமாகத் துடித்த உதடுகளில் புன்னகையைத் தவழ விட்டான்.
